“இவ ஒன்றும் சாப்பிடறா இல்லை.” கடுப்பாகச் சொன்னான்.
அவளில் அக்கறையும் கனிவும் காட்டுவதைவிட குற்றம் சாட்டும் தொனி ஓங்கியிருப்பதாகத் தெரிந்தது.
ஷோ கேசில் உள்ள பொம்மைபோல அலங்கரிக்கப்பட்டிருந்தாள்.
உடைகளையும், நகைகளையும் பளிச்சென அணிந்திருந்ததைப் பார்த்தபோது புதுமணத் தம்பதிகளாகத் தோற்றினர்.
“எதைக் கண்டாலும் ஓக் ஓக் என ஓங்காளித்துக் கொண்டே இருக்கிறா. ஷி இஸ் நொட் ஈடிங் அட் ஓல். ஒண்டையும் விரும்பிச் சாப்பிடுகிறா இல்லை.”
அவனது ஆங்கிலம் கலந்த தமிழ் உச்சரிப்புத் தொனி லண்டன்வாசி என்பதைக் கோடி காட்டியது.
“…வயிறும் ஊதலாகக் கிடக்காம்.”
இளம் பெண், சாப்பாட்டில் மனமில்லை. ஓங்காளம் எத்தனையோ தமிழ் திரைப்படங்களில் பார்த்த காட்சிதானே உங்களுக்கு நினைவுக்கு வருகிறது?
மசக்கையால் சங்கடப்படுகிறாள். கர்ப்பம் தங்கியிருக்க வேண்டும்.
“கடைசியாக எப்ப பீரியட் வந்தது” அவளது பிரச்சனை பற்றி ஒரு முடிவிற்கு வந்த தைரியத்தில் வாயைத் திறந்தேன்.
“நாங்கள் மரி பண்ணி ஜஸ்ட் வன் வீக்தான்” என்றான் அவன்.
திறந்த எனது வாய் மூடியதை நான் உணர நீண்ட நேரமாயிற்று!
ஒரு வாரத்திற்குள் கர்ப்பம் தங்கவைக்கக் கூடிய ஆண்மையுள்ளவன் இனித்தான் பிறந்து வர வேண்டும்.
மனித குலத்தில் அத்தகைய கூர்ப்பு நடந்திருப்பதான செய்தியை மருத்துவ உலகம் அறிந்திருக்கவில்லை. அவளது ஓங்காளத்திற்கும் பசியின்மைக்கும் காரணம் வேறு ஏதோவாகத்தான் இருக்க முடியும்.
சட்டெனப் பெண்குரல் எனது சிந்தனையில்; குறுக்கீடு செய்தது.
“ஒண்டும் விருப்பமில்லையாம். வயிறும் ஊதிக்கிடக்கு. சோம்பிச் சோம்பிக் கிடக்கிறா. என்னெண்டு புரியுதில்லை” அம்மா சலிப்புடன் சொன்னா.
அவளின் சிறு வருத்தத்தையும் சகிக்க முடியாத இவள் சொந்த அம்மாவாக இருக்க முடியாது. மாமியாராகத்தான் இருக்க வேண்டும்.
“சாப்பாட்டைக் கண்டால் இப்படியும் ஒருத்திக்கு ஓங்காளம் வருமே… எனக்கெண்டால் ஒண்டுமா விளங்குதில்லை…” அவள் இழுத்து இழுத்து பேசியது நல்லதுக்கல்ல என மனம் குருவி சாத்திரம் கூறியது.
வெறும் குற்றம் சாட்டும் தொனி அல்ல. உள்ளார்ந்த வியப்பும் அல்ல!
சந்தேகிக்கும் பார்வை!
புதிதாக வந்த மருமகளை சற்றும் நம்பாமை தொனித்தது.
திரும்பிப் பார்த்தபோது மருமகளின் முகம் ஆற்றாமையால் சட்டெனக் கறுத்தது. எனது மனதில் ஆழமாக இரத்தம் சீறக் கீறியது போலிருந்தது.
‘அடப்பாவி கலியாணம் கட்டி ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள் மருமகள் மீது இத்தகைய ஏடாகூடமான சந்தேகமா?’ ஆத்திரமாக வந்தது.
இனியும் முடியாது அவளிடம் பேசித்தானே ஆக வேண்டும்.
மாமியாரிடம் அல்ல!
இவ்வளவு நேரமும் பேசா மடந்தையாக இருந்த நோயாளியிடம்.
“பீரியட் எப்படி?” எனப் பொதுவாகக் கேட்டேன்.
பீரியட் எப்ப வந்தது? என்று கேட்கவில்லை.
மாமியாரின் சொற்களால் மனம் கறுத்த சூழ்நிலையில்; நானும் அவளை எனது வார்த்தைகளில் நோகவைக்க விரும்பவில்லை. எனவே பொதுவாகக் கேட்பது போல எனது வினாவை எழுப்பினேன்.
“முந்தித் தொடங்கி ஒழுங்கில்லை. இப்ப 4-5 மாசமா ஒழுங்காக வருகுது. திகதிக்கு ஒண்டு ரண்டு நாள் முந்திப் பிந்தி வரும்…”
“…..கலியாணத்துக்கு ஒரு கிழமை முந்தித்தான் கடைசியாக வந்தது.”
தான் முறைதவறி நடந்தவள் அல்ல, தனக்கு கர்ப்பம் தங்கியிருக்கவில்லை, என்பதை அவளது மறுமொழி நாசூக்காக சுட்டிக்காட்டியது.
மாமியாரின் குத்தல் பேச்சுக்கு ஆவேசப்பட்டு வார்த்தைகளை அள்ளிப் பேசவில்லை. நிதானமாக இருந்திருக்கிறாள். அப்படியானவள் நிச்சயம் மற்றவர்களை அனுசரித்துப் போவளாகவே இருப்பாள். அவளது கெட்டித்தனத்தை மனதுக்குள் மெச்சிக் கொண்டேன்.
மருமகளின் விடையைக் கேட்டதும் அம்மாவினது முகம் ஏமாற்றத்தில் பட்டெனத் தொய்ந்தது.
“இவவுக்கு கனகாலமாக இந்தப் பிரச்சனை இருக்காம். சாப்பிட்டால் ஏவ் ஏவ் .. என காஸ் காஸ்சாகப் போகுமாம்.” இது கணவன். பிரச்சனையை வேறு திசைக்குத் திருப்ப முயன்றான்.
‘இவள் பிரச்சனைக்காரி, சரியில்லாதவள்’ என்ற முன் தீர்மானம் இருந்தால் பிழை கண்டுபிடிப்பது பெரிய காரியமா?
நான் அவள் முகத்தைப் பார்த்தேன்.
“நாங்கள் வழக்கமா புட்டு இடியப்பம் எண்டு வீட்டுச் சாப்பாடுதான். வெளிச் சாப்பாடு சாப்பிட்டால்தான் ஒத்துக் கொள்ளுறதில்லை”
‘இங்கு வீட்டுச் சாப்பாடுதான். சிலவேளை மட்டும் கடையிலை வாங்குவதாக’ அவன் இடைமறித்தான். நான் அதைச் அசட்டை பண்ணிவிட்டு அவளிடம், “இஞ்சை உங்களுக்கு என்ன சாப்பாடு பிடிக்கிறதில்லை” என விசாரித்தேன்.
“காலையிலை பாண். அது எனக்குப் பிடிக்கிறதேயில்லை. கொத்து, சில்லி பரோட்டா எண்டு வேறை எண்ணெய் சாப்பாடுகளாக வாங்குவினம். இதுகள் ஒண்டும் எனக்கு ஒத்துவாறதில்லை.”
திடீரென அக் கல்லாணம் முற்றாயிற்று. குடும்பக் கஸ்டத்திற்கு தீர்வாக. வெளிநாட்டு மாப்பிள்ளை. சீதனம் பெரிசாக இல்லை. கலியாணமாகிய கையோடு ஊரிலிருந்து கொழும்பு வந்து மாமியார் வீட்டில் தங்கியிருக்கிறாள்.
புது இடம், புதுச் சூழல், புதிய மனிதர்கள். கடல் மீனைக் கரையில் போட்ட மீனாகத் தவித்தாள். ஊரிலை சுதந்திரமாகத் திரிந்தவளுக்கு கால்கட்டு. அவளுக்கு எதுவும் பிடிபடவில்லை. வழமையான சாப்பாடும் இல்லை. ஆதரவு தருகிற அம்மா இல்லை. மனம் தொய்ந்துவிட்டது.
ஊரில், ஐஞ்சு பரப்பு வீட்டில் ஏப்பம் விடுவதும் கதை பேச்சு சண்டை அழுகை எல்லாமே உச்ச ஸ்தாயியில்தான் இருக்கும். அக்கம் பக்கம் கேட்காது. இது தொடர் மாடி வீடு. ஏப்பம் விட்டாலும் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்குக் கேட்கும். இளப்பமாகப் பார்ப்பார்கள் என்பதை அவள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை.
புதிய சூழலுக்கு இன்னமும் இசைவாகவில்லை. அவளது உள நிலையைப் புரிந்து கொள்ளும் மனப்பான்மை கணவன் வீட்டுக்காரருக்கு இல்லை. தங்கள் ஆட்டத்திற்கு மறுபேச்சுப் பேசாத, அடக்க ஒடுக்கமான, பவ்வியமான ஊர்ப் பொம்பிளை வேண்டும், என நினைப்பவர்கள் அவர்கள்.
பெண்டாட்டி என்பவள் வாய் பேசாத மடைந்தையாகவும் இருக்க வேண்டும் லண்டன் நாகரீகத்திற்கு ஏற்ற பவிசுள்ளவளாகவும் இருக்க வேண்டும். முடிந்த காரியமா?
“தீஸ் பூட்ஸ் ஆர் நொட் எகிறியிங் வித் மீ. வொண்டர் கௌ தீஸ் பீப்பிள் ஆர் ஈடிங் ஆல் திஸ் ஸ்டவ் டெயிலி”
பேர்பியூமின் வாசனை அந்தக் கட்டடத்தையே நிறைய வைத்தது. மேலைநாட்டு அதி நாகரீக உடையில் வந்த பெண் சொன்னாள். சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லையாம். லூஸ் மோசன் போகிறதாம்.
விபரங்களைப் பதிவதற்காக கம்பியுட்டரைத் தட்டிய போது அவளது பெயர் ஏற்கனவே பதிவாகியிருப்பது தெரிந்தது. எதற்காக வந்திருந்தாள் என பழைய பதிவுகளைப் பார்த்த போது புரிந்தது.
அதே அந்தக் கிராமத்துப் பொம்பிளை!
எம்.கே.முருகானந்தன்.