பதற்றத்துடன் வந்தார் அவர்.
“எனக்கு ஹார்ட் அட்டக்(Heart Attack) ஆக இருக்குமோ?” என்று கேட்டார்.
‘ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்’ என வினவினேன்.
`இடது கை உளைஞ்சால் ஹார்ட் அட்டக் என நண்பன் சொன்னான். எனக்கு கொஞ்ச நாளா இடது கை உளையுது’ என்றார்.
உண்மைதான்! மாரடைப்பிற்கான வலி பெரும்பாலும் நடு நெஞ்சில்தான் வந்தாலும் இடது தோள்மூட்டிற்கும், முதுகுப் புறத்திற்கும் சிலவேளைகளில் கைக்கும் பரவுவதுண்டு. கழுத்திற்கும் பரவுவது அதிகம்.
நோய் ஒரிடத்தில் இருக்க வலி மற்றோர் இடத்தில் வெளிப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் வலி எற்படும் இடத்தைப் பகுத்தறிவதில் மூளைக்கு எற்பட்ட குழப்பம்தான்.
மூளைக்குக் குழப்பம் என்றதும் மனநோயாக இருக்குமோ என நீங்கள் குழம்பிவிடாதிர்கள்.
ஆயினும் இவரது வலி நீண்ட காலமாக நீடிப்பதாலும் வியர்வை, களைப்பு போன்ற ஏனைய அறிகுறிகள் இல்லாததாலும் மாரடைப்பாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெரிந்தது.
மேலும் விபரமாகக் கேட்ட போது, வலி இரவில் மோசமாக இருப்பதும் வலிப்புள்ள கையில் விறைப்பு ஏற்படுவதும் தெரிய வந்தது. கழுத்தின் முண்நாண் எலும்புகள் தேய்ந்து நரம்புகளை அழுத்துவதால் ஏற்படக் கூடிய Cervical Spondylosis ஆக இருக்கலாம் என எண்ணினேன்.
“உங்கள் கழுத்து எலும்பை எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும்” என்றேன்.
“கை உளையிறதுக்கு ஏன் கழுத்தை படம் எடுக்க வேண்டும்” என அப்பாவியாகக் கேட்டார். அவர் அப்படிக் கேட்பதில் தவறில்லைத்தான்.
கழுத்து எலும்புகள் தேய்ந்ததால், அதனூடாக வரும் நரம்புகளை அழுத்துகிறது. இதனால், அந்த நரம்பு பரவுகிற இடங்களான கையில் உளைவு, விறைப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும். ஆனால், நோயுள்ள இடமான கழுத்தில் அறிகுறிகள் ஏதும் இல்லாமலிருக்கலாம்.
இன்னொருவருக்கு நீண்ட நாட்களாக காதுவலி. காதுக்கு துளி மருந்துகள் விட்டுப் பார்த்தார். வலி நிவாரணிகள் சாப்பிட்டுப்பார்த்தார். எதுவும் பலனளிக்காமல் வலி மோசமான போதுதான் வைத்தியரை நாடும் எண்ணம் வந்தது. பரிசோதித்துப் பார்த்ததில் தொண்டையில் புற்றுநோய் தெரிய வந்தது.
மற்றொருவருக்கு சிறுநீரகக் குழாயில் கல் (Ureteric Calculai) ஆனால் விதையில் வலிக்கிறது என்று சொல்லி மருந்தெடுக்க வந்தார்.
பற்சொத்தைக்கு காது வலிப்பது, நாரி முண்நாண் எலும்பு நோய்க்கு காலில் வலிப்பது இப்படி நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம்.
நோய் ஓரிடம் இருக்க வலி இன்னொரு இடத்தில் தோன்றுவதை Reffered pain என மருத்துவத்தில் சொல்வார்கள். இதனைத் `தொலைவிட வலி’ என சொல்லலாம் அல்லவா?
“சூத்தில் அடிக்க பல்லுக் கொட்டுப்படுவது”,
“எய்தவன் இருக்க அம்பை நோவது”,
“பழி ஓரிடம் பாவம் வேறிடம்”, எனப் பலவாறு சொல்வது அதை ஒத்த கருத்துகள் தானே?
எனவே அறிகுறிகள் எங்கிருந்தாலும் அடிப்படை நோய் எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிந்து செய்வதே சிறந்த வைத்தியமாகும்.
டாக்டர். எம்.கே. முருகானந்தன்
நன்றி:- தினக்குரல் 12.09.2007