Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜனவரி, 2014

முன்பள்ளிச் சிறுவர்களுக்கான ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. ஒரு பாடலை அபிநயத்துடன் பாடிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு சில பிள்ளைகள் மிக உற்சாகமாக உடலசைத்து  முகத்தில் உணர்வுகள் தெறிக்கப் பாடினார்கள். சிலர் ஏனோதானோ எனப் பாடினார்கள். கண்ணைக் கசக்கிக் கொண்டு பாடியவர்ளும் இருந்தார்கள்.

2349077637

நிகழ்வு முடிந்து குழந்தைகள் மேடையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது அவர்களைத் தூக்கச் சென்ற பெற்றோர்களது முகங்களிலிருந்து உணர்வுகளும் மாறுபட்டிருந்தன.

ஆவலோடு சென்று அணைந்துத் தூக்கியவர்கள் சிலர். முத்தமிட்டுக் கொஞ்சி வாழ்த்தினார்கள் மற்றவர்கள். ஏனாதானோ என அழைத்துச் சென்றவர்களும் இருந்தார்கள். முகத்தில் கோபம் கொப்பளிக்க ஆவேசத்தோடு அடிக்காத குறையாக இழுத்துச் சென்றவர்களும் இருக்கவே செய்தார்கள்.

Son Hugging Father

பெற்றோர்களது உணர்வுகளும் செயற்பாடுகளும் பிள்ளைகளை எவ்வாறு உள்ளுரப் பாதித்திருக்கும் என்பது எனது யோசனையாக இருந்தது.

  • அவை பெற்றோர்களினதாக மட்டும் இருக்க வேண்டியதில்லை.
  • ஆசிரியர்களின்,
  • குடும்பத்தில் உள்ள மூத்தவர்களது,
  • பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகன ஓட்டுனரது என யாராவது ஒரு சிலரின் செயற்பாடுகள் அவர்களை வெருட்டுவதாக அல்லது கொடுமைப்படுத்துவதாக இருக்கலாம்.

வெருட்டப்படுவதால் வரும் நோய் அறிகுறிகள்

கொடுமைப்படுத்தல் அச்சுறுத்துதல், வெருட்டுதல் போன்றவை அந்தப் பிஞ்சு உள்ளங்களை எவ்வாறு பாதிக்கும்.

article-0-09D64E52000005DC-323_468x350

பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு அதைப்பற்றி முறையிடத் தெரியாது. யாரிடம் முறையிடுவது எவ்வாறு முறையிடுவது போன்றவை அவர்களுக்கு சிக்கலாக இருக்கும். தங்களுக்கு நெருக்கமான தாய் தகப்பன், சகோதரங்கள், சகமாணவர்கள், ஆசிரியர் போன்றோர்களிலிருந்து வரும் அச்சுறுத்தலை இட்டு எங்கு முறையிடுவது என்பது புரியாது திகைப்பார்கள்.

இதனால் அவை உடல் நோயாக வெளிப்படலாம்.

அமெரிக்காவின் உயர்வகுப்பு மாணவர்களில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 20 சதவிகிதமானவர்கள் வெருட்டப்படுவதாக தெரிகிறது. ஓட்டிசம், உணவு ஒவ்வாமை, அங்கக் குறைபாடு பொன்ற பிரச்சனை உள்ள பிள்ளைகள் இதை எதிர்கொள்ள நேர்வது அதிகம் என்ற போதும் சாதாரண குழந்தைகளும் தப்ப முடிவதில்லை.

8626786_600x338

அடிக்கடியும், காரணம் விளங்காமலும் குழந்தைகளில் ஏற்படும் உடல் சார்ந்த அறிகுறிகள் பலவற்றிற்கும் அத்தகைய கொடுமைப்படுத்தல அல்லது வெருட்டல்கள் காரணமாக இருக்கலாம் என்கிறது அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று. இத்தாலியிலுள்ள University of Padua ல் பேராசிரியர் Gianluca Gini தலைமையில் செய்யப்பட்ட ஆய்வானது Pediatrics  Sept. 16 இணைய இதழில் பிரசுரிக்கப்பட்டு;ளது.

பாடசாலைப் பிள்ளைகளில்

14 நாடுகளிலுள்ள 220,000 பாடசாலை செல்லும் பிள்ளைகளிடையே செய்யப்பட்ட 30 ஆய்வுகளின் தரவுகளை இது உள்ளடக்குகிறது. அச்சுறுத்தலுக்கு அல்லது கொடுமைக்கு ஆளாகும் பிள்ளைகள் ஏனைய குழந்தைகளைவிட இரண்டு மடங்கு அதிகமாக தங்களுக்கு சுகமில்லை எனச் சொல்லுவார்கள். அதாவது உண்மையில் எந்தவொரு நலக்குறைவும் இல்லாத போதும் வருத்தம் சொல்வார்கள் என்கிறது இந்த ஆய்வு.

bullying-kids

பொதுவாக அத்தகைய பிள்ளைகள் சொல்லும் அறிகுறிகள் என்ன?

  • தலையிடி,
  • வயிற்றுவலி,
  • முதுகுவலி,
  • கழுத்து வலி,
  • தோள் மூட்டு உளைவு,
  • சுவாசிப்பதில் சிரமம்,
  • தசைப்பிடிப்புகள்,
  • ஓங்காளம்,
  • வாந்தி,
  • வயிற்றோட்டம்

போன்றவையே பொதுவான அறிகுறிகளாகும்.

இது மேலை நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வு என்றபோதும் இது போன்ற அறிகுறிகளுடன் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மருத்துவர்களிடம் அழைத்து வருகிறார்கள்.

தலையிடி என்றால் மூளைக்குள் கட்டி என்றும், தலைப்பாரம் என்றால் சைனஸ் பிரச்சனையா என்றும் வயிற்று வலி என்றால் அப்பென்டிசைடிஸா அல்லது வேறு ஏதாவது ஆபத்தான நோயாக இருக்குமா எனப் பயந்தடித்து பிள்ளைகளை இழுத்துக் கொண்டு வருகிறார்கள்.

எப்பொழுதாவது ஒரு தடவை அத்தகைய அறிகுறிகள் வந்தால் அது உண்மையான நோயாக இருக்கலாம். ஆனால் அடிக்கடியும், காரணம் புலப்படாதபோது வந்தால் அது பிள்ளையின் மனதில் மறைந்துள்ள ஏதாவது ஒரு அச்சம் காரணமாக இருக்கலாம் என்பதை பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

‘காலையிலை வயித்துக் குத்தெண்டு வயித்தைப் பிடிச்சுக் கொண்டு படுத்துக் கிடந்தான். இப்ப இஞ்சை வரக்குள்ளை சுகமாக் கிடக்காம்’ என்று சில அம்மாக்கள் சொல்லுவார்கள்.

ஆம்! சில பெற்றோர்கள் இது நோயல்ல என ஓரளவு ஊகித்துக் கொண்டாலும் அதை தெளிவு படுத்துவதற்காக மருத்துவரிடம் வருவது உண்டு.

‘கள்ளம் செய்யிறான்’ என்று சொல்லி அவர்களை நக்கல் அடிக்கக் கூடாது. இவை பெரும்பாலும் தாங்களாகவே வேண்டுமெனத் திட்டமிட்டுச் செய்வதில்லை. மனதில் உறைந்திருக்கும் கிலேசம் நோயாக வெளிப்பட்டிருக்கும். அதை விளக்க அவர்களுக்கு தெரிவதில்லை.

‘பள்ளிக் கூடத்திலை ஆராலை உங்களுக்கு கரைச்சல்’ எனப் பேச்சோடு பேச்சாகக் கேட்டுப் பார்த்தால் அச்சுறுத்தல் எங்கிருந்து வருகிறது என்பது தெளிவாகக் கூடும்.

அச்சுறுதலும் கொடுமைப்படுத்தலும் பல வகைப்படலாம்

அச்சுறுதல் வேறு கிண்டல் பண்ணுதல் வேறாகும். பிள்ளைகள் விளையாடும்போது சகோதரங்களாலோ நண்பர்களாலோ கிண்டல் பண்ணப்படுவது சகசமானது.

bullying

விளையாட்டுதனமாகவும் நட்புறவுடனும் ஒருவருக்கொருவர் கிண்டல் அடிப்பதை பிள்ளைகள் வேடிக்கையாகவே எடுப்பார்கள். ஆனால் அது கேலி என்ற அளவைத் தாண்டி மனதைப் புண்படுத்துவதாக, இரக்கமற்றதாக கொடுமையானதாக மாறும்போது அது அச்சுறுத்தலாக மாறுகிறது.

கொடுமைப்படுத்தல் என்பது உடல் ரீதியானதாக மட்டும் இருக்கும் என்றில்லை.

  • அது கடும் வார்த்தைகளாகவோ உளரீதியாகவும் இருக்கலாம்.
  • அடித்தல்,
  • இழுத்தல்,
  • பட்டப் பெயர் வைத்து இழித்தல,
  • அச்சுறுதல்,
  • வெருட்டிப் பணம் கறத்தல்
  • அல்லது பொருட்களைப் பறித்தல் போன்ற பலவாகலாம்.
  • குறிப்பிட்ட பிள்ளையைப் புறக்கணிப்பதும், தவறான வதந்திகளைப் பரப்புவதும் ஆகலாம்.
  • இன்றைய காலத்தில்  குறும் தகவல்களாலும், பேஸ்புக் போன்ற சமூகதளங்கள் ஊடாகவும் மன உளைவையும் அச்சுறுத்தலையும் கொடுக்கலாம்.

200181253-001

‘பள்ளிப் பிள்ளைகள்தானே! இவற்றிக்கு முகம் கொடுத்து தாண்ட வேண்டியவர்கள்தானே’ என அலட்சியப்படுத்தக் கூடாது.

ஏனெனில் அது பிள்ளையின் சுயமதிப்பைப் பாதிப்பதுடன், அதனது பாதுகாப்பு உணர்வையும் பலவீனப்படுதும் அளவு தீவிரமானதாகும். சற்று வளர்ந்த பிள்ளைகளில் இது தற்கொலைக்கு கூட இட்டுச் செல்லலாம் என்பதை மனதில் இருத்தி எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெற்றோரின் கடமை

கொடுமை தாங்காத நிலை ஏற்பட்டு குழந்தை தானாகச் சொல்லுமளவு காத்திருக்கக் கூடாது. அல்லது கண்டல்கள் காயங்கள் என நிலமை மோசமாகும் வரை பொறுத்;திருக்கக் கூடாது.

அக்கறையுள்ள பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் நாளாந்த நடவடிக்கைகளில் ஏற்படும் சின்னச் சின்ன மாற்றங்களே உசார்ப்படுத்திவிடும். பிள்ளை பதற்றமாக இருக்கக் கூடும்,

வழமைபோல உணவு எடுகாதிருக்கலாம், எரிச்சல்படலாம், எளிதில் கோபமுறலாம் தூக்கக் குழப்பம் ஏற்படலாம். இவற்றை எல்லாம் அவதானிக்க வேண்டும்.

Bullying_main_0425

வெட்கம் காரணமாகவோ, பிரச்சனை வெளிப்படுவதால் தான் மேலும் கொடுமைப்படுத்தப்படலாம் என்பதாலும் தனது பிரச்சனையை வெளிப்படுத்த பிள்ளை தயங்கக் கூடும். பெற்றோர்களில் தன்னில் குற்றம் கண்டு தன்னையே ஏசவோ அடிக்கவோ கூடும் எனவும் தயங்கலாம்.

எனவே ஆதரவோடும் அனுதாபத்துடனும் பெற்றோர்கள் அதை அணுக வேண்டும். தாங்கள் இவ்விடயத்தில் உறுதுணையாக இருப்போம். உதவுவோம் என்பதை தங்கள் பிள்ளைக்கு உணர்த்த வேண்டும்.

‘பலர் இவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள். நீ தனியாக இல்லை. அச்சுறுத்தியவனே இழி செயலைச் செய்கிறான். நீ அல்ல’ என தெளிவுபடுத்த வேண்டும்.

இவ் விடயத்தில் ‘கவனம் எடுத்து சிக்கலைத் தீர்க்க வேண்டிய நடவடிக்கை எடுப்பேன்’ என நம்பிக்கை அளியுங்கள். பாடசாலை ஆசிரியர், அதிபர் அல்லது பொறுப்பானவருக்கு இவ்விடயத்தை தெரியப்படுத்தி மேலும் அவ்வாறு நிகழாதிருப்பற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுங்கள்.

சில தருணங்களில் அச்சுறுத்துபவனின் பெற்றோரை அணுகுவதும் உதவலாம். ஆயினும் நீங்கள் தனியாகச் செய்வதை விட பாடசாலை சார்ந்தவர்களின் உதவியோடு அணுகுவது நல்ல பலன் தரலாம்.

இவை எல்லாவற்றிகும் மேலாக தங்கள் பிரச்சனையை உங்களிடம் சொன்னால் நீங்கள் கோபிக்க மாட்டீர்கள். தட்டிக் கழிக்கமாட்டீர்கள். அனுதாபத்துடன் அணுகுவீர்கள். ஆதரவு தருவீர்கள் என்ற நம்பி;கையை உங்கள் பிள்ளையிடம் ஏற்படுத்துங்கள்.

இவ்வாறு செய்து குழந்தையிடமிருந்த அச்சத்தை விரட்டினால் அடிக்கடி தலையிடியும் வயிற்று வலியும் அணுகாது உங்கள் குழந்தைக்கு.

பாடசாலைக்கு கட் அடித்தல் இனி அதற்கு இல்லை. இல்லவே இல்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.00.0.0

Read Full Post »

தூசணம் எனப்படும் கெட்ட வார்த்தைகளை மற்றவர்கள் முன் உச்சரிக்க மாட்டோம். தயங்குவோம். கூச்சப்படுவோம். அது போலவே சுயஇன்பம் என்ற சொல்லையும் அது தொடர்பான விடயங்களையும் மற்றவர்கள் முன் பேசுவதற்கு நாம் தயங்குகிறோம். அதேபோல கேட்பவர்களும் அருவருப்பு அடைவார்கள்.

Feeling-Guilty

அவ்வாறு பேசப்படாததன் காரணமாக எத்தனை இளம் வயதினர் தங்கள் பிரச்சனைகளை வெளிப்டையாகச் சொல்ல முடியாது தங்களுக்குள் மறுகுவதும் குற்றவுணர்வுடன் சோர்ந்து இருப்பதும் உங்களுக்குத் தெரியுமா? தங்கள் திருமண வாழ்வு, எவ்வாறு அமையும், மனைவியைத் திருப்திப்படுத்த முடியுமா, குழந்தைப் பாக்கியம் கிட்டுமா என்றெல்லாம் பயந்து வாழ்கிறார்கள் என்பதை எத்தனை பெற்றோர்கள் அறிந்திருக்கிறார்கள்.

“ஒரு போதும் குற்றம் செய்யாதவன் முதற் கல்லைத் தூக்கட்டும்” என்று அமுத வாக்குப் போல நானும் இவ்விடயம் பற்றி ஒரு கேள்வி எழுப்பினால் எத்தனை பேர் பின்கதவால் நழுவி ஓடுவீர்கள் என்பது தெரியவரும்.

இது பொய்யான செய்தி அல்ல. அமெரிக்காவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் 95% சதவிகிதமான ஆண்களும் 89% மான பெண்களும் தாங்கள் சுயஇன்பம் பெற்றதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் எந்த ஒரு ஆணினது அல்லது பெண்ணினது முதன் முதல் பாலியற் செயற்பாடு சுய இன்பமாகவே இருக்கும்.

masturbation

ஒருவர் தனது பால் உறுப்பைத் தானே தூண்டுதல்  செய்து (stimulate)  உணர்வெளுச்சியையும், இன்பத்தையும் அடைவதையே சுயஇன்பம் எனலாம். தனது ஆணுறுப்பையோ அல்லது யோனிக் காம்பை (clitoris)  யையோ தொடுவது, நீவி விடுவது அல்லது மஜாஜ் பண்ணுவதன் மூலம் உச்ச கட்டத்தை அடைவதையே சுயஇன்பம் என்கிறோம்.

Masturbation 1

தற்புணர்ச்சி என்ற சொல்லையும் சிலர் பயன்படுத்துகிறார்கள்.

யார்? ஏன்?

யார் யார் செய்வார்கள் என்று கேட்டால் பெரும்பாலும் எல்லோருமே செய்திருப்பார்கள். தொடர்ந்து செய்து கொண்டிருக்கவும் கூடும். இனியும் செய்யவும் கூடும். இதனை வெறுமனே இளைஞர்களை மட்டும் கருத்தில் கொண்டு சொல்கிறேன் என எண்ண வேண்டாம்.

“எனது மனைவிக்கு இயலாது. எண்டபடியால்  நான் இடைக்கிடை கைப்பழக்கம் செய்வதுண்டு. இதனால் ஏதாவது பிரச்சனை வருமா” என கதவுப் பக்கமாகப் பார்த்துவிட்டு அடங்கிய தொனியில் லச்சையோடு கேட்டார் ஒருவர்.

அவரது வயது வெறும் 70 தான் என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அவரது மனைவி பக்கவாதம் வந்து நீண்ட நாட்களாகப் படுக்கையில் கிடக்கிறா.

“இவன் படுக்கயிக்கை குஞ்சாவிலை கை போடுகிறான்”, அல்லது “குப்பறப்படுத்துக் கொண்டு அராத்துறான்” எனப் பல தாய்மார்கள் சொல்வது பாலியல் வேட்கைகள் எழும் பதின்ம வயதுப் பையன்கள் பற்றி அல்ல. பாலுறவு, செக்ஸ் போன்ற வார்ததைகளையே இதுவரை அறியாத  மூன்று நாலு வயதுக் குட்டிப் பையன்கள் பற்றியும்தான்.

“அல்லது ‘பூச்சி கடிக்கிதோ தெரியவில்லை. கைவைச்சுச் சொறியிறாள்.” என்பதையும் நாம் கேட்காமல் இல்லை.

எதற்காகச் செய்கிறார்கள்

ஏதோ ஒரு இன்பத்திறாகச் என்ற சுலபமாகச் சொல்லிவிடலாம். ஆனால் ஒரு குழந்தையானது ஆரம்பத்தில் அவ்வாறு செய்வது தனது உறுப்புகள் பற்றி அறியும் தேடல் உணர்வாகவே இருக்கும். பின்னர் அதில் ஒரு சுகத்தைக் கண்டு மீண்டும் நாட வைக்கும்.

black-white

பிற்காலங்களில் ஒருவரது பாலியல் தொடர்பான உளநெருக்கீட்டை தணிப்பதற்கான வடிகாலாக மாறிவிடுகிறது. பல்வேறு சந்தர்ப்பங்களை உதாரணம் கூறலாம்.

  • பதின்ம வயதுகளில் எழும் பாலியல் எழுச்சியைத் தீர்ப்பதற்கு எதிர்பாலினர் கிடைப்பது சாத்தியம் இல்லாமையால் தாமே தீர்த்துக் கொள்ள நேர்கிறது.
  • மாறக சில தருணங்களில் சிலர் ஒருபால் புணர்ச்சியை நாடி பாலியல் நோய்களைத் தேடி பிரச்சனைகளுக்கு ஆளாவதும் உண்டு.
  • திருமணமானவர்கள் ஈடுபடுவதற்குக் காரணம் வாழ்க்கைத் துணை அருகில் இல்லாமையாகவோ அவரது துணையின் நாட்டமின்மையாகவோ இருக்கலாம்.
  • அதே போல கர்ப்பமாவதைத் தவிர்ப்பதற்காகவும் செய்கிறார்கள்.
  • பாலியல் தொற்று நோய்கள் அணுகாவண்ணம் தம்மைக் காப்பதற்கான பாதுகாப்பான உறவுமுறையாவும் கைக்கொள்ளவும் கூடும்.

சில தேவைகளுக்காகவும் ஆண்கள் இதைச் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

  • உதாரணமாக குழந்தைப் பேறற்ற தம்பதியினருக்கான பரிசோதனைகளின் அங்கமாக விந்துப் பரிசோதனை (seminal fluid analysis) செய்வதற்கு இது அவசியம்.
  • அதே போல குழந்தைப் பேறற்றவர்களுக்காகு உதவுவதற்காக விந்துதானம்(Sperm donation) செய்ய வேண்டிய நியையும் கூறலாம்.

தப்பில்லையா?

ஒரு காலத்தில் சுயஇன்பத்தை பாலியல் வக்கிரம் அல்லது முறை தவறிய பாலுணர்வு அல்லது இயற்கைக்கு மாறான பாலியற் செயற்பாடாகவே கருதினார்கள். ஒருவித மனநோயாகக் கருதிய காலமும் உண்டு.

ஆனால் சுயஇன்பம் என்பதை இப்பொழுது இயல்பான, இன்பம் பயக்கும், ஆரோக்கியமான ஒரு பாலியல் செயல்பாடாகவே கருதுகிறார்கள். மருத்துவ ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்கத்தக்க, மனநிறைவைத் தரும் செயற்பாடாகாவே கொள்ளப்படுகிறது. பாதுகாப்பானதும் கூட. வாழ்நாள் முழுவதும் செய்வதிலும் தப்பில்லை.

ஆனால் இச் செயற்பாடு காரணமாக அவரது வாழ்க்கைத் துணையுடனான பாலுறவு பாதிப்படையுமானால் அது ஒரு பிரச்சனையாக உருவெடுக்கலாம். ஆயினும் புரிந்துணர்வுள்ள துணையானவர் இதைத் தவறானதாகவோ கேவலமானதாகவோ கருதி இழிவு செய்யமால் தன்னுடனான பாலுறவைத் தடுக்க முற்படாவது வி;ட்டால் பிரச்சனை தோன்றாது. மாறாக ஒரு சில தம்பதியினர் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர சுய இன்பம் பெறு உதவுவதும் உண்டு.

பொது இடங்களில் அதைச் செய்ய முற்பட்டால் சமூகரீதியான பிரச்சனைகள் எழ வாய்ப்புண்டு.

மிதமான அளவில் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தாலும் உடல் நலக் கேடு ஏற்பட வாய்ப்பில்லை.

  • ஆனால் தனது விருப்பத்திற்கு மாறாக அவரது நாளாந்த செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாதவாறு சுயஇன்பம் செய்யவது தவிர்க்க முடியாதது ஆனால் சிக்கல்கள் தோன்றலாம். அத் தருணத்தில் உளவளத் துணையை (counselling)  நாட நேரும்.

பெரும்பாலான சமூகங்கள் சுயஇன்பத்தை வெளிப்படையாக ஏற்பதில்லை. சில கண்டிக்கவும் தண்டிக்கவும் கூடும். மதரீதியான தடைகளும் உள்ளன. இது ஒரு பாவச் செயல் என்று மதரீதியாக சொல்லப்படுவதால் குற்ற உணர்விற்கு ஆளாபவர்கள் பலர்.. இதனால் வெட்கத்துககு; ஆளாவதுடன் தன் சுயமதிப்பை இழக்கவும் நேரும்.

தவறான கருத்துகள்

சுயஇன்பம் பற்றிய பல தப்பான கருத்துகள் மக்களிடையே ஆழப் பரவி இருக்கின்றன. அவை ஆதரமற்றவை. அத்துடன் இத்தகைய கருத்துக்கள் அதில் ஈடுபடுபவர்களை மன உளைச்சலுக்கும் ஆளாக்குகிறன.

  • சுயஇன்பம் செய்பவர்கள் சாதாரண பாலுறவிற்கு லாயக்கறவர்கள, தாங்களும் அதில் நிறைவு காண முடியாது. பாலியல் துணைவரைத் திருப்திப்படுத்தவும் முடியாது என்பது தவறாகும்.
  • சுயஇன்பம் செய்பவர்கள் கேவலமானவர்கள், சமூக ரீதியாக ஏற்கபடக் கூடாதவர்கள், ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்பது முற்றிலும் தவறு.
  • கால ஓட்டத்தில் அவர்களது பாலியல் செயற்பாடு வீரியம் குறைந்து விடும் என்பதும் தவறானதே.
  • இதனால் ஒருவரது முடிகொட்டும், உடல் மெலியும் பலவீனமடையும் என்பவையும் தவறான கருத்துக்களே. உள்ளங் கைகளில் இதனால் முடி வளருமாமே என அறியாமையால்  பயப்படுபவர்களும் உள்ளார்கள்.
  • தொடர்ந்து செய்தால் விந்து வத்திப் போகும். விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் ஆண்மைக் குறைபாடு ஏற்படும் போன்ற யாவும் தவறானவை.
  • சுயஇன்பம் செய்பவர்கள் ஒரு வகை மனநோயளர்கள் என அல்லது அவர்களுக்கு மனநோய் எதிர்காலத்தில் வரும் என்பதெல்லாம் தவறான நம்பிக்கைகளாகும்.

விடுபட விரும்பினால்

625px-Stop-a-Masturbation-Addiction-Intro

இது தப்பான காரியம் அல்ல என ஏலவே சொன்னோம். ஆயினும் இது ஒரு போதை போலாகி அதைவிட முடியாமல் அதிலியே மூழ்கிக் கிடந்தால், வாழ்க்கையானது சேற்றில் சிக்கிய வண்டிபோல முன்னேற முடியாது முடங்கிவிடும்.

அத்தகைய நிலையில் ஒருவர் செய்ய வேண்டியவை எவை?

  • சுயஇன்பத்தைத் தேடவேண்டிய அவசியம் எத்தகைய நேரங்களில் வருகிறது என்பதை அடையாளங் காணுங்கள். ஆபாசப்படங்கள் பார்ப்பதைத் தவிருங்கள். தனிமை, பொழுது போக்கின்மை, போன்றவை அணுகாமல் தவிருங்கள். சுயஇன்பத்தைத் தூண்டுகிற நண்பர்களின் உறவைத் தள்ளி வையுங்கள்.
  • உற்சாகமும் மகிழ்ச்சியும் தரக் கூடிய வேறு நடவடிக்கைகளால் உங்கள் பொழுதுகளை நிறையுங்கள்.
  • இசை, எழுத்து, ஓவியம், இசை வாத்தியங்கள், போன்ற ஏதாவது ஒரு படைப்பூக்கம் தரும் செயற்பாட்டில் முழுமையாக மனதைச் செலுத்துங்கள்.
  • கால்பந்தாட்டம், துடுப்பாட்டம் உடற் பயிற்சி, போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். யோகாசனம் போன்றவை உடலுக்கும் உள்ளத்திற்கும் நலத்தைத் தரும்.
  • பழவகைகளும், காய்கனிகளும் நிறைந்த ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்ளுங்கள்.
  • ஏதாவது சமூகப்பணிகளில் ஈடுபடுவது உங்கள் மனதைத் திசைதிருப்பும். வறிய மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் கொடுப்பது போன்ற ஏதாவது பணியில் ஈடுபடலாம்.

எனது ஹாய் நலமா புளக்கில் ஏற்கனவே வெளியான கட்டுரை

பாலியல் தொடர்பான எனது முன்னைய பதிவுகள்

ஆண்மைக் குறைபாடு
திருமணத்திற்கு முன்
விந்து முந்துதல்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.

Read Full Post »

‘என்ன செய்யிறது என்றே புரியவில்லை. எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. வயது 40ஆகுதென்று சும்மா ஒரு மெடிக்கல் செக்கப் செய்து பாப்பம் என்று போனன். அவையள் எனக்கு பித்த பையில் கல்லு எண்டு சொல்லுகினம்’ என்று சொன்னார்.

gallstones

‘ஓண்டும் செய்ய வேண்டாம். போசாமல் இருங்கோ’ என்று நான் சொன்னதும் ஆச்சரியரியப்ட்டார்.

பித்தப் பை என்பது எமது ஈரலுக்கு சற்றுக் கீழே வலது புறமாக இருக்கும் பியர்ஸ் பழம் போன்ற தோற்றத்தை உடைய ஒரு சிறிய பையாகும். இது ஈரலில் சுரக்கும் பித்த நீரை சேமித்து வைத்திருந்து சமிபாட்டு வேளைகளில் உணவுக் கால்வாயிற்குள் செலுத்தும் பணியை ஆற்றுகிறது.

பித்தக் கற்கள்

இந்தப் பித்தப் பையிற்குள் உள்ள திரவமான பித்த நீரில் கல்லுப் போல படிவுகளாக உருவாவதுதான் பித்தக் கற்களாகும்.

Gallbladder_1

சிறுமணல் அளவிலிருந்து பெரிய பந்து வரையாக இதன் அளவு வேறுபடலாம். சிலருக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டதாக பல கற்கள் உருவாகும். இருந்தபோதும் பித்தக் கற்கள்  பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாமல் வாளாதிருக்கும். வேறு தேவைகளுக்காக ஸ்கான் பரிசோதனை அல்லது சிடி ஸ்கான் போன்ற பரிசோதனைகள் செய்யப்படும்போதே பெரும்பாலும் இவை இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறன.

மேற் கூறிய நபர் சாதாரண செக்அப்பிற்கு சென்ற போது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதை ஏற்கனவே சொல்லியிருந்ததை நினைவுபடுத்துங்கள்.

அறிகுறிகள்

அவ்வாறானால் பித்தப்பையில் கல்லிருந்தாலும் வெளிப்படையாக எந்த அறிகுறிகளும் இருக்காதா, பிரச்சனைகள் ஏதும் ஏற்படாதா என்று கேட்பீர்கள். சாதாரணமாக எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்தாது பேசாமல் கிடக்கும். ஆனால் அவற்றால் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் மட்டுமே அறிகுறிகள் தோன்றும்

Gallbladder_1

அந்தக் கற்கள் பித்தப் பையிலிருந்து வழுவி பித்தக் குழாய்களுக்குள் சென்று அதை அடைத்து நின்றால் அல்லது பித்தப்பையில் கிருமித் தொற்று ஏற்பட்டால் வலி ஏற்படும்.

இருந்தபோதும் வயிற்றில் தோன்றும் வலிகள் எல்லாமே பித்தக் கற்காளால் ஏற்படுபவை அல்ல என்பது தெரிந்ததுதானே. இதன் வலி பிரத்தியேகமானது. திடீரென ஏற்பட்டு மிகக் கடுமையாக வேதனை ஏறிச் செல்லும். இவ் வலியானது பொதுவாக வயிற்றறையில் வலது புறமாகத் தோன்றும்.

சில வேளை நடுவயிற்றிலும் நெஞ்செலும்புக் கூட்டின் அருகாகவும் அத்தகைய கடும் வலி தோன்றுவதுண்டு. இன்னும் சிலருக்கு வயிற்றில் வலிக்காது ஆனால் பிற்புறமாக தோள்மூட்டு சீப்புகளுக்கு இடையில் வலிக்கலாம். வலது தோள் மூட்டில் வலியெடுப்பதும் மட்டும் உண்டு. நோய் ஓரிடத்தில் இருக்க வலி வேறு இடத்தில் பிரதிபலிப்பதை தொலைவிட வலி (Referred pain) எனச் சொல்வார்கள்.

வலியானது பொறுக்க முடியாததாக இருப்பது மட்டுமின்றி நடந்து திரிவதாலோ வயிற்றை அழுத்திப் பிடிப்பதாலோ, படுக்கையில் கிடப்பதாலோ தணிவதில்லை. ஒரு சில நிமிடங்கள் முதல் ஒரு சில மணிநேரம் வரை இந்த வலியானது நீடிக்கக் கூடும். சிலருக்கு வலியுடன் வாந்தியும் சேர்ந்து வருவதுண்டு.

பித்தப்பையில் கல்லிருப்பதுடன், கிருமித் தொற்றும் ஏற்பட்டிருந்தால் கடுமையான காய்ச்சல் நடுக்கத்துடன் வருவதுண்டு. ஒரு சிலருக்கு சிறுநீர் கடுமையான மஞ்சள் நிறத்தில் கழிவதுடன், கண்களிலும் மஞ்சள் நிறம் படரலாம்.

பித்தக் கற்கள் தோன்றக் காரணம் என்ன?

பித்தக் கற்கள் ஏன் தோன்றுகின்றன என்பதற்கு சரியான காரணங்கள் தெரியாது. ஆயினும் பல விடயங்களைச் சந்தேகிக்கிறார்கள்.

ஒருவரது பித்த நீரில் கொலஸ்டரோல் அளவானது வழமையை விட அதிகம் இருந்தால் பித்தக் கற்கள் தோன்றலாம். பொதுவாக ஈரலானது எமது குருதியில் உள்ள கொலஸ்டரோலை உறிஞ்சி பித்த நீர் ஊடாக வெளியேற்றுகிறது. அவ்வாறு பித்தத்தில் கலக்கும் கொலஸ்டரோலின் அளவு வழமைபோலிருந்தால் அது பித்த நீரில் கரைந்து சுலபமாக வெளியேறிவிடும். ஆனால் அதன் செறிவு அதிகமாக இருந்தால் கட்டிபட்டு கற்களாக மாறுகிறது என்கிறார்கள்.

அதேபோல நாளந்தம் சிதைவடையும் செங்குருதிக் கலங்களை ஈரல் பிரித்து பிலிரூபின் (டீடைசைரடிin) ஆக வெளியேற்றுகிறது. சில நோய்கள் காரணமாக (ஈரல்சிதைவு, குருதி நோய்கள், பித்க்குழாயில் கிருமித் தொற்று) செங்குருதிக் கலங்கள் அதிகளவில் சிதைந்தால் அதன் செறிவு பித்த நீரில் அதிகரிக்கும். அதனாலும் கற்கள் தோன்றலாம்.

அதேபோல பித்தப் பையால் இருக்கும் பித்த நீரை உணவுக் கால்வாயிற்குள் வெளியேற்றும் பொறிமுறையில் (கல் கட்டி போன்றவற்றால்) தடங்களல் ஏற்பட்டாலும் பித்தக் கற்கள் தோன்றும் வாய்ப்புண்டு.

கொலஸ்டரோலால் அதிகரிப்பால் தோன்றும் பித்தக் கற்கள் மஞ்சள் நிறமாகவும், பிலிருபின் அதிகரிப்பதால் உண்டாகும் கற்கள் கருமையாகவோ கடும் பிரவுண் நிறமாகவோ இருப்பதை இவ்விடத்தில் சொல்லது பொருத்தமாக இருக்கும்.

யாருக்கு வரும்

பித்தக் கற்கள் ஏன் ஏற்படுகின்றன என்பது பற்றி துல்லியமாகக் கூறமுடியாத போதும் யார் யாருக்கு வரக் கூடும் என்பதையிட்டு கள ஆய்வுகள் சில காரணங்களைத் தெரியப்படுத்துகின்றன.

பொதுவாக ஆண்களை விடப் பெண்கள் அதிகமாகப் பாதிப்படைகிறார்கள். வயதில் மூத்தவர்கள் அதாவது 60 வயதைத் தாண்டியவர்களில் அதிகம் ஏற்படுகிறது என சொல்லப்பட்ட போதும் குறைந்த வயதினரிடையேயும் தோன்றலாம்.

உணவு முறையைப் பொறுத்த வரையில் நார்ப்பொருள் குறைந்த, கொழும்பும் கொலஸ்டரோலும் அதிகமுள்ள உணவு வகைகளை உண்பவர்களிடையே தோன்றுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

நீரிழிவு நோய் உள்ளவர்களிடையேயும் அதிகமாகக் காண்கிறோம். அதே போல ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடையேயும் அதிகம் காணப்படுகிறது. கரப்காலத்திலும் சாத்தியம் அதிகமாகும். நோய்கள் காரணமாகவோ அல்லது எடை குறைப்பு முயற்சியின் போது திடீரென அதிகளவு எடையைக் குறையும் போதும் தோன்றலாம்.

சிகிச்சை

‘ஓண்டும் செய்ய வேண்டாம். போசாமல் இருங்கோ’ என்று ஆரம்பத்தில் சொன்னது வேறு எந்தப் பிரச்சனைகளும் இல்லாமல் தற்செயலாக பரிசோதனைகளின் போது கண்டுபிடிக்கபட்ட பித்தப்பை கற்கள் உள்ளவர்களுக்கு பொருந்தும். பெரும்பாலனவர்கள் அத்தகையவர்களே. ஆயினும் கடும் வலி அல்லது கிருமித் தொற்று போன்றவை ஏற்பட்டால் மேலதிக சிகிச்சை தேவைப்படும்.

பித்தப் பையை அகற்றல்

கற்களால் பிரச்சனை ஏற்படகிறது எனில் அதற்கான சிகிச்சை

பித்தப்பை அகற்றல்தான்.

‘ஏன் சலக் குழாய் கற்களை உடைத்து வெளியேற்றுவதுபோல இதையும் அகற்ற முடியாதா’ என ஓரளவு விடயம் புரிந்தவர் என்னிடம் கேள்வி எழுப்பினார். உடைத்து வெளியேற்றினாலும் இவை மீண்டும் மீண்டும் வரக் கூடியவை. என்பதால் அகற்றுவதே உசிதமானது.

GetImage.aspx

அத்துடன் பித்தப் பை என்பது ஒரு அத்தியாவசிய உறுப்பு அல்ல. அது அகற்றப்பட்டாலும் எந்தவித பிரச்சனைகளும் இன்றி வாழ முடியும். வழமையாக பித்த நீரானது பித்தப் பையில் சேகரித்து வைக்கப்பட்டு உணவுக் கால்வாயில் வெளியேற்றப்படுகிறது. ஆனால் பித்தப்பையை அகற்றியவர்களில் அது ஈரலிலிருந்து நேரடியாக உணவுக் கால்வாயை அடைகிறது. இதனால் சிக்கல்கள் எதுவும் ஏற்படுவதில்லை. ஒரு சிலருக்கு மட்டும் பித்தப் பையை அகற்றிய சில காலத்திற்கு மலம் சற்று இளக்கமாக வெளியேறும். அப் பிரச்சனையும் சிலகாலத்தில் தானாகவே மாறிவிடும்.

மருந்துகள் உதவுமா?

‘பித்தக் கற்களை கரைக்க முடியும்’ எனப் பத்திரிகைகளில் இயற்கை வைத்தியர்கள் விளம்பரம் போடுகிறார்களே. ..’ என ஆரம்பி;த்தார். ‘ஆங்கில மருத்துவத்திலும் கரைக்க வழி இருக்கு. ஆனால் அதன் மூலம் கரைக்க மாதக்கணக்கில் காலம் செலவாகும். உணவுக் கட்டுப்பாடுகளும் அதிகம். மருந்துகளால் கரையாத கற்களும் உண்டு. எனவேதான் சத்திரசிகிச்சையை சிபார்ச்சு செய்கிறார்கள். அதுவும் கட்டாயம் தேவையானவர்களுக்கு மாத்திரம்’ என விளக்கினேன்.

பித்தக் கற்கள் தோன்றாமல் தடுக்க முடியுமா?

பித்தக் கற்கள் ஏன் வருகின்றன என்பது பற்றி தெளிவான முடிவுகள் இல்லை. இருந்தபோதும் சில நாளாந்த வாழ்க்கை முறை நடவடிக்கைக் கடைப்பிடிப்பதால் இத்தகைய கற்கள் தோன்றுவதற்கான சாத்தியத்தைக் குறைக்க முடியும்.

உணவுகளை வேளை தவறாமல் உண்ணுங்கள். நீண்ட நேரம் பட்டினி கிடப்பதும், உணவுகளை சில வேளைகளில் தவிர்ப்பதும் உபவாசம் இருப்பதும் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

எடை குறைக்கும் முயற்சியில் இறங்கினால் அதைப் படிப்படியாகச் செய்யுங்கள். வாரத்தில் ஒரு கிலோவிற்கு அதிகம் குறைப்பது கூடாது.

உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையைப் பேணுங்கள். கலோரி அளவு குறைந்த, நார்ப்பொருள் அதிகமான போசாக்கான உணவு முறையும், தினசரி உடற் பயிற்சியும் எடையைப் பேண உதவும்.

‘என்ன நோயைச் சொன்னாலும் இந்த டொக்டர்மார் உடற் பயிற்சி செய்யுங்கள், எடையைக் குறையுங்கள், கொழுப்பைக் குறையுங்கள் என்றுதான் சொல்லுகினம்’ எனப் புறுபுறுக்கிறீர்களா? என்ன செய்வது உடல் ஆரோக்கியத்தைப் பேண இவற்றைத் தவிர வேறு நல்ல வழிகள் கிடையாதுதான்.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.00.0.0

Read Full Post »

ஒரு மனிதன் தந்தையாவதற்கு ஏற்ற வயது என்ன?

எனது பாட்டா அப்பாவாகும்போது வயது 18 வயது மட்டுமே. எனது அப்பா 23 வயதில் அப்பாவானார். அப்பாவாகும்போது எனக்கு 32 வயதாகிவிட்டது.

இன்றைய இளைஞர்களுக்கு இன்னமும் அதிக காலம் தேவைப்படுகிறது. நல்ல கல்வி, போதிய வருவாயுள்ள வேலை, புதிய மணவாழ்வில் சற்றுக் காலம் தொல்லையின்றி உல்லாச வாழ்வு. இவற்றையெல்லாம் முடித்துக் கொண்டு குழந்தை பெறுவதையிட்டு சிந்திக்கத் தொடங்குவதற்கு காலதாமதமாகி விடுகிறது இன்றைய இளைஞர்களுக்கு.

Man Holding Up an Infant

வயது அதிகரிப்பும் அப்பாவாதலும்

மேலும் முதிர்ந்த வயதில் அப்பாவாகும் பலர் மேலை நாடுகளில் இருக்கிறார்கள். வேலைப் பளு, இரண்டாவது தரம் மூன்றாவது தரம் என மணம்முடித்தல் போன்ற காரணங்களால் அங்கு தந்தையாவது தாமதமாகிறது பலருக்கு.

Father 2

இருந்போதும் இன்னமும் பெரும்பாலானவர்கள் 20 முதல் 34 வயதிலேயே அங்கும் அப்பாவாகிறார்கள். ஆனால் 1980 ற்கும் 2002 ற்கும் இடைப்பட்ட காலத்தில் முதிர்ந்தவர்கள் அப்பாவாகும் தொகை அதிகரிக்க ஆரம்பித்தது. 40 – 44 வயதிற்கும் இடையில் 32 சதவிகிதத்தாலும், 45 – 49 வயதிற்கும் இடையில் 21 சதவிகிதத்தாலும், 50 – 54 வயதிற்கும் இடையில் 9 சதவிகிதத்தாலும் அதிகரிப்பதாக அமெரிக்க National Vital Statistics Report கூறுகிறது. புதிய தரவுகள் மேலும் அதிகரித்திருக்கும் என நம்பலாம்.

யார் சரி

என் பாட்டா செய்தது சரியா அல்லது இன்றைய தலைமுறையினர் செய்வது சரியா?

நவீன விஞ்ஞான ஆய்வுகள் பாட்டாக்களின் பக்கம் நிற்கிறது.
40 வயதுகளை எட்டும் ஒரு மனிதனது விந்துவின் தரமானது 20 வயதுகளில் இருந்ததைத் போலிருப்பதில்லை.

அவர்களது மரபணுக்களில் பிறழ்வுகள் (genetic mutations) ஏற்படுகின்றன. இவை அவரது வாரிசுகளைச் சென்றடையப் போகின்றது என்பதையிட்டு விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

Fathering old age

ஐஸ்லண்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இன்னமும் சற்று விபரமாகச் சொல்கிறார்கள். Autism or Schizophrenia ஆகிய பாதிப்புள்ள குழந்தைகள் உருவாவதற்கு 40 வயதுடைய ஒருவர் தன்னிலும் ½ மடங்கு வயதுடையவரைவிட இரண்டு மடங்கு அதிகமாக காரணமாகிறார்கள் என்கிறது.

ஓட்டிசம்

ஓட்டிசம் என்பது குழந்தையை மட்டுமின்றி முழு குடும்பத்தின் நிம்மதியையும் தொலைக்கக் கூடிய சிக்கலான நோயாகும். இவர்கள் ஏனைய குழந்தைகள் போலவே பிறந்து வளர்வார்கள். இரண்டு மூன்று வயதாகும்போதே இக்குழந்தையில் ஏதோ பிரச்சனை உள்ளது என பெற்றோருக்கு புரிய ஆரம்பிக்கும்.

autism-detection-voice

இவர்கள் உள, மொழி மற்றும் செயலாற்றல் குறைந்த குழந்தைகளாகும்.

  • கற்பனையுடன் விளையாடும் ஆற்றல் (Pretend play) குறைந்தவர்களாக இருப்பார்கள். உதாரணமாக ஒரு கரடிப் பொம்மையை அல்லது பிளேன் பொம்மையை வைத்து கற்பனைத் திறனுடன் விளையாடும் ஆற்றல் இருப்பதில்லை.
  • தாய் தந்தை, சகோதரங்கள் ஏனையோருடன் ஊடாடும் திறன் (social interaction)    இவர்களிடம்  இருப்பதில்லை. 
  • வாய் மொழியாலும், செய்கைகளாலும் தனது தேவைகளையும் உணர்வுகளையும் மற்றவர்களுக்கு உணர்த்தும் திறன் (Verbal and nonverbal communication) இருப்பதில்லை.

parenting-a-child-with-autism

இவற்றால் ஏற்படும் தனது இயலாமையால் முரட்டுக் கோபம், பொருட்களைப் போட்டு உடைத்தல், மற்றவர்களை அடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். உண்மையில் குழந்தையின் நிலையை விட இவர்களை பராமரிக்கும் பெற்றார்களின் நிலையே பரிதாபமானது. இதைக் குணப்படுத்த மருந்துகள் இல்லாததால் அதற்கான விசேட பள்ளிகளில் சேர்த்தே அவர்களது நிலையை மேம்படுத்த முடியும்.

இத்தகைய பிள்ளைகள் பிறப்பது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் Centers for Disease Control and Prevention அறிக்கையின் பிரகாரம் பிறக்கும் 1000 பிள்ளைகளில் 11.3 பிள்ளைகள் ஓட்டிசம் தொடர்புடைய அறிகுறிகளுடன் இருப்பதாக கணித்துள்ளார்கள். இலங்கையிலும் அண்மைக் காலங்களில் இத்தகைய குழந்தைகளை முன்னரை விட அதிகம் காண முடிகிறது.

மனப் பிறழ்வு Schizophrenia

மற்றொரு நோயான மனப் பிறழ்வு ஏற்படுவதற்கும் ஓட்டிசம் போலவே, வயது அதிகமான தந்தையர் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சூழல். பரம்பரை அம்சங்களும் காரணமாகலாம். மாயத் தோற்றங்கள், மாய ஒலிகள் உள்ளடங்க எண்ணம், செயல்களில் தெளிவற்ற தன்மையுடைய  மனக்கோளாறு இதுவாகும்.

schizophrenia1-300x240

பதின்மங்களில் அல்லது கட்டிளம் பருவத்தின் ஆரம்பத்திலேயே இதன் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும். முற்றிலும் குணப்படுத்த முடியாத போதும் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய மருந்துகள் தற்போது உள்ளன. இதனால் முன்னைய காலங்களில் தனக்குத்தானே பேசிச் கொண்டு அழுக்கு நிறைந்த உடைகளுடனும், குளித்து மாதக்காக நாற்றத்துடனும் வீதிகளில் ‘விசரன்’ என்ற பெயரோடு அலைந்து திரிபவர்களைக் காண்பது குறைந்து போயிற்று.

நோயாளியை மட்டுமின்றி குடும்பத்தையும் சமூகத்தையும் அதிகளவில் பாதிக்கிற நோயாக இதுவும் இருக்கிறது.

அம்மாக்கள்

அப்பாக்கள் இப்பொழுதுதான் இத்தகைய பிரச்சனைக்கு முகம் கொடுக்கிறார்கள். ஆனால் பெண்கள் பல காலமாகவே இளவயதில் தாய்மை எய்தாமைக்காக குற்றம் சாட்டப்படுகிறார்கள். காலம் தாழ்த்தி தாய்மை எய்தினால் Down syndrome போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகள் உருவாகலாம் என்பது பலகாலமாக அறியப்பட்ட செய்தியாகும்.

down-syndrome-smile-baby-kid-child-640x480

பெற்றோராகும் வயததை; தீர்மானிப்பதில் சமூகத்தின் தாக்கங்கள் இருந்தபோதும் இன்றைய சூழலில் பெண்கள் பிந்திய பதின்மங்களிலோ, 20களின் ஆரம்பங்களிலோ குழந்தை பெறுவது சாத்தியமற்றுப் போகிறது. ஏனெனில் இன்றைய பல பெண்களும்  பொருளாதார ரீதியில் தமது காலில் நிற்பதையே விரும்புகிறார்கள். கல்வியை முடித்து தொழில் தேட 30 வயதைத் தாண்டிவிடுகிறது.

‘நேர காலத்தோடு பிள்ளையைப் பெறு இல்லையேல் குறைபாடுடைய குழந்தை கிடைக்கலாம்’ என பெண்கள் மீது ஆண்கள் சுமத்திய அதே குற்றச்சாட்டை இன்று பெண்கள் ஆண்கள் மீது திருப்பியடிக்க முடிகிறது.

குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளிவிட்டு உயிரியல் ரீதியாகச் சிந்தித்தால் ஆண்களும் சரி பெண்களும் சரி பிள்ளை பெறுவதை ஒரு தசாப்த காலம் முன்தள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது. மேலைநாடுகளில் இது பெண்களில் முப்பதுகளின் பிற்கூறும், ஆண்களில் 40க்கு மேலுமாகி விடுகிறது.

இருந்தபோதும் காலக் கடிகாரத்தின் டிக் டிக் ஓசை பெண்களையே அதிகமாக விரட்டித் தொலைக்கிறது. இதனால் பெண்களே அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இது அவர்களது கருத்தங்கும் ஆற்றலுடன் (fertility) சம்பந்தப்பட்டது. 30வயதின் எல்லையை அண்மித்து 40வயதை தாண்டும்போது அவர்களது கருத்தரிக்கும் ஆற்றல் நலிவடையத் தொடங்குகிறது.

ஆண்களின் முகத்தில் அடி

older-parents

ஆனால் ஆண்கள் நிலை அவ்வாறில்லை. ஒரு குழந்தைக்கு அப்பனாகும் நேரத்தை அவனே தீர்மானிக்கக் கூடியவனாக இருக்கிறான். அல்லது சூழலின் பாதிப்புகளால் அது நிகழலாம். ஆனால் உயிரியல் நியதியாக (biological determinism ) ஒருபோதும் இருப்பதில்லை. உதாரணங்கள் Rupert Murdoch had a child at 72, Saul Bellow at 84, Les Colley, an Australian miner, at 92.

  •  ‘தன்னால் எப்பொழுதும் முடியும்’ என இறுமாந்திருந்த ஆண்களுக்கு விஞ்ஞான உண்மைகள் முகத்தில் அடிப்பது போலானது என்பதில் சந்தேகம் இல்லை.
  • அப்படியில்லாவிடினும் அவனது மனச்சாட்சியை உலுப்பக் கூடியதாகவே இருக்கிறது. ‘குழந்தைக்கு அப்பனாகும் காலத்தைத் தான்  தள்ளிப்போடுதல் தன்னளவில் சௌகரியமானபோதும் அது தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் உடல்நலத்தை அதன் வாழ்நாள் முழுவதும் பாதிக்கலாம்’  என்ற எண்ணம் மனித இனத்தின் சரித்திரத்தில் முதல் முதலாக அவன் முன் எழுந்து நிற்கிறது.

வயதான பெண்கள் அனைவரும் இப்பிரச்சனைக்கு ஏற்கனவே முகம் கொடுத்துக் கொண்டிருப்பது தெரிந்த விடயமே. அவர்கள் தமது வசதிகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப விட்டுக் கொடுப்புகளுடன் சமாளிக்கத் தெரிந்திருக்கிறார்கள்.
இப்பொழுது ஆண்கள் அவர்களது பாதையைப் பின் பற்ற வேண்டியதுதான்.

மாற்றுச் சிந்தனைகள்

விஞ்ஞான முடிவுகள் வேறுவிதமாக இருந்தபோதும், தந்தையாகும் காலத்தை பின்போடுவதில் அனுகூலங்கள் இருக்கின்றனவா?

20 வயதில் இருந்ததைவிட 40 வயதாகும்போது மரபணுக்களில் பழுதுகள் ஏற்படக் கூடுமாயினும், ஆண்களின் வாழ்க்கை முறைகளில், பழக்கவழக்கங்களில், மற்றவர்களுடனான தொடர்பாடல் முறைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அவசரமும் பதற்றமும் அடங்கி அமைதி வருகிறது. கோபம் பொறாமை அடங்கிப் பொறுமை அதிகரிக்கின்றது. போட்டி வாழ்வின் வேகமும் அதீத எதிர்பார்ப்புகளும் தளர்கின்றன.

இம் மாற்றங்கள் ஆண்மை வீரியத்தின் தளர்முகத்தைக் குறிக்கின்றபோதும், நல்ல தந்தைக்கு வேண்டிய குணாதிசயங்களுக்கும் வழிவகுக்கின்றன. அவசரக் கோபங்கள் அடங்கிப் புரிந்துணர்வு வளர்வதால் குழந்தையை ஆதரவோடு அணைத்து வளர்க்க முடிகிறது.

20களிலும் முப்பதிகளிலும் இருந்ததைவிட 40களை அணுகும்போது தந்தைதுவப் பண்புகள் மெருகேறுகின்றன.
மற்றொரு விடயம் பொது நலம் சார்ந்தது.

நீங்கள் இளவயதில் தந்தையானால் உங்கள் வாரிசும் விரைவில் பெற்றோர்ஆவதற்கான சாத்தியம் அதிகம். நீங்கள் சற்றுக் காலம் தாழ்த்தி தந்தையானால் அவர்கள் பெற்றோராவது பிந்தும். சற்று விளக்கமாகச் சொன்னால். வயது 40 களில் இருக்கும் உங்களுக்கு மகன் ஆரம்பப் பள்ளியில் கற்கிறான் என வைப்போம், ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் சொல்வதுபோல நீங்கள் இளவயதிலேயே மணமுடித்திருந்தால் உங்கள் மகன் இப்பொழுது பிரசவ அறையில் மனைவிக்கு துணையாக நின்றிருப்பான். அதாவது உங்கள் குடும்பத்தில் அடுத்த தலைமுறையும் வந்திருக்கும்.

இன்று உலகில் சனத்தொகை பெருகும் வேகத்திற்கு உங்கள் பங்களிப்பும் இருந்திருக்கும். அந்த வகையிலும் பிந்திய வயதில் தந்தையாதல் சனத்தொகை வளர்வதை உலகளாவிய ரீதியில் கட்டுப்படுத்த முடியும்.

குழந்தையைப் பெறுவதிலும் வளர்ப்பதிலும் பழுதடைந்த மரபணுக்கள் என்பது தந்தையின் பங்களிப்பில் ஒரு சிறிய அம்சமே. இருந்தபோதும் மிகவும் முதிர்ந்த வயதில் தந்தையாவதும் நல்லதல்ல. ஏனெனில் குழந்தையின் தலையில் பழுதான மரபணுக்களைச் சுமத்துவது மாத்திரமின்றி வளர்தெடுப்பதிலும் வழிநடுத்துவதிலும் சிக்கல்கள் ஏற்படும்.
நோயும் பிணியும் ஏன் மரணமும் கூட தந்தையின் பங்களிப்பை தடுத்து நிறுத்தலாம்.

விஞ்ஞானமா சமூகக் கடப்பாடுகளா என்ற எதிர் முரணான தேர்வுகளுக்கு இடையில் மனிதன் சிக்கி நிற்கிறான்.
தெளிவான விடையில்லை.

பகுத்தறிவின் துணையோடு தனக்கு ஏற்ற தெரிவைத் தானே தேர்ந்தெடுக்கத்தான் இன்றைய நிலையில் முடியும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்

எனது ஹாய் நலமா புளக்கில் நீங்கள் அப்பாவாவதற்கு உகந்த வயது எது?  எழுதிய  கட்டுரை

0.0.0.0

Read Full Post »

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
மிக மகிழ்ச்சியாக இருக்கிறது
வேர்ட் ப்ரஸ் அனுப்பிய வருடாந்த அறிக்கையைப் பார்த்தபோது
நண்பர்கள் காட்டிய ஆதரவு அதிசயிக்க வைக்கிறது
ஒரு வருடத்தில் 59 பதிவுகள் அதைப் படித்திவர்கள் 130,000
மொத்தப் பதிவுகள் 522
சென்ற வருடம் நவம்பர் 23ல் 1190 பேர் படித்த பதிவு முட்டையில் கொலஸ்டரோல் பற்றியது
நன்றி இனிய நண்பர்களே
இணைந்து தொடர்வோம்

The WordPress.com stats helper monkeys prepared a 2013 annual report for this blog.

Here’s an excerpt:

The Louvre Museum has 8.5 million visitors per year. This blog was viewed about 130,000 times in 2013. If it were an exhibit at the Louvre Museum, it would take about 6 days for that many people to see it.

Click here to see the complete report.

Read Full Post »

என்ன சொல்ல என்ன சொல்ல
இந்தப் புத்தாண்டில்
வருடா வருடம்
சொல்லி சொல்லி
கேட்டு கேட்டு
அலுத்தே போனது
இன்னும் என்ன
சொல்ல இருக்கு
சொல்லாததையா
சொல்லப் போறன்.

 

DSC05675-001 

கற்பனைக் கோட்டைகள்
கனவுகள் புலரும் வரை
புலர்ந்த பின்
வாழ்க்கை ஓடும்
வழமைபோல
சிரிப்புகள் அழுகைகள்
சீண்டல்கள் சினப்புகள்
நம்பிக்கைகள் அவலங்கள்
வெற்றிகள் தோல்விகள்
பெருமைகள் பொறாமைகள்
புதிதாக என்ன இருக்கிறது
எல்லாமே தொடரத்தான் போகிறது

 DSC05651-001

இருந்தும் ஒரு நம்பிக்கை
நாளை மறுநாள்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வருடமும்
புலர்வதும் பொலிவதும்
எமது கைகளில்தான்
எதிர்கொள்வோம் நம்பிக்கையுடன்
இந்த 2014 லையும்

SDC12511-001

எம்.கே.முருகானந்தன்

00.0.0.0.00

Read Full Post »