Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஓகஸ்ட், 2013

இன்று உலகம் சுருங்கிவிட்டது. மக்களின் பயணத் தேவைகளும் அதிகரித்து விட்டன. உள்நாட்டுப் பயணங்கள் மாத்திரமின்றி வெளிநாட்டுப் பயணங்கள் கூட அதிகரித்துவிட்டன. சாதாரண மனிதர்கள் மாத்திரமின்றி கர்ப்பமாயிருக்கும் பெண்கள் கூட அடிக்கடி பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தங்களும் தேவைகளும் எழுகின்றன.

‘நான் கர்ப்பமுற்றிருக்கிறேன். இந்த நிலையில் நான் வெளிநாடு செல்ல வேண்டியிருக்கிறது. விமானப் பயணம் செய்யலாமா?’ என்ற கேள்வியுடன பல பெண்கள் வருகிறார்கள்.

Pregnancy-and-Air-Travel

 • விமானப் பயணம் செய்தால் ஏதாவது ஆகுமா?
 • தனது கருவிற்கு ஏதாவது ஆபத்தை ஏற்படுத்துமா?
 • இரத்தப் பெருக்கு ஏற்படுமா?
 • கருச்சிதைவு ஏற்பட்டு விடுமா?

போன்ற பயங்கள் அவர்களுக்கு ஏற்படுகின்றன.

உண்மையைச் சொல்லப் போனால் கரு வலுவாக, ஆரோக்கியம் உள்ளதாக இருந்தால், வீதியிலோ, வானத்திலோ எந்த விதமான பயணங்களும் தாய்க்கோ, வயிற்றில் வளரும் கருவிற்கோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது. எந்தப் பிரயாணத்தையும் தாக்குப் பிடிக்கக் கூடிய சக்தி சாதாரண கர்ப்பத்திற்குண்டு.

hpiPregTravel_default

ஆயினும் சில நோயுள்ளவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானதே.  உதாரணமாக

 • கடுமையான இரத்தசோகை உள்ளவர்கள்.
 • சூல்வித்தகம் ஊடாக கருவிற்கு போஷணைப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதில் பாதிப்பு உள்ளவர்கள் (Placental insuficency).
 • குருதி உறையக் கூடிய வாய்ப்புள்ளவர்கள்.
 • சிக்கிள் செல் (Sickle cell anaemia) நோயுள்ளவர்கள்

இவர்கள் வைத்திய ஆலோசனையுடனேயே விமானப் பயணம் செய்ய வேண்டும்.

கர்ப்பமாயிருக்கும் முதல் 12 வாரங்களில் பலருக்கு வயிற்றும் புரட்டு, வாந்தி, களைப்பு போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் இவற்றிற்காக அவசரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை. மருத்துவரின் ஆலோசனையுடன் வேண்டிய முன்னேற்பாடுகளுடன் பயணிக்கலாம்.

உங்களுக்கு விமானப் பயணம் பற்றிய சில தொழில்நுட்பத் தகவல்கள் தெரிந்திருந்தாலும் உங்களுக்கு விமானப் பயணம் மேலும் பயத்தை ஏற்படுத்தக் கூடும்.

காற்றமுக்கம்

விமானம் பயணம் செய்யும்போது விமானத்திற்குள் இருக்கும் காற்று அழுத்தமானது விமானம் உயர்ந்து செல்வதற்கு ஏற்பக் குறைக்கப்படுகிறது. உண்மையில் அதன் காற்றமுக்கம் வானவெளியில் 5,000 அடிக்கும் 8,000 அடிக்கும் இடைப்பட்ட உயரத்தில் இருக்கும் வானவெளியின் காற்றமுக்க அளவிற்குக் குறைகிறது.

காற்றமுக்கம் குறைவதால் உங்களினதும், உங்கள் குழந்தையினதும் இரத்தத்தில் உள்ள ஒட்சிசனின் அளவும் குறையவே செய்யும். ஆனால் இதையிட்டு நீங்கள் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. பாதிப்பு ஏதும் ஏற்படாது. உங்களதும் கருவினதும் உடல்கள் குறைந்தளவு ஒட்சிசனின் அளவுக்கு ஏற்ப தம்மை இலகுவாக இசைவடையச் செய்துவிடும் ஆற்றல் கொண்டவை.

கதிர் வீச்சு

இன்னுமொரு உங்கள் சந்தேகம் கதிர் வீச்சுகள் பற்றியதாக இருக்காலாம். இவை கருவைப் பல விதத்திலும் பாதிக்கலாம் என்பது உண்மையே. கதிர் வீச்சுகளால் கருச்சிதைவு ஏற்படலாம். அங்கக் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கலாம். இதனால்தான் கருவுற்றிருக்கும்போது கர்ப்பிணிகளை எக்ஸ்ரே எடுப்பதைக் கூட இயலுமானவரை தவிர்க்கிறார்கள்.

விமானத்தில் உயரப் பறக்கும் போது சூரியனின் கதிர் வீச்சு கூடியளவில் வரும் என்பதால் குழந்தையைப் பாதிக்குமா என நீங்கள் ஜயுறக் கூடும். உண்மைதான் தரையிலிருப்பதை விட வானத்தில் சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சு சற்று அதிகமாக இருக்கவே செய்யும். ஆயினும் அது கருச்சிதைவையோ அங்கக் குறைபாட்டையோ ஏற்படுத்தக் கூடியளவு செறிவு கூடியதல்ல. எனவே தயக்கமின்றிப் பயணம் செய்யலாம்.

Ack-Ook-flickr0

விமான நிலையத்தில் செய்யப்படும் ஸ்கான் பரிசோதனையானது எக்ஸ் கதிர் கொண்டவை அல்ல. அவற்றால் ஆபத்து இல்லை.

மிகவும் பாதுகாப்பான காலம்

சரி கர்ப்பமுற்றிருக்கும் காலத்திலும் பயணம் செய்யலாம் என்பது தெளிவாகிவிட்டது. ஆயினும் கர்ப்பத்தின் எந்தக் காலத்தில் பயணிப்பது மிகவும் பாதுகாப்பானது என்று கேட்டால் கர்ப்பத்தின் நடுப்பகுதி என்று தயக்கமின்றிச் சொல்லாம். அதாவது 18 முதல் 24 வாரம் வரையான காலம் என்று சொல்லலாம். ஏனெனில் பொதுவாகவே இக் காலகட்டத்தில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகும்.

ஆனால் இந்தக் காலத்தில் மட்டும்தான் விமானப் பயணம் செய்யுங்கள் என்பது இதன் அர்த்தமல்ல.

அடுத்ததாக மிக ஆபத்தான காலம் என்று எதனைச் சொல்லாம் என்று நீங்கள் கேட்கக் கூடும்.. பயணத்தின்போது திடீர் மகப்பேறு ஏற்படாதிருக்கக் கூடிய காலம்தான். எனவே கர்ப்பத்தின் இறுதியை அண்மிக்கின்ற, அதாவது 36 வாரத்திற்குப் பிந்திய காலத்தில் பயணம் செய்வது அவ்வளவு உசிதமானதல்ல என்றே பெரும்பாலான வைத்தியர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.

அதிலும் காலத்திற்கு முந்திய பிரசவம் ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளவர்கள் முக்கியமாக இக்காலகட்டத்தில் பயணிப்பதைத் தவிர்ப்பது நல்லது. முக்கியமாக இரட்டைக் குழந்தைகள் உள்ளவர்கள் 34 வாரங்களுக்குப் பின்னர் அவதானமாக இருப்பது நல்லது.

தடுப்பு ஊசிகள்

சில நாடுகள் தங்கள் நாட்டிற்குள் நுழைபவர்கள் சில மேலதிக தடுப்பு ஊசிகள் போடவேண்டும் என எதிர் பார்க்கின்றன. பல மேலை நாட்டிலுள்ளவர்கள் ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்குப் பயணப்படும்போது மலேரியத் தடுப்பு மாத்திரைகள் உபயோகிக்க வேண்டும் என்கின்றன. இவற்றில் சில பக்க விளைவுகள் உள்ளன. எனவே மருத்துவரிடம் தெளிவான ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

waterDrink_large
விமானப் பிரயாணத்தின் போது

 • விமானப் பயணத்தின் போது போதியளவு நீராகாரம் அருந்துவது அவசியமாகும். ஏனெனில் விமானத்திற்குள் இருக்கும் வளியின் ஈரலிப்புத்தன்மை குறைவாகும். இதனால் உங்கள் உடலின் நீர்த்தன்மையும் குறைய நேரும். இதனைத் தவிர்ப்பதற்காகவே விமானப் பயணத்தின் போது போதிய நீராகாரம் அருந்துவது முக்கியமானதாகிறது.
 • விமானத்தில் பறக்கும்போது பல சந்தர்ப்பங்களில் இருக்கைப் பட்டி (Seat belt) அணிய நேரிடும். முக்கியமாக விமானம் மேல் எழும்போதும், இறங்கும்போதும் இருக்கைப் பட்டி அணியுங்கள் என விமானப் பணியாளர்கள் எல்லோரையும் வேண்டுவார்கள். நீங்கள் கர்ப்பிணியாக இருந்தால் இருக்கைப் பட்டியை வயிற்றிக்குக் குறுக்காக இறுக்கமாக அணியாதீர்கள். மாறாக அடி வயிற்றுப் பகுதியைச் சுற்றி அதாவது உங்கள் தொடைகளும் வயிறும் இணையும் பகுதியைச் சுற்றியே இருக்கைப் பட்டியை அணியவேண்டும்.
 • விமானப் பயணம் பலமணிநேரம் நீடிக்கலாம்.  நீண்ட நேரம் கால்களுக்கு அதிக வேலை கொடுக்காது உட்கார்ந்திருந்தால் கால்களிலுள்ள நாளங்களில் குருதி உறையக் (Deep vein thrombosis)கூடிய வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்ப்பதற்காக விமானப் பிரயாணத்தின் போது ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு ஒரு முறை உங்கள் இருக்கையை விட்டு எழுந்து சற்று நடவுங்கள். இடையிடையே பாதங்களை மடக்கி நீட்டிப் பயிற்சி கொடுப்பதும் நாளங்களில் குருதி உறையாமல் தடுக்க உதவும்.
 • விமானப் பயணத்தின் போது உங்களுக்கு ஏற்ற இருக்கையைத் தேர்ந்தெடுப்பதும் நல்லதாகும். அவ்வாறான இருக்கையை ஒதுக்குமாறு கோருங்கள். விமானத்தின் இறைக்கைகளுக்கு அண்மையான இருக்கைகள் அதிக குலுக்கமின்றிப் பயணிக்க உதவும். விமானத்தின் தலைப் பகுதியிலும் பக்கவாட்டிலும் உள்ள இருக்கைகள் பொதுவாக விசாலமானவை. சௌகர்யமான பயணத்திற்கு ஏற்றவை. எனவே விமானப் பணியாளர்களுடன் கலந்தாலோசித்து உங்களுக்கு ஏற்ற இருக்கையைத் தேர்ந்தெடுங்கள்.

இவ்வாறான சாதாரண விடயங்களைக் கவனத்தில் எடுத்தால் உங்கள் விமானப் பயணம் பாதுகாப்பாகவும், பயமின்றியும், சௌகர்யமாகவும் அமையும்.
கவலையை விடுங்கள், மகிழ்வோடு சிறகுகளை விரியுங்கள்.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை இது.

கர்ப்ப காலத்தில் விமானப் பயணம் பாதுகாப்பானதா?
Dr.M.K.முருகானந்தன்

M.B.B.S(Cey), D.F.M(SL), F.C.G.P(SL)

குடும்ப வைத்திய நிபுணர்

00.00.00

Read Full Post »

வாடகைத் தாய்மார்கள்

மருத்துவத்தின் மறுபக்கம்

முப்பதே வயதுடைய அந்த இளம் பெண்ணின் மரணம் எந்தச் சலசலப்புமின்றி பத்தோடு பதினொன்றாக மறக்கப்பட்டுவிட்டது. பத்திரிகைகள் தலைப்புச் செய்தி கொடுக்கவில்லை. தொலைக்காட்சிச் சனல்கள் கண்டு கொள்ளவில்லை. யாரும் அவளது இறப்பைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. அவளது உறவினர்கள் கூட கேள்வி எழுப்பாது மௌனம் காத்தனர்.

2226-2

கள்ள மௌனம் என்பது அதுதானோ?

அகாலமாக இறந்த அந்தப் பிரமிளா பெற்றெடுத்த குழந்தைக்கு உடனடியாகவே அதிஉச்ச மருத்துவ உதவி கொடுக்கப்பட்டது. அது நிறைமாதப் பிள்ளை அல்ல. தாயின் ஆபத்தான உடல் நிலை கருதி 8 மாதத்தில் அவசர சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் பிறக்க வைக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கா செல்லப் போகிற குழந்தை அல்லவா? அதிசிறந்த மருத்துவ உதவிகள் கொடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.

தாய் ஏன் இறந்தாள்?

அஹமதாபாத்தைச் சேர்ந்த பெண்களுக்கான பல்ஸ் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியான Dr.Manish Banker இந்த மரணம் பற்றி இவ்வாறு சொன்னதாக அக்கறையுள்ள ஒரு சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ‘வழமையான மருத்துவப் பரிசோதனைக்கு வந்த அந்தப் பெண் திடீரென ஏற்பட்ட வலிப்பினால் மயங்கி விழுந்திருந்தாள். உடனடியாக அவளை சிகிச்சைக்கு எடுத்தோம். கடுமையான நிலையில் இருந்ததால் உடனடியாக அவசர சிசேரியன் சத்திரசிகிச்சை செய்தோம்’.

சத்திரசிகிச்சைக்கு ஆளாக்கப்பட்ட பிரமிளா உடனடியாக வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள். மாற்றப்பட்டதற்குக் காரணம் அத்தகைய ஆபத்தான நோயாளிகளை கையாள்வதற்கான வசதி அங்கு இல்லை என்பதாகவே இருக்கலாம். சடுதியான இருதய நிறுத்ததால் (Cardiac Arrest) கடுமையான நிலையில் இருந்த அவள் சிகிச்சை பயனளிக்காது அங்கு இறந்தாள்.

அந்தத் தாயின் உயிர் துச்சமானதாகவும், குழந்தையின் உயிர் பெறுமதிமிக்கதானதாகவும் ஆனது எதனால்?

வாடகைத் தாய்

காரணம் அவள் ஒரு சாதாரண வாடகைத் தாய். குழந்தையோ அமெரிக்க மில்லியனரின் உயிரியல் சுவடுகளைச் சுமக்கும் மறைமுக பணக்கார வாரிசு.

வாடகைத் தாய்களின் பிரச்சனை இலங்கையில் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் எமது அயல்நாடான இந்தியாவைப் பொறுத்தவரையில் பெருமளவு இருக்கிறது.  சுமார் 25,000 குழந்தைகள் வருடாந்தம் வாடகைத் தாய்மாரால் பெற்றெடுக்கப்படுவதாக மதிக்கப்படுகிறது. வெளியே அதிகம் பேசப்படாத தொழிலாக இருந்தபோதும் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி மிக்கதாக இருக்கிறது.

இவர்களில் இரு வகைகள் உண்டு.

 1. கரு முட்டை, விந்து இரண்டுமே வெளியிலிருந்து பெறப்பட்டு, செயற்கையாக இணைய வைக்கப்பட்டு அதனால் பெறப்பட்ட கருமுளையை (நுஅடிசலழ) வாடகைத் தாயின் கருப்பையில் வைத்து வளரச் செய்தல் ஒரு முறை. இங்கு கருப்பையில் வளரும் குழந்தைக்கும் வாடகைத் தாய்க்கும் எந்தவித ஜெனடிக் தொடர்பும் கிடையாது.
 2. இரண்டாவது முறையில் வாடகைத் தாயின் கரு முட்டையை வாடகைக்கு பெறும் ஆடவனின் விந்துடன் செயற்கையாக இணையச் செய்து பின் இவளது கருப்பையில் வைத்து வளரச் செய்தலாகும். இங்கு அது அவளது குழந்தை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆத்மார்த்த ரீதியான தொடர்பு இங்கு அவளுக்கும் மிகவும் நெருக்கமானது என்பதில் சந்தேகம் இல்லை.

பணம் கொழிக்கும் தொழில்

தாயின் ஆரோக்கியத்தை விட பணத்தை மட்டும் குறியாகக் கொண்டு இயங்கும் இந்தத் தொழிலானது சட்டங்களில் கைகளில் அகப்படுவது இல்லையென்றே சொல்லாம்.

இதற்குக் காரணம் வலுமிக்க டொலர்களின் பெறுமதிக்கு முன்னால் அபலைப் பெண்களின் தீனமான குரல்கள் அடங்கிப் போகின்றன என்பது மட்டுமல்ல. காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப புதிய சட்டங்கள் இயற்றப்படாமல் தாமதப்படுத்துவதும் மற்றொரு காரணமாகும். செயற்கைக் கருவூட்டல் கிளினிக்குகள் (IVF) என்ற பெயருக்குள் மறைந்து நின்று செயலாற்றுவதால் வெளிப்படையாகத் தெரிவதில்லை என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும்.

 • உலகளாவிய ரீதியில் ஆண் பெண் இருபாலாரது மலட்டுத்தன்மையும் அதிகரித்து வருகின்ற நிலையில் தமக்மென ஒரு வாரிசை மாற்று வழிகளில் தேடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிதுள்ளது. தெரியாத ஒரு குழந்தையைத் தத்தெடுப்பதை விட தமது உயிரில் கூறுகளைக் கொண்ட கொண்டிருக்கக் கூடிய குழந்தையை செயற்கை கருவூட்டல் முறையில் பெறுவது விருப்புடையதாக இருக்கிறது. மேற்கூறிய கிளினிக்குகள் அவர்களது தேவையைப் பூர்த்தி செய்ய முனைகின்றன.
 • இந்தியாவின் பெரிய நகர்கள் எங்கும் இத்தகைய கிளினிக்குகள் இயங்குகின்றன. இப்பொழுது சிறிய பட்டினங்களிலும் தலை தூக்குகின்றன.
 • இங்கு செயற்கையாகக் கருவூட்டப்பட்டு கிடைக்கும் குழந்தைகளில் 50 சதவிகிதத்திற்கு மேலானவை மேலை நாடுகளிலிருந்து வரும் பணக்காரர்களுக்காகவே உற்பத்தியாகின்றன.
 • குழந்தையின்மைக்கான சிகிச்சைகளும், வாடகைத் தாய்மாரைப் பிடிப்பதும் இந்தியாவில் மலிவானது என்பதால்தான் இங்கு இத்தொழில் சூடுபிடித்துள்ளது.
 • இக் கிளினிக்குகளின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை கிடையாது. வாடகைத் தாயோடு செய்யப்படும் ஒப்பந்தங்களில் உள்ள நுணுக்கமான சரத்துகளால் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் வாடகைக்கு அமர்த்திய பெற்றோர்கள் பிரச்சனைகளுக்குள் அகப்படாமல் தப்பிக்க முடிகிறது. பாதிப்புறுவது அப்பாவிப் பெண்களே.
 • எதிர்பாராதவிதமாக வாடகைத் தாய்க்கு கடுமையான நோய் அல்லது பாதிப்பு கர்ப்பத்தின் ஏற்பட்டால் கருவைக் காப்பதற்காக அவளது உயிரைத் தக்க வைத்திருப்பதற்கான சரத்துகளும் அவ் ஒப்பந்தங்களில் அடங்கியிருக்கும். அதாவது தாயைக் காப்பாற்றுவதற்காக அல்ல, கருவை உயிருள்ள குழந்தையாகப் பெற்றெடுக்க வைப்பதற்காக. அவளது உயிரை செயற்கையாக இயந்திரங்களால் தேவைப்படும் காலம் வரை இயங்க வைப்பார்கள்.
 • தாயின் உயிருக்கு ஆபத்து எற்பட்டால் அவளது குடும்பத்தினருக்கு பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். கதை அத்துடன் மூடி வைக்கப்படும். பாவம்! இதுதான் பிரமிளாவின் கதையும் ஆயிற்று

மருத்துவ ரீதியான பாதிப்புகள்

குழந்தையற்றவர்களுக்கு அவர்களது உயிரணுக்களின் கூறுகளை கொண்ட வாரிசுகளை உருவாக்கும் குழந்தை உற்பத்தித் தொழிற்சாலைகள் இவை. வறுமையில் உழலும் இந்தியப் பெண்கள் அதற்காக தமது கருப்பைகளை  வாடகைக்குக் கொடுக்கிறார்கள். இந்த மருத்துவச் செயற்பாட்டால் அந்த வாடகைத் தாய்க்கு ஏற்படும் உடல், உள ரீதியான பாதிப்புகள் பேசப்படாமலே போய்விடுகின்றன.

11381461-surrogate-mothers

தனது வயிற்றில் வளரும் அந்தக் குழந்தையின் ஒவ்வொரு சிறு துடிப்பையும் அசைவுகளையும் உணர்ந்து, அதனோடு மௌன மொழியில் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு, அதன் வளர்ச்சியில் பத்து மாதங்களாக மகிழ்ந்து நின்ற தாய் சேய் உறவானது ஒரே நிமிடத்தில் அறுத்துப் பிரிக்கப்படுகிறது.

அந்தக் குழந்தைக்கென அவளது உடல் உற்பத்தி செய்யும் முலைப்பாலானது பிரிவின் ஏக்கத்தில் சுரக்கும் அவளது கண்ணீருடன் கலந்து விரயமாகிறது. அவளுக்குப் பரிசாகக் கிடைக்கும் பிரிவாற்றாமை, தனிமையுணர்வு, குற்றவுணர்வு, மனப் பதற்றம், விரக்தி ஆகியற்றுடன் தனது வாழ் நாளைக் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறாள். அபாக்கியவதியாகிறாள்.

கரு கலைந்து போகாமல் இருப்பதற்காக அவளுக்கு ஏராளமான ஹோர்மோன் ஊசிகள் தொடர்ச்சியாகப் போடப்படுகின்றன. இவற்றால் அவளது எதிர்கால நலத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் ஏராளம். அவளது மாதவிடாய் சக்கரத்தின் ஒழுங்குமுறை  பாதிப்புறுகிறது.

மகப்பேறு பெரும்பாலும் இயற்கையானதாக இருப்பதில்லை. அவளது கருப்பையை வாடகைக்குப் பெறுபவர்களின் கால நேர விருப்பங்களுக்கு ஏற்ப மகப்பேற்று நேரம் தள்ளிப் போட அல்லது முன்னகர்த்தப்படுகிறது.

சிசேரியன் சத்திரசிகிச்சை மூலமே குழந்தை பெறுவிக்கப்படுகிறது. இது மருத்துவ காரணங்களுக்கானது அல்ல. பணம் கொடுத்தவர்களின் தேவைகளுக்காகவே நடக்கிறது. அவசியமற்ற இத்தகைய சத்திர சிகிச்சை மூலம் அவள் வாழ்நாள் முழுவதும் படப்போகிற உடல் உள பாதிப்புகள் கவனத்தில் எடுக்கப்படுவதே இல்லை.

professional-surrogate-gives-away-13th-baby__oPt

தவறான நடைமுறைகள்

மருத்துவ ரீதியான வேறு பல தவறான நடத்தைகளுக்கும் இத் தொழிலில் குறைவில்லை.

முக்கியமானது நான்கிற்கு மேற்பட்ட கருமுளைகள் (embrayo) ஒரு தடவையில் அவளது கருப்பைக்குள் வைக்கப்படுகிறது. சில கலைந்தாலும் ஒன்றாவது தப்பும் என்ற காரணத்திற்கான ஏற்பாடு இது. பிற்பாடு தமது தேவைக்களுக்கு ஏற்ப கருக்குறைப்புச் (foetal reduction)செய்யப்படுகிறது. பெரும்பாலான மருத்துவர்களால் ஏற்கப்படாத மருத்துவ நெறிமுறையாக இது இருக்கிறது.

பெண்கள் ஏன் இணங்குகிறார்கள்

பாதிப்புகள் இருந்தபோதும் பல பெண்கள் வாடகைத் தாயாவதற்கு ஏன் தயாராக இருக்கிறார்கள்?

பொருளாதார நிர்ப்பந்தங்கள் தான். நிதம் குத்தென ஏறிச் செல்லும் வாழ்க்கைச் செலவில் தமது நாளாந்த வாழ்வைக் கொண்டிழுப்பதே பெரும்பாடாக இருக்கிறது. தமது பொருளாதாரத்தை தக்க வைப்பதற்கு அவளிடம் இருக்கக் கூடிய ஒரே மூலதனம் அவளது கருப்பை ஒன்றுதான். அதை வாடகைக்கு விடுவதன் மூலம் தனது வீட்டுப் பொருளாதாரத்தைச் சமாளிக்க முடியும். சிலரால் தமது பிள்ளைககளுக்கு நல்ல கல்வி வழங்க முடிந்திருக்கிறது. சிலரால் சிறிய வீடு ஒன்றைத் தங்களுக்கு சொந்தமாகக் கட்டிக் கொள்ளவும் முடிந்திருக்கிறது.

types-of-surrogacy-10

இதனால் ஒரு கருவை வயிற்றில் சுமக்கும்போதே மற்றதை சுமப்பதற்கான ஆயத்தங்களைச் செய்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

இருந்தபோதும் இவர்கள் யாவரும் தாம் வாடகைத் தாயாக இருப்பதால் ஏற்படப் போகும் பாதிப்புகளையும், தாங்கள் செய்யும் ஒப்பந்தங்களிலுள்ள ஓட்டைகளையும் புரிந்து அப் பணிக்கு செல்பவர்கள் அல்ல. நவயுகத்திற்கான புதிய சட்டங்கள் அவர்களைக் காக்க வேண்டும்.

இவ் ஏழைப் பெண்களின் ஆரோக்கியத்தைவிட பணம் கொழிப்பவர்களுக்கு குழந்தை பெற்று கொடுப்பதால் தமக்குக் கிடைக்கப்போகும் ஆதாயங்களையே நினைக்கும் மருத்துவர்களின் செயற்பாடுகள் அவர்களது தொழில் தர்மத்திற்கு ஏற்றதல்ல. இதற்குக் காரணம் மருத்துவத் தொழில் என்பது சேவை என்பதற்கு அப்பால் பணமீட்டும் தொழிலாக மாறிவிட்டது. எல்லா மருத்துவர்களும் அவ்வாறு இல்லாவிட்டாலும் அத்தகையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது கவலையான விடயம்தான்.

எனது ஹாய் நலமா புளக்கில் 9th September 2012  வெளியான கட்டுரை வாடகைத் தாய்மார்கள் மருத்துவத்தின் மறுபக்கம்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்

Read Full Post »

ஏன்? எதனால்?
அலட்சியம் செய்ய முடியாத சத்தம்
குழந்தையின் அழுகுரல் மட்டுமே.

‘காது கொடுத்துக் கேட்டேன் குவா குவா சத்தம்.’  எம்.ஜீ.ஆர் வாயசைத்துப் பாடியது ஞாபகத்திற்கு வருகிறது. மனiவியின் வயிற்றில் காது வைத்துக் கேட்டபடி அவர் பாடினார். உண்மையில் காது கொடுத்தும் அவரால் குழந்தையின் சத்தத்தைக் கேட்டிருக்க முடியாது.

ஆனால் அவளின் கவர்ச்சியான வயிற்றில் தனது காதை வைத்ததில் அவர் கிளர்ச்சியடைந்தார் என்பதே நிசம். அது காமக் கிளரச்சி.

காது கொடுத்துக் கேட்காவிட்டாலும்

மாறாக, காது கொடுத்துக் கேட்காவிட்டால் கூட எந்தக் குழந்தையின் திடீர் அழுகைச் சத்தம் எழும்போதும் நாம் கிளர்ச்சியடைகிறோம். ஆனால் அது ஆனந்தக் கிளரச்சியல்ல. என்னவோ எதுவோ எனப் பதற வைக்கும் சஞ்சலக் கிளர்ச்சி.

குழந்தையின் அழுகைச் சத்தம் மிகவும் வீரியம் மிக்கது. ஒரு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டிருக்கும்போது அல்லது பஸ்சில் பிரயாணம் செய்து கொண்டிருக்கையில் திடீரென ஒரு குழந்தையின் வீரிட்டு அழும் சத்தத்தைக் கேட்டால் யாராலும் அதை அசட்டை செய்ய முடியாது.

crying-baby

செய்யும் காரியத்தை பட்டெனக் கைவிட்டு என்னவாயிற்று எனப் பார்க்கத் தூண்டும். ஏதாவது செய்ய வேண்டும் என ஓடிச் சென்று உதவ முற்படும்.

பதப்படுத்தப்படும் மூளை

இதற்குக் காரணம் என்ன?

எமது மூளையானது அதற்குப் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தமது ஆய்வுகளின் அடிப்படையில் கூறுகிறார்கள்.
ஒரு தாயானவள் தான் தூங்கிக் கொண்டிருக்கும் போது கூட தனது குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் பதறி எழுகிறாள். அது அவளது குழந்தை. அதற்கு என்னவாயிற்றோ என்ற அவளது தனிப்பட்ட பாசம் காரணம் என்று சொல்லலாம்.

ஆனால் விஞ்ஞானிகளின் ஆய்வு அதற்கு அப்பாலும் செல்கிறது. தாயாக இருக்க வேண்டியதில்லை, தந்தையாகவும் இல்லை, அவர்கள் வீட்டுக் குழந்தையாகக் கூட இருக்க வேண்டியதில்லை. இதுவரை தாயாகவோ தந்தையாகவோ அனுபவப்பட்டிருக்க வேண்டியது கூட இல்லை.

எந்தக் குழந்தையின் அழுகையும் எந்த ஒரு நபரையும் அதிர்வுக்கு ஆட்படுத்தும் என்கிறார்கள்.
ஆங்கிலத்தில் படித்த ஒரு கவிதையின் இரு வரிகள் இவ்விடத்தில் ஞாபகம் வருகிறது. ‘புயலாக எழுந்து இடிமுழக்கமாக அதிர..’ வைக்கிறது குழந்தையின் அழுகை என்கிறது.

A baby’s cry is like a storm,
Like the thunder in the sky.

கவிஞனை மட்டுமல்ல எவரையுமே அவ்வாறு அதிர வைக்கும் என்பது உண்மையே.

‘சூழலிலிருந்து எழும் மற்றெந்தச் சத்தங்களையும் விட குழந்தையின் அழுகுரல் எமது மூளையின் கவனத்தை ஈர்க்கிறது’ என்கிறார் ஒக்ஸ்வோர்ட் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த Katie Young. இவர்தான் ‘குழந்தையின் அழுகுரல் எவ்வாறு மூளையைப் பாதிக்கிறது’ என்பது பற்றிய ஆய்வு செய்த குழுவின் தலைவராவர்.

வேகமாகக் கணிக்கும் விசேட ஆய்வு

ஆய்வு செய்தது எப்படி என்கிறீர்களா?

28 பேரின் மூளையை ஸ்கான் செய்தார்கள். வழமையான ஸ்கான் அல்ல.

magneto encephalography, எனப்படும் அதிவேகமாக மூளையின் செயற்பாட்டை கணிக்கக் கூடிய விசேட ஸ்கான் அது. குழந்தையின் அழுகுரலைக் கேட்கும்போது மட்டுமின்றி, பெரியவர்கள் அழும்போது, நாய் பூனை போன்ற மிருகங்கள் வேதனையில் அனுங்கும்போதும் அவர்களது மூளையை ஸ்கான் செய்து பார்த்தார்கள்.

குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் மூளையின் சில பகுதிகளில் திடீரென அதிகளவு செயற்பாடுகள் ஆரம்பிக்கின்றன. 100 மில்லிசெகன்ட் இடைவெளியின் பின்னர் கடுமையான செயற்பாடுகள் பிரதிபலிப்பாக மூளையில் ஆரம்பிக்கின்றன.

மூளையின் இந்தப் பிரதிபலிப்புச் செயற்பாடானது வேறெந்தச் சத்தங்கள் எழும்போதும் அவ்வளவு தீவிரமாக இருக்கவில்லை. மூளையின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இவை பிரதானமாகத் தென்பட்டன. முதலாவது

temporal gyrus என்ற மூளையின் பகுதியாகும். இதுதான் உணர்ச்சிகளை உரிய முறையில் செயற்படுத்தும் (emotional processing) மற்றும் பேச்சாற்றலுடன் தொடர்புடையதுமான பகுதி.

orbitofrontal cortex என்ற மற்றப் பகுதியானது ஒரு செயலானது நன்மையளிக்கக் கூடியதா அல்லது பாதகமானதா என்பதை உணர்த்தக் கூடியது என்பதுடன் உணர்ச்சிகளை உரிய முறையில் செயற்படுத்தவும் உதவுகிறது.

சிந்தனைக்கு முன் செயற்பாடு

உணர்ச்சிகளோடு தொடர்புடைய மூளையின் பகுதிகளில் குழந்தையின் அழுகையானது திடீரென செயற்பாடுகளை அதிகரிக்கச் செய்வதை நாம் முக்கியமாகக் கவனத்தில் எடுக்கவேண்டும். ஏனெனில் மூளையானது சிந்தித்துச் செயற்படுவதற்கான கால இடைவெளிக்கு முன்னரே உணர்ச்சிகள் தன்னிச்சையாக வெளிப்பட்டுவிடுகிறது.

உதாரணத்திற்கு நெருங்கிய உறவினரின் மரணத்தைக் கண்டதும் சட்டென எம்மையறியாமலே அழுகை வந்துவிடும். தொலைக் காட்சியில் கோமாளித்தனமான செயற்பாடுகளைக் கண்டதும் திடீரெனச் சிரிப்பு வந்துவிடுகிறது.

சார்ளி சப்ளின், சந்திரபாபு அல்லது நாகேசின் உடல்மொழிகளானவை காரணம் தெரியாது எம்மில் பக்கெனச் சிரிப்பை வரவழைக்கும். இவை உணர்ச்சிகளோடு தொடர்புடையவை.

வேறுபாடானது கலைவாணர், விவேக்கின் நகைச்சுவைகள். கண்டவுடன் சிரிப்பு வராது. சிரிக்க ஒரு கணம் தாமதமாகும். ஏனெனில் இங்கு கேட்பதைச் சிந்தித்து உணர சற்று நேரம் தேவைப்படுகிறது.
சிந்திக்க முதலே சிரிப்பது அல்லது அழுவதற்கும் அல்லது அது போன்ற எல்லா உணர்ச்சிகள் எழும்போது, மூளையின் முற்குறிப்பிட்ட பகுதிகளில் செயற்பாடுகள் அதிகரிப்பதற்கு காரணம் என்ன?

எமது மூளையில் ‘இவை முக்கியமான விடயங்கள்’ என ஏற்கனவே பதியப்பட்டுள்து. குறிப்பிட்ட விடயத்தை மூளையானது பகுத்தாய்ந்து முடிவெடுக்கு முன்னரே உடனடியாக வினையாற்றும்படி மூளைக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. அல்லது அதற்கேற்ப மூளையானது பதனப்பட்டுள்ளது எனலாம்.

வாழ்வா சாவா என்பது போல

மூளையின் மற்றொரு பகுதியையும் குழந்தையின் அழுகுரல் எழும்போது பரிசோதித்தார்கள். இது மூளையின் sub-cortical area எனும் பகுதியாகும். இது எதற்கு முக்கியமானது.

திடீரென ஒருவன் கத்தியை ஏந்தியபடி உங்களைக் குத்த வருகிறான் என வைத்துக் கொள்ளுங்கள். இது மிக அச்சமூட்டக் கூடிய கணம். கரணம் தப்பினால் மரணம் என்பது போல உயிராபத்தை ஏற்படுத்தும் தருணம். ஒரு நிமிடம் தாமதித்தாலும் பேராபத்து ஏற்படும்.
நீங்கள் என்ன செய்வீர்கள்.? தப்பி ஓட முயல்வீர்கள். அல்லது கத்திக் குத்தைத் தடுக்க முயல்வீர்கள்.

இங்கு நீங்கள் சிந்தித்துச் செயற்படுவதில்லை. உங்களை அறியாமலே உடனடியாச் செயற்படுவீர்கள். உணர்ச்சி வயப்பட்டு உறுதியாகச் செயற்படாது தாமதிக்கும் விடயமல்ல. fight-or-flight response என ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். மூளையானது உடனடியாக எச்சரிக்கை நிலைக்குத் தள்ளப்படும். உடனடியாகவும், தருணத்திற்கு ஏற்பவும் உங்களையறியாமல் செயற்பட ஆரம்பிப்பீர்கள்.

Fight Or Flight

எத்தகைய தருணத்தில் ஒருவர் உடனடியாகவும் திறமையாகவும் செயற்படுகிறார் என்பதை அறிய whack-a-mole என்ற விளையாட்டை ஆட வைத்தார்கள். மற்றெந்த அழுகுரலையும் விட குழந்தையின் அழுகையின் பின்னர் ஆய்விற்கு உட்பட்டவர்கள் மிக சிறப்பாக அந்த விளையாட்டை ஆடினார்கள்.

இது ஏன் எனில் குழந்தையின் அழுகுரலானது கேட்பவரது உடலை எச்சரிக்கை நிலைக்கு கொண்டு வந்து பாதுகாப்பு அல்லது பாரமரிப்பு அளிப்பதற்குத் தயாராக்குகிறது.

இதனால்தான் குழந்தையின் குரலை எங்கு எப்பொழுது எத் தருணத்தில் கேட்டாலும் நம்மால் அலட்சியம் செய்ய முடிவதில்லை ஏதாவது செய்யத் தூண்டுகிறது.

0.0.0.0.0.0

 

Whac-A-Mole   விளக்கம் தேவையாயின்

Whac-A-Mole is an arcade redemption game. A typical Whac-A-Mole machine consists of a large, waist-level cabinet with five holes in its top and a large, soft, black mallet. Each hole contains a single plastic mole and the machinery necessary to move it up and down. Once the game starts, the moles will begin to pop up from their holes at random. The object of the game is to force the individual moles back into their holes by hitting them directly on the head with the mallet, thereby adding to the player’s score. The quicker this is done the higher the final score will be.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0

 

Read Full Post »

நவயுக உணவுப் பழக்கத்தில் இறைச்சி முக்கிய இடம் வகிக்கிறது. அதிலும் இள வயதினருக்கு இறைச்சி இல்லாத உணவுகள் வாய்க்குத் தோதுப்படாது.
Bacon, sausage, and ham  போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளால் தங்கள் உணவுக் கோப்பைகளை நிறைத்துக் கொள்வார்கள்.

Mosob Plate

ஆனால் இறைச்சிகள் கூடாது, கொலஸ்டரோலை அதிகரிக்கும், மாரடைப்பு போன்ற இருதய நோய்களுக்கு வித்திடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அதிலும் பற்வையின இறைச்சிகள் நல்லவை. ஆனால் ஆடு, மாடு,பன்றி போன்ற மிருக இறைச்சிகள் கூடாது என்பதே பொதுவான நம்பிக்கை. ஆய்வுகளும் அதையே சுட்டின. அதிலும் சிவத்த இறைச்சிகள்  red meat கூடாது என்கிறார்கள்.

081029141035-large

பொதுவாக கடும் நிறமுள்ள ஆடு, மாடு. குதிரை போன்றவற்றின் இறைச்சிகள்  red meat எனப்படுகிறது. மாறாக கோழி, முயல் போன்றவை வெள்ளை இறைச்சி எனப்படுகின்றன.
அண்மையில் இங்கிலாந்தில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் பிரகாரம் பதப்படுத்தப்பட்ட இறைச்சிவகைகளே மாரடைப்பு மற்றும் மூளையில் இரத்தம் உறைதல் போன்றவற்றால் ஏற்படும் மரணங்களுக்கு முக்கிய காரணம் என்கிறது.

100517161130-large

பொதுவாகக் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் இவை.

Canned meat
Cured meat
Ham
Lunch meat
Sausage
Bacon Gelatins
Fresh meat with additives

நடுதர வயதினரிடையே செய்யப்பட்ட இந்த ஆய்வின் பிரகாரம் அதிகளவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பதனால் அவர்கள் அடுத்த 12 வருட காலத்தில் இறப்பதற்கான சாத்தியம் இரண்டு மடங்காக அதிகரிக்கிறதாம்.
அதேபோல புற்றுநோய்களால் இறப்பதற்கான சாத்தியமும்  43மூ சதவிகிதத்தால் அதிகரிக்கிறதாம்.

அவற்றிலிருந்து நாம் பெறக் கூடிய செய்தி என்ன?

இறைச்சி வகைகளை உண்ணலாம். ஆனால் அளவோடு குறைந்த அளவில் உண்பதே நல்லது.

ஆனால் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உண்பதைத் தவிர்பதே நல்லது எனலாம். தினமும் உண்ண வேண்டாம். இடையிடையே உண்ணும்போதும் குறைந்த அளவே உண்பது உசிதமானது.

ஆங்கிலத்தில் ஆய்வுக் கட்டுரையைப் படிக்க

Processed meats—but not red meat—linked with cardiovascular deaths

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

இறைச்சிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்தானவை

Read Full Post »

காலில் புண்கள் ஏற்படுவது மற்ற எவர்களையும் விட நீரிழிவாளர்களில் அதிகம். அத்துடன் அவர்களுக்கு மிகவும் ஆபத்தானதும் கூட.

நீரிழிவினால் காலுக்கான

 • குருதி ஓட்டம் குறைவதனாலேயே அவர்களுக்கு காலில் புண்கள் ஏற்படுகி்ன்றன.
 • அதே இரத்த ஓட்டக் குறைபாட்டினால் அவை குணமடைவதும் சிரமம். விரல்களையும் கால்களையும் அகற்ற வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படுகிறது.
 • மற்றொரு காரணம் நரம்புகளின் பாதிப்பால் நீரிவாளர்களுக்கு கால்களில் உணர்ச்சி குறைவு என்பதால் காயம் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை.
 • உணர்வு குறைவு என்பதால் அவை பெருகும்வரை தெரிவதும் இல்லை.

வெறும் காலுடன் கோயில் கும்பிடப் போய் காலில் ஏதாவது குத்திக் காயங்கள் தேடிக் கொண்ட பலரைப் பார்த்திருக்கிறேன்.கால்களை இழந்தவர்களும் உண்டு.

கோயில்கள் உட்பட அனைத்து வணக்க ஸ்தலங்களுக்குள்ளும் காலணியுடன் செல்லக் கூடிய காலம் வர அருள வேண்டும் என இறைவனை வேண்டுவோம்.

Thanks:- http://drplusindia.com/images/Foot-Problems/Diabetic%20Foot.jpg

காலில் புண்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை The American Podiatric Medical Association வழங்கியிருக்கிறது.

 • உங்கள் மருத்துவரை ஒழுங்கான காலக்கிரமத்தில் சந்தியுங்கள்
 • புகைப்பதையும், மது அருந்துவதையும் தவிருங்கள்
 • குருதியில் கொலஸ்டரோல் மற்றும் சீனியின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மருத்துவரின் ஆலோசனைகளை ஒழுங்காகக் கடைப்பிடியுங்கள்.
 • உங்கள் காலுக்கு ஏற்ற காலணிகளையும் சொக்ஸ்களையும் அணியுங்கள்
 • காலணிகள் அணியாது வீட்டு முற்றம், வீதி, காணி எங்கும் காலெடுத்து வைக்காதீர்கள்
 • தினமும் உங்கள் பாதங்களை ஒழுங்காக அவதானியுங்கள். உரசல்கள், காயங்கள், நிறமாற்றங்கள், வலி, போன்ற எதையும் உடனடியாக மருத்துவரின் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள்.
 • நகம் வெட்டும்போது மிகுந்த அவதானம் தேவை. குளித்த பின் நகங்கள் மிருதுவாக இருக்கும் நேரத்தில் வெட்ட வேண்டும். நகத்தின் ஓரங்களை வளைத்து வெட்டாது, நேராகவும், அருகில் உள்ள சருமத்தைவெட்டாதபடியும் அவதானம் வேண்டும்.
0.0.0.0.0.0

Read Full Post »

மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. யாரைப் பார்த்தாலும் வருத்தம் என்கிறார்கள். திடீரென ஏற்பட்ட சீதோசன மாற்றங்கள் காரணம் என்பதில் ஐயமில்லை. கடலோடு மீனவர்கள் காணமல் போவது மட்டுமின்றி தரையிலும் பலரையும் படுக்கையில் கிடத்துகிறது. ஒரு சிலர் பாடையில் போகவும் நேராமலிருக்க அவதானமாக இருப்போம்.

images215412_crowded-hospital

இந்த காலநிலை மாற்றங்களால் தற்போது கொழு்ம்பு மற்றும் தென்பகுதிகளில் பரவும் நோய்கள் பல வகைப்படும்

 • தினமும் ஒரு சில மாணவர்களாவது பாடசாலையிலிருந்து வாந்தி காய்ச்சலுடன் நேரடியாக வருகிறார்கள். வயதானவர்களையும் விட்டு வைக்கவில்லை.
 •  வேறு சிலர் கடுமையான காய்ச்சலுடன் தடிமன், இருமல் என வருகிறார்கள்.
 •  103-104 எனக் கடுமையாக ஏறிக் காயும் காய்ச்சலுடன் தாங்க முடியாத உடல் வலியுடன் இன்னமும் சிலர் வருகிறார்கள்.

வாந்தி பேதி போன்றது முதலாவது, சாதாரண தடிமன் காய்ச்சலுடன் இன்புளுவன்சா வகையானது இரண்டாவது. மூன்றாவது மிகவும் கலங்க வைக்கும் டெங்கு.

வாந்தி காய்ச்சல் வயிற்றோட்டம்

திடீரென ஏற்படும் வயிற்றுக் குமைச்சலுடன் வாந்தி பலரையும் அல்லலுற வைக்கிறது. ஒரு சில மணி நேரத்திற்குள் பல தடவைகள் வாந்தி எடுத்துவிடுவார்கள். காய்ச்சல் வரும். வயிற்றோட்டமும் தொடரும். கடும் நாற்றத்துடன் வெறும் நீர்போலப் பீச்சியடிக்கும். வேகமாகத் தொற்றும். ஒரே குடும்பத்தில் ஐந்து பேரும் தொடர்ந்து பாதிக்கப்படட்தை காணக் கூடியதாக இருந்தது.

Vomiting child

வயிற்றோட்டமும் வாந்தியும் கடுமையாக இருந்தால் நாக்கு உலரந்து வரட்சியும் தாகமும் ஏற்படும். ஆயினும் வாந்தியும் ஓங்காளமும் நீராகாரம் அருந்துவதை வேண்டாமென வெறுக்க வைக்;கும். இது தொடர்ந்து நீரிழப்பு நிலை ஏற்பட்டால் நாளம் ஊடாக சேலைன் போன்ற திரவங்களை ஏற்றவும் நேரலாம்.

இக் காச்சலில் முக்கியமாக அவதானிக்க வேண்டியது நோயாளியின் உடலில் நீர்த்தன்மை குறைந்து நீரிழப்பு நிலை ஏற்படுவதைத் தடுப்பதும் போசாக்கு நலிவுறாமல் காப்பதும்தான். வெளியேறும் நீரை மீளக் கொடுக்க வேண்டும்.

எனவே வாந்தியை நிறுத்துவது அவசியம். மாத்திரைகளும் வாந்தியுடன் வெளியேறிவிடலாம் என்பதால் மலவாசலூடாக உட்செலுத்தும் மாத்திரைகளை (Suppository) வைப்பதுண்டு. வாந்தி கடுமையாக இல்லாதவிடத்து மாத்திரைகளாகவும் உட்கொள்ளலாம்.

காய்ச்சலுக்கு பரசிற்றமோல் மருந்தை வயதுக்கு ஏற்ப கொடுக்க வேண்டும். பொதுவாக இது வைரஸ் கிருமிகளால் ஏற்படுவதால் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் (Antibiotics) தேவைப்படாது. ஆயினும் ஒரு சிலரில் பக்றீரியா தொற்றினால் ஏற்பட்டதென மருத்துவர் கருதினால் அதற்கேற்ற அன்ரிபயோடிக் தரக் கூடும்.

மீளநீருட்டும் பானம் பக்கற்றுகளில் பவுடராக ORS- Oral rehydration solutuin) கிடைக்கிறது. இலங்கையில் ஜீவனி என்பது பெயர் போனது. வேறு வர்த்தகப் பெயர்களிலும் கிடைக்கிறது. அவற்றை வாங்கிக் கரைத்துக் குடிப்பது நல்லது. இளநீர், தோடம்பழச் சாறு, எலுமிச்சைப் பழச் சாறு, கஞ்சி போன்றவற்றையும் அருந்தலாம்.

ORS-Pack

தயிர் அல்லது யோகர்ட் சாப்பிடுவது ஒரு விதத்தில் இது மருந்தாகவும் அமையும். ஏனெனில் இவற்றில் Lactobacillus acidophilus  மற்றும்

Bifidobacterium bifidum ஆகிய கிருமிகள் உள்ளன. இவை வயிற்றோட்டத்தை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளை அழித்து உணவுக் கால்வாயின் இயற்கையான நுண்ணுயிர் சூழலை மீள ஏற்படுத்த உதவும். பொதுவாக வயிற்றோட்டத்தின் போது பால் சிபார்சு செய்யப்படுவதில்லை.

CIC Curd

வாழைப்பழம் நல்ல உணவு. இதற்குக் காரணம் அதிலுள்ள பொட்டாசியச் செறிவும், பெக்டின் மற்றும் இனியுலின் ஆகிய கரையக் கூடிய நார்ப்பொருட்களுமாகும். வயிற்றோட்டத்தின் போது நீர் மட்டுமின்றி பல தாதுப்பொருட்களும் வெளியேறுகின்றன. பொட்டாசியம் உட்பட பல மின் அயனிகள் (electrolytes) வெளியேறுகின்றன.

banana

வாழைப்பழம் சாப்பிடுவதால் இழக்கப்படும் பொட்டாசியம் சத்தை மீளப் பெறலாம். பெக்டின் (pectin) ஆனது கரையக் கூடிய நார்ப்பொருள் ஆதலால் மலத்துடன் வெளியேறும் நீரை உறிஞ்சும். இதனால் மலம் வெறும் நீராக அன்றி சற்று தடிப்பாகவும் சுமுகமாகவும் வெளியேற உதவும்.

இனியுலின் என்பது மற்றொரு கரையக் கூடிய நார்ப்பொருளாகும். அத்துடன் அது ஒரு பிரிபயோடிக் (Prebiotic) ஆகும். அதாவது முன்நிலை நுண்ணுயிர் கொல்லி எனலாம். இதுவும் நோயை ஏற்படுத்தும் கிருமியை மேவி வளர்ந்து உணவுக் கால்வாயில் நல்ல கிருமிகள் வளர உதவுவதன் மூலம் வயிற்றோட்டத்தைக் கட்டுப்படுத்த உதவும்.

அப்பிளிலும் இதே பெக்டின் உள்ளது. ஆயினும் வயிற்றோட்டத்தின் போது முழுமையான பழமாக ஆப்பிளை சாப்பிடும்போது சமிபாடு அடைவதில் சற்று சிரமம் ஏற்படலாம் என்பதால் அவித்துக் கொடுப்பது நல்லது.

வயிற்றோட்டம் இருந்த போதும் சாப்பிட முடிந்தால் வழமைபோல உண்பது நல்லது. கடுமையான எண்ணெய் கலந்த உணவுகளைத் தவிர்த்து வழமைபோல உண்ணலாம். ‘வயிறோட்டம் வந்தால் சாப்பிடக் கூடாது வயிற்றைக் காயப் போட வேண்டும்’ எனப்படும் பாட்டி வைத்தியங்கள் இன்றைய அறிவியல் யுகத்தில் அர்த்தமற்ற செயலாகும்.

ஒரு சிலரில் எந்தவித மருத்துவமும் இன்றித் தானாகவே குறைந்துவிடுவதும் உண்டு.

இன்புளுவன்சா வகைக் காய்ச்சல் (Influenza like Illness- ILI)

சாதாரண தடிமன் காய்ச்சல் பெருமளவு அண்மையில் காணப்படுகிறது. அது ஆபத்தற்றது.

sf_05sneeze

ஆனால் தடிமன் தும்மல் மூக்கால் வடிவது, இருமல் போன்ற அறிகுறிகளுடன் கடும் காய்ச்சல் வரும் மற்றொரு தொற்றுநோய் காணப்படுகிறது. இது ஒரு வகை சுவாசத் தொகுதி தொற்று நோய். இதன் கடுமையான வடிவம் ஒரு சில உயிர்களை முக்கியமாக கர்ப்பணித் தாய்மாரை பலி கொண்டதாக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

sf_07sick

இன்புளுவன்சா ஏ. பீ வகை கிருமிகளால் (influenza A and B)   பரவிய நோய் மே மாதம் அளவில் ஆரம்பித்து, சில மரணங்கள் காரணமாக மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியது. கடுமையான காச்சலைத் தொடரும் விடாத இருமல் இதன் முக்கிய அறிகுறியாகும். தலைப்பாரம், தொண்டை வலி, உடலுழைவும் இருக்கும். ஓங்காளம், வாந்தி, வயிற்றோட்டம் ஆகியவையும் இருக்கலாம்.

கர்ப்பணிப் பெண்களில் ஆபத்தைக் கொண்டு வந்தது. கர்பணிகளில் மட்டுமின்றி 65 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்கள், இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், நோயெதிர்புச் சக்தி குறைந்தவர்களில் ஆபத்தானது. ஆயினும் ஏனைய ஆரோக்கியமானவர்களில் மரணம் போன்ற ஆபத்தான விளைவுகளைக் கொண்டு வருவதில்லை. சென்ற வருடம் பரவிய பன்றிக் காய்ச்சலும்  (H1N1) இதே போன்றது, ஆயினும் அது சற்று ஆபத்தானது.

காய்ச்சல் சளி அறிகுறிகளைக் கண்ட உடனேயே மருத்துமனைகளை நோக்கிப் படையெடுக்க வேண்டியதில்லை. நோயின் தீவிரம் அதிகமாக இருந்தால் அல்லது மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரைக் காண்பது அவசியம்.

Doctor holding inhaler mask for kid girl breathing

இருந்தபோதும் மூச்சுத் திணறல், இளைப்பு, நெஞ்சு இறுக்கம்,  தலைச் சுற்று, மயக்கம் போன்ற கடுமையான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை உடனே காண வேண்டும்.

இருமும்போதும் தும்மும் போதும் காற்றில் பறக்கும் எச்சில் துகள்கள் மூலமே மற்றவர்களுக்கு பரவும். தும்மும்போதும், இருமும் போதும் கைக்குட்டை அல்லது ரிசூவினால் மூக்கையும் வாயையும் பொத்திக் கொள்ளுவது அவசியம். உபயோகித்த ரிசூவை உடனடியாகவே குப்பை கூடையில் இட்டு அகற்றவும். கைக் குட்டையை துவைக்கவும்.

மூக்குச் சிந்தினால் அதைத் தொட்ட கையை உடனடியாகக் கழுவ வேண்டும். இல்லையேல் அதே கையால் மேசை, கதிரை, கதவுக் கைபிடி போன்ற எதைத்  தொட்டாலும் அதன் மூலம் மற்றவர்களுக்கும் பரவும்.

சனநெருக்கடியுள்ள இடங்களான பஸ், புகையிரதம், வகுப்பறை, தொழில்கூடம், கடைகள் போன்றவற்றில் நடமாடும் போது அவதானமாக இருங்கள். ஏனெனில் நோயுள்ள ஒருவர் தும்மினால் அந்தக் குறுகிய இடத்தில் உள்ள பலருக்கும் நோய் தொற்றலாம்.

பெரும் ஆபத்தற்றது என்ற போதும், அதிக தாக்கத்திற்கு ஆட்படக் கூடியவர்களான கரப்பணிகள், இரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்கள் மற்றும் நோயெதிர்புச் சக்தி குறைந்தவர்கள் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவர்களை அணுகுவது அவசியம்.

டெங்கு

எந்தக் காய்ச்சல் வந்தாலும் பிள்ளைக்கு டெங்குவாக இருக்குமோ என பயந்தடித்து ஓடி வரும் பெற்றோர் அதிகம். அதில் எந்தத் தவறும் இல்லை.

ஏனெனில் எத்தனையோ பிஞ்சுகளை உதிர வைத்துவிட்ட ஆபத்தான நோய்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன எனப் பலரும் கேட்பதுண்டு. ஏனைய காய்சலைப் போன்றதே. 103-105 எனக் கடுமையாக ஏறிக் காயும் காய்ச்சல் பொறுக்க முடியாத உடல் மற்றும் மூட்டு வலிகளுடன் வந்தால் டெங்கு எனச் சந்தேகப்படலாம். பொதுவாக டெங்கு காய்ச்சலுக்கு தடிமன், இருமல் தும்மல் வயிற்றோட்டம் போன்ற வேறு அறிகுறிகள் சேர்ந்திருப்பதில்லை.

Dengue_Fever_symptoms

ஆயினும் இத்தகைய காய்ச்சல்கள் அனைத்தும் டெங்கு இல்லை. முதல் நாளில் டெங்கு அன்ரிஜென் பரிசோதனை செய்தால் அது பொசிட்டிவாக இருக்கும். ஆனால் அதற்கான வசதி எல்லா இடங்களிலும் இருக்காது.

ஒரு வேளை டெங்கு அன்ரிஜென் பொசிட்டிவாக இருந்தால் கூட அது ஆபத்தாக இருக்க வேண்டும் என்றில்லை.

ஏனெனில் டெங்கு காய்சலில் பல வகைகள் உள்ள.

 • டெங்கு கிருமி தொற்றி காய்ச்சல் வருபவர்களில் 50 சதவிகிதமானவர்களுக்கு அது ஏனைய சாதாரண வைரஸ் காய்ச்சல் போல வந்து எந்தவித சிகிச்சைகளும் இன்றி தானாகவே மாறிவிடும்.
 • மிகுதியில் 40 சதவிகிதமானவர்களுக்கு டெங்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படும்.
 • 10 சதவிகிதமானவர்களுக்கு மட்டுமே டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் வருவதாக தரவுகள் கூறுகின்றன.
 • குருதிப் பெருக்குக் காய்ச்சல் வந்த 10 சதவிகிதமானவர்களில் கூட 98 சதவிகிதமானவர்கள் ஆபத்தான கட்டத்தை அடைய மாட்டார்கள்.  குணமாகிவிடுவார்கள்.
 • மிகுதி 2 சதவிகிதமானவர்கள் மட்டுமே மிக ஆபத்தான அதிர்ச்சி நிலையை அடைவர்.

மிகக் குறைவான இந்த 2 சதவிகிதமானவர்களை ஆரம்ப நிலையிலேயே இனங் காண்பதிலும் அவர்களுக்கு மருத்துவ மனையில் வைத்து மிகக் கவனமான முறையில் சிகிச்சை அளிப்பதன் மூலமே ஆபத்தான டெங்கு நோயாளிகளைக் காப்பாற்றவும் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் முடியும். ஆயினும் இது மருத்துவர்களாலேயே முடியும்.

வழமைக்கு மாறான கடுமையான காய்ச்சலாக இருந்தால் முதல் நாளே மருத்துவரிடம் காட்டுங்கள். அவர் சில வேளை இரத்தப் பரிசோதனை செய்யக் கூடும். அயினும் மீண்டும் 4ம் நாள் அளவில் மீண்டும் செய்யக் கூடும்.

டெங்குவாக இருக்கும் என்ற சந்தேகம் இருந்தால் பரசிட்டமோல் தவிர வேறு எந்த மருந்தையும் கொடுக்காதீர்கள்.

இப்பொழுது மழை பெய்கிறது. மழை குறையும் போது தேங்கி நிற்கும் நீர்களிலிருந்து நுளம்பு பெருகி டெங்கு வேகமாகப் பரவக் கூடும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

எனது ஹாய நலமா புளக்கில் ஜீலை 2, 2013ல் வெளியான கட்டுரை

0..0..0

Read Full Post »

கொத்த மல்லியின் பாவனைகள் பல

கறிச் சரக்கில் கொத்தமல்லி
கொத்தமல்லிக் குடிநீர்
கொத்த மல்லிக் கோப்பி
கொத்த மல்லித் தளையில் ரசம், சட்ணி, மற்றும் புரியாணி கறிகளில் சுவையூட்டி எனப் பல.

“யாழ்ப்பாண உணவு முறைகளில் மல்லி இலை பழக்கத்தில் இல்லாவிட்டலும்,  நாம் வெளிநாடுகளில் இதை பாவிக்கின்றோம்” என Ranjan Vallipuram எனும் நண்பர் இது பற்றி பேஸ்புக்கில் நான்எழுதியபோது கருத்தூட்டம் இட்டிருந்தார். இப்பொழுது இலங்கையிலும் பலர் உபயோகிக்கிறார்கள்

அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றானது சேற்றுப்புண் எனப்படும் tinea pedis நோயைத் தணிக்க கொத்த மல்லி எண்ணெயைப் பூசுவது உதவும் என்கிறது.

சித்த மருத்துவ முறையில் கொத்தமல்லிக்கு இடம் முக்கிய உண்டு

கொத்தமல்லிக் கீரைஉண்ணில் கோரவ ரோசகம் போம்
பித்தமெல்லாம் வேருடனே பேருங்காண்- சத்துவமாம்
வெச்செனவே போகம் விளையும் சுரம் தீரும்
கச்சுமுலை மாதே! நீகாண்…(அகத்தியர் குணவாடகம்)

எனப் பழம் தமிழ் பாடலில் சொல்லப்பட்டதை மற்றொரு நண்பியான Pathmashany Manick கருத்தூட்டத்தில் சொன்னார்.

நான் கொத்தமல்லி பற்றி எழுத முனைந்ததற்கு காரணம் மேற்கூறிய ஆய்வாகும். அதன் வாசகம் ஆங்கிலத்தில் பின்வருமாறு

“The antifungal activity of coriander oil has already been demonstrated in vitro. Objective: Evaluation of the efficacy and tolerability of 6% coriander oil in unguentum leniens in the treatment of interdigital tinea pedis…………

For 6% coriander oil in unguentum leniens, a highly significant improvement of the clinical signs (p<0.0001) was observed during the entire observation period; the number of positive fungal cultures also tended to decrease (p = 0.0654). The tolerability of the tested substances was good.

Conclusion: Coriander oil is effective and well tolerated in the treatment of interdigital tinea pedis.”

அந்த ஆய்வானது கொத்த மல்லி எண்ணெயினால் சேற்றுப் புண் பூரணமாகக் குணமானதாகக் கூறவில்லை. ஆனால் 14 முதல் 28 நாட்களுக்கு பூசப்பட்டபோது நோயின்அறிகுறிகள் பெருமளவு குறைந்தன.அத்துடன் அதனால் நோயளிகளுக்கு பிரச்சனைகள் ஏதும் ஏற்படவில்லை.

சேற்றுப் புண் என்பதை எமது பகுதியில் நீர்ச் சிரங்கு என்றும் சொல்லுவார்கள். இது ஒரு பங்கஸ் கிருமியால் எற்படும் நோயாகும்.

மருத்துவம் செய்யப்பட்ட அந்த சேற்றுப் புண்களை மருத்துவ ஆய்வு கூடப் பரிசோதனை செய்தபோது பங்கஸ் கிருமித் தொற்றுக் குறைந்திருந்தமை கண்டறியப்பட்டது.

எனவே கொத்தமல்லி எண்ணெய்க்கு பங்கஸ் கிருமிக்கு எதிரான குணமும் உண்டு என நம்பலாம்.

சேற்றுப் புண்ணிற்கு இன்றைய ஆங்கில மருத்துவத்தில்  பங்கஸ்சுக்கு எதிரான பல பூச்சு மருந்துகள் உள்ளன. அதற்குக் குறையாத போது உள்ளெடுக்கும் மாத்திரைகளும் உள்ளன.

சேற்றுப் புண் நோய் பற்றிய எனது முன்னைய பதிவில் அவை பற்றி விபரமாகக் கூறியுள்ளேன்.

சேற்றுப் புண் எனும் பங்கஸ் தொற்று

ஏற்கனவே எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை சேற்றுப் புண்ணிற்கு மருந்தாகவும் கொத்த மல்லி
0.0.0.0.0.0

Read Full Post »