Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for திசெம்பர், 2011

‘இது மற்றப் பக்கத்தைவிடப் பெரிசாக இருக்கிறது’ என்றாள் அவள்.

கலந்தாலோசனையை முடித்துக் கொண்டு  வெளியேற எழுந்தபோதுதான் அப்படிச் சொன்னாள். காய்ச்சல், சளி இருமலுக்காக மருந்தெடுக்க வந்திருந்தாள் அந்தப் பள்ளி மாணவி.

தனது வலது கையைச் சுட்டிக் காட்டுவது கண்ணில் பட்டபோது, அடுத்த நோயாளி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“அப்படி இருப்பது இயற்கைதானே. அதிகம் உபயோகிக்கும் கை மற்றதைவிட சற்று மொத்தமாக இருக்கும்” என ஆறுதல் சொல்லி அனுப்பி வைததுவிட்டு அடுத்தவர் பிரச்சனையில் மூழ்கினேன்.

“மூக்கு சற்று வளைவாக இருப்பதாக” அதே பெண் அடுத்த முறை வந்து சொன்ன போது சற்று உசாரானேன். அவளது முகத்தில் சற்று வாட்டம் இருப்பதையும் அவதானிக்க முடிந்தது.

சற்று ஆறுதலாகப் பேசிய போது அவளுக்கு தனது தோற்றம் பற்றிய தற்குறை இருப்பதை உணர்ந்தேன்.

தனது உடற்தோற்றம், அழகு, கவர்ச்சி போன்றவை பற்றிய அக்கறை பதின்ம வயதினரிடையே ஏற்படுவது சகசம்.

  • ஒரு பக்க மார்பு பெரிசாக எனப் பெண்களும்
  • அல்லது ஒரு பக்க விதைப்பை பெரிசாக எனப் பையன்களும் கவலைப்பட்டுக் கொண்டு வருவது அதிகம்.
  • தான் உயரமாக அல்லது குள்ளமாக இருப்பதான உணர்வு,
  • தனது நிறம் குறைவாக இருப்பதாக எண்ணல் இப்படிப் பல.
  • தமது சருமம் மிருதுவாக இல்லை,
  • தனது குரல் கரகரக்கிறது.
  • தனது பல் சற்று பழுப்பு நிறமாக இருக்கிறது.
  • தலைமுடி கொட்டுகிறது.
  • நகம் அசிங்கமாக இருக்கிறது.

இவ்வாறெல்லாம் தமது உடல் பற்றிய மறையான சிந்தனைகள் ஏற்படலாம்.

இப்படியான எண்ணங்கள் உங்களுக்கும் ஏற்பட்டால் அது பற்றி கவலைப்படவோ வெட்கப்படவோ வேண்டாம். நீங்கள் மட்டுமல்ல நிறையப்பேருக்கு இத்தகைய சிந்தனைகள் வருவதுண்டு.

ஆனால் அவ்வெண்ணத்தை மாற்றி மகிச்சியை கைப்பிடிக்க வேண்டும்.


மனத்தாக்கம் ஏற்படலாம்

தனது உடல் பற்றிய எண்ணங்களுக்கும் சுயமதிப்பீடுகளுக்கும் நிறையத் தொடர்பிருக்கிறது. தனது உடல் அழகாக இல்லை, அசிங்கமாக இருக்கிறது என எண்ணுபவருக்கு தன்னைப்பற்றிய தாழ்வுணர்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் எனலாம். தாழ்வு மனப்பான்மை என்பதும் இதனோடு தொடர்புடையதே.

  • முதலில் குறிப்பிட்ட பெண்ணுக்கு தனது உடற்தோற்றம் பற்றிய திருப்தியின்மையானது மனச்சோர்வாக மாறியிருந்தது.
  • அதேபோல ஒவ்வொருவரும் தமது தோற்றம் பற்றிய தாழ்வுமனப்பான்மை உளம் சார்ந்த நோய்களாக மாறாது தடுப்பது அவசியம்.

அதற்கான துடுப்பு அவரவர் கைகளிலேயே இருக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

அப்படியான மறைஎண்ணம் (Negative Thoughts) வந்தால் நீங்கள் செய்யக் கூடியது என்ன?

உங்களிடம் உள்ள தனிச்சிறப்புகளைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பியுங்கள்.

  • நிறம் கறுப்பாக இருந்தாலும் உங்கள் கண்கள் கவர்ச்சியுடையனவாக இருக்கலாம்.
  • சிரிக்கும் ஏதோ ஒரு மோகனம் மற்றவர்களை ஈர்க்கலாம்.
  • அல்லது உங்கள் உரையாடல் திறன் மற்றவர்கள் உங்களோடு மனம் திறந்து பேச வைக்கலாம்.
  • விளையாட்டு, சமையல், கையெழுத்து

இப்படி ஏதாவது ஒரு சிறப்பு அல்லது பல சிறப்புகள் உங்களிடத்தில் மறைந்து கிடக்கலாம். அவற்றைக் கண்டு பிடியுங்கள். கண்டு பிடித்ததை மெருகூட்டுங்கள். மனம் மகிழ்ச்சியில் ஆளும்.

சிறப்புகளை மீள நினைத்தல் நன்று

உங்கள் சிறப்புகளை நினைத்துப் பார்ப்பதுடன் நின்றுவிடாது அவை பற்றி குறிப்புகள் எழுதி வைப்பது இன்னும் மேலானது.

எழுதத் தவறிவிட்டாலும், தினமும் உங்களை மகிழ்வுறச் செய்த சம்பவங்களை படுக்கைக்கு சென்று தூங்கு முன்னர் இரை மீட்டிப் பார்ப்பதுவும் சுயபிம்பத்தை உயர்த்தக் கூடியதாகும்.

தினமும் குறைந்தது மூன்று மகிழ்வூட்டிய நிகழ்வுகளையாவது நினைவுபடுத்துங்கள்.

உதாரணத்திற்கு

  • நீங்கள் கூறிய விடைக்கு ஆசிரியர் திருப்தி எனச் சொல்லியிருக்கலாம்.
  • உங்களுக்கு விடை தெரிந்திருந்தும், விடையளிக்க முன் வேறொருவர் சொல்லிப் பாராட்டைப் பெற்றிருந்தாலும்
  • விடை தெரிந்ததை உங்களுக்குக் கிடைத்த வெகுமதியாக எண்ணி மகிழுங்கள்.

“அட நான் சொல்லாமல் விட்டுவிட்டேனே” எனக் கவலைப்படுவது கூடவே கூடாது.

உங்களது உடை, அல்லது நீங்கள் தயாரித்த உணவு, அல்லது நீங்கள் சொன்ன ஜோக் மற்றவர்களைக் கவர்ந்திருக்கும்.

  • உங்கள் வெற்றிகளை நினைவுபடுத்துங்கள்.
  • அவற்றை உங்களுக்குக் கேட்குமாறு வாய்விட்டு உரத்துச் சொல்லுங்கள்.
  • அல்லது உங்கள் பெற்றொர், அண்ணன், அக்கா அல்லது உங்களைப் புரிந்து கொண்ட ஒருவருடன் பகிர்ந்து மகிழுங்கள்.

இவை யாவுமே உங்களைப் பற்றிய உங்கள் சுயபிம்பத்தை உயர்த்த உதவும்.

உங்களுக்குள் ஏதோ ஒரு அழகு ஒளிந்திருக்கிறது. உங்களின் மனது மற்றவர்களைக் கவருகிறது. உங்களுக்கு மட்டுமே தனித்துவமான ஏதோ ஒரு ஆற்றல் அழகு குணம் குடிகொண்டிருக்கிறது.

அதை நினையுங்கள். அதையிட்டுப் பெருமைப்படுங்கள். மேலும் வளருங்கள்.

ஒளிமயமான எதிர்காலம் உங்கள் வரவிற்காகக் காத்திருக்கிறது. பயன்படுத்தாது தப்ப விட்டுவிடாதீர்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

ஹாய் நலமா புளக்கில் முன்பு வெளியான எனது கட்டுரை

0.0.0.0.0.0

Read Full Post »

“பல்லி எச்சம் இட்டுவிட்டது போலிருக்கிறது. வலிக்கிறது” என்றாள். தனது உதடுகளைச் சுட்டியபடி.

ஹெர்பீஸ் சிம்லக்ஸ்

அழகான தடித்த உதடுகள். கொவ்வைப் பழம்போல என்று சொல்ல முடியாது. அது கருமையான எம்மவர்களில் காண்பது அரிது. ஆயினும் செம்மை படர்ந்த அவளது உதடு கவர்ச்சியாக இருந்ததை மறுக்க முடியாது. அதில் சிறு சிறு கொப்பளங்கள் வலது பக்கமாகத் தென்பட்டன.

“பல்லி ஏன் உங்களது உதட்டைத் தேடி வந்து எச்சமிட்டது” என நான் கேட்கவில்லை.

ஆனால் “ஏன் எல்லோரது உதட்டை மட்டும்; தேடிப் போய் எச்சமிடுகிறது” என்ற சந்தேகம் மருத்துவம் படிக்கு முன்னர் என்னிடம் இருந்தது என்பதை மறுக்க முடியாது.

ஹெர்ப்பீஸ் சிம்பிளக்ஸ்

உண்மையில் இதற்கும் பல்லி எச்சத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இது ஒரு  தொற்றுநோய். Herpes simplex virus (HSV) என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

ஹெர்பீஸ் சிம்ப்லக்ஸ்

ஹெர்பீஸ் வைரஸில் பல உப பிரிவுகள் உண்டு. கொப்பளிப்பான், நரம்புக் கொப்பளிப்பான், பாலியல் ஹெர்பீஸ் போன்றவை வேறு உதாரணங்களாகும்.

பொதுவாக இது நேரிடையாகத் தொற்றும்.

  • ஒரு முறை தொற்றினாலும் கிருமி நரம்புகளில் மறைந்திருந்து மீண்டும் மீண்டும் நோயை ஏற்படுத்த வல்லது.
  • இது பொதுவாக உதடுகளிலேயே ஏற்படுகிறது.
  • அதுவும் ஓரமாக, நடு உதட்டில் அல்ல. சிறு சிறு கொப்பளங்களின் கூட்டமாகத் தோன்றும்.
  • பல குழந்தைகளில் நாசித் தூரங்களிலும், வாயிற்கு உள்ளும் தோன்றுவதைக் கண்டிருக்கிறேன்.
  • கன்னங்களிலும் தோன்றுவதுண்டு.

ஹெர்ப்பீஸ் சிம்பிளக்ஸ்

முதன் முறை வரும்போது

  • முதல் முதலில் முக்கிமாகக் குழந்தைகளில் வரும்போது வேதனை இருக்கும். மேலே சொன்ன பெண்ணுக்கு பல தடவைகள் ஏற்கனவே வந்திருந்ததால் வேதனை அவ்வளவாக இருக்கவில்லை.
  • உதடுகளில் மட்டுமின்றி நாக்கிலும் வரலாம்.
  • கொப்பளங்கள் உடைந்து சிறிய புண்போலத் தோற்றமளிக்கும்.
  • பின் உலரத் தொடங்கும்போது மஞ்சள் ஆடைபோலப் பிடித்து, காய்ந்து மறையும். 3 முதல் 14 நாட்கள் வரை எடுக்கலாம். புண்கள் வாயிலிருக்கும்போது எச்சில் ஊறுவது அதிகமாகவும், வாய் மணமும் இருக்கும்.
  • கடுமையாக இருந்தால் மாத்திரம் குளிர், மெல்லிய காய்சல், காது வலி போன்றவை சேர்ந்து வரலாம்.
  • கட்டிளம் பருவத்தினரில் முதன் முதலில் வரும்போது வாய்ப் புண்களுக்கு பதிலாக தொண்டை வலியாக தோற்றலாம்.

மீண்டும் வரும்போது

  • திரும்ப வரும்போது முதல் முறை வந்ததுபோல கடுமையாகவோ வேதனை அளிப்பதாகவோ இருப்பதில்லை.
  • வருடத்தில் ஓரிரு முறை வரலாம். ஒரு சிலருக்கு அடிக்கடி வருவதுண்டு. ஆயினும் முதல் வருடம் கழிந்த பின்னர் நீண்ட இடைவெளிகளிலேயே வரும்.
  • ஆனால் பெரும்பாலும் தடிமன் காய்ச்சல் வரும்போதுதான் அவ்வாறான கொப்பளங்கள் போடுவதுண்டு. இதனால் ஆங்கிலத்தில் இவற்றை cold sores என அழைப்பார்கள்.
  • ஏற்கனவே குறிப்பிட்டது போல இவை கடுமையாக இருப்பதில்லை.
  • வந்தாலும் குறுகிய காலத்திற்குள் சுமார 5-6 நாட்களுக்குள் குணமாகிவிடும்.
  • பெரும்பாலும் முன்பு வந்த அதே இடத்தில் வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஏன் மீண்டும் வருகிறது?

நிச்சயமாக எதுவெனத் தெரியாது என்ற போதும் பல சந்தர்ப்பங்கள் அதைத் தூண்டுவதாகச் சந்தேகிக்கப்படுகிறது. வெயில், காற்று, மாதவிடாய், காய்ச்சல், சத்திர சிகிச்சைகள், வேறு காயங்கள், மன உளைச்சல் எனப் பல.

எனது ஹாய் நலமா புளக்கில் (03.02.2012) வெளியான கட்டுரை
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

ஈழத்தின் பெருமையை தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் நிலைநிறுத்திய பெருமை பேராசிரியர்.க.கைலாசபதிக்கு உண்டு. கடந்த  5 – 6 தசாப்தங்களுக்கு மேலாக அவரது பெயர் தமிழ் இலக்கிய விமர்சன உலகில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அழகியலுக்கு அப்பால் சமூகப் பிரக்ஞையுடைய படைப்புகளுக்கு முக்கியத்துவமும், மார்க்சிய அடிப்படையிலான விமர்சனங்களுக்கு முன்னோடியாகவும் விளங்கியவர் அவர்.

அவர் பற்றியும் அவரது படைப்புகள், எழுதிய நூல்கள் பற்றிய விபரங்கள் தமிழ் விக்கிபீடியாவில் இவ்வாறு கூறப்படுகிறது
க. கைலாசபதி

அவர் மறைந்து 29 ஆண்டுகளுக்குப் பின்னரும் தொடர்ந்து என்றும் நினைக்கப்படுபவராக எம்மிடையே தனது ஆளுமையை நிலைநிறுத்திக் கொண்டு காலத்தோடு இணைந்து நடக்கிறார்.

கடந்த பல வருடங்களாக இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் கைலாசபதி நினைவுக் குழுவுடன் இணைந்து கைலாசபதி நினைவுப் பேருரைகளை நடாத்தி வருகிறது.

இவ்வாண்டிற்கான நினைவுப் பேருரை எதிர்வரும் மார்கழி 18ம் திகதி 2011 ல் ஞாயிறு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் ஆதரவில் வெள்ளவத்தை தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.

தலைமை:- திரு.எம்.வாமதேவன் (முன்னாள் செயலாளர் தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு)

பேருரை:- திரு.ஏ.எஸ்.சந்திரபோஸ் (சிரேஷ்ட விரிவுரையாளர் இலங்கை திறந்த பல்கலைக் கழகம்)

குறித்த நேரத்திற்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் எனவும் அனைவரையும் அன்புடன் அழைப்பதாகவும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

சென்ற ஆண்டிற்கான நினைவுப் பேருரை கொழும்பு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் அவரது மகளான கலாநிதி பவித்ரா கைலாசபதி அவர்களால் ஆற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதற்கான இணைப்பு

கணவன் மனைவி இருவரும் உழைக்கும் குடும்பத்தில் நன்மைகள் பிரச்சனைகள்.- கைலாசபதி நினைவுப் பேருரையில்

பேராசிரியர் கைலாசபதி பற்றி திரு லெனின் மதிவானம் எழுதிய ‘பேராசிரியர் க.கைலாசபதி சமூக மாற்றத்திற்கான இயங்காற்றல்’என்ற நூல் வெளியீடு பற்றி இணைப்பு

பேராசிரியர் க.கைலாசபதி சமூக மாற்றத்திற்கான இயங்காற்றல்

0.00.0.00.0

Read Full Post »

“இந்த வலிகளோடு வாழ்வது சரியான கஸ்டம். காலையில் கால்களைக் கீழே வைத்து எழும்ப முடியாது. கை கால்களை நீட்டி மடக்கி அசைத்து பயிற்சி கொடுத்தால்தான் ஒருமாதிரி எழும்பி, அன்றாட வீட்டு வேலைகளைச் செய்ய முடியுது………. இந்த மனிசனுக்கும் பிள்ளைகளுக்கும் அது புரியுதே. விடிஞ்சால் பொழுதுபட்டால் வருத்தப் பாட்டுத்தான் பாடுறன் என நக்கல் அடிக்குதுகள்”

இவ்வாறு சொல்பவர்கள் அநேகம். ஏனெனில் மூட்டு நோய்கள் (Arthiritis) மிகவும் பரவலாகக் காணப்படும் நோயாகும்.

வாழ்க்கைத் தரம்

மூட்டு வலிகளுடன் வாழ்வது துன்பமானது என்பது எல்லோருக்கும் தெரியும். மூட்டு வலி என்றெல்ல உடலுக்கு உபாதை கொடுக்கும் எல்லா நோய்களும் துன்பமானதுதான்.

அவை உடலை மட்டுமின்றி மனத்தையும் சோரச் செய்கின்றன. இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கச் செய்கின்றன. ஆனால் அதே நேரம் மற்றவர்கள் அவர்களது வலியைப் புரிந்து கொள்வது குறைவு.

ஒரு மில்லியன் அமெரிக்க பிரஜைகளின் மருத்துவ அறிவிக்கைகளை ஆராய்ந்த பொழுது இது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது கிடைத்த சில முடிவுகள் மூலம் நீங்களும் அதை உணர்வீர்கள். Arthritis Care & Research சஞ்சிகையின் ஏப்ரல் 18, 2011 இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

பாதிப்புகள் அதிகம்

  • சாதாரண பிரஜைகளில் 12 சதவிகிதத்தினரே தங்கள் ஆரோக்கியம் நல்ல நிலையில் இல்லை எனக் கருதியபோது மூட்டு நோய்களால் பாதிக்கப்பட்டோரில் 27 சதவிகிதத்தினர் தமது ஆரோக்கியம் நல்ல நிலையில் இல்லை என்றனர்.
  • மாதத்தில் மூன்று நாட்கள் மட்டும் உடல் ரீதியாகச் சுகயீனமுற்று இருந்ததாக சாதாரண மனிதர்கள்  கூறியபோது மூட்டு நோய்களினால் பாதிக்கப்பட்டோர் மாதத்தில் ஏழு நாட்கள் ஆரோக்கியம் கெட்டிருந்ததாககக் கூறினர்.
  • மாதத்தில் மூன்று நாட்கள் மட்டும் மன அமைதியற்று இருந்ததாக சாதாரண மனிதர்கள்  கூறியபோது மூட்டு நோய்களினால் பாதிக்கப்பட்டோர் மாதத்தில் ஐற்து நாட்கள் பாதிப்புற்று இருந்தனர்.
  • ஆரோக்கியம் முழுமையாக கெட்ட நாட்கள் சாதாரணமானவர்களுக்கு மாதத்தில் 5 ஆன இருக்க மூட்டு நோயாளருக்கு 10 ஆக இருந்தது.
  • நாளாந்த பணிகள் கெட்டதாக நாலுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இருந்தது.
சமூக ரீதியாக 

சமூக ரீதியில் பார்க்கும்போது மூட்டு நோயாளிகள்

  • கல்வி ரீதியாகி,
  • தொழில் ரீதியாக,
  • மற்றும் வருமான ரீதியாகவும்

மற்றவர்களை விட அதிகம் பாதிப்புற்று இருந்தது அவதானிக்கப்பட்டது.
அத்துடன் அவர்களிடம் மற்றவர்களை விட புகைத்தல், மது, போதை போன்ற தவறான பழக்கங்களும், உடல் உழைப்பு குறைந்த, உடற் பயிற்சி அற்ற சோம்பேறித்தனமான வாழ்க்கை முறைகளும் அதிகமிருந்தன.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதீத எடை போன்ற நோய்கள் அவர்களிடையே அதிகம் காணப்படது.

செலவு காரணமாகவும், சிகிச்சைக்காகச் சென்று வருவதில் உள்ள சிரமங்கள் காரணமாகவும் மருத்து உதவி போதியளவு கிட்டவில்லை என்பதும் தெரிய வந்தது.

பொருளாதார ரீதியாக

  • வேலை செய்ய முடியாமை,
  • போதிய வருமானமின்மை,
  • மருத்துவத்திற்கு போதிய செலவழிக்க முடியாத நிலை,
  • அத்துடன் நீரிழிவு நோய் அதிகமாக ஏற்படுதல் போன்றவற்றால்

அவர்களது ஆரோக்கியம் மேலும் பாதிப்படைகிறது.  இதனால் அவர்களது இந்த வாழ்க்கைத் தரம் தாழ்ச்சியடைகிறது. இவற்றால் உள நலமும் குறைகிறது. இதுதான் அந்த ஆய்வின் முடிவு.

ஆனால் மூட்டு வருத்தங்கள் இருந்தபோதும், சோர்ந்து கிடக்காது உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இயங்குபவர்களிடையே இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவது குறைவு.

செய்ய வேண்டியவை

எனவே மூட்டு நோயுள்ளவர்கள் பாதிக்கப்படாது இருக்கச் செய்ய வேண்டியது என்ன?

  • “என்னால் எதுவும் முடியவில்லை” என மூட்டு வலியைக் காட்டி வாழாதிருக்கக் கூடாது. முடிந்தளவு உற்சாகமான சுறுசுறுப்பான வாழ்வைக் கடைப்பிடிக்க முயல வேண்டும்.
  • தினசரி தோட்டவேலை, வீட்டு வேலைகள், நடைப் பயிற்சி, உடற் பயிற்சி என ஈடுபட்டு தமது உடலைச் சோரவிடக் கூடாது. இது மனச் சோர்வையும், மனவிரக்தியையும் அண்ட விடாது.
  • நீரிழிவு, பிரசர், போன்ற வேறு நோய்கள் இருந்தால் அவற்றிக்கு அவசியமான மருத்துவத்தை செய்து தமது பொதுவான ஆரோக்கியத்தைப் பேண வேண்டும்.
  • அவர்களைக் குற்றம் கூறி மேலும் வேதனையில் ஆழ்த்தாது சூழ இருப்பவர்கள் அவர்களை உற்சாகப்படுத்தி,  மனப் பாதிப்பிற்கு ஆளாகாமல் தடுக்க வேண்டும்.

அமெரிக்காவில் மாத்திரம் 50 மில்லியன் மக்கள் மூட்டு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் நோய் நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இலங்கையில் எவ்வளவு என்பது கணக்கிடப்படவில்லை. இவர்கள் எல்லோருக்கும் உடல் வலியும் மன உபாதையும் அற்ற வாழ்வை அமைக்க உதவுவற்கு இந்த ஆய்வின் ஊடாக நாம் படிப்பினை பெறலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

தினக்குரல் பத்திரிகையின் ஹாய் நலமா பத்தியில் நான் எழுதிய கட்டுரை.
ஹாய் நலமா புள்க்கில்Saturday, September 17, 2011ல்  மூட்டு நோய்களோடு வாழ்தல்
0.0.0.0.0.0.0

Read Full Post »

தினக்குரல்  வழமையாக தனது பத்திரிகையில் இணைக்கும் அனுபந்தங்களுடன் இன்று புதிதாக ‘டிஜிட்டல் யுகம்’ என்பதை வெளியிட்டுள்ளது.

இதில் எனது வலைப்பதிவு அனுபவங்கள் பற்றிய சுருக்கமான நேர்காணலை இணைத்துள்ளார்கள்.

‘கண்டங்களை தாண்டிய வாசகர்களைக் கூட சில நிமிடங்களுக்குள் அடைய முடிகிறது’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

1.    கடந்த வருடத்தின் சிறந்த தமிழ் வலைப்பதிவாளராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தீர்கள். அத்துடன் 5 வலைப்பதிவுகளையும் நீங்கள் மேற்கொண்டுவருகின்றீர்கள். ஒரு மருத்துவராகவும், எழுத்தாளராகவும் உள்ள நீங்கள் வலைப்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று எவ்வாறு ஈர்க்கப்பட்டீர்கள்?

தினக்குரல் டிஜிட்டல் யுகம்

கணனியை காணாத கிடைக்காத போர்பிரதேசத்தில் 1996 வரை வாழ்ந்ததால் அதில் ஒரு அபரிதமான மோகம் இருந்தது. அதனால் கொழும்பு வந்ததும் கணனியை வாங்கி அதில் தட்டுத்தடுமாறி கீபோட் கொண்டு சுயமாக எழுதப் பழகினேன். பின் நோயாளர்களின் விபரங்களைப் பேணுவதற்காக கணனியை நான் உபயோகிக்கத் தொடங்கியபோது இலங்கையில் அவ்வாறு பேணுவதில்; ஒரு முன்னோடியாக இருந்தேன் எனலாம்.

தொடர்ந்து தமிழில் கீபோட்டில் மிகச் சிரமத்துடன் பாமினி பொன்டில் எழுதப் பழக நேர்ந்தது. பதிவுகள் இணைய இதழுக்காக மருத்துவ இலக்கிய கட்டுரைகளை எழுதுவதற்கு அது அவசியமாக இருந்தது. இது சுமார் 10-12 வருடங்களுக்கு முன்னராகும்.

இவ்வாறு கணனியிலும் இணையத்திலும் எழுதி வந்தபோதும் வலைப்பதிவளானக வேண்டும் என்ற சிந்தனை இருக்கவேயில்லை. ஆனால் அதற்கான ஆர்வத்தை தூண்டிவிட்டது நண்பர் மேமன் கவிதான்.

2 வலைப்பதிவை மேற்கொள்ளும் ஒரு எழுத்தாளர் எதிர்கொள்ளம் முக்கியமான பிரச்சினையாக இருப்பது தொழில்நுட்பப் பிரச்சினை. குறிப்பாக வலைத்தளத்தை அமைத்துக்கொள்வது பதிவேற்றம் செய்வது, தமிழ் யுனிகோட் எழுத்துருவைப் பயன்படுத்துவது என்பவையே அவை. இந்தப் பிரச்சினைகளை நீங்கள் எவ்வாறு வெற்றிகொண்டீர்கள்?

கண்டங்களை தாண்டிய வாசகர்களைக் கூட சில நிமிடங்களுக்குள் அடைய முடிகிறது'

மருத்துவனான எனக்கு கணனி ஒரு சாவாலாகவே இருந்தது. வலைத்தளத்தை அமைப்பது எப்படி என்று தெரியாத நிலையில் வலையில் தேடிதேடி வாசித்துக் கற்றே முதலாவதை கற்றுக்குட்டி போல அமைக்க முடிந்தது. படிப்படியாக அதை அழகுபடுத்தவும், விளக்கப் படங்களுடன் தெளிவாக்கவும் கற்றுக் கொண்டேன். இப்பொழுதும் வலைப் பதிவு சம்பந்தமாகக் பல புதிய விடயங்களை வலையிலேயே கற்று என்னை முன்னேற்ற முயல்கிறேன்.
ஆனால் அடிப்படைக் கணனி அறிவு எனக்கு இல்லாதது ஒரு குறையாகவே படுகிறது.

நான் ஆரம்பத்தில் blogspot.com வைப் பயன்படுத்தினேன்.

இப்பொழுது wordpress.com லும் எழுதுகிறேன்.

இவை இரண்டுமே அதிக கணனி அறிவு இல்லாதவர்களும் இலகுவாக தமக்கென சுலபமாக வலைப் பதிவுகளை (புளக்) அமைக்க கை கொடுக்கி;ன்றன. அவற்றின் தளத்திற்கு சென்றால் படிமுறையாக புளக் அமைக்க வழி காட்டுகின்றன. ஆங்கில அறிவு அதிகம் இல்லாதவர்கள் தமிழிலும் செய்யக் கூடியதாக இவை அண்மைக்காலமாக தமிழிலும் கிடைப்பது மற்றொரு சிறப்பாகும்.

Keyman மென்பொருளை உபயோகிப்பதால் பாமினியில் டைப் பண்ணுவதுபோலவே டைப் பண்ண முடிகிறது. அது எனக்குச் சிரமமாக இருக்கவில்லை.

3. உங்களுடைய தொழில் மற்றும் பத்திரிகைகளுக்கு எழுதுவது என்பவற்றுக்கு மத்தியிலும், இவ்வாறு ஐந்து வெவ்வேறான வலைத்தளங்களை வைத்து உங்களால் எவ்வாறு பராமரிக்க முடிகின்றது. அதற்கான நேரத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வீர்கள்?

வலைதளத்திற்கு என நான் தனியாக எழுதுவது குறைவு. எற்கனவே பத்திரிகை சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரைகளையே வலைத்தளத்தில் பகிர்கிறேன்.

இருந்தபோதும் பல வலைப் பதிவாளர்கள் போல என்னால் தினமும் பதிவேற்ற முடியவதில்லை. வாரத்திற்கு ஒரு முறையாவது மருத்துவப் பதிவு ஒன்றையும், இலக்கிய படைப்பு ஒன்றையும் பகிர முயல்கிறேன். பெரும்பாலும் இரவில் நேரங்கெட்ட நேரம்வரை முழித்திருந்தே இவற்றைச் செய்ய நேர்கிறது.

4. இவ்வாறான வலைப்பதிவுகளை மேற்கௌ;வதன் மூலமாக எவ்வாறான நன்மைகளை நீங்கள் பெற்றுக்கொண்டிருக்கின்றீர்கள்? அதாவது இதன் மூலமாக உங்களுக்குக் கிடைத்த பலன்தான் என்ன?

வயது என்பது புதிய தொழில் நுட்பங்களைக் கற்கவும் பயன்படுத்தவும் தடையாக இருக்கக் கூடாது. அதைத் தாண்ட வேண்டும் என்ற சவாலை எதிர்கொள்வதே எனது முதல் இலக்காக இருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல எனது மருத்துவ அறிவை பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு அப்பால் ஒரு பரந்த தளத்திற்கு நகர்த்த வேண்டும் என்ற அவாவை நிறைவேற்றிய திருப்தி கிட்டியது.

கண்டங்களைத் தாண்டிய வாசகர்களைக் கூட  சில நிமிடங்களுக்குள் அடைய முடிவதும், அவர்களது விமர்சனங்களையும் கருத்துகளையும் உடனடியாகவே பெற முடிவதும் மகிவும் மகிழ்சி அளிப்பதாகும். பல பழைய நட்புக்களைப் புதிப்பிக்கவும், புதிய நட்புகளை  பெற முடிவதும் உற்சாகம் அளிக்கிறது.

எனது படைப்புகளை பலர் வெவ்வேறு தளங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள். அதனால் இன்னமும் பரவலாக வாசிக்கப்படுகிறது. இவற்றால் எழுத்தளான் என்ற முறையில் கிட்டும் ஆத்ம திருப்தியைத் தவிர வேறு என்ன கிடைக்க முடியும்.

5. தமிழில் வலைப் பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கு நீங்கள் சொல்லக் கூடிய ஆலோசனை என்ன?

தெளிவான இலக்குகளுடன் பதிவிட வேண்டும். யாருக்காக எழுதப் போகிறேன், எவ்வாறு எழுதப் போகிறேன் எனத் தெளிவுடன் எழுத வேண்டும்.

எதை வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் யாருக்காவது பயன்படுவதாக இருக்க வேண்டும். சீரியசான விடயமாகத்தான் எழுத வேண்டும் என்றில்லை. சற்று ரிலக்ஸ்சாக மற்றவர்களுடன் பொழுதுபோக்கிறாக எழுதுவதாலும் இருப்பதில் தவறில்லை.

மற்றவர்களைக் கவரும் விதத்தில் எழுதுவது அவசியம். சிலரது தலைப்பு மட்டுமே கவர்ச்சியாக இருக்கும் உள்ளடக்கம் சப்பென்று இருக்கும். அவ்வாறான எழுத்துகளால் வாசகர்களைத் தக்க வைத்திருக்க முயடிhது.

0.0.0.0.0.0.0

Read Full Post »

விஞ்ஞானமும் அறிவியலும் வியத்தகு வளர்ச்சி பெற்றுவிட்டன. ஒவ்வொரு துறையிலும் நுணுக்கமான ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன. இதன்பேறாக உலகின் ஒரு மூலையில் பெற்ற ஆய்வு முடிவுகளை மறு அந்தத்தில் உள்ள கிராமங்களும் மறுகணம் பெறக்கூடியவாறு தகவல் புரட்சி வழிவகுத்துள்ளது.

அவற்றைப் பெறுவதற்கு ஆங்கில மொழி அறிவின் போதாமை ஒரு தடைக்கல்லாகப் பலருக்கு இருக்கக் கூடும். அத்துடன் எமது நீண்ட வரலாறு கொண்ட பண்பாட்டுப் பின்னணியானது பருவ மாற்றங்களையும், பாலியல் பிர்ச்சினைகளையும் தமது பிள்ளைகளோடு ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகப் பேசுவதற்குத் தடைக்கல்லாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை.அதேபோல் பாலியல் கல்வி பாடசாலைக் கல்வித்திட்டத்தில் அடங்கியிருந்த போதும் மேற்கூறிய காரணங்களால் ஆசிரியர்களால் போதிக்கப்படாமல் இருப்பதையும் காண்கிறோம்.

இத்தகைய சூழலில் நடனசபாபதியின் இம்மொழிபெயர்ப்பு முயற்சி எமது சமூகத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். பருவமானவர்கள் பற்றிய மிக அண்மைக்கால விஞ்ஞான ரீதியான சிந்தனைகளை அது எமக்குத் தருகிறது. 2000 ஆண்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மூலப்பிரதியை இவ்வளவு விரைவாக எமக்கு தமிழில் தரும் நடனசபாபதி எமது நன்றிக்குரியவர்.

இந்நூல் எவை பற்றிப் பேசுகிறது? பருவமடைதல் தொடர்பான அனைத்து விடயங்களையும் பேசுகிறது எனலாம்.நண்பர் நடனசபாபதி உள்ளத்தால் என்றும் இளைஞர். எமது சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எந்நேரமும் துடிப்பவர். விஞ்ஞான உணர்வும் விஞ்ஞான ரீதியான பார்வையும் எமது சமூகத்தில் காலூன்ற வேண்டும் என்று அவாவி நிற்பவர்.

பருத்தித்துறை ஞானசம்பந்தர் கலாமன்றம், லயன்ஸ் கழகம், இலங்கை விஞ்ஞானச் சங்கம் போன்ற அமைப்புகளூடாகப் பல்வேறு சமூக சேவைகள் ஆற்றியவர். தமிழ்ப் பிரதேசங்களில் விஞ்ஞான அறிவை மாணவர்களிடையேயும் வளர்ந்தவர்கள் இடையேயும் பரப்புவதில் 1975 முதல் இலங்கை விஞ்ஞான சங்கம் ஊடாகப் பெரும் பணியாற்றி வருகிறார்.

ஊற்று, விஞ்ஞான முரசு போன்ற சஞ்சிகைகளில் இவரது பல ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. விஞ்ஞான முரசின் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இலங்கை வானொலி ஊடாகவும் விஞ்ஞான அறிவைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ளார். யாழ் நீர் பற்றிய இவரது ஆக்கங்கள் பரவலான கணிப்பைப் பெற்றமை இப்பொழுதும் நினைவு கூரத்தக்கதாகவுள்ளது.

மொழிபெயர்ப்பும் இவருக்கு கைவந்த கலை. போர்க்காலச் சிந்தனைகள் என்ற நூல் சில ஆண்டுகளுக்கு முன் தேசிய கலை இலக்கியப் பேரவை ஊடாக வெளிவந்து பெரு வரவேற்பைப் பெற்றது.காலத்தின் தேவையறிந்து அக்கறையோடு செய்யப்பட்ட அவரது இம் முயற்சியைப் பாராட்டுகிறேன். புத்தகங்களோடும், மொழிபெயர்ப்புகளோடும் தமிழ் அறிவியல் இலக்கியத்திற்கு மேலும் வேகத்தோடு அவர் பங்களிக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறேன்.

டாக்டர்.எம்.கே. முருகானந்தன்

22.06.2002.
நன்றி:- pathivukal.com

Read Full Post »