Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மே, 2013

வெளிநாடுகளிலிருந்து தாய் நாட்டிற்கு வருபவர்கள் பலரை இப்பொழுதெல்லாம் மருத்துவ ஆலோசனை மனையில் அடிக்கடி சந்திக்க நேர்கிறது. இவர்களில் சிலராவது கால் வீக்கத்துடன் வருவார்கள்.

10- 12 மணிநேர தொடர்ச்சியான வான் பயணத்தின் காரணமாகவே இவை பெரும்பாலும் ஏற்படுகிறது. வந்த கையோடு 10 மணித்தியால யாழ் பிரயாணம் சிலருக்கு இதை மோசாக்கி கால்களைப் பொத்தையாக்கி விடுகிறது.


இங்கிருப்பவர்கள் உலக உலா வருவதும் அதிகமாகிவிட்டது. இவர்களுக்கும் இதே பிரச்சனைதான்.

பெரும்பாலும் இது ஆபத்தான பிரச்சனை அல்ல. இருந்தபோதும் ஆழ்நாள குருதியுறைவினால் (Deep Vein thrombosis)ஏற்படக் கூடிய வீக்கம் சற்று ஆபத்தானது. அது பற்றி இங்கு அதிகம் பேசப் போவதில்லை. சாதாரண பிரயாண கால்வீக்கங்கள் பற்றிப் பார்க்கலாம்.

காரணங்கள் என்ன?

முக்கிய காரணம் செயற்படாது ஒரேயிடத்தில் உட்கார்ந்து இருப்பதுதான். கால்களை கீழே தொங்கிட்டபடி நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போது இரத்த நாளங்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை. காலின் கீழ்ப்பகுதிக்கு இறங்கிய இரத்தம், தசைகள் அசையாது இருப்பதால் மேலெழுவது குறைந்து தேங்கிவிடுகின்றன.

அத்துடன் உட்கார்ந்திருக்கும்போது கால்; தசைகள் இருக்கையில் அழுத்தப் படுவதால் உள்ளேயுள்ள நாளங்களில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் தேங்கியுள்ள இரத்தத்தில் உள்ள நீரானது இரத்தக் குழாய்களை விட்டு கசிந்து வெளியே பரவுகின்றன.

தவிர்ப்பது எப்படி?

 • இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிருங்கள். நீண்ட தூரப் பிரயாணங்களின் போது தொளப்பான ஆடைகனை அணிவது நல்லது. அவை கால்களை இறுகப் பிடித்து இரத்த ஓட்டத்தைத் தடுக்காதிருக்கும்.
 • சிலைபோல ஓரேயிடத்தில் உட்கார்ந்திருக்க வேண்டாம். இடையிடையே எழுந்து நடவுங்கள். விமானத்தின் உள்ளறையானது நடைப் பயிற்சிக்கான இடமல்ல என்பது உண்மைதான். இருந்தபோதும் ஓரிரு முறை முன்னும் பின்னும் நடந்து கால்களைச் சற்று இயக்குவதற்கு அந்த இடமே போதுமானதுதானே. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
 • உட்கார்ந்திருக்கும் போதும் சின்னச் சின்ன பயிற்சிகளை உங்கள் கால்களுக்குக் கொடுக்கலாமே. முழங்கால், பாதங்கள், விரல்கள் ஆகியவற்றை மடித்து நீட்டுவது மட்டுமே நடக்க முடியாத நேரங்களில் போதுமான பயிற்சியாக இருக்கும்.
 • காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருப்பதும், காலுக்குள் காலைக் கொளுவியிருப்பதும் கூடாது. இவை இரத்தக் குழாய்களை அழுத்தி இரத்த ஓட்டத்தைக் குறைக்கும்.
 • உருளைக் கிழங்குபோல போட்டது போட்டபடி ஆசனத்தில் அசையாது உட்கார்ந்திருந்து இருக்க வேண்டாம். உட்கார்ந்திருக்கும்போNது இடுப்பை நாரியை சற்று வளைத்து நிமிர்த்தி அசைவு கொடுங்கள்.
 • பிரயாணப் பொதிகளை அதற்கான இடங்களில் போட்டுவிடுங்கள். சீற்றில் வைக்க வேண்டாம். ஆவை சீற்றில் இருந்தால் உங்கள் உடலை ஆட்டி அசைத்து இயங்கப் பண்ணுவதற்கான இடம்போதாது. இதனால் உறுப்புகளில் அழுத்தம் ஏற்பட்டு இரத்த ஓட்டம் பாதிப்படையும்.
 • காலுறைகள் அழுத்திப் பிடிக்கும்படியாக இறுக்கமாகயிருத்தல் கூடாது. அவை கணுக்காலுக்கு மேலுள்ள பகுதியை இறுகப் பிடித்து இரத்த ஓட்டத்தைக் குறைத்துவிடும். இதனால் வீங்கச் செய்துவிடும்.
 • காலணிகளும் லேஸ் வைத்துக் கட்டுவதாக அல்லாது சுலபமாகக் கழற்றக் கூடியiவாயாக இருப்பது அவசியம். தேவையானபோது அனற்றிவிட்டு பயிற்சிகள் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.
 • முடியுமானால் காலுறையையும் கழற்றி வைத்துவிட்டு சற்று மசாஸ் பண்ணலாமே. மசாஸ் பண்ணுவது இரத்த ஓட்டத்தைத் தூண்டிக் கால்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.
 • போதிய நீர் அருந்துங்கள். பிரயாணத்திற்கு முதல் நாளிலிருந்தே கூடியளவு நீர் அருந்துவதால் நீரிழப்பு நிலையைத் தவிர்க்கலாம். ‘சீ வேண்டாம். தண்ணி கூடுதலாகக் குடித்தால் அடிக்கடி பாத்ரூம் போக வேணும். பிரயாணத்தின் போது கரைச்சல்’ எனச் சிலர் முணுமுணுப்பது காதில் விழுகிறது. உண்மையில் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கு அதுவும் ஒரு காரணம். சிறு கழிப்பதற்காகவேனும் எழுந்து நடப்பதால் கால்களுக்கு பயிற்சி கிட்டுகிறதே.
 • போதிய நீர் அருந்தாவிடில் குருதியின் நீர்த்தன்மை குறைந்து தடிப்படையும். இதுவும் குருதிச் சுற்றோட்டத்தைப் பாதிக்கும்.
 • அதே நேரம் மது அருந்துவது நல்லதல்ல. மது மயக்கத்தைக் கொண்டு வரும். எழுந்து நடக்கவிடாது தூக்கத்தில் ஆழ்த்திவிடலாம். இதனால் உங்கள் நடமாட்டம் குறைந்துவிடும்.
 • பிரயாணத்திற்கு ஓரிரு நாட்கள் முதலே அதிக உப்பு உட்கொள்தைத் தவிருங்கள். குறைந்தளவு உப்பையே உபயோகியுங்கள். ஏனெனில் அதிக உப்பானது உடலில் நீரைத் தேங்கச் செய்யும். அதனால் கால்கள் வீங்கும்.

இவை தவிர

 1. ஆகாய விமானத்தின் உட்புறத்தே காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பதும்,
 2. அது வரட்சியான காற்றாக இருப்பதும்

குருதிச் சுற்றோட்டத்தைக் குறைத்து கால் வீக்கத்தைக் கொண்டுவரலாம் என்தும் உண்மையே.

அவதானிக்க வேண்டியவை

பொதுவாக பிராயணத்தின் பின்னான கால் வீக்கம் அத்துணை ஆபத்தானது அல்ல. ஒரிரு நாட்களில் குறைந்து விடும்.

ஆயினும்

 • கடுமையான கால் வீக்கம்
 • அதுவும் நீங்கள் வழமையான வாழ்க்கை முறைக்கும் திரும்பிய பின்னரும் தொடர்ந்திருந்தால்
 • அதிலும் முக்கியமாக ஒரு கால் மட்டும் வீங்கியிருப்பதுடன் வலியும் சேர்ந்திருந்தால்

அலட்சியப்படுத்தக் கூடாது. உடனடியாக அக்கறை எடுக்க வேண்டும்.

dvt (1)

ஏனெனில் அது ஆழ்நாள குருதியுறைவினால் (Deep Vein thrombosis) ஏற்பட்டதாக இருக்கக் கூடும். இது ஆபத்தானது உறைந்த குருதிக் கட்டி இரத்தக் குழாய்களில் அசைந்து சென்று நுரையீரலுக்கான இரத்தக் குழாயை அடைத்தால் சடுதியான உயிராபத்து ஏற்படலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்
0.0.0..00.0.0.0

Read Full Post »

‘எனக்கு நெஞ்சு வலிக்கிறது மாரடைப்பாக இருக்குமா? என ஒரு இளைஞன் அல்லது யுவதி உங்களிடம் கேட்டால் விடை என்னவாக இருக்கும்.

‘பீச்சல் பயந்தாங் கொள்ளியாக இருக்கிறான்’ எனச் சொல்லித் தட்டிக் கழித்துவிடுவீர்கள்.

Heart attack in Younger people

மாறாக ‘அக்கறையின்றி இருந்தால் உனக்கு கெதியிலை ஹார்ட் அட்டக் வந்து விடும்’ என மருத்துவர் ஒரு இள வயதினருக்கு சொன்னால் என்ன நடக்கும். ‘இவர் சும்மா வெருட்டுகிறார்’ எனச் சொல்லி மருத்துவரையே மாற்றிவிடக் கூடும்.

ஆனால் உண்மை என்ன? மாரடைப்பு வருவதற்கான மாற்றங்கள் இளவயதிலேயே தோன்றுகின்றன என்பதுதான்.

மாரடைப்பு எவ்வாறு?

மாரடைப்பு வருவதற்கு அடிப்படைக் காரணம் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதுதான். அவ்வாறு படிவதை மருத்துவத்தில் atherosclerosis என்கிறார்கள்.

 • தமிழில் இதைத் தமனித் தடிப்பு (தமிழ்நாட்டில்),
 • அல்லது நாடித் தடிப்பு (இலங்கையில்) எனலாம்.

காலக் கிரமத்தில் கொழுப்பு படிவது மோசமாகி இருதயத்திற்கு இரத்தத்தைப் பாச்சும் நாடிகளில் அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு வரும். மூளைக்கான இரத்தக் குழாய்களில் அவ்வாறு நடந்தால் பக்கவாதம் வரும்.

Atherosclerosis

அத்திவாரம் இளவயதிலேயே

இந்தக் கொழுப்புப் படிவது இள வயதிலேயே ஆரம்பித்துவிடுகிறது.

அண்மையில் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளிடையே ஒரு ஆய்வு செய்யப்பட்டபோது அவர்களது இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிந்திருப்பது தெளிவாகக் காணப்பட்டது.

முக்கியமான விடயம் என்னவென்றால் இவர்கள் நல்ல ஆரோக்கியமானவர்கள். குருதிக் குழாய்களில் கொழுப்புப் படிவதற்கான இடர்; காரணிகள் (Risk factors) எதுவும் இல்லாதவர்கள் ஆவார்.

அதாவது அவர்களுக்கு கீழ்காணும் ஆபத்தான அடிப்படை இடர்  காரணிகள் எதுவும் கிடையாது என்பதுதான்.

 • நீரிழிவு
 • உயர் இரத்த அழுத்தம்
 • புகைத்தல் பழக்கம்
 • இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரிப்பு
 • பரம்பரையில் இளவயதிலேயே மாரமடைப்பு வருவது

நாடித் தடிப்பு ஏற்படுவதற்கான இடர் காரணிகள் என இதுவரை காலமும் நம்பியிருந்தவை எதுவும் இல்லாதபோதும் ஏன் அவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொலஸ்டரோல் படிந்தது?

காரணம் என்ன?

காரணம் இவர்களில் நலக்கேட்டிற்கான வேறு விடயங்கள் காரணிகளாக இருந்தன. இவைதான் நாடித் தடிப்பு ஏற்படுவதற்கான புதிய காரணிகள். அவை என்ன?

 • அவர்களின் வயிற்றறையின் சுற்றளவு அதிகமாக இருந்தது. வயிற்றில் உள்ள உள்ளுறுப்புகளில் கொழுப்பு அதிகமாகப் படிந்தமைதான் வயிறு பருத்ததற்குக் காரணமாகும்.
 • அதேபோல நெஞ்சறையின் உள்ளுறுப்புளிலும் கொழுப்புப் படியலாம்.

visceral Fat

இந்த ஆய்வு கனடாவின் Heart and Stroke Foundation னால் செய்யப்பட்டது.

யுத்தத்திலும், விபத்துகளிலும் இறந்த இளவயதினரிடையே செய்யப்பட்ட பரிசோதனைகளில் அவர்களில் 80 சதவிகிதமானோருக்கு நாடித் துடிப்பு இருந்ததை முன்பு ஓர் ஆய்வு சுட்டிக் காட்டியது. எனவே அவர்கள் வெளிப்படையாக ஆரோக்கியமானவர்களாக இருந்தபோதும் எதிர்காலத்தில் மாரடைப்பு வருவதற்கான அத்திவாரம் போடப்பட்டமை உறுதியாகியது.

ஆபத்தைக் கணிப்பது எப்படி?

ஒருவரின் ஆரோக்கியத்தை அறிவதற்காக உயரம் (Height)> எடை (Weight), உடற்திணிவுக் குறியீடு ஆகியவற்றை மட்டும் அளந்து பார்ப்பது போதுமானதல்ல என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. வயிற்றறையின் சுற்றளவை அளப்பது முக்கியமானது.

 • ஆண்களில் இது 102 செ.மி ஆகவும்,
 • பெண்களில் 88 செ.மி ஆகவும் இருக்க வேண்டும்.

abd circumferance

வயிற்றின் சுற்றளவை விட, வயிற்று சுற்றளவிற்கும், இடுப்புச் சுற்றளவிற்கும் இடையோயன சதவிகிதம் முக்கியமானது என நம்பப்படுகிறது.

 • இது பெண்களில் 0.8ற்று குறைவானவும்,
 • ஆண்களில் 0.9 க்குக் குறைவாகவும் இருக்க வேண்டும்.

செய்ய வேண்டியது என்ன?

எனவே இளவயதிருக்கான செய்தி என்ன?

‘எங்களுக்கு நல்ல உணவு கிடைக்க்pறது. நன்றாகச் சாப்பிடுகிறோம். களைப்புக் கிடையாது. உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. நாம் அதியுயர் மனிதர்கள்’ என்ற மாயையில் மூழ்கியிருக்காதீர்கள்.

How-to-lose-belly-fat-for-kids

எதிர்காலத்தில் பாரிய பிரச்சனைகளான மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் போன்றவை வருவதற்கான அடித்தளம் ஏற்கனவே உங்களுக்கும் போடப்பட்டிருக்கலாம்.

ஆயினும் காலம் கடந்துவிடவில்லை. உங்களுக்கு ஆபத்தைக் கொண்டுவரக் கூடிய இடர் காரணிகளைக் கண்டறிந்து அதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பருத்த வயிறு முக்கியமான பிரச்சனை என்பதை மறக்காதீர்கள்.

0204running

ஆரோக்கியமான உணவு முறை, தினசரி உடற் பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றத்தைக் கடைப்பிடியுங்கள்.
இவற்றைச் செய்ய வேண்டிய வயது எனக்கு ஆகவில்லை என ஒருபோதும் எண்ண வேண்டாம். இப்பொழுதே ஆரம்பியுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

ஆதாரம்:- Heart and Stroke Foundation of Canada, news release, Oct. 25, 2011

ஹாய்நலமா புளக்கில்  ஜனவரி 2012. ல் வெளியானது

0.0.0.0.0.0.0.0.0

Read Full Post »

‘அவரவரை அந்தந்த இடங்களில் வைக்க வேண்டும்’ என்பார்கள்.

 • தகுதி குணம் ஆகியவற்றைக் குறித்துச் சொல்லப்படும் கருத்து அது.
 • சாதி அகங்காரம் மிக்கவர்கள் அடிக்கடி உதிர்க்கும் அதிகார வார்த்தைகளும் அதுவே.
 • அதே போல அந்தந்தப் பொருளை அதற்கான இடங்களில் வைக்காததால் அம்மாவிடம் பேச்சு வாங்காத நபர்களும் இருக்க முடியாது.

anatomy_Undescended_Testicle

இதற்குக் காரணம் எந்த ஒரு பொருளும் அதற்கான இடத்தில் இருந்தால்தான் முழுமையான பயன் கிடைக்கும். தவறான இடத்தில் இருந்தால் பயனற்றுப் போவது மட்டுமின்றி, சில தருணங்களில் ஆபத்தாகவும் போகலாம்.

ஆண்களின் விதையும் அவ்வாறுதான் விதைப்பையினுள் இருக்க வேண்டும்

விதை விதைப்பையினுள் இருக்காது வேறெங்கு இருக்கும் எனச் சிலர் புருவத்தை உயர்த்தி, ஆச்சரியத்தோடு கேட்கக் கூடும்.

இறங்காத விதை

undecendedtesticle

குழந்தையானது தாயின் வயிற்றில் வளரும்போது விதைகள் அதனது வயிற்றுக்குள்ளேயே இருக்கும். பிறப்பதற்குச் சிலகாலம் முன்னராகவே விதைப்பையினுள் இறங்கும்.

பெரும்பாலான குழந்தைகள் பிறக்கும்போது விதைகள் ஏற்கனவே விதைப்பையினுள் இறங்கியிருக்கும்.

ஆயினும் சில குழந்தைகளில் அவ்வாறு இருப்பதில்லை. சில வேளைகளில் ஒன்று மட்டும் இறங்காது இருக்கலாம்.

ஒரு பக்கம் இறங்காத விதையின் படம்

சிலரில் இரண்டுமே இறங்கத் தவறியிருக்கும். அவ்வாறு இருந்தாலும் பொதுவாக எந்தவித மருத்துவமும் இன்றி 9 மாதமளவில் தானாகவே இறங்கிவிடும்.

இவ்வாறு விதை இறங்காதிருப்பது பெரும்பாலும் காலத்திற்கு முந்திப் பிறக்கும் குழந்தைகளிலேயே அதிகம் இருக்கிறது. குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் என்பார்கள். அத்தகைய குழந்தைகளில் 30 சதவிகிதம் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆயினும் நிறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளில் 3-4 சதவிகிதமானவர்களையும் பாதிப்பதுண்டு.

தானவே அக்காலத்திற்குள் இறங்கவில்லை எனில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

இறங்கி ஏறும் விதை

சில குழந்தைகளில் விதை இறங்கியிருப்பது அவதானிக்கப்பட்டிருக்கும். ஆனால் பின் ஒரு தடவை சோதித்துப் பார்க்கும்போது அதைக் கண்டுபிடிக்க முடியாதிருக்கும்.

இது ஆபத்தற்றது. சிறிய விதைகள், தசைகளின் இறுக்கத்தால் மறைந்து பின்பு வெளிவரும் இதனை retractile testes என்பார்கள்.

இத்தகைய விதைகளுக்கு சிகிச்சை செய்ய வேண்டியதில்லை. பொதுவாகப் பருவமடையும் போது விதைகள் பருமனடையும். வெளியே வரும்.

இறங்காத விதையை, காலியான விதைப் பை, மாயமான விதைகள், எனத் தமிழில் சொல்வது போலவே ஆங்கிலத்தில் Cryptorchidism, Monorchism போன்ற நாமங்களைச் சூடிக் கொள்வதும் உண்டு.

எத்தகைய பாதிப்புகள்
 • விதையானது வளர்ச்சியடைவதற்கு உகந்த சூழல் தேவை. விதைப்பை அதற்கு ஏற்றதாகும். மாறாக அது வயிற்றினுள் இருந்தால் உடலின் வெப்பம் அதன் வளர்ச்சியைப் பாதிக்கும். சரியான காலத்தில் இறங்காவிட்டால் எதிர்காலத்தில் விந்தணு உற்பத்தியாவது பாதிப்புற்று அவன் மலட்டுத்தன்மையை எய்தலாம்.
 • இறங்காத விதை எதிர்காலத்தில் கட்டியாக வளர்வதற்கான சாத்தியங்கள் அதிகமாகும். புற்றுநொயாக வளரக் கூடும்.
 • விதை முறுக்கு testicular torsion என்பது அவசர சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய ஒரு நிலையாகும். இறங்காத விதையில் இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
 • இறங்காத விதை உள்ள சில பையன்களுக்கு ஹெர்ணியா ஏற்படுவதுண்டு.
 • மற்றவர்களைப் போல தனது பையில் பொருள் இல்லையே என வளரும் குழந்தையின் மனத்தில் கவலையை ஏற்படுத்துவதுடன் மற்றவர்கள் முன் தான் அவமானப்படுவதாகவும் உணரலாம்.

சிகிச்சை

1758_1770_3

குழந்தைக்கு 6 மாதமாகும்போதும் இறங்காவிட்டால் மருத்துவரைக் காணுங்கள். அவர் பரிசோதித்து தேவையான ஆலோசனைகளை வழங்குவார்.

ஒரு வயதாகும்போதும் இறங்காவிட்டால் சிறு சத்திரசிச்சை மூலம் அதனைச் சரி செய்வார்கள். அதாவது உள்ளே இருக்கும் விதையை விதைப்பையினுள் கொண்டு வந்து சேர்ப்பர்.

இது சிறு சத்திரசிகிச்சையே. குழந்தைக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது.

குழந்தை வளர்ந்த பின்னர் எதிர்காலத்தில் அதற்கு

 1. மலட்டுத்தன்மை,
 2. இறங்காத விதையில் பிற்காலத்தில் புற்றுநோய் உண்டாதல்

போன்ற பாரிய சிக்கல்களைத் தடுப்பதற்கு இது அவசியம் என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

விதையை இறக்குவதற்கான சத்திரசிகிச்சையின் போது, மிக அரிதாக (5%) அங்கு விதை காண்படாதிருப்பதுண்டு. இயற்கையாகவே விதை அத்தகையவருக்கு வளர்ச்சியடையாததே காரணமாகும். இதை vanished or absent testis என்பார்கள். இவர்களுக்கு எதிர்காலத்தில் குழந்தை கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

Read Full Post »

கபாலம் வெடிக்குமாப் போல கிடக்கு என்று தலையைப் பிடித்துக் கொண்டுவருபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஒற்றைத் தலைவலி என்றும் மைகிரேன் என்று தாங்களே பெயர் சொல்லிக் கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். இருந்தபோதும் இவர்கள் எல்லோருமே உண்மையில் ஒற்றைத் தலைவலிக்காரர் அல்ல.

சாதாரண தலைவலியானது தடிமன், மூக்கடைப்பு, மனப்பதற்றம், காய்ச்சல் போன்ற பல நோய்களின்போது ஒரு அறிகுறியாக வெளிப்படுவதுண்டு.

ஆனால் ஒற்றைத் தலைவலி என்பது அவைபோன்ற வெறும் தலைவலியல்ல. மிகவும் தனித்துவமான ஒரு நோயாகும். அந்நோய் இல்லாத தருணங்களிலும் கூட அது பற்றிய எண்ணம் வந்தால் பதறவைக்கக் கூடிய கடுமையான நோயாகும். தான் செய்து கொண்டிருப்பது எவ்வளவு முக்கிய வேலையானாலும் அதைக் கைவிட்டுவிட்டு ஒதுங்குமளவிற்குத் தீவிரமானதாகும்.

வேறுபடுத்தும் அறிகுறிகள்

18146

இத் தலைவலியின் சில தனித்துவமான பண்புகள் ஏனைய தலைவலிகளிலிருந்து வேறுபடுத்த உதவுகின்றன.

 • தூங்க முடியாதபடி துடிதுடிக்க வைக்கும் மிகக் கடுமையான தலைவலி இது. படுவேகமாகக் குத்துவதுபோலவும், கூடிக்குறைந்து கொண்டிருப்பதுபோவும் தோன்றலாம்.
 • தலையின் ஒரு பக்கத்தில் மட்டுமே இது தாக்கும். பெரும்பாலனவர்களுக்கு தொடர்ந்து அதே பக்கத்திலியே தாக்கும்.
 • கண்ணின் உட்புறமாகவோ தலையின் பின்புறமாகவோ அன்றி கழுத்துப் பகுதியிலோ தாக்கக் கூடும்.
 • ஆரம்பிக்கும்போது மந்தமாக ஆரம்பித்து ஒரு சில நிமிடங்களிலோ சில மணிநேரத்திலோ தாங்கமுடியாதளவிற்கு அதிகரிக்கும்.
 • சில நிமிடங்களில் தணியாது. பொதுவாக 6மணிநேரம் முதல் இரண்டு நாட்கள் வரை கூட தொடரும்.
 • பார்வை தொடர்பான சில சடுதியான தாற்காலிக மாற்றங்கள் ஒற்றைத் தலைவலி வரப்போகிறது என்பதற்கு கட்டியம் கூறுவதுபோல வருவதுண்டு.

    பார்க்கும் போது வெற்றுப்புள்ளி அல்லது கருமையான புள்ளிகள்

    மங்கிய பார்வை

    கண் வலி

    நட்சத்திரங்கள் மின்னுவதுபோல அல்லது கோடுகள் வளைந்து வளைந்து செல்வதுபோல

 ஒரு குழாயினூடாக அல்லது சுரங்கத்தினூமாகப் பார்ப்பது போலிருத்தல்

 • இவற்றதை; தவிர திடீரெனக் குளிராக உணர்தல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு, சோர்வு களைப்பு, பசியின்மை, குமட்டல் வாந்தி, விறைப்புத்தன்மை, வியர்வை, ஒளிகளைப் பார்க்கக் கூச்சம், அல்லது ஒலிகளைப் பொறுக்க முடியாமை போன்ற அறிகுறிகளும் இருக்கக் கூடும்.

தலைவலி வருவதற்கு முன்னர் சிலருக்கு, கொட்டாவிவிடுவது, சிந்தனைத் தெளிவின்மை, குமட்டல் பேசும்போது சரியான வார்த்தைகளை கண்டுபிடிப்பதில் சிரமம் போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றுவதுண்டு.

headaches

சிலருக்கு தலைவலி நின்ற பின்னரும் கூட, மனம் சோர்சாக இருத்தல், சிந்தனை தெளிலாக இல்லாதிருத்தல், தூக்கக் கலக்கம போன்ற உணர்வு, கழுத்து வலி என அதன் பாதிப்பு ஓரிரு நாட்களுக்குத் தொடர்வதுண்டு.

யாருக்கு வரும்

பொதுவாக குழந்தைப் பருவத்திலும் முதமையிலும் வருவது குறைவு. 10 முதல் 45 வயதிற்கு இடைப்பட்ட காலத்திலேயே முதன்மதலில் தோன்றுவதுண்டு.

பொதுவாக ஆண்களைவிடப் பெண்களுக்கே அதிகமாக வருவதுண்டு.

ஒற்றைத் தலைவலி உள்ள பெண்களுக்கு அவர்கள் கர்ப்பிணியாக இருக்கும் காலங்களில் குறைவாகவே வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் பலருக்கு வருவதும் உண்டு.

தூண்டும் காரணங்கள் எவை?

மூளைக் கலங்களின் வழமைக்கு மாறான செயற்பாடுகளால்தான் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது என நம்பப்படுகிறது. அதனால் நரம்பு பாதையிலும் மற்றும் இரசாயன மாற்றங்களாலும் இரத்தக் குழாய்களும் தசைநார்களும் இறுக்கமடைவதே தலைவலியை ஏற்படுத்துகிறது.

Migraine-Triggers

இவ்வாவறு நிகழ்வதை பல விடயங்கள் தூண்டுகின்றன. ஒருவருக்கு எந்தெந்த விடயங்கள் தலைவலயைத் தூண்டுகின்றன என்பதை கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பதன் கூலம் தலைவலி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

 • மனஅழுத்தம், பதகளிப்பு நோய், மனஅமைதியைக் குலைக்கும் சம்பவங்கள்.
 • சில வகை மணங்களும் வாசனைத் திரவியங்களும்,
 • உரத்த சத்தங்கள், பிரகாசமான ஒளி உதாரணமாக கடும் வெயிலில் அலைவது,
 • மதுபானம், புகைத்தல் போன்றவை
 • பெண்களின் மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்கள், கருத்தடை மாத்திரைகள்.
 • வழமையான தூக்க வழக்கங்களில் மாற்றஙகள், தூக்கக் குறைபாடு,
 • காலம் தவறிய உணவு, கடுமையான உடற்பயிற்சி
 • சில வகை உணவுகள்

* பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஊறுகாய் போன்ற புளித்த உணவுகள், மோனோசோடியம் குளுட்டாமேட் (MSG) கொண்ட உணவுகள்

* பேக் பண்ணப்பட்ட உணவுகள், சாக்லேட், விதைகள், கொட்டைகள், வேர்க்கடலை வெண்ணெய்,

* Tyramine கலந்த சிவப்பு ஒயின், நாட்பட்ட சீஸ், மீன், கோழி, ஈரல், போன்றவை

* அவகாடோ, வாழை, ஓரென்ஞ், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள்

* வெண்காயம் சிலரில்

 சிகிச்சை

 • நீங்கள் ஓற்றைத் தலைவலி நோயாளியானால், அதைத் தூண்டும் காரணிகளை அனுபவத்தின் மூலம் கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் நோய் தோன்றுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
 • தலைவலி வந்துவிட்டால் சப்தற்ற அமைதியான இடத்தில் ஆறுதல் எடுங்கள். ஒளி குறைவான அல்லது இருண்ட அறை உசிதமானது.
 • முடியுமானால் சற்று நேரம் தூங்குங்கள்.
 • கடுமையான தலைவலியானால் டிஸ்பிரின் போன்ற கரையக் கூடிய அஸ்பிரின் மாத்திரைகளில் இரண்டைக் கரைத்துக் குடியுங்கள். சிலர் இபூபுருவன் 400 மிகி மாத்திரை ஒன்றை உட்கொள்வதுண்டு.
 • வாந்தியும் கலந்திருந்தால் டொம்பெரிடோன் 10மிகி மாத்திரைகளில் இரண்டு அல்லது புரொமெதசீன் 25மிகி மாத்திரையில் ஒன்று விழுங்கலாம்.
 • மிக அடிக்கடி தலைவலி வருவதாயிருந்தால் அதைத் தடுப்பதற்கு சில மாதங்களுக்கு தினசரி தடுப்பு மாத்திரைகள் உண்ண நேரலாம். அது மருத்து ஆலோசனையுடன் அவரது வழிகாட்டலில் மட்டும் செய்ய வேண்டியதாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

 MBBS(Cey), DFM (Col), MCGP (col)

 குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0.0

Read Full Post »

சீழ்கட்டிகளோடு பலரை அண்மையில் பார்க்க நேர்ந்தது. இது ஆச்சரியமான விடயமல்ல. கொழுத்தும் வெயில் காலத்தில் இவை அதிகமாக ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்தான்.

யாருக்கு எங்கே?


இது யாருக்கும் ஏற்படக் கூடிய நோய். என்றாலும் கூட உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை நலிவடையைச் செய்யச் செய்யும்

 • நீரிழிவு, சிறுநீரக நோய்கள் உள்ளவர்களுக்கு வரக் கூடிய சாத்தியம் மிக அதிகமாகும்.
 • பிரட்னிசலோன் மற்றும் புற்றுநோய்க்கான மருந்துகள் சாப்பிடுவோரிலும் வரக் கூடும்.
 • சுகாதாரத்தை நன்கு பேணினால் சீழ்கட்டிகள் தோன்றுவதற்கான வாய்ப்பு குறைவாகும்.

சீழ்கட்டிகள் என்பது ஆபத்தான நோயல்ல என்ற போதும் வேதனை அளிக்கின்றவையாக இருக்கின்றன.

சருமத்தில் உள்ள முடி வேர்களில் கிருமித் தொற்று ஏற்படுவதால் இவை உண்டாகின்றன. சொறிவது உராய்வது போன்றவற்றால் சழுமத்தில் ஏற்படக் கூடிய நுண்ணிய காயங்களுடாக கிருமிகள் சருமத்தைத் தாண்டி உள்ளே ஊடுருப் பெருகுவதால் கட்டிகள் ஏற்படுகின்றன.

பொதுவாக முகம், கழுத்து, அக்குள், முதுகு, தொடை போன்ற இடங்களிலேயே இவை அதிகம் தோன்றுவதுண்டு. இருந்தாலும் வேறு முடி உள்ள வேறு இடங்களிலும் தோன்றலாம். காது, மூக்கு போன்ற நொய்த இடங்களில் தோன்றும் கட்டிகள் கடுமையான வேதனையைக் கொடுக்கும்.


எவ்வாறு இருக்கும்?

கட்டி தோன்றும்போது ஆரம்பத்தில் சற்று வலி இருக்கும், தடவினால் வீக்கம் இருப்பதாக உணர்வீர்கள். உற்று நோக்கினால் அவ்விடம் சற்றுச் சிவந்து தடித்திருப்பதாகத் தென்படும். நாட்கள் செல்ல வீக்கம் அதிகரிக்கும். பின்பு கடினமமாக இருந்த வீக்கம் சற்று மெதுமையாகி தொள தொளவென மாறும். உள்ளே கட்டி கரைந்து சீழ் தோன்றியிருக்கும். சீழ் அதிகரிக்க வலியும் அதிகரிக்கும்.

கட்டிகளின் அளவுகளில் வித்தியாசங்கள் இருக்கும். கச்சான் கொட்டை அளவு முதல் டெனிஸ் பந்தளளவு அல்லது அதனிலும் பெரிதாகவும் வீங்கலாம். கட்டி பழுக்க ஆரம்பிக்கும்போது அதன் மத்தியில் சற்று மஞ்சள் நிறமாக மாற்றமுறும். இதனை மருத்துவத்தில் Pரளவரடந  என்பார்கள்.
சில அருகருகாக பல கட்டிகள் தோன்றும்போது ஒன்றுடன் மற்றது இணைந்து பெரிதாக மாறக் கூடும்.

வலி அதிகமாகி வீக்கமும் அதிகரிக்கிறது எனில் நீங்கள் மருத்துவரை நாட நேரிடலாம். ஆனால் சில கட்டிகள் தானாகவே உடைந்து சீழ் வெளியேற வலி தணிந்துவிடும். உடைந்து சீழ் வெளியேறிய பின்னரும் சில நாட்களுக்கு அதிலிருந்து கசிவு ஏற்படக் கூடும். அவ்வாறு கசிவதனால் அவ்விடத்தில் அயறு உசரளவ  போலக் காய்ந்து படிவதுண்டு.

சீழ்கட்டிகள் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல கிருமியின் தாக்கத்தால் ஏற்படுவதாகும். கிருமித் தொற்றுக் காரணமாக உடலில் அலுப்பு வேதனை ஏற்டலாம். சில நேரங்களில் காய்ச்சலும் தோன்றக் கூடும். சிலருக்கு அது தோன்றுவதற்கு முன்னர் அவ்விடச் சருமத்தில் சற்று அரிப்பு ஏற்படுவதுண்டு.
நீங்கள் செய்யக் கூடியது எவை?

சிறிய வேதனை அதிகமற்ற கட்டி எனில் உடடியாக மருத்துவரை நாட வேண்டியதில்லை. அது தானாகவே உடைந்து சீழ் வெளியேறிய பின்னர் குணமாகும்.

சுத்தமான துணியை சுடுநீரில் நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம். ஒரு நாளில் பலதடவைகள் செய்ய வேண்டும். இது வேதனையைத் தணிக்க உதவும். அத்துடன் கிருமி பெருகுவதையும் குறைக்கும்.

கைகளால் அழுத்தியோ அல்லது பிளெட் போன்ற கூரிய ஆயதங்களால் வெட்டியோ சீழை நீங்களாக அகற்ற முற்பட வேண்டாம். சீழ் அகலுவதற்குப் பதிலாக கிருமிகள் பரவி நோயை தீவிரப்படுத்தலாம்.

கட்டி தானாக உடைத்துவிட்டால் தொடர்ந்தும் சுடுநீர் ஒத்தடம் கொடுத்து அழுக்குகள் முழுமையாக வெளியேற உதவுங்கள். சீழ் வடிந்து கொண்டிருந்தால் அந்த இடத்தை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.
அந்த இடத்தை நீங்கள் தொட்டால் சுத்தமாக நன்கு கை கழுவிய வேண்டும்.

அதேபோல நோயாளி உபயோகித்த, துணி. டவல், படுக்கை விரிப்புகள் போன்றவற்றை மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது. அவர் உபயோகித்த துணிமணிகளை நன்கு கழுவி உலர்ந்த பின்னரே மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது. அவற்றை சுடுநீரில் கழுவுவதும் சிறந்தது.

புண்ணிற்கு மேல் போடும் மருந்துக் கட்டுகளை அகற்றிய பின் அவற்றை வெளியிடங்களில் வீச வேண்டாம். அதிலிருக்கும் கிருமிகள் பலவேறு விதமான நோய்களைப் பரப்பும். காற்றுப் புகாதவாறு பையில் கட்டி தனியாக அகற்றவும்.

சிலர் கட்டி தோன்றினால் அல்லது அது உடைத்தால் நீர் படக் கூடாது என எண்ணி கழுவக் குளிக்காமல் இருப்பார்கள். இது மிகவும் தவறானது. சுகாதாரம் பேணப்பட வேண்டும். எனவே கிருமி அகல்வதற்கு நன்கு குளிப்பது கழுவுவது அவசியமாகும்.

மருத்துவரிடம் செல்ல நேரிட்டால்

ஏற்கனவே குறிப்பட்ட முறைகளில் பேணியும் நோய் தீராவிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டும். அவ்விடத்தை மரக்கச் செய்து சிறுசத்திர சிகிச்சை மூலம் சீழை அகற்றுவார்.

ஆனால் அவ்வாறு செய்வதற்குக் காலம் கனிய வேண்டும். கட்டு கடுமையான வலியைக் கொடுத்தாலும் இறுகிய கட்டியாக இருக்கும்போது கீறுவதில் பயனில்லை. அது பழுத்து நொய்து வந்த பின்னர்தான் மருத்துவர் மேற் கூறியவாறு கீறி சீழை அகற்றுவார்.

ஆன்ரிபயரிக் மருந்துகள் இவற்றைக் குணமாக்க பெரிதும் உதவமாட்டா. கட்டியைச் சுற்றியுள்ள சருமத்திலும் கிருமி பரவியிருந்தால், அது பரவாதிருக்க அவை உதவும்.


அக்குள் கட்டு

அக்குளில் தோன்றும் கட்டு சற்று வித்தியாசமானது. இங்கு ரோமம் அவர்த்தியாக இருப்பதால் பல சிறு சிறு கட்டிகள் இணைந்திருப்பதுண்டு. இதற்கு வாயில் நுழைய சிக்கல்ப்படும் பெயர் இருக்கிறது.

Hidradentis Suppurativa என்பார்கள். அதற்கு பெரும்பாலும் கைவைத்தியம் உதவாது.  சுத்திரசிகிச்சை தேவைப்படும். அத்துடன் நீண்ட நாட்களுக்கு அன்ரிபயோரிக் கொடுக்க நேரிடும். அதனை பூச்சு மருந்தாகவோ உட்கொள்ளும் மருந்தாகவோ கொடுக்க நேரிடும்.

குண்டிக் கட்டு

குண்டித் தசைகளுக்கு இடையே முள்ளந்தண்டு முடிவடையும் இடமருகே ஒருவகைக் கட்டு (Pilonidal Cyst) தோன்றுவதுண்டு.

போதுவாக நீண்ட பிரயாணங்களுக்குப் பின் தோன்றலாம். கடும் வலியுடன் உட்கார முடியாதிருக்கும். இதற்கும் சத்திர சிகிச்சை தேவைப்படும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

சென்ற ஜீன் வருடம் (2012) மாதம் எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

சீழ்க் கட்டிகள் – வெயில் கால நோய்

0.0.0.0.0.0.0

Read Full Post »

நாய் வளர்ப்பது நல்லதாம்.

அன்பு காட்ட ஒரு உயிர் என்பதற்காக அல்ல.
வீட்டைக் காவல் புரியும் என்பதற்காகவும் அல்ல.
உங்கள் இருதயத்தை நல்ல நிலையில் பேண என்கிறார்கள்.

நாயை உலாவக் கொண்டு போகும்போது உங்களுக்கும் ஒரு பயிற்சி கிட்டும் அல்லவா?

A02JAA
எனவே நாய் வளர்ப்போம்.
இருதயம் காப்போம்.
பக்கவாதத்தை நெருங்கவிடோம்

தினமும் நாயைக் கட்டிப் போடாமல் அதை உலாவிற்கு அழைத்துச் செல்லுங்கள்.

நடைபபயிற்சி இலவச இணைப்பாகக் கிடைக்கும்.

0.0.0..0.0.0

Read Full Post »

நீரிழிவு தவறான எண்ணங்களும் மேற்கொண்டு செய்ய வேண்டியவையும்

19916

தவறான எண்ணங்கள்

நீரிழிவு நோயின் அறிகுறிகள் பற்றி பலரும் தவறான கருத்துக்களைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது

 • எனக்குப் புண்கள் விரைவாக ஆறிவிடுகின்றது
 • எனக்குத் தண்ணீர் விடாய் இல்லை.
 • எனக்கு அடிக்கடி சிறுநீர் போவதில்லை.
 • எனக்குத் தலைச்சுற்றுக் கிடையாது
 • எனக்கு களைப்புக் கிடையாது

எனவே எனக்கு நீரிழிவு இருக்காது எனப் பலரும் தாமாகவே முடிவு கட்டுகின்றனர்.

இது தவறான கருத்தாகும். நீரிழிவின் ஆரம்ப நிலையில் பெரும்பாலனவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை. ஆனால் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதற்கிடையிலேயே இருதயம், இரத்தக் குழாய்கள், நரம்புகள், மூளை போன்றவற்றில் தாக்கங்கள் ஆரம்பித்து விடுகின்றன. இவற்றினால்தான் பிற்காலத்தில் பக்கவாதம், மாரடைப்பு, கால் விறைப்பு, சிறுநீரகம் பழுதடைதல், மாறாத கால் புண்கள், கால்களை சத்திர சிகிச்சை மூலம் அகற்றல் போன்ற பாரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மறைந்திருக்கும் நோய்

இந் நோயின் மிக ஆபத்தான அம்சம் என்னவெனில் மிகப் பெருந்தொகையான மக்கள் தமக்கு நீரிழிவு இருப்பதை அறியாமல் இருக்கிறார்கள் என்பதுதான். சுமார் 50 சதவிகிதமானவர்கள் தமக்கு நீரிழிவு இருப்பதை அறியால் இருக்கிறார்கள் எனக் கணிப்பீடுகள் கூறுகின்றன. மிகத் தாமதமாக, அதுவும் தமக்கு அந் நோயின் பின் விளைவுகள் வந்த பின்னரே பெரும்பாலானவர்கள் தம்நோயைக் கண்டறிகின்றனர். இதற்குக் காரணம் நீரிழிவு நோய் பற்றிய மேற் கூறிய தவறான எண்ணங்களே.

Diagnosis-11
எனவே அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியும் வரை காத்திருப்பது மூடத்தனமானதாகும்.

 • இரத்தப் பரிசோதனை செய்வதன் மூலமே நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். பலவிதமான இரத்தப் பரிசோதனைகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனையுடன் தமக்கேற்றதைச் செய்து கொள்ளலாம்.
 • சிறுநீர்ப் பரிசோதனை செய்வது இந்நோயைக் கண்டறிவதற்கான நம்பிக்கையான முறையல்ல என்பதால் பெரும்பாலும் செய்யப்படுவதில்லை.

யாருக்கு இரத்தப் பரிசோதனை அவசியம்
மருத்துவர்கள் வேறு நோய்களுக்காக அவரிடம் செல்லும் போதும் பிரஸரை அளந்து பார்க்கிறார்கள். அதே போல தமக்கு சந்தேகம் உள்ள பலரையும் சீனிக்கான இரத்தப் பரிசோதனை செய்யும்படி வேண்டுகின்றனர். இவ்வாறு இரத்தத்தில் சீனிப் பரிசோதனை செய்வது பல காரணங்களுக்காக இருக்கக் கூடும்.

மருத்துவரிடம் செல்லாதபோதும், உங்கள் இரத்தத்தில் சீனியின் அளவு சரியாக இருக்கிறதா, அதிகரித்திருகிறதா என அறியப் பரிசோதனை செய்ய வேண்டும் முக்கியமான கீழ்க் கண்டுள்ளவர்கள் குருதியில் தமது சீனியின் அளவைச் செய்தறிவது அவசியமாகும்.

 • பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டும்.
 • கொழுத்த உடல்வாகு உள்ளவர்களும் கட்டாயம் செய்ய வேண்டும். எடையானது உயரத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இதை உடற் திணிவு அலகு குறிப்பிடுவார்கள். ஆங்கிலத்தில் Body Mass index (BMI) ஆகும். இது இலங்கை போன்ற தெற்காசிய நாட்டவர்களுக்கு 23ற்குள் இருக்க வேண்டும். 25 மேற்பட்டவர்கள் செய்து கொள்வது விரும்பத்தக்கது.
 • தொந்தியான வயிறுள்ளவர்களும் செய்ய வேண்டும்.
 • தமது குடும்பதில் நீரிழிவு உள்ளவர்கள். பெற்றோர், சகோதரர்கள் போன்றவரிடையே நீரிழிவு உள்ளவர்களுக்கு அது வருவதற்கான சாத்தியம் அதிகம். எனவே அவர்களுக்கும் அவசியமாகும்.
 • உடல் உழைப்பற்ற, வாழ்க்கை முறையுள்ளவர்கள்

உலகளாவிய ரீதியில் பாதிப்பு அதிகமுள்ள நோய்

இன்றைய கால கட்டத்தில் நீரிழிவு நோயின் பாதிப்பு மிக அதிகமாக இருப்பது மாத்திரமின்றி வேகமாக அதிகரித்தும் வருகிறது. உலகளாவிய ரீதியில் 350 மில்லியன் மக்கள் இந்நோயால் பீடிக்கபட்டிருக்கின்றனர்.

இந்நோயின் பாதிப்பால் மரணத்துக்கு ஆளாபவர்கள் தொகை பயமுறுத்துவதாக இருக்கிறது. 2004 ம் ஆண்டு கிடைத்த தகவல்களின் பிரகாரம் சுமார் 3.5 மில்லியன் மக்கள் இந்நோயின் தாக்கத்தால் மரணத்தைத் தழுவினர். 8 வருடங்கள் கழிந்த நிலையில் இன்று அது இரு மடங்காக அதிகரித்து இருக்கலாம்.

இலங்கையில் இருபது வயதிற்கு மேற்பட்டவர்களை எடுத்துக் கொண்டால் பத்து சதவிகிதத்தினர் (10.3%)    இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. நகர்ப்புற மக்கள், கிராமப் புற மக்கள் என வேறுபாடின்றி அனைவரையும் பாதித்து வருகின்ற போதும் நகர்பபுறத்தில்

16.4% சதவிகிதமாக இருக்கின்ற அதே நேரம் கிராமப்புறங்களில்

8.7% சதவிகதமாக இருக்கிறது.  நகரப்புற மக்களில் சற்று அதிகமாக இருப்பற்குக் காரணம்; அவர்களது வாழ்க்கை முறைகள்தான்.

நீரிழிவு ஏன் அதிகமானவர்களைப் பாதிக்கிறது

9273_14928_5

 • போதிய உடலுழைப்பில் ஈடுபட முடியாமல் இருப்பதும்
 • தவறான உணவு முறைகளும்
 • கடைகளில் விற்கும் திடீர் உணவுகளை (Fast Foods)அதிகளில் உண்பதும் முக்கிய காரணங்களாகும்.

எண்ணெயில் பொரித்ததும், அதிகளவு மாச்சத்து, இனிப்புச் சத்து, உப்பு ஆகியன கொண்ட அத்தகைய குப்பை உணவுகளாவன

 • நீரிழிவு நோயை மட்டுமின்றி கொலஸ்டரோல்,
 • பிரஷர்,
 • பக்கவாதம்,
 • மாரடைப்பு போன்ற இருதய நோய்கள்,
 • சிறுநீரக செயலிழப்பு,
 • புற்றுநோய்

போன்ற பலவற்றையும் கொண்டு வருகின்றன என்பதை நாம் உணர வேண்டும்.

இன்று கிராமப் புற மக்களின் உணவு முறைகளிலும் இத்தகைய தவறான உணவுப் பழக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் அவர்களிலும் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிக்கும் சாத்தியம் அதிகரிக்கிறது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை யாவரும் கடைப்பிடிப்பது அவசியம்.

நீரிழிவாளரின் உணவு

நீரிழிவாளர்கள் எத்தகைய உணவை உண்ண வேண்டும்? எவ்வளவு உண்ண வேண்டும்? இவைதான் நீரிழிவாளவர்கள் அறிய விரும்புகிற முக்கிய விடயமாக இருக்கிறது. ஆனால் இன்றைய நிலையில் நீரிழிவாளர்களுக்கு எனத் தனியான உணவுத் திட்டம் என எதுவுமே கிடையாது எனச் சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படவீர்கள். ஆனால் அதுதான் உண்மை.

காலாவதியான கருத்து

‘நீரிழிவாளர்கள் சீனி சேர்க்கக் கூடாது. சோறைத் தவிர்க்க வேண்டும். அரிசி கோதுமை ஆகிய மாப் பொருள்களால் செய்யப்படும் இடியப்பம், பிட்டு, இப்பம், நூடில்ஸ் போன்ற சிற்றுண்டிகளை குறைந்தளவே உண்ண வேண்டும்’ என்பதே பெரும்பாலான நோயாளர்களின் எண்ணமாக இருக்கிறது.

பல மருந்துவர்களும் இதையே நோயாளர்களுக்கு ஆலோசனையாகக் கூறுகிறார்கள்.

தற்போதைய கருத்து

இப்பொழுது உலகளாவிய ரீதியில் மருத்துவர்களாலும், உலக சுகாதார ஸ்தாபனம் போன்றவற்றாலும் சிபார்சு செய்யப்படும் உணவுமுறை என்ன சொல்கிறது?

 • கொழுப்பு, சீனி, உப்பு ஆகியன குறைந்தளவும்.
 • பழங்களும் காய்கறிகளும் அதிகம் கொண்டதுமான
 • ஆரோக்கியமான சமவலுவுள்ள (Balanced)உணவையே ஆகும்.
 • எதையும் முற்றாகத் தவிர்க்கச் சொல்லவில்லை என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.

எதையும் முற்றாகத் தவிர்க்கச் சொல்லவில்லை என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.

கொழுப்பு என்றால் என்ன? எண்ணெய், பட்டர், மார்ஜரின் போன்ற அனைத்துக் பொருள்களும், அவை சார்ந்த உணவுகளாகும். சீனி கூடத் தவிர்க்கப்படவேண்டும் என்று சொல்லப்படவில்லை. ஆனால் அவற்றை உணர்வுபூர்வமாக அணுகாது, புத்திபூர்வமாக அளவோடு உணவில் சேர்க்கலாம்.

பொதுவான ஏனைய ஆலோசனைகள் என்ன?

 • உணவில் மாப்பொருள் உணவு பெரும்பகுதியாக இருக்க வேண்டும். மாப்பொருள் உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது கிளைசீமிக் இன்டெக்ஸ் (Low GI) குறைவான உணவுகள் முக்கிய இடம் பெறுவது நல்லது. கிளைசீமிக் இன்டெக்ஸ் என்பது குறிப்பிட்டளவு ஒரு உணவை தனியாக உண்ணும்போது சீனியின் அளவு எவ்வளவு அதிகரிக்கிறது என்பதை பற்றிய ஒரு கணக்கீடு ஆகும்.
 • கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமுள்ள உணவுவகைளைத் தவிர்க்கவும். அதிலும் முக்கியமாக பிரதான உணவுகளுக்கு இடையேயான குறுந்தினிகளுக்கு தவிர்ப்து நல்லது. அவற்றிற்குப் பதிலாக ஒரு பழம் சாப்பிடலாமே.
 • காலை உணவை ஒருபோதும் தவிர்க்க வேண்டாம்.
 • உணவுகளை வேளைக்கு வேளை சாப்பிட வேண்டும். உணவுகளைத் தப்ப விடுவது கூடாது. விரதம் இருப்பது கூடாது.
 • எண்ணெய், நெய், பட்டர், மார்ஜரின் போன்றவற்றை உண்பதில் அவதானம் தேவை. ஹைரஸன் ஏற்றப்பட்ட மார்ஜரின் வகைகள் கூடாது. ஒலிவ் ஓயில், சூரியகாந்தி எண்ணெய், சோள எண்ணெய், நல்லெண்ணய் போன்றவை நல்லது, ஆயினும் தேங்காய் எண்ணெய், பாம் எண்ணெய் தவிர்க்பட்ட வேண்டியது அல்ல. அளவோடு உண்ணலாம்.
 • ஒரு முறை பொரித்த எண்ணெயை வீசிவிட வேண்டும். மீண்டும் மீண்டும் அதே எண்ணெயை உபயேபகிக்கக் கூடாது.
 • பால் அருந்தும்போது கொழுப்பு குறைந்த அளவுள்ள பாலைத் தேர்ந்தெடுங்கள். யோகர்ட் போன்றவற்றை உண்ணும்போதும் அவ்வாறே குறைந்த கொழுப்புள்ளதையே தேர்ந்தெடுக்கவும்.
 • பொரித்த, பேக் பண்ணப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்.
 • துரித உணவுகளைத் (Fast food) தவிருங்கள். கட்லட், ரோல்ஸ், பிட்ஸா, சமோசா, ஹம்பேகர், பிரன்ஸ் ப்ரை, பிஸ்கற், வடை, சூசியம்,  சொக்லற் கேக், வனிலா கேக் போன்ற பலவும் அடங்கும்.
 • இறைச்சியைத் தேர்ந்தெடுக்கும்போது கொழுப்பு குறைந்தவற்றையே உண்ணுங்கள். ஆடு, மாடு, பன்றி போன்றவற்றிக்கு பதிலாக கோழி உண்ணலாம். அதிலும் கொழுப்புள்ள பகுதியை நீக்குங்கள்.
 • மதுபானம் அதிகம் கூடாது. இனிப்புள்ள மென் பானங்கள் கூடாது. ஆனால் போதிய நீராகாரம் எடுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0.0

Read Full Post »