Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for செப்ரெம்பர், 2013

‘எனக்கு கொலஸ்டரோல் அதிகம் என மருத்துவர் சொல்கிறார்’ என்று சொல்லும்போதே அவர் முகத்தில் பெருமிதம் கண்சிமிட்டி மறைந்தது போல எனக்குப் பட்டது. ஆம் சிலருக்கு அது சமூக அந்தஸ்தின் சின்னம் போலாகிவிட்டது. மாரடைப்பு பக்கவாதம் போன்றவை பின்னர் அதன் காரணமாக விளையும்போதுதான் அதன் பாதிப்பு அவர்களுக்குப் புரியும்.

cholesterol

ஆனால் இப்பொழுதெல்லாம் யாரைப் பார்த்தாலும் கொலஸ்டரோல் பிரச்சனை என்கிறார்கள். கோயில் ஐயர் முதல் கசாப்புக் கடைக்காரன் வரை எல்லோரையும் பீடிக்கவே செய்கிறது. சொகுசு வாழ்க்கையும் தவறான உணவு முறைகளுமே முக்கிய காரணம் என்றபோதும் பரம்பரைக் காரணிகளும் இல்லாமலில்லை.

அது சரி! கொலஸ்டரோல் அதிகரித்தால் நோய், சரியான பிரச்சனையாகும், உணவுகட்டுப்பாடு, உடற் பயிற்சி, மருந்துகள் நாளாந்தம் அவசியமாகும்.

அதேபோல கொலஸ்டரோல் குறையும் பிரச்சனையும் இருக்கிறதா? அது நோயா? மருந்துகள் தேவைப்படுமா?

மருந்துகளால் கொலஸ்டரோல் அளவு குறைதல்

‘என்ரை கொலஸ்டரோல் குறைஞ்சு போச்சு மருந்தை நிப்பாட்டிப் போட்டன்’ எனக் கையில் ரிப்போட்டும் முகத்தில் ஆனந்த தாண்டவமுமாக பலர் வருவார்கள். கொலஸ்டரோலுக்கு மருந்து எடுக்கும் நோயாளிகள் அவர்கள். ஆனால் அவ்வாறு நிறுத்துவது தவறு.

lower-cholesterol

கொலஸ்டரோலைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே மருந்து தருகிறார்கள். குருதியில் கொலஸ்டரோல் அளவு குறைவதுதான் இருதய மற்றும் குருதிக் குழாய் நோய்களைத் தடுப்பதற்கான வழியாகும்.

மருந்து சாப்பிடுவதால் கொலஸ்டரோல் அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மருந்தின் அளவைக் குறைப்பதோ கூட்டுவதோ மருத்துவரின் வேலை. எனவே கொலஸ்டரோல் அளவு குருதியில் குறைஞ்சாலும் நீங்களாக நிறுத்த வேண்டாம். மருத்துவரின் எண்ணப்படி நடவுங்கள்.

மருந்து இல்லாமலும் கொலஸ்டரோல் குறைதல்

மருந்து இல்லாமலும் குருதியில் கொலஸ்டரோல் அளவு குறையுமா?

குறையலாம்!.

குருதியில் கொலஸ்டரோல் அளவு மிகவும் குறைவதை Hypolipidemia என்பார்கள். சாதாரண பாசையில் லோ கொலஸ்டரோல்(Low Cholesterol) என்பார்கள்.

Medicines

ஆனால் அடிக்கடி காணப்படும் பிரச்சனை அல்ல என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இரண்டு வகைகள்

மருந்துகள் இல்லாமலே குருதியில் கொலஸ்டரோல் குறைவது இரண்டு விதங்களிலாகும்.

 1. சிலருக்கு இயல்பாகவே குருதியில் கொலஸ்டரோல் குறைவாக இருக்கும். வேறு நோய்களோ அல்லது மருந்துகளோ காரணமாக இருக்காது. அதற்குக் காரணம் அவரது குடும்பத்தினரிடையே அது பொதுவாக இருப்பதாகும். பரம்பரையில் அவ்வாறிருந்தால் சிகிச்சை எதுவும் தேவைப்படாது.
 2. வேறு பல நோய்கள் காரணமாகவும் சிலரது கொலஸ்டரோல் அளவு குறைவதுண்டு.

காரணங்கள் எவை?

தைரொயிட் சுரப்பி அதீதமாக வேலை செய்தால் (hyperthyroidism) தைரொக்சின் அளவு குருதியில் அதிகரித்திருக்கும். இது கொலஸ்டரோல் அளவைக் குறைக்கும். இதற்கு மாறாக தைரொக்சின் அளவு குருதியில் குறைந்திருந்தால் (hypothyroidism) கொலஸ்டரோல் அளவு அதிகரிக்கும்.

Hypolipideamia Causes-001

அதேபோல சில ஈரல் நோய்களும் இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவைக் குறைக்கும்.

குருதியில் தாதுப்பொருளான மக்னீசியத்தின் அளவு குறைவதாலும் இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவு குறையலாம்.
பல்வேறு நோய்கள் உடலைத் தாக்கும்போது பசி குறைவதுண்டு.

அந்நிலையில்; அவரால் போதியளவு போசாக்கான உணவுகளை உண்ண முடியாத நிலை ஏற்படும். அதன் காரணமாகவும் இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவு குறையலாம்.

உதாரணமாகப் புற்றுநோய்கள் அதிலும் முக்கியமாக உணவுக் கால்வாயோடு தொடர்புடைய புற்றுநோய்கள் பசியைக் கடுமையாகக் குறைக்கும். அதேபோல சுவாசப் பையோடு தொடர்புடைய நோய்களும் ஹெப்பரைரிஸ் போன்ற நோய்களும் பசியைக் குறைக்கும்.

பலவிதமான தொற்று நோய்கள் பசியைக் குறைக்குமானாலும் அவை குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும் என்பதால் கொலஸ்டரோலைக் குறைக்கும் என எதிர்பாரக்க முடியாது. T.B எனப்படும் சயரோக நோயும் பசியை அதிகம் குறைக்கின்ற மற்றொரு நோயாகும்.

பசி குறைவு என்றவுடன் ‘எனக்கும் பசி குறைவுதான்’ என்கிறீர்களா. சாதாரண பசிக் குறைவைச் சொல்லவில்லை. அதீதமான பசிகுறைவு. வழமைபோல உணவு உட்கொள்ள முடியாது எடை குறைந்து உடல் நலியும் நிலையில் அவ்வாறு கொலஸ்டரோல் குறையும்.

இவற்றைத் தவிர மனவிரக்தி, பதகளிப்பு நோய், பக்கவாதம், பிறவி அங்கயீனக் குறைபாடுகள் உள்ளோருக்கும் போசாக்குக் குறைபாட்டால் கொலஸ்டரோல் குறைவதுண்டு.

மது மற்றும் ஏனைய போதைப் பொருட்களும் பொதுவாக உணவில் நாட்டமின்மையைக் கொண்டுவரும். புகைத்தலும் அவ்வாறே செய்கிறது.

அறிகுறிகள்

எந்த அறிகுறிகளையும் வைத்து இவருக்கு கொலஸ்டரோல் இருக்கிறதா என ஐயமுற முடியாது. தற்செயலாகவே கண்டறியப்படுகிறது. வழமையான இரத்தப் பரிசோதனைகள் செய்யும்போதே தெரியவரும். அதாவது கொலஸ்டரோல் இருக்கிறதா எனப் பரிசோதனை (Lipid Profile) செய்யும்போது கண்டறியப்படுகிறது.

சிகிச்சை

குறைந்த கொலஸ்டரோலை அதிகரிப்பதற்கென தனியான மருந்து மாத்திரைகளோ சிகிச்சை முறைகளோ கிடையாது. அது ஏன் ஏற்பட்டது என அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து அதைச் சரிசெய்வதே சிகிச்சை முறையாகும்.

இருக்க வேண்டிய அளவு

cholesterol-8

நீங்கள் கொலஸ்டரோலுக்கு மருந்து சாப்பிடுபவராயின் உங்களது கொலஸ்டரோல் அளவுகள் எந்தளவில் இருக்க வேண்டும். கீழே உள்ள பட்டியலைப் பாருங்கள்

 • முழுமையான கொலஸ்டரோல்    200 ற்கு குறைவாக
 •  LDLகொலஸ்டரோல்    130 ற்கு குறைவாக, நீரிழிவு மற்றும் இருதய நோய் வர வாய்ப்பு உள்ளவர்களுக்கு        100 ற்கு குறைவாக
 • HDL கொலஸ்டரோல்   ஆண்களில் 40 பெண்களில் 50 ற்கு மேல்
 • ரைகிளிசரைட் 150 ற்கு குறைவாக
DR.M.K.முருகானந்தன்
M.B.B.S(Cey), D.F.M(SL), F.C.G.P(SL)
குடும்ப வைத்திய நிபுணர்

0.00.0.00.0

Read Full Post »

இப்பொழுது எந்த மருத்துவரிடம் போனாலும் உடற் பயிற்சி, நடைப் பயிற்சி என ஓடாத குறையாக விரட்டுகிறார்கள்.

உண்மைதான் உடற் பயிற்சி மிகவும் நல்லது.

 • ஆண் பெண் குழந்தைகள் என எவருக்கும் ஏற்றது.
 • சுலபமாகச் செய்யக் கூடியது.
 • செலவில்லாதது.
 • இடம் தேடி அலைய வேண்டியது இல்லை. வீதியருகின் நடைபாதைகளே போதுமானது.

அதீத உடையுள்ளவர்கள், கொலஸ்டரோல் பிரச்சனையுள்ளவர்கள், பிரசர் உள்ளவர்கள், நீரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பலதரப்பட்டவர்களுக்கும் அவசியமானது.

வாரத்தில் 5 நாட்களுக்காவது செய்வது நல்லது. பொதுவாக 30 நிமிடப் பயிற்சி தேவை. ஆயினும் நடைப் பயிற்சியை ஆரம்பிக்க இருப்பவரின் தேவை என்ன, ஆரோக்கிய நிலை எப்படி போன்றவற்றை கருத்தில் கொண்டு அவை மாறுபடலாம்.

நடைப் பயிற்சி என்பது கடையைப் பார்த்து தெருவைப் பார்த்து ஆற அமர பொம்மை போல அரங்கி நடப்பதல்ல. கை கால்களை ஆட்டி விசுக்கி வேகமாக நடப்பதாகும்

எப்படி எவ்வாறு ஆரம்பிப்பது

நடைப் பயிற்சியை ஆரம்பிக்கும்போது அவதானிக்க வேண்டியவை.

 • எடுத்த எடுப்பில் நீண்ட நேரம் நடக்க வேண்டாம். முதல் வாரம் 5 நிமிடங்கள் மட்டும் நடவுங்கள். அடுத்த வாரம் அதனை 8 நிமிடங்களாக அதிகரியுங்கள்.
 • பயிற்சியானது உங்களுக்கு களைப்பு இளைப்பு இன்றி வசதியாக இருந்தால் அடுத்த வாரத்திலிருந்து அதனை 11 நிமிடங்களாக அதிகரியுங்கள்.
 • படிப்படியாக உங்கள் தேவைக்கு ஏற்ப நடைப் பயிற்சியின் நேரத்தை அதிகரியுங்கள்.
 • படிப்படியாக அதிகரிப்பதன் மூலம் உங்களது இருதயம், சுவாசப் பை மற்றும் கால்களுக்கு திடீரென எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவை தங்களைத் தாங்களே பழக்கப்படுத்தி தொடர்ந்து செய்வதற்குத் தயாரகிவிடும்.
 • நடைப் பயிற்சிக்கு ஏற்ற காலணிகளை புதிதாக வாங்கிக் கொள்ளுங்கள். இறுக்கமான, அடி தேய்ந்த வார் அறுந்த காலணிகள் வேண்டாம். நடைப் பயிற்சி உங்களுக்கு நலத்தைக் கொண்டு வரும். ஆனால் காலணிகள் விரைவில் நைந்து சேதமாகும். காலணிகள் பழுதுபடும்போது அவற்றைக் கழித்துவிட்டு மீண்டும் புதிதாக வாங்க வேண்டியது அவசியம்.
 • நடைப்பயிற்சி சுவார்ஸமானதாக மனதிற்கு பிடித்ததாக இருக்க வேண்டும். வேண்டா வெறுப்பாக அக்கறையின்றிச் செய்ய வேண்டாம். துணைவர் அல்லது நண்பருடன் பேசிக்கொண்டு நடக்கலாம். பூந்தோட்டம், கடல், ஏரி, கடைகள் என எதையாவது ரசித்துக் கொண்டு நடக்கலாம். ஆனால் பேசுவதிலும் ரசிப்பதிலும் பார்ப்பதிலும் உங்கள் அடிப்படை நோக்கத்தை மறக்கக் கூடாது. நடையின் வேகம் தடைப்படாது இருப்பதை உறுதி செய்யுங்கள்.
 • தெருநாய்கள் நிறைந்த வீதியில் நடந்து அவற்றால் கடிபட்டு ரேபீஸ் தடுப்பு ஊசிபோட நேர்ந்தால், அல்லது வாகனத்தால் மோதுப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. பாதுகாப்பான இடமாகப் பார்த்து நடைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

நடைப்பயிற்சி, உடற் பயிற்சி பற்றி இந்தப் பதிவுகளிலும்.

எவ்வளவு உடற் பயிற்சி
வயதாகும்போது மூளை மங்குதலைத் தடுத்தல் – நடைப்பயிற்சி
கூனிக் குறுகி வலுவிழப்பது மூப்படைவதின் நியதியா?

தினக்குரல் பத்திரிகையில் வெளியான கட்டுரை

எம்.கே.முருகானந்தன்

0.00.0.00.0

Read Full Post »

இது தேவமுகுந்தன் அவர்களது சிறுகதைத் தொகுதி. இவர் சுமார் 20 வருடங்களாக சிறுகதைத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ளவராக இருக்கிறார். இவரது முதலாவது சிறுகதை 1992ல் பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. மரநாய்கள் என்பதே அந்தச் சிறுகதையாகும். அதன் பின்னர் நீண்ட அஞ்ஞாதவாசத்தின் பின்னர் 2008 முதல் மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளார்.


இத் தொகுப்பில் அவரது 10 சிறுகதைகள் அடங்கியுள்ளன. இவற்றில் முற்கூறிய மரநாய்கள் உடன் ஏனைய 9 சிறுகதைகள் அடங்குகின்றன. இவை 2008 முதல் 2011 வரையான காலப்பகுதியில் எழுதப்பட்டவை.
அண்மைக் காலமாக கடந்த அதாவது 4 வருடங்களாகத் தீவிரமாக எழுதி வருகிறார். அத்தோடு பல சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றிருக்கிறார். தகவம் பரிசை இருமறை பெற்றிருக்கிறார்.

இருந்த போதும் பரவலான வாசகர்களைக் கொண்டவர் என்று சொல்ல முடியாது. காரணம் இவரது படைப்புகள் ஜனரஞ்கமான பத்திரிகைளிலும் சஞ்சிகைகளிலும் வருபவை அல்ல. குறிப்பிட்ட தரமான சில ஊடகங்களில் மட்டுமே வருபவை. எனவே காத்திமான வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். ஆனால் மேம்போக்கான கிளுகிப்பு வாசிப்பில் உள்ளவர்கள் இவரை அறிந்திருப்பது சாத்தியமில்லை.

இந் நூலில் உள்ள இவரது படைப்புகள் ‘கலைமுகம் (3), ‘காலம்'(3), ‘யுகமாயினி'(1), ‘ஞானம்'(1), ‘ஜீவநதி'(1), ஆகிய சஞ்சிகைகளில் வெளி வந்திருக்கின்றன.
மாணவப் பருவத்தில் இவர் எழுதிய சிறுகதையான மரநாய்கள் யாழ்ப்பாணத்திலிருந்து அந்நேரத்தில் வெளிவந்து கொண்டிருந்த ஈழநாதம் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. நூலின் முகப்புக் கதையும் நூலின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றான ‘கண்ணீரினூடே தெரியும் வீதி’ தினக்குரல் ஞாயிறு பதிப்பில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பத்திரிகைகளில் வெளிவரும் சிறுகதைகள் பொதுவாக தீவிர வாசகர்களைக் கவர்வதில்லை. அத்துடன் என்போன்ற சோம்பேறி வாசகர்கள் பார்வைக்கும் கிட்டுவதில்லை. காரணம் வாசிக்க வேண்டும் என்று நினைத்திருந்தும் வாசிக்க ஆரம்பிப்பதற்கிடையில் பழைய பேப்பர்காரனது தள்ளுவண்டியில் பத்திரிகை ஏறியிருக்கும். ஆயினும் தினக்குரல், வீரகேசரி ஆகியவற்றில் நல்ல பல கதைகள் வெளிவந்துள்ளன.

நல்ல படைப்பாளி

இவர் ஒரு நல்ல படைப்பாளி. குறுகிய காலத்திற்குள் இவரால் எவ்வாறு இவ்வளவு நன்றாகக் கதை எழுத முடிந்திருக்கிறது என யோசித்தால், இவரிடமுள்ள தார்மீகக் கோபமும் ரசனையுர்வும் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஒவ்வொரு கதையும் மிகச் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன. அதற்குக் காரணங்கள் பல இருக்கும். பரந்த வாசிப்பு, தேடல், தனது படைப்பில் எளிதில் திருப்தியடையாமல் சீர்திருத்தல் போன்ற பல.
ஆனால் இவற்றிக்கு மேலே வேறு ஒரு ரகசியமும் இருக்கிறது. அதை முகுந்தன் தனது முன்னுரையில் வெளிப்படுத்தியுள்ளார். “முதல் வாசகனாக இருந்து வாசித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்தவர்” திரு.அ.யேசுராசா என்கிறார்.

யேசுராசா இலை இதழின் ஆசிரியாராக இருந்தவர். ஈழத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் சிலரது மிகச் சிறந்த கதைகள் அலையில் வெளி வந்திருக்கின்றன. முதல் வாசகனாகவும் ஆலோசகராகவும் நண்பர் யேசுராசா இருந்ததால்தான் அவ்வாறான சிறுகதைகள் வெளிவந்தன என்பது நினைவிற்கு வருகிறது.

சிறுகதையை புனைகதை என்பார்கள். ஆனால் இவை வெற்றுப் புனைவுகளாக இருப்பது சாத்தியம் அல்ல. பெரும்பாலும் யதார்த்தமானவை. எங்கோ எப்போதோ நடந்த சம்பவங்கள். படைப்பாளியின் மனத்தில் ஆழ்மனத்தில் பதிந்தவையாக இருக்கும்.

தார்மீகக் கோபம்

ஒரு உதாரணம் சொல்லலாம். அண்மையில் ஒரு மருத்துவக் கருந்தரங்கு நடைபெற இருந்தது.; உணவு முறைகள் பற்றியது. நோய்களுக்குக் காரணமான உணவு முறைகள், மற்றும் நோய்களின் தாக்கத்தைக் குறைக்க, எவ்வாறு சில வகை உணவுகள் உதவ முடியும் என்பது பற்றியது. எனக்கு மிகவும் பிடித்தமான விடயம். நோய்களைத் தணிக்க மருந்துகளுக்கு அப்பால் உணவு முறை உட்பட்ட வாழ்க்கை முறைகள் உதவும் என நம்பும் எந்த மருத்துவனுக்கும் பிடித்தமான விடயம் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் அது ஒரு வேலை நாள். கருத்தரங்கிற்கு நான் சென்றால் தேடிவரும் நோயாளிகள் ஏமாற நேரிடும். ஆனாலும் அங்கு நான் பெறும் அனுபவங்களை பத்திரிகைகளில் பகிர்வதன் மூலம் பல நோயாளர்கள் பயனடைவார்கள் என்பதால் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன்.

பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. மருத்துவர்களுக்காக மருத்துவர்களால் நடாத்தப்படும் கருத்தரங்கு. ஆனால் அங்கு பெருந்தொகையான தாதியர்கள் மற்றும் உணவு லிகிதர்கள் வந்திருந்தார்கள். ஆங்கிலத்தில் நடைபெற இருந்த கருத்தரங்கு முற்றுமுழுதாக சிங்கள மொழியில் நடைபெற்றது. இடையிடையே புரஜெக்டரில் காட்டப்பட ஆங்கில சிலைட்டுகளைப் பார்த்து ஆறுதலடைய வேண்டியிருந்தது.

முகுந்தனும் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தார். அது கற்கைச் செயற்பாட்டில் வழிகாட்டிகள் பற்றியது. அது பங்குபற்றுபவர்களுக்கு அரசு பணம் கொடுத்து செய்த கருத்தரங்கு ஆனால் நாங்கள் பணம் கொடுத்து அந்தக் கருத்தரங்கு சென்றிருந்தோம். இருந்தபோதும் நாம் எழுதவில்லை, உரத்துப் பேசவில்லை, மௌமாக இருந்தோம். ஆனால் தார்மீகக் கோபமுள்ள படைப்பாளியான முகுந்தனை அது ஆழமாகப் பாதித்திருந்தது. அவரால் மௌமாக இருக்க முடியவில்லை. அதுவே ‘வழிகாட்டிகள்’ என்ற சிறுகதையாகப் பரிணமித்;தது.

நம்பகத்தன்மை

சிறுகதை என்பது பொதுவாக ஒரு சிறிய படைப்பு. அது அளவில் சிறியது என்பது மட்டுமின்றி மனத்தைப் பாதிக்கக் கூடிய ஒரு சிறிய உணர்வை, அல்லது ஒரு சிக்கலை வெளிப்படுத்துவதாகவே இருக்கும். அது தனிப்பட்ட ஒரு மனிதர் பற்றியதாகவோ அல்லது ஒரு நிகழ்வு பற்றியதாகவே கூட இருக்க வாய்ப்புண்டு.

சிறுகதையில் இறுக்கமான கட்டுமானத்திற்கு இதுவே காரணமாக அமைகிறது. முகுந்தனின் படைப்புகளில் இந்த இறுக்கத்தைக் காண்கிறோம். தனது படைப்பிற்கு அவசியமானதற்கு அப்பால் எதையும் அவர் எதையும் வளவளவென்று சொல்வதில்லை. தனது மனதை அருட்டுவதைப் பற்றி மட்டும் எழுதும் எந்த எழுத்தாளனும் அவ்வாறே எழுதுவான்.
ஆனால் இங்குள்ள பல படைப்பாளிகளும் வலிந்து கதை கட்டுவதில்தான் வல்லவர்களாக இருக்கிறார்கள். கதைக்குத் தேவையானதா தேவையற்றதா எனச் சீர்தூக்கிப் பார்க்கமல் தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அதில் சொல்லிவிட முனைகிறார்கள்.

பரபரப்பாகப் பேசப்படும் விடயங்கள் பற்றி ரெடிமேட் தாயாரிப்புகள் சுடச்சுட வெளிவரும். சாதீயம், இனப்பிரச்சனை, போர்,பெண்ணியம் என எதைப் பற்றியும் அது பற்றி எந்தப் பட்டறிவு இல்லாதவர்களும் எழுதிவிடுவார்கள்.

அதற்கும் அப்பால் உபாசகர்களாக, போதகர்களாக மாறி நீட்டி முழங்கிப் போதனைகள் செய்ய முனைகிறார்கள். சிறுகதை என்ற வடிவத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் எல்லாம் சிறுகதைப் படைப்பாளிகளாக  பத்திரிகைகளையும் மேடைகளையும் நிறைக்கிறார்கள்.
ஆனால் முகுந்தனின் படைப்புகளைப் படிக்கும்போது அவற்றில் நம்பகத்தன்மை நிறைந்து கிடக்கிறது. எதுவும் போலியாக இல்லை.

மாணவனாக, வேலையற்ற பட்டதாரியாக, கொழும்பில் அறையில் வாடகைக்கு தங்கியிருக்கும் வாலிபனாக, அரச ஊழியனாக, வெளிநாட்டிற்கு புலமைக் கல்விக்காகச் செல்பவனாக, நூலகத்தில் ஈயோட்டும் வாலிபனாக, புகழ் பெற்ற எழுத்தாளனின் போலி முகத்தை வெளிப்படுத்தும் உறவினனாக அவரது பாத்திரங்கள் அனைத்தும் உயிரோவியமாக அமைந்துள்ளன. அந்தப் பாத்திரங்களோடு எங்களையும் நெருக்கமாக உலவ விட்டிருக்கிறார்.

முகுந்தன் படைப்புலகில் அதிகம் எழுதியது போர் முனைப்புப் பெற்ற காலமாகும். எனவே இவற்றில் போர் மற்றும் இன முரண்பாடு பற்றியதாகவே இருப்பதில் வியப்பில்லை. கொழும்பில் வாழ்ந்த காரணத்தால் குண்டு வீச்சு, செல் அடி என போர் பற்றிய நேரடியான அனுபவங்கள் பற்றிய கதைகள் கிடையாது. மரநாய்கள் விதிவிலக்கு.

யதார்த்தம்

இவரது படைப்புகள் பெரும்பாலும், மாற்று மொழிபேசும் நண்பர்களுடன், சகஊழியர்களோடு பழகும்போது ஏற்படும் அவமானங்களைப், இனப் பாகுபாடுகளை, உதாசீனங்களை, அவற்றால் ஏற்படும் மனப் பாதிப்புகளைப் பேசுகின்றவையாக இருப்பதைக் காண்கிறோம். இருந்தபோதும் மாற்று இனம் மீதான வன்மம் இவரது படைப்புகளில் இல்லை என்பது நம்பிக்கை ஊட்டுகிறது.

தாய் மொழி, தன் கலை கலாசாரம் பண்பாடு மீதான அதீத பற்றும், ஏனைய இனங்கள் மீதான வெறுப்பும் இளக்காரமும் இன முரண்பாட்டை வளர்க்கவே செய்யும். பல இனங்கள் சேர்ந்து வாழும், தொடர்ந்தும் வாழ வேண்டிய சூழலில் பேனா பிடித்தவர்கள் சற்று நிதானமாக பொறுப்புணர்வோடு எழுதுவது அவசியம். புண்ணை ஆறவிடாது நோண்டிக் கொண்டிருக்கும் பிச்சைக்காரன் அல்ல எழுத்தாளன். அதே நேரம் வாக்கு வங்கியை பிடித்து வைப்பதற்காக பிரச்சைனைகளை பூதகாரமாக்கும் அரசியல்வாதி போலவும் இருப்பது நல்லதல்ல.
முகுந்தன் மலினமான புகழுக்காக அதீத இனப் பற்றாளனாக தன்னைக் காட்ட முற்படவில்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த வகையில் பார்க்கையில் ‘இரட்டைக் கோபுரம்’ கதையின் முடிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இவனோடு ஒன்றாக வேலை செய்து, உண்டு குடித்து உலாவித் திரிந்த சிங்கள நண்பர்களில் ஒருவன் தனக்கு பாரிய துன்பம் ஏற்பட்ட வேளையில் ‘பற தெமிளு’ என்ற வார்த்தையை உதிர்த்துவிடுகிறான்.

இவனது மனம் நோகிறது. ஏமாற்றம் அடைகிறது. அருகே நின்ற சிங்கள மொழி தெரியாத மற்றொரு நண்பன் அவன் என்ன சொன்னான் என இவனை வினவுகிறான். ‘எல்லாச் சிங்களச் சொற்களுக்கும் எனக்குக் கருத்துத் தெரியாது’ என இவன் பதிலளிக்கிறான். நல்ல பதிலாக எனக்குத் தோன்றியது. முரண்பாட்டை மேலும் தீவிரமாக்காமல் உறவுகளை பேண முயலும் ஒருவன் அவ்வாறுதான் பேச வேண்டும். முகுந்தன் தனது பாத்திரத்தை அவ்வாறு பேச வைத்தமை மகிழ்வளிக்கிறது.

இன முரண்பாட்டுக் கதைகளைப் பொதுவாகப் பார்க்கும்போது, வன்னியில் வாழ்ந்தவர்களது பார்வை அதி தீவிரமாகவும், யாழில் வாழ்பவர்களது படைப்புகள் அதில் சற்று காரம் குறைந்து மறைபொருளாகவும், வெளிநாட்டில் வாழ்பவர்கள் அதீத கற்பனைவாதிகளாகவும் படைப்பார்கள். கொழும்பில் வாழ்பவர்களது பார்வை வாழும் சூழலுக்கு ஏற்ப சற்று நீர்த்தலாகவே இருக்கும்.
எவ்வாறாக இருந்தபோதும் இனமுரண்பாட்டை முன்நிலைப்படுத்தும் மற்றும் ஏனைய இனத்தவர்களை விரோதிகளாகச் சித்திரிக்கும் படைப்புகள், எமது தாழ்வுமனப்பாட்டின் வெளிப்பாடா என நான் சிந்திப்பதுண்டு.

அல்லது இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரிகைச் செய்திகளும் படைப்புகளும்தான் எங்களை மீளமுடியாத தாழ்வுச் சிக்கலில் ஆழ்த்துகின்றனவா என்பதையிட்டு சமூகவியலாளர்கள் சிந்திக்க வேண்டும்.

முகுந்தனின் படைப்புகளில் இனப் பிரச்சனைகள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் அதிதீவிர உணர்வு இருக்கவில்லை. குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களாக தொடர்ந்து இருக்காது யதார்த்தத்தை உணர்ந்த படைப்பாளியாக முகுந்தனை அவ்விடத்தில் கண்டேன்.
தொடர்ந்தும் இனமுரண்பாட்டுப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது எமது வாழ்வின் நாளாந்தப் பிரச்சனைகள் பலவற்றையும் முகுந்தன் எழுதுவார் என நம்புகிறேன். இந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு சில கதைகள் உள்ளன. சின்ன மாமா, கூட்டத்தில் ஒருவன் போன்றைவை வேறு விடயங்களை முன்னிலைப்படுத்துகின்றன.

இந்தத் தொகுப்பில் உள்ள எந்த ஒரு சிறுகதையும் சீ என ஒதுக்கக் கூடியவை அல்ல. எல்லாக் கதைகளும் நல்ல முறையில் எழுதப்பட்டுள்ளன. 10ல் அரைவாசிக்கு மேற்பட்டவை மிக நல்ல படைப்புகளாக உள்ளன. படித்து முடித்த பின்னரும் அவற்றில் பல கதைகள் எம்மோடு நெடுநேரம் உரையாடுகின்றன. அடுத்த படைப்புக்குள் புகவிடாது தொல்லைப்படுத்துகின்றன. இதனால் என்னால் இத்தொகுப்பை ஓரு மூச்சில் படித்து முடிக்க முடியாது போயிற்று.

இன்றைய விழா தனிச்சிறப்பு வாய்ந்தது. வழமையாக இவரது படைப்புகளை வாசிக்காத ஒருவர் கூட இன்றைய இவரது வெளியீட்டு விழா அழைப்பிதழைக் கண்டால் இக் கூட்டத்திற்கு வரவும், இவரது கதைகளை வாசிக்க விரும்பவும் கூடும். ஏனெனில்

 • இது ஒரு காலச்சுவடு வெளியீடு.
 • இதற்கு பின்னுரை எழுதியிருப்பவர் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்கள்
 • இங்கு கருத்துரை வழங்க வந்திருப்பவர்கள் திரு.அ.யேசுராசா மற்றும் உமா வரதராஜன்

இந்த மூன்று பேரும் காலச்சுவடு பதிப்பகத்தினரும் ஒரு விதத்தில்…. ஒருமைப்பாட்டைக் கொண்டவரகள். படைப்பிலக்கியத்தில் செழுமையை அவாவுபவர்கள். இலக்கியப் படைப்பின் தரத்தில் எந்தவித சமரசங்கங்களுக்கும் இடம் கொடாதவர்கள். முகத்திற்கான இது நல்ல படைப்பு என்ற அங்கீகாரத்தை எவருக்காகவும் கொடுக்க மறுப்பவர்கள்.

இவர்கள் அனைவரும் தாங்கள் இந்த முயற்சியில் பங்கு கொள்வதன் மூலம் முகுந்தனின் படைப்புகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் படைப்பு இலக்கியம் பற்றி லியோ டால்ஸ்டாய் கூறிய ஒரு கருத்ததை நினைவில் கொள்ளலாம்.

“.. எந்த இலக்கிய முயற்சியிலும் நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மிகவும் முக்கியமானது ஆசிரியன் சொல்வதற்கு என்ன வைத்திருக்கிறான் என்பது. அதற்கு அடுத்தது அவனது விஷயத்தின்மீது அவனுக்கு இருக்கிற நெகிழ்ச்சியான பற்று. கடைசியாக ‘டெக்னிக்’. முன் இரண்டிலும் ஒருங்கிணைந்த உடன்பாடு இருந்தால்தான் உன்மையான கலைப்படைப்பு சாத்தியமாகும். அந்த இரண்டும் இருந்தால் ‘டெக்னிக்’ என்பது தானாக வந்துவிடும்…”
முகுந்தனின் முதல் இரண்டும் இருக்கின்றன.

அதாவது சொல்வதற்கு ஏதோ ஒரு விடயமும், அதில் நெகிழ்ச்சியான பற்றும் நிறையவே இருக்கின்றன. அத்துடன் நல்ல கதை சொல்லிக்கான டெக்னிக் அவருக்கு இயல்பாகவே வாய்த்திருக்கிறது. இதனால் இலக்கிய உலகில் அவருக்கு வளமான எதிர்காலம் நிச்சயம் உண்டு. மேலும் பல சிறப்புகள் அவரை வந்தடைய வாழ்த்துகிறேன்.
இத்தகைய அருமையான கூட்டத்தில் தலைமை தாங்க அழைத்தமைக்கு முகுந்தனுக்கு நன்றிகள்

எனமு மறந்து போகாத சில புளக்கில் வெளியான கட்டுரை ‘கண்ணீரினூடே தெரியும் வீதி’ தேவமுகுந்தன் சிறுகதைகள்

எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0

Read Full Post »

என் நாடித்துடிப்பு 72ல் இருந்து 100ற்கு திடீரென எகிறிப் பாய்ந்தது.

அவர் சொன்ன வார்த்தைகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி நிலைகுலைய வைத்துவிட்டது. உட்கார்ந்திருந்த சுழல் நாற்காலியை தற்பாதுகாப்புக்காக என்னையறியாமலே சற்றுப் பின்னுக்கு தள்ளிவிட்டதை உணர்ந்ததும் சற்று வெட்கமாக இருந்தது.

வெட்கப்பட்டு காலத்தைக் கடத்தக் கூடிய தருணம் அல்ல. தற்பாதுகாப்பைத் தேடி வேண்டிய நேரம்.

அவசர கணம்.

சொன்னவர் ஒல்லிக் குச்சி மனிதன் அல்ல. ஆஜானுபவானான மனிதர். மல்யுத்த வீரன் போல பரந்த மார்பும், விரிந்து தோள்களுமான நல்ல திடகாத்திரமான உடல். பத்துப்போரை ஒரே நேரத்தில் அடித்து விழுத்திவிடுவார் போலிருந்தது.

நமது தனுஸ் பத்துப்பேரை அல்ல நூறு பேரை தனியாளாக அவ்வாறு அடித்து விழுத்தியதைப் பார்த்ததில்லையா என எனது அறியாமையை கிண்டல் பண்ணாதீர்கள். நீங்கள் அவ்வாறு கேள்வி கேட்பது அவரை அசௌகர்யப்படுத்திவிடும்.

உற்றுப் பார்த்தபோது வெறும் கையுடன்தான் வந்திருந்தார். தப்பித்தேன். கையில் ஆபத்தானவை எவையும் இல்லை. பொக்கற்றுக்குள்ளும் இருப்பதாகத் தெரியவில்லை. படபடப்பு அடங்கி நிம்மதி பரவியது.

திரும்ப யோசித்தபோது அவமானமாக இருந்தது. Gun என்றவுடன் நான் ஏன் இப்படி பயங்கொள்ளியாகி ஒடுங்கிபோகிறேன்?

வாழ்ந்த சூழல்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

துப்பாக்கி தூக்கி எதிரிகளை அழிக்கும் ஆவேசக்காரர்கள் மத்தியில் எனது வாழ்நாளில் சுமார் அரைவாசிக் காலத்தை கழிக்க நேர்ந்திருக்கிறது. அவை களிக்க வைக்கும் நேரங்கள் அல்ல. அவர்கள் விடுதலைக்காகப் போராடுபவர்கள் மற்றும் இராணுவ வீரர்கள். கனவிலும் நினைவிலும் அவ்விரு தரப்பினருமே கொல்லும் வெறியோடுதான் திரிந்தார்கள். எதிரிகளைக் கொல்லும் வெறி. குத்திக் குதறிக் கொல்லும் வெறி.

இடையில் அகப்பட்டால் நாம் அம்போதான்.

ஒரு எதிரியைக் கொல்வதற்காக எத்தனை பொதுமகன் செத்தாலும் பரவாயில்லை என எண்ணும் அதீத கொள்கைப் பிடிப்பாளர்கள். அதுதான் யுத்த தர்மம் என வாதாடுவார்கள்.

இது விதண்டாவதம் என்று சொன்னவன் துரோகியென பட்டை குத்தப்படுவான். துரோகிகளுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்படுவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.

இதனால் உண்மைகளை வெளிப்படையாகச் சொல்ல அன்றும் இன்றும் சரி எவருக்கும் விருப்பம் இல்லை. எனக்கும்தான்.

ஆனால் இது எனக்கு மட்டும் நேர்ந்த அவலம் அல்ல. தமிழனத்தின் அவலம். இன்னும் சற்றுப் பரந்த சிந்தனையோடு யோசித்தால் இலங்கைத் தீவின் அனைத்து மக்களினதும் அவலம். இனத்திற்கு இனம் அளவுகளில் சற்று ஏற்றத்தாழ்வு இருக்கலாம். ஆனால் பாதிப்பும் துப்பாக்கி ஏந்தியவர்கள் பற்றிய பயமும் அனைத்து மக்களிடமும் இருந்ததை மறுக்க முடியாது.

இவர் சொன்ன Gun வேறு விடயம்.

இது வேறு விடயம் என்பது ஆரம்பப் பயம் தணிந்ததும்தான் தெளிவாகியது.

உயிரைப் பறிக்கும்; துப்பாக்கியல்ல. உயிர் கொடுக்கும் துப்பாக்கி இவரது.

அவ்வாறு யோசித்தால் பார்த்தால் நானும் துப்பாக்கிக்காரன்தான். அவருடையதை விட என்னுடையது இன்னமும் நல்ல நிலையிலேயே இருக்கிறது எனப் பெரிமிதம் கொள்ளலாம்.

இருந்தபோதும் அவரது பிரச்சனையைப் புரிந்து கொள்ள மேலும் சில விடயங்களைப் பற்றி விசாரிக்க வேண்டியிருந்தது.

“நீரிழிவு நோய் உங்களுக்கு இருக்கா” எனக் கேட்டேன்.

“இல்லை’ என்றார் திடமாக.

சற்று யோசித்த பின்னர் ‘கொஞ்சமாக இருக்கு ஆனால் மருந்து சாப்பிடுவதில்லை’ என்றார்.

சாப்பிடாமல் எடுத்தால் இரத்தத்தில் சீனியின் அளவு 120, 140 என்று தானிருக்குமாம்.

நீரிழிவு இல்லாதவர்களுக்கு இது 110ற்குள் இருக்க வேண்டும்.

சாதரண அளவை விட 10 முதல் 30 மட்டுமே கூட இருப்பதால்

“இது கடுமையான நோய் அல்ல. குறைவாகத்தானே இருக்கு. சாப்பாட்டால் கட்டுப்படுத்தி விடலாம்” 

என எண்ணி அக்கறை எடுக்காமல் விட்டுவிட்டார்.

நீரிழிவு என்பது அறிகுறிகளற்ற நோய். ஆரம்ப நிலைகளில் எந்தவித இடைஞ்சல்களையும் நோயாளிக்குக் கொடுக்க மாட்டாது. ஆனால் உள்ளிருந்து அரித்துக் கொண்டிருக்கும். அறுந்து விழும் நிலையில்தான் நோயாளிக்குக் தெரிய வரும்.

சிறுநீரகப் பாதிப்பு, அது செயலிழத்தல், மாரடைப்பு போன்ற இருதய நோய்கள், பக்கவாதம், கண்பார்வை மங்கல், மாறாத புண்கள், கால்களை அகற்ற நேருதல் எனப் பல. நீரிழிவினால் நுண்ணிய குருதிக் குழாய்கள் பாதிப்புற்று, உறுப்புகளுக்கு போதிய இரத்தம் பாய முடியாத நிலையில் இவை யாவும் தோன்றுகிறன.

இப்படியான பல பிரச்சனைகள் வந்த பின்னர்தான் பலருக்கு தமக்குள்ள நீரழிவின் பாரதூர நிலை தெளிவாகிறது.

அதற்குப் பின் மார்புக் கவசம் அற்ற வில்வீரன் போலத்தான் இவர்கள் நிலை. ஏற்கனவே வீசிய பாசக்கயிற்றை யமன் எந்ந நேரத்திலும் இறுக்க முடியும்.

இவருக்கும் அவ்வாறுதான். ஏற்கனவே உறுப்பின் இரத்த ஓட்டமும் அதற்கான நரம்புகளும் பாதிக்கப்பட்டுவிட்டன.

இதனால் மனத்தில் எவ்வளவுதான் ஆசை இருந்தபோதும் இவரால் முடியவிதில்லை. பேரழகி ஹெலன் இவர் முன் அம்மணமாக வந்து நின்றால் ஆசை மீறும். ஆனால் காற்றில்லாத பலூன் போல உறுப்பு சோர்ந்து கிடக்கும்.

“My Gun is not firing”  என்று சொன்னது அதனால்தான்.

இவர் கற்றுக் கொள்ளாத பாடம் இவருக்கு உலை வைத்துவிட்டது..

Either you have diabetis or no diabetis. There is nothing in between called mild diabetis.  

எனது steth இன் குரல் புளக்கில் 22nd February 2012 வெளியான கட்டுரைசுடாத துப்பாக்கி

வீரகேசரியில் நான் எழுதிய அனுபவப் பகிர்வு

Read Full Post »