Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜனவரி, 2012

காசநோய் உலகெங்கும் மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது.

கொழும்பு மாவட்டதிலிருந்து மாத்திரம் வருடாவருடம் 2000 புதிய காச நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். ஏனைய மாவட்டங்களில் இருந்து வருடாவருடம் 10,000 புதிய காச நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதாக அறியப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலும் குறைவில்லை.

போரில் குண்டுத்தாக்குதல்கள் ஏராளமாக நடந்த காரணத்தால் அந்த விசக் காற்றுகளினால் பல விதமான சுவாச நோய்களுக்கு வடக்கு கிழக்கு மாகாண மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முக்கியமாக வன்னி மக்கள் மோசமாக ஆட்பட்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

இந் நிலையில் காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் யாழ் சுகாதாரப் பகுதியின் காசநோய் ஒழிப்புப் பிரிவு மருத்துவ அதிகாரியான டொக்டர் சி.யமுனானந்தா பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் எழுதிய நூல்தான் மேற் கூறிய ‘காசநோய் சமூக அணுகுதல்’ என்பதாகும். மிகவும் எளிமையான தமிழில் அனைவருக்கும் புரியும் வகையில் நூலை எழுதியுள்ளார்

உள்ளடக்கம் பின்வருமாறு

  1. காசநோயும் சுவாச ஆரோக்கியமும்
  2. நுரையீரலில் ஏற்படும் காசநோய்
  3. நுரையீரல் அல்லாத பகுதிகளில் ஏற்படும் காசநோய்
  4. சிறுவர்களில் காசநோய்
  5. பெண்களில் காசநோய்
  6. காசநோயும் சலரோகமும்
  7. காசநோயும் புகைத்தலும்
  8. காசநோயும்மதுபானமும்
  9. காசநோயும்போசாக்கும்
  10. காசநோயும்எயிட்ஸ் நோயும்
  11. முதியவர்களில் காசநோய்
  12. மருந்திற்கு எதிர்ப்புத்தன்மை உடைய காசநோய்
  13. காசநோயை ஆய்வுகூடங்களில் கண்டறிதல்
  14. ஆய்வுகூடங்களில்தரம் பேணுதலும் கட்டுப்பாடும்
  15. காசநோயிற்கான சிகிச்சை
  16. தொய்வுநோயினை காசநோயிலிருந்து வேறுபடுத்தி அறிதல்
  17. காசநோய் பற்றிய விழிப்பணர்வு

காசநோய் பற்றிய விழிப்புணர்வுப் பாடல்கள் சிலவும் இணைக்கப்பட்டுள்ளமை சமூகத்திற்குள் செய்தியை இலகுவாகக் கொண்டு செல்ல வழிவகுக்கிறது.

காசநோய் என்றால். அதன் அறிகுறிகள் என்ன? என்பதை சுலபமாக விளங்கக் கூடிய படங்களாகக் கொடுத்துள்ளார்.

இவை தவிர வேறு சில அறிகுறிகளும் அடங்கும். அவை பற்றிய கருத்துப்படங்களைக் கீழே காணலாம்.

இதைவிடத் தெளிவாக காசநோயின் முக்கிய அறிகுறிகள் பற்றி விளக்க முடியாது. எவருக்கும் புரியும் வண்ணம் கருத்துப் படங்கள் அமைந்துள்ளன.

இந்த நூல் ஏற்கனவே இரண்டு பதிப்புகள் வந்து மக்களிடையே பேராதரவைப் பெற்றுள்ளது.

மக்களிடையே சேவை மனப்பாங்குடன் பணியாற்றுவதில் யாழ் மருத்துவர்கள் என்றுமே முன்னணியில் நிற்கிறார்கள்.

போரின் கொடும் தாக்கம் நிறைந்த நாட்களில் டொக்டர்.பொன்னம்பலம், டொக்டர்.திருமதி.நாகேந்திரா, டொக்டர்.சிவகுமார், டொக்டர்.தயா சோமசுந்தரம், டொக்டர்.ஆனந்தராஜா, டொக்டர்.கணேசரட்ணம், டொக்டர்.சிவயோகன், டொக்டர்.குகதாசன், டொக்டர்.ரவிராஜ் போன்ற பலரும் ஆற்றிய பணிகள் அளப்பரியது. அவர்களுக்கு எமது சமூகம் என்றும் மதிப்புக் கொடுத்து வந்திருப்பதையும் அறிவோம்.

இன்று கொழும்பில் பணியாற்றும் நூற்றுக் கணக்கான மருத்துவ நிபுணர்களிடையே மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் உணர்ந்து பரிவோடு பணியாற்றுபவர்களாக டொக்டர்.ஆனந்தராஜா, டொக்டர்.கணேசரட்ணம், டொக்டர்.சிவகுமார்,  போன்ற ஒரு சிலரையே குறிப்பிடலாம். இவர்கள் யாவரும் முன்பு யாழ் மாவட்டத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றும் அவ்வாறான பல மருத்துவர்கள் யாழ் மாவட்டத்தில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அனைவர்களது பெயர் விபரங்களை நான் அறியேன். புற்று நோய், காசநோய், பொது மருத்துவம், மனநலம், சத்திர சிகிச்சை, கண், காது மூக்கு தொண்டை, மகப்பேறு போன்ற பல துறைகளிலும் அளப்பரிய பணியாற்றுகிறார்கள். குறைந்த வசதிகளுடன் நிறைான பணியாற்றுகிறார்கள்.

தங்கள் வழமையான பணிகளுக்க மேலாக அவர்கள் காசநோய், புற்றுநோய், நீரிழிவு போன்ற பல நோய்கள் பற்றிய நூல்களையும். சிடி க்களையும் வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியது.

அவர்களது பணிகளுக்கு ஆதரவும் உதவியும் வழங்க வேண்டியது எமது கடமையாகும். பாராட்டிற்குரிய பெருமனிதர்களாக இன்றும் யாழ் மருத்துவர்களே விளங்குகிறார்கள்.

ஞாயிறு தினக்குரலின் நூலகம் பகுதியில் 29.11.2012 ல் வெளியான எனதுகட்டுரை.

Read Full Post »

உடல் தளர்ந்து, கண்கள் மூடியும், திறவாமலும் சோர்ந்திருந்ததன. அவரது முக்கிய பிரச்சனை ‘நித்திரை வருகுதில்லை’ என்பதுதான்.

உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்த்மா போன்ற நோய்களும் அவருக்குத் தொல்லை கொடுக்கின்றன.

“பகல் முழுதும் கதிரையில் இருந்து தூங்குவார். இரவும் எட்டு மணிக்கே படுத்திடுவார். ஆனால் எப்பவும் நித்திரை இல்லை எண்டுதான் சொல்லூர்” என்று அலட்சியமாகக் கூறினாள் கூட்டிக் கொண்டு வந்த மகள்.

இது அவருடைய பிரச்சனை மட்டுமல்ல. பெரும்பாலான வயதானவர்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சனைதான்.

  • பகலெல்லாம் தூங்கி விழுவது,
  • நேர காலத்துடன் இரவு 7-8 மணிக்கே படுத்துத் தூங்குவதும்,
  • அதிகாலை 3-4 மணிக்கெல்லாம் தூக்கம் கலைந்து எழுந்து சிரமப்படுவதும்

பல வயதானவர்ளைப் பாதிக்கும் பிரச்சனைகள் தான்.

இதற்குக் காரணம் வயதாகும் போது எமது உடலியக்கத்தின் ஒழுங்கு லயத்தில் ஏற்படும் குழப்பங்களே ஆகும். இதனை முன்நகர்ந்த நித்திரை (Advanced Sleep Phace) என்பார்கள்.

அதாவது தூக்க நேரம் முன்னகர்கிறது. உண்மையில் இது தூக்கக் குழப்பமே அன்றித் தூக்கக் குறைபாடு அல்ல. அத்தோடு தூக்கக் குறைபாடும் இருக்கக் கூடும் என்பதை மறுப்பதற்கில்லை.

முன்நகர்ந்த நித்திரை

பொதுவாக மனிதர்களுக்கு 6 முதல் 7 மணிநேர நித்திரை தினசரி தேவை.அவ்வாறு தூங்கினால்தான் உடலில் புத்துணர்ச்சி ஏற்படும். தூக்கம் குறைந்தால் அல்லது குழப்பமான தூக்கமாக இருந்தால் உடல் சோர்வடையும், மனத்தை ஒருமுகப்படுத்த முடியாது. சிந்தனைத் திறனும் குறையும்.

மேற் கூறிய முன்நகர்ந்த நித்திரையைத் தவிர வேறு பல காரணங்களாலும் வயதானவர்களின் தூக்கம் குறையலாம்.

நோய்கள் காரணமாகலாம்

  • மூட்டு வாதம்,
  • பார்க்கின்சன் நோய்,
  • ஆஸ்த்மா,
  • இருதய நோய்கள்,
  • உணவுக் கால்வாய் நோய்கள்,
  • பக்கவாதம்,
  • மனச் சோர்வு

போன்ற இன்னும் பல்வேறு மூப்புக் கால நோய்களும் அவர்களது தூக்கததைக் குறைக்கும்.

மருந்துகளும் காரணமாகலாம்

வயதாகும் போது பல்வேறு நோய்கள் உடலைத் தாக்கக் கூடும் அல்லவா? ஆஸ்தமா, பிரஜர், தைரொயிட் சுரப்பி நோய்கள், மனச் சஞசலம் போன்ற பல்வேறு நோய்களுக்கு தினசரி உபயோகிக்கும் மருந்துகளும் தூக்கக் குழப்பத்திற்குக் காரணமாகிறது.

எனவே தூக்கக் குழப்பம் உங்களைத் துன்பப்படுத்துகிறதாயின் உங்கள் வைத்தியருடன் வெளிப்படையாகக் கதையுங்கள்.

  • அவரது ஆலோசனைகள் உங்கள் பிரச்சனைக்கான காரணத்தைக் கண்டு பிடிக்கவும்,
  • பிரச்சனையைத் தீர்ப்பதற்கும் உதவும்.
  • வேறு நோய்களுக்கு எடுக்கும் மருந்துகள்தான் காரணம் என அவர் கருதினால் அம் மருந்துகள் உட்கொள்ளும் நேரத்தை மாற்றக் கூடும் அல்லது மருந்தையே மாற்றவும் கூடும்.

நீங்களும் முயற்சியுங்கள்

உங்கள் தூக்கக் குழப்பத்தை தீர்க்க நீங்களும் சில முயற்சிகள் செய்யலாம்.

  • உங்களுக்கு உற்சாகத்தை ஊட்டும், உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டும் அல்லது பரபரப்பை ஏற்படுத்தும் எந்தச் செய்கையிலும் படுக்கைக்குப் போவதற்கு முன்னரான ஒரு மணி நேரத்திற்குள் ஈடுபட வேண்டாம்.
  • உதாரணமாக விறுவிறுப்பான தொடர் நாடகங்களை ரீவியில் பார்ப்பது, ஆர்வமூட்டும் நூல்களைப் படிப்பது, சுவார்ஸமான விவாதங்களில் ஈடுபடுவது, உணர்ச்சி மயப்படுவது போன்ற செய்கைகளை படுக்கைக்குச் செல்லும் தருணங்களில் நீங்கள் தவிர்க்க வேண்டும்.
  • கடுமையான வெளிச்சமும், இரைச்சலான சூழலும் உங்களைத் தூங்கவிடாது. எனவே ஆரவரமற்ற, ஒளி குறைந்த சூழலில் படுக்கைக்குப் போவதற்கு முந்திய சில நிமிடங்களைக் கழியுங்கள்.
  • படுக்குமிடமும் அத்தகையதாக இருக்க வேண்டும் என்பது சொல்லாமலே தெரியும்தானே.

  • நரம்புகளைத் தூண்டும் பானங்களான கோப்பி, மது, கோக் போன்றவற்றை மதியத்திற்குப் பின் அருந்த வேண்டாம்.
  • மதியத்திற்குப் பின் அதிக நீராகாரம் அருந்த வேண்டாம். அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ நேர்ந்தால் தூக்கம் குழம்பும் அல்லவா?
  • தூங்கப் போவதற்கான நேரத்தை ஒழுங்காகக் கடைப்பிடியுங்கள். உதாரணமாக இரவு 10 மணிக்குப் படுத்து காலை 5 மணிக்கு எழுவது போன்ற உங்களுக்கு உகந்த ஏதாவது ஒரு ஒழுங்கான நேர அட்டவணையை தினசரி தவறாமல் கடைப்பிடியுங்கள்.
  • மதிய உணவிற்குப் பின் தினசரி தூங்குபவராயின் அதனை 15 முதல் 30 நிமிடங்களாக மட்டுப்படுத்துங்கள்.
  • மாலை நேரத்தில் சற்று உலாவச் செல்லுங்கள். தினசரி கை கால்களைச சற்று நீட்டி மடக்கி சிறிது உடற் பயிற்சி செய்யுங்கள்.

இவற்கைக் கடைப்பிடித்துப் பாருங்கள் உங்கள் தூக்கத் தொல்லை தீரும்.

ஹாய் நலமா வலைப்பூவில் எழுதிய கட்டுரையின் மீள் பதிவு

0.0.0.0.0.0.0

Read Full Post »

நடைப் பயிற்சி என்பது சாதாரணமான அனைவரும் செய்யக் கூடிய பிரச்சனைகள் அற்ற  ஒரு உடற் பயிற்சியாகும். ஆனால் அதே நேரம் உடலுக்கு உச்ச நிலையில் நன்மைகளை அளிக்கக் கூடியது.

எந்த வயதினரும், எத்தகைய உடல் நிலையினரும் எந்த நேரத்திலும் செய்யக் கூடிய ஒரு இலகுவான பயிற்சி. தெருக்களில், மைதானங்களில், கடற்கரையில், கோயில் வீதிகளில் என எங்குமே செய்யக் கூடியது. இவை எதும் கிட்டாவிட்டால் வீட்டினுள் கூட சமாளித்துச் செய்யலாம். தொடர் மாடிவீடுகளின் மொட்டை மாடிகள் காற்றறோட்டம் கொண்ட மற்றொரு வசதியான இடமாகும்.

அதற்குப் பயிற்சி பெற வேண்டியதில்லை, ஆசிரியர்கள் வழிகாட்டிகள் எதுவுமே வேண்டியதில்லை. நீங்களாகவே செய்யக் கூடியது.

அத்தோடு எந்த ஆபத்தும் அற்ற பயிற்சி எனவும் சொல்லலாம்.

இதனால் உடல் நலத்திற்கு பல நன்மைகள் கிட்டுகின்றன.

  • குருதியில் உள்ள கெட்ட கொலஸ்டரோல் ஆன Lower low-density lipoprotein (LDL) னைக் குறைக்க உதவுகிறது.
  • குருதியில் உள்ள நல்ல கொலஸ்டரோல் ஆன Raise high-density lipoprotein (HDL) லை அதிகரிக்க உதவுகிறது.
  • பிரஷர் எனப்படும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க இது அவசியம்
  • நீரிழிவு வராமல் தடுப்பதற்கும், எற்கனவே நீரிழிவு இருந்தால் அதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் நிறையவே பங்களிக்கிறது.
  • அதிகரித்த எடையைக் குறைக்கவும், எடை அதிகரிக்காமல் தடுக்கவும் நடைப் பயிற்சி மிகவும் நல்லது.
  • மனதில் அமைதியையும் சாந்தத்தையும் கொண்டு வரவும் உதவும்.
  • உடல் உறுதியாகவும் நலமாகவும் இருக்க இதைவிட சுலபமான பயிற்சி எதுவும் கிடையாது.

அண்மையில் வதிரி சி. ரவீந்திரனின் ‘மீண்டு வந்த நாட்கள்‘ கவிதைத் தொகுதியைப் படிக்கும் வாய்புக் கிட்டியது. இதில் ஒரு கவிதை நடத்தல் பற்றியதாகும்

எந்த நேரத்தில் எத்தகைய சூழலில் எங்கு நடப்பர். இப்படிச் சொல்கிறார் நண்பர் ரவீந்திரன்

தொடர்ந்து எப்படி நடப்பர் என்பதை இனிதே சொல்கிறார்.

வேறென்ன செய்வர்..

தொடர்ந்து சொல்கிறார்

கவிதை இவ்வாறு நிறைவுறுகிறது.

“..முதிர்ச்சி என்பது மனதினில் தெரியும். நடையினில் இல்லை.” என்கிறார்.

பல நல்ல கவிதைகளை இலகுவான தமிழில் வாசகனிடம் கொண்டு செல்லும் நல்ல கவிதைத் தொகுப்பாகும்.

அருமையான கவிதை.

இருந்தபோதும் அக் கவிதையின் இறுதி வரியுடன் கருத்து ரீதியாக எனக்கு உடன்பாடு இல்லை.

“நடத்தல் என்பது பயணத்தின் இறுதிப்படியே” என்கிறார்.

அல்ல. அது நலமான உறுதியான மகிழ்ச்சியான வாழ்வுக்கான முதற்படி என்பேன்.

அதனால்தான் இப்பொழுது நடப்பர்களில் பலர் முதியவர்கள் அல்ல. பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதினரும் இளைஞர்களும் கூட.

ஆம். நடைப் பயிற்சி அனைவருக்குமானது. நலமான உடலைக் கொடுக்கும்.

இனிமையான கவிதையையும், இதைப் போன்ற பல கவிதைகளையும் கொடுத் நண்பர் வதிரி சி. ரவீந்திரன் அவர்ளுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

0.0.0.0.0.0.

Read Full Post »

குடிகாரனின் முரட்டுக் கோபம்

ஞானிகளின் மோனக் கண்கள் போல அரைவாசி மூடிக் கிடந்தற்குக் காரணம் யோகநிலை அல்ல. கண்கள் கோவைப் பழம்போல சிவந்திருந்தன. அதற்குக் காரணம் மது போதையும் அல்ல.

அடிபட்ட மனைவி

இடது பக்க நெற்றி கண்டி வீங்கியிருந்தது. அதற்குக் கிழே கண் மடலும் மொழுமொழுவென நீர்க்கட்டி போல அதைத்திருந்தது.

இவற்றை எமது மனத்தில் அகற்றிவிட்டுப் பார்த்தால் வழமையான அழகான முகமாக பிரகாசிக்கும் எனத் தோன்றியது.

பார்க்கப் பரிதாபமாக தோற்றமளித்தாள். ரத்தக்களரியாகச் சிவந்திருந்த முகத்தில் சோகம் அப்பியிருந்தது. அதையும் மீறிய வன்மம் அவளது கண்களில் உறைந்திருப்பதை என்னால் உணர முடிந்தது.

கண்களைக் கீழே இறக்கிப் பார்த்தபோது கழுத்தில் கருமையாகக் கண்டல். கைகளில் அங்காங்கே சிறு கீறல்கள்.

“என்ன நடந்தது?”

உடன் பதில் வரவில்லை. வாய் திறப்பதற்கு முன் எதைச் சொல்வது எப்படிச் சொல்வது எனக் கூட்டிக் கழித்துப் பார்க்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டேன். தானகவே பேசட்டும் எனக் காத்திருந்தேன்.

வழமையில் அவள் அப்படியானவள் அல்ல. மிகவும் துடிப்பானவள். கேட்பதற்கு முன் பட்பட்டெனப் பதில் வரும். எதிர்க் கேள்விகளும், சந்தேகங்களும் சரமாரியாகப் பாய்ந்து வந்து என்னைத் திணறடிக்கும்.

திருமணமாகி ஓரிரு வருடங்கள்தான். காதல் கலியாணம். அவனும் நல்ல வேலையில் இருக்கிறான். பண்பாகப் பழகுபவன். இன்னும் குழந்தைகள் இல்லை. இன்று தனியே வந்திருக்கிறாள்.

மனதில் அவளது சரித்திரப் பக்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.

“எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை…” ஆரம்பித்தவள் சற்று நிதானித்தாள்.

“இதெல்லாம் இவராலைதான். குடிச்சுப் போட்டு வந்தார் என்றால் என்ன செய்யிறம் என்று அவருக்குப் புரியுதில்லை. அடிச்சு உதைச்சு என்னைச் சம்பலாக்கிப் போடுகிறார்”

எனக்கு ஆச்சரியாக இருந்தது. குடிப்பானா அவன்?

“குடிக்கிறவரே. அடிக்கடி குடிக்கிறவரோ. கூடுதலாகவும் குடிக்கிறவரோ” என விசார்த்தேன்.

“அதிகம் குடிக்கிறதில்லை. எப்பெண்டாலும்தான். பார்ட்டி, பிரண்ட்ஸ் என்று சேர்ந்தால் குடிப்பார்…”

குடிச்சால் பிரச்சனை

“…ஆனால் குடிச்சிட்டு வந்தால் பிரச்சனைதான். கண் மண் தெரியாது, கோபம் பொத்துக் கொண்டு வரும். தேவையில்லாமல் என்னோடை சண்டை போடுவார்.”

காயங்களுக்கு பண்டேச் பண்ணி, உடல் வலிகள் தீர மருந்துகள் கொடுத்தேன்.
ஆனாலும் அவளது அடிப்படைப் பிரச்சனை தீரவில்லை என்பது நன்றாகவே புரிந்தது. தீராவிட்டால் மீண்டும் அடிகாயங்களுடன் வந்து நிற்பது நிச்சயம்.
பேச்சை ஆரம்பித்தேன்.

“ அவரது குடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாதா?”

“அடிக்கடி குடிக்கிறவரில்லை…

“..எப்பெண்டாலும்தான் குடிப்பார். அந்த நேரத்திலை அவர் அடியாமலிருக்க ஏதாவது செய்ய முடியுமா டொக்டர்”

சற்று சிக்கலான விடயமாக இருந்தது. மருத்துவ ரீதியில் குடித்துவிட்டு வருபரை உணர்ச்சி வயப்படாமல் தடுக்க முடியமா?

அதனால் எனக்கு ஒரு சவாலாக இருந்தது. சற்று யோசித்தேன்.

“நீங்கள் ஒரு முயற்சி செய்து பாருங்கள். அவர் குடித்துவிட்டு வரும் நேரங்களில் உங்களது வாயில் கிறீன் ரீயை விட்டு அலசிக் கொப்பளித்துக் கொண்டே இருங்கள்…
…குடிக்கக் கூடாது,

….வெளியே துப்பவும் கூடாது.

…வாயில் வைத்து அலசிக் கொண்டே இருங்கள்.”

கிறீன் டீயை அலசுங்கள்

அவளுக்கு ஆச்சரியாக இருந்தது.

கிறீன் ரீயை குடியாமல் அலசிக் கொண்டே இருப்பதா. அதுவும் அடிக்கும் அவரல்ல! அடி வாங்கும் தான்!

அரை நம்பிக்கையோடு சென்றாள்.

சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின் வந்தாள். அடி, காயம் எதுவும் இல்லை. தடிமன் காய்ச்சலுக்கு மருந்தெடுக்க வந்திருந்தாள்.

“இப்ப அவர் குடித்தால் அடிக்கிறதில்லையோ”

“இல்லை…..” முழுமதியாக முகம் பூரித்தாள்.

“…என்ன அற்புதமான ஐடியா சொன்னீர்கள். அவர் குடிச்சிட்டு வந்தால் நான் நீங்கள் சொன்னபடி வாயில் கிறீன் ரீயை என்ரை வாயில் விட்டு அலசிக் கொண்டே இருப்பேன். அவர் அடிப்பதேயில்லை…
.
…என்ன அதிசயம். எப்படி நடக்குது டொக்டர்? அந்த கிறீன் ரீ மணத்திற்கு கோபம் வராமல் தடுக்கிற குணம் இருக்கிதா?”

நான் மறுமொழி சொல்லவில்லை. உண்மையைச் எப்படி முகத்துக்கு நேரே சொல்வது?

இரு கை தட்டினால்தானே ஓசை எழும் என்ற சிம்பிள் தத்துவம்தான்.

ஒரு கையோசை

‘நீ வாயை மூடிக்காண்டிருந்தால் அவரது கை நீளாது’ என்பதை அவளுக்குக் கூறவில்லை.

வெறுமனே புன்னகைத்தேன்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Steth இன் குரல் புளக்கில் நான் எழுதிய கட்டுரை

0.0.0.0.0.0

Read Full Post »

புது வருட ஆரம்பக் கொண்டாட்டங்களும், குதூகலங்களும்
வெடியோசைகள் மெளனித்தித்தது போல போல அடங்கிவிட்டன.
திங்கள், செவ்வாய் என வேலை நாட்கள் தொடங்கிவிட்டதால்
எல்லோரையும் பிஸியாக்கிவிட்டிருக்கும்.
இந்த நேரத்தில் உங்களுக்கு கிடைத்த புதுவருட வாழ்த்துக்களை
ஒருமுறை மனத்தில் நினைவூட்டிப் பார்க்கலாமே?

யாருடைய புதுவருட வாழ்த்து உங்கள் மனதிற்கு இதமாக இருந்தது?

அதிகாலை கண்விழிக்க முன்னரே காதருகே Happy New Year Darling கிசுகிசுப்புடன் புது வருடம் பிறந்திருக்குமே! மற்ற வேலைகளை எல்லாம் மறந்து வாழ்க்கைத் துணையைக் கணகணப்புடன் கட்டியணைக்க வைத்திருக்குமே. அந்த வாய்மொழி வாழ்த்து பிடித்ததா?

கன்னத்தில் முத்தமிட்டு “Happy New Year Dad” என உங்கள் செல்லக் குட்டி வாழ்த்தியிருக்குமே! இதைவிட வேறென்ன வேண்டும் என மனத்தை நெகிழ வைத்திருக்குமே.

டெலிபோன் கிணுகிணுக்க எரிச்சலுடன் தூக்கம் கலைந்து நேரத்தைப் பார்த்தால்  அதிகாலை 5 மணி. இந்த நேரத்தில் யார் என ரிசீவரைத் தூக்குகிறீர்கள்.

“எல்லா செளபாக்கியங்களும் கிட்டி, இந்தப் புதுவருடத்திலும் இனி வரும் காலங்களிலும் நீ நல்லா வழ வேணும்.”. காலையில் கோயிலுக்கும் போகும் அவசரத்திலும் மறக்காமல் வாழ்த்துச் சொன்ன அம்மாவின் வாழ்த்து உங்களை மகிழச்சியில் ஆழ்த்தியதா?

கிக்கீ கிக்கீ என குருவியின் அழைப்புப்போல விடாது இசையாக ஒலித்துக் கொண்டே நண்பர்களும் உறவுகளும் அனுப்பிய வாழ்த்துக்களால் நிரம்பி வழியும் SMS செய்திகள் பிடித்திருந்தனவா?

கணனியைத் திறந்தால் Facebook கிலும், Twitter, Google +, e mail கிலும் வந்திருக்கும் வாழ்த்துக்களும் செய்திகளும் உங்களுக்குப் பிடித்திருக்கும்.

இப்படிப் பல வாழ்த்துகள் கிட்டியிருந்தாலும் அதில் ஏதாவது ஒன்று உங்கள் மனதுக்கு நெருக்கமானதாக மகிழ்ச்சியில் ஆழத்துவதாக அமைந்திருக்கும். அது யாருடையது?

இதே போல எனக்கும் பல வாழ்த்துகள் கிடைத்திருந்தன.

குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், இலக்கிய வட்டத்தினர், ஊடகத் துறை நட்புகள் எனப் பல. பலவிதமாக, பல வடிவங்களில்..

பல நோயாளிகளிடமிருந்து கூட..

அதில் இவரது வாழ்த்து மடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம் அவர் ஒரு மிகவும் வயது முதிர்ந்தவர். 90 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். சென்ற வருட கிருஷ்மஸ்க்கு அடுத்த நாள்தான் தனது 87வது பிறந்த தினத்தைக் கொண்டாடியிருந்தார்.

இந்த வயதிலும் தானே கடைக்குப் போய் இந்த வாழ்த்து மடலை எனக்கு வாங்கி அனுப்பியிருக்கிறார். இவர் தானே சென்று வாங்கிய விடயம் நேற்று அவரது மகள் தனது மகனை சிகிச்சைக்காகக்  கொண்டு வந்தபோதுதான் தெரிந்தது.

“உங்கள் அப்பாவிற்கு எனது வாழ்த்தையும் அவரது வாழ்த்து மடலுக்கு நன்றியையும் தெரிவியுங்கள்” என்றேன்.

“தானாகவே போய் வாங்கிப் போட்டிருக்கிறார் போலை. அவர் அனுப்பியது எங்களுக்குத் தெரியாது. அப்படி ஒரு அன்பு அவருக்கு உங்கள் மேல்” என்றார்.

எனக்குப் புல்லெரித்ததது.

பணத்தினால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் என்ற மமதையுடைய காலத்தில் தனியார் மருத்துவனான என்னை நினைத்து புது வருட வாழ்த்து அனுப்பியிருக்கிறார். அதில் தனது நடுங்கும் கைகளால் வாழ்த்து எழுத எவ்வளவு சிரமமப்பட்டிருப்பார்.

வாழ்த்து மடலில் அவரது பெயரை மட்டும் மறைத்திருக்கிறேன்.

அவ்வளவு ஆழ்ந்த அன்பு அவருக்கு இருந்திருக்கிறது. சுமார் 32 வருடங்களாக அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் மருத்துவானாக இருப்பதில் எனக்குப் பெருமையாக இருந்தது.

இப்படி எத்தனை மகிழ்ச்சிகள் குடும்ப மருத்துவனாக இருப்பதில்.

உங்கள் அனுபவங்கள் எப்படி?

0.0.0.0.0.0.0

Read Full Post »

2011 in review

The WordPress.com stats helper monkeys prepared a 2011 annual report for this blog.

Here’s an excerpt:

A New York City subway train holds 1,200 people. This blog was viewed about 6�500 times in 2011. If it were a NYC subway train, it would take about 5 trips to carry that many people.

Click here to see the complete report.

Read Full Post »