Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஒக்ரோபர், 2013

கவலை இல்லாமலும் கண்ணீர் வரும்
கண்கடியுடன் கண்கள் சிவந்து கண்களால் நீர் வடிதல்

கண்ணைக் கசக்கிக் கொண்டுவந்த பையனைக் கூட்டிக் கொண்டு வந்த அம்மாவின் முகத்தில் சலிப்பு. பையனின் முகத்திலும் சோர்வு தட்டியிருந்தது.

Allergic conjuntivits 1

“எவ்வளவு சொன்னாலும் கேக்கிறானே? எந்த நேரம் பார்த்தாலும் கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கிறான். கண் வீங்கிப் போச்சு. போதாக்குறைக்கு மூக்கையும் குடையிறான். வெளியிலை கூட்டிக் கொண்டு போகவே வெக்கமாகக் கிடக்கு”

உண்மைதான் அந்த அழகான பையனின் கண்மடல்கள் வீங்கிக் கிடந்தன. கண்களின் கீழே கருவளையம் தெரிந்தது. முகமும் கண்களும் செம்மை பூத்துக் கிடந்தன. மூக்கு வீங்கி அதன் துவாரங்கள் மேல்நோக்கிப் பார்த்தன. மூக்கை உள்ளங்கையால் தேய்த்துத்தான் அவ்வாறாகியிருந்தது.

Allergic conjuntivits

பாவம்! அவனைத் தூற்றுவதில் பிரயோசனம் இல்லை. அவனுக்கான பாரிகாரங்களைத் தாய் செய்து கொடுக்கத் தவறிவிட்டாள் என்றே எனக்குத் தோன்றியது.

ஓவ்வாமைக் கண்நோய்

இது பலருக்கும் ஏற்படுகிற பிரச்சனைதான். குழந்தைகளில் அதிகம். கண்ணில் அரிப்பு, கண்ணால் நீர்வடிதல், கண்ணைக் கசக்குதல், கண்மடல் வீங்குதல், வெளிச்சத்தைப் பார்க்கக் கூச்சம் என அவர்களுக்கு தங்கள் கண்களே தொல்லையாகி விடுவதுண்டு.

இவை எல்லாம் கண்ணில் ஏற்படும் ஒவ்வாமையின் நுலந யுடடநசபல பல அறிகுறிகளாகும்.

Allergic conjuntivits 3

மாறாக, கிருமித் தொற்றால் ஏற்படும் கண்நோய்கள் முதலில் ஒரு கண்ணில் தோன்றும் பின் மற்றக் கண்ணிற்கும் பரவலாம். ஆனால் ஒவ்வாமைக் கண்நோய் பொதுவாக இரு கண்களிலும் ஒரே நேரத்தில் தோன்றும். அத்துடன் கண் அரிப்பு நிச்சயம் இருக்கும். மடலைத் தாண்டி கண்களும் பாதிப்புறும்போது கண்ணிலிருந்து சற்றுத் தடிப்பான திரவம் சுரந்து கண் ஓரங்களில் ‘பீளையாக’ ஒட்டிக் கிடந்து பார்ப்பவர்களை அருவருக்கவும் வைக்கலாம்.

Allergic conjuntivits 4

ஓவ்வாமைகள்

இவை பொதுவாகத் தனியாக வருவதில்லை. தும்மல், மூக்கால் வடிதல், மூக்கடைப்பு போன்ற வேறு ஒவ்வாமை அறிகுறிகளுடன் கைகோர்த்து வருவதுண்டு. சிலருக்குக் காதில் அரிப்பும் ஏற்படுவதுண்டு. இவை யாவுமே ஒவ்வாமைகளின் (Allergy) அறிகுறிதான்.

இவை முகத்தில் தோன்றுபவை. ஆனால் ஓவ்வாமைகள் உடல் முழவதும் தோன்றலாம், அல்லது உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றலாம்.

Allergic conjuntivits 5

ஒவ்வாமைகளுக்குக் காரணம் என்ன? உணவு முதற்கொண்டு தூசி புழதி, வாசனைத் திரவியங்கள் போன்ற பலவும் ஒவ்வாமையைத் தோற்றுவிக்கலாம்.

ஒவ்வாமையால்

  • சருமத்தில் தடிப்புகள் வீக்கங்கள், அரிப்பு போன்றவை தோன்றுவது போலவே
  • கண்களிலும் மேற்சொன்ன அறிகுறிகள் ஏற்படுகின்றன.
  • சிலரது வயிற்றுவலிக்கும் ஒவ்வாமை காரணமாவதுண்டு.

தூசி, புழுதி, போன்றவை காரணமாகலாம்

வாசனைத் திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், கடுமையான மணங்கள் காரணமாகலாம்.

சிலருக்கு சீதோசன காலநிலைகளும் காரணமாகலாம். பூக்கள் மகரந்தங்கள் போன்றவையும் காரணமாகலாம். பருவகாலங்கள் துல்லியமாக மாறுபடும் மேலை நாடுகளில் இது பொதுவாக வசந்த காலத்தில் பெரும்பாலானவர்களைப் பாதிப்பதுண்டு.

தூசிப் பூச்சி, ஒட்டடை, பூனை நாய் போன்ற வளர்ப்பு மிருகங்களின் ரோமம் போன்றவையும் சொல்லப்படுகிறது.

ஓவ்வாமைக் கண்நோயானது நோயாளியை அரியண்ணடப்படுத்தி எரிச்சலுற வைக்கும் என்றபோதும் ஆபத்தான நோயல்ல. மீண்டும் மீண்டும் தோன்றக் கூடியதாயினும் கண்ணின் பார்வைத் திறனைப் பாதிக்காது. வேறு எந்த ஆபத்தான பின் விளைவுகளும் ஏற்படாது.

நீங்கள் செய்யக் கூடியவை

ஓவ்வாமைக் கண்நோய் ஏற்படாமல் தடுக்கவும், அது தோன்றினால் அதிலிருந்து நிவாரணம் பெறவும் நீங்கள் செய்யக் கூடியவை எவை?
கீழ்கண்ட ஆலோசனைகளை The American Academy of Allergy Asthma and Immunology   வழங்குகிறது.

lotion woman

  • வீட்டைவிட்டு வெளியே போகும் போது தூசி, மகரந்தம் போன்றவை கண்ணில் விழாமலிருக்க பரந்த விளிம்புள்ள தொப்பிகளை அணியுங்கள். தொப்பி தலையில் வெயில் மழை படாமலிருக்க மட்டுமின்றி இந்த வகையிலும் உதவுகிறது என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள்.
  • அதே போல கண்ணாடி, கருப்புக் கண்ணாடி அணிவதாலும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்கள் கண்ணில் நேரடியாகதத் தாக்காது காப்பாற்றலாம்.
  • வெளியில் போய் வந்ததும் கண்களை நீரினால் கழுவுங்கள். நன்கு அலசிக் கழுவினால் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களை அகற்ற முடியும். சோப் போட வேண்டியதில்லை.
  • கொன்டக்ட் லென்ஸ் contact lenses போடுவராயின் அதனை அகற்றுவதும் உதவும்.
  • எவ்வளவு அரித்தாலும் கண்களைக் கசக்குவதைத் தவிருங்கள். கசக்குவதால் கண்களில் நுண்ணிய உரசல்களும் கிருமித் தொற்றும் ஏற்பட்டு பிரச்சனையை மோசமாக்கும்.

மருந்துகள்

மேற்கூறிய முறைகளில் குணமாகாவிடில் உங்கள் மருத்துவரைக் காணுங்கள்.

ஒவ்வாமையைத் தணிக்கும் மாத்திரைகளை அல்லது, அதற்கான கண் துளி மருந்துகளையும் அவர் தருவார். சில தருணங்களில் இரண்டையும் சேர்த்தும் தரக் கூடும்.

Allergic conjuntivits 6

ஒவ்வாமைக்கு எதிரான மருந்துகளை anti-histamines என்பார்கள். இலங்கையில் பிரிட்டோன் என்ற மாத்திரை பலருக்கும் பரிச்சயமானது. அது அம் மருந்தின் வர்த்தகப் பெயராகும். chlorpheniramineஎன்பதே அதன் பொதுவான பெயராகும். தும்மல், தடிமன், அரிப்பு என்றவுடன் பலரும் தாங்களாகவே இதை வாங்கிப் போடுவதை நாம் காண்கிறோம். இது சற்று சோர்வையும், தூக்கத்தையும் ஏற்படுத்துவதுண்டு. எனவே பாடசாலைப் பிள்ளைகள் வேலைக்குச் செல்வோர் ஆகியோருக்கு ஏற்றதல்ல.

சிலர் தூக்கம் வரவில்லை என்றாலும் தாங்களாகவே இம் மருந்தை உட்கொள்கிறார்கள். அது தூக்க மாத்திரை அல்ல. இவ்வாறு மருந்துகளைத் துஷ்பிரயோகம் செய்வது ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால் மருத்துவ ஆலோசனையின்றி உட்கொள்ளக் கூடாது.

loratadine, cetirizine, fexofenadine, desloratadine  போன்ற பல புதிய மருந்துகள் அந்தளவு தூக்க மயக்கத்தை ஏற்படுத்தாது. இவை யாவும் மருத்துவ ஆலொசனையுடன் மட்டுமே பயன்படுத்த வேண்டியவையாகும்.

கண்ணிற்குள் விடும் துளி மருந்துகளிலும் பல வகைகள் உள்ளன. இவற்றில் சில தொடர்ந்து உபயோகிக்க உகந்தவை. ஏனைய பல சில நாட்களுக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டியவை. எனவே அவை பற்றி இங்கு எழுதவில்லை. மருத்துவ ஆலோசனையுடன் அவர் சிபார்ச்சு செய்யும் மருந்துகளை அவர் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை கண்ணில் அரிப்பு, கண்ணால் நீர்வடிதல் தடுப்பது எப்படி?
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்
0.0.0.0.0.0.0

Read Full Post »

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் சென்ற 7ம் திகதி, ஒட்டோபர் 2013 முதல் எதிர்வரும் 13ம் திகதி வரை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் சொல்கின்றன.

டெங்கு மீண்டும் தலைவிரித்து ஆடும் சாத்தியம் இருப்பதை மறுப்பதற்கில்லை. நுளம்பு பெருகும் இடங்களை துப்பரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சென்ற வருடங்களை விட அது பரவும் வேகம் சற்றுக் குறைவாக இருக்கக் கூடும் என நம்புகிறேன். சில காலங்களுக்கு முன் எழுதிய தற்போது பரவும் தொற்று நோய்கள் என்ற கட்டுரையில் டெங்கு பற்றி சுருக்கமாக சொல்லியிருந்தேன். இது சற்று விரிவான கட்டுரையாகும்.

dengue-page-upload (1)

டெங்குப் பரவல்

இவ்வருட தை மாசி மாதங்களில் பல உயிர்களைப் பலி கொண்ட டெங்கு அதன் பின் சற்றுத் தணிந்திருந்தது. ஆயினும் மறையவில்லை. கடும் மழை கொட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் டெங்கு சற்றுக் குறையும். நுளம்புக் கூம்பிகள் ஓடும் நீரில் அள்ளுப்பட்டுச் சென்றுவிடும். மழை சற்றுக் குறைந்து வெயிலும் சேரும்போது தேங்கி நிற்றும் நீர்நிலைகளில் நுளம்பு பெருகும். அப்போதுதான் டெங்கு தன் கோர முகத்தைக் காட்டும்.

இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் டெங்கு எனச் சந்தேகிக்கப்பட்ட 16526 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பகுதி சில நாட்களின் முன் அறிவித்திருந்தது.

usual_breeding_grounds

தரவுகளை ஆயும்போது கொழும்பு மாவட்டத்தில்தான் மிக அதிகமான அளவில் (மொத்தத்தில் சுமார் 25 சதவிகிதம்) நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். அடுத்து குருநாகல் மாவட்டம், மூன்றாவது இடத்தை கம்பஹா மாவட்டம் பிடித்தது.

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் 400 ற்று மேற்பட்டிருக்க, கிளிநொச்சியில் மிகக் குறைந்த எண்ணிக்கையான 32 மட்டும் இனங் காணப்பட்டனர். வவுனியா 47, மன்னார் 56, முல்லைத்தீவு 83, திருகோணமலை 149. கிளிநொச்சி டெங்கு நோயாளர் மாவட்டத்தில் குறைவாக இருப்பதற்கு சன அடர்த்தி குறைவாக இருப்பது காரணமாக இருக்கலாம். ஏனெனில் டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்டி (Aedes aegypti) நுளம்பினால் நீண்ட தூரம் பறக்க முடியாது. மொத்த டெங்கு நோயாளர்களில் 43.4 சதவிகிதம் மேல் மாகாணத்தில் இருப்பதற்கு சன நெருக்கடியே காரணமாகிறது.

757px-Aedes_aegypti_biting_human

டெங்கு அறிகுறிகள்

பிள்ளைகளுக்கு காய்ச்சல் என்று கண்டவுடன் பெற்றோர்கள் பயந்தடித்துக் கொண்டு மருத்துவர்களை நாடி ஓடுகிறார்கள். அவர்களது பயம் அர்த்தம் அற்றது அல்ல. பத்திரிகைகளில் வரும் செய்திகளும் பாடசாலை மாணவர்களில் ஏற்படும் மரணங்களும் பீதியை ஏற்படுத்தவே செய்யும். ஆயினும் பல வருடங்களாக டெங்குவுடன் வாழ்ந்த நாம் இது டெங்குவா இல்லையா என அனுமானிக்கப் பழக வேண்டும்.

dengue-fever

பெரும்பாலான ஏனைய காய்ச்சல்கள் தடிமன், மூக்கடைப்பு, தும்மல் தலையிடி, தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் வரும். காய்சலும் 100 – 101 றைப் பெரும்பாலும் தாண்டாது. வேறு சில வாந்தி வயிற்றோட்டத்துடன் வரும். இன்னும் சில சிறுநீர் கழிக்கும்போது எரிவைக் கொடுக்கும். இத்தகைய அறிகுறிகள் கடுமையாக இல்லாவிட்டால் உடனடியாக மருத்துவரிடம் ஓட வேண்டியதில்லை

ஆனாலும் டெங்கு காய்ச்;சலில் முற்கூறிய அறிகுறிகள் பெரும்பாலும் இருக்காது. ஆனால் ஆரம்பத்திலேயே காய்ச்சல் மிகக் கடுமை 104 – 105 எனக் கடுமையாக இருக்கும். பொறுக்க முடியாத உடல் மற்றும் மூட்டு வலிகள் இருக்கும். கண்ணுக்குப் பின் குத்துவது போன்ற தலையிடியும் இருக்கும்.

babyBlanket

உங்கள் குழந்தை இவ்வாறு கடுமையான காய்ச்சலுடன் துடியாட்டம் இன்றிப் சோர்ந்து படுத்துவிட்டால் அலட்சியப்படுத்த வேண்டாம். மருத்துவரைக் காண்பது அவசியம்.

குழந்தைகள் உள்ளவர்கள் வீட்டில் ஒரு டிஜிட்டல் தேர்மாமீற்றர் வைத்திருப்பது நல்லது. மேர்கியூரி தேர்மோமீற்றர் போல இது விரைவில் உடையாது. மேர்கியூரியின் நச்சுத் தன்மையும் கிடையாது. எனவே விலை சற்று அதிகமானாலும் குழந்தைகள் உள்ளவர்கள் இதை வைத்திருப்பது உசிதமானது.

மருத்துவர் வேறு அறிகுறிகளும் இருக்கிறதா என பார்ப்பார். கண்கள் சிவந்திருக்கிறதா, தோல் செம்மை பூத்திருக்கிறதா, நாடித் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் எவ்வாறு இருக்கிறது போன்றவற்றை அவதானிப்பார்.

டெங்குவாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தால் Full blood count, Dengue antigen ஆகிய பரிசோதனைகளையும் மருத்துவர் மேற் கொள்ளக் கூடும். இருந்தபோதும் Dengue antigen பரிசோதனை விலை கூடியதும் எல்லா இடங்களிலும் செய்வது இயலாததும் ஆகும்.

எவ்வாறாயினும் 3ம் நாள் Full blood count (FBC) பரிசோதனையை செய்வது அவசியம். இவை குருதியில் வெண் கலங்களின் எண்ணிக்கை அளவு, வெண்குருதி சிறுதுணிக்கை அளவு மற்றும் Pஊஏ போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்கள் ஊடாக நோயின் நிலையைக் கணிக்க அவசியமாகும்.

டெங்கு அன்ரிஜென் பொசிட்டிவாக இருந்தால் அது டெங்குக் காய்ச்சல் என்பது உறுதிதான். ஆனாலும் அது ஆபத்தாகுமா. நிச்சயம் சொல்ல முடியாது.

டெங்குவின் வகைகள்

ஏனெனில் டெங்கு காய்சலில் பல வகைகள் உள்ள.
சாதாரண டெங்குக் காய்ச்சலானது சாதாரண வைரஸ் காய்ச்சல் போல எந்தப் பிரச்சனையும் இன்றி தானாகவே மாறிவிடும். 50 சதவிகிதமானவர்களுக்கு இப்படித்தான் நடக்கும். எந்தவித சிகிச்சைகளும் தேவைப்படாது.

மிகுதியில் 40 சதவிகிதமானவர்களுக்கு டெங்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படும். இது சாதாரண சிகிச்சைகளுடன் குணமாகும். பரசிட்டமோல், கொத்தமல்லி, பப்பாசிச் சாறு போன்ற எதைக் கொடு;த்தாலும் மாறிவிடும். கொடுக்காவி;ட்டாலும் மாறும். ஏனெனில் அது மாறுவது மருந்தால் அல்ல. அந்த நோயின் இயல்பாக தன்மையால்தான்.

மிகவும் ஆபத்தானது போன்று பயமுறுத்தும் டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சலானது அவர்களில் சுமார் 10 சதவிகிதமானவர்களுக்கு மட்டுமே வரும். கண்களில் இரத்தக் கசிவு, மூக்கால் இரத்தம் வடிதல், வாந்தியுடன் இரத்தம் போன்ற பயங்கரமான அறிகுறிகள் இருந்தாலும் இவர்களில் 98 சதவிகிதமானவர்கள் ஆபத்தான கட்டத்தை அடைய மாட்டார்கள். தப்பிவிடுவார்கள்

மிக ஆபத்தானது டெங்கு அதிர்ச்சி நிலையாகும். இவர்கள் மிகக் குறைந்த 2 சதவிகிதத்தினருக்கு மட்டுமே வரும். இந்த 2 சதவிகிதமானவர்களை ஆரம்ப நிலையிலேயே இனங் காண்பதிலும் அவர்களுக்கு மருத்துவ மனையில் வைத்து மிகக் கவனமான முறையில் சிகிச்சை அளிப்பதன் மூலமே ஆபத்தான டெங்கு நோயாளிகளைக் காப்பாற்றவும் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் முடியும். ஆயினும் இது மருத்துவர்களாலேயே முடியும்.

நவீன சிகிச்சையில் உடலின் திரவ நிலையை சரியான அளவில் பேணுவதே முக்கியமானது. வெளியேறும் சிறுநீரின் அளவைக் கண்காணித்து அதற்கேற்பவே நீராகாரம் முதல் நாளம் ஊடான திரவம் கொடுப்பது வரை கொடுப்பார்கள்.

இந்த அதிர்ச்சி நிலையானது காய்ச்சல் தணியும் நிலையிலேயே வெளிவரும். எனவே காய்ச்சல் தணிந்த போதும் நோயாளியின் பொதுவான உடல் நிலை திருப்தியாக இல்லாவிடின் மருத்துவரைக் காண வேண்டும்.

கடுமையான களைப்பு, இயங்க முடியாமை, சினப்படுதல், அமைதியின்மை, கடுமையான வயிற்று வலி, வாந்தி, கடுமையான சோர்வு, உள்ளங்கால் உள்ளங்கை போன்றவை குளிர்ந்து ஈரலிப்பாக இருத்தல், சிறுநீர் மிகக் குறைவாக வெளியேறல் போன்ற அறிகுறிகள் காய்ச்சல் தணிந்த பின்னரும் இருந்தால் அது ஆபத்தாகலாம்.

நீங்கள் செய்யக் கூடியவை எவை?

சாதாரண காய்ச்சல் வந்த உடனேயே மருத்துவரிம் ஓட வேண்டியதில்லை. மேலே கூறிய அறிகுறிகளை வைத்து இது டெங்குவாக இருக்குமோ எனச் சந்தேகித்தால் மட்டும் மருத்துவரைக் காணுங்கள்.

காய்ச்சல் மற்றும் உடல் வலியைத் தணிக்க பரசிற்றமோல் மாத்திரையை வயதுக்கு ஏற்ற அளவில் கொடுங்கள். 6 மணி நேரத்திற்கு ஒரு தடவையே கொடுங்கள். அதற்கு மேலாக அளவைக் கூட்டிக் கொடுக்கக் கூடாது. அளவிற்கு மீறிய பரசிற்றமோல் ஈரலைப் பாதிக்கும்.

Piaron_susp_eng(1)

பரசிற்றமோல் மருந்தைச் சரியான அளவில் கொடுத்தும் காய்ச்சல் தணியவில்லை எனில் Dengue antigen   பரிசோதனை செய்வது உதவக் கூடும். இப் பரிசோதனையானது காய்ச்சல் ஆரம்பித்த முதல் 24 மணிநேரத்திற்குள் மட்டுமே சரியான முடிவைக் கொடுக்கும்.

புரூபன், பொன்ஸ்டன் போன்றவற்றைக் கொடுக்கவே கூடாது.காய்ச்சல் கடுமையாக இருந்தால் இளம் சூட்டு நீரால் ஸ்பொன்ஞ் பண்ணுவது குழந்தைக்கு இதமாக இருக்கும்.

ஓய்வு மிக முக்கியமானது. பரீட்சை வருகிறது, டான்ஸ் பயிற்சி, வெளியூர்ப் பயணம் என்றெல்லாம் சொல்லி கடுமையான மருந்துகளைக் கொடுத்து வேலைக்கோ பாடசாலைக்கோ அனுப்ப முயற்சிக்க வேண்டாம்.

போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். ஆனால் தேவைக்கு அதிகமாக லீட்டர் கணக்கில் கொடுப்பதும் கூடாது.

சிறுநீர் வழமைபோலப் போகிறதா என்பதை அவதானிக்க வேண்டும். மிகக் குறைவாக வெளியேறுவதுடன் கடுமையான தாகம் இருந்தால் அதை மருத்துவருக்கு உடனடியாகத் தெரியப்படுத்துங்கள்.

மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் FBC இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். முதல் நாளிலிலேயே செய்ய வேண்டியது ஏன், எப்போது என்பது பற்றி ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன். அதன் பின்னர் தேவை ஏற்படுமாயின் தினமும் ஒரு தடவையோ இரு தடவைகளோ செய்ய வேண்டி நேரலாம்.

டெங்கு ஏற்படுத்தும் வைரஸ் கிருமியானது நோயளியின் உடலில் சுமார் 5 நாட்களுக்கு. ஆனால் கடுமையான தாக்கம் 4வது அல்லது 5வது நாளிலேயே உச்ச நிலையில் இருப்பதால் அந்நேரத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும். அந்நேரத்தில் நோயாளியின் இரத்தக் குழாய்கள் பாதிப்புற்று இரத்தம் அல்லது இரத்தப் பாயம் (plasma) குழாய்களை விட்டு வெளியேறுவதாலேயே ஆபத்து ஏற்படுகிறது.

சிவத்த நிறமுடைய பானங்களையோ உணவுகளையோ கொடுப்பதைத் தவிருங்கள்.

ஆபத்தும் தடுப்பும்

ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட வயதானவர்கள், கொழுப்பான உடல் வாகை உடையவர்கள், கர்ப்பணிகள் ஆகியோரில் இது ஆபத்தாக மாறும் சாத்தியம் அதிகம். அவர்களது காய்ச்சலானது டெங்குவாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தால் சற்றும் தாமதப்படுத்தாது தீவிர கவனிப்பிற்கும் சிகிச்சைக்கும் உட்படுத்த வேண்டும்.

dengue-kills

டெங்கு பரவாது இருக்க நுளம்பு பரவுவதைத் தடுக்க வேண்டும். அரசு செய்யும், மாநகரசபை செய்யும் என நாம் வாளாதிருக்க முடியாது. எமது வீட்டை, எமது சுற்றுச் சூழலை, எமது பாடசாலைகளை, எமது தொழிலகங்களை நுளம்பு இல்லாத இடங்களாக மாற்றுவதில் எமது பங்கு பெரிது என்பதை மறக்க வேண்டாம்.

அவ்வாறு நுளம்பு பெருகுவதைத் தடுத்தால் டெங்கு தனது கோர முகத்தைக் காட்ட முடியாது முடங்கி அடங்கிவிடும்.

எனது ஹாய்நலமா புளக்கில் இவ்வருட ஜீலை மாதம் வெளியான கட்டுரை டெங்கு மீண்டும் கோர முகத்தைக் காட்டுமா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
0.0.0.0.0.0.0

Read Full Post »

அந்தச் செய்தி என்னை கவலைப்பட வைத்தது. அவளின் நீரிழிவு இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறதோ, பிரஸர் சிறுநீரகச் செயற்பாடு எல்லாம் எப்படி இருக்குமோ எனச் சந்தேகித்தேன்.

இத்தனைக்கும் அவள் ஒழுங்காக வேளை தவறாது மருந்துகளைச் சாப்பிடுகிறாள். அதுவும் மருத்துவனான அவளது கணவன் நீரிழிவுக்கு என எழுதிக் கொடுத்த அதே மருந்துகளைத்தான்.

  • ஆனால் அவர் இறந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிறது.
  • அதன் பிறகு அவள் மருத்துவர்களிடம் போகவும் இல்லை.
  • பரிசோதனைகளைச் செய்யவும் இல்லை.
  • மருந்துகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
  • இது எவ்வளவு தவறானது என்பதை இற்றைவரை அவள் புரிந்திருக்கவில்லை.

நீரிழிவு என்பது கால ஓட்டத்துடன் தீவிரமாகும் ஒரு நோய். காலம் செல்லச் செல்ல நோய் அதிகரிக்கும். அத்துடன் நோய் கட்டுப்பாட்டில் இல்லையேல் பல்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

  • இருதயம், சிறுநீரகம், நரம்புகள், என ஒவ்வொறு உறுப்புகளிலும் பாதிப்புகள் ஏற்படும்.
  • இவை வெளிப்படையாகத் தெரியாமல் உள்ளுற தீவிரமாகும். அதேபோல உயர்இரத்த அழுத்த நோய் உள்ளவர்களிலும் பாதிப்புகள் ஏற்படவே செய்யும்.
  • இதில் முக்கியமான பாதிப்புகளில் ஒன்று சிறுநீரகத்தில் ஏற்படுவதாகும்.

நீரிழிவு உள்ளவராயின் உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதித்து அதன் நிலையைக் கண்டறிய வேண்டியது மிக முக்கியமாகும்.

அடிப்படைத் தகவல்கள்

சிறுநீரக நோய் பற்றிய சில அடிப்படைத் தகவல்களை அறிந்திருப்பது அவசியம்.

  •  சிறுநீரக நோய் ஆரம்ப நிலையில் எந்தவித வெளிப்படையான அறிகுறிகளையும் காட்டாது.
  • காலம் செல்லச் செல்ல சிறுநீரக நோய் தீவிரமாகிக் கொண்டு போகும். இறுதியில் அது செயலிழக்கும் kidney failure நிலை ஏற்படும். சிறுநீரக செயலிழப்பு மிகத் தீவிரமான நிலை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உடலில் சேரும் கழிவுப்பொட்களை செயற்கையாகச் சுத்தம் (dialysis) செய்யும் சிகிச்சையை தொடர்ந்து செய்ய நேரிடும். அல்லது சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை (Kidney Transplant) செய்ய நேரும். இவை மிகுந்த தொல்லையானதும் பாரிய பொருட் செலவு மிக்கனவுமாகும்.
  • ஆயினும் சிறுநீரகப் பாதிப்பு இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதைக் சிகிச்சைகள் மூலம் குணமாக்க முடியும். அல்லது அது தீவிரமடைவதைத் தடுக்க முடியும் என்பது நம்பிக்கை தரும் செய்தியாகும். இச் சிகிச்சைகள் சிறுநீரகப் பாதிப்பை மட்டுமின்றி இருதயத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்க உதவும். ஆயினும் எவ்வளவு விரைவில் பாதிப்பைக் கண்டறிகிறீர்கள் என்பதில்தான் சிகிச்சையின் வெற்றி தங்கியுள்ளது என்பதை மறக்க வேண்டாம்.

சிறுநீரக நோய்களுக்கான வேறு முக்கிய காரணிகளும் உள்ளன. அவை உள்ளவர்களும் சிறுநீரகத்திற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

  • இருதய நோயுள்ளவர்கள்
  • தமது நெருங்கிய சொந்தங்களில் சிறுநீரக நோயுள்ளவர்கள்.
எத்தகைய பரிசோதனைகள்


1.    இரத்தப் பரிசோதனை. சிறுநீரகத்தின் வடிகட்டும் ஆற்றலைக் கண்டறியும் (Glomerular filtration rate- GFR) பரிசோதனை செய்ய வேண்டும். சிறுநீரகத்தின தொழிற்பாடானது வடிகட்டுதல் ஆகும். மேலதிக நீரையும், குருதியில் சேர்ந்த கழிவுப் பொருட்களையும் அகற்றும். இச் செயற்பாடு எந்தளவு செயற்படுகிறது என்பதைக் காட்டும் பரிசோதனை இது.

2.    சிறுநீரகப் பரிசோதனை. சிறுநீரில் அல்பியுமின் என்ற புரதம் வெளியேறுவது சிறுநீரக நோயில் ஏற்படும். சாதாரண சிறுநீர்ப் பரிசோதனையில் (Urine Full report- UFR) இதனைக் கண்டறிய முடியும்.

ஆயினும் ஆரம்ப நிலையில் மிகக் குறைந்தளவு புரதம் வெளியேறுவதை விசேட நுண்ணிய பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். இதனை அறிய (Urine for Microalbumin) என்ற பரிசோதனை செய்ய வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டியவை எவை?

நீரிழிவையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்க விடாது கட்டுப்பாட்டிற்கள் வைத்திருக்க வேண்டும்.

  • இரத்த சீனியின் அளவு Fasting blood Sugar எனில் 110 ற்குள் இருக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்யப்படும் பரிசோதனை HbA1C எனில் 7ற்குள் கட்டுப்படுத்த வேணடும்.
  • இரத்த அழுத்தத்தை 130/80 ற்குள் வைத்திருக்க வேண்டும்.
  • உணவில் உப்பின அளவைக் குறைக்க வேண்டும்.
  • தேவையான இரத்த சிறுநீர்ப் பரிசோதனைகளை மருத்துவர் ஆலோசனையும் காலந்தவறாது செய்ய வேண்டும்.
  • சிபார்சு செய்யப்பட்ட மருந்துகளைத் தவறாது குறிப்பிட்ட நேரங்களில் உட்கொள்ள வேண்டும்.

மேற் கூறிய பெண்ணின் நீரிழிவு கட்டுப்பாடின்றி மோசமாக இருந்தது. சிறுநீரில் நுண்ணிய அளவில் புரதம் (Microalbumin) வெளியேற ஆரம்பித்திருந்தது.

ஆயினும் அவளது சிறுநீரகம்  இன்னமும் மோசமான நிலையான செயலிழப்பு நிலையை அடையவில்லை. நம்பிக்கையூட்டி சிகிச்சையில் தேவையான பல மாற்றங்களை உடனடியாகவே ஆரம்பிக்க வேண்டியிருந்தது.

உங்களுக்கான பரிசோதனைகளை நீங்கள் செய்திருக்கிறீர்களா?

எனது ஹாய் நலமா புளக்கில் இவ்வருடம் 2013 ஏப்பிரலில் பதிவிட்ட கட்டுரை நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

இளைஞர்களே உங்களுக்காக
காதலும் காமமும் சாதலும்
மனிதனிலும் மிருகங்களிலும்

‘..காதல் காதல் காதல்
காதல் இன்றேல் சாதல்…’ என்று பாடினான் மாகவிஞன். அதைக் கேட்டு வயது வேறுபாடின்றி மானிடர்களாகிய நாம் புளகாங்கிதம் அடைகிறோம்.

Bharathy

ஆம் வாழ்வின் இன்றியமையாத அம்சம்தான் காதல். எனவேதான் மனித வாழ்வில் காதலை முதன்மைப்படுத்திய அவனது கவியுள்ளத்தைப் போற்றுகிறோம். அந்தக் காதலின் உச்சமான கட்டம் கூடல் (புணர்ச்சி) எனச் சொல்லலாம். ஆனால் கூடல் காதலின் புனிதத்தை மாசுபடுத்துகிறது என மறுப்பாரும் இல்லாமல் இல்லை. இருந்தபோதும் போதையில் மயங்கியது போன்ற இன்பத்தை உளமும் உடலும் ஒன்றிய இருவரின் கூடல் கொடுக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

111 08

ஆனால் காதல் என்பது மனித இனத்திற்கு மட்டும் சொந்தமானது அல்லவே. விலங்குகள், பறவைகள், பூச்சி புழுக்கள் யாவுமே காதலில் மகிழவே செய்கின்றன.

காதல் கூடல் அதற்கும் அப்பால் அடுத்து என்ன?

‘கூடல் கூடல் கூடல்

கூடல் உச்சத்தில் சாதல்…’ என்கிறார் அன்ரகைனஸ் (antechinus mouse) சுண்டெலியார்.

Antechinus mouse

அன்ரகைனஸ் சுண்டெலி எனப்படும் இனத்தினர் அவுஸ்திரேலியாவைச் சார்ந்தவர்கள். நியூகினியா, டஸ்மேனியா ஆகிய இடங்களிலும் காணப்படுகிறார்கள்.

இவர் பிறந்து 11 மாதங்களாகும்போது பாலியல் ரீதியாகப் பருவமடைகிறார். அப்பொழுது அவரில் பாலியல் ஹோர்மோன்கள் சுரக்கின்றன. இதனால் புணர்ச்சி வேட்கை பிறந்து உச்சநிலையை அடையும். சீண்டிப் பார்த்து வேட்கை தணிக்க எமது பையன்கள் தெருக்களிலும், சந்திகளிலும் தேடியலைவதுபோல இவரும் இரவானதும் தனது ஏரியாவில் அலைந்து திரிவார். அடக்க முடியாதபடி கிளர்ந்தெழும் தனது பாலியல் பசியைத் தீர்க்க சோடி தேடி தவிப்புடன் திரிவார்.

Searching Lovers (Ben Heine)

இதற்குக் காரணம் அவரது உடலில் உச்ச நிலையில் சுரக்கும் பாலியல் ஹோர்மோன்கள்தான்.

மனிதர்களிலும் அவ்வாறே. ஆண்களில் testosterone பெண்களில் oestrogen ஆகிய ஹோர்மோன்கள் முக்கிய பங்களிக்கின்றன. இருந்தபோதும் மனிதர்களின் பாலியல் வேட்கைகளுக்கு ஹோர்மோன்கள் மட்டுமே காரணம் எனச் சொல்ல முடியாது. உடற் தொழியில் ரீதியான, சமூக பண்பாட்டு ரீதியான, உளவியில் ரீதியான பலவும் பங்களிக்கின்றன.

பருவமடைந்த சுண்டெலியாரின் பாலியல் செயற்பாடு தினமும் இரவில் 12 மணிநேரங்களுக்கு நீடிக்கும். ஒரு நாளில் முடியாது. பாலியல் ரீதியான உடல் நெருக்கமும் உடலுறவும் நான்கு நாட்கள் வரை தொடரும். ஊண் இன்றி, உறக்கம் இன்றி நீராகாரம் கூட இல்லாது துணையோடு இணைந்து பிணைந்து திரிவார்.

இப்படியும் ஒரு காமப் பிசாசா என எள்ளிச் சிரிக்காதீர்கள்.

மனிதர்களில் இது ஏற்படுவதில்லையா? கனவில் கண்டதுபோல ஒரு பெண்ணைக் கணநேரம் காணக் கிடைத்தால்போதும் ஏதோ ஒரு ஈர்ப்பு அவளில் ஏற்படும். தற்செயலாக அவளைச் சந்திக்கவும் பேசவும் கிடைத்தால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவுகணக்கே கிடையாது.

அந்தத் தொடர்பு மிகச் சுருக்கமானதாக இருக்கலாம். வெறுமனே கண்களால் பேசியதாகவோ, கரங்களைப் பற்றியதாகவோ அல்லது அதிகபட்சம் ஒரு முத்தம் கொடுத்ததாகவே இருக்கலாம். மேலைநாட்டுக் கலாச்சாரத்தில் இது புணர்ச்சி வரையும் போகலாம். களவுப் புணர்ச்சி பற்றி சங்க இலக்கியங்கள் பேசவில்லையா?

‘வெறும் கண நேரத் தொடர்பு. இது தொடரப்போதில்லை’ என உங்களுக்குள் நீங்கள் நினைத்தாலும் அவ்வாறாவதில்லை. இவள்தான் எனக்காக பெண் எனத் தோன்றும். அந்த நிகழ்வுகளின் நினைவுகளில் ஆழ்வீர்கள்.

உங்களில் மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் அவற்றை அவதானிக்காவிட்டாலும் ரகசியப் பொலிசாரின் நுட்பத்துடன் நண்பர்கள் கண்டறிந்திருப்பார்கள். மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென கனவுலகில் ஆழ்ந்துவிடுவீர்கள். நண்பர்களுடன் கூடி உணவு விடுதிக்குச் செல்லும்போது வழமைக்கு மாறாக விரைவில் முடித்துக் கொண்டு புறப்பட ஆயத்தமாவீர்கள். பொதுவான வேலைகளில் முன்னைய ஈடுபாட்டை இழந்திருப்பீர்கள்.

‘நான் காதலில் ஆழ்ந்திருக்கிறேனா?’ எனவும் எண்ணத் தோன்றும். இந்த உறவை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என நினைவு ஏற்படும்.

உணர்வுகளின் முன் பகுத்தறிவு மண்டியிட்டு மறைய ‘அன்றிலும் பேடும் போல’ என்றுமே இவளே என்துணை என அறுதி முடிவுகட்டவும் முயல்வீர்கள்.

ஆனால் உங்கள் ஆழ் மனத்துடன் நீங்கள் மனம் திறந்த உரையாடலை செய்ய முனையும்போது ஏதோவொரு தருணத்தில் நெருடல் ஏற்படும்.

  • அவளது நினைவுகளில் மூழ்கும்போது தூண்டப்படுவது உங்கள் மென்னுணர்வுகள் அல்ல,
  • உங்கள் உடல், அதுவும் உங்கள் ஆணுறுப்பு மட்டுமே என்பது கசப்பான உண்மையாகப் புரியும்.
  • உங்களை அலைக்கழித்தது பால் உறவு நாட்டமே அன்றி காதல் அல்ல என்பது உறைக்கும்.

உண்மையில் பாலியல் ஆர்வம் (Sexual Desire) அல்லது வேட்கை என்பது இரு நிலைப்பட்டதாக இருக்கலாம். உடலுறவு அல்லது புணர்ச்சியை நாடுதல் என்பது ஒரு வகை. ஒருவர் மீதான பாலியல் ரீதியான ஆரவமும் கவர்ச்சியும் ஈடுபாடும் மற்றது. ஒன்று மற்றதில் முடியலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

sexual desire

அண்ணலும் நோக்க அவளும் நோக்க ஆழ்ந்த காதல் பிறப்பது பெரும்பாலும்  காவியங்களிலும், கதைகளிலும்தான் நடக்கிறது.

TN_173236000000

திரைப்படங்களிலும் இந்தப் புனித உணர்வு காட்சிப்படுத்தப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அத்தகைய அமர காவியங்கள் கல்லாப் பெட்டிகளை நிறைத்தன. இன்று ஒருவன் பல பெண்களைக் காதலிப்பதும், திருமணத்தின் பின் வேறொருத்தியில் மோகம் கொள்வதும் பார்வையாளரிடத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தாமல் ரசிக்கப்படுகின்றன.

மீண்டும் அன்ரகைனஸ் சுண்டெலிகளின் கதைக்கு வருவோம். அவரது ஹோர்மோன்கள் அவரை விட்டு வைக்காது. புணர்ச்சி புணர்ச்சி புணர்ச்சி. வேறெந்த நினைவுமில்லாமல் அந்த நான்கு நாட்களும் ஓய்வின்றித் தொடரும். இத் தொடர் செயற்பாட்டிற்கு நிறையச் சக்தி தேவை. ஆனால் அது போதியளவு அவரிடம் இல்லாததால் ஒவ்வொரு தடவையும் வலிமை படிப்படியாக நீர்த்துக் கொண்டேபோகும். நோயெதிரப்புச் சக்தி நலிவடையும். பலவீனமடைவார்.

இறுதியில் வரண்ட உடல் சருகோடு சருகாக கலக்க காட்டுத் தரையில் சாய்ந்து விழுவார்.

‘என்ன மடைத்தனம்’ ‘தனது உடலின் நிலையை உணராத மடைமையா? தற்கொலைக்கு ஒப்பான அப்படியொரு காமவேட்கையா’ என எண்ணத் தோன்றுகிறது அல்லவா?

என்ன செய்வது!!

அதுதான் அவர்களுக்கு இயற்கை விதைத்த விதி.

எண்ணிக்கை அடங்காத ஏராளமான ஆண் அன்ரகைனஸ் சுண்டெலிகள் அவ்வாறு மரணத்தைத் தழுவுகின்றன.

அவ்வாறான விதியை அச் சிறிய மிருங்கங்களுக்கு இயற்கையானது ஏற்படுத்தியது ஏன்? கூர்ப்பு வளர்ச்சியின் நோக்கம் என்ன? தமது உயிரை அந்த ஆண் அன்ரகைனஸ் சுண்டெலிகள் அர்ப்பணிப்பதற்கான தேவை என்ன?

தமது எதிர்காலச் சந்ததியினர் வாழ்விடத்திற்காகவும், உணவிற்காகவும் தம்மோடு போட்டியிடுவதைத் தடுப்பதற்காக எனக் கொள்ளலாம்.

புணர்ச்சியின் பின் ஆண்கள் மரணிப்பது வேறு உயிரனங்களிலும் அறியப்பட்டுள்ளது. ஒரு வகைச் சிலந்தியினத்தில் Australian Redback Spider பெண் சிலந்தியானது தன்னுடன் கூடும் ஆண் சிலந்தியைத் தின்று தீர்த்துவிடுகிறது.

அதேபோல வெட்டுக்கிளியை ஒத்த praying mantises   தன்னுடன் கூடும் ஆணைக் கொன்று தின்றுவிடுகிறது.

Praying_Mantis_Mating_European-51

தேனீயில் ஆண் உறவு கொண்டு விந்து வெளியேறும்போது அதன் ஆண்குறியானது பெண்ணின் யோனிக்குள் வெடித்துச் சிதறி மரணம் நிகழ்கிறது.

ஆழ்கடலில் வாழும் angler fish மீனின் கதை மிகவும் வித்தியாசமானது. ஆண் மீனானது மிகவும் சிறியது. புணர்ச்சியின்போது அது பெண்ணின் உடலைக் கடித்து அதன் உடலுக்குள் நுழைந்துவிடுகிறது. அதற்கான போஷனை நீர் ஆகிய பெண்ணின் உடலில் இருந்தே கிடைக்கும். ஆனால் அது வாழ்வு அத்தோடு முடிந்துவிடும். பெண்ணின் உடலுக்குள்ளேயே சிதைந்து அழிந்து போய்விடும்.

anglerfish-and-male

‘காதலிக்காமலே இருப்பதை விடக் காதலித்துத் தோல்வியுறுவது மேலானது’

It is better to have loved and lost than never to have loved at all என ஆங்கிலத்தில் சொல்வார்கள். இந்த ஆண் ஜீவராசிகளின் கதைகளைக் கேட்கும்போது It is better to have loved and died than never to have loved at all என மாற்றிச் சொல்லலாம் போலிருக்கிறது.

நல்ல காலம் மனித இனத்தில் ஆண்களுக்கு, அன்ரகைனஸ் (antechinus mouse) சுண்டெலி போல தமது வாரிசுகளுடன்  அவ்வாறானதோர் போட்டியிட வேண்டிய தேவை இல்லாமல் போய்விட்டது. இல்லையேல் புணர்ந்தவுடன் கதிமோட்சமடையும் அவலம் ஆண்களுக்கும் நேர்ந்திருக்கும்.

  • உலகளாவிய ரீதியில் சனத்தொகைப் பெருக்கம் துரிதமாக நிகழ்கிறது.
  • பராமரிப்பு அதிகம் தேவைப்படும் முதியோர்களின் தொகையும் ஆரோக்கியமான விகிதாசாரத்தை மீறி வேகமாக அதிகரிக்கிறது. இவை கவனத்தில் கொள்ள வேண்டியவையாகும்.
  • அதே நேரத்தில் இயற்கை வளங்கள் அருகிக்கொண்டே போகின்றன.
  • இந்நிலையில் கிடைக்கும் வளங்களைப் பகிர்வதில் தங்களிடையே நாடுகள் சர்ச்சைப்படுவது போலவே குடும்பங்களிலும் பரவுவதற்கான சாத்தியங்கள் அதிகம். தந்தையும் மகனும் உணவிற்காக மூர்க்கமாகச் சண்டையிட்டு மடிவதைக் கற்பனை  பண்ணிப் பாருங்கள்.

பரிதாபம்தான்!

ஆனால் பிறக்கப்போகும் தன் மகனின் நலத்திற்காக, தான் புணர்ந்தவுடனேயே தன்னைப் பலிகொடுக்கும் தாராள சிந்தனை எந்த மனிதனுக்காவது வருமா?

தன்னுயிரைப் பலி கொடுக்க வேண்டும் என்றில்லை. தன் உறவுகளை, தனது சமூகத்தை, சூழலை, இயற்கையை அழிக்கும் செயற்பாடுகளில் இறங்காமல் இருத்தலே போதுமானது.

அதன் முதற்படியாக ஆண் பெண் உறவுகளை வெறும் காமக் கண்ணோட்டத்துடன் அணுகாமல் புரிந்துணர்வுடன் கூடிய உறவுகளாக வளர்ப்பது நல்லதாக இருக்கும்.

அத்தகைய உறவு காதலாக மட்டுமே இருக்க வேண்டும் என்றில்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0

Read Full Post »