மனதுக்குள் இருந்தது போஸ்டர் அடித்தது போல அவளது முகத்தில் பளிச்சென ஒட்டிக் கிடந்தது.
‘நீ செய்த பிழையான வேலையால் வந்த வினைதான்’ என்று சுட்டு விரலை நீட்டி நேரடியாக குற்றம் சொல்லாததுதான் மிச்சம்.
நல்ல புஸ்டியான உடம்பு. வட்டாரி வைத்துக் கீறிய வட்டம் போல முகம் ஊளைச் சதைகளால் நிரம்பிக் கனத்தது. ஆடு மாடுகள் இரை மீட்டு அசை போடுவது போல வாய் எதனையோ சப்பிச் சுவைத்துக் கொண்டேயிருந்தது.
பாரத்தை இறக்கி வைத்துவிட்டு களை தீர ஆயாசப் பெரு மூச்சு விட்டாள்.
இறக்கி வைத்தது பை நிறைந்த பொருட்களை அல்ல. 80 கிலோ ஆன தனது உடலைத்தான்.
‘டொக்டர் நீங்கள் தந்த மருந்து எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ரா ராவா சலம் அடிக்குது. நான் மருந்தைக் குறைச்சுப் போட்டன்.’
பார்த்துப் பல நாட்களாகிவிட்டதால் கொடுத்த மருந்துகள் சட்டென ஞாபகத்திற்கு வரவில்லை.
வழமையாக உச்ச வேகத்தில் சுற்றும் பானை (Fan) நிறுத்திய பின்னும் குளிர் கலையாத தினத்தில் இவளது சிறுநீர் அதிகம் போவதற்குக் காரணம் என்ன?
‘மருந்துக்காக இருக்காது. குளிராக இருக்குமா? காய்ச்சலாக இருக்கலாம். இந்த பனிக் குளிருக்கு காச்சலும் சேர்ந்தால் சலம் கூடப் போகும்தானே’ என்ற சந்தேகம் எழுந்தது. டெம்பரேச்சரைப் பார்த்தேன். டிஜிட்டல் தேர்மாமீற்றர் ‘நீ சொல்வது பிழை’ என மறுத்து 98.4 நோர்மல் என்றது.
‘வேறு என்னவாக இருக்கும்? லசிக்ஸ் (Lasix) மருந்து கொடுத்திருப்பேனோ?’
லசிக்ஸ் என்பது உடலில் தேங்கிவிட்ட மிதமிஞ்சிய நீரை வெளியேற்றுவதற்காக் கொடுக்கும் மருந்து. பொதுவாக இருதய வழுவல் ;(Heart Failure)> ஈரல்சிதைவு (Cirrhosis)> சிறுநீரக நோய்கள் போன்றவற்றால் சிறுநீர் வெளியேறுவது குறைந்தால் அதைச் சீர்செய்யக் கொடுக்கப்படும் மருந்து.
ஆனால் 40 வயதேயான இவளுக்கு அப்படியான நோய் வருவதற்கு வாய்ப்பில்லை. ஒரு வேளை அப்படி இருந்தாலும் அத்தகைய தீவிர பிரச்சனையான நோயுள்ளவர்களை நான் மறப்பதில்லை. இவள் அவர்களுள் ஒருத்தியல்ல.
‘சலம் போகைக்கை எரியுதோ’ சிறுநீர்த் தொற்றாக இருக்குமோ என்ற எண்ணம் எழுந்ததில் கேட்டேன்.
‘ஒரு எரிவும் கிடையாது. பைப் திறந்தது போல வீச்சாகப் போகிறது’ என்றாள்.
காலையில் வந்த நோயாளி தான் குளிப்பதற்கு பைப்பைத் திறந்ததும், சிறுநீர் சிந்துவதுபோல முக்கி முனகிக்கொண்டு வந்ததாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. அவர் புரஸ்ரேட் நோயாளி. இவர் பெண் என்பதால் புரஸ்ரேட் நோய் அல்ல என்பதும் நிச்சயம்.
சிறுநீர்த் தொற்று இருக்காது எனத் தோன்றினாலும் சிறுநீர்ப் பரிசோதனை அவசியம்.
கணனியைத் தட்டி இவளது பதிவுகளைப் பார்த்தபோது அவளது சல அடிப்பிற்கு நான் கொடுத்த மருந்துகள் எவையும் காரணமல்ல என்பது தெளிவாயிற்று.
மருத்துமனையில் கணனியில் குறிப்பு பற்றிய முன்னைய பதிவு.
இருப்பினும் தெளிவாக அவளுக்கு விளக்குவதற்கு இரத்தப் பரிசோதனையும் அவசியம். மருந்துவமனையிலேயே இருந்த ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைத்தேன்.
ரிப்போட் வந்தபோது இரத்தத்திலும் சிறுநீரிலும் சீனியின் அளவு அமோகமாக விளைச்சல் கண்டிருந்தது தெரிய வந்தது.
சீனி விலை நாளுக்கு நாள் எகிறிக் கொண்டிருக்கையில் இவ்வளவு சீனியை வீணாக்குகிறாளே என கவலைப்படத்தான் முடிந்தது.
கொமோட்டில் கழியும் சீனியை வாயில் அள்ளிப் போடவா முடியும்?
சென்ற முறைதான் நீரிழிவு நோய் என முதன்முறையாக இனங்காணப்பட்டு அதற்கான சிகிச்சை ஆரம்பித்து இருந்தோம். மருந்து வேலை செய்து நோயைக் குணமாக்கு முன்னரே, மருந்தால்தான் தனக்கு நோய் என்று கருதிய இந்த அதிவிவேக பூரண சிந்தாமணி மருந்து எடுப்பதைக் குறைத்துவிட்டாள்.
உண்மையில் குறைத்தாளா அல்லது மருந்தைப் போடாமலே நிறுத்திவிட்டாளா என்பது அவளுக்கு மட்டும் தெரிந்த ரகசியமாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் அதிகமாகப் போகும். நோயைக் கட்டுப்படுத்த கொடுக்கப்படும் மாத்திரைகள் இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும். அவ்வாறு நீரிழிவு கட்டுப்பட்டதும் சிறுநீர் அதிகமாக வெளியேறுவது குறைந்து வழமைபோலப் போகும்.
இது புரியாத இவளும் இவளை ஒத்த வேறுபலரும் தங்கள் பிரச்சனைகளுக்கு மருந்துகள் தான் காரணம் என எண்ணுகிறார்கள். நீரிழிவுக்கு மட்டுமல்ல அல்சர், பிரசர், மூட்டுவாதம் என எந்த நோயை எடுத்தாலும் இப்படியாக மருந்தையே குற்றவாளியாகக் கருதுகிறார்கள்.
இவர்கள் இவ்வாறு எண்ணுவதற்குக் காரணம் என்ன?
பாரம்பரிய மருந்து முறைகளின் ரகசியம் பேணும் ‘மூடு மருத்துவம்’ போலன்றி இன்றைய நவீன மருத்துத்தில் நோய்கள் பற்றி மட்டுமன்றி மருந்துகளைப் பற்றியும் அவற்றால் ஏற்படக்;கூடிய பக்கவிளைவுகள் பற்றியும் வெளிப்படையாக பேசப்படுகின்றன. பல நோயாளிகளும் இணையம் முதல் தொலைக்காட்சி வரை கேட்டும் படித்தும் கிரகித்துக் கொள்கிறார்கள்.
சிலர் தவறாகப் புரிந்து கொள்வதும் உண்டு. எதிலும் மறைமுகத்தை மட்டும் பார்ப்பவர்கள் இவர்கள்.
இவர்கள்தான் மருந்தே வேண்டாம் என்கிறார்கள். காலனுக்கு விரைவில் விருந்து வைக்க முனைகிறார்கள்.

உண்மையில் நோயாளிகளை விட மருத்துவர்களே பக்கவிளைவுகள் பற்றி முழுமையாக அறிந்திருக்கிறார்கள். நினைவில் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். எந்த மருந்தைக் கொடுக்கும்போதும் அதன் சாதக பாதக விளைவுகளைக் கருத்தில் கொண்டே கொடுப்பார்கள்.
அப் பெண்ணிற்கு ‘சல அடிப்பிற்கான’ காரணத்தை விளக்கினேன்.
சிறுநீர் கழிப்பது பற்றிய மற்றொரு பதிவு… லைட் போஸ்டைக் கண்டதும் நாய்கள் போல …
அவளது முகத்தில் இருந்த போஸ்டர் திடீரென மாறிவிட்டது!
எலக்சன் நேரத்திலை சரத் பொன்சேகா, மற்றும் மஹிந்த ராஜபக்சவின் போஸ்டர்கள் சுவர் முழுக்க ஒன்று கிழிய மற்றது வருமே அதுபோல.
ஆனாலும் குற்றம் சாட்டும் சுட்டு விரலை தன்னை நோக்கித் திருப்பவில்லை.
அரசியல்வாதிகளுக்குச் சற்றும் சளைத்தவள் அல்ல!
வீரகேசரி Steth இன் குரல் பத்தியில் நான் எழுதிய கட்டுரை. எனது Steth இன் குரல் வலைப்பக்கத்திலும் வெளியானது
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0.
Read Full Post »