“நாசிச் சளி எண்டால் மூக்குச் சளிதானே. அது மூக்காலைதானே வடியும். அது என்ன நாசிப் பின்புறச் சளி” என ஆச்சரியப்பட்டார்.
‘இடக்கு முடக்கான பெயராக இருக்கிறதே. புரிவது சிரமம்.
எனவே நாசிப் பின்புறச் சளி என்பதற்கு பதிலாக தொண்டைக்குள் சளி’ என்று சொல்லலாமா என எனக்குள் யோசித்தேன். Post nasal drip என்பதற்கு அது தவறான வார்த்தைப் பிரயோகம் எனத் தெரிந்தது.
நாசிப் பின்புறச் சளி என்ற பெயர்தான் புதிதாக இருக்கிறதே தவிர அது ஒரு பொதுவான பிரச்சனை. ஆனால் இனங்காணப்படுவது குறைவு. சாதாரண ஏனைய சளிகளுக்கான சிகிச்சையின் போது இதுவும் தணிந்துவிடுவதால் பெயர் சொல்லி சிகிச்சை அளிப்பது குறைவு எனலாம்.
சளிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்
மூக்குச் சளி பற்றி எல்லோருக்கும் தெரியும். மூக்கால் ஓடும். தண்ணீர் போலவோ, தடிப்பாகவோ அல்லது கடும் மஞ்சள் நிறத்தில் அல்லது சில தருணங்களில் நாற்றத்துடன் வெளி வரும்.
தொண்டைக்குள் சளி என்பது தொண்டைக்குள் அடைத்துக் கொண்டிருப்பது போல அல்லது கரகரப்பது போல அரியண்ணடப்படுத்தும். ஹா ஹா எனச் செருமி வெளியேற்ற முனைவார்கள். இது தொண்டைப் பகுதிலேயே சுரப்பதாகும். அதாவது சுவாசக் குழாயின் ஆரம்பப் பகுதிகளான தொண்டை குரல்வளை போன்றவற்றில் சுரக்கும்
ஆனால் இந்த நாசிப் பின்புறச் சளி என்பது நாசியிலிருந்து வெளியே சிந்தாது பின்புறமாகத் தொண்டையில் இறங்குவதாகும்.
எங்கள் உடலில் உணவுக் கால்வாய், சுவாசத் தொகுதி மலக் குடல், பெண்களின் பாலுறுப்பு என பல குழாய்கள் இருக்கின்றன. இவற்றின் உட்புறமுள்ள இழைத்திலிருந்து மென்மையான சளி போன்ற திரவம் சுரந்து கொண்டே இருக்கும். சற்றுத் தடிப்பான இந்தத் திரவமானது அவ்வுறுப்புகளை ஈரலிப்பாக வைத்திருப்பது மட்டுமின்றி நோயை ஏற்படுத்தும் கிருமிகள் உட்புகவிடாது தடுக்கவும் செய்கின்றன.
பொதுவாக இவை சுரப்பதை நாம் உணர்வதில்லை. சாதாரண அளவில் சுரந்தால் எமது கவனத்தை ஈர்க்காது எனச் சொல்லலாம். வழமையாக நாசியில் சுரக்கும் சளி போன்ற அத் திரவமானது எச்சிலுடன் கலந்து ஆரவாரமின்றி தொண்டைக்குள் புகுந்து விழுங்கப்பட்டுவிடும்.
மூக்கிலிருந்து மிக அதிகமாகச் சுரந்தால் அல்லது அதன் நீர்த்தன்மை குறைந்து தடிப்பமாக இருந்தால் மட்டுமே எங்களால் உணரப்படுகிறது. அவ்வாறு அதிகமாகச் சுரக்கும் சளியில் பெரும் பகுதி மூக்கால் வடிவதாக இருக்கும். மிகுதி மட்டுமே தொண்டைக்குள் உள்நாசி வழியாக இறங்கும்போது மட்டுமே எம்மால் உணரப்படும்..
காரணங்கள் என்ன?
சளி அதிகமாகச் சுரப்பதற்கும் உள்பக்கமாக வருவதற்கும் காரணங்கள் என்ன
- சாதாரண தடிமன்
- சளிக்காய்ச்சல்கள்
- தூசி, மகரந்தம், கடுமையான மணங்கள் போன்றவற்றிற்கான ஒவ்வாமைகளால் ஏற்படுவது.
- மண்டை ஓட்டின் காற்றறைகளில் ஏற்படும் அழற்சிகள். இவற்றை பொதுவாக சைனஸ் அழற்சி என்போம்.
- குழந்தைகள் மூக்கிற்குள் ரம்பர், குண்டுமணி போன்ற ஏதாவது அந்நியப் பொருட்களை வைத்தால் வழமையாக உற்பத்தியாகும் சளி நீரானது இயல்பாக வடிய முடியாது தொண்டைக்குள் இறங்கலாம்.
- மூக்கிலும் அருகில் உள்ள காற்றறைகளில் இருக்கக் கூடிய இயற்கைக்கு மாறான உருவ மாற்றங்கள் காரணமாகலாம். உதாரணமாக சிலரது மூக்கின் இடைச் சவ்வு ஒரு பக்கமாக வளைந்து இருக்கலாம். இதுவும் வழமையான சளிவடிதலுக்கு தடையாக இருக்கலாம். Deviated septum என்ற இந்தப் பிரச்சனையானது பிறப்பிலும் ஏற்படலாம். அல்லது முகம் குப்புற விழுந்து மூக்கின் சவ்வை உடைத்ததாலும் ஏற்பட்டிருக்கலாம்.
- சில உணவுவகைளும் காரணமாகலாம்.. காரணமான மணம் கூடிய உணவுவகைகள் நாசிச் சுரப்பை அதிகமாக்கும்.
- சூழலில் இருந்து வரும் மணங்கள் மற்றொரு காரணமாகும். இரசாயனங்கள், வாசனைத் திரவியங்கள், சலவைப் பவுடரின் துகள்கள், பாத்திரங்கள் மற்றும் கழிப்பறையைச் சுத்தம் செய்ய உபயோகிக்கும் திரவங்கள் போன்றவையும் ஒவ்வாமையால் நாசிச் சுரப்பை அதிகமாக்கலாம்.
- இவற்றை விட இயற்கையான சுவாத்திய மாற்றங்களும் முக்கிய காரணமாகும். திடீரென ஏற்படும் குளிர் சுவாத்தியம். கடுமையான வரட்சியுடன் கூடிய காற்று போன்றவற்றாலும் ஏற்படும்.
சளியோடு சற்றேனும் தொடர்பில்லாத வேறு காரணங்களாலும் ஏற்பலாம்.
அண்மையில் ஒருவரைக் காண நேர்ந்தது. அவருக்கு நீண்ட நாளாக இருமல். தொண்டையை அடிக்கடி செருமிக்கொண்டிருப்பார். உடலும் மெலிந்து வந்து கொண்டிருந்தது. சளி அதிகமாக உற்பதியாவது அதற்குக் காரணமல்ல.
அவரது தொண்டையில் உள்ள விழுங்குவதற்கான தசைநார்களின் இயக்கம் பாதிக்கப்பட்டிருந்தமைதான் காரணமாகும். எச்சிலையும் நாசிச் சுரப்பு நீரையும் இயல்பாக விழுங்க முடியாததால் அது தேங்கி நின்று இருமலை ஏற்படுத்தியது. இது மிக மிக அரிதாகவே தோன்றும் பிரச்சனை.
இதேபோல தொண்டையில் தோன்றக் கூடிய கட்டிகள் நாசியிலிருந்து உட்புறம் வழியும் சளி மற்றும் எச்சலை விழுங்க முடியாத நிலையில் நாசிப் பின்புறச் சளியாக வெளிப்படலாம். இவையும் குறைவே.
அறிகுறிகள்
ஒருவருக்கு எத்தகைய அறிகுறிகள் இருந்தால் அது நாசிப் பின்புறச் சளிதான் என நீங்கள் சந்தேகிக்கலாம்.
ஆரம்பத்தில் சொன்னது போல தொண்டைக்குள் சளி இருப்பது போன்ற உணர்வும் அதை கிளியர் பண்ண தொண்டையச் செரும வேண்டியதாக இருந்தால் நாசிப் பின்புறச் சளிதான எனச் சந்தேகிக்கலாம்.
சிலருக்கு பகலில் அதிகம் இல்லாமல் இரவில் இருமும். ஆஸ்த்மாவும் இரவில் இருமலுக்கு காரணமாகலாம் என்ற போதும் ஆஸ்த்மா இருமலானது நெஞ்சிற்குள் சிறிது இறுக்கமாகவும் உணரப்படலாம்.
ஆனால் இதில் தொண்டைக்குள் சளி இருப்பது போன்ற உணர்வுடன் இருமல் வரும். ஆனால் இவ் இருமலானது இரவில் மட்டும்தான் வரும் என்றில்லை. சளி சுரப்பது அதிகமாக இருந்தால் பகலிலும் ஏற்படக் கூடும். உணவு மற்றும் மணங்கள் காரணமாயின்; பகலிலும் கட்டாயம் இருமும் என்பது புரியும்தானே.
காரணம் என்னவென்று தெரியாது நீண்ட நாட்களுக்கு தொடரும் இருமல்களுக்கு முக்கிய காரணம் நாசிப் பின்புறச் சளியாகதான் இருக்கிறது.
நாசியின் பின்புறமாக இறங்கும் சளி காரணமாக குரல் கரகரப்பாகும். தொண்டைவலியும் ஏற்படலாம். காது வலி அல்லது காதுக் குத்திற்கும் நாசியின் பின்புறமாக வருட் சளி யூஸ்ரேசியின் ரியூப்பை
Eustachian tube அடைப்பதால் ஏற்படுவதுண்டு.
நீங்கள் செய்யக் கூடியவை எவை?
நீராகாரங்களை சற்று அதிகம் எடுப்பதால் சளியானது தடிப்பாக இல்லாது நீராளமாக மாறும். இதனால் அது தேங்கி நிற்காது சுலபமாக வழிந்து இருமல், காதுக்குத்து, காது அடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
ஆவி பிடித்தல் மூலம் சுவாசக் குழாயிலிருந்து சளி இளகி சுலபமாக வெளியேற வைக்கலாம்.
முதுகிற்கு ஒன்றும் தலைக்கு இரண்டாகவும் தலையணை வைத்து நெஞ்சு மற்றும் தலைப் பகுதியை உயர்த்திப் படுத்தால் சளியானது தொண்டைக்குள் சிக்கி நிற்காமல் கீழே இறங்கிவிடும். படுக்கையில் இருமாமல் கிடக்க இது உதவலாம்.
ஓவ்வாமைத் தொல்லை இருப்பவர்கள் தலையணை உறை, படுக்கை விரிப்பு போன்றவற்றை சுடுநீரில் துவைப்பதின் மூலம் அல்லது அவற்றை நல்ல வெயிலில் காயப்போடுவதன் மூலம் ஒவ்வாமையைக் கொண்டு வரும் தூசிப் பூச்சித் (Dust mite) தொல்லையிலிருந்து தப்பலாம்.
அதேபோல தலைக்கு வைக்கும் எண்ணெய், முகக் கிறீம், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் மணம் காரணம் எனச் சந்தேகித்தால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
சிகிச்சை
காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து மருத்துவர் சிகிச்சை அளிப்பார்.
பொதுவாக அல்ர்ஜிக்கு ஏதிரான மருந்துகள் தேவைப்படும். முன்னை நாட்களில் பிரபலமாயிருந்த பிரிட்டோன், பெனாட்றில் போன்றவை அசதிதையும் தூக்கத்தையும் கொண்டுவருமாதலால் அவற்றை இப்பொழுது அதிகம் உபயோகிப்பதில்லை. புதிய வகை மருந்துகளான Loratidine, Fexofenadine போன்றவை தற்போது விரும்பப்படுகின்றன.
அத்துடன் மூக்கில் விடும் துளி மருந்துகள், ஸ்ப்ரே மருந்துகள் போன்றவையும் தேவைப்படலாம். கிருமித் தொற்று சில தருணங்களில் ஏற்பட்டால் அன்ரிபயோடிக் மருந்தும் தேவைப்படும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
0.000.0
நாசிப் பின்புறச் சளி
டொக்டர்.எம்.கே.முருகானந்தன். அவர்களின் அருமையான மருத்துவப் பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
எனக்கு மிக அவசியமான தகவல்கள் நன்றி ஐய்யா தாங்கள் கிளீனிக் எங்கே அமைத்துள்ளீர்கள் நான் சிகிச்சை எடுக்க வரவேண்டும் எனக்கு வழி காட்டுங்கள் அய்யா
நாசிப் பின்புறச் சளி
டொக்டர்.எம்.கே.முருகானந்தன். அவர்களின் அருமையான மருத்துவப் பதிவு. எனது
பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
மிகவும் பயனுள்ள பகிர்வுகள்.. நன்றிகள்…
இதுவரை இது எவ்வாறு என்று தெரியாது… விளக்கமாக சொல்லி உள்ளீர்கள் ஐயா… அனைவருக்கும் மிகவும் பயன் தரும் பகிர்வு… நன்றி…
DD ; PERPECT; COMMENT; WELL DONE;’nalla-varuvea’
பயனுள்ள பகிர்வு! இதை படித்து குறிப்பு எடுத்து கொண்டேன்! நன்றி ஐயா!
ஆவி பிடித்தலிலேயே இது வரை சளியை வென்று வருகிறேன் பயனுள்ள தகவல்கள். நன்றி.
நல்ல விளக்கம் பல விபரங்களை தெரிந்து கொண்டேன். என் உறவினர் ஒருவருக்கு மூக்கில் உள்ளே சளி அதிகமாக இருப்பதாக அறுவை சிகிச்சை செய்தார்கள்.ஏன் இதை கரைக்க முடியவில்லை விளக்கினால் நன்றாக இருக்கும்.நன்றி !
பல காரணங்கள் இருக்கலாம்
தெளிவாக மறுமொழி சொல்வது கடினம்
சிறந்த மருத்துவப் பகிர்வு
சிறந்த மருத்துவப் பகிர்வு.
பயனுள்ள தகவல்கள். நன்றி.