Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for பிப்ரவரி, 2014

காரிருளில் சப்தமின்றி கன்னமிடும் திருடன் போல நோயாளிக்கு எந்த வித அசுமிசமும் காட்டாது படிப்படியாகப் பார்வையைப் பறிப்பதுதான்  குளுக்கோமா நோயாகும்.

இன்று குளுக்கோமா தினமாகும். இன்று அதன் அடிப்படை விடயங்களை அறிவதற்கு ஏற்ற நாளாகும்.

உலகளாவிய ரீதியில் கண் பார்வை இழப்பிற்கு இரண்டாவது முக்கிய காரணம் குளுக்கோமாதான். முதற் காரணம் வெண் புரை என்று சொல்லப்படும் கற்றரக்ட் cataract ஆகும்.

கற்றரக்ட்டால் ஏற்படும் பார்வை இழப்பை சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். ஆனால் குளுக்கோமாவின் பார்வை இழப்பு மாற்ற முடியாதது ஆகும்.

இது கண்ணின் பார்வையைக் கொடுக்கும் பார்வை நரம்பைப் (optic nerve) பாதிப்பதால் பார்வை இழப்பைக் கொண்டுவருகிறது. நரம்பைப் பாதிப்பதால் பார்வை இழந்தால் அதை சிகிச்சைகள் மூலம் திரும்பக் கொண்டுவருவது இயலாத காரியமாகும்.

கண்ணில் உள்ள நுண்ணிய வடிகால் குழாய்கள் சற்று தடைபடுவதால் கண்ணின் திரவமான அக்வஸ் கியூமர் (aqueous humour) தேங்குகிறது.

இதனால்  கண்ணினுள் உள்ள திரவத்தி்ன அழுத்தம் (fluid pressure) அதிகரிக்கிறது. இந்த அழுத்தத்தை கண் பிரஷர் (Intraocular pressure) என்பர்.

ஆரம்ப நிலைகளில் வெளிப்டையான எந்த அறிகுறிகளும் இல்லாதிருப்பதே இதன் மிக ஆபத்தான அம்சமாகும்.

எனவேதான் இந்த நோயைக் கண்டு பிடிப்பதற்கு ஒழுங்கான கண் மருத்துவப் பரிசோதனை அவசியமாகிறது.

இந் நோய் வருவதற்கான சாத்தியம் உள்ளவர்கள் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கண் மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியமாகும்.

யாருக்கு குள்கோவிற்கான கண்பரிசோதனை அவசியம்

  • பரம்பரையில் குளுக்கோமா நோய் உள்ளவர்கள்
  • அதே போல 45 வயதிற்கு மேல் சாத்தியம் மிக அதிகம்.
  • வெள்யைர்களைவிட கறுப்பு இனத்தவரிடையே அதிகம்.
  • நீரிழிவு இருந்தாலும் வாய்ப்பு அதிகம்.
  • ஸ்டிரோயிட் வகை மருந்துகளை மாத்திரைகளாக, ஊசியாக அல்லது கண்துளிகளாக அதிகம் உபயோகித்தவர்களுக்கும்.
  •  கண்ணில் ஏதாவது அடிகாயங்கள் ஏற்பட்டிருந்தாலும் வாய்ப்பு அதிகம்.

ஆரம்பத்தில் கண்டு பிடித்தால் கண்ணுக்குள் விடும் துளி மருந்துகளுடன் நோய் மோசமாவதைத் தடுக்க முடியும்.

கடுமையான பாதிப்பு ஏற்படுமாயின் சத்திர சிகிச்சை, லேஸர் சிகிச்சை போன்றவை தேவைப்படும்.

குளுக்கோமா பற்றிய மற்றொரு பதிவு  :- கண்ணில் பிரஸர் குளுக்கோமா Glucoma

0.0.0.0.0.0.0

Read Full Post »

ஒரு கை நீண்டு வருகிறது. அருகில் உள்ள மேசையில் இருக்கும் தண்ணீர்க் கோப்பையை எட்ட முயல்கிறது. மிக மெதுவாகவே அக்கரங்களால் அசைய முடிகின்றது.

ஓட்டுனர் இல்லாத மாட்டு வண்டி போல, போகும் திசை தெரியாது அந்த ஒற்றைக் கை தடுமாறுகிறது. கைகளுக்கு இருக்க வேண்டிய திடமும் உறுதியும் இன்றி இயங்கும் அது கோப்பையை நெருங்கிவிட்டது. ஆனால் பற்ற முடியவில்லை. கோப்பை தட்டுப்பட்டு கீழே விழுந்து நீர் சிந்திவிட்டது. மறுகையானது எதுவும் முடியாதவாறு ஏற்கனவே முற்றாகச் செயலிழந்துவிட்டது

படுக்கை நோயாளி. தசைகளின் இயக்கம் குறைந்து வரும் motor neurone disese. நோயிலிந்து முற்றாக அவளை மீட்க சிகிச்;சைகள் எதுவும் உதவாது. நோய் கால ஓட்டத்தில் தீவிரமடைந்து வருவதைத் தடுக்க முடியாது. பொதுவாக உணர்விழப்பு இல்லை. வலிகளை உணர முடிவது பெரும் துன்பம். உதாரணமாக கையில் வலி என்றால் அக் கையை அசைத்து வேறு இடத்தில் வைக்கவோ மற்ற கையால் நீவி விடவோ முடியாது. ஆற்றாமை ஆட்கொள்ளும்.

கண் மூளை செவிப்புலன் போன்றவை மற்றவர்களைப் போல சாதாரணமாக இருக்கும். இதனால் சுற்றிலும் நடப்பவற்றையும் தனக்கு ஏற்படுகிற உடல் வேதனைகளையும் புரிந்து கொள்வார். உள்ளம் வேதனையில் ஆளும். ஆனால் அதிலிருந்து தற்காலிகமாகவேனும் விடுபட முடியாது. தன் உறுப்புகளை அசைக்க முடியாத வேதனையும் கவலையும் இயலாமையும் பெருகிவர மனவிரக்தி ஆட்கொள்ளும். இவ் வேதனைகள் ஓரிரு நாட்களுக்கானது அல்ல. பல மாதங்கள் தொடரும். அவற்றிலிருந்து விடுதலை மரணம் ஒன்றினால் மட்டுமேயாகும்.

அதுவும் விரைந்து வராது. மரணதேவன் அணைந்து வேதனைகளிலிருந்து விடுதலை கொடுக்க மூன்று முதல் ஐந்து வருடங்கள் ஆகலாம்.

அது வரை நோயாளியும் அவரைப் பராமரிப்பவர்களும் படும் வேதனை சொல்லி மாளாது.

அஞ்சனம் ஒரு குறும் திரைப்படம். கொழும்பு மருத்துவ பீட மாணவர்களால் தயாரிக்கப்பட்டு, கொழும்பு பல்கலைக் கழக தமிழ்ச்சங்கம் நடாத்திய போட்டியில் கலந்து முதற் பரிசு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை. தான் சொல்ல வந்த விடயத்தை அழுத்தம் திருத்தமாக மனதில் பதியும் வண்ணம் தயாரித்துள்ளார்கள். கதை, திரைக் கதை, வசனம் லோகபிரஷாத் பிரேமகுமார். சர்ச்சைக்குரிய விடயத்தை எடுத்தாண்ட துணிவு பாராட்டத்தக்கது. குறைந்த வசனங்களை பொருத்தமான காட்சிகளுடன் வளர்தெடுத்த திறமை நெறியாளர்களான நிசாந்த் சுப்பிரமணியம், பிரணவன் சிவஞானம் ஆகியோராகும்.

அவர்கள் பேச வருகிற விடயம் கருணைக் கொலை பற்றியது. தனது தாயின் வேதனைகளைப் பொறுக்க முடியாத மகன் கருணைக் கொலையை நாடுகிறான். மருத்துவர்கள் கைவிரித்துவிடுகிறார்கள். சட்டமும் இதற்கு இடமில்லை என நிராகரித்துவிடுகிறது.

Mercy killing  அல்லது Euthanasia எனப்படும் கருணைக் கொலை என்பது ஏற்புடையதுதானா?

மருத்துத்தால் மீட்க முடியாத, மரணம் நெருங்கி வரும் ஒருவரின் மரணத்தை சற்று முன்னதாக மருத்துவ உதவியுடன் நிகழ்த்துவதாக இதை விளக்குகிறார்கள். ஒரு கொலையைச் சற்று நாகரீகமான வார்த்தைகளில் விளக்குவதாகவே எனக்குப் படுகிறது.

ஒருவருக்கு மரணத்தை அளிப்பதற்கு மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. அது மருத்துவர்களால், மருத்துவக் காரணங்களுக்காக செய்யப்பட்ட போதும், போதும் நியாயமானதுதானா?.

உயிர் என்பது இயற்கை அளித்த வரம் அது. அதைப் பறிப்பது என்ன நியாhயம். அது நோயாளியின் பூரண சம்மதத்துடன் என்று சொன்னாலும் கூட எவ்வாறு நியாயமாகும். கொலைகளைக் கண்டிக்கிறோம். தற்கொலைகள் செய்யக் கூடாது என்கிறோம்.

அவ்வாறு செய்ய முனைபவர்களுக்கு தண்டனையும் கொடுக்கிறோம்.

மரணதண்டனையை இல்லாது ஒழிக்க வேண்டும் என முழங்குகிறோம்.
கருணைக் கொலை என்பது மரணம் நெருங்கிவிட்ட ஒருவருக்கு என்கிறார்கள்.

ஆனால் மரணம் ஒருவருக்கு எப்பொழுது நிகழும் என யாராவது அச்சொட்டாக முன் கூட்டியே சொல்ல முடியுமா? சோதிடர்கள் சொல்வதை விட மருத்துவர்கள் கணிப்பது சற்று அறிவுபூர்வமானதாக இருந்தாலும் கூட அதுவும் துல்லியமாக முன்கூற முடியாததே. மிகத் திறமையும் அனுபவமும் மிக்க மருத்துவர்களின் கணிப்புகளையும் தாண்டி எத்தனை பேர் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். மாறாக, நோய் எதுவுமில்லை என சர்ட்டிபிக்கட் வாங்கிய எத்தனை பேர் மறு நாளே தலையைப் போட்டிருக்கிறார்கள்.

“மற்றவர்களை விடுங்கள். துன்பப்படும் நோயாளி தன்னால் இனியும் தாங்க முடியாது, தனக்கு மரணத்தைத் தாருங்கள் என வேண்டும்போது அதைச் செய்வதுதானே நியாயம்” என்று சிலர் சொல்லக் கூடும்.

அவ்வாறு செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தை எழுதிக் கையெழுத்திட்டு சுயநினைவோடு முன் கூட்டியே மருத்துவர்களுக்குக் கொடுத்திருந்தபோதும், அதைப் பயன்படுத்தியர்கள் இல்லை என்றே சொல்லும் அளவிற்கு மிக மிக குறைவே என்கிறார்கள். இவ்வாறு நடப்பது கருணைக் கொலையை சட்டபூர்வமாக அங்கீகரித்தருக்கும் ஒருசில மேலை நாடுகளிலாகும். இங்கு அவ்வாறு செய்ய முடியாது

இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் மருத்துவம் இலவசமாக வழங்கப்பட்டாலும், நீண்ட நாள் பாதிப்புக்குள்ளாகும் மேற் கூறியது போன்ற நோயாளரை அரச மருத்துவ மனைகளில் வைத்துப் பார்க்கும் வசதி இல்லை. வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள்.

வீட்டில் வைத்து பராமரிப்பது மிகுந்த மன உளைச்சலைத் தரும். அதற்காகும் மிகுந்த செலவை சமாளிக்கக் கூடிய பொருளாதார வலு பெரும்பாலான குடும்பங்களுக்குக் கிடையாது.

மிக முக்கிய காரணம் அத்தகைய நோயாளரைப் பாராரிக்கும் மருத்துவத் துறையான (Palliative Care) இங்கு வளரவே இல்லை.

அத்தகைய நோயாளரை அன்போடும் ஆதரவோடும் அணுக வேண்டும். உணவு, நீராகாரம், மலசலம் கழித்தல் போன்ற பிரச்சனைகள் இன்றி வாழ வழி செய்ய வேண்டும். அவர்கள் வேதனையால் துன்பமுறாது காப்பாற்ற வேண்டும். அவர்கள் உளநலம் கெட்டு மனச்சோர்விற்கு ஆளாகாமல் தடுக்க வேண்டும். மனச்சோர்வு ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை செய்ய வேண்டும்.

“சாகப்போகிறார்தானே வைத்தியம் செய்து என்ன பயன்” என்ற மறைமனநிலை பராமரிப்பவர்கள் மனதிலிருந்து அகல வேண்டும். தம்மால் முடிந்ததை மருத்துவர்களும் அரசும் மட்டுமின்றி வீட்டில் உள்ளவர்கள் செய்ய வேண்டும். சுற்றியுள்ள சமூகம் கைகொடுக்க முன்வர வேண்டும்.

அதையே மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் மக்களுக்குச் சொல்ல வேண்டும். முன்மாதிரியாகச் செய்து காட்ட வேண்டும்.

அந்திமகால நோயாளரைப் பராமரிப்பது மிகவும் முக்கியமான ஒரு விடயம். இது பற்றிய அனுபவப் பகிர்வின் ஆரம்ப முயற்சியாக இலங்கை குடும்ப மருத்துவர் சங்கம் எடுத்துள்ளது. மருத்துவர்களுக்கு பயிற்சியும் வழங்கியுள்ளது. இதற்கான சான்றிதழ் வழங்கும் பயிற்சிகளை கொழும்பிலும் காலியிலும் ஏற்கனவே நடாத்தியுள்ளது. விரைவில் யாழ்ப்பாணத்திலும் நடாத்த இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எனது ஹாய் நலமா புளக்கில் உள்ளது.

இசை அமைத்திருப்பது கஸ்தூரி சூர்யகுமார் மற்றும் உமேஸ் ஜெயராஜா ஆகியோராகும். மனதைப் பிழிவதாக இருக்கிறது.  முக்கியமான தாய் பாத்திரத்தில் யுகதர்சனி சிவானந்தன் சிறப்பாக முகபாவங்களை வெளிப்படுத்துகிறார். நோயின் வேதனையை வெளிப்படுத்தும் உடல்மொழிகள் சிறப்பாக இருந்தது. மகன் பாத்திரத்தில் மார்ஸ் முத்துத்தம்பி. முகத்தை வெறிப்பாக வைத்திருக்கிறார். உணர்வுகளை சற்று சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கலாம். தோற்றம் அண்ணன் தங்கை போல இருக்கிறதே ஒழிய தாய் மகன் போலில்லை.

பாடல்கள் டினேஸ்நாந்த் சுந்தரலிங்கம். ஒளிப்பதிவு நிசாந் சுப்பிரமணயம்.

இதே நோயால் மூன்று வருடங்களாத் துன்பமுறும் ஒருவரை அண்மையில் பார்த்தேன். ஒரு சிறு படுக்கைப் புண் தானும் வராது அக்கறையோடு குடும்பத்தவர்கள் பராமரிக்கிறார்கள். அவரால் இப்பொழுது பேசவும் முடியாது. ஏதாவது சொல்ல முயன்றால் அர்த்தம் புரியாத ஓசைகள்தான் எழும் சொற்கள் வராது. சைகை காட்டுவதற்கு கைகள் இயங்காது. அவரது முகபாவனைகளை வைத்துத்தான் மனைவி புரிந்து கொள்கிறாள்.

“எவ்வளவு கவனமாகப் பார்த்தாலும் அவருக்கு சரியான கோபம் வருகிறது” என மனைவி விம்மலோடு சொன்னாள். பேச முடியாத சைகை காட்ட முடியாத அவரின் கோபத்தை அவரது கண்களிலும் முகத்திலும் பார்த்துப் புரிந்து கொள்ளும் அளவிற்கு அனுபவப்பட்டிருந்தாள். அக்கறைப்படுகிறாள் என்பது மனநிறைவை எனக்குத் தந்தது.

வேறு ஒரு பெண் அவளும் பல வருடங்களாகப் படுக்கை நோயாளிதான். ஆனால் இது வேறு நோய். அவளை அக்கறையோடு பராமரிப்பதற்காக அவளது மகள் தனது அரச உயர் பதவியை உதற்றித்தள்ளிவிட்டு வீட்டோடு இருக்கிறாள்.

எவ்வளவு தியாகங்களைச் செய்கிறார்கள் இந்தப் பெண்கள்.
அவசர புத்தியும் நிதானமின்மைனயும், வீட்டு வேலைகளுக்கு பழக்கப்பட்டாத தன்மையும் கொண்ட ஆண் என்பதால்தானா அந்த மகன் கருணைக் கொலையை நாடினான் என எனது மனம் யோசித்தது.

குறும்படம் கருணைக் கொலையை சிபார்சு செய்யவில்லை என்பது உண்மையே. அதற்காக வாதாடவில்லை என்ற போதும் அதை ஒரு தேர்வாகவே கொடுத்திருக்கிறார்கள். திரைப்படம் உணர்வு பூர்வமாக கருவைப் பேசுகிறது. அதை நன்றாகச் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த தேர்வு சரியானதுதானா?

அவள் தனக்கு மரணம் வேண்டும் என வேண்டுகிறாள். ஆனால் ‘உனக்கு சாக மருந்து தாறன்’ என்று கேட்டிருந்தால் குடித்திருப்பாளா? நிச்சயம் தவிர்த்திருப்பாள்.

இங்கு அவன் செய்தது ஒரு விதத்தில் கொலையாகவே இருக்கிறது. அது மாத்திரமல்ல தான் செய்த கொலைக்கான பழியை சமூகம் மீதே போட்டுவிடுகிறான்.

“நான் ஒரே ஒரு விசயத்தைதானே சமூகத்திடம் கேட்டேன். அதை தர அது மறுத்துவிட்டது” என்கிறான். எவ்வளவு அபத்தமான கேள்வி. இவ்வாறான விடயத்திற்கு அதாவது ஒரு கொலைக்கு, சமூகம் எவ்வாறு ஒப்புக் கொள்ள முடியும்.

படுக்கையில் கிடக்கும் அவளது தோற்றத்தைப் பார்த்தால் அவள் இன்னமும் பல மாதங்கள் அல்லது ஒரிரு வருடங்கள் வாழ முடியும் போலத் தோன்றுகிறது. அவள் சாக வேண்டும் என விரும்புகிறாள் என்ற போர்வையில் அவளது மரணத்தைத்தானே மகன் தீர்மானிக்கிறான்.

இவ்வாறு கருணைக் கொலைக்கான தீர்மானம் எடுக்கும் உரிமையைக் ஒரு தனிநபரிடம் கொடுப்பது ஆபத்தானது துஸ்பிரயோகம் செய்யக் கூடியது என்பதையே இக் குறும் படம் மூலம் நான் கற்றுக்கொண்டேன.

நிறை குறைகள் இரண்டும் இருந்தபோதும் மிகச் சிறப்பான முன் முயற்சி என்பதில் சந்தேகமில்லை. இத் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

யூ ரியூபில் அஞ்சனம் குறுந் திரைப்படம்  ‘அஞ்சனம்’

0.0.0.0.

அண்மையில் அதன் கதாசிரியர்,தயாரிப்பாளர் லோகபிரஷாத் பிரேமகுமார் மற்றும் தாய் பாத்திரத்தில் நடித்த செல்வி யுகதர்சனி சிவானந்தன் இருவரும் என்னை சந்திக் வந்திருந்தனர்.

பல விடயங்களை அவர்களுடன் கலந்து பேச முடிந்தது.

மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் இந்து மன்றத்தின் சஞ்சிகை ஆசிரியராகவும் பின் அதன் தலைவராகவும் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தது.

தமிழ்சங்கம் நடாத்திய கலை விழாவில் மருத்துவ மாணவனாக நான் மேடையில் நடித்ததையும் கவியரங்கில் தலைமை தாங்கியதையும் நினை கூர்ந்து இளமை நினைவுகளில் மகிழ முடிந்தது

அந்தக் காலத்திலேயே இந்து மன்றம் இயங்கிய செய்தி அவர்களுக்கு புதினமாக இருந்தது.
அவர்கள் தங்கள் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டனர்.

விடை பெறும் போது அவர்கள் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தனர்.

அஞ்சனம் குறுந் திரைப்படம் பற்றி நான் விமர்சன கட்டுரை எழுதியதை இட்டு ஒரு ஞாபகச் சின்னத்தை பரிசாக அளித்தனர்.

நன்றி எனது நாளைய மருத்துவச் சகாக்களே.

20140118_200536_LLS

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

Read Full Post »

உங்கள் குழந்தை குறுநடை போடுகிறது என்ற ஆனந்தத்தில் இருக்கிறீர்களா? விழுந்துவிடுவானா எதையாவது போட்டு உடைப்பானா எனப் பெற்றோர்கள் திகிலில் இருக்கும் காலமும் அதுதான்.

குறுநடைபோடும் காலம் என்பது பொதுவாக ஒன்று முதல் மூன்று வயது வரை எனக் குறிப்பிடுகிறார்கள்.

குறுநடைபோடும் காலமானது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மட்டும் முக்கியமானதல்ல.

அது குழந்தைகளின்

  • அறிவாற்றல்,
  • உணர்ச்சிகளின் வெளிப்பாடு
  • சமூக உறவுகளின் விரிவு

போன்றவவை வளர்வதற்குமான மிகவும் முக்கிய காலப்பகுதியாகும்.

இக்காலத்தில் வாசிப்பதானது அவர்களது கற்கை ஆற்றலையும், அறிவு வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

இக்காலத்தில் அவர்களை வாசிக்க தூண்டுவதானது அவர்களை வாழ்நாள் முழுவதும் வாசிப்பில் ஆர்வம் கொள்ள ஊக்குவிப்பதாக அமையும் என American Academy of Pediatrics சொல்கிறார்கள்.

  • குழந்தையைக் கட்டித் தழுவி அமைதியும் செளகர்யமும் நிறைந்த இடத்தில்  குழந்தையுடன் கூடியிருந்து வாசியுங்கள்.
  • உங்கள் குழந்தை தவறாக உச்சரிக்கும் வார்த்தைகளைக் கவனத்தில் எடுத்து அவற்றை சரியான முறையில் நீங்கள் உச்சரித்து குழந்தையை அவதானித்து முயற்சி செய்து முன்னேற உதவுங்கள்.
  • வாசிப்பதை தெளிவாக மட்டுமின்றி மிகவும் ஆறுதலாகவும் செய்வதன் மூலம் அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை குழந்தை புரிந்து கொள்ள உதவ முடியும்.
  • குழந்தை உற்சாகமற்று சோர்வாக இருக்கும் நேரங்களில்  குழந்தையை அமைதிப்படுத்தி ஆற்றுப்படுத்தி மகிழ்ச்சியில் ஆழ்த்த வாசிப்பு நேரங்களைப் பயன்படுத்தலாம்.
  • ஒருபோதும் அது தண்டனையாக மாறக்கூடாது. அவ்வாறானால் அது உங்கள் நோக்கத்தையே கெடுத்துவிடும்.

எதிர்காலத்தில் வாசிப்பில் அக்கறை காட்டி அதில் மகிழச்சியுறும் பெரியவராக அந்தக குழந்தை வளரும்.

ஏற்கனவே எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

இது புகைப்படக் குழந்தை – குறுநடை போடும் மற்றொரு செல்லக் குழந்தை

0.0.0.0.0

Read Full Post »

ஆபீசில் வேலை செய்து கொண்டிருந்த நண்பர் திடீரென தலையைச் சுற்றிக் கொண்டு வருகிறது என்று மேசையிலேயே படுத்துவி்ட்டார்.

சக ஊழியர்கள் அவரை அவசர அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பொது மருத்துவ நிபுணர், காது மூக்கு தொண்டை நிபுணர் என பல்வேறு மருத்துவ நிபுணர்கள் பார்த்தார்கள்.

செய்யாத மருத்துவ ஆய்வு கூட பரிசோதனைகள் மிச்சமில்லை. MRI உட்பட மூளையைப் படமெடுத்துப் பார்த்துவி்டார்கள். எதுவும் பிடிபடவில்லையாம்.
மயக்கம் வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
  • வயதானவர்களும் பிரஷர் குறைவாக உள்ளவர்களும் உட்கார்ந்த அல்லது படுக்கை நிலையிலிருந்து திடீரென எழுந்து நின்றால் மயக்கம் வருவதுண்டு.
  • திடீரென ஏற்படும் கடும் வலிகள் கூட அவ்வாறு ஏற்படுத்தலாம். 
  • காரணம் எது என நீங்கள் நினைத்தாலும் ஒரு மருத்துவரைக் கலந்தாலோசித்து காரணத்தைக் கண்டறிய முயல வேண்டும்.

சில தருணங்களில் மருத்துவர்களால் கூட ஒருவருக்கு ஏன் மயக்கம் ஏற்பட்டது என்பதைத் துல்லியமாக கணடறிய முடியாதிருக்கலாம்.

கீழ் கண்டவை மயக்கத்தைத் தூண்டுவதற்கான முக்கய காரணிகளாக இருக்கக் கூடும் என அமெரிக்க குடும்ப மருத்துவ சங்கம் சொல்கிறது.
  • சடுதியாக எழுந்து நிற்பது.
  • கடுமையான வெப்பம் உள்ள சூழலில் தீவிரமான உடற பயிற்சி செய்தல் அல்லது கடுமையாக வேலை செய்தல்.
  • மிக வேகமாகச் சுவாசித்தல். இந்த hyperventilating என்பது நோய்களின் போதும் ஏற்படலாம், மன உளைச்சலாலும் நிகழலாம்.
  • மிகக் கடுமையான மனத் தாக்கம் அல்லது துயரம் உடலை மட்டுமின்றி ஒருவரது இரத்த அழுத்தத்தையும் பாதிக்கும்போது அவ்வாறு மயக்கம் ஏற்படுவதுண்டு.
  • சில பிரஷர் மருந்துகளை உட்கொள்ளும்போது திடீரென எழும்போது இரத்த அழுத்தம் குறைவதுண்டு. இது திடீர மயக்கத்திற்குக் காரணமாகலாம்.

காரணம் என்பதைக் கண்டறிந்து மீண்டும் நிகழ்வதைத் தடுங்கள்.

இல்லையேல் ஆபத்தில் மாட்டிக் கொள்ள நேர்வதுடன், தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சைகள், பணச் செலவு மற்றும் மன உளைச்சலைத் தவிர்துக் கொள்ளலாம்.

திடீர் மயக்கங்கள் சில ஆபத்தான நிலையின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

  • குறுகிய கால நேரத்திற்குள் பல தடவைகள் ஏற்படுதல்.
  • வேறு எந்த அறிகுறிகளும் இல்லாமல் திடீரென ஏற்படல் (களைப்பு, வாந்தி, காய்ச்சல், நித்திரைக் குறைவு போன்றவை சில உதாரணங்கள்)
  • குருதிப் பெருக்கு
  • மூச்செடுப்பதில் சிரமம்
  • நெஞ்நு வலி
  • இருதயம் வேகமாகத் துடித்தல்
  • முகம் அல்லது உடலின் ஒரு பக்கத்தில் மரப்பது போன்ற உணர்ச்சி
மேற் கூறிய அற்குறிகள் இருந்தால் மயக்கத்திற்கு அடிப்படையான வேறு ஏதோ ஆபத்தான காரணம் இருப்பதாகக் கொள்ளலாம். உடனடியாக மருத்துவரை காணுங்கள்.

0.0.0.0.0

Read Full Post »

“இந்த டொக்டர்மாரோடை பெரும் தொல்லை. நார்ப்பொருளைச் சாப்பிடு சாப்பிடு எண்டு எங்கை பாத்தாலும் சொல்லிக் கொண்டிருக்கினம்.” சொன்னவர் ஒரு பெரியவர்.

FatyEatChipsREX_468x311

வயதில் பெரியவர் அல்ல, எடையில் பெரீயவர்.

‘நாங்கள் என்ன பொச்சு நாரையே தின்னுறது. பிரஸர் எண்டு போனாலும் சொல்லுகினம், முழங்கால்;வலி என்றாலும் சொல்லுகினம், வியர்க்கிறது எண்டாலும் நாரைத் தின் என்று சொல்லுகினம். இதென்ன இந்த நார்ப் பொருள்’ பொரிஞ்சு சொல்லாத குறையாக மன அவலத்தைக் கொட்டித் தள்ளினார்.

அண்மையில் (மார்ச் 2013) வெளியான ஒரு ஆய்வு உணவில் அதிகம் நார்ப்பொருளைச் சேர்;ப்பவர்களுக்கு பக்கவாதம் வருவதுற்கான சாத்தியம் குறைவு என்கிறது. இது ஏற்கனவே தெரிந்த விடயம் என நீங்கள் சொல்லக் கூடும்.

images

ஆனால் இந்த ஆய்வின் பிரகாரம் ஒருவர் தனது உணவில் தான் உட்கொள்ளும் நார்ப்பொருளின் அளவை 7 சதவிகிதத்தால் அதிகரித்தால் அவருக்கு முதற்தரமாக பக்கவாதம் வரக் கூடிய சாத்தியம் 7 சதவிகிதத்தால் குறைகிறதாம்.

எனவே இந்த நார்ப்பொருள் பற்றி சிறிது அறிந்து கொள்வோம்.

நார்ப்பொருள்

நார்ப்பொருள் என மருத்துவர்கள் கூறுவது எமது உணவுகளில் இருப்பவற்றைத்தான். தானிய வகைகள், பழவகைகள், காய்கறிகள், மற்றும் அவரை இன உணவுகளில் இவை தாராளமாகக் கிடைக்கினறன.

இந்த நார்ப்பொருளில் இரு வகைகள் உள்ளன.

Sources-of-Fiber

கரையாத நார்ப்பொருள் என்பது எமது உணவுக் கால்வாயில் கரையாது மலத்துடன் வெளியேறும். தவிடு நீக்காத தானியவகைகளில் கிடைக்கும். தீட்டாத அரிசி, ஆட்டாமா, குரக்கன் போன்றவை உதாரணங்களாகும். விதைகள், காய்கறிகள் போன்றவற்றிலும் அதிகம் உண்டு. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும்

கரையும் நார்ப்பொருள் என்பது நீரில் கரையக் கூடியது. இது கரைந்து ஜெல் போன்ற பொருளாக மாறுகிறது. எனவே இதை உணவில் போதிய அளவு சேர்த்தால் சாப்பிட்டாலே வயிறு நிறைந்தது போன்ற உணர்வு ஏற்படும். எனவே குருதியில் கொலஸ்டரோல், சீனி ஆகியன அதிகரிப்பதைத் தடுக்கும். அவரை இன உணவுகள், கரட், புளிப்புத்தன்மை உள்ள பழங்கள். ஆப்பிள், ஓட்ஸ், பார்லி போன்றவற்றில் தாராளமாகக் கிடைக்கும்.

நன்மைகள் எவை?

நார்ப்பொருள் அதிகமுள்ள உணவினால் மலத்தின் அளவு அதிகரிக்கிறது. அத்துடன் அது காய்ந்து இறுகாமல் மென்மையாக இருக்கும். இதனால் மலம் சுலபமாக வெளியேறும். மலச்சிக்கல் ஏற்படாது தடுக்கிறது.

benefits of fibre

அத்தகைய உணவானது மூலநோய் ஏற்படுவதையும் தடுக்கிறது. அத்துடன் உணவுக் கால்வாயில் சிறிய பைகள் போன்றவை தோன்றும் னiஎநசவiஉரடயச னளைநயளந நோய் ஏற்படாமலும் தடுக்கிறது.

உணவில் உள்ள கரையும் நார்ப்பொருள்களால் கெட்ட கொலஸ்டரோல் ஆன டுனுடு கொலஸ்டரோல் மற்றும் மொத்த கொலஸ்டரோல் அளவை அதிகரிக்காது தடுக்கின்றன.

FiberBenefits_top

கரையும் கரையாத எனும் இருவகை நார்ப்பொருட்களும் நீரிழிவைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானவையாகும். கரையும் நார்ப்பொருளானது உணவுக் கால்வாயிலிருந்து மாப்பதார்த்தங்களும், சீனியும் அகத்துறிஞ்சப்படுவதைத் தாமதப்படுத்துகிறது. இதனால் குருதியில் சீனியின் அளவு திடீரென அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.

அதேவேளை கரையாத நார்ப்பொருட்கள் நீரிழிவு ஏற்டுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கும்.

எடை அதிகரிப்பதற்கான சாத்தியத்தைக் குறைப்பதற்கும் நார்பொருள் உணவுகள் அவசியமாகும். நார்ப்பொருள் உணவுகளை நன்கு சப்பியே உண்ண நேர்கிறது. இதனால் உணவு உட்கொள்ளும் நேரம் சற்று அதிகரிக்கிறது. அவ்வாறு நேரம் எடுக்கும்போது எமக்குப் பசியில்லை என்பதை உடல் உணர்ந்து கொள்கிறது. இதனால் மேலதிக உணவை உண்ண நேர்வதில்லை.

அத்துடன் அவை சமிபாடடைய சற்று அதிக நேரம் எடுக்கும். எனவே வயிறு நிறைந்தது போன்ற உணர்வு விரைவிலேயே ஏற்பட்டுவிடுகிறது. அத்துடன் வயிறு நிறைந்த உணர்வானது நீண்ட நேரத்திற்கு நீடிக்கும். எனவே விரைவில் மீண்டும் பசி எடுக்காது. பசி எடுக்க அதிக நேரம் எடுக்கும். இவை காரணமாக எடை அதிகரிப்பு தடுக்கப்படுகிறது.

அத்துடன் நார்ப்பொருள் உணவுகளின் கலோரிப் பெறுமானம் குறைவு. அதுவும் எடை அதிகரிப்பைத் தடுக்கும்.

பிரஷர் அதிகரிப்பதையும் நார்ப்பொருள் உணவுகள் குறைப்பதாக சில ஆய்வுகள் சொல்லுகின்றன. அதேபோல பக்கவாதம் வருவதற்கான சாத்தியம் குறைவது பற்றி ஏற்கனவே கண்டோம்.

உணவுக் கால்வாயில் புற்று நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியத்தையும் நார்ப்பொருள் உணவுகள் குறைப்பதாக வேறு ஆய்வுகள் சுட்டுகின்றன.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது இன்று மனிதனை ஆட்டிப் படைக்கும் நோய்களான நீரிழிவு, கொலஸ்டரோல், பிரஷர், பக்கவாதம், புற்றுநோய் போன்றவற்றதை; தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நார்ப்பொருள் உணவுகள் அவசியம் என்பது தெளிவாகிறது.

எவ்வளவு தேவை

50 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் தினமும் 38 கிராமும் ,பெண்களுக்கு 38 கிராமும் தேவையாம். 51 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் தினமும் 30 கிராமும் ,பெண்களுக்கு 21 கிராமும் தேவையாம்.

ஆனால் நாங்கள் சாப்பாட்டு மேசையில் தராசு வைத்துக் கொண்டா சாப்பிட முடியும்?  அது நடைமுறைச் சாத்தியம் அல்ல. எனவே எமது உணவு முறையை ஆராக்கியமானதாக மாற்ற வேண்டும்.

சில ஆலோசனைகள்

காலை உணவில் ஆரம்பியுங்கள். இன்றைய அவசர யுகத்தில் பல வீடுகளில் காலை உணவு முக்கியத்துமற்றுப் போகிறது. காலை 7.30க்கே பாடசாலைக்குப் போக வேண்டியதால் பல குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதில்லை. காலை தேநீர் இடைவெளியில் ஏதாவது நொறுக்குத் தீனியுடன் முடிந்துவிடுகிறது.

b1

அலுவலகங்களுக்குப் போகும் பலரும் அவ்வாறே. வழியில் உள்ள பேக்கரியில் அல்லது கன்ரீனில் பண், ரோல்ஸ் எனச் சாப்பிடுகிறார்கள்.

முக்கியமானது காலை உணவைத் தவிர்க்க வேண்டாம். காலையில் சாப்பிடுங்கள். அது நார்ப்பொருள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

பல முதியவர்களின் காலை உணவு கோர்ன் ப்ளேக் மட்டுமே. கோர்ன் ப்ளேக் கில் நார்ப்பொருள் அதிகம் உள்ளது. அரிசி உணவை விட அதிகம் உள்ளது. ஆனால் எமது பாரம்பரிய உணவுகளான இடியப்பம், புட்டு, சோறு போன்றவற்றை உண்ணும் போது அதனுடன் மரக்கறிக் கறி. பருப்பு அல்லது சாம்பார் சேர்த்து உண்பதால் அதிகளவு நார்ப்பொருள் கிட்டுகிறது என்பதை மறக்க வேண்டாம்.

puttu-kadala-curry

காலையில் சமைக்க முடியாது எனில் இரவு சமைத்ததில் எடுத்து வைத்துச் சாப்பிடுங்கள். வேறு வழியில்லை கோர்ன் ப்ளேக் தான் காலை உணவு எனில் வாழைப்பழம், அப்பிள், பப்பாளி போன்ற ஏதாவது ஒரு பழத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பிரதான உணவின் பின் ஈற்றுணவு (Dessert) சாப்பிடுவது பலரின் வழக்கம். புடிங், ஐஸ்கிறீம், வட்டிலாப்பம் போன்றவை அதிக கலோரிப் பெறுமானம் உள்ளவை. எனவே அவற்றைத் தவிர்த்து பழங்களையே ஈற்றுணவாகக் கொள்ளுங்கள்.

healthy-desserts1

இடையுணவு பலருக்கு அவசியமாக இருக்கிறது. முற்பகலில் தேநீருடன் பிஸ்கற், வடை போன்ற ஏதாவது. அதேபோல மாலை 4-5 மணியளில் தேநீருடன் கேக்.வடை, மிக்ஸர் போன்ற ஏதாவது ஒன்றைப் பலரும் உண்கிறார்கள். இடை உணவு ஆகாததல்ல. அது நல்லதென சில ஆய்வுகள் கூறுகின்றன.

1102_08_TLC_HealthySnacksTri-Fold-Adults_1

ஆனால் அவை சிறியதாக கலோரி வலு குறைவானதாக இருப்பது அவசியம். பழங்களை இவ் வேளைகளில் உண்பது நல்லது. வாழைப்பழம், அப்பிள், கொய்யா, மாம்பழம், பலாப்பழம் எது வேண்டுமானாலும் உண்ணலாம்.

பழங்களை உண்ணும்போது அதன் தோற்பகுதியை சீவி எறிவதுதான் வழக்கமாக இருக்கிறது. அவற்றில் கிருமி இருக்கலாம் என்பது பலரின் வாதமாக இருக்கிறது. நன்கு அலசிக் கழுவிய பின் தோலுடன் சாப்பிடலாம். அப்பிள், மாம்பழம், பப்பாளி, கொய்யா போன்றவற்றை தோலுடன் சாப்பிடுவதில் பிரச்சனை இல்லை. பலாப்பழம் மாதுளை போன்றவற்றை தோலுடன் சாப்பிடலாமா எனக் கேட்காதீர்கள்.

மாம்பழத்தில் 5.4 கிராம், ராஸ்பெரியில் 8, பியேர்ஸ் 5.5, அப்பிள் தோலுடன் 4.4, வாழைப்பழத்தில் 3.1, பலாப்பழம் 100 கிராமில் 1.5 கிராம், தோடம்பழம் 3.1, இருக்கிறது.

முழுமையான கோதுமையை அவிக்கும் போது 16.3 கிடைக்கிறது. ஆனால் அதை தவிடு நீக்கிய மாவில் செய்யும் பாணில் 1.9, சிவத்த அரிசிச் சோறில் 3.5, எண்ணெய்விடாது வறுத்த சோளப் பொரியில் 3.5, பார்லியில் 6 கிராம் கிடைக்கிறது.

காய்கறிகளைப் பொறுத்த வரையில் அவரை இன உணவுகளான போஞ்சி, பயிற்றை, சோயா போன்ற வற்றில் மிக அதிகளவு கிடைக்கிறது. இவற்றில் சுமார் 10-17 கிராம் வரை கிடைக்கும். கீரை வகைகள் 5 கிராம், தக்காளியில் 2.7, தோலுடன் சமைத்த உருளைக் கிழங்கில் 5 கிராம் எனக் கிடைக்கும்.

உணவுகளில் உள்ள நார்பொருள் பற்றி முழுமையாக அறிவதற்கு அவற்றிற்கான பட்டியலைப் பாரக்க வேண்டும்.

‘இவற்றின் அடிப்படையில் உங்கள் உணவில் நார்ப்பொருள் அதிகம் உள்ள உணவுகளைச் சேருங்கள். பொச்சு மட்டையை அல்ல.’

அவருக்குச் சொன்னேன்.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை நார்ப்பொருள் சாப்பிடுங்கள்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.

Read Full Post »