Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூன், 2013

அடிக்கடி தலைவலிக்கும் குழந்தைகள்

உங்களது குழுந்தை தலைவலி என அடிக்கடி சொல்கிறதா. அல்லது தலைவலியால் அவதிப்படுகிறதாக நீங்கள் உணர்கிறீர்களா?

57158970_kids_377x171

பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் தலைவலி பற்றிய அதீத கற்பனைகளுடன் பயந்தடித்து ஓடி வருவது வழக்கம். அதேபோல வயிற்று வலி, கால் வலி என வருவதும் உண்டு. இவை பெரும்பாலும் ஆபத்தான நோய்களால் வருவதில்லை.

சின்ன சின்னப் பிரச்சனைகளே பிள்ளைகளுக்கு இத்தகைய அறிகுறிகளை ஏற்படுத்துவதுண்டு. ‘சாப்பிடு சாப்பிடு’ என நச்சரிப்பதாலேயே பல பிள்ளைகள் வயிற்று வலி என்று சொல்லித் தப்பிக்க முயல்கின்றன. ‘படி படி’ என விடாப்பிடியாக மேசையில் உட்கார வைப்பதாலும் பிள்ளைகளுக்கு தலைவலி ஏற்பட்டுவிடலாம்.

தலைவலியைப் பொறுத்த வரையில், பொதுவாக  பெரியவர்களை விட குறைவாகவே குழந்தைகளுக்கு வருகிறது. அடிக்கடி வருவதும் இல்லை. வந்தாலும் கடுமையாக இருப்பதில்லை.

தலைவலி வந்தாலும் பெரும்பாலும் மந்தமானதாகவே இருக்கும். இருந்தபோதும் சில குழந்தைகளுக்கு கடுமையான துடிக்க வைக்கும் தலைவலி வரவும் கூடும்.

தலைவலி இருக்கிறதா என அடிக்கடி பெற்றோர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாலும் காரணமின்றியும் வந்துவிடும். கேட்டு அறிவதைவிட குழந்தைகளின் நடத்தையை அவதானித்து அவர்களுக்கு நோயிருக்கிறதா என்பதை அறிபவர்களே சிறந்த பெற்றோராக இருப்பார்கள்.

குழந்தைகளுக்கு தலைவலி வருவதற்கான காரணங்கள் என்ன?
Nemoursஅறக்கட்டளையானது குழந்தைகளுக்கு தலைவலி தூண்டப்படுவதற்கு பின் வரும் பொதுவான காரணிகளைக் குறிப்பிடுகிறது.

  • போதுமான தூக்கம் இல்லாமை, அல்லது வழமையான தூங்கும் வழக்கங்களில் திடீரென மாற்றம் ஏற்படுவது ஒரு காரணமாகும். நேரங்கடந்து தூங்கச் செல்வது அல்லது இடையில் முழித்து எழ நேரல், வழமையான நேரத்திற்கு முன்னரே எழ நேருதல்.
  • சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமை, பசியோடு இருத்தல், போதிய நீராகாரம் இன்றி உடல் நா உலர்தல் போன்றவையும் தலைவலியைத் தூண்டலாம்.
  • ஏதாவது மன அழுத்தங்களும் காரணமாகலாம்.
  • நீண்ட நேரமாக கணனியாடு இருத்தல் அல்லது தொலைக்காட்சி பார்ப்பதும் வேறு காரணங்களாகும்.
  • தலையில் லேசாக அடிபடுதல், காயம் ஏற்படுதல் ஆகியவையும் தலைவலியைக் கொண்டு வரலாம்.
  • தடிமன், காய்ச்சல், டொன்சிலைடிஸ், சீழ்ப்பிடித்த புண் போன்ற சாதாரண தொற்று நோய்கள்.
  • கடுமையான மணங்களை நுகர நேர்ந்தாலும் ஏற்படலாம். வாசனைத் திரவியங்கள் (Pநசகரஅநள), பெயின்ட் மணம், சாம்பராணி மணம் போன்றவை சில உதாரணங்களாகும்.
  • குழந்தைகள் வளருகின்றன. இதன்போது அவர்கள் உடலில் பலவிதமான ஹோர்மோன் மாற்றங்கள் நேர்கின்றன. இவையும் தலைவலியைத் தோற்றலாம்.
  • காரில் நீண்ட நேரம் செல்ல நேரும்போதும் சில குழந்தைகளுக்கு தலைவலி ஏற்படுகிறது.
  • புகைத்தல். வீட்டில் தகப்பன், உறவினர்கள் புகைக்கக் கூடும். அல்லது பொது இடங்களில் யாராவது புகைக்கக் கூடும். இது தன்செயலின்றிப் புகைத்தலாகும். இதுவும் இன்னொரு காரணமாகும்.
  • கோப்பி, கொக்கோ போன்ற கபேன் கலந்த பானங்களை அருந்துவதும் தலைவலியை அவர்களில் ஏற்படுத்தவதாகச் சொல்லப்படுகிறது.
  • சில மருந்துகள் எடுப்பதும்

மூளைக்குள் கட்டி வளர்தல், உயிராபத்தான தொற்று நோய்களால் போன்றவற்றால் குழந்தைகளுக்கு தலையிடி வருவது குறைவு. எனவே எடுத்த எடுப்பில் கடுமையான நோய்களை நினைத்து மனத்தைக் குளப்பிக் கொள்ள வேண்டாம்.

மருத்துவரை நாட வேண்டியது எப்போது?

இருந்தபோதும் எத்தகைய  நிலையில் மருத்துவரை அணுக வேண்டும் எனத் தெரிந்திருப்பது நல்லது.

  • தலையில் கடுமையான அடிபடுதல், காயம் ஆகியவற்றைத் தொடர்ந்து தலைவலி ஏற்பட்டால்.
  • தலையிடி மிகக் கடுமையாக இருப்பதுடன் கீழ்க்கண்ட அறிகுறிகள் சேர்ந்திருந்தால்.

1.    வாந்தியெடுத்தல்
2.    பார்வையில் மாற்றம், இரண்டாகத் தெரிதல்
3.    கழுத்து உழைவு, கழுத்து விறைப்பு
4.    குழப்பமான மனநிலை
5.    சமநிலை பாதிப்பு
6.    கடுமையான காய்ச்சல்

  • தலையிடியானது குழந்தையின் தூக்கத்தைக் குழப்பமாக இருந்தால் அல்லது காலையில் கண்விழித்து எழும்போதே தலைவலி இருந்தால்.
  • 3 வயதாகும் முன்னரே அத்தகைய தலைவலி ஏற்பட்டால்

பொதுவான காரணத்தைக் கண்டறிந்து நீக்குவதிலேயே பெரும்பாலும் தவலவலித் தொல்லை குழந்தைக்கு நீங்கிவிடும்.
வைத்தியரை நாடி ஓடும் முன்னர் இவற்றைச் சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்
0.0.0.0.0.0.0

Read Full Post »

பாலியல், பாலுறவு, பாலியல் உணர்வுகள், பாலியல் செயற்பாடுகளில் திருப்தி மற்றும் திருப்தியின்மை போன்றவை எமது சமூகத்தில் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. நாலு பேர் மத்தியில் பேசுவதற்கு அசூசைப்படுகிறோம். தூஸணை வார்த்தைகள் போல  உச்சரிக்க சங்கோசப்படுகிறோம்.

 03-Old Age

பாலுணர்வானது உயிரினங்களின் வாழ்வின் தொடர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் இன்றிமையாத அம்சமாக விளங்குகிறது. இருந்தபோதும் அவற்றைப் பேசா மொழிகளால் மறுதலிக்கிறோம்.

அதிலும் முக்கியமாக வயது முதிர்ந்தவர்களின் பாலியல் உணர்வு பற்றிய எண்ணமே எமது சமூகத்தில் அறவே கிடையாது எனலாம். பாட்டா பாட்டியுடன் நெருங்கிப் பேசினால் கிழட்டு வயதில் செல்லம் கொஞ்சிறார் என நக்கல் அடிக்கிறோம்.

 Old-Age-Sex-White-Hair-Couple

அம்மப்பாவிற்கு தலையிடி என்பதால் ஆதூரத்துடன் நெற்றியைத் வருடிவிடும் அம்மம்மாவின் செயல் பிள்ளைகளுக்குச் சினமாக இருக்கிறது.

‘தேவார திருவாசகம் ஓதிக் கொண்டு அல்லது வேதமொழிகளைப் படித்துக் கொண்டு மூலையில் கிடக்க வேண்டிய ஜன்மங்கள் அவர்கள்’ போன்ற எண்ணமே மேலோங்கியிருக்கிறது.

ஆனால் மேலை நாடுகளில் முதியவர்களின் பாலியல் உணர்வுகள், ஈடுபாடுகள் பற்றிய ஆரோக்கியமான ஆய்வுகளும் விவாதங்களும் நடைபெறவே செய்கின்றன.

அப்படியான ஒரு ஆய்வு The University of California, San Diego School of Medicine and Veterans Affairs ல் நடைபெற்றது.

 cutekissloveoldromancefavimcom119034large_1

பாலியல் ரீதியான திருப்தியை அவர்களில் கண்டறிவதற்கானது இந்த ஆய்வு 806 வயோதிபப் பெண்களின் 40 வருட மருத்துவப் பதிவேடுகளை ஆதாரமாகக் கொண்டு செய்யப்பட்டது. அவர்களுடைய சராசரி வயது 67 ஆக இருந்தது. 63 சதவிகிதமானவர்களுக்கு மாதவிடாய் நின்று விட்டது.

ஆச்சரியப்பட வைக்கும் சில முடிவுகள்

அந்தக் கிழங்களில் பாலியல் பற்றிய ஆய்வா எனக் கேட்பவர்கள் மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படும்படியாக சில முடிவுகள் இருந்தன.

  • கணவன் பாலியல் ரீதியான ஆர்வமும்; செயற்திறனும் உள்ளவராயின், அவர்களில் 50 சதவிகிதமானவர்கள் கடந்த 4 வாரங்களிடையே உடலுறவு வைத்ததாகக் கூறினர்.
  • அவர்களில் 67 சதவிகிதமானவர்கள் உடலுறவின் உச்ச கட்டத்தை எட்டியதுடன் அதில் திருப்தியும் அடைந்தனர். கணவனின் விந்து வெளியேற்றம் தங்களது உச்சகட்டத்திற்கு முதலே நிகழ்ந்துவிடுகிறது என பெரும்பாலான இளம் பெண்கள் கவலைப்படும் இன்றைய நிலையில் 67 சதவிகிதமான முதிய பெண்கள் திருப்தியடைந்தமை ஆச்சரியப்பட வைத்தது.
  • அவ்வாறு திருப்தியடைபவர்கள் பலர் இருந்தபோதும் 40 சதவிகிதமான பெண்கள் தங்களுக்கு ஒருபோதும் பாலியல் ஆர்வம் இருக்கவில்லை என எதிர்மாறாகக் கூறினார்கள். மேலும் 20 சதவிகிதமான பெண்கள் தங்களுக்கு மிகக் குறைந்தளவே ஆர்வம் இருந்தது என்றார்கள்.
  • 80 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் 50 சதவிகிதமானவர்கள்; தங்களுக்கும் கூட அடிக்கடி பாலியல் உந்தல், உறுப்பில் ஈரலிப்புத்தன்மை,  உச்சகட்ட உணர்வு ஏற்பட்டதாகக் கூறினர். இருந்தபோதும் பாலியல் ஆர்வம் குறைவாகவே இருந்ததாகக் கூறினர்.

ஆனால் சாதாரண பெண்களில் பாலியல் ஆர்வமே உடலுறவிற்கு இட்டுச் செல்கிறது என்பதை நாம் அறிவோம். ஆர்வம் இல்லாதபோதும் இவர்கள் உடலுறவு கொள்வதற்கு காரணம் என்ன?

தனது கணவன் அல்லது பாலியல் பங்காளியுடனான உறவை உறுதிப்படுத்தவும் தொடருவதற்காகவுமே அவ்வாறு ஆர்வம் இல்லாதபோதும் கூட உறவு கொள்கிறார்கள் என ஆய்வாளர்கள் எண்ணினார்கள்.

  • பொதுவாக வயது முதிரும்போது பாலியல் திருப்தி ஏற்படுவது குறைவு என்றே நம்பப்படுகிறது. ஆனால் இந்த ஆய்வானது வயது முதிர முதிர பாலியல் திருப்தி அதிகம் ஏற்படுவதாகக் கூறுகிறது. அதிலும் 80 வயதிற்கு மேட்பட்டவர்களில் கிட்டதட்ட எப்பொழுதும் ஏற்படுவதாகக் கூறுகிறது.
  • மிக முக்கியமான விடயம் பாலியல் திருப்தியடைவதற்கு புணர்ச்சி எப்பொழுதும் அவசியமாக இருந்திருக்கவில்லை. தொடுகை, அன்பாகத் தட்டிக்கொடுத்தல், சரசலீலை, போன்ற எல்லாவித உள்ளார்ந்த நெருக்க நிலைகளும் திருப்தியை அவர்களுக்குக் கொடுத்தன.

இதிலிருந்து தெரிவதென்ன? உணர்வுரீதியான மற்றும் உடல் ரீதியான நெருக்கமானது பாலுறவின் உச்சநிலையை அனுபவிப்பதை விட முக்கியமானதாக இருக்கலாம்.

எனவே பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுகிறார்களா, செயற்பாட்டில் குறைபாடுகள் இருக்கின்றனவா போன்றவற்றை ஆராயும் அணுகுமுறைக்குப் பதிலாக அவர்களின் உளத் திருப்தி மையமாக கொண்ட அணுகுமுறையே அதிக நன்மை பயப்பதாக இருக்கலாம்.

மற்றொரு ஆய்வு

2007ல் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வும் வயதானவர்களின் பாலியல் செயற்பாடுகள் தொடர்வதை உறுதிப்படுத்தியது. 57 வயதிற்கும் 85 வயதிற்கும் இடைப்பட்ட 3000 வயோதிப அமெரிக்கப் பெண்களில் ¾ பங்கினர் ஏதாவது ஒரு வகை பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தியது.

பெண்களில் மட்டுமின்றி ஆண்களும் முதிரும்போது

  • உடல் உள ரீதியான பாலியல் ஆற்றாமைகள் அதிகரிக்கின்றன,
  • முன்னரைபோல அடிக்கடி ஈடுபட முடிவதில்லை
  • ஆயினும் பாலியல் உணர்வும் ஆர்வமும் குறைவதில்லை.
  • பாலியல் பங்காளி இன்னமும் உயிருடன் இருப்பதுடன், செயற்திறன் குறையாதிருந்தால் பாலியல் செயற்பாடுகள் குறைவதில்லை என்றது.
 Old-couple1
ஆற்றாமைகள் அதிகரிக்கின்றன

இவர்களது பாலியல் செயற்பாட்டு முறைகளாவன ஏனைய வயதினர் செய்வதை ஒத்ததே. பெரும்பாலனவர்கள் வழமையான யோனியுறவு கொண்டார்கள். சிலர் மாறி மாறி வாய் புணர்ச்சி செய்தார்கள். இன்னமும் சிலர் தற்புணர்ச்சி (masturbation) செய்ததும் உண்டு.

செய்ய வேண்டியது என்ன?

எமது சமூகம் இனப்பாகுபாடு இன ஒடுக்குமுறை ஆகியவை பற்றி வாய் கிழியப் பேசுகிறது. ஆனால் முதியவர்களின் பாலியல் உணர்வுகளை மதிப்பதில்லை. ஜடங்கள் போலவே கணிக்கிறார்கள். சருமம் சுருங்கியபோதும் அவர்களது உணர்வுகளும் மனமும் அன்றலர்ந்த மலர்போல மென்மையாகவே இருப்பதை உணர்வதில்லை. அவர்களது பாலியல் உணர்வுகளைப் புரிவதில்லை.

அவர்களது பாலியல் உணர்வுகள் மற்றும் செயற்பாடுகள் ஆகியவற்றிற்கு

  • அங்கீகாரமும் ஆதரவும் வழங்குவதில்லை.
  • அல்லது அவை பற்றி சிந்திக்கவோ பேசவோ முயல்வதில்லை.
  • அதற்கான சந்தர்ப்ப வாய்ப்புகளை அவர்களுக்கு அளிப்பதில்லை. உங்கள் குழந்தையை இரவில் அவர்களுடன் தூங்கவிட்டால் உங்களால் சுகம் காண முடியும். ஆனால் பாட்டன் பாட்டிகளுக்கு பேசவும், தழுவவும் அருகிருக்கவும் தனிமையானது எட்டாக் கனியாகிவிடும்.
 Children_Sleeping_In_Their_Parents_Bed_Royalty_Free_Clipart_Picture_091010-006362-272053

இது தவறான அணுகுமுறை. அவர்களின் உணர்வுகளை மதியுங்கள். அவர்கள் அவ்வாறு ஈடுபடுவதற்கான சூழலானது எமது கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் குறைவு. கூட்டுக் குடும்பமாக இல்லாவிடினும், முதிர்ந்த பெற்றோர் பிள்ளைகளது வீட்டில் தங்கியிருப்பதற்கான தேவைகள் அதிகரிக்கின்றன.

  • இத்தகைய நிலையில் அவர்களது தனிப்பட்ட உணர்வுகளுக்கும் செயற்பாட்டிற்கும் உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள்.
  • அவ் விடயத்தில் அவர்களது செயற்பாடுகளை ஏளனமாகப் பார்ப்பதையும், குற்றம் குறை சொல்வதையும் நிறுத்துங்கள்.
  • இது பற்றிய வெளிப்படையான கலந்துரையாடலை சம்பந்தப்பட்டவருடன் தனிப்பட்ட முறையில் ஆரம்பியுங்கள்.
  • அவர்களது வாழ்வில் வசந்தம் மீண்டும் மலரட்டும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), MCGP (col)
குடும்ப மருத்துவர்
21.012.2013 எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை
0..0..0..0

Read Full Post »

தோள்மூட்டு, புஜம், கைகளில் ஏற்படும் வலி உளைவு எரிவுகளுக்குக் காரணம் கழுத்து எலும்புத் தேய்வாக இருக்கலாம்

அழுதுவிடுவாள் போலிருந்தது. சில இரவுகளில் ஒழங்கான தூக்கம் இல்லாததால் கண்கள் கரு வளையம் சூழ்ந்திருந்தன. முகம் சோர்ந்தது மாத்திரமின்றிப்  பூசிணிப்பழம்போல ஊதியும் கிடந்தது.

சோர்வுக்குக் காரணம் மனத்துயரம் அல்ல என்பது அவள் பேசத் தொடங்கியதும் புரிந்தது.

வலி!

MINOLTA DIGITAL CAMERA

தாங்க முடியாத வலி. முதுகின் சீப்புப் பகுதியில். உளைவா வலியா என்று பிரிதறிய முடியாத வேதனை. அங்கிருந்த வலி மேலும் நகர்ந்து இடது கை முழுவதும் பரவி உளைந்து கொண்டிருந்தது. நான் துருவித் துருவிக் கேட்ட போது அக் கை நுனியில் சற்று விறைத்து மரத்திருப்தும் தெரியவந்தது.

ஒரிரு மாதங்களாக வலி இருக்கிறதாம். உளைவா, எரிவா, வலியா என்று பிரித்துச் சொல்ல முடியாத ஏதோவொரு கடுமையான வேதனை. ஆரம்பத்தில் ஓரளவாக இருந்தது, வர வர அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கை வைத்தியம், நாட்டு வைத்தியம் எதுவும் சுகம் கொடுக்கவில்லை. அருகிலிருந்த மருத்துவரிடம் காட்டியபோது தசைப்பிடிப்பாக இருக்கும் எனச் சொல்லி அவ்விடத்தில் ஊசி ஏற்றியிருக்கிறார். ஆயினும் அந்த ஊசியிலும் எந்தச் சுகமுமில்லை.

கழுத்து எலும்புத் தேய்வு நோய்

அனுபவப்பட்ட மருத்துவர்களுக்கு அத்தகைய வலிக்கான காரணம் வலிக்கும் அதே இடத்தில் இல்லை. வேறு இடத்திலிள்ள நோய்க்கான வலி இங்கு பிரதிபலிக்கிறது என்பது தெரிந்திருக்கும். பெரும்பாலும் கழுத்து எலும்புடன் சேர்ந்த Cervical spondylosis என ஊகிப்பதில் பிரச்சனை இருக்காது.

நிச்சயப்படுத்த பரிசோதனைகள் தேவைப்படும்.

நோய் ஓரிடத்தில் இருக்க வலி வேறு ஒரு இடத்தில் பிரதிபலிப்பதை தொலைவிட வலி (Referred Pain) என்பார்கள்

  • இதனைக் கழுத்து எலும்புத் தேய்வு நோய் என்று சொல்லலாம். வயதாகும்போது ஏனைய எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதுபோலவே கழுத்தின் முண்ணெலும்பிலும் ஏற்படுவதுண்டு. 40 வயதிற்கு மேல் இத்தகைய பிரச்சனை ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.
  • பொதுவாக வலி தொடர்ச்சியாக இருப்பதில்லை. விட்டுவிட்டு வரும்.
  • அத்துடன் கழுத்துத் தசைகள் இறுக்கமாகவும் இருக்கும்.

கழுத்து எலும்புகளின் அமைப்பும் பாதிப்பும்

A00332F06

கழுத்து எலும்புகள் ஏனைய முதுகெலும்புகள் போலவே ஒன்றென்மேல் ஒன்றாக அடுக்கபட்டிருக்கினறன. அவை தம்மிடையேயான அசைவாட்டத்திற்காக வட்டுகள் எனப்படும் Intervertebral disc யால் இணைக்கப்பட்டுள்ளன.

5566157_orig

  • முள்ளெலும்புகள் தேய்வதாலும்,
  • தேய்ந்த எலும்புகள் இடையேயுள்ள வட்டுகளை அழுத்துவதாலும்,
  • சிறு எலும்புத் துணிக்கைகள் வளர்வதாலும்,
  • முண்ணான், அதிலிருந்து வெளியேறும் நரம்புகள் அழுத்தப்படுதாலும்தான்

வலி, வேதனை நரம்புப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நரம்புகள் அழுத்துண்டால்

  • ஆனால் இது மோசமாகி, அவற்றிடையே உள்ள இடைவெளி சுருங்கி அதனூடாக வெளிவரும் நரம்புகளை அழுத்துவதால் வலி ஆதிகமாகும். இதன் அறிகுறிகளாக பின்வருவனவற்றைக் கூறலாம்.கழுத்தில் வலியும், அதன் தசைகளில் இறுக்கமும் பிடிப்பும்.
  • இவ் வலியானது தோள் மூட்டு, புஜம், நெஞ்சு போன்ற இடங்களுக்குப் பரவக் கூடும்.
  • புஜங்கள், கை, கால்கள், பாதம் போன்ற இடங்களில் ஊசியால் குத்துவது போன்ற வலி, உளைவு, எரிவு போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
  • கைகள், விரல்கள், பாதம் போன்ற இடங்கள் மரத்தது போன்ற உணர்வு ஏற்படலாம். சிலவேளை அங்குள்ள தசைகள் பலமிழப்பதுமுண்டு. விரல்களால் பற்றுவது சிரமமாக இருக்கலாம்.
  • நடப்பதில் சிரமம் ஏற்படக் கூடும். நிலைதளரக் கூடும்.
  • மலம், சிறுநீர் கழிப்பதில் உள்ள கட்டுப்பாடு குறைந்து, தன்னுணர்வின்றி அவை வெளியேறக் கூடும். இது சற்றுத் தீவிரமான நிலையில் தோன்றும்.

நோயை எப்படிக் கண்டறிவது?

r7_cervicalspondylosis

  • ஆரம்ப நிலையில் கழுத்தினது அசைவு, வலியுள்ள இடங்கள் ஆகியவற்றைப் பரிசோதிப்பதுடன், நரம்புப் பாதிப்புகள் இருக்கிறதா என மருத்துவர் உடற்பரிசோதனை செய்வதுடன் நோயைக் கண்டறிவார்.
  • X Ray பரிசேதனை செய்வதன் மூலம் கழுத்து எலும்புகளின் நிலை பற்றி அறிந்து கொள்ள முடியும்.
  • தேவை ஏற்படின் CT scan, MRI போன்ற பரிசோதனைகள் செய்வார்.
  •     நரம்புகள் எந்தளவு வேகமாகவும், திறமையாகவும் செய்லாற்றுகின்றன என அறிய Nerve conduction study பரிசோதனையும் உதவலாம்.

சிகிச்சை

  1. சாதரண வலிகளுக்கு சுடுநீர் ஒத்தடம் கொடுப்பது, வலி நிவாரணி ஜெல் பூசுதல், தசைகளைப் பிடித்துவிடுதல், மெதுமையான மசாஜ் போன்றவை உதவும்.
  2. சற்றுக் கடுமையான வலியெனில் வலிநிவாரணி மாத்திரைகள் தேவைப்படும்.
  3. கழுத்திற்கு கொலர் (Cervical Collar) அணிவது உதவும்.
  4. கடுமையெனில் சத்திரசிகிச்சையும் தேவைப்படலாம்

நீங்கள் செய்யக் கூடிய ஏனையவை

  • தலையக் குனிந்து செய்யும் வேலைகளைக் குறையுங்கள். புத்தம் படிப்பது, சமையல் வேலை போன்றவற்றின்போது கவனம் எடுக்கவும்.
  • குறைந்த தடிப்பமுள்ள தலையணையை மாத்திரம் உபயோகியுங்கள்.
  •     கழுத்தை ஒரே பக்கமாக நீண்ட நேரம் திருப்பி வைத்திருப்பதைத் தவிருங்கள்.
  • நடுவில் பள்ளமுள்ள விசேட தலையணைகள் நல்லது.
  • முகம் குப்புறப்படுக்க வேண்டாம்.

•    தலையில் பாரங்கள் சுமக்க வேண்டாம்.

bart2-BB

முண்ணான் எலும்புகள், அவற்றை இணைக்கின்ற வட்டுகள் ஆகியவற்றின் அமைப்புயும்பையும் அவற்றில் ஏற்படுகின்ற சில நோய்களையும் மேலே உள்ள படம் காட்டுகிறது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

ஹாய் நலமா புளக்கில் 2012 ஆகஸ்ட் மாதம் வெளியான கட்டுரை

0.0.0.0.0.0.0

Read Full Post »

வயிற்றோட்டம், வயிற்றுழைவு
நீராகாரமும் உணவு கொடுத்தலும்

நீரிழப்பு நிலையை அடைந்திருந்த குழந்தை அது. கண்கள் குழிவிழுந்திருந்தன. நாக்கு வரண்டிருந்தது. தாகம் அதிகமாக இருந்தாலும் வாந்தியால் நீர் அருந்த முடியாது தவித்தது. நீண்ட காலத்திற்குப் பின்னர் அன்றுதான்; வயிற்றோட்டத்தால் ஒரு குழந்தைக்கு சேலைன் ஏற்ற வேண்டிய நிலை எனக்கு வந்தது. இப்பொழுதெல்லாம் இவ்வாறான நிலையில் குழந்தைகளைக் காண்பது அரிதாகிவிட்டது.

Dedyrated child

நினைவுகளை பின்நோக்கி நகர்த்தியபோது நான் மருத்துவனாகப் பணியாற்ற ஆரம்பித்த காலங்களில் குழந்தைகள் வார்ட்டுகள் யாவும் வயிற்றோட்ட நோயாளிகளால் (Diarrhoea) நிரம்பி வழியும். சில மருத்துவமனைகளில் வயிற்றோட்டத்திற்கு என்றே தனியாக வார்ட்டுகளை விசேடமாக அமைத்திருப்பார்கள்.

dehydration

வயிற்றோட்ட நோய் அந்த அளவிற்கு அக்காலத்தில் பரவலாக இருந்தது. நோயின் தீவிரமும் அதனால் குழந்தைகள் மரணிப்பதும் திகில் ஊட்டும்.
இன்று அவ்வாறான நிலை ஏன் இல்லை. இதற்கு சில காரணங்களைச் சொல்லலாம்.

  • சுத்தமான நீர் கிடைக்கிறது. கிராமப் புறங்களில் கூட மலசல கூடங்கள் வந்துவிட்டன. வெளியிடங்களில் மலங்கழிப்பது குறைந்து விட்டது. இதனால் நீர் மாசடைவது குறைந்து சுத்தமான நீர் குடிக்கக் கிடைக்கிறது. அவ்வாறு இல்லாவிட்டாலும் நீரைக் கட்டாயம் கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும் என்பதைப் பெரும்பாலானோர் கடைப்பிடிக்கிறார்கள்.
  • ஜீவனி பரவலாக எங்கும் கிடைக்கிறது. ஜீவனி இல்லாவிட்டாலும் அதை ஒத்த மீள நீரூட்டும் பானம் தயாரிப்பதற்கான (Oral Rehydration Solution ORS) பவுடர்கள் வௌ;வேறு பெயர்களில் குட்டிக் கடைகளிலும் கிடைக்கிறது. வயிற்றோட்ட நோய் வந்தால் குழந்தையை நீரிழப்பு நிலைக்கு விட்டுவிடக் கூடாது. அவற்றைக் கரைத்துக் கொடுக்க வேண்டும் என்ற அறிவு எங்கும் பரந்திருக்கிறது.
  • அன்ரிபயோடிக் மருந்துகளை (Antibiotic) சாதாரண வயிற்றோட்டங்களுக்கு கொடுப்பதேயில்லை. காரணம் இத்தகைய வயிற்றோட்டங்கள் வைரஸ் கிருமிகளாலேயே ஏற்படுகிறது. இவற்றைக் குணப்படுத்த அத்தகைய மருந்துகள் தேவையில்லை. அத்துடன அவசியமற்ற அன்ரிபயோடிக் சாதாரண வயிற்றோட்டத்தை அதிகரிக்கவே செய்யும். இதனை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அறிவுறுத்துகிறார்கள்.

இருந்தபோதும் இலங்கையில் வயிற்றோட்ட நோய் இன்னமும் முற்றாக மறைந்துவிடவில்லை. உலகளாவிய ரீதியில் 1.6 மில்லியன் இறப்புகள் இந்நோயால் மட்டும் 2002 ல் நிகழ்ந்திருக்கி;ன்றன. அதே வேளை இரண்டு பில்லியன் பேர் வருடாந்தம் இதனால் பீடிக்கப்படுகிறார்கள். போஷாக்குக் குறைந்த பிள்ளைகள் இதனால் பீடிக்கப்படுவதும் மரணமுறுவதும் அதிகமாக இருக்கிறது.

புதிய மாற்றங்கள்

ஆரம்ப காலத்தில் (1970 களில்) உபயோகித்த மீள நீரூட்டும் பானங்கள் சற்று செறிவு அதிகமாயிருந்து. இதனால் வயிற்றோட்டம் காரணமான நீரிழப்பைத் தடுக்கக் கூடியதாக இருந்தாலும் வாந்தி தொடர்ந்து கொண்டிருந்தது. பல ஆய்வுகளையும் கருத்தில்கொண்டு சற்று செறிவு குறைந்த பானத்தை உலக சுகாதார ஸ்தாபனம் சிபார்சு செய்தது. அதுவே இப்பொழுது பல வருடங்காக பாவனையில் உள்ளது. இது நீரிழப்பைத் தவிர்ப்பது மட்டுமின்றி குழந்தைகளில் வாந்தி ஏற்படுவதையும் குறைக்கிறது.

மீள நீரூட்டும் பானங்கள் பரவலாக உபயோகிக்கப்படுவதால் வயிற்றோட்டம் உள்ள குழந்தைகளை மருத்துவ மனைகளில் அனுமதிக்க வேண்டிய நிலை பெரும்பாலும் ஏற்படுவதில்லை. பெரும்பாலான மருத்துவமனைகளில் குழந்தைகளை வெளிநோயாளர் பிரிவுகளில் வைத்து நீரிழப்பு நிலையைச் சரிசெய்த பின்னர் வேண்டிய அறிவுறுத்தல்களுடன் வீட்டில் வைத்துப் பராமரிக்க விடுகிறார்கள். நீரிழப்பை பெரும்பாலும் மீள நீரூட்டும் பானங்களால் சரிசெய்துவிட முடிகிறது. மிகச் சில தருணங்களிலேயே நாளங்களுடாக சேலைன் ஏற்ற நேர்கிறது.

நாகம் (Zinc Suppliment) கொடுப்பது

வயிற்றோட்டத்தின் போது நாகம் (Zinc Suppliment) கொடுப்பதால் நோயின் தீவிரத்தைத் தணிக்கலாம் என்ற புதிய ஆய்வு முடிவும் மாற்றங்களுக்கான காரணங்களில் ஒன்றாகும்.

Zinc-poster-layers2

Zinc யை மருந்தாக வயிற்றோட்டத்தின் போது கொடுப்பதால் தீவிரம் குறைவது மட்டுமின்றி அது குறைந்த நாட்களிலேயே சுகமாகிவிடும். 14 நாட்களுக்கு தொடர்ந்து கொடுப்பதால் அடுத்த 2 முதல் 3 மாதகாலத்திற்குள் நோய் மீண்டும் வருவதற்கான சாத்தியத்தையும் குறைக்கும் என ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியது. கடைப்பிடித்தாலும் நோயின் தாக்கம் குறைந்தது.

உணவு

போதிய நீராகாரம் கொடுப்பதுடன் நிற்காது உணவுகளையும் தொடர்ந்து கொடுக்க வேண்டும். வாந்தியால் உணவு உண்ண முடியாத தருணங்களில் போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். உண்ண முடிந்ததும் வழமையான உணவுகளைக் கொடுக்கலாம். இலகுவில் சமிபாடடையக் கூடிய மோல்ட், கஞ்சி போன்றவற்றுடன் ஆரம்பிக்கலாம்.

dd522

போதிய நீராகாரம் கொடுப்பதுடன் நிற்காது உணவுகளையும் தொடர்ந்து கொடுக்க ஆரம்பித்தார்கள். வயிற்றோட்டம் வந்தால் வயிற்றைக் காயப்போட வேண்டும் என்ற தவறான கருத்திற்கு நிரந்தர விடை கொடுக்கப்பட்டது. வாந்தியால் உணவு உண்ண முடியாத தருணங்களில் போசாக்குள்ள நீராகாரம் கொடுக்கப்பட்டது. உண்ண முடிந்ததும் வழமையான உணவுகளைக் கொடுக்கப்படது. இலகுவில் சமிபாடடையக் கூடிய மோல்ட், கஞ்சி போன்றவற்றைக் கொடுத்தார்கள்.

p076b

இவற்றால் வயிற்றோட்டத்தால் ஏற்பட்ட மரணங்கள் குறைந்தன. இருந்தபோதும் இலங்கையில் வயிற்றோட்ட நோய் இன்னமும் முற்றாக மறைந்துவிடவில்லை. உலகளாவிய ரீதியில் 1.6 மில்லியன் இறப்புகள் இந்நோயால் மட்டும் 2002 ல் நிகழ்ந்திருக்கின்றன. அதே வேளை இரண்டு பில்லியன் பேர் வருடாந்தம் இதனால் பீடிக்கப்படுகிறார்கள். போஷாக்குக் குறைந்த பிள்ளைகள் இதனால் பீடிக்கப்படுவதும் மரணமுறுவதும் அதிகமாக இருக்கிறது.

வயிற்றோட்டம் என்றால் என்ன?

ஒரு நாளுக்கு மூன்று தடவைகளுக்கு மேல் தண்ணீர்போலவோ அல்லது இளக்கமாக மலம் வெளியேறுவதையே வயிற்றோட்டம் என்று மருத்துவத்தில் சொல்கிறார்கள்.

dd038

பக்றீரியா, பங்கஸ், அல்லது ஒட்டுண்ணிக் கிருமிகள் உணவுக் கால்வாயில் தொற்றுவதாலேயே இது ஏற்படுகிறது.

பெரும்பாலும் ரொட்டோ வைரஸ் தொற்றுவதாலேயே ஏற்படுகிறது. குழந்தைகளில் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இப்பொழுது இதற்கு எதிரான தடுப்பு மருந்து குழந்தைகளுக்குக் கொடுக்கப்படுகிறது. இலங்கையிலும் கிடைக்கிறது.

மாசடைந்த உணவுகள் மூலம் பக்றீரியா மற்றும் ஒட்டுண்ணிக் கிருமிகள் தொற்றுவதாலும் ஏற்படுகிறது.

காலத்திற்கு காலம் இதனால் பாதிக்கப்படாத மனிதர்களே இருக்க முடியாது.

இருந்தபோதும் சிகிச்சையின்றியே குணமாகக் கூடியது. பெரியவர்களில் பொதுவாக 2-4 நாட்களுக்குள் தானாகவே குணமாகிவிடும். குழந்தைகளில் சற்று அதிக காலம் 5-7 நாட்கள் எடுக்கலாம். சற்றுக் காலம் எடுத்தாலும் கவலைப்பட வேண்டிய நோயில்லை. ஆனால் மேற் கூறியதுபோல நீரிழப்பு நிலை ஏற்படாமல் காப்பது அவசியம்.

வேறு வகைகள்

மேற்கூறிய வைரஸ் கிருமியால் ஏற்படும் வழமையான வயிற்றோட்டம் தவிர வேறு பல வயிற்றோட்டங்களும் உள்ளன.

வயிற்றுழைவு சற்று வித்தியாசமானது. இதை dysentery என்பார்கள். இதன்போது மலம் பொதுவாக தண்ணீர்த்தன்மையாக அதிகளவில் வெளியேறுவதில்லை. குறைந்த அளவில் ஆனால் அடிக்கடி வயிற்றை முறுக்கிக் கொண்டு இரத்தம் அல்லது சளி கலந்து போகும். இது பெரும்பாலும்

Escherichia coli (E. coli), salmonella and shigella போன்ற பக்றீரியா கிருமிகளால் தொற்றும்.

இதில் சல்மனா பக்றீரியா தொற்று முக்கியமானது. காய்ச்சல், தலையிடி, ஓங்காளம், வாந்தி, வயிற்று வலி போனற்வற்றுடன் வயிற்றோட்டம் ஏற்படும். கோழியிறைச்சி, முடடை, ஏனைய இறைச்சி வகைகள், சில வேளைகளில் சொக்கலேட் மூலமும் பரவுவதுண்டு.

கொலாரா. ஒரு காலத்தில் கடுமையான பீதியைக் கிழப்பிய கொலாரா இப்பொழுது எமது நாட்டில் காணப்படுவதில்லை. ஆயினும் வேறு நாடுகளில் இன்னமும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

Vibrio cholerae என்ற பக்றீரியாவில் பரவும். வயிற்று வலியுடன் வாந்தியும் கடுமையான வயிற்றோட்டம் இதன் அறிகுறியாகும். மிக வேகமாகப் பரவி சமூகத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். கடுமையான நீரிழப்பு நிலையாலேயே இறப்புகள் அதிகம் ஏற்படும்.

நாட்பட்ட வயிற்றோட்டங்கள்

பெரும்பாலான வயிற்றோட்டங்கள் சில நாட்களில் குணமாகும். என்றாலும் வேறு நோய்களின் அறிகுறியாக வெளிப்படும் வயிற்றோட்டங்கள் நீண்ட நாட்களுக்குத் தொடரும்.

உதாரணமாக எரிச்சலடையும் குடல் irritable bowel syndrome, Crohn’s disease,  lactose intolerance, Ulcerative colitis போன்ற பலவும் அடங்கும்.
இவற்றைத் தவிர நீரிழிவு, உணவுக் கால்வாய் புற்றுநோய்கள் போன்றவையும் வயிற்றோட்டங்களை ஏற்படுத்தலாம்.

இத்தகைய தீவிர நோய்களால் மட்டுமின்றி பதகளிப்பு மனப் பதற்றம் போன்ற உளவியல் காரணங்களாலும் பலருக்கு வயிற்றோட்டம் ஏற்படுவதுண்டு. காலையில் வேலைக்கு அல்லது பாடசாலைக்கு புறப்படத் தயாராகும்போது அடிக்கடி டொயிலட் செல்வர்களும் இதில் அடங்குவர்.

அதீத மதுபானம், அதிகமாக கோப்பி அருந்துவதும் சிலரில் இப்பிரச்சனையைத் தோற்றுவிப்பதுண்டு.

உணவு ஒவ்வாமைகளாலும் food allergy பலருக்கு வயிற்றோட்டம் ஏற்படுவதுண்டு.

புற்று நோய்களுக்கான ரேடியம் சிகிச்சை பலருக்கு வயிற்றோட்டத்தை ஏற்படுத்தும். உணவுக் கால்வாயின் கலங்கள் அம்மருந்துகளால் சேதமடைவதாலேயே இது நிகழும்;. இது தற்காலிகமானது. சில காலத்தில் பழைய ஆரோக்கியம் திரும்பும்.

பலவகை மருந்துகளும் வயிற்றோட்டத்தை ஏற்படுத்துலாம். அன்ரிபயோடிக் மருந்துகள், வலிநிவாரணிகள், வயிற்று எரிவிற்கு உபயோகிக்கும் மக்னீசியம் கலந்த மருந்துகள், புற்றுநோய்கான மருந்துகள், என பலவகையான மருந்துகள் சிலரில் வயிற்றோட்டத்தை ஏற்படுத்தும்.

இத்தகைய நாட்பட்ட வயிற்றோட்டங்களுக்கான அடிப்படைக் காரணத்தை கண்டறிந்து அதனை நீக்க நல்ல குணமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

வயிற்றோட்டம், வயிற்றுழைவு தற்போது என்ன?

0.0.0.0.0.0

Read Full Post »

ஆபீசில் இருந்த அவருக்கு தனது வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏதோ ஒன்று அவரைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது என்பதை அவரின் கீழ் வேலை செய்யும் ஏனைய பணியாளர்களால் உணர முடிந்தது. வழமையாகச் சிரித்துக் கலகலப்பாக இருப்பவர் இன்று எதையோ பறி கொடுத்தவர்போல அமைதியின்றி நிலை கொள்ளாது தவித்தார்.

Anxiety-and-Tinnitus

அவரை ஒரு நோய் திடீரெனத் துன்புறுத்த ஆரம்பித்திருக்கிறது. மற்றவர்களால் புரிந்து ஆறுதல் கொடுக்கக் கூடிய நோயல்ல. காய்ச்சலோ, வலியோ, புண்ணோ எதுவுமில்லை. அவரால் தனது பிரச்சனையை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லை.

ஏதோவொரு இரைச்சல் காதில் எழுகிறது. அக்கம் பக்கத்தில் யாரும் பேசாதபோதும், ரேடியோ கரகரக்காத போதும், வேறு எந்த வித ஓசையுமின்றி நிசப்பதமாக இருந்தபோதும் காதில் சத்தம் விழுகிறது.

tinnitus

மருத்துவத்தில் ரினிட்டஸ் (Tinnitus) என்பார்கள். போலி ஒலி எனச் சொல்வதுமுண்டு. கரகரப்பது போலவோ, இரைவது போலவோ, ரீங்காரமிடுவது போல அல்லது வேறு ஏதோ ஓசை போலவோ கேட்கும். ஆனால் வெளியிலிருந்து வரும் ஓசையாக அல்லாமல், உள்ளிருந்து எழுவதுதான் இது. பெரும்பாலும் ஆபத்தான நோயல்ல. இருந்தபோதும் பொறுக்க முடியாத அரியண்டம் எனலாம்.

15%  சதவிகிதமானவர்களுக்கு சிலநேரங்களில் மட்டுமே இவ்வாறு இரைச்சல் ஏற்படுவதுண்டு. மாறாக 2% க்கு மிகக் கடுமையான காது இரைச்சல் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இவர்களது நாளந்தச் செயற்பாடுகள், தொழில், நித்திரை யாவுமே பாதிப்படைகிறதாகத் தெரிகிறது. இதனால் பலர் மனவிரக்திக்கு ஆளாவதும் உண்டு.

ஏன் ஏற்படுகிறது

tinnitus (1)

காது இரைச்சல் என்பது ஒரு குறிப்பிட்ட உறுப்பிலிருந்து எழுவதில்லை. அது ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். வெளிக்காது, நடுக்காது, உட்காது அல்லது காதுக்கு அப்பால், மூளை நரம்புகளிலிருந்தும் ஏற்படலாம்.

சிலருக்கு இது இயல்பானதாகவும் பாதிப்பை ஏற்படுத்தாததாகவும் இருக்கலாம். நிசப்பதமான அறைக்குள் நுழையும்போது அல்லது புறச் சத்தங்கள் குறைவாக இருக்கும்போது மட்டும் அவரின் கவனத்தை ஈர்க்கக் கூடும்.

வேறு சிலருக்கு காதிற்குள் குடுமி, அல்லது அந்நியப் பொருள் காதை அடைத்திருப்பதால் புறச் சத்தங்கள் குறைவாகவே கேட்பதால் காதின் இரைச்சல் கவனத்தை ஈர்ப்பது அதிகமாகலாம்.

காதில் கிருமித் தொற்று, அதனால் நடுக் காதினுள் நீர் சேர்தல், செவிப்பறை எலும்புகளில் நோய், போன்றவையும் ஏற்படுத்தலாம்.

காதுக்கான நரம்புகளில் ஏற்படும் நுண்ணிய சேதங்கள் மற்றொரு காரணமாகும். பொதுவாக மூப்படையும்போது நரம்புகளில் பாதிப்பு ஏற்படுவதால் வயதானவர்களில் அதிகமாகத் தோன்றுவதுண்டு.

tinnitus-miracle-review

கடுமையான சத்தங்களுக்கு அதிகமாக முகங்கொடுப்பது முக்கிய காரணமாக மாறிவருகிறது. என்ஜின் ஒலிகள், உச்சஸ்தாயி வாத்திய ஒலிகள், ஆகாய விமான ஒலிகள் துப்பாக்கி வெடிச் சத்தங்கள் போன்றவற்றை தொடர்ந்து கேட்பதாலும் இது நேர்கிறது.

அஸ்பிரின் போன்ற சில மருந்துகளும் காதிரைச்சலை ஏற்படுத்துவதுண்டு.

அதேபோல உட் காதில் ஏற்படுகிற மெனியர்ஸ் (Meniere’s syndrome)நோயும் காரணமாகலாம்.

மூளைக்குள் தோன்றிய கட்டியால் இது இருக்குமா எனப் பலரும் பயப்படுகிற போதும், மிக அரிதாகவே அவ்வாறு ஏற்படுவதுண்டு.

மருத்துவரிடம் செல்லும்போது

காதில் இரைச்சலானது தொடர்ந்து இருக்கிறதா அல்லது விட்டு விட்டு வருகிறதா, தலைச்சுற்றும் சேர்ந்திருக்கிறதா, வாந்தி வருகிறதா, தலைச்சுற்றுடன் காதும் மந்தமாக இருக்கிறதா போன்ற விடயங்களை மருத்துவர் அறிய விரும்புவார். இவை நோய்க்கான காரணத்தைக் கண்டறிய அவருக்கு உதவும்.

பொதுவாக நோயைக் கண்டறிவதற்கு ஆய்வுகூடப் பரிசோதனைகள் எதுவும் தேவைப்படாது.

இருந்தபோதும் உங்களது காது கேட்கும் திறனை மதிப்பீடு செய்வதற்காக சிலவேளை யரனழைபசயஅ செய்ய நேரிடலாம். CT Scan, MRI போன்ற பரிசோதனைகளும் அரிதாகத் தேவைப்படலாம்.

Tinnitus_Infographic

நீங்கள் செய்யக் கூடியவை.

அடிக்கடி கோப்பி குடிப்பவராயின் அதைக் குறையுங்கள். கொக்கோகோலா போன்ற பானங்களும் கூடாது. புகைத்தலை நிறுத்துவது நிறைய உதவும். உணவில் உப்பைக் குறைப்பதும் உதவலாம்.

சிலரது குருதியில் Zinc ன் அளவு குறைவாக இருப்பதுண்டு. அத்தகையவர்களுக்கு Zinc மாத்திரைகள் உதவலாம்.

காது குடைவது கூடாது. துணி, இயர் பட்ஸ் போட்டு சுத்தம் செய்ய முனையும்போது காதுக் குடுமி மேலும் உட்சென்று செவிப்பறையுடன் அழுத்துப்படும். இதனால் இரைச்சல் ஏற்படும்.

உங்கள் வேலைத்தளம் அதீத இரைச்சல் உடையதாயின் அச் சத்தங்கள் உங்கள் காதுகளைப் பாதிக்காது பாதுகாக்க வேண்டும். அத் தருணங்களில் அதைக் குறைப்பதற்கான இயர் பிளக் உபயோகிப்பது நல்லது.

இசை விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், ஏன் பல வணக்கச் ஸ்தலங்களும் அதீத ஓசைகளால் சூழலை மாசுபடுத்துகின்றன. இவை உங்கள் காதுகளையும் பாதிக்கும். அரசாங்கங்களும் பொலீசும் அவற்றைக் கண்டு கொள்வதில்லை என்பதால் எமது காதுகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.

உங்கள் வீட்டிலும் உங்களுக்கு எதிரிகள் இருக்கலாம். ஹெயர் ரையர், நீரியக்கும் இயந்திரம், மிக்ஸிகள் போன்ற உபகரணங்களுடன் உங்கள் ரேடியோ, தொலைக் காட்சி, மொபைல் போன்றவையும் அதீத அதிர்வுகளை ஏற்படுத்திக் காதுகளைப் பாதித்து இரைச்சலை ஏற்படுத்தலாம்.

உயர் இரத்த அழுத்தம் மற்றொரு காரணம்.எனவே அவற்றிற்காக மருத்துவர் தரும் மருந்துகளை வேளை தவறாது உட்கொள்வதும் அவசியம்.

மனப்பதற்றம்  அதிகமானால் காது இரைச்சலும் அதிகமாகும். எனவே மனதை அலட்டிக் கொள்ளாதீர்கள். காதில் இரைச்சல் தொல்லை கொடுக்கும்போது மனம் அமைதியாக இருக்க முடியாது என்பது உண்மைதான். ஆயினும் அந்த இரைச்சலிலேயே உங்கள் மனத்தை ஆழச் செலுத்தினால் மனம் அந்தரித்து நோய் அதிகரிப்பதாகத் தோன்றும்.

வெளிச் சத்தங்கள் குறைந்திருக்கும்போது காது இரைச்சல் அதிகமாகத் தோன்றும். தூங்கச் செல்லும் போது வீடு முழுவதும் துயிலில் ஆழ்ந்திருக்க சூழலே மயான அமைதியில் இருக்கும்போது இரைச்சலின் தொல்லை வெறுக்க வைப்பதாக இருக்கும்.

Tinnitus_relief

ஒரு கடிகாரத்தை அருகில் வைப்பதாலோ, மின்விசிறியைச் சுழலவிடுவதாலோ அன்றி ரேடியோவை மெல்லிய தொனியில் போடுவதாலோ, காதின் இரைச்சலை இவற்றால் மேவலாம்.

உடற் பயிற்சி, போதிய ஓய்வு, சோர்வடையாதிருத்தல் போன்ற வாழ்க்கை நடைமுறைகளும் இரைச்சலின் வேகத்தைத் தணிக்கும்.

சிகிச்சை

காரணத்தைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் மருத்துவரைத்தான் நாட வேண்டியிருக்கும்.

குட் மோனிங்’ சொல்லிச் சிரித்துக் கொண்டே ஆபிசில் நுழைந்தார் அந்த ஆபீஸர். புகைத்தல், மது, இரண்டிற்கும் டாட்டா சொல்லிவிட்டாராம்.

இனி இல்லை காதிரைச்சல் அவருக்கு.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0.

Read Full Post »

எனது ஊர் வியாபாரிமூலை ஆகும். பருத்த்திததுறையில் இருந்து மேற்குப்புறமாக சுமார் ஒரு மைல் தூரத்திலிருந்து இருக்கிறது.அருகே கடற்கரை. ஆழமற்ற பாக்குத் தொடுவாய்.முருங்கைக் கற்கள் கடலில் வேலியடைத்தது போலப் பரந்திருக்கும்.

எமது ஊரையும் கடற்கரை வீதியையும் பிரித்து நிற்கும் தோட்டக் காணிகள். வெங்காயம், புகையிலை, மிளகாய் எனப் பசுமை போர்த்தியிருக்கும். தோட்டக் காணிகளின் நடுவே நின்று பார்த்தால் அதன் கிழக்கு எல்லையில் தெணியம்மன் கோவில் தெரியும்.

இளமைக்காலம் முழுவதும் ஆடிப்பாடித் திரிந்த தாய் மண் அது.

தொழில் நிமித்தமாக நீண்ட காலம் பருத்தித்துறை நகரிலும், பின்னர் கொழும்பில் வசிக்க நேர்ந்தபோதும் எமது சொந்த மண்ணின் நினைவுகளில் மூழ்குவது மகிழ்ச்சியளிக்கிறது.

இன்று திடீரென எனது ஊர் பற்றிய எண்ணவும் அது பற்றி எழுதவும் நேர்ந்ததற்குக் காரணம் வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையம்தான்.

அண்மையில் நடைபெற்ற வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் புதிய நிர்வாக சபை தெரிவாகியுள்ளதாக நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

தலைவர் திரு.V.K.இரத்தினவடிவேல்
செயலாளர் திரு கயானந்தன் குணாதரன்
பொருளாளர் திரு செ.இரகுநாதன்

ஆகியோர் உட்பட செயற்திறன் மிக்க செயற்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிந்தேன்.

அனுபவ முதிர்ச்சியுள்ள தலைமையும், செயலூக்கம் கொண்ட இளைய தலைமுறையினரான பொருளாளர் செயலாளர் ஆகியோரைக் கொண்ட புதிய நிர்வாகக் குழு சிறப்பாக எமது நிலையத்தைக் வழி நடாத்துவதற்கு திடசங்கற்பம் கொண்டிருக்கிறார்கள்.

புதிய தலைவருக்கும் நிர்வாக சபையினருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். அவர்களது அர்ப்பணிப்புடன் கூடிய சேவைக்கு எமது ஊர் மக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்பது திண்ணம்.

சென்ற 24.02.2013 அன்று பாடசாலையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொள்ளச் சென்ற போது எமது சனசமூக நிலையப்பக்கம் செல்ல நேர்ந்தது.

அதிகாலை 7-7.30 மணியளவில் வீதிக்குசென்ற போது நிலையத்தின் வாயில் திறக்கப்படவில்லை. ஆயினும் அன்று நடைபெற இருந்த மருத்துவ முகாம் பற்றிய அறிவித்தல் அங்கு பார்வைக்கு வைக்கபட்டிருந்தமை மகிழ்ச்சியளித்தது.

மீண்டும் அரை மணி நேரத்தில் அதே வழியால் திரும்பி வரும்போது வாயிற் கதவு திறந்திருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது அன்றைய பத்திரிகைகள் வந்திருந்தன. அவை ஒழுங்கான முறையில் வாசிப்பு மேசையில் பொருத்தி வைக்கப்பட்டிருந்தன.

பழைய நினைவுளில் மூழ்குவது இன்பம். மாணவப் பருவத்தில் நீண்ட காலமாக அதன் செயற்குழுவில் இடம்பெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது.

திரு வைத்திலிங்கம், திரு.வே.க.கந்தையா, திரு.மகாதேவன்பிள்ளை போன்ற பல பெரியோர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்று வாசிகசாலையை சிறப்பாக இயங்க வைத்தனர்.

புதிய மேல்மாடி கட்டிடத் திறப்பு விழா நேற்று நடந்தது போல பசுமையாக மனதில் நிறைந்து இருக்கிறது. இன்றும் அதே கட்டிடம் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

வசதியான வாசிப்பறை. வாசலில் மணல் பரப்பிய தரை. காலாற அமர்ந்திருக்க ஏற்றது. வெயிலி்ன் கொடுமையைத் தணித்து குளிர்மை வீசும் பெரு மரம். கிளை விரித்து பரந்த அது கொடுக்கும் தண்மை பத்திரிகை படிக்க வருபவர்களை ஆசுவாசப்படுத்தும்.

ஊரிலுள்ள 10-12 இளைஞர்கள் முறை வைத்து மாறி மாறி வாசிகசாலைக்கு
பத்திரிகைகளை அன்பளிப்பாக வாங்கித் தருகிறார்களாம். அவர்களது தன்னலமற்ற பணி மகிழ்ச்சியளிக்கிறது

தற்காலிகமாக மூடிக் கிடக்கும் நூலகத்தின் lending பகுதிக்கு புதிதாக நூல்களைச் சேர்க்கவும் அங்கத்துவர்களுக்கு மாறி மாறி வாசிக்கக் கொடுக்கவும் முயற்சிக்கிறார்கள். வேறு பல திட்டங்களும் உள்ளதாகத் தெரிகிறது.

ஊரவர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள், புலம் பெயர்ந்தவர்கள் என அனைவரும் புதிய நிர்வாகக் குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கி நிலையம் சிறப்பாக இயங்க உதவுவார்கள் என்பது திண்ணம்.

‘மறந்து போகாத சில’ புளக்கில் வெளியான கட்டுரை வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையம்

0.0.0.0.0.0.0

Read Full Post »