Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஒக்ரோபர், 2011

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மங்களம் நிறைய, மகிழ்வொடு வாழ்த்துவம்!

எங்கெணும் பசியினில் துடியா வாழ்வும்
எம்மிடை பேதங்கள் கூறாப் பிணைவும்
கருத்தினில் மோதலை கைலாகுடன் மதித்தலும்
ஒன்றிணைந்து ஒரு கரமாய்ப் பிணையும் நேசமும்
என்றென்றும் இனிது வாழ வழி காட்டும்.
நன்றி ta.sarugu.com
எங்கள் இடரினை மறக்க
எதிரியென எண்ணித் தூற்றலும்
தூற்றலில் களி கொண்டெழலும்
இத்தனைக்கும் இவர்தாம் காலென
இகழ் ஒலிப்பதும்
வேண்டாம் ஒரு போதும்.
சாபமிட்டுச் சாந்தியடைதல்
ஒருபோதும் ஒண்ணாது

இன மத மொழி பேதமற்ற இணக்கமான வாழ்வு மலரட்டும்.

எங்களை அழிக்கும் நீசன்
வேறெங்கும் இல்லை.
உள்ளத்துள்உறைகிறான்.
உள்ளுறையும் அசுரனை ஒழிக்க
எள்ளளவும் வேண்டாம் கத்தி, குண்டு,
துப்பாக்கியெதுவும் .
கபடமற்ற கனிவான உள்ளம்
காந்தமாய் ஒளி பரப்பும் வதனம்
கனிவான மொழி
இவை போதும்.

எரித்துப் சினத்து அழிக்காது சிரித்து கூடி வாழ்வோம்.

வேறென்ன ஆயுதம் வேண்டும்?
எரித்துப் சினத்து அழிக்காது
சிரித்து கூட வழி வகுக்கும்
நல்லாயுதம் தன்னைக் கைப்பிடித்தால்
நிதமும் தீபாவளி எம் வாழ்வில்.
எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0
சென்ற வருடம் மறந்து போகாத சில வலைப்பூவில் எழுதிய வாழ்த்து

Read Full Post »

எல்லோர்க்கும் இனியவர் சிவகுமாரன்
என்றும் அவர் இளங்குமரன்

 

எதிரிக்கும் மங்காத புன்னகை
அவரது ஆயுதம்.
பூவிற்கும் நோகாத மென்மை
எழுத்திலும்..
மென்மையை நோகடிக்கும்
உள்ளத்தின் மென்மை.

படைப்பினைக் கொல்லாத
பதமான விமர்சனம்
பிறமொழிப் புத்தாக்கங்களை
தமிழுக்குப் பரிமாறும் வித்தையில் வல்லவன்.

சீரிய சினமா இதுவெனக் காட்டியவர்
சினமா ரசனையைச் சிக்கெனப் புகட்டியவர்
சினமா பார்க்கச் சென்னைக்கும் பறப்பவர்.
எல்லோர்க்கும் இனியவர் சிவகுமாரன்
என்றும் அவர் இளங்குமரன்

நீண்டு நிறையணும் அவரது வாழ்வு
நாளும் ஒளிவிளக்காக
வழிகாட்டணும் எமக்கெல்லாம்
வாழி வாழி.

0.0.0.0.0.0.0

இது எமது இனிய நண்பர் கே.எஸ்.சிவகுமாரன்
அவர்களின் பவளவிழா ஆண்டு.
01.10.2011 ல் அவர் தனது 75 வயதில்
காலடி எடுத்து வைத்தபோது எழுதியது

Read Full Post »

“இவனுக்கு சளி அடிக்கடி பிடிக்கிறபடியால் நான் பசுப்பால் கொடுக்கிறதில்லை” என்றாள் தாய்.
வளரும் குழந்தை. முன்பள்ளிக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறான்.

ஏற்கனவே நோஞ்சான். பாலும் குடிக்கக் கிடைக்காததால் காஞ்ச நோஞ்சானக மாறியிருந்தான்.

“நீங்கள் செய்வது தவறு. அவனது வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பால் அவசியம் அல்லவா?” எனக் கேட்டேன்.

மாப் பால் கரைத்துக் கொடுப்பதாக சொன்னாள்.

பசும் பாலுக்கு சளிபிடிக்கும் என்பது அவளது நம்பிக்கை. ஆனால் அதே பாலிலிருந்து தயாரித்த மாப்பாலுக்கு சளி பிடிக்காதாம்.  என்னே அறிவு!!.

அவள் மட்டுமல்ல எல்லாப் பெற்றோர்களது நம்பிக்கையும் கூட,
ஒட்டு மொத்த தமிழ் மக்களது நம்பிக்கை என்று கூட சொல்லலாம்.

அந்த நம்பிக்கை முற்று முழுதாக தவறானது என அண்மையில் ஆய்வு சொல்கிறது.

பசும்பாலுக்கு சளிபிடிக்காது என்று மட்டுமல்ல, அது சளிக்குக் காரணமான ஆஸ்மா, அலர்ஜி(ஒவ்வாமை) ஆகிய நோய்கள் வருவதற்கான சாத்தியத்தைக் குறைக்கிறது என ஆய்வு செய்த டொக்டர் மக்ரோவாசர் ( Dr. Macro Waser) கூறுகிறார். இவர் சுவிட் சர்லாந்து நாட்டு பஸல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்.

பதனிடப் படாத பாலைக் குடித்த பிள்ளைகளுக்கு அல்லது அதிலிருந்து வீட்டில் தயாரிக்கப்பட்ட பாற் பொருட்களை உண்ட பிள்ளைகளுக்கு ஆஸ்மா அலர்ஜி ஆகியன ஏற்படுவது குறைவாம்.

5 முதல் 13 வயது வரையான 14893 பேரை உள்ளடக்கிய ஆய்வு இது.

இக் குழந்தைகள் பாற்பண்ணை, கிராமம், நகரம் எனப் பல்வேறு சூழல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அவர்கள் எந்தச் சூழலிருந்து வந்தாலும் பசும்பால் சளியிலிருந்து பாதுகாப்பு கொடுத்தது. பசும்பாலை ஒரு வயது முதல் குடித்து வந்த குழந்தைகளுக்கு கூடியளவு நன்மை கிடைத்ததாம்.

பசும்பாலை பச்சையாகக் கொடுக்கக் கூடாது. காய்ச்சித்தான் கொடுக்க வேண்டும்.

இல்லையேல் சில நோய்கள் தொற்றக்கூடும்.
இத்தகைய காய்ச்சிய பால் தான் பாதுகாப்பை கொடுத்தது.

பதனிடப்பட்டு பைக்கற்றில் அடைக்கப்பட்ட பாலோ, மாப்பாலோ அத்தகைய பாதுகாப்பை கொடுப்பதாக அறியப்படவில்லை.

இதிலிருந்து சளிபிடிப்பவர்களுக்கு பசும்பால் கொடுக்காது மாப்பால் கொடுப்பது எந்த விதத்திலும் உதவப் போவதில்லை என்பது தெளிவாகிறது.

அத்துடன் சிறு வயதிலிருந்தே, அதாவது ஒரு வயது முதற் கொண்டு தினசரி பசும்பால் கொடுத்துவந்தால் ஆஸ்மா, அலர்ஜி போன்ற சளித்தொல்லைகளும் அதிகம் வராது என்பதும் தெளிவாகிறது.

எனவே உங்கள் குழந்தைக்கு சளித்தொல்லை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி பசும்பால் கொடுத்து வாருங்கள். அதனால் சளித்தொல்லை குறைவதுடன் ஆரோக்கியமும் கிட்டும்.

பசும்பாலில் உள்ள என்ன பொருள் அல்லது என்ன குணாதிசயம், அலர்ஜிக்கும் ஆஸ்மாவிற்கும் எதிரான பாதுகாப்பைக் கொடுக்கின்றது என்று அறிய ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

இருந்தபோதும் வளர்ச்சியடைந்த மேலை நாடுகளில் 2-3 சதவிகிதமான பாலகர்களுக்கு பசுப்பாலுக்கு ஒவ்வாமை இருக்கிறது. முக்கியமாக ஒரு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளில் பசுப்பால் அலர்ஜி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். தோல் அரிப்பு, எக்ஸிமா, சளி போன்ற அறிகுறிகள் பாலுக்கு அலர்ஜி உ்ள்ள 18 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளில் ஏற்பட்டதாக மற்றொரு ஆய்வு கூறுகிறது.

குழந்தை பிறந்து குறைந்தது 6 மாதங்களுக்கு தாய்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என வலியுறுத்துவதற்கு மேற் கூறிய அலர்ஜி ஒரு முக்கிய காரணமாகும்.

மேற் கூறிய ஆய்வு 5 வயது முதல் 15 வயதுள்ள குழந்தைகள் பற்றியதாகும்.

ஹாய் நலமா வலைப்பூவில் சில வருடங்களுக்கு முன் எழுதிய கட்டுரை சில மாற்றங்களுடன் இப்பொழுது பதிவாகிறது.

Read Full Post »

காதைப் பொத்திக் கொண்டு வந்தாள் அந்தப் பெண்மணி.
காது வலியின் தாக்கத்தால் முகம் சோர்ந்திருந்தது.

தெளிவாகப் பார்ப்பதற்காக காதைத் திருப்பி கூர்வெளிச்சப் பக்கம் திருப்ப முயன்றபோது,

“தொடாதையுங்கோ, காதைத் தொட்டால் உயிர் போகிற வலி” என்றாள்.

“என்ன நடந்தது” என விசாரித்தேன்.

“வழமையாக காது கடிக்கிறதுதான். இண்டைக்கு திடீரென இப்படியாயிற்று”

“காது கடித்தால் என்ன செய்வீர்கள்?” வினவினேன்.

“நெருப்புக்குச்சி, சட்டைப் பின், இயர்பட்ஸ் என்று எது கிடைத்தாலும் காதைக் குடையுறதுதான் வேலை” என்றான் கூட வந்த மகன்.

காது மென்மையானது. திடப்பொருட்களால் கிண்டியதால் உராய்வு ஏற்பட்டு கிருமி தொற்றிவிட்டது.

நுண்ணுயிர் கொல்லி மருந்துகளும் வலி நிவாரணி மருந்துகளும் கொடுக்கக் குணமாயிற்று.

இன்னுமொரு இளம் பையன் நீச்சலடித்த பிறகு காதுவலியோடு துடித்து வந்தான்.

நீந்திய பிறகு காது அடைப்பது போல இருந்ததாம். காதுக்குள் தண்ணி போய்விட்டதென எண்ணி இயர்பட்ஸ் வைத்துத் காதைத் துடைத்தான். வலி மோசமாகிவிட்டது.

காதுக்குள் குடுமி இருந்தால் குளிக்கும்போதோ நீந்தும் போதோ நீர் உட்சென்றால் காது அடைக்கும்.

அது தற்காலிகமானது. உட்காதுக்குள் நீர் போய்விட்டதோ என பயப்பட வேண்டியதில்லை.

காதுக்குடுமி நீரில் ஊறிப் பருத்ததால் காது அடைப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

அது உலர அடைப்பு எடுபட்டுவிடும்.

இந்தப் பையன் இயர்பட்ஸ் வைத்து நீர் எடுக்க முயன்றபோது குடுமி காதின் உட்பக்கமாக நகர்ந்து செவிப்பறையை அழுத்தியதால் கடுமையான வலி ஏற்பட்டது. நல்ல காலம் செவிப்பறை உடையவில்லை. உடைந்திருந்தால் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

தவாறான அணுகுமுறைகள்

இப்படி எத்தனையோ சம்பவங்களைக் கூறலாம். குளிக்க வார்க்கும் போது கைக்குழந்தைக்கு காதுக்குள் தண்ணி போனது என அதைச் சுத்தப்படுத்தப்போய் குழந்தையைச் செவிடாக்கியிருக்கிறார்கள் பல பாட்டிமார்கள்.

காதுக்குள் தண்ணீர், காதுக்கடி, அரிப்பு என எத்தனையோ காரணங்களுக்காக தேவையற்று காதைச் சுத்தப்படுத்த முனைவதால் ஏற்படும் பாதிப்புகள் இவை.

காதுக்கடி, அரிப்பு எனில் காதைக் கழுவுவதால் பிரயோசனமில்லை. அதற்கான மருத்துவத்தைச் செய்ய வேண்டும்.

காது குப்பைக் கூடையோ, சுத்தப்படுத்த வேண்டிய உறுப்போ அல்ல.

காதுக்குடுமி பயனுள்ளது

காதுக்குள் உற்பத்தியாகும் குடுமி, காதைப் பாதுகாப்பதற்காகவே சுரக்கிறது.

  • அது காதின் சுவர்களை உலரவிடாமல் ஈரலிப்பாக வைத்திருக்க உதவுகிறது. போதிய காதுக்குடுமி சுரக்காமல் வரட்சியாக இருப்பவர்களுக்கே பெரும்பாலும் காது அரிப்பு காதுக்கடி போன்றவை ஏற்படுகின்றன.
  • பக்றீரியா, பங்கஸ் போன்ற கிருமிகள் காதின் சுவுர்களைத் தாக்காமல் பாதுகாக்கின்றன.
  • பூச்சி, வண்டுகள் போன்றவை காதிற்குள் புகாமல் தடுக்கின்றன

காதிற்குப் பாதுகாப்பை அளிப்பதால் அதை நீங்கள் அகற்ற வேண்டியதில்லை.

காதைக் கழுவும் முறை

ஆயினும் வேறு காரணங்களுக்காக காதைச் சுத்தப்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால் தலையைச் சற்று சரித்துப் பிடித்துக் கொண்டு காதுக்குள் கைகளால் ஏந்திய சுத்தமான தண்ணீரை ஊற்றுங்கள். குளிக்கும்போது சுலபமாகச் செய்யலாம்.


பின் தலையை மறுபக்கமாகச் சரிக்க நீர் வெளியேறிவிடும். இவ்வாறு இரண்டு மூன்று தடவைகள் நீர் விட்டு சுத்தப்படுத்தலாம்.

காதுக்குள் விடும் நீர் தலைக்குள் போகாது, செவிப்பறை தடுத்து நிறுத்தி விடும்.

ஆயினும் காதிலிருந்து சீழ் அல்லது நீர் வடிபவர்கள் இவ்வாறு நீர் விட்டுச் சுத்தப்படுத்தக் கூடாது. முன்பு அவ்வாறு வடிந்தவர்களும் மருத்துவ ஆலோசனையுடன் மட்டுமே அவ்வாறு சுத்தப்படுத்தலாம்

இப்படிச் சுத்தம் செய்யும்போது காது அடைத்தால் பயப்படாதீர்கள். நீர் உலர்ந்ததும் அடைப்பு மறைந்துவிடும்.

உலர்ந்த காதுக் குடுமி

சிலருக்கு காதுக் குடுமி உலர்ந்து காதை அடைப்பதும் உண்டு. இது அதிகமானால் காது கேட்பதில் குறைபாடு ஏற்படவும் கூடும்.

இதனை காது பட்ஸ், கெயர்பின், குடுமி நீக்கும் கிண்டிகள், போன்றவை கொண்டு அகற்ற முற்படுவது ஆபத்தானது. அது மேலும் உட்புறமாகத் தள்ளுப்பட்டு நிலைமையை மோசமாக்கும்

அடைத்த காதினுள் ஒலிவ் ஓயில் விட்டு அதனை இளகச் செய்யலாம்.  அல்லது அதற்கான பிரத்தியேக மருந்துகள் கிடைக்கின்றன. அவற்றை காதினுள் விட்டு குடுமியை மெதுமையாக்கலாம். ஒரு நாளில் மென்மையாகாவிட்டால் மேலும் ஓரிரு நாட்களுக்கு அவ்வாறு செய்யலாம்.

மெதுமையான பின் முற் கூறியதுபோல நீர் விட்டுச் சுத்தப்படுத்தலாம்.

ஹாய் நலமா புளக்கில் முன்பு எழுதிய கட்டுரை சில விரிவாக்கங்களுடன் இங்கு பிரசுரமாகிறது.

Read Full Post »

இன்றைய கல்விமுறையானது மாணவர்களுக்கு முன்னைய காலங்களை விட கூடியதும் பரந்ததுமான அறிவைக் கொடுக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இது உண்மையான போதும் அவர்களுக்கு உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிப்புகளையும் நெருக்குவாரங்களையும் ஏற்படுத்துகிறது என்பதை சுட்டிக்காட்டுவது அவசியமானதாகும்.

சாதாரண, உயர்தர மாணவர்களுக்கு என இருந்த போட்டிப் பரீட்சைகள் இப்பொழுது சின்னஞ் சிறுவர்களையும் பயமுறுத்துகிறது. இப் பரீட்சைகள் பெற்றோர்களது கௌரவப் பிரச்சனையாகவும் மாறிவிடுவதால் குழந்தைகளுக்கு நெருக்குவாரம் அதிகரிக்றிறது.

படி படி படி என்பதே தாரக மந்திரமாக அவர்களுக்கு ஓதப்படுகிறது.

விளையாட்டும் உடற் பயிற்சிகளும் அவர்களது உடல் உள வளர்ச்சிகளுக்கு முக்கியமானது என்பது சுலபமாக மறக்கிறது.

மாடுகளுக்கு நலங்கடிப்பது போல, குழந்தைகளுக்கு விளையாட்டு மறக்கடிப்பப்படுகிறது. மீறினால் கணனியில் பந்தாடி மனம் மகிழவே முடிகிறது. உடலுக்கு வேலையில்லாத விளையாட்டுகளால் என்ன பலன்?

சந்தோசமாக ஓடி ஆடித் திரிந்து விளையாட வேண்டிய 5ம் வகுப்புக் காலத்தில் அவை எல்லாவற்றையும் மறந்து பள்ளிக்கூடம், ரியூசன், வீடு என எங்கும் புத்தகங்களோடும் படிப்போடும் மட்டும் மல்லுக்கட்டி நிற்கிறார்கள்.

பல பிள்ளைகளுக்கு தலையிடி, உடல் உழைவு, வயிற்று வலிகள் எனப் பல பிரச்சனைகள் வருகின்றன. கோபப்படுகிறான் குளப்படி செய்கிறான் எனப் பெற்றோர்கள் குற்றம் சுமத்துவார்கள்.

சில பிள்ளைகள்

  • தமது தலை முடியை பிடுங்குவதும் உண்டு.
  • அதை வாயில் போடும் குழந்தைகளும் உண்டு.
  • குளியலறையில் நீண்ட நேரம் செலவழிக்கும் குழந்தைகளும் உண்டு.
  • அடம் பிடிக்கும் வேறு சில பிள்ளைகள்
  • படுக்கையில் சிறுநீர் கழிக்கும்

இவை போன்ற பலவும் உள ரீதியான பாதிப்புகளின் மெய்பாட்டு அறிகுறிகளாகும்.

பல குழந்தைககளை  Counseling எனப்படும் உளவளத்துணைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. சிலருக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்தே சாதாரண நிலைக்குக் கொண்டு வர முடிகிறது.

குழந்தைகள் மட்டுமின்றி பல பெற்றோர்களும் கூட பிள்ளைகளின் படிப்புப் பிரச்சனையால் உள ரீதியாகப் பாதிக்படுவதைக் காண்கிறோம். முக்கியமாகத் தாய்மார் அவர்களது படிப்பிற்கு உதவுவதற்கு அதிக நேரம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேறுகள் தனது சமூக வட்டத்தில் எற்படுத்தக் கூடிய தாக்கங்களை பற்றிய எதிர்பார்ப்பு, மனஅழுத்தமாக மாறுகிறது. பதற்றம், படபடப்பு, எரிச்சல், கோபம் என வெளிப்படுகிறது.

எனவே மன அழுத்தங்களுக்கு வித்திடும் கற்கை முறைகள், பரீட்சைகள் ஆகியவற்றிற்குப் பதிலாக பிள்ளைகளின் ஆளுமை விருத்தியை இலக்காக் கொண்ட கல்வியை இலக்காகக் கொள்வோம்.

Read Full Post »