Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for திசெம்பர், 2013

“இதென்ன புது நோயாக இருக்கு”

வந்தவர் தனது கையில் இருந்த ரிப்போட்டை என்னிடம் நீட்டினார். இருதய நோய் மருத்துவ நிபுணருக்கு கொடுத்த கடிதத்திற்கு பதிலாக அவர் கொடுத்திருந்த சிட்டை அது.

வழமையாக உயர் இரத்த அழுத்தத்திற்கு மருந்துகள் சாப்பிட்டு வருகிறார். அண்மையில் செய்த ஈசிஜி பரிசோதனையில் சில மாற்றங்கள் தெரிந்ததால் இருதய நோய் மருத்துவ நிபுணரிடம் அனுப்ப நேர்ந்தது. ECHO Cardiogram உட்பட பரிசோதனைகள் செய்த பின்னர் அவர் கொடுத்த குறிப்பில் Hypertensive heart disease என எழுதியிருந்தது. உயர் இரத்த அழுத்த இருதய நோய் என நாம் தமிழில் சொல்லலாம்.

பிரசரால் வரும் ஹாட் வருத்தம் என்று பேச்சுத் தமிழிலும் சொல்லலாம்.
Black tonometer and heart isolated on white

உயர் இரத்த அழுத்த இருதய நோய்

பிரஷர் எனப்படும் உயர் இரத்த அழுத்தம் பற்றி எல்லோரும் அறிவார்கள். ஆனால் உயர் இரத்த அழுத்த இருதய நோய் பற்றி தெரிந்திருக்குதோ தெரியாது.

உண்மையில் இது ஒரு தனியான நோய் அல்ல. உயர் இரத்த அழுத்தத்தினால் இருதயத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை உள்ளடக்குகிறது. அவற்றில் முக்கியமானவை மூன்று ஆகும்.

இருதயத்திற்கான இரத்த ஓட்டத்தில் பாதிப்பும் அதனால் நெஞ்சு வலி மாரடைப்பு போன்றவை ஏற்படுவது, இருதயத் தசைநார்கள் தடிப்படைவது, இருதயத்தின் செயற்திறன் பாதிப்படைவது ஆகியவையே அவை.

உயர் இரத்த அழுத்த இருதய நோய் பற்றி மருத்துவர்கள் இப்பொழுது அதிகம் கவனம் எடுப்பதற்குக் காரணம் என்ன? உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மரணத்தத்தைத் தழுவுவற்குக் காரணமாக இருப்பது இந்த உயர் இரத்த அழுத்த இருதய நோய் என்பதாலேயே ஆகும்.

வயதானவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களில் 68% மானவர்களுக்கு இருதய வழுவல் ஏற்படுவதற்கு உயர் இரத்த அழுத்த இருதய நோய்தான் காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் என்பது அறிகுறிகளற்ற நோய். வெளிப்படையாக எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. அதனால் பாரதூரமான பாதிப்புகள் ஏற்படும்போதுதான் நோயாளிக்கு தெரிய வரும்.  ஆனால் அது உயர் இரத்த அழுத்த இருதய நோயை மட்டும் கொண்டுவருவதில்லை. கண் பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு, பக்கவாதம் போன்ற வேறு பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது.

எனவே ஒவ்வொருவரும் தங்கள் பிரசரை அறிந்து வைத்திருப்பது அவசியம். சாதாரண பிரஷர் என்பது 120/80 mmHg ஆகும். இவ்வாறு சாதாரண அளவில் பிரஷர் உள்ளவர்களும் தங்கள் பிரஷரை குறைந்தது 2 வருடங்களுக்கு ஒரு முறையாவது அளந்து பார்ப்பது அவசியமாகும். சற்று அதிகம் உள்ளவர்கள் (120/80 – 139/89) தங்கள் பிரஷரை வருடத்திற்கு ஒரு முறையாவது அளந்து பார்க்க வேண்டும்.

அதைவிட அதிகம் எனில் மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை தேவைப்படும். பிரஷருக்காக மருத்துவர்கள் சிபாரச்சு செய்யும் மருந்துகளை ஒழுங்காக உபயோகிப்பது அவசியம். தாங்களாவே அளவைக் கூட்டவோ குறைக்கவோ கூடாது. தலையிடி எனச் சொல்லி மருந்துகளின் அளவைக் கூட்டுபவர்களும், தலை உலாஞ்சுகிறது எனக் குறைப்பவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு செய்வது தவறு.

மருத்துவர்கள் பிரசரை அளந்து பார்த்து அதற்கு ஏற்பவே மாற்றங்கள் செய்வார்கள்.

நீரழிவு, கொலஸ்டரோல் பிரச்சனைகளும் சேர்ந்திருப்பவர்கள் மேலும் அக்கறையோடு தங்கள் பிரஷரைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முக்கியமாகும்.

இருதயத்திலும் இரத்தக் குழாய்களிலும் ஏற்படும் பாதிப்புகள்

பிரஷரால் இருதயத்தில் பாதிப்புகள் ஏற்படுவது எவ்வாறு?
பிரஷர் அதிகரிக்கும் போது இருதயத்திற்கான வேலைப் பளு அதிகரிக்கிறது. அதிக அழுத்தத்தில் இரத்தத்தை பம் பண்ணுவதற்காக இருதயத்தின் தசைகள் அதிக பிரயாசை எடுக்க நேர்கிறது. இதனால் அதன் தசைகள் விரிவடைந்து தடிக்கின்றன. இதனால் முதலில் பருமனடைவது இடது கீழ் அறையான வென்ரிக்கில் (Ventricle) ஆகும். இதை LVH என மருத்துவத்தில் சொல்வோம். இருதயத்தின் ஏனைய பகுதிகளிலும் காலகதியில் பாதிப்புகள் ஏற்படவே செய்யும்.

ans7_lvh

இவ்வாறு இருதயத்தின் தசைநார்கள் தடிப்படையும்போது பலவித பாதிப்புகள் ஏற்படுகின்றன. முக்கியமானது இருதயத்தின் தசைகளுக்கு இரத்தத்தை வழங்கும் குருதிக் குழாய்களில் தடிப்பு ஏற்படுவதாகும்.

அதனால் இருதயத்தின் தசைகளுக்கு போதிய இரத்தம் கிடைக்காது. இது நெஞ்சில் வலி, அழுத்தம், களைப்பு போன்ற அறிகுறிகளைக் கொண்டு வரலாம். இவை அஞ்சைனா மற்றும் மாரடைப்பை ஒத்த அறிகுறிகளாகும்.

இதைத் தவிர இருதயத்தின் தசைகள் தடிப்படையும்போது இருதயத்தின் நரம்புகளும் பாதிப்படையும். இதனால் இருதயத்தின் துடிப்பு லயத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்.

இருதய  அறைகளின் வால்வுகளிலும் பாதிப்பு ஏற்படலாம்
உயர் அழுத்த நோயானது எவ்வாறு வெளிப்படையான அறிகுறிகளைக் காட்டுவதில்லையோ அதே போல உயர் இரத்த அழுத்த இருதய நோயும் ஆரம்ப நிலையில் துல்லியமான அறிகுறிகளை காட்டுவதில்லை.

ஆனால் காலம் செல்லச் செல்ல கீழ்கண்ட பாதிப்புகள் ஏற்படும்.

இருதய செயலிழப்பு

இந்நோயால் இருதயத்தின் தசைகள் தடிப்படையும் என்பதைப் பார்த்தோம். இது தீவிரமாகி இருதயத்தின் செயற்பாடு பாதிப்புறும் வரை வெளிப்படையான அறிகுறிகளைக் காட்டுவதில்லை.

CVS_heart_failure

இருதயத்தின் செயற்பாடு குறைவதை இருதய செயலிழப்பு எனவும் சொல்வார்கள். பெதுவாக ‘ஹார்ட் பெயிலியர்’ (heart failure)  என்பார்கள்.

இதன் முக்கிய அறிகுறியானது மூச்சு விடுவதில் சிரமம் ஆகும். இத்தகைய இளைப்பு அல்லது மூச்சுத் திணறல் ஆனது பொதுவாக ஏதாவது வேலை செய்யும்போது ஏற்படும். நடக்கும்போது, படியேறும்போது, பாரம் தூக்குவது போன்ற உடலுக்கான முயற்சிகளின் போது ஏற்படும். ஆனால் நோய் தீவிரமடையும்போது எதுவித உடல் முயற்சிகள் இல்லாது படுத்திருக்கும்போது கூட இளைப்பு ஏற்படும்.

ஆரம்ப நிலையில் நோயாளிகள் இதனை இளைப்பு என்று நினைக்கமாட்டார்கள். சாதாரண களைப்பு என்றுதான் நினைப்பார்கள். போசாக்கு இல்லாததால் ஏற்பட்ட களைப்பு என்றும் எண்ணுவார்கள். ஆனால் களைப்பு என்பது உடல் நோய்களால் மட்டும் வரும் என்றில்லை. மனம் சோர்ந்திருந்தாலும் களைப்பு ஆகவே உணர்வார்கள். நோயாளிகள் களைப்பு என்று சொன்னால் அது எதனால் ஏற்படுகிறது என்பதை மருத்துவர்கள் ஆராய்ந்து கண்டறிய நேரும்.

சாய்ந்து படுத்திருக்க முடியாது எழுந்து படுக்கையில் உட்கார வேண்டிய நிலையும் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இதனால் தலையணைகளை வைத்து தலையையும் நெஞ்சுப் பகுதியையும் உயர்த்திப் படுப்பார்கள்.

Elderly Woman in Hospital Bed

ஆனால் ஆஸ்த்மா நோயிலும் இத்தகைய நிலை ஏற்படலாம் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஆயினும் காலம் செல்லச் செல்ல கால் வீக்கம், உடல் எடை அதிகரித்தல், ஈரல் வீக்கம் அதன் காரணமாக வயிற்று வலி போன்ற அறிகுறிகளும் இருதய செயலிழப்பினால் தோன்றும்.

இருதய வலிகள்

அஞ்சைனாவை ஒத்த நெஞ்சு வலியானது உயர் இரத்த அழுத்த இருதய நோயாலும் ஏற்படும். நெஞ்சில் பாரம், அழுத்துவது அல்லது இறுக்குவது போன்றவை அத்தகையவையாகும். இந்த வலியானது கழுத்திற்கு, தாடைக்கு, இடது புஜத்திற்கு அல்லது முதுகின் மேற்புறத்திற்கு பரவுவது போல இருக்கலாம். மாரடைப்பு போல் அல்லாமல் அஞ்சைனா வலியானது 10-15 நிமிடங்களுக்குள் தணிந்துவிடும்.

Angina

ஆனால் வலி இல்லாமல் நடக்கும்போது இளைப்பு, கடுமையான களைப்பு போன்ற அறிகுறிகளுடனும் அஞ்சைனா வலி வரக் கூடும். பெண்களிலும், நீரிழிவு உள்ளவர்களிலும் வலி இல்லாது இத்தகைய அறிகுறிகளுடன் வருவது அதிகம்.
மாரடைப்பும் வரக் கூடும்.

இருதயத் துடிப்பின் ஒழுங்கின்மை.

இருதயமானது ஒரு லயத்தில் தொடர்ந்து துடித்துக் கொண்டிருக்கும். ஆனால் அவற்றின் லய ஒழுங்கு மாறுவதும், தாறுமாறாக அடிப்பதும் நிகழக் கூடும். மருத்துவத்தில் Cardiac arrhythmias    என்பார்கள். இது நெஞ்சுப் படபடப்பு, திடீர் மயக்கம், நெஞ்சு வலி போன்ற பல்வேறு அறிகுறிகளுடன் வெளிப்படக் கூடும். திடீர் மரணம் ஏற்படுவதும் உண்டு.

cardiac-arrhythmiasfig1_large

உயர் இரத்த அழுத்த இருதய நோயால் இவ்வாறான பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

205257

தடுக்கும் வழிகள் எவை?

ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த இருதய நோய் ஏற்படுவதற்குக் காரணம் அவர் தனது பிரஸரை கட்டுப்பாட்டில் வைத்திருக்காமையே. எனவே ஒவ்வொருவரும் உயர் இரத்த அழுத்த நோய் (பிரஷர்) என்றால் என்ன? அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் யாவை என்பது பற்றி அறிந்திருக்க வேண்டும்.

இந் நோயால் பல ஆபத்தான விளைவுகள் ஏற்படுகின்ற காரணத்தால் அடுத்த வருடத்தை உயர் இரத்தம் தொடர்பான ஆண்டாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்து இருக்கிறது.

ஒழுங்கான போசாக்கான உணவு முறைகள் மூலமும் தினமும் உடற் பயிற்சி செய்வதன் மூலமும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க முயல வேண்டும்.

jch497725.tab3
உயர் இரத்த அழுத்த நோய் ஏற்கனவே இருப்பவர்கள் பின்வரும் நடைமுறைகள் மூலம் தங்கள் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்

  • கொழுப்பு, உப்பு போன்றவற்றை தங்கள் உணவில் குறைத்து, பழவகைகளையும் நார்ப்பொருள் உள்ள உணவுகளையும் அதிகம் உண்ண வேண்டும்.
  • தினமும் உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும். அல்லது தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு உடற் பயிற்சி செய்ய வேண்டும்.
  • தங்கள் எடையைச் சரியான அளவில் பேண வேண்டும்.
  • தங்களுக்கு சிபார்சு செய்யப்பட்ட மருந்துகளை தவறாது ஒழுங்கான முறையில் உட்கொள்ள வேண்டும்.
  • புகைத்தலைத் தவிர்க்க வேண்டும்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0.0

Read Full Post »

அண்மையில் நான் படித்த சிறுகதைத் தொகுதிகளில் மிகவும் ஆர்வத்தோடு படித்த தொகுதி ‘ உறையும் பனிப்பெண்கள்’. என்ற சுமதி ரூபனின் நூல்.

Book Covers_0004-001

இலங்கையில் உள்ள வாசகர்கனாகிய எங்களுக்கு ஒரு பெரும் துன்பம் உண்டு. மிக மோசமான, அல்லது சராசரியான நூல்களை அடிக்கடி வாசிக்க வேண்டியிருக்கிறது. இது நாம் விழும்பிச் செய்வது அல்ல. நிர்பந்தத்தினால் செய்ய வேண்டிய நிலை. நண்பர்களும் தெரிந்தவர்களுமான எழுத்தாளர்கள் தலையில் கட்டுவதை வாசிக்க வேண்டும். வாசித்தோம் என்று பொய் சொல்ல முடியாது. இவை பற்றிய கருத்துக்களையும் வெளிப்படுத்த வேண்டிய நிலை.

இது விரும்பிப் படித்த நூல். மிகவும் சுவார்ஸமாக இருந்தது. சொல்லும் மொழி அற்புதமானது. அழகான நேர்த்தியான வசனங்கள்.

இந்த நூலின் மிக முக்கியத்துவமான அம்சம் இது புலம்பெயர்வு வாழ்வு பற்றிய ஒரு பதிவாக இருப்பதுதான். அவர்களது இயந்திரமான வாழ்வு, போலித்தனங்கள், தங்கள் தாயகம் பற்றியும் அங்குள் உணர்வுகள் பற்றியதுமான குற்ற உணர்வின் வெளிப்பாடுகள், பெண்ணியம், ஆண்கள் பற்றிய பார்வைகள்.

ஆண்கள் அனுபவ ரீதியாகச் சொல்ல முடியாத பெண்கள் மட்டமே சொல்லக் கூடிய விடயங்கள். பெண் மொழி என்கிறார்கள். இவை சுமதியின் படைப்புகளிலும் இருக்கின்றன

இதிலும் இரண்டு வகைகள்

  1. வழiமாயன விடயங்கள் ஆயினும் அதிலும் வித்தியாசமான பார்வை தாய்மை திருமணம் போன்ற விடயங்களில்
  2. மற்றைய பெண் எழுத்தாளர்கள் சொல்லத் தயங்கும் விடயங்கள். பெண் எழுத்தளார்கள் மட்டுமின்றி ஆண்கள் எழுதத் தயங்கும் விடயங்கள் இவரால் வெளிப்படையாக ஆனால் ஆபாசம் தொனிக்காது, அழகுணர்வுடன் படைக்கப்படுகின்றன.

உதாரணமாக சுயஇன்பம். இரண்டு கதைகளில் வருகிறது. ‘அமானுஸ்ய சாட்சியங்கள்’ மற்றும் 4010.

பெண்களின் விடயங்களைப் பற்றி மட்டுமல்ல ஆண்களின் உணர்வுகள் உணர்ச்சிப் பெருக்குகள் பற்றியும் மிகச் சிறப்பாக வெளியிட இவரால் முடிகிறது.

அமானுஸ்ய சாட்சியங்கள், 40 பிளஸ், ரெக்ஸ் எண்டொரு நாய்க்குட்டி, நட்டஈடு, சூட் வாங்கப் போறன் போன்றவை ஆண்கள் பற்றின. ஆவர்களது உணர்வுகளை மட்டுமின்றி அவர்களின் ஆணவப் போக்கு போலித்தனங்களைப் பேசுகின்றன.

மாறாக இருள்களால் ஆன கதவு, மூளி, எனக்கும் ஒரு வரம் கொடு உறையும் பனிப் பெண்,  ஆகியன பெண்களின் உணர்வுகளைப் பேசுபவை.

சுரீரென வெளிப்படும் விடயங்கள்

“ஆண்களின் உடல்களில் அந்தப் பகுதியில் கண்கள் நிலைத்து நின்றது.”

ஆண்களின் சில்லு முல்லுத்தனங்கள்.

யன்னல் சாத்திய முழங்கை நளாவின் மார்போடு தேய்த்துச் சென்றது’, ‘அத்தானின் பார்வைகள் நிறம் மாறிப்போயிருந்தன’,

‘ஸ்டியரிங்கை மாற்றும்போது அத்தானின் செய்கைகள் – நளாவின் துடையை விரல்கள் உரிசிச் செல்லுதல்,

‘சாரத்தைத் தளர்த்தி மறுகையால் புடைத்து நிற்கும்..’

ஒரே விடயம் பற்றி முற்றிலும் எதிர்மiறாயன பார்வை ‘அமானுஸ்ய சாட்சியங்கள்’, ‘இருள்களால் ஆன கதவு’

கணவன் மனைவி என கனடாவில் வசிக்கும் வீட்டில் விதவையான அக்கா வருவதால் ஏற்படும் பிரச்சனைகள் இரு கதைகளிலும் வருகிறது. ஆனால் இரண்டும் முற்றிலும் மாறான பார்வைகள். ஒரே விடயத்தை இருண்டு கோணங்களில் பார்ப்து சன்றாக இருக்கிறது

“உறையும்; பனிப் பெண்” கன்னி கழியாத பெண்கள் என்று ஊரில் பெசுகின்ற விடயம் பற்றி

தாய்மை மகத்துவமானது. அது கிட்டாத ஏக்கம் சொல்ல முடியாதது. இதைப பற்றிச் சொல்லாத எழுத்தார்களே கிடையாது எனலாம். எழுதியும் வாசித்தும் அலுத்துவிட்ட கரு.  ‘எனக்கும் ஒரு வரம் கொடு’ மிகவும் அற்புதமான கதை. அதன் உள்ளடக்கம் பற்றியதல்ல. அது சொல்லப்பட்ட விதத்தால்

இவரது படைப்புகளின் வெற்றிக்குக் காரணம் என்ன? அவர் எடுத்துக் கொள்கிற கருவா, அவை சொல்லப்படும் விதமா. நிச்சமாக இவரது எழுத்து நடைதான் என்பேன். நல்ல பல எழுத்தாளர்களின் கதைகளில் அது சொல்லும் கதைக்கு மேலாக அந்தப் பாத்திரங்களின் மன உணர்வுகளுக்கு அழுத்தம் கொடுப்பiவாயக இருக்கும். உளமன யாத்திரை எனலாமா? உள்ளத்து உணர்வுகளுக்கு வார்த்தை வடிவம் கொடுக்கும் மொழி ஆட்சி அவர்களிடம் இருக்கும்

சுமதி ரூபனின் கதைகளும் உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்த முயல்பவைதான். ஆனால் இவற்றை எண்ணற்ற சிறு சுவார்ஸமான சம்பங்களின் ஊடாக கட்டியமைக்கிறார். இவற்றில பல நுணக்கமான அவதானிப்பின அடிப்படையில் வந்தவை. இது உண்மையில் காட்சிப்படுத்தல் போன்றது.  ஒரு திரைப்படத்தில் காண்பது போலிருக்கிறது. இறுக்கமாகச் சொல்லப்படுவதால் குறும்படத்தை உவமை கூறலாம். சம்பவங்களின் தொகுப்பு போல இருப்பதால் இலகுவாக எங்களால் படைப்புக்குள் புக முடிகிறது. கீழை வைக்க முடியாமல் படிக்க முடிகிறது.

அதற்கு வலு சேர்ப்பது அவரது படைக்கும் அற்புதமான வசனங்கள். இவை கவிதை போல ஒருபுறம் மனத்தோடு இணங்கி வருகின்றன. மற்றொரு புறம் அவை படக் கூடாத இடத்தில் விழுகின்ற அடி போல அதிர்ச்சியளிக்கின்றன.

பாத்திரப் படைப்பில் மிகுந்த அவதானம் கொண்ட கதைகள். ஓவ்வொரு பாத்திரமும் கதை முடிந்த பின்னரும் எம்மோடு உலா வருக்னிறன.

“மூளி” கதையின் முடிவு எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்தது. கணவனை இழந்த துயரில் இருக்கும் பெண் பற்றியது. ‘சும்மா மரக்கட்டை மாதிரி மூலையில் கிடந்தார் எண்டா நாய் கோயிலக்கு  பூவும் பொட்டோடையும் போய் மூசையில் கலந்துவிடுவேன். இனி ஐயா என்னைத் தட்டுத் தூக்க விடமாட்டார்’

இது அந்தப் பெண்ணின் போல உணர்வை வெளிப்டுத்துகிறதா அல்லது சடங்கு சம்பிரதாயங்கள் ஊடாக மறைமுகமாக ஆண்கள் பெண்களை அடக்க முயல்வதைக் காட்ட வருகிறது என்பதைக் காட்டுகிறதா?

பெண்களின் வாழ்வின் அர்த்தம் என்ன? கல்யாணம் குழந்தை பெறுதல் குடும்மபமாக வாழத்தல் இவை மட்டுடா?

“ஏன் கலியாணம் கட்டினனீ பிளளைகளைப் பொத்தனி எண்டு எப்பவாவது உன்னட்டைக் கேட்டனானா?”

“ஒரு நீண்ட நேர  இறப்பு” கதைக்குள் என்னால் புக முடியவில்லை. அரைவாசியில் நிறுத்pவிட்டேன். மீண்டும் வாசிக்க எண்ணினேன். முடியவில்லை. என்னால் இலகுவாக வாசிக்க முடியாத ஒரே ஒரு படைப்பு இதுதான்.

எங்கள் பிரச்சனைகள் வேறானவே அவர்களது நாளந்த பிரச்சனைகள் வேறானவே. ஆனால் அவற்றிகுள் இருக்கும் அடிப்படை உணர்வுகள் ஒன்றுதான். ஆகதி அந்தஸ்து கோருதல், சிறிய வீடுகளுக்குள் இருக்கும் இடப்பிரச்சனை. முக்கியமாக விருந்தினர்கள் வரும்போது. இப்பொழுது நாங்களும் அனுபவிக்கத் தொடங்கிவிட்டோம். ‘வெளிநாட்டு ஆக்கள வந்து நிக்கினம். நுpலத்தில் படுத்ததால் நார் விலி, சமையல் Nலை தூக்கம் இல்லலை என ஆண்கள்.

இவை வெறும் புனைவுகள் கதைகள் அல்ல. வாழ்வின் நிதர்சனங்கள். நாளந்தப் பிரச்சனைகள். ஏற்கனவே சொல்லப்பட்டது போல வெளிப்iடாயகப் பேசப்படாத பிரச்சனைகள் உள்ளன. ஆயினும் அவற்றில் அதீதங்களும் இல்லை. போலிதனங்களும் இல்லை. தான் கண்டதே கேட்டதை மிகுந்து அழகுணர்வுடன் தருகின்ற சிறுகதைகள் இவை.

சுமதி ரூபனின் நூல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு வெள்ளவத்தை பெண்கள் ஆய்வு மையத்தில்  நடைபெற்றபோது நான் முன்வைத்த சில கருத்துக்கள். 

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.

Read Full Post »

டியோடரன்டஸ் Deodorants என்பது இப்பொழுது, சீப்புப் பவுடர் போலாகிவிட்டது. வீட்டுப் பாவனைப் பொருள் போல எங்கும் கிடைக்கின்றன. யாருக்குத்தான் மற்றவர்கள் முன்னால் தங்களது உடல் நாற்றத்துடன் போய் நிற்க மனதிருக்கும்.

deodorant

நாற்றமும் நறுமணமும்

“அரசியின் கூந்தல் நறுமணம் இயற்கையானதா செயற்கையானதா” ஆராய்ந்து பார்த்த கதைகள் நினைவிற்கு வருகிறதா? அந்தக் காலத்தில் அரசிகள் முடிக்கு மட்டுமே தேடிய வாசனைத் திரவியங்கள் இன்று தொழிலாளர்களின் அக்குளுக்கும் அவசியமாகிவிட்டன. சந்தை வாய்ப்புகளும் விற்பனையும் அமோகமாக இருக்கின்றன.

india_hair_decoration_styling_jasmine_flower

அக்குள் மணத்திற்கும் பொதுவான உடல் மணத்திற்கு காரணம் வியர்வையாகும். ஆனால் இயற்கையாக வியர்வை மணப்பதில்லை. வியர்வையில் நீரும் சில உப்புக்களும் மட்டுமே இருக்கின்றன. இவற்றில் எந்த மணமும் கிடையாது. ஆனால் சுரக்கும் அந்த வியர்வையில் பக்றீரியா கிருமிகள் பெருகும்போதே மணம் ஏற்படுகிறது.

நாற்றமற்ற வியர்வைக்குக் காரணம் என்ன?

“எல்லோருக்குமே வியர்க்கிறது, எல்லோரது உடலிலும் கிருமிகள் இருக்கலாம் ஆனால் ஏன் எல்லோரது வியர்வையும் மணப்பதில்லை” என்ற எண்ணம் உங்கள் மனதில் எழுந்திருக்கும். வியர்வையில் மணம் ஏற்படுவதானது எமது மரபணு சார்ந்தது.

Woman-holding-nose

அதைக் கொடுப்பற்குக் காரணமாக இருப்பது ABCC11 என்ற மரபணுவாகும். ஆனால் சிலரில் இந்த மரபணுவானது சிறிய மாற்றங்களுடன் செயலற்று இருப்பதுண்டு. அவ்வாறான மரபணு மாற்றமுற்றவர்களின் வியர்வை மணப்பதில்லை. மிகுதியான பெரும்பாலானவர்களுக்கு மணக்கவே செய்யும்.

jid201314i1

University of Bristol  லில் ஒரு ஆய்வானது 6,495  பெண்களிடையே செய்யப்பட்டது. இந்த ஆய்வின் பிரகாரம் மிகச் சிறிய எண்ணிக்கையானோருக்கு மட்டும் (2% -117 out of 6,495) அவ்வாறான மாற்றமுற்ற மரபணு இருந்தமை கண்டறியப்பட்டது. அதன் அர்த்தம் அவர்களது அக்குள் வியர்வையில் நாற்றம் இல்லை என்பதாகும்.

ஆய்வின் ஆச்சரியமான அம்சங்கள் இனித்தான் காத்திருக்கிறது.

  • இந்த ஆய்விற்கு உட்பட்டவர்களில் 117 பேரது வியர்வை மட்டுமே நாற்றமற்றது. அதை விகிதாசார ரீதியில் நோக்கினால் ஒவ்வொரு 50 பேருக்கு ஒருவரது வியர்வையே உடல் நாற்றம் அற்றதாகும்.
  • நாற்றமான வியர்வை சுரப்பவர்களில் 5 சதவிகிதமானவர்கள் டியோடரன்டஸ்  எதையும் உபயோகிப்பதில்லை.
  • வியர்வையில் நாற்றம் அற்றவர்களில் சுமார் 20 சதவிகிதமானவர்களும் டியோடரன்டஸ்  எதையும் உபயோகிப்பதில்லை. அதற்கான அவசியம் அவர்களுக்கு இல்லாததால் அது ஓரளவு எதிர்பார்க்கக் கூடியதே.
  • ஆனால் வியர்வை நாற்றமற்றவர்களில் சுமார் 78 சதவிகிதமானவர்களும் டியோடரன்டஸ் உபயோகிப்பதாக ஆய்வு கூறியது.

இதை இலகுவான மொழியில் சொன்னால் எப்படி இருக்கும். சமூகத்தில் பெரும்பாலானவர்களின் வியர்வையில் நாற்றமிருக்கிறது.

இருந்தபோதும் அவர்களில் சிலர் தமது அக்குள் வியர்வை நாற்றத்தை மறைக்க வாசனைத் திரவியங்களை உபயோகிப்பதில்லை. ஆனால் அக்குள் வியர்வை நாற்றம் அற்றவர்களில் மிகக் குறைந்தவர்களே தமக்கு நாற்றமில்லை என்பதை உணர்ந்து டியோடரன்டஸ் உபயோகிப்பதில்லை.

மந்தை ஆடுகள் போல மனிதர்களும்

1-s2.0-S1748681509004872-gr3

ஆனால் மிகப் பெரும்பான்னையான வியர்வை நாற்றமற்றவர்கள் மந்தை ஆடுகளை போல மற்றவர்களை பின்பற்றுகிறார்கள். அதாவது எந்தத் தேவையுமற்று டியோடரன்ஸ்சை உபயோகிக்கிறார்கள் என்பதுதான்.

இவர்கள் இப்படியாக தேவையற்றபோதும் டியோடரன்டஸ் உபயோகிப்பதற்குக் காரணம் என்ன? சமூகப் பழக்க வழக்கங்கள்தான். சமூகத்தில் பலரும் நாகரீகம் எனக் கருதுவதை தாமும் மறுகேள்வியின்றிப் பின்பற்றுகிறார்கள் என நினைக்கிறேன். மற்றொரு காரணம் ஊடகங்களின் விளம்பர உத்திகளைப் புரிந்து கொள்ளாமல் கடைப்பிடிப்பதாகவும் இருக்கலாம்.

இது மேலை நாட்டில் செய்யப்பட்ட (University of Bristol) ஆய்வாகும். ‘வடஆசிய நாட்டவர்கள் பெரும்பாலும் டியோடரன்டஸ் உபயோகிப்பதில்லை. அதற்கான தேவை அவர்களுக்கு இல்லை’ என அந்த ஆய்வுக்குழுவின் தலைவரான Professor Ian Day கூறினார். தெற்காசிய நாட்டவர்களான எங்களைப் பற்றி அந்த ஆய்வு எதையும் தனியாக எடுத்துரைக்கவில்லை.

காதில் கற்குடுமி

இந்த ஆய்வின்போது வியர்வையுடன் தொடர்பற்ற மற்றொரு விடயமும் தெரிய வந்தது. அது காதுக் குடுமி பற்றியது. பொதுவாகக் காதுக்குடுமி என்பது பசை போன்ற தன்மையானதாகும். ஆனால் மிகச் சிலரில் அது எப்பொழுதும் காய்ந்து இறுகி ‘கற்குடுமி’ யாகத் தொல்லை கொடுக்கும். அவர்களுக்கும்

நாற்றமற்ற வியர்வையுள்ளவரின் அதே மாற்றமுற்ற ABCC11 மரபணு இருக்கிறதாம்.

000

ஆம் இயற்கை விசித்திரமானதுதான். கற்குடுமி என்ற தொல்லை ஒருசிலருக்கு கொடுத்துவிட்டு அதனை நட்ட ஈடு கொடுப்பதுபோல நாற்றமற்ற வியர்வையைக் கொடுத்திருக்கிறது.

தனித்துவமான உடல் மணங்கள்

பெரும்பாலானவர்களது உடலில் மணம் இருந்தாலும் எல்லோரது வியர்வையும் ஒரே மணத்தைக் கொடுப்பதில்லை. கைவிரல் அடையாளம்போலத் தனித்துவமானது. சில மணங்கள் மற்றவர்கள் ஆகர்ஸப்படுவதற்கு காரணமாக இருக்கிறது. ஆனால் சிலரது மணங்கள் மற்றவர்களை கிட்ட நெருங்க விடாது விலக வைத்துவிடுகின்றன.

அவ்வாறு கடுமையான உடல் நாற்றம் உண்டாவதை bromhidrosis என மருத்துவத்தில் கூறுவர்.

உடல் மணத்தைக் குறைக்க வழிகள்

உடல் மணமானது ஒவ்வொருவருக்கும் தனித்துவமான போதும் அதன்

வீச்சை நாம் சில நடைமுறைகள் மூலமாகச் செய்யலாம்.

எடையைக் குறைப்பது முக்கியமானது. அதீத எடையானது உடலின் செயற்பாட்டிற்கு அதிக சிரமத்தைக் கொடுக்கிறது. சிரமப்படும் உடல் அதீதமாக வியர்க்கிறது. அதனால் உடல் மணம் மோசமாகும். எனவே எடையைக் குறைப்பதானது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதுடன் மணத்தையும் குறைக்கிறது.

தினமும் குளியுங்கள். முக்கியமாக வேலை முடிந்த பின்னர் குளிப்பது மிகவும் அவசியம். கிருமி கொல்லி சோப் வகைகளை உபயோகிக்க வேண்டியதில்லை. வழமையான சோப் போதுமானது. Soap free wash மேலும் நல்லது

ஆடைகளை இயற்கையான துணியிலானதாக தேர்ந்தெடுங்கள். செயற்கை இழையத்திலான ஆடைகள் ஈரலிப்பை உறிஞ்ச முடியாதலால் வியர்வை தேங்கி நிற்கும் அதிக மணத்தைக் கொடுக்கலாம். தினமும் ஆடைகளை மாற்றுங்கள்.

உணவைப் பொறுத்த வரையில் ஆடு மாடு போன்றவற்றின் இறைச்சிகள்

(Red meat) அதிக மணத்தைக் கொடுப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதே போல இஞ்சி, மிளகு, மீன், போன்றவையும் உடல் மணத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. மதுபானமும் அவ்வாறே.

bodyodor-causes

ஆனால் அதிகளவு நீர் அருந்துவதும், உணவில் அதிகளவில் பழங்களையும் காய்கறிகளையும் சேர்ப்பது நல்லது. தீட்டாத தானியங்களும் நல்லது என்கிறார்கள்.

அவற்றிற்கு மேலாக அவசரம், அந்தரம் பதற்றம், பதகளிப்பு போன்றவை மன அமைதியைக் குலைத்து வியர்வையை அதிகமாக்கி மணத்தை ஏற்படுத்தலாம். முன அமைதிப் பயிற்சிகள், யோகாசனம், தியானம் போன்றவையும் உதவும்.

0.0.0.0.0.0

 ‘நீ என்ன Deodorants பாவிக்கிறாய். நல்ல வாசமாக இருக்கு’ எனக் காதலியை முகத்திற்கு நேரே கேட்கும் அளவிற்குக் காலம் மாறிவிட்டது. அவற்றின் பாவனை அந்தளவிற்கு அதிகரித்துவிட்டது.

அழகிற்கு அழகு சேர்ப்பது என்றிருந்தவை அலங்கோலங்களை அலங்கரிப்பாக மாற்றவும் செய்கின்றன. தங்கள் அழகுகளை அலங்கோலமாக மாற்றுகிறோம் என்பது தெரியாமல் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

எங்களை நாங்களே அழகு படுத்தவும், மற்றவர்களைக் கவர்ந்து இழுப்பதற்கும் என பலவிதமான அழகுசாதனப் பொருட்கள் சந்தைகளை நிறைக்கின்றன.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

Read Full Post »

“அங்கை பொடியளுக்கு பூச்சி மருந்தே குடுக்கிறாங்கள் இல்லையாம். அதுதான் உங்களிட்டை கூட்டிக் கொண்டு வந்தனான்”

பெர்பியூம் வாசனை அறை முழுவதையும் நிறைந்;தது. தாய் மகளையும் இரண்டு பேரப் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வந்திருந்தாள். அவர்கள் அமெரிக்காவில் வாழ்பவர்கள். விடுமுறைக்கு தாய்நாடு வந்திருந்தார்கள்.

பொதுவாகக் பூச்சி என்று சொல்லப்படும் குடற் புழுக்கள் அங்கு தொற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. அதனால் பூச்சி மருந்து வழமையாக கொடுக்க வேண்டிய தேவை அங்கு ஏற்படுவதில்லை.

“போன மாதம்தான் பூச்சி மருந்து குடுத்தனீங்கள். இப்ப இரவிலை பல்லை நெறுமுறான் திருப்பி ஒருக்கால் குடுப்பம் ” என்றார் மகனோடு வந்த இளம் தந்தை. பல் நொறுமுவதற்கும் பூச்சிக்கும் தொடர்பே கிடையாது. அது பொதுவாக உளநெருக்கீடு மற்றும் மனப் பதற்றத்தின் வெளிப்பாடு ஆகும். அல்லது சொத்தியான பற்கள் மற்றும் அகற்றப்பட்ட பற்கள் காரணமாவதுண்டு.

குடற் புழுக்கள்

பூச்சி என நாம் ஒருமையில் சொன்னாலும் அவற்றில் பல வகைகள் உண்டு. வட்டப் புழு, கொக்கிப் புழு, மற்றும் சாட்டைப் புழு ஆகியனவே பெருமளவு காணப்படுகின்றன. குடற் புழுத் தொற்றுள்ளவர்கள் மலங் கழிக்கும்போது மலத்தோடு அவற்றின் முட்டைகள் வெளியேறும்.

 Hook Worm
கொக்கிப்புழு தொற்றும் முறை

சுகாதார முறைப்படி மலங்கழித்து அகற்றாவிட்டால் அந்த மலத்தினால் மண் மாசுறும். மண்ணை அளைந்த கையை நன்கு கழுவாது உணவு உண்டால் அல்லது வாயில் கையை வைத்தால் அவற்றின் முட்டை அல்லது குஞ்சுகள் தொற்றிவிடும். காலணி அணியாது மண்ணில் நடந்தால் கொக்கிப் புழுக் குஞ்சுகள் சருமத்தை ஊடுருவித் தொற்றிவிடும்.

 hdc_0001_0001_0_img0028
வட்டப்புழு தொற்றும் முறை

இதனால்தான் முற்று முழுதாக குழாய் மூலம் கழிவகற்றும் நடைமுறையுள்ள நகர்புறங்களில் இவற்றின் தொற்று அதிகம் காணப்படுவதில்லை. உலகளாவிய ரீதியில் குடற் புழுக்களின் தாக்கத்தால் மக்கள் முக்கியமாக குழந்தைகளும் கரப்பணிகளும் நோயுறுகிறார்கள்.; ஒரு சில அரிதான தருணங்களில் மரணிப்பதும் உண்டு.

எத்தகைய தாக்கங்கள்

குடற்புழுக்களின் தாக்கத்தால் பொதுவாக பின் வரும் பாதிப்புகள் ஏற்படுவதாக இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது.

  • உணவில் இருந்து கிடைக்கும் ஊட்டச் சத்துகளை உணவுக்கால்வாய் அகத்துறுஞ்சுவதில் ஏற்படும் சிக்கல்கள்.
  • பசிக்குறைவினால் உணவு உட்கொள்வது குறைவது.
  • குடற்புழுக்கள் உணவுக் கால்வாயிலும், பித்தக் குழாய்களில் சிக்கி அடைப்பை ஏற்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்
  • வயிற்றுக்கடுப்பு, வயிற்றோட்டம்
  • சாட்டைப் புழுவினால் மலக்குடல் வெளித்தள்ளல்.
  • கொக்கிப் புழுவினால் ஏற்படும் இரும்புச்சத்துக் குறைபாட்டு இரத்தசோகை

போன்றவை அடங்கும். இவை உடனடியாக ஏற்படும் தாக்கங்களாகும்.

 whipworms05
சாட்டைப் புழுவினால் மலக்குடல் வெளித்தள்ளல்.

கடுமையான குடற்புழுத் தாக்கத்தினால் உடல் நலத்தில் பின்வரும் நீண்டகாலத் தாக்கங்கள் ஏற்படுகின்றன.

  • உடல் வளர்ச்சியில் (உடை, உயரம் அடங்கலாக) குறைபாடு
  • புலனுணர்வுகளின் வளர்ச்சிக் குறைபாடு
  • தொழிலாளர்களின் வேலைத் திறனும் உற்பத்தி ஆற்றலும் குறைவடைதல்
  • இரும்புச்சத்துக் குறைபாட்டு இரத்தசோகை ஏற்படுவதால், பிள்ளைகள் பாடசாலைக்கு ஒழுங்காகச் செல்ல முடியாமையும் கற்கை ஆற்றல் பாதிப்புறுவதும் நேர்கிறது.

2009-09-26__h05

எனவே சமூக மற்றும் தேசிய மட்டத்தில் இத்தகைய தாக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்குமுகமாக இலங்கை சுகாதார அமைச்சு சில உத்திகளை நடைமுறைப் படுத்துகிறது.

குடற்புழுத் தொல்iயைப் பொறுத்தவரையில் இலங்கையை இரு வலயங்களாகப் பிரிக்கின்றனர். கடுமையான மற்றும் மிதமான தாக்கங்கள் உள்ள இரு பகுதிகளாக கணிப்பீடுகளின் அடிப்படையில் பிரித்துள்ளனர்.

கடுமையான தாக்கமுள்ள பகுதிகளாக ஊவா, சப்பிரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இங்கு 20 முதல் 50 சதவிகிதமான தாக்கம் இருப்பதாக எண்ணப்படுகிறது

மிதமான தாக்கமுள்ள பகுதிகளாக வடக்கு, கிழக்கு, மேற்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள் கொள்ளப்படுகிறது.  இங்கு 10 முதல் 20 சதவிகிதமான தாக்கம் இருப்பதாக எண்ணப்படுகிறது.

எவ்வாறு குடற்புழு மருந்து கொடுக்கப்பட வேண்டும்

கடுமையான தாக்கமுள்ள பகுதிகளில்

5 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு.—

1 ½ வயது முதல் 5 வயது வரையான காலத்தில் வருடத்திற்கு இரண்டு முறை அதாவது ஆறு மாத இடைவெளிகளில் மெபன்டசோல் Mebendazole 500 mg மாத்திரைகளை குழந்தை நலக் கிளினிக்குகளில் (Child welfare clinic) கொடுப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மாத்திரைகளை விழுங்க முடியாத குழந்தைகளுக்கு அவற்றை இரு கரண்டிகளுக்கு இடையில் வைத்து நசுக்கி கொடுப்பது அவசியம்.

அத் தருணங்களில் விற்றமின் ஏ (Vitamin A megadose) மெகாடோஸ் மருந்துகளும் அங்கு வழங்கப்படுகிறது.

தரம் 1 முதல் 10 வரையான பாடசாலைப் பிள்ளைகளுக்கு வருடத்திற்கு இரண்டு முறை அதாவது ஆறு மாத இடைவெளிகளில் மெபன்டசோல் Mebendazole 500 mg மாத்திரைகளை கொடுக்கப்படும்

கர்பணித் தாய்மாருக்கு கர்ப்பம் தரித்த மூன்று முதல் ஆறு மாதப் பகுதியில் மெபன்டசோல் Mebendazole 500 mg மாத்திரை ஒரு முறை மட்டும் கொடுக்கப்படும்.

மிதமான தாக்கமுள்ள பகுதிகளில

5 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு.—

1 ½, 2, 3, 4, 5  வயதுகளில் அதாவது வருடத்திற்கு ஒருமுறை 500 mg மாத்திரைகளை குழந்தை நலக் கிளினிக்குகளில் (Child welfare clinic) ) கொடுப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சொல்லப்பட்டது போல மாத்திரைகளை விழுங்க முடியாத குழந்தைகளுக்கு அவற்றை இரு கரண்டிகளுக்கு இடையில் வைத்து நசுக்கி கொடுப்பது அவசியம். அத் தருணங்களில் விற்றமின் ஏ (Vitamin A megadose) மெகாடோஸ் மருந்துகளும் அங்கு வழங்கப்படுகிறது.

தரம் 1 முதல் 10 வரையான பாடசாலைப் பிள்ளைகளுக்கு வருடாந்தம் ஒரு முறை மட்டும் மெபன்டசோல் Mebendazole 500 mg மாத்திரை கொடுக்கப்படும்

கர்பணித் தாய்மாருக்கு கர்ப்பம் தரித்த மூன்று முதல் ஆறு மாதப் பகுதியில் மெபன்டசோல் Mebendazole 500 mg மாத்திரை ஒரு முறை மட்டும் கொடுக்கப்படும்.

அனைவருக்குமான மேலதிக விபரங்கள்

  • பாடசாலைப் பிள்ளைகளுக்கு இரத்த சோகையைத் தடுப்பதற்காக குறிப்பட் காலத்திற்கு இரும்புச்சத்து, போலிக் அமிலம், மற்றும் விற்றமின் சீ மாத்திரைகள் வழங்க்கடுகிறது. அதே போல கர்பணித் தாய்மாருக்கு இரும்புச்சத்து, கல்சியம் மற்றும் விற்றமின் சீ மாத்திரைகள் வழங்க்படுகிறது.
  • ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குடற் புழு மருந்து கொடுக்கும் அதே நேரத்தில் தாங்கள் ஒவ்வொருவரும் மெபன்டசோல் Mebendazole 500 mg மாத்திரை உட்கொள்ள வேண்டும்.
  • பைரன்டின் (pyrantin) > அல்பன்டசோல் (albendazole) போன்ற வேறு குடற்புழு மருந்துகளும் இங்கு கிடைக்கின்றன. ஆயினும் இத்தேசிய திட்டத்தில் அவை சேர்க்கப்படவில்லை. அவை தடை செய்யப்பட்ட மருந்துகள் அல்ல. அவையும் பரவலாக உபயோகிக்கப்படுகின்றன.
  • Mebendazole பெற்றவர்கள் இவற்றை மீள உபயோகிப்பது அவசியமல்ல. தேவையாயின் மருத்துவர் ஆலோசனை பெறுங்கள்.

 hdc_0001_0001_0_img0027

 பக்க விளைவுகள் ஏற்படுமா?

பொதுவாக பாரதூரமான பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை.  சாதாரண வயிற்று வலி, ஓங்காளம், வாந்தி, வயிற்றோட்டம், சோர்வு போன்றவை ஏற்படலாம். மருத்துவரை நாட வேண்டியதில்லை. தானே குணமாகிவிடும். மிக அரிதாக குடற் புழுக்கள் மேலெழுந்து வாயால் வருவதுண்டு.

Deworming (2)

காய்ச்சல் வயிற்றோட்டம் போன்ற நோய்கள் இருந்தாலும் கொடுப்பதில் தவறில்லை. என்றபோதும் குறிப்பட்ட நோயால் ஏற்படும் வேறு அறிகுறிகளை மருந்தினால் எற்பட்டதோ என பெற்றோர்கள் ஐயுறுவதால் ஒரிரு நாட்கள் கழித்து அந்நோயின் தாக்கம் தணிந்த பின்னர் கொடுக்கலாம்.

தடுப்பதற்கு வேறு என்ன செய்யலாம்

  • மனித மலம் சுகாதார முறைப்படி அகற்றப்பட வேண்டும். பாலகர்கள், குழந்தைகள் என்ற பாகுபாடின்றி எல்லோரது மலத்திற்கும் இது பொருந்தும்.
  • காலணிகள் இன்றி ஒருபோதும் வெளியே நடக்க வேண்டாம்.
  • கொதித்து ஆறிய அல்லது சுத்திகரிக்கபட்ட நீரையே அருந்த வேண்டும். உணவு மற்றும் நீர் ஆகாரங்கள் சுகாதார முறைப்படி தயாரித்து உண்ணப்பட வேண்டும்.

1453663_f260

கை கழுவுதல் போன்ற தனிப்பட்ட சுகாதாரத்தை நன்கு பேண வேண்டும்.

இது Ministy of health d; Guidelines on De worming Children and Pregnant women in community setting 2013-2016 என்ற ஆவணத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. முழுமையான மொழிபெயர்ப்பு அல்ல.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.0.0.0

Read Full Post »

காதோடுதான் …காது மடலோடுதான்

‘காதும் காதும் வைச்சாப்போலை இரகசியம் பேசு’வதற்கு மட்டும் காதுகள் அவசியம் என்றில்லை. ஒலியை உணரும் திறன் உள்ளது என்பதால்தான் காதுகள் மிக முக்கிய உறுப்பாக இருக்கின்றன.
செவிப்புலன் இல்லாவிட்டால்?

index
பறவைகளில் கீச்சல்களும் வண்டுகளின் ரீங்காரங்களும், குழந்தைகளின் மழலைகளும் இல்லாத உலகில் வாழ்வது பற்றி என்றாவது சிந்தித்ருக்கிறீர்களா? ‘அதிரும் இந்த ஒலிகளிலிருந்து விடுபட்டு நிசப்தமான உலகில் நிம்மதியாக இருக்க வேண்டும்’ எனச் சொல்பவனின் காதுகளை ஒரு சில நிமிடங்களுக்கு செவிடாக்கிட்டால் வேண்டாம் இந்தச் சத்தமற்ற உலகு என அலறியடித்து ஓடுவான்.

ஆனால் காதுகள் செவிப்புலனுக்கான உறுப்பு மாத்திரமல்ல. அதற்கு வேறு பல பணிகளும் இருக்கின்றன. அவற்றில் சில அலங்காரத்திற்கானவை. சில அத்தியாவசியமானவை. எமது உடலின் சமநிலையைப்; பேணும் உறுப்பு காதின் உட்புறமாக உள்ளது. ஆனால் இன்று நாம் பேசப்போவது காதின் அலங்காரத்தோடு சம்பந்தப்பட்டது.

காதுமடல்

எமது முகத்தின் இரு பக்கங்களிலும் காது மடல்கள் இருக்கின்றன. குருத்தெலும்புகள் உள்ளே இருக்க அதைச் சுற்றி சிறிது கொழுப்பும், அதை மூடிய மென்மையான சருமமும் காது மடலில் இருக்கின்றன. மனிதக் காதுகளில்தான் எத்தனை அளவு வித்தியாசங்கள், மாறுபாடான நிறங்கள் தோற்றங்கள். இவற்றின் அமைப்புகள் மனிதர்களுக்கு தனித்துவமான அழகு சேர்க்கிறது.

அந்த அழகுக்கு அழகு சேர்க்க அணிகலன்கள் இணைந்து கொள்கின்றன. தோடுகளும் அவற்றை ஒத்த அணிகலங்களும் பெண்களின் தனியுடமையாக இருந்த காலம் மலையேறிப் போய்விட்டது. ஆண்கள் முக்கியமாக இளைஞர்களும் இப்பொழுது அணிந்து கொள்கிறார்கள். இவ்வாறு அணிவதற்கு பொதுவாக காதுமடலில் துளையிட வேண்டியுள்ளது. அதுதான் காது குத்தல்.

காது குத்திய துவாரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலுமாக காது மடலில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக

  1. அரிப்பு, கடி புண்ணாதல் போன்றவை ஓட்டையைச் சுற்றியுள்ள தோலில் ஏற்படுவதுண்டு. தோட்டில் கலந்துள்ள உலோகங்களால் சருமத்தில் அழற்சி ஏற்படும். தங்கம் அல்லாத உலோகங்களிலான அலங்காரத் தோடுகளாலேயே பெரும்பாலும் இது ஏற்படுகிறது. சிலர் காது பகுதிக்கு சோப் போட்டுவிட்டு நன்கு அலசிக் கழுவாதுவிடுவதால் அழற்சி ஏற்படுவதும் உண்டு. அத்தகைய தோடுகளைத் தவிர்பதுடன் மருத்துவர் சிபார்சு செய்யும் கிறீம் வகைகளை பூசுவதன் மூலம் குணமாகும்.1_46.sized
  2. தோடு கழன்று விடுமளவு ஓட்டை பெரிதாகிவிடுவதுண்டு.Gauged-Earlobe-LL-Left-pre
  3. காது ஓட்டை அறுந்துவிடுவதுண்டு.

afp20051115p2029-f3 (1)

பிரிந்த அல்லது பெரிதான துவாரங்களைச் சரி செய்தல்

பாரமான தோடுகளைத் அணிவதே துவாரம் பெரிதாவதற்கு முக்கிய காரணமாகும். ஒவ்வாமையால் அழற்சி ஏற்பட்டு புண்ணாகிப் பெரிதாவதும் உண்டு. காதணி எங்காவது மாட்டுப்பட்டு இழுபடுவதால் அல்லது குழந்தைகள் காது வளையத்தை விளையாட்டாக இழுப்பதால் பெரிதாவதும் அறுபடுவதும் உண்டு.

long-earlobes

பெரிதான துவாரங்களை மறைக்க சிலர் நிறமற்ற ரேப்புகளைக் கொண்டு தற்காலிமாக ஒட்டிவிடுவதுண்டு. இது நல்ல முறையல்ல. சில மணிநேரத்திற்கு அவ்வாறு ஒட்டுவதால் பிரச்சனை ஏற்படாது. நீண்ட நேரம் ஒட்டினால் அவ்விடத்தில் அழற்சி ஏற்பட்டு எக்ஸிமாவாக மாறும்; ஆபத்து உண்டு.

அவ்வாறு இல்லாமல் இலகுவான சத்திரசிகிச்சை மூலம் இவற்றை சரிசெய்து நிரந்தரமாகப் பழைய நிலைக்குக் கொண்டுவரலாம்.

இதைச் செய்வதற்கு சத்திரசிகிச்சைக் கூடங்களுக்கு செல்ல வேண்டும் என்றில்லை. அதேபோல பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர்களை நாட வேண்டியதும் இல்லை. பெரும்பாலான மருத்துவர்கள் தமது ஆலோசனை அறையோடு இணைந்த சிறு சத்திரசிச்சை அறையில் வைத்தே செய்துவிடுகிறார்கள். மயக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மரக்கச் செய்தல் போதுமானது.

துல்லியமும்  நயமும் இணைந்த நுணுக்கமான சிகிச்சை இது. மென்மையான உறுப்பு என்பதாலும், காதின் அழகைக் கெடுக்கக் கூடாது என்பதால்தான் மிகுந்த அவதானம் தேவைப்படுகிறது.

அவ்விடத்தை சுத்தம் செய்து, மரக்கச் செய்வதற்கான ஊசியை ஏற்றுவார்கள். அறுந்த அல்லது பிரிந்து துவாரத்தைச் சுற்றியுள்ள இடத்தைக் கீறி, மறுத் (Scar) திசுக்களை அகற்றிய பின்னர் வெட்டிய அவ்விடத்தைப் பொருத்தி நுண்ணிய நூலால் தையல் இடுவார்கள். ஒரு சில நிமிடங்களுக்குள் முடிந்துவிடும்.

SDC14651-001
காயத்தை மூடி காதில் பன்டேஸ் போடுவார்கள். சுமார் ஒரு வார காலத்தின் பின்னர் தையலிட்ட நூலையும் பன்டேஜையும் அகற்றிவிடலாம். இடைப்பட்ட காலத்தில் அது நனையாமல் இருப்பது அவசியம். சுமார் ஒரு வார காலத்திற்கு அவ்விடத்தை நனைக்கக் கூடாது என்பதால் முகம் கழுவும்போது பன்டேஜில் நீர் படாமல் அவதானமாக இருக்க வேண்டும்.

தலைமுடியைக் கழுவி சுத்தமாக்கிய பின்னர் இச் சத்திர சிகிச்சைக்கு செல்வது உசிதமானது. அக் காலப் பகுதியில் தலைக்கு எண்ணெய் தடவாதிருப்பதும் நல்லது.

பன்டேஸ் போட்டு காயத்தை மூடாது திறந்தபடி விட்டபடி அன்ரிபயோடிக் ஓயின்மன்ட் பூசி தையலிட்ட காயத்தை மாற வைக்கும் முறையும் உள்ளது. ஆனால் இங்கு பெரும்பாலானவர்கள் அவ்வாறு செய்வதில்லை.

பொதுவாக முன்னைய துவாரத்தை முழுமையாக மூடி விடுவார்கள். பழைய இடத்தில் சிறிய துவாரத்தை மிச்சம் விடுவதில்லை. சத்திரசிகிச்சை செய்த இடம் முழுமையான உறுதி இல்லாமல் இருப்பதால் அதேயிடத்தில் மீண்டும் தோட்டை அணிந்தால் மடலின் திசுக்கள்; நொய்ந்து மீண்டும் துவாரம் பெரிதாகமல் இருப்பதற்காகவே முழுமையாக மூடுவார்கள்.

புதிதாகத் துவாரம் இடுதல்

சுமார் 1 மாத காலத்தின் பின்னர் புதிய துவாரம் இட வேண்டி நேரும். புதிய துவாரத்தை பழைய இடத்திற்கு அருகில் அவரது விருப்பதிற்கும் தோற்றத்திற்கும் ஏற்ப தேர்ந்தெடுக்கலாம்.

அவ்விடத்தை மரக்கச் செய்ய மருந்து பூசி செய்யலாம். அல்லது விறைப்பதற்கான ஊசி மருந்தும் போடலாம். தோட்டு நுனியில் துளையிடுவதற்காக அதன் தண்டில் சிறிய கூர் உள்ள பாரமற்ற தோடுகள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தலாம். வேறு ஊசிகளால் துவாரமிட்டு அதில் தோட்டை அணியவும் முடியும்.

ஆயினும் மெல்லிய தண்டுள்ள பாரமற்ற தோடுகள் விரும்பப் படுகின்றன. பாரமற்ற காது வளையங்களும் உசிதமானவை.

ஆனால் குழந்தைகள் இருப்பவர்களுக்கு இதனால் சிறிய ஆபத்தும் உண்டு. வளையத்திற்குள் கையை வைத்து குழந்தைகள் விளையாடும்போது இழுபட்டு துவாரம் கிழிவதையும் காது மடல் அறுந்துவிடுவதையும் காண முடிகிறது. இதைத் தடுக்க சிறிய ஸ்டற் போன்ற பாரமற்ற காதணிகளை சிறிது காலத்திற்கு அணிவது உசிதமானது.

குத்திய உடன் குருதி கசியும் காயம் இருக்கும் போதே தோடு அணிவதால் சிலருக்கு சிக்கல் ஏற்படுவதுண்டு. தோட்டில் உள்ள உலோகங்களால் ஒவ்வாமை அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதைத் தடுப்பதற்காக துவாரம் இடப்பட்டதும் உடனடியாகத் தோடு அணிவதை தவிர்த்து துவாரத்தில் சிறிய நைலோன் நூலைச் செலுத்தி முடிந்து வைப்பதும் உண்டு. புண் நன்கு காய்ந்த பின் தோடு அணிந்தால் ஒவ்வாமை ஏற்படாது.

‘ஒரு மாதம் காத்திருக்க முடியாது. வாற கிழமை கலியாணம் வருகிறது, சாமத்தியச் சடங்கு ஒன்று இருக்கிறது’ என பலர் அவசரப்படுத்துவார்கள். ஸடட் வைத்து அழுத்தக் கூடிய தோடுகளை தற்காலிகமாக அணிய வேண்டியதுதான்.

வேறு பிரச்சனைகள்

காது மடல் பெரிதாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். பிறப்பிலேயே பெரிதாக இருந்து வளரும்போது மேலும் பருத்திருக்கும். சிலருக்கு அதில் சதைகள் மடிப்புற்று அழகைக் கெடுக்கும். சமுத்திரத்தில் மணற் துளியைப் போட்டதுபோல பெரிய மடிந்த காதில் காதணி மறைந்து விடுகிறது என்ற கவலை சிலருக்கு ஏற்படும். அப்படியான காதின் அளவைச் சிறிதாக்கவும் சத்திரசிகிச்சைகள் உள்ளன. ஆனால் அவற்றை அதற்கான சத்திரசிகிச்சை நிபுணர்களே செய்வது நல்லது.

before-earlobe-reduction

செயற்கைக் காதுகள்

செயற்கைக் கால், செயற்கை மூட்டு எல்லாம் வந்துவிட்டன. செயற்கைக் காதும் வருவதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை. இவை வெறுமனே ரோபோவின் உலேகக் காதுகள் போன்றவை அல்ல. இரத்தமும் சதையும் குருத்தெலும்புகளும் கூடிய காதுகள்.

வளைந்து மடியக் கூடிய உயிரோட்டம் உள்ள காதுகள். Harvard Medical School in Boston, and the Kensey Nash Corporation in Philadelphia இணைந்து எலிகளுக்கான காதுகளை தயாரித்துள்ளார்கள்.

Artificial ear grown in lab

இத் தொழில் நுட்பம் வளர்ச்சியும்போது, விபத்துகளில் காதுகளை இழந்தவர்கள் இதன் மூலம் எதிர்காலத்தில் பயன்பெறுவார்கள் என நம்பலாம்.

எனது ஹாய் நலமா புளக்கில் அக்டோபர் மாதத்தில் ஏற்கனவே வெளியான எனது கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.00.0.0

Read Full Post »

மருத்துவர் தருகின்ற மருந்தச் சிட்டைகளை வீசிவிடாதீர்கள். கவனமாகப் பாதுகாத்து வைத்திருங்கள். அவை எதிர்காலத்திலும் உங்களுக்கு உதவக் கூடும்.

மறதி மிகுந்த வயதான அந்த மனிதர்.

elderly-man-in-robe-with-doctor-598-x-298

தனது வழமையான செக் அப்பிற்காக மருத்துவரிடம் சென்றார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் மருந்துப் பட்டியலை சிட்டையாக எழுதிக் கொடுத்தார். தொடர்ந்து பார்மசியில் வாங்கிப் போடுவதற்காக எழுதிக் கொடுக்கப்பட்டது.

எல்லா மருத்துவர்களின் கையெழுத்துப் போலவே அவரதும் யாருக்கும் புரியாத கிரந்த எழுத்துக்களாக அமைந்திருந்தன.

photo

சிட்டையை வாங்கித் தனது பொக்கெட்டுக்குள் வைத்த வயதானவர் மருந்தை வாங்க மறந்த விட்டார்.

ஆனால் அது அவரது பொக்கெற்றுக்கள் இருந்தவாறு அவருடன் எப்பொழுதும் பயணித்த வண்ணம் இருந்தது.

அவர் தினமும் பஸ்சில் பயணித்தே கோவிலுக்குப் போவார். பஸ் கண்டக்டரிடம் இதைக் காட்டியதும் இலவசமாகப் பயணிக்க ஒவ்வொரு நாளும் அனுமதி கிடைத்தது.

கோவிலில் செருப்பு பாதுகாப்பவர் அந்தச் சிட்டையைக் கண்டதும் சலாம் போட்டபடி செருப்பை பாதுகாத்து ஒப்படைப்பார்.

ஒரு நாள் பொழுது போகவில்லை எனத் சினிமாத் தியேட்டர் பக்கம் போனார். அங்கு இது அவருக்கு விசேட பாசாகப் பயன்பட்டது.

வாகனத்தில் போய்க் கொண்டிருக்கும்போது சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டார். இவர் தனது ஆஸ்தான சிட்டையைக் காட்டியதும் ‘சொறி சேர்’ எனச் சலூட் அடித்து மரியாதையுடன் மேற் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

திடீரென ஒருநாள் மயங்கி விழுந்தபோது இறந்து விட்டார்.

மருந்தை ஒழங்காகப் பாவிக்கததால் வந்த பிரச்சனை என அதே மருத்துவரிடம் உறவினர்கள் ஏச்சு வாங்க வேண்டியதாயிற்று.

அவர் மருந்துகளை போடத் தவறியது ஏன் என்பது உறவினர்களுக்குப் புரியவில்லை என்பதால் மருத்துவர் தப்பித்தார்.

அவரது பொக்கற்றுக்கள் இருந்த சிட்டையைக் கண்டெடுத்த மகள் “அது அப்பா எழுதிய கடைசி விருபப் பத்திரம்” என்று சொன்னாள்.

அப்பாவின் சொத்துக்களைத் தனது பெயருக்கு மாற்றிக் கொள்ள அது உதவியது.

எம்.கே.முருகானந்தன்.

இணையத்தில் படித்ததற்கு கைச் சரக்குச் சேர்த்தது

0.00.0

Read Full Post »

பழனி மலை ஏறியும், திருப்பதியில் மொட்டை அடித்தும், இராமேஸ்வரத்தில் தீர்த்தமாடியும் பலர் தங்கள் வேண்டுதல் நிறைவேறவில்லை என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள். இறைவன் அருளாத பாக்கியத்தை அந்தத் தம்பதியினருக்கு மருத்துவர்கள் ‘அருளி’ வைத்திருக்கிறார்கள்.

 Tirumalatemple

கடவுளர்களுக்கு காணிக்கை கொடுத்தும், உடலை வருத்தி விரதமிருந்தும் பெற முடியாததை சிறப்பு மருத்துவ மனைகளில் பல லட்சம் செலவில் அத் தம்பதிகளால் பெற முடிந்திருக்கிறது.

 baby20boy20baby20girl1

ஆண் குழந்தை வேண்டும் என, அல்லது பெண் குழந்தை தமக்கு வேண்டும் என காத்திருக்கும் பல தம்பதிகளினரின் பெருவிருப்பை மருத்துவர்கள் ஆய்வுகூட கருக்கட்டல் (IVF)   முறை மூலம் தீர்த்து வைக்கிறார்கள்.

 original_11141690

‘குழந்தை ஆணாக இருக்க வேண்டுமா பெண்ணாக இருக்க வேண்டுமா என்ற பாலினத் தேர்வை இச் சிகிச்சை மூலம் கோரக் கூடாது, செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது தவறு’ என இந்தியச் சட்டம் தெளிவாகச் சொல்லியிருக்கின்ற போதும் மூடிய மருத்துவ மனைகளின் கதவுகளுக்கு பின்னால் இது நடை பெறுகிறது என்பது ரகசியமல்ல.

பெறப் போகும் குழந்தையில் பாலினத் தேர்வு செய்வது சட்டரீதியாக மட்டும் குற்றம் என்பது மட்டுமல்ல அது சமூக ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. ஏனெனில் இது வெறுமனே பாலினத்; தேர்வு என்பதுடன் நின்றுவிடவில்லை.

அதற்குள் ஒரு அழிப்பு நடவடிக்கையும் மறைந்து இருக்கிறது.

இனஅழிப்பு (Geneocide) பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். பாலினத் தேர்வு எனப்படுவது உண்மையில் பாலின அழிப்பு (Gendercide) என்றே பலரும் கருதுகிறார்கள். ஆம். இங்கு பெரும்பாலும் பெண் கரு முளைகள் களையப்படுகின்றன. ஆண் கருமுளைகள் ஓம்பப்படுகின்றன.

 6-1-12Gendercide2

இதனால்தான் குழந்தையில் பாலினத் தேர்வு செய்வது ஆகாது எனப் பலரும் கூக்குரலிடுகிறார்கள். மாறாக அவ்வாறு செய்வதைத் தடுப்பதால் பெற்றோர்களது மன உணர்வுகள் பாதிக்கப்படும். அது அவர்களது சுதந்திரத்தில் கை வைப்பதாகும் என மாற்றுக் கருத்துகள் சொல்வோரும் உளர்.

குழந்தையில் பாலியல் தேர்வு

ஆஸ்திக்கு ஒரு ஆணும் ஆசைக்கு ஒரு பெண்ணும் என இரு குழந்தைகளும் வேண்டும் என்று பொதுவாகச் சொன்னாலும் ஒவ்வொரு பெற்றோருக்கும் தமக்கு எந்தக் குழந்தை வேண்டும் என்பது பற்றிய தனிப்பட்ட உள்ளார்ந்த விருப்புகள் இருக்கவே செய்யும்.

இருந்தபோதும் இந்தியாவைப் பொறுத்த வரையில் ஆண் குழந்தைகளே பெரிதும் விரும்பப்படுகின்றன. ‘எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னைப் போலவே இருப்பான்..’ எனக் கவிஞர் பாடுவது வெறுமனே அக் கவிஞனின் வார்த்தைகள் அல்ல. அது அந்தச் சமூகத்தின் பிரதிபலிப்பு என்றே சொல்ல வேண்டும்.

 CFF-60-700x400-

பிறப்பில்  ஆண்கள் அதிகமாக உள்ள நாடுகளில் ஆர்மேனியா, ஆர்ஜன்ரைனா, சீனா, இந்தியா, ஜோர்ஜியா போன்றவை முன்னணியில் நிற்கின்றன.

தங்கள் முதல் குழந்தை ஆணாகவே இருக்க வேண்டும் என்ற விருப்பு ஜேர்மனி உட்பட்டதான சில ஐரோப்பிய நாடுகளிலும் இருப்பதாக உலக சுகாதார அறிக்கை ஒன்று கூறுகிறது.

பெண் குழந்தைகள் விரும்பப்படாமைக்கு பெண்கள் மீதான அடக்கு முறைகளும், பாலியல் பலாத்காரங்களும் முக்கிய காரணமாக இருக்கலாம். சீதனம் கொடுக்க வேண்டிய பிரச்சனையும் மறைமுகக் காரணம்தான். இது பொதுவாக கீழை நாடுகளின் நிலை. குடும்பத்தில் ஆண் பெண் சமநிலை வேண்டும் என்பதற்காக பாலினத் தேர்வு மேலைநாடுகளில் விரும்பப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

பாலினத் தேர்வானது இன்று நவீன அறிவியல் ரீதியான ஒன்றாக இருக்கிறது.
ஆயினும் தங்கள் குழந்தையின் பாலினத்தைத் தேர்வது பற்றிய ஆர்வமும் அதற்கான முயற்சிகளும் நீண்ட காலமாக இருந்திருக்கின்றன.

சீனர்களின் பாலினத் தேர்வு கலண்டர் (Chinese Gender Calendar)> பாலினத் தேர்விற்கான உணவு முறை எனப் பல முயலப்பட்டுள்ளன. இவை யாவும் இயற்கையானவை.

Chinese Gender Predictor

ஓரளவு விஞ்ஞான அறிவையும் கலந்து Shettles Method என்பதை உருவாக்கினார்கள்.

விந்துத் தேர்வு (Sperm selection) முறை ஒன்றும் இருக்கிறது. ஆனால் இவை எதுவுமே பூரணமான பலன் தரும் முறைகள் அல்ல. விரும்பிய தேர்வை நிச்சயம் தரும் என நம்ப முடியாது.

Methods of Gender Selection

எவ்வாறு செய்யப்படுகிறது

இப்பொழுது ‘ரெஸ்ட் ரியூப்’ முறையில் குழந்தை பெறும்போது பெற்றோர்களால் தங்கள் குழந்தையின் பாலினத்தைத் தேர்வது முடியும்.

ஆய்வுகூட கருக்கட்டலின் போது ஆய்வுகூடக் கோப்பையில் முட்டையையும் விந்துவையும் இணைப்பார்கள். அது கருவாக வளர்வதற்கான ஆரம்ப நிகழ்வாகும். ஒரு கலமான அது அங்கே பல கலங்களாகப் பிரிந்து வளரும். எட்டுக் கலங்களேயான பிளாஸ்டோசைட் (டிடயளவழஉலளவ) ஆகி மேலும் வளரும்.

இதன் பின்னரே அதை பெண்ணின் கருப்பையில் வைப்பார்கள். பொதுவாக 3 முதல் 5 நாட்களில் வைப்பார்கள். அவ்வாறு வைப்பதற்கு முன்னர் நுணுக்கமான ஒரு மரபணுப் பரிசோதனை செய்வதுண்டு. நுண்ணிய ஊசி மூலம் அதிலிருந்து ஒரே ஒரு கலத்தை மட்டும் எடுத்து மரபணுப் பரிசோதனை (Preimplantation genetic diagnosis (PGD) செய்வார்கள். ஏதாவது கடுமையான பரம்பரை நோய்கள் இருக்கிறதா என்பதை அறிவதற்கான பரிசோதனை இது. அவ்வாறு தேர்ந்தெடுத்து நோய்கள் அற்ற கருமுளையைத்தான் பெண்ணின் கருப்பையில் வைப்பார்கள்.

Preimplantation Genetic Diagnosis

இது மருத்துவக் காரணங்களுக்கான தேவைகளுக்காகச் செய்யப்படும் பரிசோதனை.

இதே பரிசோதனை மூலம் அந்தக் கருமுளையானது ஆணா பெண்ணா என்பதையும் கண்டறிய முடியும். மருத்துவக் காரணங்களுக்கானது அல்ல என்பதால் வழமையாகச் செய்யப்படுவதில்லை. பெற்றோரின் விருப்பத்திற்காக மட்டுமே மிகுந்த செலவில் செய்யப்படுகிறது. பாலினத் தேர்வுடன் ரெஸ்ட் ரியூப் பேபிக்கான மிகக் குறைந்த செலவானது 20,000 அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் எனத் தெரிகிறது. விந்து, முட்டை ஆகியன தேவைப்பட்டால் இது மேலும் அதிகரிக்கலாம். செலவு அதிகமானாலும் இம் முறையானது 99 சதவிகிதம் வெற்றியளிக்கும் என்கிறார்கள்.

 designer-children-pgd

கருவில் வளரும் குழந்தையானது ஆணா பெண்ணா என்பதை சாதாரண ஸ்கான் பரிசோதனைகள் (Ultra Sound Scan) மூலமும் கண்டறிய முடியும். ஆனால் அதற்கு சற்று காலதாமதம் ஆகும். கருமுளையானது தாயின் கருப்பையில் 12 முதல் 20 வாரங்கள் வளர்ந்த பின்னர் ஏற்படும் அங்க வேறுபாடுகள் மூலமே தெளிவாகக் கண்டறிய முடியும்.

பால்வழித் தேர்வும் அழிப்பும்

அவ்வாறு கண்டறியும்போது அது வேண்டாத பாலினக் கருவெனில் சிலர் அதைக் கலைக்க முனைவார்கள். கருக் கலைப்பு சட்டவிரோதமானது என்ற காரணத்தால் அவ்வாறு குழந்தை ஆணா பெண்ணா எனக் கண்டறியும் ஸ்கான் பரிசோதனை செய்வதை இலங்கை உட்பட பல நாடுகளில் தடை செய்துள்ளார்கள்.

இதே காரணங்களுக்காகத்தான் ஆய்வுகூட கருக்கட்டலின் பின்னரான பாலினம் அறியும் பரிசோதனை நிறுத்தப்பட வேண்டும் என்பது ‘பால்வழி அழிப்பு’ என்பவர்களின் வாதமாகும்.

ஆனால் இது பால்வழி அழிப்பு அல்ல, தேர்வு மட்டுமே என ஆதரிப்பவர்கள் சொல்கிறார்கள். அவ்வாறு சொல்வதன் காரணம் என்ன?

ரெஸ்ட் ரியூப் முறை என்படும் இத்தகைய ஆய்வுகூட கருக்கட்டலின் போது ஒரு பெண்ணுக்காக பல முட்டைகள் கருக்கட்டப்படுகின்றன.

தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை உறை குளிரில் வைத்துப் பாதுகாப்பார்கள். தானகவே கருச் சிதைந்துவிட்டால் மீண்டும் வைப்பதற்கு அது உதவும். அல்லது அடுத்த மகப்பேற்றை நாடும் போது உதவலாம் என்பதற்காகவே ஆகும். மாறாக குழந்தை இல்லாத வேறொரு பெற்றோருக்கு சேமிப்பிலிருந்து தானமாகவும் வழங்கவும் முடியும்.

ஆனால் அதை அழிக்கவும் முடியும். பெரும்பாலும் அதுவே நடக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இந்தியாவில் பாலியல் தேர்வு 1994ம் ஆண்டு முதல் தடைசெய்யப்ட்டுள்ளது. இருந்தபோதும் கடுமையாக அமுல்படுத்தப்படாததால் சனத்தொகையில் பெண்களின் வீதாசாரம் குறைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துள்ளன. அண்மையில் டெல்லியில் ஒரு கும்பல் பெண்ணை கூட்டு வன்புணர்வு செய்யதற்கு சமூகத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையே மறைமுகக் காரணம் என்கிறார்கள். ஏனெனில் மொத்த சனத்தொகையில்  50 சதவிகிதத்திற்கு அதிகமாக இருப்பது 25 வயதிற்கு உட்பட்ட வயதினரே ஆகும். வாலிபப் பையன்களின்  இயல்பான பாலியல் தேவைகளுக்கு ஏற்றளவு அவர்கள் வயதொத்த பெண்களின் எண்ணிக்கை போதாமலிருக்கிறது. இதுவே வன்புணர்வுகளுக்கு காரணம் என்கிறார்கள்.

இப்பொழுது பிரித்தானியாவிலும் பாலியல் தேர்வுகளுக்கு தடையிருக்கிறது. ஆயினும் அங்குள்ள மருத்துவ அறிவியல் (medical ethicists)    குழுவானது அத் தடைக்கான தேவை எதுவும் இல்லை என்கிறது. ஆனால் அது சரியான கருத்தா? பெற்றோர்களின் உளவியல் தாக்கங்கள் மற்றும் குடும்ப சமநிலைக்காக பாலியல் தேர்விற்கு தடை விதிக்கக் கூடாது என்பது அவர்களது வாதம். அது ஓரளவு உண்மை என்ற போதும், தடையை நீக்குவதால் சமூக ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் உலகளாவிய ரீதியிலும் ஏற்படக் கூடிய பாதிப்புகளை மனம் கொள்ள வேண்டும்.

பிரச்சனைகள்

குழந்தை ஆணாகவா பெண்ணாகவா இருக்க வேண்டும் என்ற தேர்வு இதுவரை இயற்கையிடமே இருந்திருக்கிறது. இந் நிகழ்வை பெற்றோர்கள் தீர்மானிக்க வழிவிட்டால் அது மருத்துவ ரீதியான வணிகமயப்படுத்தலுக்கு வழிவகுக்கும். அந்நிலையில் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது போய்விடும்.

மருத்துவரும் பெற்றோரும் தனிப்பட்ட ரீதியில் எடுக்கும் முடிவுகள்  பாலினத் தேர்வுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை. Origins of Love, என்ற தனது நாவலில் Kishwar Desai அவர்கள் இது பாலினத் தேர்வுக்கு அப்பாலும் மருத்துவ வணிக மயமாதலுக்கு சென்றுவிடலாம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

 GetImage

குழந்தையின் சரும நிறம் எதுவாக இருக்க வேண்டும், அதனுடைய அறிவாற்றல் எவ்வளவு இருக்க வேண்டும், குழந்தையின் தலைமுடி எவ்வாறு இருக்க வேண்டும் என்றெல்லாம் பெற்றோர்கள் கோரக் கூடும். அதற்கான ஆதரவாக மருத்துவர்கள் குரல் எழுப்புவார்கள் என்கிறார்;.

 Kishwar Desai at the Oxford literary festival, 2010.

ஆயினும் இவற்றிற்கு ‘ஆம்’ சொன்னாலும் அவர்களுக்கு பூரண திருப்தி ஏற்படப்போவதில்லை. மனித மனம் என்றுமே பூரண திருப்தி அடைவதில்லை. ஒன்று கிடைத்தால் கிடைக்காத வேறு ஒன்றைப் பற்றி ஏங்கிக்கொண்டே இருக்கும். ஆண் குழந்தை அதுவும் எலுமிச்சை நிறக் குழந்தை வேண்டும் எனக் கேட்பார்கள். அது கிடைத்துவிட்டால் அத்தோடு ஆசை அடங்கிவிடாது. அதன் கண்ணின் நிறம் கருமை போதாது என மனம் குற்றம் காணக் கூடும். தனக்கு விருப்பிற்கு ஏற்றவிதத்தில் மற்றொரு ஆய்வுகூட குழந்தையைப் பெறவும் அவர்கள் முனையக் கூடும்.

விரும்பியபடியே குழந்தை கிடைத்துவிட்டால் புதிய வடிவில் பிரச்சனைகள் தலை தூக்கும்.

ஏற்கனவே உள்ள குழந்தைகளுக்கும் இப் புதிய குழந்தைக்கும் இடையே பெற்றோர்கள் சிறிது பாரபட்சம் காட்டுவார்கள் என்பது நிச்சயம். அறிவுள்ள பெற்றோர் அவ்வாறு பாரபட்சம் காட்டக் கூடாது என மனதார எண்ணினாலும் கூட அவர்கள் அறியாமலே அது நுணுக்கமாக செயற்பாடுகள் ஊடாக வெளிப்படும்.

பாதிக்கப்பட்ட குழந்தையானது தான் வேண்டாத பிள்ளை என உணர நேரும்போது உறவுகளில் சிக்கல்கள் உருவாகும்.

கதைகளிலும் திரைப்படங்களிலும் நாம் எதிர்பாராத திருப்பங்களை விரும்புகிறோம். ஏன் நிஜ வாழ்வில் மட்டும் அதற்கு இடமில்லை. ஆணா பெண்ணா எனக் காத்திருப்பதில் ஒரு திரில் இருக்கிறது. சுகமும் இருக்கிறது.

புதிய வரவு எதுவாக இருப்பினும் அது எங்களது, எங்களுக்கே ஆனது, எங்கள் வாரிசு என்பதில் மனம் நிறையவே செய்யும்.

இயற்கையுடன் முரண்படாது அதன் தேர்விற்காகக் காத்திருப்பது நல்லதா அல்லது  விஞ்ஞானத்தின் நவீன முன்னகர்வுகளுடன் இணைந்து கொள்வதா?

குழந்தையின் பாலினத் தேர்வில் நீதியின் தராசு எந்தப் பக்கம் சரிய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?“ஆண் குழந்தையா பெண் குழந்தையா?

பாலினத் தேர்வு யாரிடம் இருக்க வேண்டும்?”  சமகாலம் சஞ்சிகையில் நான் எழுதிய கட்டுரை
ஹாய் நலமா புளக்கில் வெளியான எனது கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0

Read Full Post »

சென்ற வாரம் ஒரே நாளில் சளி இருமல் என்று வந்தவர்கள் பலர். அதிலும் பலருக்கு மூச்சு விடுவதிலும் சிரமம் இருந்தது.

சிறு குழந்தை, பாடசாலைச் சிறுமி, பல்கலைக் கழக மாணவன் எனப் பல தரப்பட்டவர்கள் இருந்தார்கள்

இவர்களில் பலருக்கு nebulizing செய்ய நேர்ந்தது.

nebulizer_mask

சிலர் ஏற்கனவே சளித் தொல்லைக்கு ஆளானவர்கள்.

வழமையாகவே சளி இழுப்புத் தொல்லை இருப்பவர்கள் ஒரு சிலர்.

தந்தைக்கு ஆஸ்த்மா சிறுவயதில் வந்த ஒரு பிள்ளைக்கு அன்றுதான் முதன் முதல் வந்திருந்து.

கடுமையான அல்ர்ஜி தொல்லையால் சரும நோய் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவ மற்றொருவர் இன்று மூச்செடுக்க முடியாது ஓடிவந்திருந்தார்.

முழங்கை கழுத்து அக்குள் என பல இடங்களில் எக்சிமா இருந்த பெண் ஒருத்தியும் இதில் உள்ளடங்கும்.

அடிக்கடி கண்கடி தும்மல் வரும் கட்டிளம் பருவத்தது பையனும் இருந்தான்.

இவர்கள் எல்லோருக்குமே இன்று திடீரென இழுப்பு wheezing வந்திருந்தது. வெளிப்படையான இழுப்பு தெரியாமல் மூச்சு அடைத்தவர்களும் உண்டு.

இன்று திடீரென ஏன் இவ்வாறு பலருக்கு ஆயிற்று.

‘இண்டைக்கு தயிரும் வாழைப்பழமும் சாப்பிட்டவ’ என ஒரு கணவன் தன் மனைவியில் குற்றம் கண்டார்.

“இன்ரவெலுக்கு விளையாடினியோ” என்று தகப்பன் கேட்க பிள்ளை தயக்கத்துடன் “ஒம்” எனத் தலையாட்டியது. “சொன்னால் கேக்கிறியோ. விளையாடித் தேடிப் போட்டாய்” என அது விளையாடியதில் குற்றம் கண்டு திட்டினார்.

“ஏ.சி யுக்குள்ளை வேலை செய்யதாலைதான் பிரச்சனை” என்று தினமும் ஏ.சி யுக்குள் வேலை செய்யும் இளம் பெண் தனது இன்றைய இழுப்பிற்கு காரணம் கண்டாள்.

“முழுகிப் போட்டன் அதுதான் பிரச்சனையாப் போச்சு”

இப்படி தங்கள் ஆஸ்த்மா பிரச்சனைக்குப் பல காரணங்களை அவர்கள் சொன்னார்கள்.

அவை உண்மையா.

இல்லை என்றுதான் நான் சொல்வேன்.

சீதோஸ்ண நிலை காரணமாயிருக்கலாம். வெப்ப நிலை குறைவாக இருந்தது. காற்று வீச்சு அதிகமில்லை. ஈரப்பதம் அதிகமாயிருந்து. கடுமையான கால நிலைகளும் திடீரென மாறும் இவ்வாறான காலவெட்ப நிலைகளும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

  • இந்த மாற்றங்கள் எல்லோருக்கும் இழுப்பைக் கொண்டுவருவதில்லை.
  • அதற்கான வாய்புள்ளவர்களில் இத்தகை திடீர் மாற்றங்கள் கொண்டு வந்திருக்கலாம்.
  • தயிர், மோர், வாழைப்பழம், முழுக்கு, ஏ.சி,  விளையாடுவது போன்றவை மட்டும் ஒருவருக்கு கொண்டு வந்துவிடாது.

எனவே பாவம் நோயில் துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்களை

“நீ செய்தது தான் காரணம்” எனத் திட்டி அவர்கள் வேதனையை அதிகரிக்காதீர்கள்.

0.00.0

Read Full Post »