Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மார்ச், 2013

Resistin என்ற தடுப்பான்
கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கு புதிய காரணி கண்டு பிடிப்பு

தொற்றுதல் இல்லாமல் மனிதர்களுக்கு அதிகமாக மரணத்தைக் கொண்டு வரும் உயிர்கொல்லிப் பிரச்சனைகளாக இருப்பன மாரடைப்பு, பக்கவாதம், சுவாச நோய்கள், புற்றுநோய்கள் போன்றவையாகும்.

ncd_treeஅவை வருவதற்குக் காரணங்கள் என்ன?

வற்றாத சுனைகளாக என்றும் மனித உடல்களில் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும் அடிப்படை மருத்துவச் சிக்கல்கள் சிலதான் காரணமாகின்றன. நீழிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல் அதீத எடை ஆகியவற்றைச் சொல்லலாம்.

இவற்றில் கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கு காரணங்கள் என்ன?
கொழுப்புச் சாப்பாடுகளும் உடலுழைப்பற்ற வாழ்க்கை முறையும்தான் என எல்லோரும் சொல்கிறார்கள். உண்மைதான். ஆனால் அதற்கு மேலும் ஏதாவது அடிப்படைக் காரணம் உண்டா?

ரெசிஸ்டின் எனும் புதிய காரணி

கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கு அதிலும் முக்கியமாக கெட்ட கொலஸ்டரோல் எனப்படும் (low-density lipoprotein or LDL) அதிகரிப்பதற்கு எமது உடலுள் கொழுப்புக் கலங்களால் சுரக்கப்படும் ரெசிஸ்டின் (resistin) என்ற புரதம்தான் காரணமாகிறது என கனடிய விஞ்ஞானிகள் சிலர் தமது ஆய்வுகளின் அடிப்படையில் கூறுகிறார்கள்.

ஆனால் ரெசிஸ்டின் என்ற இப் புரதம் இப்பொழுதுதான் புதிதாகக் கண்டுபிடிக்கபட்டதல்ல. 2001ம் ஆண்டு பெனிசில்வேனியா பல்கலைக் கழகத்தைச் சார்ந்த Dr Mitchell A Lazarதலைமையிலான குழுவினரே முதன் முதலாகக் கண்டு பிடித்தனர்.
அப்புரதத்திற்கு ரெசிஸ்டின் என்ற பெயரை ஏன் ஆரம்பத்தில் வைத்தார்கள்?

காரணம் சுவார்ஸமானது.

Resist என்றால் தமிழில் தடை அல்லது எதிர்ப்பு எனப் பொருள்படும். எனவே Resistin என்றால் தடுப்பான் எனச் சொல்லலாம் அல்லவா? சுண்டெலிகளுக்கு இந்த ஊசியை ஏற்றியபோது அவற்றின் உடலில் இன்சுலினிற்கு எதிராக (insulin resistance) இது இயங்கியமை கண்டறியப்பட்டது. அதாவது நீரிழிவைக் கொண்டுவரக் கூடியது என்பதாகும்.

உடலிலுள்ள கொழுப்பு பகுதிகளிலேயே ரெசிஸ்டின் உற்பத்தியாகி நேரடியாக குருதியில் வெளியேறுகிறது. எனவே நாளமில்லாச் சுரப்பு நீர் எனலாம். எலி, சுண்டெலி, மனிதன் ஆகியவற்றில் ரெசிஸ்டினானது அதீத எடையுடன் தொடர்புடையது என்பதை ஆய்வாளர்கள் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளார்கள்.

எவ்வாறு செயற்படுகிறது

resistinஇந்த ரெசிஸ்டின் எவ்வாறு குருதியில் கொலஸ்டரோல் அளவைக் கூட்டுகிறது என்பது பற்றி அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
முக்கியமாக ஈரலின் செயற்பாட்டில் ரெசிஸ்டின் இடையூறு செய்கிறதாம்.

  • கெட்ட கொலஸ்ரோலான LDL லை அதிகளவு உற்பத்தி செய்ய ஈரல் கலங்களை இது தூண்டுகிறது.
  • அதே நேரம் கொலஸ்டரோலை உணரும் திறனைக் கொண்ட ஈரல் கரங்களின் செயலாற்றலைக் குறைக்கிறது. இதனால் ஈரலானது கொலஸ்ரோலை உடலிலிருந்து அகற்றுவது குறைவடைகிறது

எனவே இரத்தக் குழாய்களில் LDL கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கு இந்த ரெசிஸ்டின் தான் காரணமாகிறது எனலாம்.

cor_atheஇரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரித்தால் அது நாளங்களின் உட்பகுதியில் படிவுகளாக (Atherosclerosis) உறையும். இவ்வாறு படிவதால் இரத்தக் குழாய்களின் உட்சுற்றளவு குறுகும். இதனால் உடலின் முக்கிய உறுப்புகளுக்கு தேவையான இரத்தம் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும்.

இருதயத்திற்கு இரத்தம் செல்வது குறைந்தால் மாரடைப்பு வரும். மூளையின் பகுதிகளுக்கு செல்வது குறைந்து அடைப்பு ஏற்பட்டால் பக்கவாதம் எனப்படும்

Stroke வரும். ஓட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இருதய மற்றும் மூளை நோய்கள் ஏற்படுவதற்கு இவை இணைந்து வழி கோலுகின்றன. கண், சிறுநீரகம் போன்ற ஏனைய பல உறுப்புகளிலும் பாதிப்பு ஏற்படவே செய்யும்.
மருந்துகளின் செயற்பாட்டையும் பாதிக்கிறது

மற்றொரு முக்கிய விடயத்தையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

கொலஸ்டரோல் உள்ளவர்களுக்கு பொதுவாக Atrovastatin, Simvastatin, Rosuvastatin போன்ற Statin மருந்துகளையே உலகளாவிய ரீதியில் மருத்துவர்கள் சிபார்சு செய்கிறார்கள். ஆனால் LDL கொலஸ்டரோலைக் குறைப்பதற்கு ஸ்டற்டின் மருந்துகள் அவர்களில் 40%  ஆனவர்களுக்கு பயன்படவில்லை என்கிறார்

McMaster University யின் மருத்துவ துறை சார்ந்த பேராசிரியர்

Dr. Shirya Rashid. இதற்குக் காரணம் அவர்களது குருதியில்  ரெசிஸ்டின் அளவு அதிகமாயிருப்பதை தங்கள் ஆய்வு சுட்டிக் காட்டுவதாக அவர் சொல்கிறார்.

புதிய மருந்துகளை கண்டு பிடிக்க வேண்டும்

சரி அப்படியானால் இந்த ஆய்வுகளின் முடிவானது கொலஸ்டரோல் பிரச்சனையில் மருத்துவர்களையும் நோயாளிகளையும் எங்கு இட்டுச் செல்கிறது.

குருதியில் அதிகரித்த LDL கொலஸ்டரோல் அளவிற்கு இந்த ரெசிஸ்டின் காரணமாகிறது. எனவே இந்த ஆய்வானது புதிய மருந்துகளுக்கான தேடலை ஆரம்பித்திருக்க்pறது. குருதியில் ரெசிஸ்டினைக் குறைப்பதற்கான மருந்துகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் LDL கொலஸ்டரோலைக் குறைக்கலாம். பக்கவாதம் மாரடைப்பு ஆகியன ஏற்படுதற்கான சாத்தியத்தை அதனால் குறைக்கும் என நம்பலாம்.

indexஇது கனடாவில் செய்யப்பட்ட ஆய்வு. ஆனால் எமக்கும் பொருத்தமானது ஏனெனில் இங்கும் தொற்றா நோய்களால் நாளாந்தம் 350 பேர் இறப்பதாக சுகாதாரத் திணைக்களம் அறிவித்திருக்கிறது. உலகளாவிய ரீதியில் தொற்றா நோய்களால் இறப்பவர் தொகை 36 million அல்லது 63% என WHO 2008 ல் அறிவித்தது.

இருந்தபோதும் இவற்றைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளும், சீரான உணவு முறைகளும் உடல் உழைப்பும் அவசியமானவை என்பதற்கே முதலிடம் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

rist-factor-doe-hear-disease1புதிய மருந்துகள் எப்போ வரும் எனக் காத்துக் கொண்டிருக்காமல் எமது வாழ்க்கை முறையை நெறிப்படுத்துவோம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்
எனது ஹாய் நலமா புளக்கில் ஏற்கனவே வெளியான கட்டுரை. இங்கு மீள் பதிவாகிறது

Read Full Post »

கெந்துவதுபோல நொண்டிக் கொண்டு வந்தவர் ஷெல் பட்டு ஊனமுற்றவர் அல்ல. பிறப்பில் அங்கப் பழுதுகளும் இல்லை. சீழ் வடியும் புண்ணும் இல்லை. சாதாரண ஒரு ஆணிக் கூடு காலிலிருந்தது.

அதன் வலி கடுமையாக இல்லாதபோதும் காலைத் திடமாக வைத்து நடப்பது முடியாதிருந்தது. ஏனெனில் அது உடலின் கனம் காலில் பொறுக்கும் இடத்தில் ஏற்பட்டிருந்தது.

ஆணிக்கூடு (Plantar warts) என்பது உண்மையில் ஒரு கிருமித்தொற்றுத்தான். ஒரு வகை வைரஸ் தொற்று நோய்.

Human papilloma virus என்ற வைரஸ்சால்  ஏற்படுகிறது. பொதுவாகப் பாதத்தில் உண்டாகிறது. உண்மையில் உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றக் கூடுமாயினும் பாதத்தில் ஏற்படுவதற்குக் காரணம் அங்கு அழுத்தமும் உராய்வுகளும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்பதாலேயேயாகும்.

ஆணிக்கூடு என்று சொல்லியபோதும் இது ஆழமாக உடலைத் தாக்குவதில்லை. தோலினுள் மாத்திரமே ஊடுருவி தோற் தடிப்பு
(callus) போல வளர்கிறது.

மிகவும் பரவலாகக் காணப்படுகிற நோயாக இருக்கிறது. நூற்றுக்கு ஐம்பது 50% வீதமானோர் தமது வாழ் நாளில் ஒரு தடவையேனும் இதனால் பாதிக்கப்பட்டிருப்பர். இளம் பருவத்தினரிடையே தோன்றுவது அதிகம்.

அறிகுறிகள்

ஓருவர் நடக்கும்போது தனது அடிப்பாதத்தில் வலி ஏற்படுவதை உணர்ந்து அவ்விடத்தை சுலபமாகப் பார்க்க முடியாதலால், தடவிப் பார்க்கும்போது தோல் தடிப்பாக இருப்பதைக் கொண்டே தமக்கு இது ஏற்பட்டிருப்பதை அதிகமானோர் கண்டறிவார்கள்.

சிலருக்கு முதல் அறிகுறி நாரிவலி அல்லது கால் வலியாக இருப்பது. மருத்துவரிடம் செல்லும்போது அவர் வலிக்கான காரணத்தைத் தேடும்போது ஆணிக்கூடு இருப்பதைக் கண்டறிவதும் உண்டு. நாரிவலிக்கும்

ஆணிக்கூட்டிற்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?;

நடக்கும்போது அவ்விடத்தில் வலி ஏற்படுவதைத் தவிர்க்க தாம்மைறியாமலே கால்களை சமனின்றி வைத்து நடப்பதால் வலி தோன்றும்.

இதன் தோற்றங்கள் பலவடிவாக இருப்பதுண்டு.

சொரசொரப்பான தடிப்புகள்,

செதில் போல உதிரும் தடிப்புகள்,

பஞ்சு போன்ற மிருதுவான தடிப்புகள் எனப் பலவகையாகத் தோன்றலாம்.

பெரும்பாலும் அதன் மத்தியில் கருமையான புள்ளி இருப்பதுண்டு. இதற்குக் காரணம் அவ்விடத்தில் உள்ள நுண்ணிய இரத்தக் குழாய்களில் குருதி உறைவதாலேயே ஆகும்.

ஆணிக்கும் இதற்கும் எத்தகைய தொடர்பு இல்லாதபோதும் ஆணிக்கூடு என்ற பெயர் வந்ததற்கு இந்தக் கரும் புள்ளியே காரணமாக இருக்கலாம் என நான் எண்ணுவதுண்டு.

ஆணி குத்தியதால் அவ்விடத்தில் வலி எனச் சொல்லி நோயாளிகள் வருவதுண்டு. ஆணிபோன்ற கருப்பு நிற அடையாளதுடன் கூடு தோன்றிவிட்டது என நோயாளிகள் தவறாக எண்ணியிருப்பார்கள்.

இவை எப்பொழுதும் சொரப்பான தடிப்பாக இருக்க வேண்டும் என்பதில்லை. கருமஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் மிருதுவான மேற் பரப்புடன் தோன்றுவதுமுண்டு.

ஏற்கவே கூறியபோல பாதத்தில் அழுத்தம் அதிகம் ஏற்படுகின்ற குதிக்கால், அல்லது விரல்களுக்கு அண்மையில் உள்ள பகுதிகளில் ஏற்படுவது அதிகம்.

கூடு என்று சொன்னபோதும் இது உருண்டையாக இருப்பதில்லை. தட்டையாகவே இருக்கும். நடக்கும்போது பாதத்தில் ஏற்படும் தொடர்
அழுத்தத்தினால் அவை தேய்ந்து தட்டையாக இருக்கும்.

அருகருகில் உள்ள பல ஆணிக்கூடுகள் இணைந்து கூட்டுக் கூடுகளாக
(Mosaic Warts) மாறுவதும் உண்டு.

மருத்துவம்

இது ஒரு வைரஸ் நோய் என்றோம். இந்த வைரசை அழிப்பதற்கெனப் பிரத்தியேக மருந்துகள் எவையும் இது வரை கிடையாது. எனவே மருந்துகளை உட்கொள்வதால் பிரயோசனம் இல்லை.

இருந்த போதும் உடலில் அந்நோய்க்கு எதிரான நோயெதிர்பு வலுவடையும் போது தானாகவே மறைந்துவிடும்.

ஆயினும் அதற்கு நீண்டகாலம் எடுக்கலாம். அதற்கிடையில் நோயால் ஏற்படும் வலி, நடப்பதில் சிரமம் போன்றவை காரணமாக தற்காலிகமாக சிகிச்சை எடுக்க நேரிடுகிறது.

வீட்டில் வைத்தியம்

  1. சூரியக் கற்களால் தேய்ப்பது, பிளேட்டினால் வெட்டுவது போன்ற நடைமுறைச் சிகிச்சைகளை பலரும் செய்வதுண்டு. அவ்விடத்தை 20 நிமிடங்கள் வரை நீரில் ஊறவிட்ட பின்னர் செய்தால் சருமம்; மெதுமையாகி அகற்றுவதற்கு இலகுவாக இருக்கும். இருந்தபோதும் முற்று முழுமையாக அகற்ற முடியாது. மேற்புறத்திலிருந்து வலியைக் கொடுக்கும் பாகத்தை மட்டுமே அகற்ற முடியும். சில காலத்தின் பின் பார்த்தால் அது மீண்டும் வளர்ந்திருப்பது தெரியும்.
  2. ஆனால் இவ்வாறு சுயமாகச் செய்யும்போது மிக அவதானமாக இருக்க வேண்டும். இரத்தம் கசியுமளவு ஆழமாக வெட்டி அகற்றினால் கிருமிகள் தொற்றுவதற்கான வாய்ப்பு உண்டு. அதனால் சாதாரண தொற்று முதல் ஏற்புநோய் வரை ஏற்படக் சுடிய சாத்தியம் உண்டு என்பதை மறக்க வேண்டாம். நீரிழிவு நோயுள்ளவர்களும் காலில் விறைப்புத்தன்மை உள்ளவர்களும் அறவே செய்யக் கூடாது. சுயசிகிச்சைக்குப் பின்னர் அவ்விடத்தில் வலி, வேதனை, காச்சல் போன்ற ஏதாவது தோன்றினால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.
  3. கோர்ன் பிளாஸ்டர், லியுகோபிளாஸ்ட் போன்றவற்றை நீங்கள்

மருந்தகங்களில் மருத்துவரின் சிட்டை இன்னிறியே வாங்கக் கூடியதாக இருக்கிறது.

  • இவற்றைக் ஆணிக்கூட்டின் மீது மட்டும் படக் கூடியதாக கவனமாக ஒட்ட வேண்டும்.
  • இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அவ்விடத்தை நனைக்காமல் வைத்திருந்து பிளாஸ்டரை அகற்ற வேண்டும்.
  • ஆணிக்கூட்டின் மேற்பகுதி இப்பொழுது மெதுமையாகிப் பூத்தது போலிருக்கும்.
  • அதை மெதுமையாக அகற்றியபின் மீண்டும் பலமுறை அவ்வாறு பிளாஸ்டர் ஒட்ட வேண்டும்.

மருத்துவரிடம் சிகிச்சை

மருத்துவர்கள் எடுத்தவுடன் சத்திரசிகிச்சை போன்றவற்றிற்குச் உடனடியாகச் செல்ல மாட்டார்கள். சலிசலிக் அமிலம் போன்றவற்றையே அவர்களும் தரக் கூடும்.

ஆயினும் அவற்றினால் குணமடையாதபோது வேறுசிகிச்சைகளை நாடுவர்.

  • வழமையான சத்திரசிகிச்சை மூலம் அகற்றுவது குறைவு. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முக்கியமானது வெட்டி அகற்றினாலும் மீண்டும் அவ்விடத்தில் தோன்றுவதற்கான சாத்தியம் அதிகம் என்பதாலாகும். வெட்டி அகற்றிய இடத்தில் ஏற்படும் மறுவானது பொதுவாக வலியை ஏற்படுத்தும் என்பது இரண்டாவது காரணமாகும்.
  • திரவ நைதரசனால் உறைய வைத்து அகற்றல். இச்சிகிச்சையின் பின்னர் அது கறுத்து சில நாட்களில் உதிர்ந்துவிடும்.
  • விறைக்க மருந்து ஊசி ஏற்றி அவ்விடத்தை மின்சாரத்தால் எரித்து அகற்றுவார்கள்.

எத்தகைய மருத்துவம் செய்தாலும் பூரண சுகத்தையிட்டு உறுதி கூறமுடியாது. ஏனெனில் இது வைரஸ் கிருமியால் வரும் நோய் என்பதால்தான். தடிமன் காச்சல் எப்படி திடீரென வருகிறதோ அதுபோல திடீரென மீண்டும் தோன்றலாம்.

இருந்தபோதும் 60% சதவிகிதத்திற்கு அதிகமானவர்களுக்கு அது எவ்வாறு வந்ததோ அவ்வாறே திடீரென தானாக மறைந்தும் விடுகின்றன.
எனவே கடுமையான சிகிச்சை முறைகளுக்கு அவசரப்பட வேண்டியதில்லை.

ஏற்கனவே எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

பாதத்தில் ஆணிக் கூடுகள்.Plantar warts

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »

வாழ்க்கைத் துணைவரின் அணுகுமுறையால்
நாட்பட்ட வலிகள் பாதிப்புறலாம்
வலிகள் என்றாலே வேதனையும் துன்பமும்தான். அதை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் அதன் தீவிரம் புரியும். அதிலும் முக்கியமாக நீண்டகாலமாகத் தொடரும் நாட்பட்ட வலிகள் (Chronic Pain) வேதனை அளிப்பது மிக மிக அதிகம். உடல் ரீதியாக மட்டுமின்றி, உளரீதியாகவும் கூட.

chronic-joint-pain11

குடும்பத்தில் ஒருவருக்கு வலி

வலிகளின் தீவிரத்தைப் பற்றி சிந்திப்போமா?

உங்களை ஒரு பெண் என வைத்துக் கொள்வோம். உங்களுக்கு சில காலமாகவே இடுப்பு வலி தொடர்ந்து வருகிறது. அதனோடு கூட்டவும், துப்பரவு செய்யவும், சமைக்கவும் சிரமமப்படுகிறீர்கள். சிரமப்பட்டேனும் உங்கள் நாளாந்த வேலைகளைச் செய்து வருவதைத் தவிர்க்கவில்லை.

household-chores

இருந்தபோதும் நீங்கள் உங்கள் வலியைப் பற்றி எப்பொழுது பிரஸ்தாபித்தாலும் கணவர் அதை அக்கறையோடு செவிமடுப்பதில்லை என வைத்துக் கொள்வோம்.

images

அவர் அலட்சியமாக பனடோலைப் போட வேண்டியதுதானே என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். அக்கணத்தில் உங்கள் மன நிலை எப்படி இருக்கும். கோபம் வரலாம், எரிச்சல் ஏற்படலாம், கவலையும் அழுகையும் கைகோத்து வரலாம்.

இவை எதுவும் இல்லையேல் ‘இந்த மனிசனுக்குச் சொல்லிப் பிரயோசனம் இல்லை’ என்ற வெறுப்பில் அவரோடு மனம்விட்டுப் பேசும் எண்ணமே விட்டுப் போய்விடலாம்.
இது அனுபவத்தில் நாம் நிதம் காண்பதுதானே! ஆனால் அண்மையில் இதனை ஒரு ஆய்வாகச் செய்திருக்கிறார்கள்.

நாட்பட்ட வலியானது தம்பதிகளிடையே தொடர்பாடலை குறைக்கிறது. கலந்துரையாடுவது விட்டுப் போகிறது. இதனால் அவர்களிடையே புரிந்துணர்வு குறைந்து போகிறது. இவற்றின் பலனாக பாதிக்கப்பட்டவரின் வலியைச் சமாளிக்கும் திறன் குறைந்து போகிறது என்பது இந்த ஆய்வில் தெரிந்தது.

முன்னைய ஆய்வுகள்

குடும்ப உறவில் ஒருவர் மற்றவரது உணர்வுளைப் புரிந்து, அதற்கு மதிப்பளித்து, ஆறுதலிப்பதானது நன்மை பயக்கும் என முன்னைய ஆய்வுகள் உறுதி செய்திருந்தன். இதனால் அவர்களிடையே நெருக்கம் அதிகரிக்கிறது. நம்பிக்கை இறுக்கமாகிறது. உணர்வுகள் தம்மை அலைக்களிக்க விடாது அவற்றை அடக்கியாளும் வல்லமையைக் கொடுக்கிறது.

மாறாக துணைவர் மற்றவர்களின் உணர்வுகளைக் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி, உதாசீனப்படுத்தினால் அல்லது சினங்கொண்டு விரோதமாக நோக்குனால் அவர்களின் குடும்ப உணர்வில் விரிசலை ஏற்படுத்திவிடுகிறது. விட்டுக் கொடுப்புகள் குறைந்து குடும்ப உறவைப் பாதிக்கும். மன விரக்தியும் ஏற்படலாம் என்பதும் முன்னைய ஆய்வுகளில் தெளிவாகியிருந்தது.

இந்த ஆய்வு

நாரி உழைவு, இடுப்பு வலி, தசைப்பிடிப்புகள் பல்வேறு வலிகளால் பாதிக்கப்பட்டவர்களிடையே செய்யப்பட்ட இந்த ஆய்வில் வெளிவந்த விடயம் ஆய்வாளர்களை மட்டுமல்ல உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கும். சிறிய ஆய்வுதான் 58 பெண்களையும் 20ஆண்களையும் கொண்டது.

உணர்வு ரீதியாக அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான் என்பது பொதுவான நம்பிக்கையாகும். இந்த ஆய்வின் பிரகாரம் வலியால் துன்பப்படும் ஆண்கள் தங்கள் மனைவிமாரின் எதிர்மiறாயன உணர்வுப் பிரதிலிப்பால் அதிகமான பாதிப்பிற்கு உள்ளானதாக தெரிந்தது. வலி இருந்தால் மட்டுமின்றி ஏனைய பொழுதுகளிலும் மனைவியின் பாராமுகம் கணவர்களின் மனத்தை அதிகமாகச் சஞ்சலப்படுத்தியிருந்தது.

indian-lady

பெண்கள் மென்மையானவர்கள். அவர்கள் மனது பூப்போன்றது. அவர்கள் வலி, வேதனை, இடர் ஆகியவற்றால் பாதிக்கப்படுவது அதிகம். எனவே வலிகளை மோசமாக உணர்வர், பாராமுகத்தால் வாடுவர்  என்பன நம்பிக்கை. மாறாக, வலிமையுள்ளவர்கள் என நம்பப்படும் ஆண்கள் தாம் இவ் ஆய்வில் வலிகளால் பாதிப்புற்றது ஏன்?

‘பாரம்பரிய எண்ணங்களின் அடிப்படையில் ஆண்கள் தங்கள் குடும்பத்திற்காக உழைப்பவர்கள் என்ற பாத்திரத்தை வகிக்கிறார்கள். ஆனால் வலியானது அதனைச் சரியான முறையில் ஆற்ற முடியாத நிலையைத் தோற்றுவிக்கிறது என ஆண்கள் கருவதால் இந் நிலை ஏற்பட்டிருக்கலாம்’ என இந்த ஆய்வைச் செய்த Wayne State University in Detroit and the Norwegian Center for Addiction Research   குழுவினர் சார்பில் Laura Leong  கருத்து கூறியுள்ளார்.

உங்களுக்கான செய்தி என்ன?

இந்த ஆய்வு முடிவுகள் உங்களுக்கு எப்படிப் பயன்படும். நீங்களா உங்கள் துணைவரா அதிக அக்கறை காட்டுபவர் எனக் கண்டு பிடித்து மகிழவா, அல்லது யார் உதாசீனப்படுத்துகிறார் எனக் கண்டு பிடித்து குற்றம் சாட்டி வாழ்க்கையை மேலும் நரகமாக்கவா?

நிச்சமாக இல்லை. மற்றவரின் வலியை மதித்து அதனால் அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை அனுதாபத்துடன் நோக்க வேண்டும். பரிவு காட்ட வேண்டும். ஆறுதல் சொல்ல வேண்டும். ஒத்தாசை செய்ய வேண்டும்.

hospicejpg

அது மட்டுமல்ல! தொடர்ச்சியாக வலிப் பிரச்சனைக்காக மருத்துவரிடம் போகும் கணவன் மனைவியாக இருவரும் சேர்ந்து செல்லுங்கள்.

இது நோயைக் கணிக்க மட்டுமல்ல வேறு விதத்திலும் மருத்துவருக்கு உதவும். மருந்துகளும் ஆலோசனைகளும் ஒருவருக்கு மட்டும் போதுமானதா அல்லது மற்றவருக்கும் ஏதாவது தேவைப்படுமா எனத் தீர்மானிக்கவும் உதவும்.

SOURCE: American Pain Society, news release, December 2011

எனது ‘ஹாய் நலமா’ புளக்கில் சென்ற வருடம் வெளியான கட்டுரையின் மீள் இணையேற்றம்

நாட்பட்ட வலிகள் அணுகுவது எப்படி?

Read Full Post »

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களின் முதலாவது சிறுகதைத் தொகுதி நூலினது வெளியீட்டு விழா இது. இலக்கியத்துறையில் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இளம் எழுத்தாளர் அவர். ஏற்கனவே ‘இன்னும் உன் குரல் கேட்கிறது’ என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டதின் மூலம் இலக்கிய உலகில் தனது அடையாளத்தை பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Vaikarai Book Back 5
‘வைகறை’ என்ற இந்த நூல் அவரது சிறுகதைத் தொகுதியாகும். இந்த நூலை இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் வெளியிட்டிருகிறது.
‘சிறுகதை இலக்கியத்தின் இளையது. கடைக்குட்டி. கடைக்குட்டி எப்பொழுதும் காரமானதாகவும் வீச்சானதாகவும் இருக்கும்.’ இவ்வாறு சொல்கிறார் நீர்வை பொன்னையன். இந்த நூலுக்கான அணிந்துரையை எழுதியிருக்கும் நீர்வையின் முதல் வசனம் அவ்வாறு ஆரம்பிக்கிறது.
ஆம் நல்ல சிறுகதைகள் அவ்வாறுதான் இருக்கும். அவ்வாறுதான் இருக்க வேண்டும்.

“A short story is a work of fiction, usually written in narrative prose” எனப் பொதுவாக ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதாவது சிறுகதை என்பது உரைநடையில் அமைந்திருக்கும். அது அளவில் நாவலைப் போலவோ காவியங்கள் போலவோ நீண்டதாக அன்றிக் குறுகியதாக இருக்கும். அத்துடன் அது கற்பனையில் புனையப்பட்ட படைப்பாகவும் இருக்கும்.
ஆனால் சிறுகதை பற்றிய இந்தக் குறிப்பு பூரணமானது அல்ல என்பது மட்டுமின்றி முழுமையாக  ஏற்றுக் கொள்ளக் கூடியதும் அல்ல.

Vaikarai Book Front
சிறுகதையானது எப்பொழுதுமே கற்பனையில் உதிக்கின்ற படைப்பாக இருக்க முடியாது. அது வாழ்வோடு தொடர்புடையது. ஓவ்வொரு படைப்புக்குமான ஊற்று அல்லது அதனுடைய கரு எதுவுமற்ற சூனியத்திலிருந்து திடீரென வந்து குதிக்கும் கற்பனையாக இருக்க முடியாது. எங்கோ நடந்த ஒரு சம்பவத்துடன் அல்லது அனுபவத்துடன் தொடர்புடையதாகவே நிச்சயம் இருக்கும்.

அதனை கதாசிரியன் தனது சிந்தனை வீச்சாலும், அனுபவத்தாலும், மொழி வளத்தாலும் செழுமைப்படுத்துவான். படைப்பானது சுவார்ஸமானதாகவும், விறுவிறுப்பானதாகவும், மனநிறைவைத் தருவதாகவும் வாசகனுக்கு அமையும்படியான நகாசு வேலைகளைச் செய்வதுதான் படைப்பாளியின் பங்காகும்.
இவ்வாறான எல்லா நல்ல அம்சங்களும் கூடிய சிறுகதையை எல்லோராலும் சுலபமாகப் படைத்துவிட முடியாது. அதற்கு பரந்த அனுபவ வீச்சு கிட்டியிருக்க வேண்டும். சூழுலை நுணுக்கமாக ஆழ்ந்து நோக்கும் இயல்பு இருக்க வேண்டும், ரசனையுணர்வும், மொழியாற்றலும் கை கூடவேண்டும். அதிலும் முக்கியமாக ஒரு ஆரம்ப எழுத்தாளனுக்கு தேடலும், பொறுமையும் விடாமுயற்சியும் மிக மிக அவசியம். இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருப்பது தேடலுள்ள ஒரு நல்ல வாசகனாக இருப்பதே ஆகும்.
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களது பெயர் குறிப்பிடுவது போல மலையகத்தைத் பிறப்பிடமாகக் கொண்டவர். அழகும் குளிர்மையும் நிறைந்த இயற்கைச் சூழலில் வளர்ந்தவர். தனது முஸ்லிம் சமூக உறவுகளுக்கு அப்பால் மலையக மக்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தவர். அதே நேரம் நகர்ப்புறத்தின் அவசர வாழ்வின் அனுபவங்களையும் பெற்றவர். நாளந்த வாழ்வுக்கு அல்லற்படும் மக்களையும், பணம் பதவி, அந்தஸ்து என சொகுசுக்கு அலையும் வர்க்கத்தினரையும் நிஜ வாழ்வில் கண்டவர்.
இவ்வாறு மாறுபட்ட சூழல்களுக்குள் நனைந்தூறும் வாய்ப்பு இளவயதிலேயே இவருக்கு வாய்த்துள்ளது. பரந்த அனுபவங்களும், அவற்றை மனதில் தெக்க வைத்து இரை மீட்டு அசை போடும் மென்னுள்ளமும் கொண்ட ஒருவரால்தான் சமூக அக்கறையுள்ள படைப்பாளியாக தன்னை இனங்காட்ட முடியும்.
ரிஸ்னா தனது அக்கம் பக்கத்தைக் கருத்தூன்றி அவதானித்திருக்கிறார். இதனால்தான் நீதி மறுக்கபட்ட சகமனிதர்களின் அவலங்களை அவரால் தனது படைப்புகளில் முன்னலைப்படுத்திச்  சித்தரிக்க முடிந்திருக்கிறது. அவற்றுள் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டதாக இவரது படைப்புகளைக் காண முடிகிறது.
இவரது பெரும்பான சிறுகதைகள் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி நேரடியாகக் களத்தில் இறங்குகின்றன. இதனால் சலிப்பின்றி கதைக்குள் இறங்க முடிகிறது. மனத்தை ஒரு முகப்படுத்தி வாசிக்க ஆவல் ஏற்படுகிறது.
கருவைப் பொறுத்தவரையில் தனது மனதைப் பாதித்த விடயங்களைப் பற்றியே பேசுகிறார்.

காதலையும் ஆண் பெண் உறவுகளையும் மையமாகக் கொண்ட பல படைப்புகள் உள்ளன. அத்துடன் குடும்ப உறவுகள் தொடர்பான படைப்புகளும் உள்ளன. களத்தைப் பொறுத்த வரையில் முஸ்லீம் சமூகக் கதைகளும் மலையகம் சார்ந்தவையும் அதிகம். தனக்கு நெருக்கமான சூழலிருந்து கதைகளை ஆக்கியுள்ளமை அவற்றின் நம்பிக்கைத் தன்மைக்குச் சான்றாக இருக்கின்றன.
சிறுகதைகள் என்ற இலக்கிய வடிவத்தைப் பொறுத்த வரையில் அதன் முடிவு முக்கியமானது. இது எந்த இலக்கிய வடிவத்திற்கும் பொருத்தமானதாயினும் சிறுகதையில் அது மிகவும் சிறப்பாக அமைய வேண்டும். முடிவைப் பொறுத்த வரையில் இரண்டு அம்சங்கள் கவனிக்கப்பட் வேண்டியலையாகும்.

முடிவானது வாசகனுக்கு நன்மை பயப்பதாக அவனுக்கு ஒரு முக்கிய செய்தியைக் கடத்துவதாக இருக்க வேண்டும். இது பொதுவாக சமூக நோக்குள்ள விமர்சகர்கள் கருத்தாகும். இதை மறுப்பாரும் உளர். அது எந்தச் செய்தியையும் பகிர வேண்டியதில்லை மனதை நிறைவு செய்தால் போதும் எனக் கருதுவாரகளும் உளர்.
ரிஸ்னா படைப்புகள் வெறும் கதைகள் அல்ல. அதற்குள் ஒரு செய்தி, அதுவும் சமூகத்திற்கு நன்மையளிக்கும் செய்தி மறைந்திருக்கும். எனக்கு இது உவப்பானதாகும்.
முடிவைப் பொறுத்த வரையில் அடுத்த முக்கிய அம்சம் அதில் இருக்க வேண்டிய திடீர் திருப்பம் எனலாம். ஒரு கோணத்தில் எம்மை அழைத்துச் செல்லும் படைப்பானது திடீரென எதிர்பாரத திருப்பத்தைத் தரும்போது இன்ப அதிர்ச்சி கிடைக்கும். ரிஸ்னா பல கதைகளில் இத்தகைய திருப்பத்தைத் தருகின்றன. அதற்கு நல்ல உதாரணம் நூலின் முகப்புக் கதையான அழகன் ஆகும். திடிர் திருப்பத்தால் மட்டுமின்றி சொற் செட்டு, மிகக் குறைந்தளவான பாத்திரங்கள் போன்றவற்றாலும் இக் கதை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.

Vaikarai Book Back 1
குழந்தைத் தொழிலாளர், ஆணாதிக்கம் பெண்களின் பாடுகள், சீதனக் கொடுமை, போர் அவலம் போன்ற வேறு பலவற்றையும் தனது சிறுகதைகளில் பாடுபொருளாகக் கொண்டு, உணர்வுபூர்வமாகச் சித்தரிப்பதை அவதானிக்க முடிகிறது. மனதுறையும் அக உணர்வுகளை மறைபொருளாய் வெளிப்படுத்தும் ஆற்றலை இவரது படைப்புகளில் காண்கிறோம்.
ஆனால் அலங்கார வார்த்தைகள், புரியாத சொற்களைப் பொழிதல் இவரது பாணி என்று சொல்ல முடியாது. வாசகனிடமிருந்து அந்நியப்படாது, பேசு தமிழில் எழுதுகிறார். அதை வசப்படுத்தி உருவேற்ற முயன்றிருக்கிறார். அந்த முறையில் வாசகனுடன் நெருங்கி வர முடியும் என்பதைப் புரிந்திருக்கிறார்.

ஆயினும் தனது படைப்புகளில் மேலும் கூடியளவு இறுக்கமும், சொற்செட்டும், கொண்டுவருவது படைப்புகளை செழுமைப்படுத்த உதவலாம். தான் சார்ந்துள்ள சமூகத்தில் மறைந்து கிடக்கும் அவலங்களையும் பெண்களின் பாடுகளையும் வெளிக் கொணர்வது அவரது படைப்புகளை வலுப்படுத்த உதவும் என நம்புகிறேன்.
ஜனசங்சதய இலக்கிய அமைப்பின் சிறுகதைப் போட்டி, மலை நாட்டு எழுத்தாளர் மன்ற சிறுகதைப் போட்டி, இருக்கிறம் சஞ்சிகையின் கவிதைப் போட்டி போன்றவற்றில் பெற்ற பாராட்டுகளும் பரிசுகளும் இவரது படைப்பாற்றலைப் பரந்துபட அறியச் செய்திருக்கினறன.

Vaikarai Book Back 2

வீரகேசரி, தினக்குரல், தினகரன் ஆகிய உட்பட இலங்கையின் முன்னணிப் பத்திரிகைகளிலும், மல்லிகை, ஞானம், ஜீவநதி உட்பட இலங்கையின் முக்கிய சஞ்சிகைகள் அனைத்திலும் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளியாகின்றன. இணையத்தில் தனது வலைப்பதிவுகள் ஊடாகவும், இணைய சஞ்சிகைகள் ஊடாகவும் பதிவிடுகிறார். ரீவி, வானொலி ஊடகங்களிலும் தடம் பதிக்கிறார்.

இவ்வாறு வேகமாகவும், பரபரப்பாகவும் இயங்கும் அதே நேரம் படைப்பில் ஆழத்தை அவாவியும் படைக்கிறார்.
200ற்கு மேற்பட்ட கவிதைகள், 30 மேற்பட்ட சிறுகதைகள் என குறுகிய காலத்திற்கு பெரு அறுவடை செய்துள்ளார். தான் படித்த பல நல்ல நல்ல நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் நூல் விமர்சனங்களும் செய்கிறார்.
இதனால்தான் இலங்கைத் தமிழ் இலக்கியப் பரப்பில் உலா வரும் இன்றைய வாசகர்கள் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் ஆக்கங்களில் நனைந்து திளைத்து மகிழாதிருக்க முடியாது. குறிஞ்சி நிலா என்ற புனைப் பெயரிலும் இவர் எழுதுவது குறிப்பிடத்தக்கது.
நீர்வையின் சிறப்பான அணிந்துரை நூலுக்கு அணிசேர்க்கிறது. அதில் இந்த நூலைப் பற்றி மட்டுமின்றி சிறுகதை இலக்கியம் பற்றிய சிறப்பான அறிமுகமாகவும் இருக்கிறது.
கவிதை காவியம் போன்றவை தமிழிலும் சரி உலக இலக்கியங்களிலும் ஆரம்பகால இலக்கியமாக அமைந்திருப்பதையும், அதன் பின்னர் கைத்தொழிற் புரட்சிக்காலத்துடன் ஏற்பட்ட இயந்தர மயமான வேகமாக இயங்க வேண்டிய காலகட்டம் வந்ததும் குறுகிய நேரத்தில் படிக்கக் கூடிய இலக்கியமான சிறுகதை தோற்றம் பெற்றதைக் கூறுகிறார்.

மேலும் ஒரு சிறுகதையானது எவ்வாறு இருக்க வேண்டும் அதன் பண்புகள் யாவை போன்ற விடயங்களையும் மிக சிறப்பாக எடுத்துச் சொல்கிறது. சிறுகதை இலக்கியத்தில் தேர்ச்சி பெற விரும்பும் ஆரம்ப எழுத்தாளர்களுக்குப் பயன்படக் கூடிய சிறப்பான கட்டுரை இது.
இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் இந்த நூலை வெளியிட்டிருக்கிறது. இந்த அமைப்பானது கடந்த பல வருடங்களாக பல்வேறு இலக்கிய மற்றும் சமூக அக்கறை மிக்க செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. இவை ஈழத்து இலக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டவை. கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், நூல் வெளியீடுகள், விமர்சன அரங்குகள் ஊடாக  இலங்கையின் இலக்கியப் படைப்புகளை வாசகர்களிடையே அறிமுகப்படுத்துகின்றன.
பேராசிரியர் கைலாசபதி, கவிஞர் முருகையன், போன்ற மறைந்த எழுத்தாளர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளைச் செய்து வருகின்றன. முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுத்தும் அவர்கள் பற்றிய அறிமுகங்களையும் நூலாக வெளியிடும் பணியைச் செய்கின்றன. இன்றைய தலைமுறையினருக்கு முற்போக்கு இலக்கியமானது ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய அரும் பணிகளை தெரியப்படுத்துவற்கு இத்தகைய செயற்பாடுகள் உதவுகின்றன. அவற்றை ஆவணபடுத்துவதும் அத்தகைய நூல் வெளியீடுகளில் ஈடுபடுவதும் முக்கிய விடயமாகும்.

Vaikarai Book Back 4

இன்றைய இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் பின் நிற்கவில்லை. அவர்களது நூல்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா வைகறை என்ற இந்த நூலானது இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தினரின் 27வது வெளியீடாகும்.
  • மற்றொரு புதிய எழுத்தாளரான வெலிகம ரிம்ஸா முஹமத் அவர்களின் தென்றலின் வேகம் என்ற நூலை 2010 ல் வெளியிட்டது.
  • அதேபோல திருமதி குகதாசன் அவர்களின் தளிர்களின் சுமைகள் என்ற நூலை இவ்வருட ஆரம்பத்தில் வெளியிட்டிருந்தது.

இறுதியாக,

இவரது படைப்பாளுமைக்கு கட்டியம் கூறும் நூலாக இச்சிறுகதைத் தொகுப்பு வெளிவருகிறது. நெடும்பயணமாகத் தொடரப் போகும் இவரது இலக்கியப் பயணத்தில் வளமும், புகழும், சித்திகளும் கிட்ட வாழ்த்துகிறேன்.

எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0.0

Read Full Post »

கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகள்.

என்னை இன்று எமது கதைகளின் கதையைத்தான் பேச அழைத்துள்ளார்கள். நான் கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகளின் கதைச் சொல்கிறேன்.

ஊர்கள் சிறியன. பெருநாடுகளின் தள வள ஆளனி வலுக்குகளுடன் ஒப்பிடுகiயில் சிற்றூரிலும் சிறியது எமது நாடு. அதில் இலங்கை பூராவும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தமிழ்பேசும் சமூகங்கள் ஏனைய உலக சமூகங்களுடன் ஒப்பிடுகையில் கணக்கில் கொள்ள முடியாதவை. நுணுக்குக் கண்ணாடிகளால் தேட வேண்டியவை.

இருந்தபோதும் நாற்திசைகளிலிருந்தும் உலகளாவ எமது குரல் ஓங்காரமாக ஒலிக்கிறது. அதுவும் இனிய தமிழில் ஒலிக்கிறது. கதைகளாக, கவிதைகளாக, ஒலிப்பேளைகளாக, ஒளிச்சித்திரங்களாக சிறகடித்து வலம் வருகின்றன. தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு நீண்டகால வாசகன் என்ற முறையில் இது எனக்கு மகிழ்வைத் தருகிறது.

ஆனால் இதற்காக எமது எழுத்தாளர்கள் நெடும்பயணம் செய்ய வேண்டியிருந்தது. கிடுகு வேலிகளுக்குள் அடைபட்டுக் கிடந்த எமது சிறுகதைகள் பெருவீதி கடந்து வான்வெளி எட்ட பெரு முயற்சிகள் தேவைப்பட்டன.

கனடாவிலிருந்து முத்துலிங்கம், மறுபுறம் ஆஸ்த்திரேலியாவிலிருந்து ஆசி.காந்தராசாவும் ‘உயரப் பறக்கும் காகங்கள்’, மத்திய கிழக்கிலிருந்து ரிஸான் ஷெரிபும், ஜேர்மனியிலிருந்து பொ.கருணாகரமூர்த்தி, சந்திரவதனா செல்வகுமாரன் ம் இங்கிருந்து உமா வரதவாஜன்ரஞ்சகுமார் , ராகவன் போன்றோரும், இன்னும் ஏராளமான பலரும் எமது வாழ்வின் ஒளிந்து கிடந்த பக்கங்களை உலகிற்கு அலங்காரமாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்கள்.

இணையத்திலும், தமிழகம் உட்பட உலகளாவ அவர்களது படைப்புகளைச் சஞ்சிகைகள் வேண்டி வெளியிடுகின்றன.

ஆனால் எமது மூத்த எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட களம் தேடியலைய வேண்டியிருந்தது.

இலங்கையில் சிறுகதை இலக்கியத்தின் ஆரம்பம்

ஈழத்தின் முதற் சிறுகதையை எழுதியவர் யார் என்ற சர்ச்சை ரப்பர் நாடாபோல இழுபட்டுக்கொண்டே போகிறது. இருந்தபோதும் மூலவர்கள் மூவர் என்பதைப் பலரும் ஏற்றுக் கொள்ளவே செய்கிறார்கள்.

இலங்கையர்கோன்

இலங்கையர்கோன், சி.வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகியவர்களே அவர்கள். இவர்கள் ஆளுமைமிக்க சிறந்த சிறுகதையாசிரியர்களாக இருந்தார்கள். சிறுகதை என்ற புதிய இலக்கிய வடிவத்தை எமது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். புராண இதிகாசக் கதைகளை பெரும்பாலும் கருவாகக் கொண்டு கற்பனை ரதத்தில் பயணித்து சுவையான வாசிப்பு அனுபவத்தைத் தந்தார்கள். அவற்றைச் செப்பமாகவும் செய்தார்கள்.

இருந்தபோதும் போதும், எமது மண்ணின் பிரச்சனைகளை பெரிதாக தமது படைப்புகளை வெளிப்படுத்தவில்லை. சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணி அவர்களுக்கானதாக இருந்ததால் அதன் வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டதில் வியப்பில்லை. கரு, களம் ஆகியவற்றைப்பொறுத்த வரையில் தாம் சார்ந்த சமூகத்தை முன்னிலைப்படுத்தவில்லை எனலாம்.

“இம்மூவரதும் கதைகள் பெரும்பாலும்(1) வரலாற்று இதிகாச சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. (11) தனிமனித அவலங்களையும் உணர்வுகளையும் (சமூக, யதார்த்த சூழலின்றி) வெளிப்படுத்தின. (111) மனோரதியப் பாங்கில் அமைந்திருந்தன.” எனப் பேராசிரியர் செ.யோகராசா ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இருந்தபோதும் மண்வாசனையுள்ள, சமூக விழிப்புணர்வை நோக்கிய படைப்புகள் அக்காலத்தில் எழதப்படவில்லை எனக் கூறமுடியாது.

ஆனந்தன் என்ற புனைபெயரில் எழுதிய சச்சிதானந்தன் சாதிப்பிரச்சனையை மிகச் சிறப்பாக அக்காலத்திற்கு ஏற்றவாறு தண்ணீர்த் தாகம் என்ற சிறுகதையில் சொல்லியிருந்தார். நமது பாராம்பரியக் கிராமங்கள், அங்கு பிற்புறத்தில் இருக்கும் கிணறு, சாதித் திமிருள்ள வெள்ளாள சமூக பெரியார், தண்ணீர்த் தாகத்தில் அதில் நீர் அள்ளிக் குடிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் என அக் கதையை யதார்த்தமாக நகர்த்தியுள்ளார்.

மூலவர்களினதும் அதைத் தொடர்ந்த மறுமலரச்சி சஞ்சிகை காலகட்டத்துப் படைப்புகளான இலங்கையர்கோனின் ‘வெள்ளிப் பாதரசம்’, சம்பந்தனின் துறவி, சி.வைத்தியலிங்கத்தின் ‘பாற்கஞ்சி’ கனகசெந்திநாதனின் ‘ஒரு பிடி சோறு’, அ.செ.முருகானந்தனின் ‘வண்டிச் சவாரி’ போன்றவை இன்றும் பேசப்படுமளவிற்கு மிகச் சிறந்த படைப்புகளாக இருக்கின்றன.

குடாநாட்டுக்கு அப்பாலான முயற்சிகள்

மேற் கூறிய முயற்சிகள் யாழ்ப்பாணத்தில் கருக்கட்டிய வேளையில் மலையகத்திலும் சிறுகதை படைப்பாக்க முயற்சிகள் தோன்ற ஆரம்பித்தது. மலைநாட்டுத் தோட்டத் தெழிலாளர்கள் பற்றி திரு.கோ.நடேசஐயர் சில சிறுகதைகளை எழுதியாக அறிய முடிகிறது. கே. கணேஷ், அவர்களும் இவ்வாறன முயற்சிகளில் எழுதியுள்ளார். ‘சத்திய போதி மரம்’ என்ற அவரது சிறுகதை அறம் வெல்லும் என்பதை உணர்த்தும் ஒரு நல்ல படைப்பாகும்.

மற்றொரு புறத்தில் கிழக்கு மாகாணத்தில் அதிலும் முக்கியமாக மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்தும் சிறுகதை எழுத்து விதைவிட ஆரம்பித்தது. வித்துவான் கமலநாதன், சிவா, மற்றும் புரட்சிக் கமால் ஆகியோரை முன்னோடிகளாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பித்தன் மற்றொரு சிறந்த சிறுகதையாசிரியர் ஆவார்.

வ.அ.இராசரத்தினம்

மூதூர் பிரதேசத்திலிருந்து எழுதியவரான வ.அ.இராரத்தினத்தின் ‘தோணி’ இன்றளவும் போற்றப்படும் படைப்பாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

1950 முற்பட்ட காலகட்டத்தில் அவ்வாறான சிறந்த சிறுகதைகள் ஈழத்துச் சுழலில் எழுந்தபோதும், அதற்குப் பிற்பட்ட காலத்தில்தான் எமது சிறுகதைத் துறையில் பாரிய துரித வளர்ச்சியைக் கண்டது எனலாம். இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம்.

புதிய வீச்சுகள் 50களின் பின்

உலகளாவிய ரீதியில் தொழிலாளர் நலம் சார்ந்த உணர்வுகளும், உள்நாட்டில் தேசிய உணர்வு வலுப்பட்டதையும் காரணங்களாகச் சொல்லலாம். உலகளாவிய ரீதியில் ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரியா, போன்ற தேசங்களில் தோன்றிய விடுதலை இயக்கங்களின் செயற்பாடுகள் அடக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்தன. பாஸிசத்திற்கு எதிரான உணர்வு வலுப்பெற்றமையும்,
பொதுமக்களிடையேயான அரசியல் விழிப்புணர்ச்சியும் காரணமாக இருந்தன.

இலங்கையிலும் பொதுவுடமை சார்ந்த கருத்துக்கள் 40, 50களில் மக்களிடையே செல்வாக்குச் செலுத்தின. தொழிலாளர் எழுச்சிகள் தோன்றின. இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு இளம் சமுதாயத்தினரிடையே பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. இவை படைப்புலகிலும் பிரதிபலித்தது.

உதிரி எதிரியாக எழுதிக் கொண்டிருந்து முற்போக்கு சிந்தனை கொண்ட எழுத்தாளர்களை இணைக்க முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாகியது. வெறுமனே பொழுது போக்கிற்காக எழுதுவதை விடுத்து மக்கள் உள்ளங்களில் முற்போக்கு எண்ணங்களை விதைக்கும் எழுத்துக்களை எழுத வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.

இதனால் இன்றுவரை ஈழத்தில் படைக்கபடும் சிறுகதைகள் சமூக உணர்வோடும் அதன் மேம்பாடு நோக்கியுமே படைக்கப்படுகின்றன. வெறுமனே புகழுக்காவும், பொழுதுபோக்கிறாகவும், பாலியல் கவரச்சிக்குமாக எழுதப்படுவதைக் காண்பது அரிது.

மற்றொரு புறத்தில், இலங்கை அரசியலிலும் தேசிய உணர்வு ஏற்பட்டமையும் எமது சிறுகதை வளர்ச்சிக்கு அளப்பரிய வாய்ப்பாக அமைந்தது. எமது மண்ணின் பிரச்சனைகளை மண்வாசனையுடன் எழுதவேண்டும் என்பதை எமது எழுத்தளர்கள் முற்று முழுதாக ஏற்றுக் கொண்டனர்.

இதற்கு மறுபக்கம் ஒன்று உண்டு. இலங்கைத் தேசியம் என எமது முற்போக்கு எழுத்தாளர்கள் எண்ணியும் எழுதியும் வந்த அதே நேரத்தில் சிங்கள தேசியம் எழுச்சி பெற்றது. அதன் பூதாகரத்தன்மை தமிழர் வாழ்வில் அச்சத்தை ஏற்படுத்தின. தமிழ், தமிழர் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மையும் புறக்கணிப்பும் தமிழ்தேசிய உணர்வை ஏற்றம் பெறச் செய்தன.

இவை எமது இலக்கியத்தில் பிரதிபலிக்க ஆரம்பித்தது.

எனவே முற்போக்குக் கருத்துள்ளவர்கள் ஒரு புறமாகவும், முற்போக்கு அணியினருக்கு எதிரானவர்கள் மற்றொரு அணியினராகவும் செயற்பட ஆரம்பித்தனர். இவ்வாறு எதிரணியில் நின்றவர்கள் முற்று முழுதாக முற்போக்கு கருத்தியலை எதிர்த்தவர்கள் எனப் பொருள்படாது. அவர்களது செயற்பாடுகளை எதிர்த்தவர்கள் எனச் சொல்லாம்.

ஈழத்து இலக்கியப் பரப்பில் முக்கிய விமர்சகர்களாக வெளிப்பட்ட பேராசிரியர்கள் சிவத்தம்பி, கைலாசபதி போன்றவர்கள் முற்போக்காளர்களாக இருந்த காரணத்தால் தம் அணிசார்ந்த எழுத்தாளர்களையும்; முற்போக்கு அம்சங்கள் கொண்ட படைப்புகளை பாராட்டிச் சிலாகித்ததை மறுக்க முடியாது. இதனால்; புறக்கணிக்கபட்ட பலரும் இதில் அடங்குவர்.

இவ்வாறு எதிராக நின்றவர்களில் பலர் எந்தக் கருத்தியல் கோட்பாடுகளுக்குள்ளும் தம்மைப் பிணைத்துக் கொள்ளவில்லை என்ற போதும், இவர்களில் பலர் தமிழ் தேசியம் என்ற கருத்தியலோடு எழுதியமை குறிப்பிடத்தக்கது.

நந்தி, சாந்தன் போன்றவர்கள் ஆரம்பத்தில் முற்போக்கு அணியுடன் இருந்தபோதும், தமிழ் தேசிய உணர்வுடன் படைப்புகளைத தருவதில் பின்நிற்கவில்லை என்பதையும் சுட்ட வேண்டும்.

அணிகளாகப்  பிரிந்து நின்று ஒருவர் மீது மற்றொருவர் எனக் கண்டனக் கணைகளைத் தொடுத்தபோதும் இரு பக்கங்களிலிருந்தும் நல்ல படைப்புகள் வெளிவரவே செய்தன.

மேற் கூறிய இரண்டிற்கும் மாற்றாக மு.தளையசிங்கத்தின் மெய்யுள் அல்லது ஆத்மார்த்தம் சார்ந்த அணியும் எண்ணிக்கை அளவில் குறைந்திருந்தாலும் தனது பலமான பங்களிப்பை ஈழத்துச் சிறுகதை வளர்;சிக்கு அளிக்கவே செய்தது.

இவ்வாறு பல்வேறு பிரிவுகளாக நின்று தங்களுக்குள் மோதியபோதும் எமது மண்ணின், தேசத்தின் இலக்கியம் வளர்ந்து சென்றது.

முற்போக்கு இலக்கியம்

கணேஸ், அ.ந.கந்தசாமி, டொமினிக் ஜீவா, டானியல், என்.கே.ரகுநாதன், நீர்வை பொன்னையன், ஈழத்துச் சோமு, தெணியான், செ.யோகநாதன் போன்ற பலரையும் முற்போக்கு அணி சார்ந்த முக்கிய படைப்பாளிகளாக குறிப்பிடலாம்.
ஈழத்துச் சோமு (நா. சோமகாந்தன்)

மண்ணின் மணத்தை தமது படைப்புகளில் முற்போக்கு அணிசார்ந்தவர்கள் எவ்வாறு கொண்டு வந்தார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு படைப்பை நோக்கலாம். இன்று நாம் நினைவு கூரும் ஈழத்துச் சோமு எழுதிய நிலவோ நெருப்போ என்ற சிறுகதை அது. சுமார் 60-70 வருடங்களுக்கு முன்னான ஒரு தோட்டத் தொழில் சார்ந்த ஒரு கிராமத்தை அப்படியே கண்முன் கொண்டு வருகிறது. தோட்ட நிலங்கள், அங்கு மண்ணின் வளத்தைப் பெருக்குதற்காகப் போடப்படும் உரமாக இலை குழைகள், அதை வெட்டி கட்டிக்கொண்டு வரும் பெண்கள், அதை விற்பதற்கு உதவும் தரகர்கள், தரகர்களது தில்லுமுல்லுத்தனங்கள், பாலியல் மன வக்கிரங்கள் என மிகவும் யாதார்த்தமாகச் சொல்லப்பட்டுள்ளது.

தரகனது இச்சைக்கு இணங்காத பெண்ணை உதாசீனம் செய்து அவளது குழைக்கட்டை விற்காது தடுப்பவனுக்கு எதிராகப் ஏனைய பெண்கள் எவ்வாறு எதிர்கொண்டு வெல்கிறார்கள் என்பது வெற்றுக் கோசங்கள் இன்றி இயல்பாக மண்வாசனையோடு சித்தரிக்கப்பட்டுள்ளது. சோமகாந்தனின் ஆகுதி மற்றுமொரு நல்ல படைப்பாகும்.

ஆனால் இதற்கு மாறாக மார்க்சிய கருதியலுக்கு அழுத்தம் கொடுத்து, கலை நயத்தைத் தொலைத்த எழுத்தாளர்களும் உண்டு.

இரு வருடங்களுக்கு முன்னர் ‘ஈழத்து இலக்கிய செல்நெறியில் முற்போக்குச் சிறுகதைகளின் சுவடுகள்’ என்ற தொகுப்பு நூல் வந்தது. அது பற்றி விமரசித்த லெனின் மதிவாணம் இவ்வாறு கூறுகிறார்.

‘இத்தொகுப்பில், முற்போக்கு நோக்கிலான சிறுகதைகளாக இரத்த உறவு (அ. ந. கந்தசாமி), ஒரு புதிய ஆயுதம் (சி. வி. வேலுப்பிள்ளை), தண்ணீர் (மொஹிதீன்), வாய்க்கரிசி (டொமினிக் ஜீவா), பிரசாதம் (எஸ். அகஸ்தியர்), மண்பூனைகளும் எலி பிடிக்கும் (மருதூர்க்கனி), 47 வருடங்கள் (கே. விஜயன்), தேவ கிருபையை முன்னிட்டு வாழும்…. (காவலூர் ராசதுரை), ஊர் நம்புமா? (நந்தி), ஒரு கிராமத்து பையன் கல்லூரிக்கு செல்கின்றான் (செ. கதிர்காமநாதன்), பெருமூச்சு (ஏ. இக்பால்), எப்படியம் பெரியவன் தான் (தெணியான்), மாறுசாதி (திக்குவல்லை கமால்), நிலவோநெருப்போ?(என்.சோமகாந்தன்), என் நண்பன் பெயர் நாணயக்கார (சாந்தன்), அந்தக் கிழவன் (அ.ஸ. அப்துஸ் ஸமது), பகவானின் பாதங்களில் (மு. கனகராசன்) ஆகியன காணப்படுகின்றன.
மார்க்ஸிய நோக்கிலான சிறுகதைகளாக தண்ணீர்,(கே டானியல்), போர்வை(என். கே ரகுநாதன), சங்கமம்(நீர்வை பொன்னையன்), நேற்றைய அடிமைகள்(செ.யோகநாதன்)ஆகியன காணப்படுகின்றன. இதற்கு மாறாக சாயம் (செ. கணேசலிங்கம்), இங்கெவர் வாழவோ (யோ. பெனடிக் பாலன்) முதலானோரின் கதைகளில் கோட்பாட்டு தளம் வலிந்து புகுத்தப்பட்ட அளவிற்கு அழகியல் அம்சம் பேணப்படவில்லை.’

நந்தினி சேவியர்

முற்போக்கு கருத்தியல் கொண்டபோதும் நந்தினி சேவியர் விமர்சகர்களால் பெரும்பாலும் கண்டு கொள்ளப்படுவதில்லை. மிகச் சிறந்த ஒரு முற்போக்குப் படைப்பாளியாக அவர் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த மார்க்ஸிய கொள்கைப் பிடிப்புக் கொண்டவர். ஆயினும் அவரது படைப்புகளில் எந்தக் கோசமும் முனைப்படுவதில்லை. மிகுந்த கலைநயம் வாய்ந்த படைப்புகளை அவர் தந்திருக்கிறார்.

அண்மையில் அவரது ‘நெல்லிமரப் பள்ளிக்கூடம்’ என்ற தொகுப்பு வெளி வந்தது. அதற்கு முன்னுரை எழுதிய ரவிக்குமார் அவர்கள் ‘குரலை உயர்த்தாமலே கொதிப்பை வாசகனுக்குக் கடத்த முடியும் என நிருபிப்பவை இவரது கதைகள்’ என்கிறார்.

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் எழுத்தாளர்களை முற்போக்கான கருத்துக்களை தமது படைப்புகள ஊடாக பரப்புவதை ஊக்குவிப்பதிலும் அவர்களை ஒன்றிணைப்பதிலும் மட்டும் ஈடுபடவில்லை. தமிழ் மரபுகளையும் அறிஞர்களையும் பாராட்டிக் கௌரவிப்பது போன்ற செய்றபாடுகளிலும் ஈடுபட்டது.

இவற்றில் சோமு ஆற்றிய பங்கiளிப்புகளை குறிப்பிடாமல் விட முடியாது. பாரதியாரின் ஞானகுருவென யாழ்பாணத்துச் சுவாமி என்று அழைக்கப்பட்ட அருளம்பல சுவாமிதான் என அ.ந.கந்தசாமி நிறுவியபோது அதனை பெருவிழாவாக அவர் பிறந்த வியாபாரிமூலையில் கொண்டாடியதில் சோமுவின் பங்களிப்பு பலமானதாகும். அதே வியாரிமுலைச் சார்ந்த நான் ஒரு பாடசாலை மாணவனாக அக் கூட்டத்தில் பார்வையாளனாகப் பங்கு பற்றியது எனக்கு நேற்று நடந்தது போல ஞாபகம் இருக்கிறது.

அதேபோல பாரதி நூற்றாண்டு மலர், ஆறுமுகநாவலர் நூற்றாண்டு மலர் ஆகியன வெளியிடுவதற்கான குழக்களில் செயலாளராக பங்காற்றி அளப்பரிய பணியாற்றியதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

முற்போக்கு எழுத்தாளர் பலரது படைப்புகள் கருத்திற்கு அழுத்தம் கொடுப்பது என்பது வெறும் கருத்தாக மட்டுமின்றி கோசமாகவும் எழுந்தனால், படைப்புகளை செழுமைப்படுத்துவதில் அவர்களில் பலரும் அக்கறை காட்டாமல் காலத்திற்கு ஏற்ப கதை கட்டிக்கொண்டிருந்தனர்.

தமிழ் தேசியம்

இவற்றால் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்தவர்கள் மாற்றுக் குழுவினராக படைப்பின் செழுமையில் தங்களை ஈடுபடுத்த முயன்றனர். செம்பியன் செல்வன், செங்கைஆழியான், சொக்கன், தெளிவத்தை ஜோசப், சுதாராஜ், குந்தவை, கோகிலாமகேந்திரன், தாமரைச்செல்வி, போன்ற ஏரளமானோரை உதாரணம் காட்டலாம்.

குப்பிளான்.சண்முகம், சட்டநாதன், உமா வரதராஜன் (அரசனின் வருகை), ரஞ்சகுமார் (கோசலை), எஸ்.எல்.எம்.ஹனிபா (மக்கத்துச் சால்வை), ஓட்டாவடி அரபாத், திசேரா, திருகோவிலூர் கவியுகன். ராகவன், போன்றவர்களின் படைப்புகள் இவற்றுள் தனித்துவமான வாசிப்பு அனுபவங்களைத் தந்தவை.

                        எஸ்பொ

எஸ்.பொ எப்பொழுதும் தனித்துவமான படைப்பாளியாக இருந்த அதே நேரம் இலக்கியத்தில் தூய்மை பேணுபவர்களின் கடும் விமர்சனங்களும் ஆளாக நேர்ந்திருக்கிறது.

படைப்புகள் செழுமையாக வரவேண்டும் என்பதில் அக்கறையோடு செயற்பட்டவர் அ. யேசுராசா. தனது படைப்புகள் ஊடாகவும், அலை சஞ்சிகை ஊடாகவும் ஈழத்து படைப்பிலக்கியத்திற்கு ஆற்றிய பணி அளப்பரியது.

முனியப்பதாசன் மற்றொரு தனித்துவமான படைப்பாளி. ஆன்மீகத் தேடல், அழிவும் தேய்வும், ஆணிவேர், துறவி போன்ற பல படைப்புகளை எடுத்துக் காட்ட முடியும். ‘முனியப்பதாசனின் எழுத்துக்கு நிகரில்லை. நிகரெனக் குறிப்படுவதாயின் மௌனி, லா.சா.ராமாமிர்தம், பிச்சமூர்த்தி ஆகியோரையே குறிப்பட முடியும். ஆத்மிகத் துறவியாக வாழ்ந்து மறைந்த அறிஞன்’ எனச் செங்கையாழியான் இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

மு.தளையசிங்கம், மு.பொ, ஆகியோரின் ஆத்மார்த்தம் சார்ந்த தனித்துவமான பாதையில் பயணித்தனர். தளையசிங்கத்தின் கோவில்கள், அகல்யை, மு.பொ வீடும் பல்லக்கும், சீதை யுகங்களை விழுங்கிய கணங்கள், போன்ற பல சிறுகதைகளை உதாரணம் காட்ட முடியும். ஆத்மார்த்தத்தோடு தமிழ் தேசிய கருத்தியலோடு இணைந்தவை இவர்களது படைப்புகள்.

நன்றி http://ayalveedu.blogspot.com

ஆனந்தமயில் மற்றொரு சிறந்த படைப்பாளி. இவரது “படைப்புகள் அனைத்துமே சுய அனுபவத்தின் வெளிப்பாடுகள். நாளாந்தம் காணும் நிகழ்வுகள். அத்தோடு முகம் காட்டும் கண்ணாடிபோல எமது வாழ்வின் தெளிவான பிரதிபலிப்பாகவும் இருக்கின்றன. இவற்றால் மிகுந்த நம்பகத்தன்மை கொண்டவையும் கூட. இருந்தபோதும் தகவல் களஞ்சியம் போன்ற அனுபவக் குறிப்புகளாகக் கணிக்கக் கூடிய கதைகளும் அல்ல. ஆழ்ந்த ரசனையும், கூர்ந்த அவதானிப்பும், மானிட நேயமும் கொண்ட ஒரு சாதாரண குடிமகனது உணர்வுகளின் கலாபூர்வமான சித்தரிப்பு என்றே சொல்ல வேண்டும்.” என நான் இவரது ‘ஒரு எழுதுவினைஞரின் டயறி” என்ற நூலுக்கு எழுதிய விமர்சனத்தில் எழுதியதை இங்கு பகிர்வது பொருத்தமாக இருக்கும்.
ஒரு எழுதுவினைஞனின் டயறி’

மு.தளையசிங்கம்

மு.த வின் பாதை நம்பிக்கைக்கு உரியதாகவும், தமிழக எழுத்தார்களின் கணிப்பைப் பெற்றிருந்தபோதும், இவ்வழியில் பின்தொடர்ந்து படைப்பாக்க முயற்சிகளில் இறங்குபவர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். கருத்தியல் ரீதியாக இவர்களது ஆத்மார்த்த வீச்சு கவிதைகளில் வெளிப்பட்ட அளவிற்கு சிறுகதைகளில் இல்லை என்றே தோன்றுகிறது.

ஆயுதப் போராட்ட காலம்

தமிழர்களின் அரசியல் போராட்டம் பின்தங்கி, ஆயுதப் போராட்டம் முனைப்புற்றபோது படைப்பாளிகள் ஒட்டுமொத்தமாக தமிழ்தேசிய உணர்வில் தெக்கிநின்றனர். போரும், அதனால் சாதாரண மனிதர்களின் பாடுகளும் பேசுகதைகளாயின. போராளிகளின் வீரமும், இனப் பற்றும் படைப்பாக்கம் பெற்றன. சங்ககாலத்திற்குப் பின்னர் தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த மிக வித்தியாசமான அனுபவங்கள் சிறுகதை, நாவல், கவிதை என யாவற்றிலும் பதிவாகின.

பார்வையாளர்களாகவும், பாதிப்புக்கு உள்ளாவர்களாகவும் இருந்தவர்கள் மட்டுமின்றி களத்தில் நின்று போராடியவர்களும் தம் அனுபவங்களை படைப்புலகில் விதைத்தனர். மாலதி மலரவன் போன்ற படைப்பாளிகள் கவனத்திற்குரியவர்கள்.

ஆனால் முற்போக்கு இலக்கியத்திற்கு நேர்ந்த அவலம் இங்கும் தன்கைவரிசையைக் காட்டியது. இது பற்றி திருக்கோயில் கவியுகன் ‘..ஆயுதப் போராட்டத்தின் பின் வந்த அவல வாழ்வை, அதாவது மரணம், கைது, ஊனம், காயம் இப்படியான அவல வாழ்வை தங்கள் படைப்புகளில் கருப்பொருளாய்க் கொண்டு, கதையில் வரும் பாத்திரங்களுக்குள்ளேயோ, கதை நகரும் புலத்திற்குள் நுழையாமல் எட்ட நின்று வெளிப்பார்வையில் பின்னிய பல அபத்தமான போலியான படைப்புகளும் வெளிவந்திருக்கின்றன.’

இப்படைப்புகள் பக்கம் சார்ந்தவையாக, அரசியலை விமர்சிக்க முயலாதவையாக இருந்தன என்பதை ‘இயக்கங்களை விமர்சிக்காத வரைக்கும் ஆயுதப் போராட்டம் வேறுபல வழிகளில் (இலக்கியத்தை வளர்ச்சியடையச் செய்துள்ளது’ என்கிறார் மு.பொ. ஆம் எந்தப் படைப்பும் நடுநிலையாக இருக்க முடியாது என்பதை இது சுட்டுகிறது. எமது பக்கத்தில் இல்லாதவற்றை பக்கம் சார்ந்தவை என ஒதுக்கித் தள்ளிப் பழகிவிட்டோம் நாம்.

பெண்ணியம்

பெண்ணியக் கருத்தியல் கொண்ட படைப்புகளைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், கோகிலா மகேந்திரன், பத்மா சோமகாந்தன், பாலேஸ்வரி, கவிதா, சந்திரா தியாகராஜா, அன்னலட்சுமி ராசதுரை, ரூபராணி ஜோசேப், ராணி சீதரன் எனப் பலரையும் கூறலாம்.

இருந்தபோதும் பெண்ணியம் கவிதையில் கண்ட எழுச்சியைச் சிறுகதைகளில் தரிசிக்க முடியவில்லை.

புலம் பெயர் படைப்புகள்

புலம் பெயர் படைப்புகள் பெரும்பாலும் தாம் இழந்த வாழ்வின் துயரங்களை இரை மீட்பனவாகவே இருந்தன.

ஆனால் அவர்களுள் அ.முத்துலிங்கம், ஆசி.காந்தராஜா, பொ.கருணாகரமூர்த்தி ஆகியோர் புதிய தரிசனங்களைத் தந்தார்கள். வித்தியாசமான படைப்புலகுடன் தொடர்ந்து பயணிக்கின்றனர். அவர்களது களங்கள் புதியன. அப் புதிய களங்குடன் எமது பாரம்பரியங்களை கலந்து படைப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

விமல் குழந்தைவேல், ராஜேஸ்வரி.பாலசுப்பிரமணியம், ஷோபா சக்தி, சுமதிரூபன், இரவி.அருணாசலம், சிறிதரன், ரமணீதரன்(சித்தாந்த சேகுவரா), சார்ல்ஸ் போன்றவர்களின் சிறுகதைகளும் அதிகம் கவனத்திற்குள்ளாயின.

தமிழ்நதி

தமிழ்நதி என்ற புனைபெயரில் எழுதிவரும் கலைவாணி கவனத்தில் எடுக்க வேண்டிய படைப்பாளி. சிறுகதை, கவிதை, நினைவுப் பதிவுகள், நூல் விமரிசனமென ‘இளவேனி’ல்’ என்னும் தன் வலைப்பதிவில் படைப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார். தமிழ்நதியின் ‘நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது’ சிறுகதை தொகுப்பு அண்மையில் வெளிவந்தது. ‘கவித்துவ மொழிதலுக்கு’ தமிழ்நதி என்றும், ‘அழகுத்தமிழில்  ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும் படைப்புகள் எனவும் பாராட்டுக்களைப் பெற்றது இவரது தொகுப்பு.

சுமதி ரூபன் மற்றுமொரு அருமையான படைப்பாளி. யாதுமாகி என்ற சிறுகதைத் தொகுதி வந்துள்ளது. குணேஸ்வரன் இவை பற்றிக் கூறுகையில்

‘இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் பெண்களின் ஒவ்வொரு பிரச்சினையை முன்வைக்கின்றது. சிறுவயதில் இருந்து பெண் என்ற காரணத்தினால் ஆணாதிக்க சமூகத்தின் ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பல பெண்களை கதைகளில் இனங்காண முடிகின்றது.’

நாடு விட்டு புதிய தேசம் நோக்கிய நம்மவர்களின் பயணங்கள் துயரம் தோய்ந்தவை, பனிவயல்களையும், ஆழ்கடல்களையும் தாண்டி, பொருள் காவிகளினுள் ஒளிந்து பயணித்தவற்றைக் கேள்விப்பட்டுள்ளோம். அதில் ஆவி பிரிந்து உடல் சிதைந்து எங்கென்று அறியப்படாதவர்கள் பலபேர். இவை பற்றி வாசித்திருக்கிறோம்.

அரசல் புரசலாகக் கேள்விப்பட்ட ஆனால் வெளிப்படையாகப் பேசப்படாத அவலத்தை ஆவணப்படுத்தியுள்ளார் சுமதி ரூபன். பயண இடைவெளியின்போது பெண் உடல் சிதைக்கப்படல் அதிர்ச்சியளிப்தாக உள்ளது. மிலேச்சத்தனமான இராணுவத்தினரிடமிருந்தும் ஆயுததாரிகளிடமிருந்தும் தன்னைக் காக்க புலம்பெயரப் புறப்பட்டவள், தன்னைப் பயண வழியில் இழக்கும் துயரம் இங்கு பேசப்பட்டுள்ளது.

போருக்குப் பின்னான புதிய பயணம்

பரந்த வானம் எம் முன் விரிந்து கிடக்கிறது. இதில் எமது படைப்பாளிகள் பயணிக்க வேண்டிய திசை எது?

பயணிக்க வேண்டிய திசை

இது போருக்குப் பின்னான காலம். மேனியெங்கும் வடுக்களைச் சுமந்த சமூகம் எம்மது.

  • நம்பிக்கையோடு புதுவாழ்வைத் தேடுபவர்கள் பலருள்ளனர்.
  • இவ்வாறிருக்க, ஆறின புண்ணை மீண்டும் நோண்டி வலியை தூண்டும் வண்ணமே இன்னமும் பலரும் எழுதுகிறார்கள்.
  • பலரது படைப்புகள் எங்கள் சமூகத்தை இன்னமும் இருண்ட வாழ்வை நோக்கித் திருப்புவனவாக உள்ளன.
  • எமது அனைத்துத் துன்பங்களுக்கும் மற்றவர்களையே குறை கூறி நிற்கிறோம்.
  • படைப்பாளிகள் மட்டுமின்றி பத்திரிகைகளும், இலத்திரனியல் ஊடகங்களும் அதையே செய்கின்றன.

இனிவரும் காலங்களில் எமது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் படைப்புகளைத் தாருங்கள்.

  • எமது இனத்திற்கு நீதி கேட்பதில் தவறில்லை. அது அவசியமானதும் கூட.
  • ஆனால் எம்மிடையே ஊறிப்போன சமூக ஏற்றத்தாழ்வுகளையும் பேச முன்வாருங்கள்.

இன்று ஏராளமான எழுத்தாளர்கள் தமது சிறுகதைகளைத் தருக்கிறனர். பலர் நம்பிக்கை உரியவர்களாக உள்ளனர். மூத்தவர்கள் மற்றும் புதியவர்களான அனைவரையும் இக் கட்டுரையில் குறிப்பிடுவது சாத்தியமல்ல. பதச்சோறு போல சில உதாரணங்களையே காட்ட முடிந்தது.

இறவாத புகழுடைய புது நூல்கள்  

மற்றொரு விடயம். எமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை. இறவாத புகழுடைய புது நூல்கள் நம் நாட்டில் இயற்ற வேண்டும். திறமான புலமையெனில் வெளிநாட்டோர் வணங்குதல் செய்வர்.

அவ்வாறு பார் புகழ வேண்டுமெனில் எம் படைப்புகள் செழுமையுற வேண்டும்.

  • கருத்தியலோடு அழகியலும் மேம்படவேண்டும்.
  • ஒரு சிலரின் படைப்புகளே நல்ல இலக்கியத்தரம் வாய்ந்தவையாக உள்ளன.
  • ஏனைய பலரும் பாட்டி கதை சொல்வது போலவும், பத்திரிகைக்குச் செய்திகள் போலவும் கதையாடல் பண்ணுகிறார்கள்.
  • மொழியை வசப்படுத்தி கருத்தை மறைபொருளாக்கி, படைப்பை செதுக்கித் தரும் ஆற்றலை எம் எழுத்தாளர்கள் வளர்க்க வேண்டும்.

அப்பொழுதுதான் எங்கள் கதைக் குருவிகளுக்கு வானமும் வையகமும் ஒன்றுசேர வசப்படும்.

0.0.0.0.0.0.0.0

நோக்கிய ஆக்கங்கள்
  1. முகங்கள் சிறுகதைத்த தொகுப்பு- ஜீவகுமாரன்
  2. சுதந்திரன் சிறுகதைகள்- செங்கை ஆழியான்
  3. நெல்லிமரப் பள்ளிக்கூடம் நந்தினி சேவியர்
  4. திறனாய்வின் புதிய திசைகள் மு.பொ
  5. ஈழத்து முற்போக்குச் சிறுகதைகள்
  6. கடலும் கரையும் மு.பொன்னம்பலம்
  7. மல்லிகை இதழ்கள்
  8. ஈழத்து இலக்கிய செல்நெறியில் முற்போக்குச் சிறுகதைகளின் சுவடுகள் லெனின் மதிவாணம்
  9. ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி கலாநிதி செ.யோகராசா
  10. ஈழத்துச் சிறுகதைகள் எனது பார்வை முல்லை அமுதன்
  11. ‘யாதுமாகி’ தொகுப்பிற்கான க.குணேஸ்வரனின் விமர்சனம் இணையத்தில்
நா.சோமகாந்தன் நினைவுப்பரவல் நிகழ்வில் நான் வாசித்த கட்டுரை.

மறந்து போகாத சில வலைப்பூவில் வெளியான கட்டுரை

எம்.கே.முருகானந்தன்

Read Full Post »