உங்கள் மனைவி சந்தோஷமாக இருக்கிறாரா?
இல்லையென்றால் அவரை மகிழ்வுறுத்துவதற்கு வழி என்ன?
சிந்திப்போம்!
அந்த ஜயா மிகவும் வசதியானவர்.
மனைவியில் மிகுந்த அன்பு கொண்டவர். அவவிற்கு சிறிய வருத்தம் என்றால் கூட அலட்சியம் பண்ண மாட்டார்.
உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துப் போவார்.
தேவையான பரிசோதனைகளையெல்லாம் அலுக்காமல் செய்வார். மருந்துகள், சத்து மருந்துகள் எல்லாம் வாங்கிக் கொடுப்பார்.
ஆயினும், மனைவியின் முகத்தில் சந்தோஷத்தைக் காண முடிவதில்லை.
மற்றவர் அவ்வளவு வசதியானவர் அல்ல.
ஆயினும், தனது மனைவியின் சௌகர்யத்திற்காக தனது தகுதிக்கு மேல் போய் எல்லாம் வாங்கிக் கொடுப்பார். ரி.வி., பிரிட்ச், மைக்ரோ அவன், வோஷிங் மெசின், பிரஸர் குக்கர் என எது தேவையென்றாலும் கஷ்டப்பட்டு வாங்கிக் கொடுப்பார். ஆயினும், அவராலும் மனைவியின் மனதைக் கவர முடியவில்லை. வேறு என்ன செய்வது என அங்கலாய்க்கிறார்.
இன்னுமொருவர், மனைவியின் திருப்தியின்மைக்குக் காரணம் அவளது தனிமையும் பொழுதுபோக்கின்மையும்தான் என நம்பி நீண்ட லீவு போட்டுவிட்டு கோயில், குளம், சுற்றுலா, வெளிநாட்டுப் பயணம் என பலதும் முயன்றுவிட்டார். ஆயினும் எதுவித முன்னேற்றமும் இல்லை.
இப்பெண்கள் எல்லாம் எதிலும் திருப்தியடையாத தாழ்ந்த மனம் கொண்டவர்களா? இல்லை!
கணவர்களின் அணுகு முறையில்தான் ஏதோ தவறு இருக்க வேண்டும்.
லெபனானின் பெய்ரூடடில் செய்யப்பட்ட ஆய்வு உங்களுக்கு உதவலாம். 1,650 திருமணமான தம்பதியர்களிடையே செய்யப்பட்ட ஆய்வு அது.
- வீடு கூட்டுதல்,
- தூசி தட்டுதல்,
- உடுப்பு தோய்த்தல்,
- சமையல், தேனீர் தயாரித்தல்,
- படுக்கையை சுத்தம் செய்தல்,
- பாத்திரம் கழுவுதல்
போன்ற இருபத்தைந்து நாளாந்த வீட்டு வேலைகளைத் தேர்ந்தெடுத்தார்கள்.
வீட்டு வேலைகளில் கணவன் எந்த அளவுக்கு உதவுகிறான் என்பதையும் மனைவியின் மன நிலை, குடும்ப வாழ்வில் அவளது திருப்தி அல்லது திருப்தியின்மை, அவளது கவலை போன்றவற்றோடு அதைத் தொடர்புபடுத்திப் பார்த்தார்கள்.
வீட்டு வேலைகளில் மிகக் குறைந்தளவே பங்களித்த கணவன்மாரின் மனைவிகள் கூடுதலாகப் பங்களித்தவர்களின் மனைவிகளைவிட,
- 1.6 விகிதம் உள நெருக்கடியில் இருந்தார்கள்.
- 2.96 விகிதம் கணவனோடுடனான உறவில் அசௌகரியப்படுவதாக உணர்ந்தார்கள்,
- 2.69 விகிதம் கூடுதலான கவலையோடு இருந்தார்கள்.
“வீட்டு வேலைகளில் கணவன் ஈடுபடுவதற்கும்,
மனைவியின் மன ஆரோக்கியத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை
இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது”
என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
தும்புத்தடியில் ஆரம்பியுங்கள்.
வீடு கூட்டுவதில் ஆரம்பித்து
ஏனைய வீட்டு வேலைகளிலும்
பங்கு பற்றுங்களேன்,
மனைவி மகிழ்வார்.
வீட்டில் என்றும் வசந்தம்தான்!
தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்து எனது ஹாய் நலமா வலைப்பூவில் 4 வருடங்களுக்கு முன் பதிவேற்றிய கட்டுரை.
Read Full Post »