Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூலை, 2013

‘பிரஸர் என்பது அறிகுறிகள் அற்ற நோய். இதனால் பெருந் தொகையான மக்கள் தங்களுக்குப் பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) இருப்பதை அறியாமலே இருக்கிறார்கள்’ என சில வாரங்களுக்கு முன் சொன்னேன்.

hypertension_1

எனவே பிரஷர் இருக்கிறதா என்பதை அறிய அதை அளந்து பார்ப்பதுதான் ஒரே வழி. நீங்கள் மருத்துவரிடம் செல்லும்போது அவர் அளவிடுவார். இப்பொழுது பலரும் பிரஸர்மானிகளை வாங்கி வைத்து தாங்களாகவே தங்கள் வீடுகளில் அளந்து பார்க்கிறார்கள்.

மருத்துவர்கள் அளவிடுவது

பிரஸரை பிரஸர்மானி கொண்டு அளவிடுவார்கள். பொதுவாக மருத்துவக் கிளினிக்குகளில் மெர்குரி (Mercury) கொண்ட பிரஸர்மானியை உபயோகிப்பார்கள்.

நோயாளியின் கையின் முழங்கைக்கு மேற்பட்ட பகுதியில் துணியினால் மூடப்பட்ட ரப்பர் பை (cuff) போன்ற ஒன்றை இறுக்கமாகச் சுற்றுவார்கள். பின்பு தனது கையிலுள்ள பம்பினால் காற்றை அடிப்பார்கள். இதன்போது உங்கள் கை இறுகுவது போல உணர்வீர்கள்.

அந்நேரத்தில் காற்றின் அமுக்கத்தால் கைநாடியின் இரத்த ஓட்டம் தடைப்படும். பின் காற்றின் அமுக்கத்தை குறைக்க இரத்த ஓட்டம் வழமையாகும்.

இதன்போது அவர் உங்கள் நாடித்துடிப்பை தனது விரல்களால் நாடிபிடித்துப் பாரப்பார். இப்படிப் பார்ப்பது இரண்டு காரணங்களுக்காகவாகும்.

pulse
முதலாவதாக, நாடித்துடிப்பின் வேகம், அளவு, அதன் ஒழுங்குமுறை போன்றவற்றை அவதானிப்பார். இரண்டாவதாக அதில் இரத்த ஓட்டம் தடைப்படுவதையும், மீண்டும் வருவதையும் அவதானிப்பதன் மூலம் உங்கள் பிரசரின் உயர்அளவு (Systalic pressure) பற்றிய மதிப்பீட்டைச் செய்வார்.

பின் ஸ்டெதஸ்கோப்பை உங்கள் முழங்கையின் உட்பகுதியில் வைப்பார்கள்.

bloodpressure measurement
நாடித்துடிப்பு தடைப்படுவதையும் அது மீள வருவதையும் ஸ்டெதஸ்கோப் ஊடாகக் கேட்டு அறிவதன் மூலம் பிரஸரின் உயர்அளவு (Systalic pressure), மற்றும் தாழ்அளவு (Diastolic pressure) இரண்டையும் துலக்கமாக அளந்து அறிவார்கள்.

நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

உங்கள் பிரஸர் அளவிடப்படுவதற்கு முன் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளன.

  • உங்கள் மேலாடை நீளக்கையுடனாக அல்லாமல் அரைக்கையுடன் இருந்தால் Cuff யை சுற்றுவதும், ஸ்டெதஸ்கோப்பால் நாடித்துடிப்பின் ஒலிகளை துல்லியமாகக் கேட்டு பிரஷரை அளவிடுவதும் சுலபமாக இருக்கும்.
  • பிரஸர் அளவிடுவதற்கு முன் குறைந்தது 30 நிமிட நேரத்தினுள் கோப்பி அருந்துவதையும், புகைத்தலையும் தவிருங்கள்.
  • பிரஸர் பார்ப்பதற்கு முன் குறைந்தது 10 நிமிடங்களுக்காவது ஓடியாடித் திரியாது அமைதியாக உட்கார்ந்திருங்கள். முதுகு கதிரையில் சாய்ந்திருக்கும் வண்ணம் வசதியாக உட்காரவேண்டும்.
  • சிறுநீர் நிறைந்திருக்கும் வண்ணம் பிரஸர் பார்க்க வேண்டாம். சற்று நேரம் முன்னரே கழித்து சிறுநீர்ப்பையைக் காலியாக வைத்திருங்கள்.
  • பதற்றமின்றி மனஅமைதியுடன் இருப்பதும் அவசியமாகும்.
  • காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு இருக்கவும் கூடாது(AHA and JNC-7 guidelines) என அமெரிக்க இருதய சங்கம் அறிவித்திருக்கிறது.
  • அளவிடும்போது டொக்டருடனோ அன்றி மற்றவர்களுடனோ உரையாடுவதைத் தவிருங்கள்.

நிற்பதும் இருப்பதுவும் படுப்பதுவும்

பிரஸர் பார்க்கும்போது உட்கார்ந்திருப்பது அவசியம்.
சில வேளைகளில் மருத்துவர் உங்களைப் படுக்க வைத்தும், நிற்க வைத்தும் பிஸைர் பார்ப்பதுண்டு. இது Postural Hypotension இருக்கிறதா என அறிவதற்காக ஆகும்.

நீங்கள் படுத்திருக்கும்போது சாதாரணமாக இருக்கும் இரத்த அழுத்தமானது எழுந்திருக்கும் போது வீழ்ச்சியடைகிறதா என்பதை அறியவே இவ்வாறு அளவிடுவார்கள்.

86543321_XS

பீற்றா புளக்கர் (Beta blockers), அல்பா புளக்கர் (Alpha blockers) போன்ற பிரஷர் மருந்துகளால் மட்டுமின்றி, பார்க்கின்சன் நோய், மனவிரக்தி ஆகியவற்றிற்கு கொடுக்கும் சில மருந்துகளாலும் இது ஏற்படலாம்.

வயதான காலங்களிலும், நீரிழிவு போன்ற நோய்களாலும் ஏற்படலாம். கர்ப்பமாயிருக்கும் பெண்களிலும் வருவதுண்டு.

படுக்கையிலிருந்து எழும்போது மயக்கம் போல வருவது இதன் அறிகுறியாகும்.

ஒரு முறை பார்த்தால் போதுமா?

ஒரு முறை பார்த்து உங்கள் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் உங்களை பிரஸர் நோயாளி எனத் தீர்மானத்திற்கு வர மாட்டார்கள்.

ஏனெனில் நேரத்திற்கு நேரம் எங்கள் பிரஸரில் மாற்றங்கள் ஏற்படும். மனப்பதற்றம், மனஅழுத்தம், உணவுவேளை போன்றவற்றாலும் மாறுபடலாம். எனவே சந்தேகம் இருந்தால் உங்களை ஒரு முறையோ பல முறைகளோ மீண்டும் வரச் சொல்லி அளவிட்ட பின்னரே இறுதித் தீர்மானத்திற்கு வருவார்.

ஒருவருக்கு பிரஸர் இருக்கிறது என முடிவானால் பொதுவாக மாதம் ஒரு முறை உங்களை பரிசோதனைக்காக அழைப்பார்கள். அது நல்ல கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டால் மூன்று மாதமொரு முறை பரிசோதிக்கக் கூடும்.

இப்பொழுது இலக்ரோனிக் பிரஸர்மானிகளையும் சில மருத்துவர்கள் உபயோகிக்கிறார்கள்.

வீட்டில் அளவிடுதல்

வீட்டுப் பாவனைக்கான அத்தகைய கருவிகள் இப்பொழுது கிடைக்கின்றன. பரவலாக விற்பனையாகிறது. சரியான முறையில் உபயோகித்தால் அவையும் நல்ல பயனுள்ளவையாகும்.

Blood-Pressure-at-Home

ஆயினும் அதனை நீங்கள் முதல் முதலாக உபயோகிக்க முன்னர் அதனைச் சரியான முறையில் இயக்குவது எப்படி என்பதை உங்கள் மருத்துவரிடம், தாதியிடம், அல்லது விற்பனையாளரிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

வீட்டில் அளவிடப்படுவதற்கு முன் அவதானிக்க வேண்டியவை

  • அமைதியாக நாற்காலியில் உட்காருங்கள். முதுகு கதிரையில் வசதியாகச் சாய்ந்திருக்க, கால்கள் இரண்டும் நிலத்தில் பதிந்திருக்குமாறு சௌகரியமாக உட்காருங்கள்.
  • இருதயத்தின் உயரத்தில் இருக்குமாறு அருகில் உள்ள மேசையில் உங்கள் கையை வையுங்கள்.
  • பிரஸர்மானியை இயக்கி அது காட்டும் அளவைக் குறித்துக் கொள்ளுங்கள். சுமார் இரண்டு நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் அவ்வாறு அளவிடுங்கள்.
  • இரண்டிலும் வேறுபாடு இருந்தால் சராசரியை அந் நேரப் பிரஸராகக் கொள்ளுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்
0.0..0.0.00.

Read Full Post »

இடுப்பு எலும்பு முறிவு (Hip Fracture) என்பது ஒரு பாரதூரமான பிரச்சனை. இது பொதுவாக வயதானவர்களிடையேதான் அதிகம் காணப்படுகிறது.

பொதுவாக 65 வயது முதல் 80 வயது வரையானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

elderly-falling

அதிலும் பெண்கள் பாதிப்படைவது அதிகம்.

விழுகைகளே அத்தகைய எலும்பு உடைவுகளுக்கு பெரும்பாலும்  காரணமாகிறன.

18026_4736_5

இடுப்பு எலும்பு உடைவு எனப் பொதுவாகச் சொன்னாலும் உண்மையில் உடைவது தொடை எலும்பின் மேற் பகுதிதான்.  இடுப்பு மூட்டுப் பகுதிக்குள் இருக்கும் எலும்பின் பகுதியே அதிகம் உடைவதுண்டு.

முதியவர்களில் இது அதிகம் வருவதற்குக் காரணம் அவர்களது எலும்புகள் நலிவடைந்திருப்பதே. அவ்வாறு எலும்பு நலிவடைவதை ஒஸ்டியோபொரோசிஸ் osteoporosis என்பார்கள்.

ஒஸ்டியோபொரோசிஸ் பற்றிய எனது முன்னைய பதிவைப் பார்க்க

பானை வயிற்றோர்களின் எலும்பு முறியாமல் காத்தல்

falls_elderly_prevention

முதுமையில் விழுகைகள் அதிகமாவதற்கு காரணங்கள் என்ன?

  • பலவிதமான மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்,
  • முதுமையின் பார்வைக் குறைபாடு,
  • அவர்கள் சமநிலையைப் பேணுவதில் படும் சிரமம்

ஆகியனவே அவர்களது விழுகைகளுக்கு காரணமாகின்றன.

fallcouple

கடுமையான வலி ஏற்படுவதும் அவர்களது நடமாட்டத்தை மட்டுப்படுத்துவதுமே இடுப்பு எலும்பு முறிவின் முக்கிய பாதிப்புகளாகும்.

எத்தகைய அறிகுறிகள் இருந்தால் நீங்கள் அதை இடுப்பு எலும்பு உடைவு எனச் சந்தேகப்பட முடியும்.

  • இடுப்புபு் பகுதியில் வீக்கமும் கண்டலும் தோன்றலாம்
  • இடுப்பின் அந்தப் பகுதியால் உங்கள் உடற் பாரத்தை சுமக்க முடியாததால் எழுந்து நிற்க முடியாது போய்விடும்.
  • நடக்க முடியாது போகும்
  • இடுப்பில் மட்டுமின்றி அந்தப் பக்க காலிலும் வலி பரவலாம்.
  • ஒருங்கே வைத்துப் பார்த்தால் அந்தக் கால் மற்றக் காலை விடக் கட்டையானது போலத் தோற்றமிளிக்கும்.

உடைவினால் படுக்கையில் கிடக்க நேர்ந்தால் படுக்கைப் புண்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிறுநீர்த் தொற்று நோய், நியூமோனியா போன்ற பிரச்சனைகள் தொடரலாம்.

மிக ஆபத்தானது குருதி நாளங்களில் இரத்தம் (Deep Vein thrombosis) கட்டிபடுவதாகும்.

சிகிச்சையாக பெரும்பாலும் சத்திரசிகிச்சையே தேவைப்படும் என்பதால் விழுந்து விடாமல் தங்களைப் பாதுகாக்க முதியவர்கள் அதிக கவனம் எடுக்க வேண்டும்.

படத்தின் மீது கிளிக் பண்ணி பெரிதாக இப்படத்தைப் பார்க்கவும்.

Falls_Prevention_Infographic (1)

விழாமல் பாதுகாப்பாக இருப்பது பற்றி மேலும் அறிய எனது முன்னைய பதிவைப் பார்க்கவும்

வயதானவர்களின் விழுகை!

மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா?

0.0.0.0.0.0

Read Full Post »

எந்த நாய் கடித்தாலும் அவதானம் தேவை.

சிறுநீரகத் தானம் பெற்றவர் ஒரு வருடத்தின பின் நீர்வெறுப்பு நோயால் காலமானார். காரணம் அவருக்கு சிறுநீரகம் தானம் செய்தவருக்கு முன்பு விசர் நாய் கடித்திருக்கிறது.

சிறுநீரக மாற்றுச் சிகிச்சை முடிந்த ஒரு வருடத்தின் பின்தான் தானம் பெற்றவருக்கு நோய் வெளியே தெரிந்தது.

பொதுவாக விசர் நாய் கடித்தால் 1 முதல் 3 மாத காலத்தில் நீர்வெறுப்பு நோய் வெளிப்படுவதுண்டு. அதுவே அந் நோய்கான நோயரும்பு காலம்  (incubation period) ஆகும்.

நீர்வெறுப்பு நோயை பொதுவாக Hydrophobia என்பார்கள். மருத்துவத்தில் Rabies எனப்படும். இந்நோய்க்கு எதிரான மருந்துகள் கிடையாது என்பதால் நோயாளி பரிதாபமாக இறக்க நேரிடும்.

இந்த நபர் இறந்ததை அடுத்து, பரிசோதனைகளை செய்த போது, அதே நபரிடமிருந்து வேறு உறுப்புகளைத் தானமாகப பெற்ற வேறு மூவர்களுக்கும் கிருமி தொற்றியிருந்ததைக் கண்டறிந்தார்கள். அவர்களுக்கு உடனடியாக விசர்நாய் தடுப்பூசி போடப்படுகிறதாம்.

நாய் கடித்தால் அவதானமாக இருங்கள். எத்தகைய நாயாலும் மருத்துவதுரை தாமதிக்காது அணுகுங்கள்.

தெருநாய், தடுப்பூசி போடப்பட்டதற்கான தகவல்கள் இல்லாத நாயாயின் உடனடியாகவே Anti Rabies Vaccine போடுவார்கள்.

எல்லாத் தடுப்பூசிகளும் போடப்பட்ட நாயானாலும் அதைப் பத்து நாட்களுக்கு அவதானமாகக் கவனிக்க வேண்டும். நோய்கான  அறிகுறிகள் நாயில் தென்பட்டால் நாய் கடிபட்டவருக்கு உடனடியாக தடுப்பூசி போட வேண்டும்.

இப்பொழுது பொக்குளைச் சுற்றிப் 14 ஊசிகள் போடுவது கிடையாது. பொதுவாக 5 ஊசிகள் 0, 3, 7,14, 30 நாட்களில் போடப்படும். சில வேறு முறைகளும் உண்டு. வேறு நடைமுறைகளும் உண்டு.

அத்துடன் காயம் சீழ்பிடிக்காது மருத்துவம் செய்வதுடன் ஏற்புத் தடை ஊசியும் (Tetanus Toxoid) போடப்படும்.

தானமாக உறுப்புகள் பெறப்படும்போது அவருக்கு ஹெப்படைடிஸ், HIV, Syphilis போன்ற நோயத் தொற்று இருக்கிறதா எனப் பரிசோதிக்கப்படுவார. ஆனால் rabies பரிசோதனை செய்யப்படுவதில்லை. ஏனெனில் குறுகிய கால அவகாசத்தில் அவ்வாறு செய்வது முடியாது என்பதுடன் rabies மிக பரவலான நோயும் அல்ல.

வருடாந்தம் உலகளாவிய ரீதியில்  55,000  பேர் இந்நோயால் மரணத்தைத் தழுவுகிறார்கள். இவர்களில் 95% சதவிகிதமானோர் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளைச்சேர்ந்தவர்களாகும். இலங்கையில் 50 முதல் 60 பேர் வருடாந்தம் இந் நோயால் இறப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

நீர்வெறுப்பு நோய் பொதுவாக நாய்கடிப்பதாலேயே இலங்கையில் ஏற்படுகிறது. ஆயினும் cats, mongoose, jackals and bandicoot போன்றவவை கடிப்பதாலும் தொற்றலாம்.

வளர்ப்பு நாய்களுக்கு ஒழுங்கான காலக்கிரமத்தில் விசர்நாய்த் தடுப்பூசி போடுவதன் மூலம் உங்கள் வீட்டுக் குழந்தைகளையும் உங்களையும் வெளியாரையும் இந்நோய் தொற்றாமல் தடுங்கள்.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான பதிவு இது சிறுநீரக மாற்றீடு சிகிச்சை செய்யப்பட்டவர் நீர்வெறுப்பு நோயால் மரணம்

தகவலுக்கு நன்றி Physician’s First watch.

Read Full Post »

 பிள்ளைகள் சாப்பிடுகிறார்கள் இல்லை என்பதே பல பெற்றோர்களின் ஆதங்கம்.

பெற்றோர்கள் இருவரும் வேலைக்குசெல்வதால் ஆன முறையில் சமைத்துக் கொடுக்க முடிவதில்லை என்பது மற்றொரு பிரச்சனை.

fruit smoothie

சிரமம்பட்டுச் சமைத்தாலும் பிள்ளைகளுக்கு அந்தச் சாப்பாடுகள் பிடிப்பதில்லை என்பதும் ஒரு சிக்கல்.

அதிகாலையில் பாடசாலை, திரும்பி வந்ததும் அவசரமாக எதையாவது வயிற்றில் திணித்துவிட்டு ரியூசனுக்கு ஓட வேண்டும்.

நின்று நிதானித்து ரசித்துச் சுவைத்துச் சாப்பிட நேரமும் இல்லை. அவர்களுக்குப் பிடித்த சாப்பாடும் வீட்டில் கிடையாது.

என்ன செய்யலாம்?

சமையலறையில்  காலத்தை வீணடிக்காமலே அவசரமாக அதே நேரம் சுவையாகவும் குழந்தைகள் விரும்பும் வண்ணம் தயாரித்துக் கொடுப்பதற்கான குறிப்புகளை அமெரிக்காவின் Academy of Nutrition and Dietetics தந்திருக்கிறது

  • உரித்த முழு வாழைப்பழத்தை யோகொட்டினுள் (yogurt) அமுக்கி எடுங்கள். அதை ஏதாவது crushed cereal அரிசிமாக் குருணல், அல்லது ரவை போன்ற ஒன்றில் போட்டு உருட்டி எடுங்கள். பிரிட்ஜில் வைத்து உறையவிட்டு பின் உண்ணக் கொடுங்கள். குளிரக் குளிர போஸாக்கான உணவு என்பதால் மறுக்காமல் விரும்பி உண்பார்கள்.

  •  பப்பாசி, மாம்பழம், விளாம்பழம், வாழைப்பழம் போன்ற ஏதாவது ஒன்றின் குளிரவைத்த பழச்சாறை அரைக் கப் அளவு எடுங்கள், மீதி அரைக் கப்பிற்கு யோகட்டை எடுத்து நன்கு அடித்ரதுக் கலவுங்கள். சுவையான இந்த fruit smoothie குழந்தைகளுக்கு விருப்பமானதாக இருக்கும் அதே நேரம் போஜனை நிறைந்தது.

  • அலங்கார சான்விட்ச் . பிள்ளைகளுக்கு விருப்புடையதாக இருக்கும் வண்ணாத்துப் பூச்சி, டைனோசயர், இருதயம், நட்சத்திர வடிவிலான குக்கி கட்டரை உபயோகித்தால் விதவிதமாக அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்யலாம். பதனிடப்பட்ட இறைச்சி, கொழுப்புக் குறைந்த சீஸ், பாண் ஆகியவை கொண்டு செய்யலாம்.

  • பீநட் பட்டர், கோர்ன் பிளேக், பிறான்(Bran flake)  பிளேக் போன்ற யாவற்றையும் ஒரு கோப்பையில் இட்டு நன்கு கலவுங்கள். உருண்டையாக உருட்டி எடுத்த பின்னர் அவற்றை வறுத்த கச்சான், கடலை, அல்லது கஜீ குருணலில் உருட்டி எடுத்துச் சாப்பிடக் கொடுங்கள்.

நம்ம நாட்டிற்கு

இவை யாவும் பிரிட்ஜ் வசதியுள்ளவர்களுக்குத்தானே. இன்னமும் மின்சாரமும் பிரிட்ஜ்சும் கிடைக்காத குக்கிராமங்களில் உள்ளவர்கள் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறதல்லவா?

பொரிச்ச அரிசிமா, உழுந்துமா புளுக்கொடியல்மா என எமது அம்மாக்கள், அம்மம்மாக்கள் தயாரித்து போத்தலி்ல் போட்டு வைத்திருந்துதான் பிள்ளைகளுக்கு அவசர உணவுகளைக் கொடுத்தார்கள்.

இன்றைக்கும் கூட இவற்றைத் தயாரித்து வைக்கலாம்.

நன்றி http://sinnutasty.blogspot.com/2008/07/blog-post.html

அவல் மற்றொரு சுலப உணவு. தேங்காயப்பூ சீனி போட்டுத் தயாரிக்கலாம். சற்றுப் போசனை அதிகம் வேண்டுமெனின் தயிர் அவலில் பழத்துண்டுகளைக் கலந்து கொடுக்கலாம்.

அவசரத்திற்கு புருட் சலட்டிற்கு ஐஸ்கிறீம் சேர்த்துக் கொடுக்கலாம். பழச்சத்துடன் பால் சீனி கலந்திருப்பதால் புரதம், இனிப்பு விற்றமின் அனைத்தும் அதில் கிடைக்கும்

ஹாய் நலமா புளக்கில் வெள்யான பதிவு மாணவர்களுக்கு போசாக்கான அவசர உணவுகள்

0.0.0.0.0.0.0

Read Full Post »