Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மே, 2014

‘இரண்டாயிரம் ஆண்டுச் சுமை எமக்கு’ எனப் பாடினார் எமது மூத்த கவிஞர்.

Murugaiyan

இரண்டாயிரம் ஆண்டுகள் என்ன அதற்கும் மேலான காலாச்சார பாரம்பரியம் எமக்கு உண்டு. இன்றும் எங்கள் கலாசாரம் செழுமையாக இருப்பதற்கு அதுவே முக்கிய காரணமாகும்.

ஆனால் சில தடவைகளில் அது சுமையாகவும் இருக்கும் என்பதையே அவர் அவ்வாறு பாடினார்.

இரண்டாயிரம் என்ன, ஐயாயிரம் ஆண்டுப் பெருமையைப் பறையடித்து சங்கு ஊதி மேலும் சுமை ஏற்றத் தயங்காதவர்கள் நாம்.

எமது சுமை கலாசாரத்தில் மட்டுமல்ல. விஞ்ஞானம் சுகாதாரம் என மேலும் பல துறைகளுக்கும் விஸ்தரிக்கிறது.

இல்லாத சுமைகளையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து எம்மினத்தின் முதுகெலும்பை ஒடிக்க எம்மில் பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒளவையார் காலத்திலேயே

‘அணுவைப் பிளந்து ஏழ் கடலைப் புகுத்தியவர்கள்’

நாம் எனப் பெருமையடித்துக் கொள்கிறோம்.

avvai

ஆனால் அவர் பாடிய காலத்தில்
அணு என்ற சொல்லின் அர்த்தம் என்ன?
இன்று அதன் புதிய அர்த்தம்
என்னவெனச் சிந்திக்கிறோமா?

அப்படியான நாம் சுகாதாரத் துறையை மட்டும் விட்டு வைப்போமா?

தமிழர்களாகிய நாம் சங்க காலத்திலேயே சுத்தத்தைக் கடைப்பிடித்தவர்கள், சுகாதாரத்தைப் பேணியவர்கள் என்று பெருமை அடித்துக் கொள்வோம்.

‘அன்றே ஆசாரக்கோவை எழுதப்பட்டுள்ளமை அதற்குச் சான்று’ எனப் பழம் பண்டிதர்கள் ஆதாரம் தேடுவார்கள்.

‘அதிகாலை நித்திரை விட்டெழுந்து கடற்கரை ஓரமாக அல்லது நீர் நிலையை அண்மித்த இடங்களில் தெற்குத் திசையை நோக்கி மூக்கு நுனியைப் பார்த்தபடி மலசலம் கழிக்கவேண்டும் என்று எமக்குச் சைவ வினாவிடையில் போதிக்கப்பட்டுள்ளது.

arumuganavalar

ஆனால் நாம் வடலிகளுக்கும், ஈச்சம் பற்றைகளுக்கும், வயல்களுக்கும் மனித எருக்களைப் பசளையிட்டு காடு வளர்த்துச் சூழலைப் பாதுகாக்க அவ்வாறு செய்தோமா?

அதன்பின் குளக்கரையில் அடிக்கழுவி, அதே நீரால் வாய் கொப்பளித்து, முகம் கழுவி, தலைக்கு நீராடி, ஆடை துவைத்துச் சுத்தமாக ஆலயம் சென்று தரிசனம் செய்த எமது கலாசாரப் பாரம்பரியம் போற்றுதற்குரியது!

புண்ணிய ஸ்தலம் ஒன்றைத் தரிசிக்கும் வாய்ப்பு பல வருடங்களுக்கு முன் கிடைத்தது. அதிகாலையி லேயே பொழுது புலருமுன் அரையிருட்டில் எம்மை புண்ணிய தீர்த்தத் திற்கு அழைத்துச் சென்றார் எமது கைட்.

கடற்கரையில் நாற்றம் தாங்க முடியவில்லை. சேற்று நாற்றமாக்கும் என மூக்கைப் பிடித்துக் கொண்டு நீரினுள் தலையை மூழ்கிவிட்டுத் தலையை வெளியே எடுத்தேன்.

லேசான வெளிச்சத்தில் லட்டு மாதிரி ஏதோ மிதந்து வருகிறது.
கடவுளின் அருட்பிரசாதமாக்கும் எனப் பக்தி யோடு அள்ளியெடுக்கக் கையை நீட்டினால் அருகிலிருந்தவர்
நமுட்டுச் சிரிப்போடு எழுகிறார்.

bath

லுங்கியை உயர்த்திக் கொண்டு ‘பாரம் கழிந்து’ விட்ட திருப்தியோடு காலை அகட்டி வைத்து நடந்து செல்கிறார்.

சிறுவயது ஞாபகம் வருகிறது. எனது மாமாவிற்கு என்னிலும் ஒருசில வயதுகளே அதிகம். அதனால் அவர் எனது விளையாட்டுத் தோழனும் கூட.

அவருக்குக் ‘கிரந்தி’ உடம்பு என்று பாட்டி அடிக்கடி சொல்லுவா.

சிறு காயமானாலும் புண் அவியத் தொடங்கிவிடும்.
அவரின் ஐயா, எனது பாட்டானாருக்கு பட்டணத்தில் வேலை. ஞாயிற்றுக்கிழமைகளில் தான் வீட்டுக்கு வருவார்.

வந்ததும் இவரது புண் அவரது கண்ணைக் குத்தும்.
உடனடியாகவே அதனைச் சுத்தம் செய்யச் சித்தமாவார்.

மாட்டுக் கொட்டிலுக்குப் போய் புதுச்சாணமாக எடுத்து,
ஒரு உருண்டை உருட்டி ஆடுகால் மரத்தடி ஈரலிப்பு மண்ணில்
ஒளித்து வைப்பார்.

பின்புதான் மாமனை கிணத்தடிக்கு இழுத்துக் கொண்டு போய் சோப் போட்டுக் குளிக்க வார்க்கும் சடங்கு தொடங்கும்.

அதனைத் தொடர்வதுதான் உச்சக்கட்டம்.

கண்ணுக்குப் சோப் போட்டுவிட்டு பொடிப்பிள்ளை கண் திறக்க முடியாது அந்தரித்து நிற்கும் நேரம் பார்த்து மறைத்து வைத்திருந்த சாணிக்கட்டியை எடுக்க மெல்ல நழுவுவார்.

புண்ணில் தேய்த்துச் சுத்தப் படுத்துவதற்காக.

மாமனுக்குத் தெரியாதா இவர் செய்யப் போவது.
கண்ணைத் துடைத்துவிட்டுப் பிடிப்பார் ஓட்டம்.
இவர் விட்டுக் கலைப்பார்.
அவர் தப்பியோடுவார்.

கிணற்றுக்கட்டைச் சுற்றி,
வீட்டைச் சுற்றி,
பாட்டியைச் சுற்றி
என ஓட்டப்போட்டி தொடரும்.

ஓடிக் களைத்துப்போன பாட்டா, தப்பிப் போட்டாய் என்ன, அடுத்த கிழமை பார்க்கிறேன் என பல்லில்லாத வாயால் கறுவுவார்.

அன்று ஓடித் தப்பியதால்தான் ஏற்புவலியால் (Tetanus) சாகாமல் இன்று தலைநரைத்தும், இறைசேவை செய்து கொண்டு உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் மாமா.

பசுவின் சாணியில் ஏற்புவலிக் கிருமிகள் நிறைய இருப்பது
இப்பொழுது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே.
அவரது காலத்திலும் தெரிந்து தான் இருந்தது.
ஆயினும் பாட்டா மூதறிஞர் ராஜாஜியின் விசிறி.
கசத் தடுப்பு (TB) ஊசியான பி.சி.ஜி. போடக்கூடாது எனப் போராட்டம் நடத்தியவரல்லவா அந்த மூதறிஞர்.

தினமும் கைராட்ணம் சுத்துமளவிற்கு அவர் சொற்கேட்டு நடந்த சீடப்பிள்ளையான பாட்டா சாணியைத் தேடாமல் வேறு என்ன செய்திருப்பார்.

படித்தவர்கள் கூட அறிவியலை விட
வாழையடி வாழையாக வந்த
பழக்கவழக்கங்களையும் சம்பிரதாயங்களையும்
நம்பிக் கடைப்பிடித்து வந்த காலம் அது.

பாட்டாவும் எப்படி விதிவிலக்காக முடியும்.

முன்பெல்லாம் பிறந்த சில நாட்களுக்குள்ளேயே குழந்தைகள் ஏற்புவலியால் துடித்துச் சாவது சர்வசாதாரணம்.

Neonatal tetanus

பிறந்தவுடன் பொக்குள் புண்ணுக்குச் சாணி வைத்து மருந்து கட்டும் வழக்கம் அப்போதிருந்தது தான் காரணம்.

இன்றும்கூட சாணியால் குழந்தைகளின் உயிர் குடிக்கும் கைங்கரியம் உலகின் சில பகுதிகளில் நடக்கிறதோ நான் அறியேன்.

உலகெங்கும் இன்னும் குழந்தைகள் பிறந்த சில நாட்களுக்குள் ஏற்பு நோயால் இறப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது. 2008ற்கான அறிக்கைப்படி  6658 இவ்வாறு இறந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் 2000-2003 காலப்பகுதியில் 257,000 அவ்வாறான சிசு இறப்புகள் நிகழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது பற்றி விபரமாக அறிய உலக சுகாதார ஸ்தாபனத்தின அறிக்கையைப் படிக்க கிளிக் பண்ணுங்கள் 

பிறப்புக் கால சிசு ஏற்பு வலி நோயின் (Neonatal Tetanus) அறிகுறிகளாக

  • தசைஇறுக்கம்
  • சினப்பு
  • தாய்ப்பாலை உறிஞ்ச முடியாமை
  • விழுங்கவும்  முடியாமை
  • தொட்டவுடன் தசைகள் இறுகி வலிப்பு போல ஏற்படல் எனப் பலவாகும்.

ஆனாலும் இன்னமும் பசும்சாணி எமக்குப் புனிதமானதாகத்தான் இருக்கிறது.

வீட்டைப் பசுஞ்சாணியால் மெழுகித் தான் புனிதப்படுத்துவோம்.

பிள்ளையார் பிடிப்பதும் சாணியால்தான்.

சுளகைச் சாணியால் மெழுகி அதில் உணவு தயாரித்து உண்ட மலந்தின்னிகள் நாம்.

Cow_Dung.
மனித மலத்தைக் கண்டாலே மூக்கைப் பொத்தி மறுபக்கம் திரும்பும் நாம் மாட்டின் மலத்தைப் புனிதமாக, பெருமையாக கையால் தொட்டு அளையவும் தயங்காத ‘புதுமை’ மனிதர்களாக இருக்கிறோம்.

Sulaku

கைப்புண்ணோடு சாணியைக் கையளைந்து கதிமோட்சம் அடைந்த கோடானுகோடி முன்னோர்கள் இறந்தும் பிறவா வரம் பெற்றனரோ?

இவ்வளவு செய்தும் எமது முன்னோர்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக திடகாத்திரமாக நீண்ட நாள் வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு ‘கடவுள் அருளன்றி’ வேறு காரணம் எதுவும் இருக்க முடியுமா?

ஆசாரக்கோவைகளும் சைவவினாவிடைகளும் பாரம்பரியமாக நாம் பேணி வந்தமை எமது சுகாதாரப் பண்புகளைக் காட்டுகிறதா
அல்லது கேடு கெட்ட சனங்கள் இவற்றைப் படித்தாவது திருந்தாதா என்ற தமிழறிஞர்களின் அங்கலாய்ப்பைக் காட்டுகிறதா?

எனது பாட்டியும் சுத்தத்தில் சற்றும் குறைந்தவரல்ல.
அவ எப்பவாவது ஆஸ்பத்திரிக்குப் போய் வந்தாவென்றால்
பெரும் எடுப்புகள் எடுக்க வேண்டியிருக்கும்.

தலைவாசலிலேயே வாளியில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.
வந்ததும் அவ கூப்பாடு போடுவா.
அம்மா வாசலுக்கு ஓடிப்போய் தலையில் நீரூற்றுவா.

பிள்ளைகளாகிய நாங்கள் முன்னே போனால் செப்பல் பேச்சுத்தான் கிடைக்கும். உடுப்பையும் கழற்றி வாளியில் போட்டுவிட்டு கிணத்தடியில் போய் முழுகிவிட்டுத்தான் வீட்டுக்குள் காலடி வைப்பா.

செத்த வீட்டுக்குப் போய்வந்தால் சொல்லவே தேவையில்லை. இரண்டும் தீட்டுத்தான் அவவுக்கு.
‘கண்ட கண்ட சனங்களெல்லாம்’ பிளங்கிற இடத்துக்குப் போட்டு வந்த அசூசைக்காகக் குளிப்பாவோ அல்லது
ஆஸ்பத்திரி அசுத்தம், கிருமிகள் தொற்றுமிடம் என்று உணர்ந்துதான் குளிப்பாவோ எனக்குத் தெரியாது.

எப்படியிருந்த போதும் அது எமது மூதாதையரின்
நல்ல புத்திசாலித்தன மான பழக்கம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆஸ்பத்திரிகளுக்குப் பல்வேறு விதமான நோய்களுடன் பலரும் வருவார்கள். அவற்றில் பல தொற்று நோய்களாக இருக்கும். காய்ச்சல், இருமல், வயிற்றோட்டம், நெருப்புக்காச்சல், செங்கண்மாரி என இப்படி எத்தனையோ இலகுவில் தொற்றக்கூடியன.

அதுவும் ஹொஸ்பிட்டல் இன்பெக்சன் (Hospital acquired infecions) என்பது அதி தீவிரமானது. கடுமையாகத் தாக்கக்கூடியதாகும்.
எனவே வைத்திய சாலைக்குப் போய்வந்தால் குளிப்பது மிக நல்ல பழக்கம்தான்.

டொக்டருடைய கைபட்டாலும் கிருமி பரவிவிடும் எனக் கையைக் கொடுக்கப் பயப்படுகிற அதிதீவிர சுகாதாரச் சிந்தனையாளர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

‘டொக்டர்களே கேடுகெட்டவர்கள்’ அருவருப்பு என்பதே கிடையாது.
பார்த்தாலே சத்தி எடுக்க வரும் அசிங்கங்களுக்குள் எல்லாம் கையை அசூசையின்றி நுழைப்பார்கள்.

அழுகிச் சீழ் வடியும் புண்களை மூக்குச் சுழிக்காமல் சுத்தம் செய்வார்கள்.

Infected wound

குருதி சிந்தும் உறுப்புகளுக்குள் கையை நுழைப் பார்கள்.
நாற்றமடிக்கும் வாய்களுக்குள் விரலைச் சொருகுவார்கள்.
பிறகு நாடியைப் பார்க்கிறோம் என்று எமது கையையும் பிடிப்பார்கள்

என்பது பலரின் அங்கலாய்ப்பு.

நாங்கள் கையுறைகள் உபயோகிப்பதும், அது இல்லாவிடில் ஒவ்வொரு தடவையும் கைகழுவியே எமது கைகள் சுருங்கிவிட்டதும் ஒருவர் கண்களிலும்படுவதில்லை.

  
மல்லிகை சஞ்சிகையில் நான் பல வருடங்களுக்கு முன் எழுதிய கட்டுரை சில மாற்றங்களுடன் மீள் பிரசுரமாகிறது.

Read Full Post »

கூட்டுக் குடும்பமாக அம்மா அப்பா பாட்டன் பாட்டி என வாழ்ந்த காலங்கள் மலையேறிப் போய்விட்டன. இப்பொழுதோ பேசுவதற்கும் துயர்களைப் பகிர்வதற்கும், இன்பங்களைக் கூடிக் கொண்டாடுவதற்கும் முடியவில்லை. கோபிப்பதற்கும் திட்டுவதற்கும் கூட ஆளில்லாது துன்பப்படும் பலரை இப்பொழுது காணக் கூடியதாக உள்ளது.

lonely

நவீன வாழ்வில் வசதிகளுக்குக் குறைவில்லை. எல்லாமே வீட்டிற்குள் கிட்டும். ஆனால் பேசுவதற்கு ஆள்தான் கிட்டாது. கணவன் மனைவி ஓரிரு பிள்ளைகள். ஓவ்வொருவருக்கும் அவரவரது பாடுகள். கணனி அல்லது தொலைகாட்சிப் பெட்டி முன் உட்காருவதுதான் நாள் முழவதும் வேலை. உலகையை உள்ளங்கையில் அடக்கும் தொலைபேசிகளும் இப்பொழுது வந்துவிட்டன.

kk3

உள் அறையில் உலகத்தைச் சுற்றி வரலாம். ஆனால் உள்ளுறையும் உள்ளத்தைத் தொடுவதற்கு யாருமே இல்லாமல் போய்விட்டது. இதுதான்

தனிமை.

ஆம் தனிமை என்பது கொடுமையானது. அது ஓரிருவருக்கானது மாத்திரமல்ல, ஒரு உலகளாவிய பிரச்சனையாக உருவாகி வருகிறது.

தனிமையென்பது எப்பொழுதுமே ஒரே மாதிரியானது அல்ல. ஆளுக்கு ஆள் மாறுபடும். கணவன் இறந்துவிட குழந்தைகளும் வெளிநாடு சென்றுவிட நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் தனிமை ஒருவிதமானது. அதே நேரம் வகுப்பறை முழுவதும் சகமாணவர்கள் இருந்தாலும் அவர்களுடன் நட்புப் பெற முடியாத நிலையிலுள்ள பாடசாiலை செல்லும் ஒரு பிள்ளையின் தனிமை முற்றிலும் வேறானது.

தனிமையும் தனிமையுணர்வும்

ஆம்! தனிமை வேறு. தனிமையுணர்வு வேறு. தனிமை என்பது வெறுமனே உடல் ரீதியாகத் தனித்திருத்தல் எனலாம். மாறாக தனிமையுணர்வு என்பது ஒரு மனநிலையாகும். சுற்றிவரப் பலர் இருக்கலாம், சுவார்ஸமான பல விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் அவை எவற்றோடும் உளமார ஒன்றுபடாத நிலை இது. மற்றொரு விதத்தில் சொன்னால் வெறுமை உணர்வு, சூழலிலிருந்து அந்நியப்பட்ட மனநிலை, அல்லது தனிமைப்பட்டதான உணர்வு எனலாம்.

100

“I Feel lonely”  என ஆங்கிலத்தில் சொல்வதை அடிக்கடி கேட்பதுண்டு. ஆனால் ‘நான் தனிமையாக உணர்கிறேன்’ என்று வெளிப்படையாகவோ அல்லது ‘பேச்சுத் துணைக்குக் கூட யாரும் இல்லை’  என மறைமுகமாகவோ சொல்வது எமது மரபில் மிகவும் குறைவு எனலாம். எமது உணர்வுகளுக்கு சொல்வடிவம் கொடுப்பதில் நாம் பின்தங்கி; நிற்கிறோம்.

அண்மையில் இராணுவத்தில் இணைக்கபட்ட பல பெண்கள் விட்டு வந்ததாகவும் அல்லது நோயென ஆஸ்பத்திரில் படுத்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறோம். இதற்கான காரணங்களை அரசியல் ரீதியாகவே பலரும் அணுகுகிறார்கள். ஆனால் முற்று முழுதாக மொழி கலாசார ரீதியாக அந்நியப்பட்ட சூழலில் ஏற்பட்ட தனிமையுணர்வும் காரணமாக இருந்திருக்கலாம்.

தனிமையுணர்வு ஏற்படக் காரணங்கள் என்ன?

பாரம்பரிய அம்சங்கள் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. பல குடும்பங்களில் ஒருவரோடு ஒருவர் மனம் விட்டுக் கதைப்பதில்லை. மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கி வாழும். பழக்கம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள்

சூழலில் ஏற்படும மாற்றங்களும் நிறையவே காரணமாகின்றன. முற்றிலும் புதிய சூழலுக்கு இடம் மாறுதல் முக்கியமானது. சொந்த வீடு, சொந்த மக்கள், சொந்தப் பாசை, சொந்த உறவுகள் என வாழ்ந்தவர்கள் திடீரென புலம் பெயர்ந்து சென்று அந்நிய தேசத்தில் போடப்படும்போது தனிமையுணர்வு பலருக்கும் ஏற்படுகிறது. புதிய தொழிலில் இணையும்போதும் இந்த உணர்வு ஏற்படலாம்.

ஒரு சிலருக்கு சுற்றிவர நண்பர்கள், குடும்ப உறவினர் இருந்தும் தனிமையுணர்வு ஏற்படக் கூடும். அவர்களில் ஓரிருவராவது நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லாதபோதே தனிமை உணர்வு ஏற்பட வாய்ப்பு அதிகமாகிறது.

மணமுறிவு, விவாகரத்து, துணைவரின் மரணம் போன்ற குடும்பப் பிரிவுகள் தனிமையை ஏற்படுத்தவே செய்யும். நெருங்கிய நண்பரின், உறவினரின் பிரிவு,மரணம் போன்றவையும் அவ்வாறே தனிமை உணர்விற்குக் காரணமாகலாம்.

ஒவ்வொருவருக்கும் தன்னைப் பற்றிய சுயமதிப்பு உயர்வாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் தனது உடலைப் பற்றி, அழகைப் பற்றி, தொழிலைப் பற்றி அல்லது வேறு ஏதாவது விடயம் பற்றிய தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களும் சற்று ஒதுங்கியிருக்க முயல்வார்கள். இதனால் தனிமை உணர்வும் ஏற்படலாம்.

வேறு உள நோய்களும் காரணமாவதுண்டு.

எத்தகைய பாதிப்புகள் எற்படலாம்.

தனிமையாக உணரும் ஒருவருக்கு உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பது தெரிந்ததே. நாம் உணராத அளவிற்கு பலவிதமானவையாக அவை இருக்கலாம். இவை யாவும் நேரடியாக தனிமையுணர்வுடன் மட்டுமே தொடர்புடையன அல்ல என்றபோதும் ஏனைய காரணங்களுடன் சேர்ந்து இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

100

  • மன அழுத்தம் அதிகரிக்கும். உணர்வுகளை மற்றவர்களுடன் பகிரப் பின்நிற்பதால் தனக்குள்தானே உழன்று இந்நிலை வரக் கூடும்.
  • எரிச்சல், மன அமைதியின்மை, மனவிரக்தி போன்றவை வரலாம். அவை தீவிரமடைந்து தற்கொலை பற்றிய எண்ணங்களுக்கும் அடிப்படையாகலாம். தூக்கக் குறைபாடு ஏற்படலாம். அதன் தொடர்ச்சியாக பகல் நேரச் சோம்பலும் ஏற்படுகிறது.
  • மறதி அதிகரிக்கலாம். இதனால் கற்கைச் செயற்பாடுகள் பாதிப்புறலாம்.
  • சரியான தருணத்தில் சரியான தீர்மானங்களை எடுப்பதில் தாமதமும் சிரமங்களும் ஏற்படலாம்.
  • சமூகவிரோத செயற்பாடுகளில் இவர்கள் இறங்குவது அதிகம். இதைக் கள ஆய்வுகள் நிருபித்துள்ளன.
  • மது, போதைப் பொருட்கள், புகைத்தல் போன்றவற்றிற்கு அடிமையாகும் சாத்தியம் அதிகம்.
  • பக்கவாதம், மாரடைப்பு போன்றவை வருவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
  • அல்ஜிமர் நோய் பிற்காலத்தில் வருவதற்கு இதுவும் ஒரு காரணம் எனச் சொல்லப்படுகிறது.

தடுப்பது  எப்படி

  • முதலாவதாக ஒருவர் தனக்கு தனிமை உணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் தானே புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொண்டால் அதை மாற்றுவதற்கு தனது வாழ்வில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வது சிரமமில்லை.
  • தனிமையுணர்வால் தனது வாழ்க்கையில் என்ன பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதையிட்டு சிந்திக்க வேண்டும். பாதிப்புகள் உள நலம் சார்ந்ததாகவோ உடல் ஆரோக்கியம் கெடுவதாகவோ இருக்கலாம்.
  • உங்களோடு ஒத்த சிந்தனைகளும் உணர்வுகளும் உள்ளவர்களோடு உறவுகளை ஏற்படுத்துங்கள். ஏற்கனவே உள்ளவற்றை வலுப்படுத்துங்கள்.
  • make_friendship_day_special_600x450
  • உங்களைப் பற்றிய சிந்தனைகளுக்கு அப்பால் மற்றவர்களது துன்பங்களையும் போதாமைகளையும் கவனத்தில் எடுங்கள். அவர்களுக்கு உதவும் ஏதாவது சமூக சேவையில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் மனம் விரிவடையும். சமூக ஊடாட்டம் அதிகரிக்கும்.
  • நல்லது நடக்கும் என நம்புங்கள். தாங்கள் மற்றவர்களால் நிராகரிக்கப்பட்டதான உணர்வு பாதிப்பை ஏற்படுத்தும். மாறாக நேர்மறை எண்ணங்களை வளர்ப்பதன் மூலம் சுற்றுச் சூழலில் உள்ளவர்களுடன் உறவை வளர்த்துக் கொள்ள முடியும்.
  • உடல் ரீதியான தனிமை தவிர்க்க முடியாதிருந்தால் தொலைபேசி, இணையம், ஸ்கைப், பேஸ்புக் போன்ற இன்றைய நவீன வசதிகளைப் பயன்படுத்தி வெறுமையிலிருந்து விடுபடுங்கள்.

தனிமையுணர்வு வாழ்க்கைத் தரத்தையே நரகமாக்கிவிடும். திடமிருந்தால் அதிலிருந்து விடுபடமுடியும். அப்பொழுது நீங்கள் மாத்திரமின்றி சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாக நம்பிக்கையோட வாழ வழிபிறக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எனது ஹாய் நலமா புளக்கில் (Feb 9, 2014) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (SL)

குடும்ப மருத்துவர்

0.0.0. .0.0.0.

Read Full Post »

பெருமையடித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி. 

“கிழங்கை இவருக்கு நான் கண்ணிலையும் காட்டிறதில்லை. பாவம் விருப்பம்தான் ஆளுக்கு. நான்தான் அவற்ரை வாயைக் கட்டிப் போட்டன்” வழமையான செக் அப்பிற்கு வந்தபோது அவருடைய இரத்த சீனியின் அளவு நல்ல கட்டுப்பாட்டில் இருப்பதாக திருப்தியடைந்து மகிழ்ச்சியுடன் பாராட்டினேன். 

image001

உருளைக்கிழங்கு கொடுக்காத தன்னுடைய கெட்டித்தனத்தால்தான் அவ்வாறு நடந்தது என பெரிய கடகத்தில் புகழைத் தன் தலையில் சுமந்து கொண்டார்.

நொட்டைச் சாப்பாடுகளைத் தவிர்த்து காய்கறி பழவகைளை அதிகம் சாப்பிட்டும், வாசிகசாலைத் திண்ணையில் குந்தியிருந்து அரட்டை அடிப்பதைத் துறந்து கடற்கரை வரை நடைப் பயிற்சி செய்தும் அவர் செய்த சுய முயற்சிகள் யாவும் அவளது பெருவாயால் தூர்வாரி மூடப்பட்டன.

index12

“நிலத்திற்கு கீழே விளையுறதுகளை கண்ணிலையும் காட்டக் கூடாது என்று டொக்டர் சொன்னதை நான் மறக்கிறதே இல்லை” என்றார் மற்றொருவர். கரட், உருளைக்கிழங்கு, வத்தாளை, கரணை, மரவெள்ளி, பனங்கிழங்கு, இவை யாவுமே நிலத்தின் கீழ் விளையும் கிழங்குகள்தான். ராபு, நோகோல், கரட், பீட்ரூட், இவையும் அவ்வாறுதான் மண்ணுள் விளைபவைதான்.

அந்த டொக்டர் மண்ணுக்கு கீழ் போய் எவ்வளவு காலமோ தெரியாது. அந்தக் காலத்தில் இருந்த மருத்துவ மற்றும் விஞ்ஞான அறிவைக் கொண்டு அவர் சொல்லியிருக்கக் கூடும் அல்லது இவர் தவறாக அர்த்ப்படுத்தியிருப்பார். ஆனால் இன்றும் அப்படியா?

உருளைக் கிழங்கு

உலகில் மிக அதிகமாகப் பயிரிடப்படும் உணவு வகைகளில் உருளைக் கிழங்கு முன்னணியில் நிற்கிறது. பருவகால வேறுபாடுகளைக் கடந்து வருடம் பூராவும் உலகெங்கும் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதற்குக் காரணம் எல்லாத் திசைகளிலும் இது விளைவிக்கப்படுவதே ஆகும்.

???????????????????????????????????????????????????????????????????????

தாவர வர்க்கத்தில் இது தக்காளி, கத்தரி, மிளகு போன்றவற்றின் இனத்தைச் சேர்ந்தது. சரியான பருவத்தில் இதை கிண்டி அறுவடை செய்யாது விட்டால் அது வளர்ந்து பூத்துக் காய்த்து தக்காளி போன்ற ஒரு பழத்தைத் தரும்.

அவ்வாறு பூத்துக் காய்ப்பதற்கு தேவையான சக்தியை வழங்குவதற்காக தனது கிழங்கில் சேர்த்து வைக்கிறது. ஆனால் நாம் கிழங்கு நல்ல பருவத்தில் இருக்கும்போது கிண்டி எடுப்பதால் அதன் வாழ்க்கைச் சக்கரம் பூர்த்தியடைவதைத் தடுக்கிறோம்.

உருளைக் கிழங்கின் போசாக்கு

உருளைக் கிழங்கு முக்கியமான ஒரு மாப் பொருள் உணவாகும். அரிசி, கோதுமை போன்றவையும் மாப்பொருள் உணவுகள்தான். சமைக்காத அரியில் 80 சதவிகிதமும், உருளைக்கிழங்கில் 20, வத்தாளையில் 20 மரவெள்ளி 38 சதவிகிதம் என மாப்பொருள் இருந்தபோதும் சமைத்தபின் இவற்றில் பெரு மாற்றங்கள் ஏற்படுகின்றன.

மாப்பொருள் உணவுகள் ஜீரணமடைந்து குளுக்கோசாக குருதியில் கலந்து எமது உடலின் செயற்பாடுகளுக்கான சக்தியை வழங்கும். சக்தி கலோரி அலகுகளில் குறிப்பிடப்படுவதை அறிவீர்கள்.

nutr3

சமைக்காத உருளைக் கிழங்கு 100 கிராமில் 70 கலோரிகள் இருக்கிறது. புழங்கல் அரிசியில் 77 கலோரிகள் உள்ளது. எனவே ஏறத்தாள சமஅளவே அரிசிலும் உருளைக் கிழங்கிலும் உள்ளது.

அதே நேரம் அவித்த உருளைக் கிழங்கில் 80ம், சுட்டதில் 85ம், மசித்ததில் 108ம்,  பொரித்தில் 150 கலோரிகளும் உண்டு. அதே போல அரிசியை அவித்து சோறாக்கும் போது அதன் கலோரி வலு அதிகமாகவே செய்யும். ஆனால் பொரிக்கும் போது அல்லது பட்டர் போன்றவை சேர்ந்து மசியலாக்கும்போது உருளைக் கிழங்கின் கலோரி வலு அதீதமாகக் அதிகரிப்பதைக் மேலே கண்டிர்கள்

IMG_2271

மாப் பொருளைப் பிரதானமாக இது வழங்குகின்ற போதும் இதில் விட்டமின் C மிக அதிகம் உண்டு. ஒரு கப் அவித்த உருளைக் கிழங்கானது எமது தினசரி விட்டமின் C தேவையின் கால்வாசியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றைத் தவிர vitamin B6, copper, potassium, manganese ஆகியவையும் தாராளமாகக் கிடைக்கின்றன. எனவே நல்ல உணவுதான்.

மிக முக்கியமாகக் குறிப்பட வேண்டியது அதிலுள்ள நார்ப்பொருள் ஆகும். ஒரு கப் அவித்த உருளைக் கிழங்கில் சுமார் 2.93 கிராம் உள்ளது. அமெரிக்க விவசாய ஆய்வுத் திணைக்களமானது இதில் 60 ற்கு மேற்பட்ட phytochemicals மற்றும் விட்டமின்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. இவற்றுள் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒட்சிசன் எதிரிகளான (antioxidents) carotenoids, flavonoids போன்றவையும் அடங்குகின்றன.

இவற்றைத் தவிர பிரஷரைக் கட்டுப்படுத்தக் கூடிய இரசாயனமான  kukoamines   உருளைக்கிழங்கில் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் பிரஷரைக் கட்டுப்படுத்துவதற்காக உருளைக் கிழங்கைச் சாப்பிடுங்கள் என எந்த மருத்துவரும் சிபார்சு செய்ய மாட்டார்கள். ஏனெனில் எவ்வளவு சாப்பிட்டால் எவ்வளவு குறையும் அதன் பலன் எவ்வளவு நேரத்திற்கு நீடிக்கும் என்பது பற்றிய தெளிவான முடிவுகள் எதுவும் இதுவரை கிடையாது.

உருளைக் கிழங்கைச் சமைக்கும்போது நன்கு கழுவிய பின் தோல் நீக்காமல் சமைப்பது அவசியம். ஏனெனில் அதிலுள்ள நார்ப்பொருளில் பெரும்பகுதி அதிலேயே உள்ளது. விற்றமின்களும் தாதுப்பொருட்களும் அதில் அடங்கியுள்ளன.

உணவுகளில் மாப்பொருள் ஒப்பீடு

ஒரு முட்டையின் அளவுடைய அவித்த உருளைக்கிழங்கு, ஒரு மேசைக் கரண்டி சோறு, ஒரு மெல்லிய பாண் துண்டு ஒரு சிறிய நானில் (NAN) ¼ துண்டு, கோர்ன் பிளேக் இரு மேசைக் கரண்டி, ஆகியவற்றில் கிட்டத்தட்ட ஒரேயளவு மாப்பொருள் உண்டு.

பழங்களைப் பொறுத்தரையில் அவற்றில் மாப் பொருள் குறைவு. ஒவ்வொரு அப்பிள், ஒரேன்ஜ், பியேர்ஸ், சிறிய வாழைப்பழம் ஆகியவற்றிலும் கிட்டத்தட்ட அதேயளவு மாப்பொருள் உண்டு. எனவேதான் நீரிழிவு உள்ளவர்களை மாப்பொருள் அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்து காய்கறி பழவகைகளை அதிகம் உண்ணும்படி சிபார்சு செய்யப்படுகிறது.

ஆனால் அதேநேரம் மாப்பொருள் உணவுகள் வேண்டாதவை அல்ல. எமது உடலுக்கு அவசியம் என்பதை மறக்கக் கூடாது. ஏனெனில் அவைதான் எமது இயக்கதிற்கு அவசியமான சக்தியைக் கொடுக்கின்றன. இது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.

நீரிழிவும் உருளைக் கிழங்கும்

உண்மையில் உருளைக் கிழங்கு நீரிழிவாளர்களுக்கு ஆகாத உணவா?

நீரிழிவு உள்ளவர்கள் மாப்பொருள் உணவுகளான சோறு, பாண், இடியப்பம் பிட்டு போன்றவற்றை உண்பதைப் போலவே உருளைக் கிழங்கையும் உண்ணலாம். ஆனால் அவற்றின் அளவுகளில் கவனம் எடுக்க வேண்டும். உருளைக் கிழங்கு எமது பிரதான உணவு அல்ல. நாம் அவற்றை பொதுவாக பிரதான உணவுகளான சோறு இடியப்பம் பிட்டு பாண் போன்றவற்றுடன் கறியாக கலந்து உண்கிறோம்.

எனவே இரண்டையும் அளவு கணக்கின்றி உண்ணக் கூடாது. உருளைக் கிழங்கை அதிகம் எடுத்தால் அதற்கேற்ப பிரதான உணவின் அளவில் சற்றுக் குறைக்க வேண்டும்.

உருளைக் கிழங்கு சோறு இரண்டிலும் நார்ப்பொருள் உள்ள போதும் மேலும் அதிக நார்ப்பொருள் உள்ள காய்கறி;களை சேர்த்து உண்பது நல்லது. குருதியில் சீனியின் அளவு திடீரென அதிகரிப்பதை இது குறைக்கும். கீரை வகைகள், ஏனைய நார்த்தன்மையுள்ள காய்கறிகள் போன்றவை அவ்வாறு சேர்த்து உண்பதற்கு ஏற்றவையாகும் ஆனால் அதற்கு மேல் பயற்று இன வகை உணவுகளான பருப்பு பயறு கௌபீ சோயா கடலை போஞ்சி பயிற்றை போன்றவற்றை சேர்த்து உண்பது மேலாகும்.

இவற்றுடன் முட்டை, மீன், கொழுப்பற்ற இறைச்சி போன்றவற்றை தேவைக்கு ஏற்றளவு சேர்த்துக்கொள்ளலாம்.

சமைக்கும்போது எண்ணெய், நெய், பட்டர் போன்றவற்றில் உருளைக் கிழங்கை வதக்கிச் சமைத்தல் நல்லதல்ல. ஏனெனில் அதன் கலோரி வலு அதிகரிக்கும். அது நீரிழிவு கொலஸ்டரோல் அதீத எடை உள்ளவர்களுக்கு அவ்வாறே ஏற்றதல்;ல.

பொரித்த உருளைக் கிழங்கின் கலோரி வலுவானது அவித்ததை விட இரண்டு மடங்கு அதிகம் என்பதை ஏற்கனவே கண்டோம். எனவே நீரிழிவாளர்கள் மட்டுமின்றி தமது ஆரோக்கியத்தில் அக்கறை உள்ள எவரும் அவற்றை தவிர்ப்பது நல்லது. அல்லது ஒரிரு துண்டுகள் என மட்டுப்படுத்திக் கொள்வது நல்லது

இன்றைய இளைய வயதினருக்கு ஏற்றவிதமாக பல உள்ளுர் வெளிநாட்டு உணவகங்கள் பொட்டேட்டோ சிப்சை பரிமாறுகிறார்கள். இது எமது உருளைக் கிழங்கு பொரியலைப் போன்றதே. மிக அதிக கலோரி வலு கொண்டதாகும்.

உருளைக் கிழங்கில் பெரு விருப்பம் கொண்டவர்கள் சலட்டாகத் தயாரித்து உண்ணலாம். அவித்த உருளைக் கிழங்கு துண்டுகளுடன் அவித்த போஞ்சி கோவா, சலட் இலை போன்றவை சேர்ந்த சலட் ஆரோக்கியமான உணவாகும். 

Salad3

புதிய உருளைக் கிழங்கை ஒருபோதும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது. வைத்தால் அதிலுள்ள சீனிச் சத்து அதிகமாவதுடன் அதன் சுவையும் மணமும் கெட்டுவிடும். வெளியே பாதுகாக்கும் போதும் வெங்காயத்துடன் சேர்த்து வைக்கக் கூடாது. பேப்பர் பையில் சேமித்து வைப்பது நல்லது. சரியான முறையில் சேமித்தால் 2 மாதம் வரை கெடாது இருக்கும் என்கிறார்கள்

சமைத்த உருளைக் கிழங்கை நீண்ட நாட்களுக்கு பிரிட்ஜில் வைத்தாலும் கெடாது இருக்கும் என்கிறார்கள் இல்லதரசிகள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

பெயர் சொல்லக் கூடிய ஈழத்துத் தமிழ் சஞ்சிகைகளில் இளையதாக இருந்தபோதும் தரமானதாக வெளிவருவது ஜீவநதி என்றே சொல்லலாம். வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிற சூழ்நிலையிலும் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியது.

சித்திரை 2014 அதன் 64 வது இதழாகும். வாசிப்பனுபவம் பயனுள்ளதாகவும் இதமளிப்பதாகவும் இருந்தது.

சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் நூல் விமர்சனம் எனப் பலவும் இந்த இதழை அலங்கரித்தாலும் காத்திரமானதாகவும் பயனுள்ளதாகவும் பல புதிய தகவல்களை அறியத்தருவதாகவும் அமைத்திருப்பவை கட்டுரைகள் எனத் துணிந்து சொல்லலாம்.

சிக்மண்ட் பிராய்ட் பற்றிய ஈழத்துக் கவியின் கட்டுரை மிக அருமையாக இருந்தது. ‘உளவியல் பகுப்பாய்வின் தந்தை’ எனப் போற்றப்பட்டவர் அவர். உணர்வு மனம் ஆழ்மனம் என மனித மனத்தைப் பிரித்த அவர் உளவியல் நோய்களுக்கு அடிப்படை பாலியலே என்று நம்பினார். அக் கருத்துக்களில் பல மாற்றங்கள் வந்துவிட்டபோதும் மனத்தை விஞ்ஞான பூர்வமாக ஆய முனைந்த அவரது பங்களிப்பு மிக முக்கியமானது.

ஆனால் இக்கட்டுரையில் ஈழத்துக் கவி அவரது பாலியல் கருத்துகளுக்கு அப்பால் போர் பற்றிய அவதானிப்புகளுக்கே முனைப்பு கொடுத்து எழுதியிருகக்கிறார். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக போர்ச்சூழலில் அழுந்திய எங்களுக்கு போர் ஏன் என்பது முதல் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி வரையாக பல புதிய தரிசனங்களைத் தந்திருக்க்pறார்.

கெகிறாவ ஸீலைஹா வின் நெல்சன் மண்டேலா பற்றிய கட்டுரை மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. மண்டேலா பற்றிய பல கட்டுரைகள் அவரது மறைவை ஒட்டி அண்மையில் வெளிவந்திருந்தபோதும் இவரது கட்டுரை தனித்துவமானது. அவரது சொந்த வாழ்வு. பொதுவாழ்விற்கான அவரது தியாகங்கள், அத்தகைய வாழ்வு காரணமாக இழக்க நேர்ந்த உணர்வுபூர்வமான விடங்கள், மன வைராக்கியம், அவரது சாதனைகள் எனப் பலதரப்படப் பேசுகிறது. இருந்தபோதும் அவருள் மறைந்திருந்த அன்பு நெஞ்சம் பற்றிய குறிப்புகள் நெகிழவைப்பனவையாக இருந்தது.

மஹாத்மா காந்தியின் பின்னர் அன்பு அஹிம்சை சுயநலம் பேணாமை, மன்னித்தல், தன் தவறுகளையும் பகிரங்கமாக ஏற்கவும் மன்னிப்பு கேட்கவும் தயங்காத ஒரே ஒரு தலைவராக இருந்திருக்கிறார்.

இதே கட்டுரையில் ‘விடுதலையை நோக்கிய நீண்ட நடை’ என்ற அவரது சுயசரிதை நூலிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டிருந்த சில பகுதிகள் தனிமைச் சிறையில் வாடிய அவரது அக உணர்வுகளை வெளிப்படுத்துவனவாக இருந்தது.

இருந்தபோதும் இந்தக் கட்டுரையை அவர் பற்றிய பகுதியை ஒரு இதழிலும், அவரது எழுத்தை மற்றொரு இதழிலுமாக இரு வௌ;வேறு தனித்தனிக் கட்டுரைகளாக வெளியிட்டிருந்தால் கூடிய அவதானிப்பைப் பெற்றிருக்கும் என எண்ணத் தோன்றியது.

ஒரு மருத்துவன் என்ற ரீதியிலும் முதுமையின் வாசற்படியில் நிற்பவன் என்ற ரீதியிலும் முருகபூபதியின் நடைப்பயிற்சிக் கட்டுரையை இரசித்துப்படித்தேன். அவரைப்போலவே சின்னஞ்சிறு வயதில் ரயிலில் சென்று, பெயர் தெரியா ஊரில் இறங்கி இருள் கவ்வும் நேரம் யானை லத்திகளைக் கண்டு பயந்து கொண்டே நீண்டதூரம் நடந்து கதிர்காமத்தை அடைந்தது ஞாபகத்திற்கு வந்தது. செல்லக் கதிர்காமம், கதிரமலை யாவும் அக்காலத்தில் பொடிநடையில்தான் முடிந்தது.

சுவார்ஸமான கட்டுரை. எழுத்தாளனாக மட்டுமின்றி பத்திகையாளாகவும் இருந்தததால் மூன்று பக்கக் கட்டுரையை ஒரே மூச்சில் படிக்க வைக்கும்படியான நடை. ‘மனைவியையும் பேச்சுத் துணைக்கு அழைத்துச் சென்றால் என்ன நடக்கும்’ என்பதை ஒரு வரியில் அழகாகச் சொல்லியிருக்கிறார்.

நீங்களே மீண்டும் படித்துப் பாருங்கள்.

இருந்தபோதும் இன்று மனிதர்களின் ஆயுள் குறைந்துவிட்டது என்ற அவரது கூற்றோடு என்னால் ஒத்துப் போக முடியவில்லை. அன்றைய சராசரி ஆயுள் 50, 60தைத் தாண்ட முடியாதிருந்தது. ஆனால் இன்று சராசரி ஆயுள் 75 தாண்டிவிட்டது.  80, 90 வயதான பலரைச் நித்தமும் காண்கிறோம். சதம் அடித்தவர்களைக் காண்பதென்பது அரிதானது அல்ல என்றாகிவிட்டது.

அ.யேசுராசாவின் கட்டுரை தமிழக புத்தக்திருவிழா பற்றிய அவரது நேரடி அனுபவத்தை புகைப்படங்களுடன் சிறப்பாகச் சொல்கிறது. புத்தகத் திருவிழாவில் ரவி தமிழ்வாணனின் திருவிளையாடலையும் நாசூக்காகச் சொல்லியிருந்தார்.

‘1950 வரையான காலகட்டத்து நவீன தமிழ்க் கவிதை’ என்ற அம்மன்கிளி முருகதாஸ் அவர்களின் தொடர் பாரதியின் பங்களிப்பு பற்றிச் சொல்கிறது. அருமையான உதாரணங்களுடன் கூடிய உபயோகமான படைப்பாக இருந்தது.

‘கம்பனை நகலெடுத்த திரையிசைப் பாடலாசிரியர்கள்’ என்ற இ.சு.முரளீதரனின் கட்டுரை மிகுந்த தேடலுடன் எழுதப்பட்டது. நாங்கள் இரசித்த பல திரைப்பாடல் வரிகளுக்கு, கம்பனின் கற்பனை வளம் மூலமாக இருந்த செய்தி என்னை ஆச்சரியப்பட வைத்தது.

சிறுகதைகள் இரண்டு. மலையகம் சார்ந்தது ஒன்று. யாழ்மண்ணும் வெளிநாடும் கலந்தது மற்றொன்று. மல்லிகை சி.குமாரின் ‘பாலங்கள்’ கதையானது நல்லவர் போல கதையளந்து மலையக தொழிலாளர்களை கொள்ளையடிக்கும் யாழ்ப்பாணத்து முதலாளியின் சாதித் திமிர் பற்றிப் பேசுகிறது. முதாலாளிக்கு எதிராகவும் சாதீயத்திற்கு எதிராகவும் தொழிலாள வர்க்கம் இணைந்து குரல் எழுப்புகிறது.

வி.ஜீவகுமாரனின் ‘நான் அவன் இல்லை’ எதையும் அழுத்தித் தெளிவித்து போதனை செய்யும் கதையல்ல. காதலி இவனை ஏமாற்றி பணக்காரனுக்கு தலைநீட்ட அதைத் தாங்க முடியாது வெளிநாடு சென்று உழைத்த போதும் அவளில் குற்றம் காண முடியாதளவு அவளில் உண்மை அன்பு வைத்தவனின் கதை. மிக அழகாக நெய்யப்பட்டிருக்கிறது. அவனின் உணர்வுகளை மட்டும் சிறு சிறு சம்பவங்களின் நினைவலைகளாகப் பேசுகிறது. நேர்த்தியான படைப்பு.

“..:செத்தவன் பெண்டிலைக் கட்டினாலும் விட்டவன் பெண்டிலைக் கட்டக்கூடாது..” என்ற வசனமானது பெண் வாயிலிருந்து வந்தபோதும் ஆணாதிக்க சிந்தனையின் மறைமுக வெளிப்பாடாக உறுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.

கவிதைகள் பல இருந்தபோதும் பெரும்பாலானவை மனதில் சலனத்தை எழுப்பவில்லை. பிணங்களையும், புதைகுழிகளையும், குண்டு வீச்சுகளையும் இன்னும் எவ்வளவு நாட்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்களோ தெரியவில்லை. இருந்தபோதும் சித்ரா சின்னராஜாவின் கவிதையின் கடைசி வரிகள் என்னைப் பல கோணங்களில் சிந்திக் வைத்தன என்பது என்னவோ உண்மைதான். ‘எமது மக்கள் முள்ளிவாய்க்காலில் யாருக்காக இரத்தம் சிந்தினார்கள்’

அரிதாவின் ‘பிரிவு’ கவிதையின் சொல்லாடல் சற்று வித்தியாசமாக பிரிவின் இயல்புத்தன்மை பற்றிப் பேசுகிறது.

கருணாகரனின் கவிதைகள் மூன்று பிரசுரமாகியுள்ளன. அற்புதமாக எழுதப்பட்ட கவிதைகள். அவை எதையும் எமக்குப் போதிக்க முற்படவில்லை. யாரையும் நோகவில்லை. அறம் பாடவில்லை. ஆனால் அற்புதமான சொற்கோர்வைகள், சிறப்பான குறியீடுகள்.

நான் இரசித்த வரிகளில் ஒன்று ‘.. நிழலைப் பெய்யும் மரம் ஒருபோதும் உறங்குவதில்லை நிழலில்’.

மற்றொரு கவிதையில் ‘ .. அவள் உறங்கிக் கொண்டிருந்தாள் மாத்திரையினுள்ளே…’ அருமை.

நான் ஏற்கனவே படித்திருந்த நல்ல நாவலான ‘குடிமைகள்’ பற்றி நூல் விமர்சனப் பகுதியில் ஜனப்பிரியன் எழுதியுள்ளார். முற்போக்கு சிந்தனைகள், சாதீயத்திற்கு எதிரான தீர்க்கமான குரல், பெண்களின் மன உலகின் வௌ;வேறு கோலங்கள் போன்றவற்றை தெணியான் எவ்வாறு தனது நாவலில் வெளிப்படுத்தியுள்ளார் என்பதை கட்டுரை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். தெணியானின் பாத்திரச் சித்தரிப்புகளையும், மொழிநடையையும் சிலாகித்துள்ளார்.

மொத்தத்தில் ஜீவநதியின் இந்த இதழ் சிறப்பாக அமைந்திருக்கிறது.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0

 

Read Full Post »

வறுத்த கச்சான் வாங்கி வந்து கொறித்துக் கொண்டிருந்தேன். கணவனும் மனைவியுமாக இரு விருந்தினர்கள் திடீர் விஜயம் செய்த போது இது நடந்தது.

“சாப்பிடுங்கோவன்” எனக் கொடுத்தேன். நாக்கு வெளியே தொங்கவிடாத குறையாகக் கணவன் முகம் மலர்ந்தது.

“சீ வேண்டாம். இவருக்கு நான் கொழுப்புச் சாப்பாடு ஒண்டுமே குடுக்கிறதில்லை” என அவரது மனைவி தடுத்தார். அவருக்கு சற்றுப் பிரஷர் இருக்கிறது.

 

உண்மையில் அவருக்கு அடியோடு கொழுப்பு உணவு கூடாதா?

தினமும் ஓரளவு நல்ல கொழுப்பை உணவில் சேர்ப்பது அவசியம். அவை உடல் நலத்திற்கு நல்லதுசெய்யும்.

அத்தகைய கொழுப்பு மீனிலுள்ள கொழுப்பு, கொட்டைகள், விதைகள். அவகாடோ பழம், ஒலிவ் ஓயில்சூரியகாந்தி எண்ணெய், கோர்ன் எண்ணெய் போன்ற பலவற்றிலும் உண்டு.

 அத்தகைய கொழுப்புகள் ஏன் அவசியம்

  • அவற்றில் விற்றமின் E, செலினியம் உட்பட பல அன்ரி ஒட்சிடனட்ஸ் (antioxidants) உண்டு

  • எமது உணவில் உள்ள கொழுப்பில் கரையக் கூடிய விற்றமின்களை உணவுக் குழாய் உறுஞ்சுவதற்கு அவை உதவும்.

  • இதய நோய், நீரிழிவு, புற்றுநோய், அழற்சி நோய்கள் (inflammation), புற்று நோய்கள், தசைப்பிடிப்பு நோய்கள் போன்ற பலவேறு நாட்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்க அவை உதவும்.

  • உயர் இரத்த அழுத்தம், குருதியில் அதிகரித்த, கொலஸ்டரோல், மற்றும் அழற்சி நோய்களைக் கட்டுப்படுத்தவும் அவை உதவும்.

  • மூளை வளர்ச்சி அதன் சிறப்பான செயற்பாடு போன்றவற்றி்ற்கு ஒமேகா 3 கொழும்பு அமிலம் (omega-3 fatty acids) போன்றவை உதவுகின்றன.

  • எனவே தினமும் ஓரளவு கொழுப்பு உணவில் சேரவேண்டும். அது நல்லவகை கொழுப்பாக இருப்பது விரும்பத்தக்கது.

எவருக்குமே தினசரி ஓரளவு கொழுப்பு உணவில் சேர்வது அவசியமாகும். ஒருவருக்கு நாளாந்தம் 2000 கலோரி சக்தி தேவை எனில் அவர் தினசரி 65 கிராம் அளவு கொழுப்பை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

 

கொழுப்பில் இரண்டு வகை உண்டு நிரம்பாத கொழுப்பு (Unsaturated fats), நிரம்பிய கொழுப்பு(saturated fats)இவற்றில் நிரம்பாத கொழுப்பு நல்லது.

இவ்வளவும் சொன்னபின்   நாலு கச்சான் சாப்பிட கணவரை  மனைவி அனுமதித்தார்.

எனது ஹாய் நலமா புளக்கில் (19th April 2013) வெளிவந்த கட்டுரை

Read Full Post »

உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியைக் காட்சிப்படுத்துகிறதா? அல்லது
புற்று நோய் ஒரு வியாதி மட்டுமா?
கனவுகளுக்குள் ஆழ்ந்திருப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது. வாழ்க்கையில் நம்மால் எட்டிப்பிடிக்க முடியாத உச்சங்களைக் கணகதியில் கைவசமாக்கும் வித்தை கனவுகளால் மட்டுமே சாத்தியமாகும். நான் நீங்கள் எல்லோரும் சாதாரணர்கள். உப்புக்கும் மிளகுக்கும், காதலுக்கும் காமத்திற்கும் கனவு காண்பவர்கள்

dreams

ஆனால் தூரநோக்கும், பரந்த நுண்ணறிவும் கொண்ட விஞ்ஞானிகளின் கனவுகள் உலகத்தையே மாற்றியமைக்கும் வீச்சுக் கொண்டவையாகும்.

விஞ்ஞானிகளின் கனவு

பல விஞ்ஞானிகளின் மனங்களை அரித்துக் கொண்டிருக்கும் கனவு ஒன்று உண்டு.

வெறிபிடித்த காளை மந்தைக்குள் புகுந்தால் என்ன நடக்கும்? சுற்றி நிற்பவற்றைக் குத்திக் குளறி இரண களமாக்கிவிடும். கனவென ஆச்சரியப்டும் விதத்தில் அந்த வெறிக் காளை திடீரெனத் தன்னையே பன்மடங்கு மீளாக்கிப் பெருகினால் மந்தையே அழிந்துவிடக் கூடிய ஆபத்துண்டு.

Cancer forming

அதே விதமாக எமது உடலின் சில கலங்கள் (Cells) வெறிமிகுந்து கட்டுப்பாடுகளை மீறி தான்தோன்றித்தனமாக பெருகத் தொடங்குவது பேராபத்தாகும். அதுதான் புற்றுநோய். ஏன் இவ்வாறு கலங்கள் பெருகத் தொடங்குகின்றன என்ற கேள்வி விஞ்ஞானிகளை நீண்டகாலமாக அலைக்கழிக்கிறது. அதற்கான விடைகளைத் தேடிக் கனவுகளும் காண்கிறார்கள்

நோய்க் கலங்களை அழிப்பதின் மூலமே அந் நோயைக் குணப்படுத்த இன்றைய மருத்துவம் முயல்கிறது.

மிகவும் பரிச்சயமான உதாரணம் சொல்லலாம்.

suicide bombing

 

ஒரு சில பயங்கரவாதிகளைக் கொல்ல கண்மூடித்தனமாக பீரங்கி குண்டுகளை வீசுவது எப்படியோ அவ்வாறே புற்றுநோய்க் கலங்களைப் பூண்டோடு அழிக்க ரேடியோதெரப்பி, கீமொதெரிபி, என முயல்கையில் ஆரோக்கியமான கலங்கள் பலவும் அழிந்தொழிகின்றன.

இதனால்தான் புற்றுநோய்க்கான சிகிச்சையானது ஈன இரக்கமற்ற கொடுங்கோல் மன்னனின் மறைவான செயற்திட்டங்கள் போல பாரிய பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

Chemotherapy

பல தசாப்த ஆராச்சிகளின் பயனாக புற்றுநோய் தொடர்பான சில விடயங்கள் தெரிய வருகின்றன.

புற்றுநோய்க்கான துணை நிரைல் கூறு

புற்றுநோய்க்கான துணை நிரைல் கூறு (subroutine) எல்லா உயிரினங்களுக்குள்ளும் இருக்கிறது. செயலாற்றல் மிக்க அதுதான், கதிர்வீச்சு, இரசாயனங்கள், அழற்சி, கிருமித் தொற்று போன்றவற்றால் ஊறு ஏற்படும்போது கலங்களில் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்குகிறது.

பூமியில் உயிரனங்களின் வரலாற்றை பின்நோக்கிப் பார்க்கும்போது அவற்றின் கட்டுமானத்தில் புற்றுநோய்க்கான வாய்ப்பு  ஆழமாகப் பதிந்திருக்கிறது என்கிறார்கள்.

மறைவாக இருப்பது சரியான தருணத்தில் சரியான சமிக்கை கிடக்கும்போது தூண்டப்பட்டு துரிதமாகச் செயற்பட ஆரம்பிக்கும்போது புற்றுநோய் ஏற்படுகிறது என்கிறார்கள்.

எனவே இது ஒரு நவீன பிறள்வு (modern aberration)அல்ல. பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியாகவே நடக்கிறது. இது மனிதர்களில் மட்டும் வருவதில்லை. ஏனைய பாலுட்டிகளிலும், மீன்கள், ஊர்வன ஏன் தாவரங்களில் கூட வருகின்றன.

Breast Ca dog

புற்றுநோய் தோன்றுவதற்கான சில மரபணுக்கள்; பல மில்லியன் வயதுடையவை என விஞ்ஞானிகள் கருதுகிறார்;கள்.

பூமியில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின? எவ்வாறு படிப்படியாக இன்றுள்ள நிலையை எய்தின? இது பற்றிய பல கருத்துக்கள் உள்ளன. ஆனால் விஞ்ஞான ரீதியாக பார்க்கும்போது உயிரனங்களின் பரிணாம மாற்றத்தில் நடைபெற்ற இரு விடயங்கள் மிக முக்கியமானவையாகும்.

சுமார் 2 மில்லியன் வருடங்களுக்கு முன்னரே சாதாரண சிறிய கலங்களிலிருந்து சிக்கலான பெரிய கலங்கள் உருவாகின. அத்தகைய கலங்களின் செயற்பாட்டிற்கு அதிக சக்தி தேவை. அவ்வாறான சக்தியைக் கொடுப்பதற்கு மைற்ரோகொன்றியா (அவைழஉhழனெசயை) வந்தது. புராதன பக்றீரியாக்களின் எச்சங்கள்தான் மைற்ரோகொன்றியா என்று கருதுகிறார்கள்.

mitochondrion

நச்சு ஒட்சிசன்

ஒரு முக்கியமான கருத்து உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இன்று நாம் உயிர் வாயு எனக் கொண்டாடும் ஒட்சிசனானது ஆரம்ப காலத்து தனிக்கல உயிரினங்களுக்கு நச்சுத்தன்மையான வாய்வாக இருந்தது. ஒளிச்சேர்க்கை மூலம் உற்பத்தியாகி வளியில் செறிந்து கிடந்த இந்த ஒட்சிசனானது அன்றைய உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.
இதிலிருந்து தப்ப அவற்றிற்கு இரண்டே இரண்டு வழிகளே இருந்தன.

  1. ஒட்சிசன் தேங்குவதைத் தடுப்பதற்கான வழிகளைத் தேடுவதும், நச்சுத்தன்மை வாய்ந்த ஒட்சிசனால் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைத் தடுப்பதும் முதலாவதாகும்.
  2. மற்ற வழி மிகவும் சாதுர்யமானது. நச்சு எனப்படும் அந்த ஒட்சிசனையே தனக்கு சக்தியை வழங்குவதற்கு ஏற்ப தான் மாற்றமுறுவதாகும.; இதற்கும் உதவியது அந்த மைற்ரோகொன்றியா தான்.

இன்றைய உயிரனங்களில் மைற்ரோகொன்றியாதான் நச்சு ஒட்சிசனைத் கலங்களுக்கு சக்தியைத் தருவதற்கான பணியை செய்கிறது.

single cell organism
அபரிதமாகக் கிடைத்த ஓட்சிசனை முடாக் குடியன் போலக் குடிக்க வல்ல கலங்கள் உருவாகிய மாற்றமானது கூர்ப்பின் அடுத்த நிலைக்கு உயிரினங்களை கொண்டு சென்றது. இந்த இரண்டாவது மாற்றம்தான் மிக முக்கிமானது. உயிரனங்களின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, புற்றுநோய் பற்றிய புரிதலுக்கும் மிகவும் முக்கிமானதாகும். அதாவது இதுவரை காலமும் ஒரு கல உயிரினங்கள் மட்டுமே இருந்த பூவுலகில் முதல் முறையாக பல கலங்களை உடைய உயிரினங்கள் தோன்றின.

இது புற்றுநோய் பற்றிய ஆய்வுகளுக்கும் முக்கியமான விடயமாகும். எப்படி எனப் பார்ப்போம்.

பல கலங்களைக் கொண்ட உயிரினங்கள்

பல கலங்கள் கொண்ட உயிரினங்களின் தோற்றமானது வாழ்வின் அடிப்படைத் தன்மையில் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்தியது.

kingdom_2

ஒரு கலம் கொண்ட உயிரினங்களின் வாழ்வானது சாதாரண சுற்றுவட்டம் போன்றது. தனிக் கலங்களான அவை தம்மைத்தாமே படியெடுத்து பெருகுமே ஒழிய இனப் பெருக்கும் செய்ய வேண்டிய தேவை கிடையாது. இன்னொரு விதத்தில் சொன்னால் அவை ஆண் பெண் பேதமில்லா இறப்புமற்ற உயிரினங்களாகும்.

அங்கங்கள் உறுப்புகள் எனத் தோன்றிய பின்னர் உயிரினங்களால் தம்மைத்தாமே படியெடுப்பது முடியாத காரியமாயிற்று. தமது இனத்தின் தொடர்ச்சியை நிச்சயப்படுத்த, தமது உயிரணுக்களை அடுத்த சந்ததிக்குக் கடத்த இனப் பெருக்கம் செய்ய வேண்டியது அவசியம்.

இந்த இனப் பெருக்கத்தை விந்து, முட்டை  ஆகிய  சிறப்பான முளைய உயிரணுக்கள் ஊடாகவே தொடரவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இறப்பு என்பது அவற்றிற்கு நியமமாயிற்று.

சில கலங்கள் சில காலத்திற்கு தம்மைத் தாமே படியெடுக்க முடிந்தாலும், அவற்றிற்கான உயிரியல் தேவை முடிந்ததும் அவற்றின் வாழ்வு முடிவுறும். ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டவாறு இறப்பைத் தழுவிக் கொள்ளும். இதை apoptosis என்பார்கள். நிர்ணயிக்கப்பட்ட அத்தகைய இறப்பை மேலாண்மைப்படுத்துவது முற் கூறிய மைற்ரோகொன்றியாவாகும்.

புற்றுநோய் எவ்வாறு?

உயிரணுக்களுக்கும் ஏனைய கலங்களுக்கும் இடையேயான நம்பிக்கை உடன்பாட்டின் முறிவுதான் புற்றுநோய் எனலாம். கலங்களின் இறப்பை செயலிழக்கச் செய்து தம்மை அழியாத நிலைக்கு உயர்த்துவதற்காக, அளவிற்கு அதிகமாக பெருகும் முயற்சிதான் புற்றுநோய் எனச் சொல்லலாம் போலிருக்கிறது. இதனால்தான் ‘பேராசை பிடித்த கலங்களின் பெருக்கம்’ எனப் புற்றுநோயைப் பலரும் கருதினர். ஆனால் அண்மைய ஆய்வுகளின்படி புற்றுநோய் பற்றிய தவறான பார்வை அது எனச் சொல்லத் தோன்றுகிறது.

புதிய கருத்து

புற்றுநோய்க் கலங்கள் ஒட்சிசன் மிகவும் குறைந்த சூழலில் பெருகுவதில் வெற்றியடைகின்றன. இது நொதித்தல் எனப்படும் இது அநவயடிழடளைஅ தின் செயற்திறன் குறைந்த வடிவம் எனலாம். ஆதி உயிரினங்கள் அவ்வாறு செய்தன.

மூதாதையர் கடந்து வந்த சில தடங்களை உயிரினங்கள் தமது வளர்ச்சிப் பாதையில் இப்பொழுதும் பிரதிபலிக்கின்றன.

உதாரணமாக

  • ஒரு சோடிக்கு மேற்பட்ட முலைகளுக்கான அடையாளங்களுடன் பல வளர்ந்த ஆண் பெண் இருபாலாரையும் காணமுடிகிறது.
  • வால் போன்ற அடையாளத்துடன் அல்லது வாலுடன் பிறந்த குழந்தைகள் பற்றிய பதிவுகள் மருத்துவ உலகில் பல உள்ளன.

பரிணாம வளர்ச்சியானது முந்தைய மரபணுக்களிலிருந்தே கட்டமைக்கப்படுவதே இதற்குக் காரணமாகும். சில தருணங்களில் அத்தகைய பாதைகள் முடக்கப்படுகின்றன. அந்த நிலையிலேயே அடையாள முலைக் காம்புகள், அல்லது அடையாள வாலுடன் மனிதர்கள் பிறக்கிறார்கள்.

இவற்றை அடிப்படையாக வைத்தே அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் Charles Davis மற்றும்Paul Davies ஆகியோர் இணைந்து புற்றுநோய் பற்றிய ஒரு புதிய கோட்பாட்டை (Theory of cancer based on its ancient evolutionary roots)முன்வைக்கிறார்கள்.

அவர்கள் என்ன சொல்கிறார்கள்

‘புற்றுநோய் உடலில் பரவுகையில் உயிரினமானது தனது பரிணாம வளர்ச்சிப் பாதையை மீண்டும் கடக்கிறது. ஆனால் மிக மிக வேகமான கதியில் எனலாம். இயல்பான கலங்களின் ஒழுங்கு முறையைக் குலைப்பதின் மூலம் தனது மூதாதையர்களின் வாழ்க்கை முறையை மீள் நிர்மாணம் செய்ய முனைகின்றன.’
இது சில தரவுகளின் அடிப்படையில் முன்வைக்கப்படும் கோட்பாடு. முற்றுமுழுதான முடிவல்ல.

child with tail
புற்றுநோய் பெருகுவதானது தனது மூதாதைக் கலங்களின் மரபணுக்களை மீளச் செயற்பட வைப்பது போன்றதாகும். மிகக் கடுமையான புற்றுநோயானது ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னான உயிரினங்களின் வாழ்வை மீள அமைக்கிறது எனலாம்.

இருந்தபோதும், உயிரில் தேவை ஏதாவது இருந்தால் மட்டுமே புராதன ஜீன்ஸ் இப்பொழுதும் செயற்படும். உடலுக்கான அடிப்படை வரைவு போடப்பட்டு கருவானது தாயின் வயிற்றில் வளர ஆரம்பிக்கும்போது புராதன ஜீன்ஸ் அதன் வளர்ச்சிக்கு வழிகாட்டுவதற்காக இயங்கிக் கொண்டிருக்கும்.
ஆனால் அது பூர்த்தியானதும் அதன் இயக்கம் நிறுத்தப்படும். உதாரணமாக கருவிலுள்ளபோது எல்லா மனிதர்களுக்குமே வாலும் சௌவுகளும் சிறிது காலத்திற்கு இருக்கின்றன. புற்றுநோய் ஏற்படும்போது கருமுளையின் ஆரம்பநிலையில் (early stage embryonic genes) மரபணுக்களில் சில துயில்நீங்கி செயலூக்கம் பெறுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தமை இதற்குச் சான்றாகும்.

உயிரினங்களின் பரிணாம உயிரியல், வளர்ச்சி உயிரியல் ஆகியவற்றின் இடையே ஆழமான இணைப்புகள் உள்ளன. இவை பற்றிய சில தெளிவுகள் ஏற்பட்டுள்ளன. புற்றுநோய்க்கான சிகிச்சையில் புதிய திசைகளைத் திறக்க இவை உதவும். மேலும் தெளிவும் பலனும் பெறுவதற்கு புற்றுநோய் பற்றிய அடிப்படை அறிவை மேலும்  தேடவேண்டியுள்ளது.

9890_1
புற்றுநோயின் தொடக்கம், அது பெருகும் விதம் ஆகியவற்றின் நுணுக்கங்களை மேலும் கண்டறிவதன் மூலம் பூமியில் உயிரினம் கடந்து வந்த பாதை பற்றிய அறிவைப் பெற முடியும். அதனால் புற்றுநோய் பற்றிய பயங்கள் நீங்கி மனித இனத்தில் வாழ்வு பற்றிய நம்பிக்கை வளரும்.
விஞ்ஞானிகள் தேடலுடன் கூடிய கனவுகள் காணட்டும். அதற்கான சான்றாதாரங்களை ஆய்வுகள் மூலம் கண்டறியட்டும். மரணபயம் நீங்குவதான மனிதர்களின் கனவுகள் பலிக்கட்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

உங்கள் பார்வைத் திறன் எவ்வாறு இருக்கிறது

பார்வை குறைந்து செல்வதை ஆரம்பத்திலேயே கண்டறிவது சற்று சிரமமானதுதான். இருந்தபோதும் சற்று அவதானமாக இருந்தீர்களேயானால் தாமதமின்றிப் புரிந்து கொள்ளலாம். 

கீழ் காண்பவற்றில் ஏதேனும் ஒன்று உங்கள் பார்வை பாதிப்புறுவதின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

மங்கிய வெளிச்சத்தில் எழுத்துக்கள் தெளிவில்லாது இருப்பது, கைக்கடிகாரத்தில் நேரம் தெளிவின்றி இருப்பது, புத்தகங்களையும் பத்திரிகைகளையும் வழமையை விடச் சற்றுத் தூரத்தில் வைத்துப் படிக்க நேர்வது, ரீவீயை சற்று நெருக்கத்தில் இருந்து பார்த்தால்தான் மிகத் தெளிவாக இருப்பது, இரவில் வாகனம் ஓட்டும்போது எதிரே வாகனத்தின் லைட் வெளிச்சம் கண்களைக் கூசவைப்பது. இப்படிப் பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம்.

உங்கள் பார்வை குறைந்து செல்வதை உணர்ந்தால் அது வயசுக் கோளாறு என்று சொல்லி வாழாது இருந்து விடாதீர்கள். இதற்கான காரணங்கள் பல. அவற்றில் பல தீவிரமானவை

மக்கியூலர் டிஜெனரேஜன் (Macular degeneration) என்பது விழித்திரையில் உள்ள மக்கியூலா பாதிப்புறுவதால் ஏற்படுவது. பொதுவாக வயது அதிகரிக்கும்போது ஏற்படுவது. கண்வைத்தியர் பரிசோதித்தே கண்டறிய முடியும்.

குளுக்கோமா(Glaucoma)  என்பது பார்வை நரம்பு பாதிப்புறவதால் வரும். முக்கியமாக கண்ணில் உள்ள திரவத்தில் பிரஸர் அதிகரிப்பதால் அத்தகைய தாக்கம் ஏற்படும்.

கட்டரறக்ட் (Cataract)  என்பது கண்வில்லைகளில் வெள்ளையாகப் படிவது. வயது காரணமாக மட்டுமின்றி நீரிழிவாலும் விரைவில் தோன்றும்.

நீரிழிவு விழித்திரை நோய் (Diabetic retinopathy) நீரிழிவு நோயால் ஏற்படுவது. விழித்திரையில் உள்ள சிறு குருதிக் குழாய்கள் சேதமடைவதால் திரக மற்றும் குருதிக் கசிவுகள் ஏற்படும். குருதியில் சீனி அதிகமாக இருப்பதாலும் அது கட்டுப்பாட்டில் இல்லாதிருப்பதாலும் வரும் பிரச்சனை இது.

இவற்றில் கட்டரக்ட் நோயிருந்தால் சத்திர சிகிச்சை மூலம் இழந்த பார்வையை முழுமையாக மீளப் பெறலாம்.

ஏனையவற்றில் பார்வையை முழுமையாக மீளப் பெற முடியாதிருக்கும். உடனடியாக மருத்துவம் செய்தால் பார்வை இழப்பு மோசமாகாமல் காப்பாற்ற முடியும். எனவே பார்வையில் பாதிப்பாக இருக்கும் என்று தோன்றினால் உடனடியாக கண் மருத்துவரைச் சந்தியுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0

Read Full Post »

‘இந்தப் பிள்ளையாலை தூக்கமில்லை எனக்கு. கண் சோருது’ என்றாள் தாய்.

‘அடி போட்டுத்தான் இதைத் தூங்க வைக்க வேணும் போலிருக்கிறது’ எனச் சினந்தார் தகப்பனார்

அடிபோட்டு தூங்க வைப்பது முடியிற காரியமா?

தூக்கமின்மை அல்லது தூக்கக் குழப்பம் என்பது வயதானவர்களின் பிரச்சனை மட்டுமல்ல, எந்த வயதினரையும் தாக்கலாம். இரா இராவாக அழுது அடம் பிடித்துவிட்டு பகல் முழவதும் தூங்கும் குஞ்சுப் பாலகர்களைக் காண்பது அதிசயமல்ல

சில பள்ளிக் குழந்தைகளும் அவ்வாறு இரவில் தூங்காமல் பிரச்சனை கொடுப்பதுண்டு.

காரணங்கள் என்ன?

  • உங்களது குழந்தை இருளுக்குப் பயப்படுகிறதாக இருக்கலாம்.  ஏசாமல் பேசாமல் இதமாக கண்டறிய முயலுங்கள். இரவு லைட் ஒன்றை ஒளிரவிடுவது பிரச்சனையைத் தீர்க்கும்.
  • பயங்கரக் கனவுகள் காரணமாகலாம். நல்லாகத் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தை திடீரென அலறி விழித்து எழுந்தால் அதுதான் காரணம் எனக் கொள்ளலாம். விழித்த பின் பெரும்பாலான கனவுகள் மறந்து போகின்ற காரணத்தால் குழந்தையால் விளக்க முடியாதிருக்கும். படுக்கப் போகும் முன்னர் பயங்கரமான கதைகள், திடுக்கிட வைக்கும் ரீவீ நிகழ்ச்சிகளை படிப்பதை, பார்ப்பதை, கேட்பதைத் தவிர்க்க வேண்டும். பிள்ளை படுக்கப் போகும் முன்னர் அரவணைத்து குட் நைட் சொல்லி நல்ல சிந்தனைகளுடன் மகிழ்ச்சியாகப் படுக்க விடுங்கள்.
  • பல பிள்ளைகளுக்கு பாடசாலைப் படிப்பு, ரியூசன், மியூசிக் கிளாஸ், டான்ஸ், விளையாட்டு பேச்சுப் போட்டிகள் என வேலை அதிகம். களைத்துவிடுவார்கள். அதற்கு மேலாக அடுத்த நாள் முகம் கொடுக்க வேண்டிய விடயங்கள் பற்றிய மனப்பதற்றமும் காரணமாகலாம்.
  • வாழ்க்கை முறையில் ஏற்படுகிற தாக்கங்கள் குழந்தைகள் மனத்தில் ஆழமான பதற்றத்தை விதைத்துவிடலாம். நெருங்கிய உறவினரின் இறப்பு, தகப்பன் அல்லது தாயைப் பிரிந்திருக்க நேருதல், வீடு மாறுதல், புதிய பாடசாலைக்கு செல்ல நேருதல், நோய் வாய்ப்படுதல் போன்ற பலவாகலாம். காரணத்தைக் கண்டறிந்து அமைதிப்படுத்துங்கள்.
  • உடல் ரீதியான அசௌகரியங்களும் காரணமாகலாம். கடுமையான வெக்கையும் வியர்வையும், கடும் குளிர், பசியோடு தூங்கச் சென்றமை, படுக்கையை இரண்டு மூன்றுபோர் பகிர்வதால் ஏற்படும் இட நெருக்கடி போல எதுவாகவும் இருக்கலாம்.

பெற்றோர்களே குழந்தைகள் தூங்கவில்லை எனில் சினப்படாதீர்கள்.

நிதானமாகக் காரணத்தைக் கண்டறிய முயலுங்கள்

அதை நிவர்த்தியுங்கள்

அமைதியான தூக்கம் குழந்தையை மட்டுமின்றி உங்களையும் அரவணைக்கும்.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

0.0.0.0.0

Read Full Post »

பொடுகு என்பது எமது சிரசின் சருமத்தில் ஏற்படும் ஒரு வகை அழற்சி நோயாகும். சருமம் காய்ந்து அதன் துகள்கள் உதிர்வதுடன் தலையில் சற்று அரிப்பும் இருக்கலாம்.

இது மற்றவர் முன் சங்கடமாக உணர வைப்பதாக  இருந்தாலும் ஆபத்தான நோயல்ல.

hair_scalp_s4_yellow_dandruff

இதை அறவே ஒழிப்பது சற்று சிரமம் ஆனபோதிலும் கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க முடியும்.

  • இதற்கென பலவிதமான சம்பூ வகைகள் விறபனையாகின்றன. அதில் செலனியம், சலிசிலிக் அமிலம் மற்றும் நாகம் (salicylic acid, selenium sulfide or zinc pyrithione).இருக்கிறதா என அவதானிக்கவும்.
  • பொடுகு கடுமையாக இருந்தால் தினமும் அந்த சம்பூவை உபயோகிக்கவும். அது கட்டுப்பாட்டினுள் வந்ததும் வாரத்திற்கு மூன்று முறை, வாரத்திற்கு இருண்டு முறை எனப் படிப்படியாகக் குறைக்கவும்.
  • சம்பூவை தலைக்கு வைத்ததும் கழுவக் கூடாது. தலையில் வைத்து சுமார் 5 நிமிடங்கள் கழிந்த பின்னர் கழுவ வேண்டும். மருத்து தலையின் சருமத்தில் ஊற நேரம் தேவை என்பதாலேயே அவ்வாறு செய்ய வேண்டும்.
  • ஆதற்கு குறையவில்லை வேறு மருந்துகளை (ஸ்டிரொயிட் லோசன் Steroid lotion) அவர் தரக் கூடும்.
 IMG_NEW
 தினக்குரல் பத்திரிகையில் (12.09.2013) வெளியான எனது மருத்துவக் குறிப்பு

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

Read Full Post »