Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூலை, 2014

“‘இலங்கை ஆண்களில் பத்தில் ஒருவர் தமது வாழ்வில் ஒரு தடவையாவது பெண்களை வல்லுறவுக்கு ஆளாக்கி இருக்கிறார்கள்.” இதுதான் இந்த வாரத்தின் மிகவும் சுவார்ஸமான செய்தி எனலாம்.

ScRoQdbWioboHGx-556x313-noPad

எமது ஆண்களின் வக்கிரத் தன்மையையும் பெண்களின் உணர்வை மதிக்காத மேலாதிக்க உணர்வையும் காட்டுகிறது என்று சொல்லிவிட்டு மறக்கக் கூடிய விடயம் அல்ல. இதன் பின்னாலுள்ள ஆபத்துக்கள் எண்ணிலடங்காதவை. சமூகத்தால் ஏளனப்படுத்தல், ஒதுக்கி வைக்கப்படுத்தல், பாலியல் தொற்று நோய், மன விரக்தி எனப் பல. வேண்டாத கர்ப்பம் மிக முக்கிய விடயமாகும்.

வேண்டாத கர்ப்பம் தங்குவதைத் தடுப்பதற்கு அவசரகால கருத்தடை (Emergency contraception) முறை கைகொடுக்கலாம். ஆனால் இது வல்லுறவின் பின்னான கருத்தடையை மட்டும் இலக்காகக் கொண்டது அல்ல.

unwanted-pregnancy-girlfriend-is-pregnant

அவசர கருத்தடை என்றால் என்ன?

இதை உடலுறவுக்கு பின்னாலான கருத்தடை ((post-coital contraception) எனவும் கூறுவர். Morning after pill எனவும் சொல்லப்படுவதுண்டு.

உடலுறவு கொண்ட ஓரிரு நாட்களுக்குள் கருத் தங்காமல் இருப்பதற்காக செய்யப்படும் கருத்தடை முறை இதுவாகும். கரு தங்குவதைத் தடுப்பதற்கான எத்தகைய கருத்தடை முறையையும் உபயோகித்து வராத பெண் ஒருத்தி எதிர்பாராத விதமாக உடலுறவு கொள்ள நேர்ந்தால் கரு தங்காமல் தடுப்பதற்கானது.

இது கருக்கலைப்பு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

dt.common.streams.StreamServer

பாதுகாப்பற்ற உடல் உறவு, கருத்தடை முறை தவறிவிட்டமை (மாத்திரை போடாமை, ஆணுறை அணியாமை போன்றவை), அல்லது ஒழுங்கான முறையில் உபயோகிக்காமை, விரும்பாத உறவு அதாவது வல்லுறவு போன்றையே முக்கிய காரணங்களாகும்.

எத்தகைய சந்தர்ப்பங்களில் இது உதவும்?

எதிர்பாராத உடல் உறவு கொண்டால் என ஏற்கனவே சொன்னோம். அத்தகைய தருணங்கள் எவை?.

  • வேறு எந்தவிதமான கருத்தடை முறைகளையும் பயன்படுத்தாத தருணங்களில்
  • வழமையான உடலுறவின் போது ஆணுறை (Condom) உடைந்திருந்தால், வழுகிகியிருந்தால் அல்லது சரியான முறையில் அணியாதிருந்தால்.
  • வழமையாக உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளை மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் தொடர்ச்சியாக உட்கொள்ளாதிருந்தால்.
  •  டீப்போ புறவிரோ எனப்படும் கருத்தடை ஊசி மருந்து ஏற்றப்படுவது நான்கு வாரங்களுக்கு மேல் தாமதித்திருந்தால்.
  • பின்வாங்கல் முறையின் (Withdrawal method) போது ஆணுறுப்பை சரியான தருணத்தில் வெளியே எடுக்கத் தவறி, அதனால் விந்து யோனியினுள் அல்லது பெண் உறுப்பின் வாயிலில் சிறிதேனும் சிந்தியிருக்கக் கூடிய நிலையில்.
  • பாதுகாப்பான நாட்களில் மட்டும் உறவு வைக்கும் முறையில் (abstinence method) தினங்களைக் கணிப்பதில் தவறுகள் ஏதாவது ஏற்பட்டிருந்தால்.
  • நீங்கள் பயன்படுத்தும் வேறு எந்தக் கருத்தடை முறையாயினும் (diaphragm or cervical cap, spermicide tablet etc) அது தவறியிருக்கும் என எண்ணினால்.
  • லூப் எனப்படும் கருத்தடை வளையம் (intrauterine contraceptive device (IUD) வைத்திருந்து போது அது வழுகியிருந்தால்.
  • ஒருவர் உடலுறவு வைப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டிருந்தால். வன் முறைகள் நிறைந்த எமது நாட்டில் ஆயுதந் தரித்தோரால் மட்டுமின்றி, பாடசாலையில் பிள்ளையைச் சேரப்பதற்கும், பல்கலைக் கழகங்களில் ஆய்வுக் கட்டுரையை ஏற்றுக் கொள்வதற்கும், அலுவலகங்களில் தவறான முறைகளிலும் நடைபெறுவதாக ஊடகங்கள் அடிக்கடி சொல்கின்றன. அவசர கருத்தடை மாத்திரை பற்றிய அறிவு இல்லாததாலும், கருக்கலைப்பு சட்ட விரோதமாக இருப்பதாலும் பல பெண்கள்  சோகக் கண்ணீர் வடிப்பது மட்டுமின்றி சட்ட விரோத கருக்கலைப்புகளால் பல உயிர்கள்  பலி கொள்ளப்படுவதும் இரகசியம் அல்ல.

அவசர காலக் கருத்தடை முறைகள்
அதில் இரண்டு வகைகள் உண்டு.

  1. அவசர கருத்தடை மாத்திரைகள்.
  2. கருப்பையினுள் வைக்கும் லூப் என சொல்லப்படுவது. உண்மையில் இது கருப்பையினுள் வைக்கும் ஒரு வளையம் (உழிpநச ஐருனு) ஆகும்

அவசர கருத்தடை மாத்திரைகள்

மிகவும் பிரபலமானதும் சுலபமானதும் இதுதான். இதில் பெண்களின் உடலில் இயற்கையாகச் சுரக்கும் ஹோர்மோன் ஆன levonorgestrel   இருக்கிறது. இது பல பெயர்களில் கிடைக்கிறது. இலங்கையில் பிரபலமானது POSTINOR-2  என்ற பெயரில் மருந்துக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். மருத்துவரின் பிரிஸ்கிரிப்சன் இன்றியே வாங்கக் கூடியதாகும். ஒரு பைக்கற்றில் இரண்டு மாத்திரைகள் இருக்கும். இரண்டும் ஒரு தடவைக்கு தேவையானதாகும்.

மூன்று வழிகளில் இது செயற்படுகிறது என்கிறார்கள். சூலகத்திலிருந்து முட்டை வெளியேறுவதைத் தடுக்கலாம். அல்லது ஆணின் விந்திலுள்ள உயிரணுக்களும், பெண்ணின் முட்டையும் இணைந்து கருக்கட்டுவதைத் தடுக்கக் கூடும். அல்லது கருவானது கருப்பையில் தங்குவதை தடுக்கலாம்.

எவ்வாறு உபயோகிப்பது

எதிர்பாராத பாலுறவு கொண்ட பின் எவ்வளவு விரைவாக எடுக்க முடியுமோ அவ்வளவு கெதியில் எடுக்க வேண்டும். ஆயினும் 72 மணி நேரத்தின் பின்னர் எடுத்தால் அது நிச்சயமாகச் செயற்படும் என்று சொல்ல முடியாது.

ஒரு பைக்கற்றில் இரண்டு மாத்திரைகள் இருக்கும் என்றோம். இரண்டையும் ஒரே நேரத்தில் உட்கொள்ள வேண்டும். அல்லது ஒரு மாத்திரையை உடனடியாகவும் இரண்டாவது மாத்திரையை 12 மணி நேரத்திற்குள்;ளும் எடுக்க வேண்டும். ஆயினும் 16 மணித்தியாலத்திற்கு மேல் தாமதிப்பது கூடாது.

ஒரு வேளை நீங்கள் மாத்திரையை உட்கொண்ட பின் மூன்று மணி நேரத்திற்குள் வாந்தி எடுத்தால், மருந்து வாந்தியுடன் வெளியே போய்விட்டது என்றே கருத வேண்டும். அவ்வாறெனில் மீண்டும் மாத்திரையை எடுப்பது அவசியம்.

கருத்தடை வளையம்

கருத்தடை வளையம். கொப்பரால் ஆன கருத்தடை வளையமானது (copper-bearing IUD) வழமையான கருத்தடை முறைகளில் ஒன்று. ஆனால் இதனை அவசரகாலத் கருத்தடையாகவும் பயன்படுத்தலாம். உடலுறவு கொண்ட 5 நாட்களுக்குள் இதை கருப்பையiனுள் வைத்தால் கரு தங்காது.

Mirena_IntraUterine_System

இதை நீங்களாக வைக்க முடியாது. மருத்துவரே வைக்க வேண்டும்.

இறுதியாக

ஒரு பெண் தனக்கு அடிக்கடி குருதிப் போக்கு ஏற்படுவதாக மருத்துவரிடம் சென்றாள். அதற்கான காரணத்தை அறிய பல கேள்விகள் கேட்டும் பரிசோதித்துப் பார்த்தும் தெளியவில்லை.

“கருத்தடை முறைகள் ஏதேனும் கடைப்பிடிக்கறீர்களா” என்று வினவிய போது அவசரகால கருத்தடை மாத்திரைகள் உபயோகிப்பதாகக் கூறினாள்.

“எப்படி உபயோகிப்பீர்கள்” எனக் கேட்டார்.

“வாரத்திற்கு இரண்டு மூன்று தடவைகள் பாவிப்பேன்” என்றாள். அவசர காலத்திற்கு மட்டும் உபயோகிக்க வேண்டியதை நாளந்தம் பாவித்தால் வேறு என்ன நடக்கும் ?.

அவசர கருத்தடை மாத்திரை என்பது எதிர்பாராத தருணத்திற்கு மாத்திரமே ஆனது. வழமையான கருத்தடை முறை அல்ல. இதனையே தொடர்ந்தும் உபயோகிக்கலாம் என எண்ணுவது தவறாகும்.

வழமையான முறைகளாக கருத்தடை மாத்திரைகள், கருத்தடை ஊசி, இமபிளான்ட், ஆணுறை, பெண்ணுறை, இயற்கை முறை எனப் பலவும் உண்டு.

தவாறக உபயோகித்ததால் அத்தகைய பக்கவிளைவு ஏற்பட்டது.

அவசர காலத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டிய அவசர காலச்சட்டம் தேசத் தலைவர்களால் ஆட்சிக் காலம் முழுவதும் பயன் படுத்தப்படுத்தப்படுவது ஞாபகத்திற்கு வருகிறதா? முந்தியது காப்பாற்றும். பிந்தியது கொல்லும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0.0

Read Full Post »

நீரிழிவு  நோயுள்ளவர்கள் உங்கள் உணவில் அவதானிக்க வேண்டியவை எவை?

தமது நீரிழிவின் தாக்கத்தைக் குறைப்பதற்கு நோயாளிகள் அவதானிக்க வேண்டிய விடயங்கள் முக்கியமாக மூன்று எனலாம்.

  1. தங்கள் உணவு உட்கொள்ளும் முறையில் பொருத்தமான மாற்றங்களைக் கொண்டு வருதல்.
  2. தினமும் உடலுழைப்புடன் கூடிய வேலைகளில் ஈடுபடுதல், அல்லது உடற் பயிற்சி செய்தல்,
  3. தங்களுக்கு மருத்துவர்கள் சிபார்சு செய்த மருந்துகளை ஒழுங்கான முறையில் உட்கொள்ளுதல் ஆகியவையே ஆகும்.

இக் கட்டுரையில் முக்கியமாக நீரிழிவாளர்களின் உணவு முறை பற்றியே பேச உள்ளோம்.

நீரிழிவாளர்களுக்கான நவீன உணவுத் திட்டமானது ஓரளவு சுதந்திரமானது. நெகிழ்ச்சித்தன்மை கொண்டது. பசியிருக்க வேண்டியதில்லை. பட்டினி அறவே கூடாது. வயிறு நிறையச் சாப்பிடலாம். ஆனால் எதனால் நிரப்ப வேண்டும் என்பதைப் தெளிந்து கொள்ள வேண்டும். அறிவு பூர்வமாகச் சிந்தித்து உட்;கொண்டால் எதையும் முற்று முழுதாகத் தவிர்க்க வேண்டியதில்லை.

உணவின் கூறுகள்

Diabetic diet 1

எமது உணவில் பல கூறுகள் உள்ளன. மாப்பொருள், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், விற்றமின், தாதுப் பொருட்கள் ஆகியவையே அவை. பெரும்பாலான உணவுகளில் இக் கூறுகள் அனைத்துமே இருக்கும். ஆனால் ஒவ்வொன்றிலும் சில கூறுகள் அதிகமாகவும் சில குறைவாகவும் இருக்கும்.

நாம் அதிகம் உண்பது மாப்பொருள் உணவுகளையே.அரிசி, கோதுமை, குரக்கன் போன்ற தானிய வகைகள் யாவுமே மாப்பொருள் உணவுகள்தான். உருளைக் கிழங்கு, வத்தாளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு போன்ற யாவற்றிலும் உள்ளது மாப் பொருள்தான்.

மீன், இறைச்சி, முட்டை போன்றவற்றிலும், பயறு பருப்பு, சோயா, கடலை, உழுந்து போன்ற அவரையின உணவுகளிலும் புரதம் அதிகம் உண்டு.

எல்லா வகை எண்ணெய்களும் கொழுப்பு சத்து மிகுந்தவை. பாலாடை, பட்டர், மார்ஜரீன், மிருக இறைச்சிகளிலுள்ள கொழுப்புப் பகுதிகள் போன்ற யாவும் அதிக கொழுப்புள்ள உணவுகளாகும்.

பழவகைகளிலும், காய்கறி வகைகளிலும் நார்ப்பொருள், விற்றமின்கள், தாதுப் பொருட்கள் செறிவாக உண்டு.

உணவு வகைகள்

இவ்வாறு உணவின் கூறுகள் பலவானாலும் வசதி கருதி நீரிழிவு நோயாளர்கள் தங்கள் உணவு வகைகளை மூன்று வகைகளாகத் பிரித்து வைத்துக் கொள்ளலாம்.

1. விரும்பிய அளவு உண்ணக் கூடியவை

2. இடைப்பட்ட அளவில் உண்ணக் கூடியவை

3. மிகக் குறைவாக உண்ண வேண்டியவை

விரும்பிய அளவு உண்ணக் கூடியவை

பொதுவாக எல்லா காய்கறிவகைகளும் விரும்பிய அளவு உட்கொள்ளக் கூடியவைதான். கத்தரி, பூசணி, தர்ப்பூசணி, வெண்டி, வெள்ளரி, புடோல், பாகல், கரட், முள்ளங்கி, நோகோல், கோகிலத் தண்டு, போஞ்சி, பயிற்றை, முருங்கைக் காய், எல்லா இலை மற்றும் கீரை வகைகள், லீக்ஸ், போன்றவை.

healthyliving_page

ஆனால் அதிக மாச்சத்துள்ள காய்கறிகளை ஓரளவே உண்ண வேண்டும்.

இடைப்பட்ட அளவில் உண்ணக் கூடியவை

பொதுவாக மாப்பொருள் உணவுகளும் புரத உணவுகளும் இந்த வகையில் அடங்கும்.

சோறு தவிர்க்க வேண்டிய உணவு அல்ல. விரும்பினால் மூன்று வேளைகளும் சாப்பிடலாம். தவிட்டுடன் கூடிய சிவத்த அரிசிச் சோறு விரும்பத்தக்கது.  ஆனால் சோற்றின் அளவானது ஒருவர் செய்யும் வேலைக்கு ஏற்பவும் நிறைக்கு ஏற்பவுமே இருக்க வேண்டும். தோட்ட வேலை போன்ற உடல் உழைப்புடன் கூடிய வேலை செய்பவர்கள் உண்ணும் அளவை விட நாற்காலியில் இருந்தபடி சொகுசு வேலை செய்பவர்களுக்கு குறைவான அளவே இருக்க வேண்டும்.

தீட்டாத சிவத்த அரிசிச் சோறு நல்லது. தவிடு குறைந்த அல்லது வெள்ளை அரிசிச் சோறு எடுக்க நேர்ந்தால் அதற்கு ஏற்ப காய்கறிகளை சற்று அதிகம் சேர்த்து உண்ண வேண்டும். இதனால் காய்கறிகளில் உள்ள நார்ப்பொருள் உணவு ஜீரணமடைவதைத் தாமதமாக்கி குருதியில் சீனியின் அளவு திடீரென எகிறுவதைத் தடுக்கும்.

இடியப்பம், புட்டு, தோசை போன்ற உணவுகள் தயாரிப்பதற்கும் தவிடு நீக்காத அரிசியில் தயாரித்த மாவே நல்லதாகும். சோயா மா, குரக்கன் மா போன்றவையும் நல்லவையே, கோதுமை மாவானது தவிட்டுச் சத்து குறைவானது என்பதால் சிறந்தது அல்ல. இவற்றையும் சொதி சம்பல் போன்றவற்றுடன் உண்பது நல்லதல்ல. பருப்பு, சாம்பார் அல்லது காய்கறிகளால் ஆன கறிகளுடன் சேர்த்து உண்பதே நல்லது. பாண் அல்லது கோதுமை உணவு உண்ண நேர்ந்தால் பட்டர் ஜாம் போன்ற வற்றைத் தவிர்த்து பருப்பு போன்றவற்றுடன் உண்ண வேண்டும்.

பயறு, பருப்பு, சோயா, அவரை, கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் புரதமும் நார்ப்பொருளும் உள்ளதால் தினமும் உணவில் சேர்ப்பது அவசியம். ஒருநேர உணவிற்கு இவற்றை அவித்துப் பயன்படுத்தலாம். அல்லது ஏனைய உணவுகளுடன் சேர்த்தும் உண்ணலாம்.

உருளைக் கிழங்கு, வத்தாளைக் கிழங்கு, மரவள்ளி, பலாக்காய், ஈரப்பலா, வாழைக்காய், போன்றவை மாச்சத்து அதிகமுள்ளவையாகும். இவற்றை அதிகம் உட்கொண்டால் அதற்கு ஏற்றளவு சோறு இடியப்பம், பிட்டு போன்ற பிரதான மாப்பொருள் உணவின் அளவில் குறைக்க வேண்டும்.

பழவகைகளும் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டியவையே. பழங்களில் நார்ச்சத்து அதிகம் என்பதால் அவை முக்கியத்துவம் பெறுகின்றன. பழச்சாறாக அருந்தும்போது நார்ச்சத்து நீங்கிவிடுகிறது. எனவே முழுமையாகச் சாப்பிடுவதே நல்லது. வாழைப்பழம், மாம்பழம், கொய்யா, பப்பாசி, அன்னாசி என யாவும் நல்லவையே. பேரீச்சம்பழத்தில் சீச்சத்து அதிகம் என்பதால் தவிர்ப்பது நல்லது.

ஒவ்வொரு உணவோடும் ஏதாவது பழம் சாப்பிடுவது நல்லது. ஆயினும் குருதியில் சீனி அளவு மிகஅதிகமாக உள்ளவர்கள் சற்றுக் குறைவாகவே பழங்களைச் சாப்பிட வேண்டும். அதேபோல சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களும் கட்டுப்பாட்டுடன் உண்ண வேண்டும்.

மீன் நல்லது. கோழியிறைச்சில் கொழுப்பு குறைவு. இருந்தாலும் அதன் தோல் பகுதியில் உள்ள கொழுப்பை சமைக்க முன் அகற்ற வேண்டும். மாடடிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவை கொழுப்பு அதிகமுள்ளதால் தவிர்ப்பதே நல்லது. முடடையைப் பொருத்தவரையில் அது ஒரு பூரண உணவு. இருந்தபோதும் அதன் மஞ்சற் கருவில் கொழுப்பும் கொலஸ்டரோலும் அதிகம் என்பதால் நீரிழிவு உள்ளவர்கள் வாரத்தில் 2-3 முறை மட்டும் உண்ணலாம்.

மிகக் குறைவாக உண்ண வேண்டியவை

இனிப்புள்ள எதையும் மிகக் குறைவாகவே உண்ண வேண்டும். சீனியானது மிக விரைவாக குருதியில் சீனியின் அளவை அதிகரிக்கும். குளுக்கோஸ் அதைவிட வேகமாக அதிகரிக்கும். எனவே கோப்பி, தேநீர் போன்றவற்றைச் சீனி போடாமல் அருந்துவது நல்லது. இளநீரிலும் இனிப்பு இருக்கிறது. அதீதமாக அருந்துவது கூடாது. வாரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு கிளாஸ் அளவு அருந்தலாம்.

இனிப்புப் போலவே கொழுப்பு அதிகமுள்ள உணவுகளிலும் கலோரி அளவு மிக அதிகம் என்பதால் நல்லதல்ல.

இனிப்பின் அளவானது சில உணவுகளில் வெளிப்படையாகத் தெரியாது மறைந்திருக்கும் ஒரு துண்டு கேக்தான் சாப்பிட்டேன். ஒரு கிளாஸ் சோடாதானே குடித்தேன் என நினைப்பீர்கள். ஆனால் அவற்றில் எவ்வளவு அதிகமாக சீனி இருக்கிறது என அறிவீர்களா?

100 கிறாம் அளவுள்ள ஒரு சொக்கிளட் ஸ்லப்பில் 14 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறீர்களா?

100 கிறாம் அளவுள்ள சொக்கிலட் பிஸ்கற்றில் 11 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது. அத்தகைய தனி பிஸகட் ஒன்றில் சுமார் ஒன்றரைத் தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது

அதேபோல 50கிறாம் அளவுள்ள ஒரு சாதாரண அல்லது பழக் கேக்கில் சுமார் 5 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது. ஐஸ்கிறீம் 100 கிராமில் 4 ½ தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது.

‘உணவு செமிக்கயில்லை சும்மா ஒரு கிளாஸ் லெமனேட் மாத்திரம் குடித்தேன்’ என்பார்கள் சிலர். 200 மில்லி லீட்டர் அளவுகள் லெமனேட் குடித்திருந்தால் அது 3 தேக் கரண்டி சீனி குடித்ததற்கு சமனாகும்.

களையாகக் கிடக்கு என்று சொல்லி மோல்டற் மா வகைகள் குடிப்பவர்கள் பலருண்டு. நெஸ்டமோலட். ஹோர்லிக்கஸ், விவா எனப் பல வகை மா வகைகள் இருக்கின்றன. இவற்றில் எதையாவது குடித்தால் அதில் 2 தேக்கரண்டி சீனி சேர்ந்திருக்கிறது.

எனவே சீனி அதிகமுள்ள உணவுகளான ரின்பால், கேக், புடிங், ஜாம், ரொபி, சொக்கிளற், தகரத்தில் அடைக்கப்பட்ட பழங்கள், போத்தலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், மென்பானங்கள், பிஸ்கற் வகைகள், ஐஸ்கிறீம், ஜெலி போன்றவற்றறைத் தவிர்ப்பது நல்லது. நீரிழிவாளர்களுக்கு என ஜாம், கொக்கிளட் போன்றவை தயாரிக்கிறார்கள். இவையும் பொதுவாக நல்லதில்லை.

உணவில் எண்ணெய் வகைகளை மிகக் குறைவாகவே உபயோகிக்க வேண்டும். அது தேங்காயெண்ணயாக இருந்தாலும் சரி, சோயா, சூரியகாந்தி அல்லது நல்லெண்ணை எதுவாக இருந்தாலும் சரி குறைவான அளவே உட்கொள்ள வேண்டும். அறவே எடுக்கக் கூடாது என்றில்லை.

ஆனால் எண்ணெயில் பொரித்த வதக்கிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ரோல்ஸ், பற்றிஸ், வடை, முறுக்கு, மிக்ஸர் போன்ற நொறுக்குத் தீனிகள் அனைத்திலும் மாப்பொருளும், கொழுப்பும் மிக அதிகமாக உள்ளன. அவை நீரிழிவை மோசமாக்கும். கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கும் எடை அதிகரிப்பதற்கும் காரணமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.00.0.00.0.00.0

Read Full Post »

‘அம்மாவின் உலகம்’ இது கலாமணி அவர்களின் மூன்றாவது சிறுகதைத் தொகுதியாகும். எட்டுச் சிறுகதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.

Book covers_Kalamani

அம்மாவின் உலகம் எனப் பெயரிடப்பட்ட போதும் இது கலாமணியின் உலகமும் ஆக இருக்கிறது. இவற்றில் அவரது மூன்று வெவ்வேறு உலகங்களை இனங் காணக் கூடியதாக இருக்கிறது.

  • ஓன்று அவரது அக உலகம்.
  • இரண்டாவது இவரது குடும்ப உலகம்.
  • மூன்றாவது அவரது சமூகம் சார்ந்த உலகம்.

படைப்பாளியான கலாமணியின்; அக உணர்வுகள் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு சிறுகதையிலும் தெறித்து நிற்கிறது. பாடசாலை மாணவனாக இருந்த காலம் முதல் மணிவிழாக் காலம் வரையான பல தளங்களிலும் ஊடாடுகிறது.

‘நிழல்’ கதையில் எல்லா மணவர்களும் “மழையே மழையே வா வா” என அதை வரவேற்றுப் பாடுகிறார்கள். ஆசிரியரும் அதனையே ஆமோதிக்கிறார். ஆனால் இவன் பாடுவதில்லை. வாளாதிருப்பான். இதனை அவதானித்த ஆசிரியர் இவனையும் சேர்ந்து பாடும்படி உற்சாகப்படுத்துகிறார்.

ஆனால் இவன் “மழை போ வெயில் வா. மழை போ வெயில் வா” எனப் பாடி ஆசிரியரிடம் அடி வாங்கிக் கட்டுகிறான்.

‘எங்களின் வலி எங்களோடு. இவர்களுக்கு எங்கே அது புரியும்.’ ஆழமாகத் தைக்கும் சுருக்கமான வரியானது மாணவனின் உள்ளம் படும் பாட்டை வெளிப்படுத்துகிறது. குடை வாங்க வழியில்லாத ஏழை மாணவனின் உணர்வு அது.

ஒரு பெண்ணின் அருகாமை ஒருவனை உற்சாகப்படுத்துகிறது. மறுதலையான அவளது இல்லாமை ஓயவைக்கும். இவனுக்கு அருகில் நின்று வேலை செய்யும் கேரன் இரண்டு வாரங்களாக வரவில்லை. அதனால் தான் கவலையடையவில்லை என்றே நினைத்தான். அவள் வேலைக்கு வராததால் ஏற்பட்ட வெறுமை இவரது வேலையின் வினைத் திறனைப் பாதித்திருக்கிறது. நண்பர்கள் வேலையின் மந்தநிலையை கவனித்து, கேட்கவும் செய்தார்கள்.

“என் வேலை ஓடவில்லைத்தான்” என அவன் பதிவு செய்யும்போது நாலு பக்க ‘எங்கெங்கு காணினும்’ கதையில் பொதிந்துள்ள அவனது அகவணர்வு ஒரேயொரு வரியில் வெளிப்படுகிறது.

தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தவன் ஓய்வு பெற்று வீட்டில் ஓய்வாக இருக்கும் நிலையில் ஒருவனுக்கு ஏற்படும் மனநிலை எவ்வாறு மாற்றமடையும் என்பதையும், மனைவி பிள்ளைகளுக்கு இவன் மீதான மதிப்பு மரியாதைகளில் ஏற்படும் தொய்வும் இவனது உணர்வுளைச் சோரச் செய்வதையும் ‘நிழல்’ சிறுகதையில் சிறப்பாக காணமுடிகிறது.

அகவுணர்வு வெளிப்படுவதுபோலவே இப்படைப்புகளில் குடும்ப உறவில் மகிழ்ச்சியும் தளர்ச்சியும் ஏமாற்றமுமான உணர்வுகள் பல படைப்புகளில் சிறப்பாக வெளிப்படுகின்றன. தந்தையாக மகனாக சகோதரனாக கணவனாக பல பாத்திரங்களை காதாசிரியர் வகிக்கிறார்.

மிக அற்புதமாக வெளிப்படுவது மகனின் உணர்வுகள்தான். அம்மாவின் உலகம் மற்றும் நிழல் ஆகிய கதைகளைக் குறிப்பிடலாம். இத்தொகுப்பின் உச்ச வார்ப்புகளும் அவையாகவே இருக்கின்றன. இவன் அம்மாவில் கொண்டிருந்த பற்று அக்கதைகளின் ஒவ்வொரு வரிகளிலும் அழுத்தமாக வெளிப்படுகிறது. இவனது கனவுகளிலும், வீட்டில் பாதுகாத்து வைத்திருக்கும் அவளது குடையிலும் கூட அது உயிர்த்தெழுகிறது.

குறைவாகவே பேசப்பட்போதும் தந்தை பற்றிய பெருமிதத்தை ‘அம்மாவின் உலகு’ல் கதையோடு கதையாக சொல்லாமல் விடவில்லை.

தனது பிள்ளைகளுக்காக வேலை வேலைக்கு மேல் வேலை, ஓவர்டைம் என ஓடி ஓடி உழைத்துக் கொடுத்தாலும் அவனது பிறந்த தினத்தில் கேக் வெட்டும் நேரத்தில் அருகில் இருக்க முடியாத ஏக்கத்தை ‘தந்தையரும் தனயரும் சிறுகதை அற்புதமாக வெளிப்படுத்துகிறது.

பஸ்சில் காணும் கறுப்பு இனப் பெண்ணிற்கும் வெள்ளையனுக்கும் பிறந்த குழந்தையின் தந்தை மீதான பாசத்தையும் அதே வேளை தந்தை பிள்ளையை கண்டுகொள்ளாத தன்மையையும் அவதானிக்கும் இவனுக்கு குற்ற உணர்வு ஏற்படுகிறது. ஊற்றெடுக்கும் பாசத்தை வெளிப்படுத்த முடியாத சூழலில் இருக்கும் தந்தையின் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தும் படைப்பு இது.

மனைவி பற்றிய உணர்வுகள் மிகையின்றி யதார்த்தமாக உள்ளன. படைப்புகளில் பல விதமாக வெளிப்படவும் செய்கின்றன.

  • மகனின் பேர்த்டே அன்று தான் கூட இருக்க முடியாததால் மறுகும் உள்ளத்தை மனைவி தேற்றும்போது ஏற்படும் நெகிழ்வுணர்வு,
  • தன்னையும் குழந்தைகளையும் விட அம்மாவிலும் அவளது குடையிலும் மூழ்கிக் கிடக்கும் இவனை ‘உது ஒரு சென்ரிமென்ரல் ரைப்படா’ என எள்ளலாக சுட்டிக் காட்டும்போது மறுகும் மனம்,
  • பிள்ளைகளின் மீதான அவளது அதீத அக்கறையையும், பாசத்தை காணநோர்கையில் ‘அங்கு அம்மா இல்லை. குடையுடன் புவனம் தெரிந்தாள்’ எனத் தாயாகவே காணும் உணர்வு எனப் பல.

படைப்புகளில் அக உணர்வும், குடும்ப உறவுகளின் உன்னதங்களும் நெரிசல்களும் அற்புதமாக வெளிப்படுகின்ற போதும், இவரது ஆழமான சமூக உணர்வை ‘அக்கினிக் குஞ்சு’, ‘அவலம்’ சிறுகதைகளில் காண முடிகிறது.

‘எனது சிறுகதைகளில் அநேகமானவற்றில் நானும் ஒரு பாத்திரமாகவே உள்ளேன்’ என நூலாசிரியர் தனது உரையில் கூறுவதானது இது கலாமணியின் உலகம் என்ற எனது கருத்திற்கு வலுச் சேர்ப்பதாகவே உள்ளது.

‘இருந்தபோதும் அம்மாவின் உலகம் என்ற தலைப்பு மற்றொருவிதத்தில் மிகச் சரியானதாகவே படுகிறது. ஏனெனில் இத் தொகுப்பின் உன்னத கதைகள் அம்மா, தாய்மை, பெற்றோரியம், போன்ற உணர்வுகளையே பேசுகிறன்றன.

மிக முக்கியமான கதை அம்மாவின் உலகுதான். அது இடுப்பு எலும்பு உடைந்து படுக்கையில் வீழ்ந்துவிட்ட அம்மாவின் வாழ்க்கையையும் அவளைச் சுற்றிய உலகையும், பிள்ளைகள் மீதான பாச உணர்வையும் சொல்கிறது. அதிலும் தனது ஒரே மகன் மீதான அவளது பாசத்தையும், அவனது உணர்வுகளையும் மிக அழகாகப் பேசுகிறது.

மிகவும் நோய் வாய்ப்பட்டு நினைவு தழும்பிய நிலையிலும் தனது மகனது குரலை மட்டும் அவளால் உணர முடிகிறது. அந்தக் கடைசி இரவில் ‘நான் உங்களுடன் இரவு கூட நிற்கட்டுமா’ மகன் கேட்கிறான். ‘வேண்டாம் போ’ என்பதாக அவளது முகக் குறிப்பு காட்டுகிறது. மரணப் படுக்கைத் தரிசனத்தில் இதுவும் சேர்த்தியா என என் மனம் யோசித்தது.

மரணப்படுக்கையில் கிடக்கும் ஒருவரது மன உணர்வுகளை நாம் கேட்டறிய முடியாது. சைகைகள் மற்றும் குறிப்புகளால்தான் ஓரளவு உணர்ந்து கொள்ள முடியும். இது பற்றி உலகளாவிய ரீதியில் பல ஆய்வுகளும் விவாதங்களும் நடந்திருக்கின்றன.

Book covers_Kalamani back

மரண வாயிலில் தான் நிற்பதை உணர்ந்திருக்கிறாள். தன் இறுதி மூச்சைப் பார்க்கும் மனோதிடம் அவனுக்கு இல்லை என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். எனவேதான் இறுதிக் கணத்தில் அங்கு நிற்காதவாறு அவனை அவனது வீட்டிற்கு போகுமாறு சைகை காட்டியிருக்கிறாள் என எண்ணத் தோன்றுகிறது. ஆம் காலனின் பாசக் கயிற்றையும் விட உறுதியானது தாய்ப் பாசம் என்பதை இக் கதை உணர்த்துகிறது.

மருத்துவனான என்னை கவர்ந்த ஒரு விடயம் இதே கதையில் உண்டு.

  • ‘ஒன்றுக்கும் யோசியாதை. படுக்கைப் புண் வராமல் பார்த்துக்கொள்’ என்பதான உறவினர் ஆலோசனை, தாய்க்கும் வந்திவிடுமா என்ற பயம்,
  • பராமரிப்பவர்களுக்கு ஏற்படும் மன உழைச்சல்கள். அதைத் தடுக்க தங்களுக்குத் தெரிந்த வழி முறைகளைக் கையாள்வது.

இவை ‘அம்மாவின் உலகில்’ சிறுகதையில்  சில சித்தரிப்புகள். நோயாளிக்கு அவர்களது செயற்பாடுகள் துன்பமாகவும் மாறுகிறது. கதை கால் முறிந்து பல வருடங்களாகப் படுக்கையில் கிடக்கும் அம்மாவும் இதைப் புரிந்து தானாகவே தன்னை நிமிர்ந்தி வளைத்து பயிற்சிகள் செய்ய முயல்கிறாள்.

ஆனாலும் புண் வந்துவிடுகிறது. ஏன் வருகிறது? ‘அம்மா படுக்கையிலிருந்து நிமிராமல் இருந்த ஒரு கிழமைக்குள் புண் வந்துவிடுமா?’ மகன் ஆச்சரியப்படுகிறான்.

படுக்கையில் கிடப்பதால் மட்டும் புண் வந்துவிடுவதில்லை. திரும்பவும் உட்காரவும் முடியாத நிலை வரும்போதுதான் படுக்கைப் புண் தேடி வரும். அந்த நேரத்தில்தான் சுற்றத்தவர்கள் நோயாளியின் பராமரிப்பில் மேலும் கூடிய அக்கறை செலுத்த வேண்டும். பூசும் மருந்துகளும், விசுறும் மருந்துகளும் பெரும் பலன் தராது. நிபுணத்துவத்துடன் கூடிய பராமரிப்பு வேண்டிய தருணம் அது. படிப்பினை ஊட்டும் கதை இது.

இக் கதைகளல் பெரும்பாலானவை எமது நாட்டின் கிராமத்து அனுபவங்களாக இருக்கின்றன. கரைந்து நீர்த்துப் போகும் வாழ்வின் இனிய கணங்களை மீளவும் துளிர்க்கச் செய்கின்றன. மற்றொரு புறம் செல்வம் கொழிக்கும் அவுஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்த வாழ்வின் பதிவுகளாக மேலும் இரு கதைகள். இவை மாறுபட்ட அனுபங்களைத் தருகின்றன.

இவற்றை எல்லாம் கடந்து வேற்றுலகம் பற்றிய கற்பனைக் கதை ஒன்றும் உள்ளது. ‘எங்கெங்கும் காணினும்’ மிக வித்தியாசமான கற்பனை. அவர் சித்தரிக்கும் அந்த உலகில் எல்லாமே உள்ளன. அதுவும் விரல் சொடுக்கும் நேரத்திற்குள் கைக்கு எட்டிவிடும்.

ஆனால் ஒன்றே ஒன்று இல்லை. அவர்களைப் பார்த்து இவன் கேட்கும் வார்த்தைகளில் அது என்ன என்பது புரிகிறது. ‘உங்கள் உலக மக்களுக்கு ஆசாபாசங்கள் இல்லையா?’

‘நாங்கள் ஆசாபாசங்களில் திளைக்கும் மனிதர்கள்’ ஆம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள். அன்பும், ஆசையும், கோபமும், விரோதமும், காதலும் காமமும் என எல்லா உணர்வுகளிலும் ஊறித் திளைப்பதால்தானே நாம் மனிதர்களாக இருக்கிறோம். நாம் கணனிகளாகவோ இயந்தரங்களாகவோ இல்லை என்பதால் மகிழலாம்.

நாம் நிஜ உலகில் வாழ்கின்ற போதும் இன்றைய அவசர வாழ்வில் இயந்திரங்களாகவே மாறிக் கொண்டிருக்கிறோம். இது ஒரு விஞ்ஞானக் கதையாக இருந்தாலும் கூட அதற்கு ஊடாக நவீன வாழ்வில் ஏற்படக் கூடிய அவலங்கள் பற்றிய சிந்தனைகளை எழுப்புகிறது.

kalamani5

அடிப்படையில் கலாமணி ஒரு விஞ்ஞானப் பட்டதாரி. பௌதீகவியல் ஆசிரியராக மாணவர்களால் மிகவும் வேண்டப்பட்டவர். இன்று அவர் ஒரு கல்வியில் விரிவுரையாளர். அத்துடன் கூத்துக் கலையின் நுணுக்கங்களை தனது தந்தையின் ஊடாகப் முதிசமாகப் பெற்ற அற்புத கலைஞன். வேறுபட்ட துறைகளில் பெற்ற இத்தகைய பட்டறிவு அனுபவங்களை அவரது படைப்புகளில் தரிசிக்க முடிகிறது.

அவற்றை நேர்த்தியான சிறுகதைப் படைப்புளாகத் தந்த கலாமணிக்கும், நூலாக வெளியிட்ட கலாமணி பரணீதரனுக்கும் எனது பாராட்டுக்கள்.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

 

Read Full Post »

நீங்கள் புகை பிடிப்பவரா?

தினமும் உங்கள் முதலாவது சிகரட்டை எந்த நேரத்தில் புகைப்பீர்கள்?

Young-woman-smoking-cigar-010

தினமும் எத்தனை சிகரட்டுகளைப் புகைப்பீர்கள்.

இவற்றை மனதில் கணக்கிட்டு வைத்துக் கொண்டு மேலே  படியுங்கள்.

உங்களது முதலாவது சிகரட்டை எப்பொழுது புகைக்கிறீர்கள் என்பதற்கும் வாய்ப் புற்றுநோய் மற்றும் சுவாசப்பை புற்றுநோய் எதிர்காலத்தில் வருவதற்கும் நிறையத் தொடர்பிருக்கிறதாம்.

TSNA (tobacco-specific n-nitrosamines) என்பது புகையிலைக்கே உரித்தான இரசாயனப் பொருட்களாகும். அதில் 4-(methylnitrosamino)-1-(3-pyridyl)-1-butanone (NNK)    என்பது முக்கியமானது அது புற்றுநோயைத் தூண்டக் கூடியது. அதாவது புற்றுநோய்த் தூண்டி carcinogen எனலாம். இது உடலில் சேர்ந்து மாற்றமுறும்போது NNAL என்பதாக மாறுகிறது.

எனவே குருதியில் அதிகளவில் NNAL இருப்பவர்களுக்கு புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கருதலாம் அல்லவா? புகைப்பதால்தான் இதன் செறிவு குருதியில் அதிகரிக்கும்.
இந்த பற்றிய மற்றொரு விடயத்தை கட்டுரையின் இறுதியில் சொல்கிறேன்.

காலை எழுந்தவுடன் …

அண்மையில் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. அது சொல்வதுதான் இது.
காலையில் விழித்தெழுந்தவுடன் புகைப்பவர்களுக்கே குருதியில்  NNAL குருதியில் மிக அதிகமாக இருந்ததாம். விழித்தெழுந்தவுடன் எனும்போது கட்டிலில் இருந்தே புகைப்பது என அர்த்தம் அல்ல. விழித்தெழுந்த அரை மணி நேரத்திற்குள் புகைக்க ஆரம்பிப்பவர்களுக்கு இதன் செறிவு மிக அதிகமாம்.

images

காலை எழுந்தவுடன் படிப்பவர்கள் அல்ல அவர்கள். காலை எழுந்தவுடன் புகைப்பவர்கள்.

இதில் ஆச்சரியமான அம்சம் என்னவெனில் அவர்கள் எத்தனை சிகரெட்டுகள் புகைக்கிறார்கள் என்பதை விட காலையில் விழித்தெழுந்த ½ மணி நேரத்தில் புகைப்பதுதான் குருதியில் NNAL லை அதிகம் அதிகரிக்கிறதாம்.

Public health sciences Professor  Joshua Muscat, Asst Prof Steven Branstetter ஆகியோரால் செய்யப்பட்ட இந்த ஆய்வு Cancer, Epidemiology, Biomarkers and Prevention என்ற சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

அந்த ஆய்வின் பிரகாரம் ஆய்வற்கு உட்பட்ட 1945 போரில்

  • 32 சதவிகிதமானவர்கள் காலை எழுந்து 5 நிமிடங்களுக்குள்ளும்
  • மேலும் 31 சதவிகிதமானவர்கள் காலை எழுந்து 6 முதல் 30 நிமிடங்களுக்குள்ளும் புகைத்தார்கள்.
  • 18 சதவிகிதமானவர்கள் 31 முதல் 60 நிமிடங்களுக்குள்ளும் புகைத்தார்கள்.
  • மிகுதி  19 சதவிகிதமானவர்கள் மட்டுமே காலை எழுந்து ஒரு மணி நேரத்தின் பின் புகைத்தார்களாம்.

விழித்தெழுந்தவுடன் புகைப்பவர்களுக்கு குருதியில் NNAL அதிகமாக இருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?.
மிக ஆழமாக உள்ளெடுத்தும் புகைப்பதும் சிகரட்டை முழுமையாகப் புகைப்பதும் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

காலை எழுந்தவுடன் அவசரங்கள் நெருக்கீடுகள் என எதுவும் கிடையாது. மனம் அமைதியாக இருக்கும். ஆற அமர இருந்து ஆழப் புகையை உள்ளெடுத்து முழுமையாகப் புகைத்ததால் புற்றுநோய்த் தூண்டிகளை கூடுதலாக உள்ளெடுத்திருப்பார்கள்.

சிலருக்கு ஆனந்தமாக கொமேட்டிலிருந்து இதை ஒரு பிடி பிடித்தால்தான் மலம் கழியும் என்பதைப் பற்றி ஆய்வு கிடையாது.

மற்றொரு ஆய்வு

புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய இந்த NNAL பற்றிய மற்றொரு தகவலை இங்கு குறிப்பிடுவது அவசியம். ஒருவரது உடலில் NNAL இருப்பதை அறியவும் அளவிடவும் முடியும். இரத்தப் பரிசோதனை தேவையில்லை. சிறுநீர்ப் பரிசோதனை செய்தால் போதும். சிறுநீரில் கலந்துள்ளதைக் அளவிடுவதன் மூலம் குருதியில் கலந்துள்ளதைக் கணக்கிட்டு அறிய முடியும்.

இதன் மூலம் புகைப்பவர்களை மட்டுமின்றி வேறுவகைகளில் புகையிலையின் தாக்கத்திற்கு உள்ளானவர்களையும் கண்டறிய முடியும்.

அதாவது மூக்குத்தூள் போடுபவர்கள், வெற்றலையோடு புகையிலை சப்புபவர்கள் போன்றோரில் இந்த நச்சு எவ்வளவு கலந்திருக்கிறது என்பதைக் கண்டறிய முடியும்.

இவற்றைத் தவிர தமது சூழலிலிருந்து புகையிலையின் தாக்கத்துக்கு ஆளானவர்களின் பாதிப்புகளையும் கணித்தறிய முடியும்.

அதாவது புகையிலையை அறுவடை செய்பவர்கள், புகையிலையோடு தொடர்புடைய தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் மற்றவர்கள் புகைக்கும்போது அருகில் இருப்பவர்கள் எனப் பலவாகும்.

ஆனால் புகைப்பவர்களில் NNAL செறிவானது புகைக்காதவர்களை விட 50 முதல் 150 மடங்கு கிடுகிடுவென அதிகரித்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வீட்டில் புகைப்பது, தொழிலகத்தில் புகைப்பது போன்றவற்றால் அருகில் உள்ளவர்கள் பாதிப்படைகிறார்கள்.

  • வீட்டில் கணவன் புகைத்தால் அதிலிருந்து வரும் நச்சு வீட்டில் உள்ள மனைவி பிள்ளைகள் என அனைவரையும் பாதிக்கும்.
  • ஆனால் பெரியவர்களை விட 2-3 மடங்கு அதிகமாக குழந்தைகளைச் சென்றடைகிறது என்கிறது ஆய்வு.

அது மாத்திரமல்ல கர்ப்பணியாக இருந்தால் நச்சுக் கொடி ஊடாக கர்ப்பப்பையிலுள்ள கருவையும் இந்த NNAL நச்சுப் பொருள் சென்றடைகிறது என்பதையும் ஆய்வில் கண்டறிந்தார்கள்.

கற்றுக் கொள்ள வேண்டியது என்ன?

ats61100_electronic-cigarette

இந்த ஆய்வு சொல்வதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது என்ன?
‘புகைக்கலாம், எவ்வளவும் புகைக்கலாம், ஆனால் காலையில் எழுந்தவுடன் மட்டும் புகைக்கக் கூடாது என்பதா?’

நிச்சயமாக இல்லை.

புகைப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி பல வருடங்களாகவே பல ஆய்வுகள் ஏற்கனவே வந்து அவற்றின் ஆபத்துக்களை எமக்குத் தெளிவாகச் சொல்லிவிட்டன. புகைப்பதால் புற்றுநோய்கள் மட்டுமின்றி இருதய நோய்கள், மாரடைப்பு, ஆஸ்த்மா, சிறுநீரக நோய்கள், ஆண்மைக் குறைபாடு என பல்வேறு ஆபத்தான நோய்கள் ஏற்படும்.

Risks_form_smoking-smoking_can_damage_every_part_of_the_body

வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் – Smoking 

தாய் புகைத்தலும் குழந்தையின் எதிர்கால உளநோய்களும்

எனவே அவை அதைப் பற்றிப் பேசவில்லை.
எந்த நேரத்தில் புகைப்பதால் ஆபத்துகள் அதிகம் என்பதைப் பற்றி மட்டுமே ஆராய்ந்தது. அதுவும் NNAL லால் ஏற்படக் கூடிய ஆபத்தை மட்டுமே பேசியது.

இரண்டாவது ஆய்வானது புகைப்பவருக்கு மட்டுமின்றி அருகில் இருக்கும் இச்சையின்றிப் புகைத்தோருக்கும் (passive smoking)) ஆபத்து ஏற்படும் என்பதைத் தெளிவுறுத்துகிறது.

அதுவும் குழந்தைகளையும் கர்ப்பப்பையில் உள்ள கருவையும் பாதிக்கும் என்கிறது.

ஆகவே புகைக்காதீர்கள்.

எந்த நேரமானாலும் புகைக்காதீர்கள்.

உங்களுக்காக மட்டுமின்றி உங்கள் அருகில் உள்ள உங்கள் அன்பிற்குரிய மனைவி, குழந்தைகள் நண்பர்கள் போன்ற அனைவரது நலத்திற்காகவும் புகைக்க வேண்டாம்.

என்றும் எப்பொழுதும் புகைக்கவே வேண்டாம்.

எனது ஹாய் நலமா புளக்கில் (13.11.2014) வெளியான கட்டுரை

0.0.0.0..0.0.0

 

Read Full Post »

நுண்ணிய நரம்புக் கலங்கள் முதல் செயற்கை மூளை வரை
காதலின் சின்னமாக மூளை

‘குற்றம் செய்தவர் மீண்டும் குற்றம் செய்வாரா?’, ஒருவரது அரசியல் சாய்வு எந்தப் பக்கம் இருக்கக் கூடும்’ ‘ஓரு குறிப்பிட்ட விடயத்தில் ஒருவர் எவ்வாறு முடிவு எடுப்பார்’

இவை பற்றி யாரால் என்ன சொல்ல முடியும். மற்றவர் மனதில் உள்ளதை எம்மால் எவ்வாறு கண்டறிய முடியும். அவராகச் சொன்னல்தான் உண்டு. அல்லது கேட்டு அறிய வேண்டும்

mind-reading-120131-676450-

கள ரீதியாக இல்லாமல் விஞ்ஞான பூர்வமாக இந்த விடயங்கள் பற்றி அண்மையில் ஆய்வுகளாக செய்யப்பட்டிருந்தன. அவர்களது சமூக மற்றும் தனி நபர் செயற்பாடுகள் அடிப்படையாகக் கொண்டு அல்ல. அவர்களது மூளைகளின் செயற்பாடுகளை நுணுக்கமாக ஆராய்ந்து செய்யப்பட்டவை. அறிய ஆச்சரியமாக இருக்கிறதா?

உணர்வோடு சம்பந்தப்பட்ட விடயங்களை பௌதீகமான மூளைக்குள் ஆய்வது பற்றி சாதாரண மனிதர்கள் மட்டுமின்றி பல அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகளும் ஐயங்களை எழுப்ப்pனர்.

மனசும் மூளையும்

அட்டக் கத்தி திரைப்படம் வந்திருக்கிறது.. அற்புதமானது என்று சொல்ல முடியாது. ஆனால் மிக வித்தியாசமானது. ‘காதல் தெய்வீகமானது. உண்மையான காதல் ஒரு முறைதான் வரும், காதல் இல்லையேல் சாவு’ போன்ற பிம்பங்களை உடைத்துக் கொண்டு வந்திருக்கும் சினிமா அது.

heart-love-wallpaper-images

நாயகன் ஒவ்வொரு முறை காதல் வயப்படும்போதும் அவனது காதலின் அடையாளமாக இருதயத்தை தாங்கிய அம்பு காதலியை நோக்கி சிட்டெனப் பாயும்.

காதல் என்றால் உணர்வுடன் தொடர்புடையது. ஆனால் காதலின் சின்னமாக ஏன் இருதயத்தை வைத்திருக்கிறோம். காதலில் நாம் இழப்பது, பெறுவது, அனுபவிப்பது எல்லாமே உணர்வுகளுடன் தொடர்புடைய மூளையால்தானே.

love_and_mind-t1
தர்க்க ரீதியாகச் சிந்தித்தால் மூளைதான் காதலின் சின்னமாக அமைய வேண்டும்.

இந்தச் சிந்தனை முரணுக்குக் காரணம் எம்மிடையே ஆழப் பதிந்திருக்கும் ஒரு எண்ணம்தான்.

ஒரு உதாரணம் பார்க்கலாம். வழமையான தமிழ்த் திரைப்படங்களின் கதைதான். ஒரு அழகான பெண். மிகவும் வசதியுள்ளவள். ஆனால் அவள் காதலிப்பதோ ஒரு விளிம்பு நிலை வாலிபனை. ‘தனது மூளை அவனை மறக்கச் சொல்கிறது, மனசோ அவனோடுதான் உறவாடுகிறது’ என்பாள். ஆம் மூளை வேறு மனசு வேறு என்ற எண்ணம் பலரிடையே ஆழ வேரூன்றிவிட்டது.

ஆனால் மனசு மூளைக்குள்தான் இருப்பது விஞ்ஞான பூர்வாகத் தெளிவாகப் புரிந்து நீண்ட காலமாகிவிட்டது.

விஞ்ஞான ஆய்வுகள்

heart-transplantation

இருதயத்தையும், சிறுநீரகத்தையும், ஈரலை மாற்றீடு செய்யும் சத்திரசிகிச்சைகள் சர்வ சாதாரணமாகிவிட்டன. ஆனால் இன்னமும் மூளையில் கை வைக்க முடியவில்லை. இதனாலோ என்னவோ! உடல் உறுப்புகள் பற்றிய நுண்ணிய ஆய்வுகள் இப்பொழுது மூளையின் பக்கம் திரும்பியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

ஐன்சைடினின் மூளையின் அளவும் அவரது அறிவாற்றலும் பற்றிய ஆய்வுகள் சில காலத்திற்கு முன் ஊடகங்களில் அடிபட்டது. அது பற்றிய சர்ச்சைகளும் எழுந்தன. சமகாலத்திலும் எழுதப்பட்டது. மூளையின் அளைவை மட்டும் வைத்துக் கொண்டு அதன் ஆற்றலை புரிந்து கொள்ள முடியாது என்றார்கள். ‘கண்ணாடிக் குடுவைக்குள் உள்ள மூளையை ஆய்வதன் மூலம் மூளையின் செயற்பாட்டை கண்டறிய முடியாது’ என்ற வாதமும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

உண்மைதான். மூளையானது தனியாக இயங்கும் உறுப்பு அல்ல. அது உடலின் ஒரு அங்கம். உடலுடன் கூடவே நடமாடும் அந்த மூளையானது பல்வேறு அனுபவங்களைப் பெறுகிறது. புதிய மனிதர்களைக் காண்கிறது, புதிய சூழல்களில் இயங்குகிறது.

பிரச்சனைகளை எதிர் நோக்குகிறது, ஆபத்துக்களை எதிர் கொள்கிறது. அதே நேரம் சிரிக்க வைக்கிறது, அழ வைக்கிறது, கோபப்பட்டு ஆக்கிரோஸமாக தன்னைச் சுமக்கும் உடலை எதிர்வினையாற்றவும் வைக்கிறது.

அதன் ஆற்றலை அதன் செயற்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இன்னும் ஆழமாகச் செல்ல வேண்டும். மூளையின் அடிப்படையான நரம்புக் கலங்களை ஆராய வேண்டும். மூளையில் தகவல்கள் எவ்வாறு பரிமாறப்படுகின்றன என்பது பற்றி அறிய வேண்டும். நினைவுகள் எப்படிச் சேமிக்கப்படுகின்றன என்பது தெளிவாக வேண்டும்.

இவற்றையெல்லாம் தனியாக மூளையை வெளியே அகற்றி போர்மலின் போட்டுப் பாதுகாத்து அதை ஆராய்வதில் பயனில்லை. மூளையானது வௌ;வேறு வித்தியாசமான சூழல்களைச் சந்திக்கும் போது பெறும் மாற்றங்களை ஆராய வேண்டும். மூளையை அவ்வாறு ஆராய்வதை நரம்பியல் விஞ்ஞானம் (Neuroscience) என்கிறார்கள்.

இவை மூளையில் பதிவாகின்றன. ஒவ்வொரு உணர்வும் அனுபவமும் கற்கையும் அங்கு பதிவாகின்றன. இதற்குக் காரணம் அது மிகவும் நுணுக்கமான ஒரு உறுப்பு. ‘ஆழ்ந்தகன்ற நுண்ணியனே.. ‘ என சிவனைப் பாடினார் மாணிக்கவாசகர். அது போல நுண்ணியதில் நுண்ணியது.

ஆவ்வாறே அனுபவங்களின்; பதிவுகள் மூளையின் கண்ணுக்கு எட்டா ஏதோ ஒரு பகுதியில் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அங்கு பேணப்படுகின்றன. பின்னொரு நாளில் நினைவு மீட்கும்போது அவை அச்சடித்த காகிதம்போல தகவலை மீளத் தருகின்றன.
 

நவீன ஆய்வுகள்

இவற்றை ஆராய்வதற்கான வசதிகள் எங்களிடம் உள்ளனவா?
இது சாத்தியமா?

‘இருக்கு.. ஆனால் இல்லை..’ என்ற பாணியில்தான் மழுப்பலாக பதில் சொல்ல வேண்டியுள்ளதா?

நரம்பியல் விஞ்ஞானம் இப்பொழுதான் குறுநடை போட ஆரம்பித்திருக்கிறது.

MRI பற்றி எல்லோருக்கும் தெரியும். எமது மூளைக்குள் இருக்கும் கட்டிகள், குருதிக் கண்டல்கள், பழுதடைந்த மூளையின் பகுதிகள் போன்றவற்றை புகைப்படம்போல எடுத்துக் காட்டுபவை அவை.
ஆனால் இவை போதுமானதல்ல என்பதை எல்லோரும் அறிவர்.
மூளையின் கனபரிமாணத்திற்கு அப்பால் அதன் செயற்பாட்டை ஆராயும்

fMRI Functional magnetic resonance imagingபாவனைக்கு 1990 களில் வந்துவிட்டது. ஒரு பகுதி நரம்புகளின் செயற்பாடுகளுக்கும் அதற்கான குருதி ஓட்ட அளவிற்கும் தொடர்பு உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கிறது இது. அதாவது செயற்படும் மூளையின் குறிப்பிட்ட பகுதிக்கு அதிகளவு இரத்தம் செல்வதைக் கொண்டு இயங்குவது.

இவை ஆரோக்கியமான சாதாரண மனிதர்களின் மூளையை ஆராய்வதில் புரட்சிகரமான முன்னேற்றத்தைக் கொண்டு வந்தது. உணரும்போதும் செயற்படும்போதும் மூளையின் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்ய முடிந்தது. எம் நினைவுகளையும், சிந்தனையையும், முடிவு எடுத்தலையும், அறிவாற்றலையும் மட்டுமின்றி கனவுகளையும் கூட உணர்த்தக் கூடியதாகும்.

இது ஒரு ஆரம்ப நிலை உபகரணமாகும்.. புதிய புதிய கருவிகள்  வந்துள்ளன. மூளையின் ஆழத்தில் புதைந்திருக்கும் சில நரம்புக் கலங்களை மிகுந்த துலக்கத்துடன் தூண்டும் வல்லமை கொண்ட ஒளித்துகள்  கருவிகளை (optogenetics) இப்பொழுது நரம்பியல் விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். நனொ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மிக நுணுக்கமான அளவுகளை மூளையின் செயற்பாட்டின்போது எடுப்பது விரைவில் சாத்தியமாகும் எனவும் தெரிகிறது.

அடிப்படை அலகுகள்

மூளையின் செயற்பாடுகள் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது மூளையின் மூலக் கலங்களான நியூரோன் (neuron) எனப்படுவதாகும். இவற்றில் எழும் நுண்ணிய மின்அலைகள் கலத்திலிருந்து ஏனைய கலங்களுக்கு பரவுவதன் மூலமே மூளை செயற்படுவதாகக் கருதப்பட்டது.

neuroglia_of_CNS

இவற்றை ஒன்றோடு ஒன்று இணைப்பதாக கிளையல் கலங்கள் (glial cells) இருக்கின்றன. இவற்றில் மூன்று வகைகள் உண்டு.  astrocytes, microglia, and oligodendrocytes   எனப்படுகின்றன. நியூரோன்கள் மட்டுமே மூளையின் செயற்பாட்டையும் முழுமையாகக் கட்டுப்படுத்துவதாக ஆரம்பத்தில் கருதப்பட்டது.

இந்த கிளையல் கலங்கள் நியூரோன்களை பாதுகாப்பதற்கும்,  கலங்களின் இடையேயான தொடர்புகளைக் கடத்துவதற்கும் போசாக்குகளைக் கடத்துவதற்கும் மட்டுமே என்றே முன்னர் நம்பினார்கள். ஆனால் ஆஸ்ரோசைட்ஸ் மற்றும் மைக்ரோகிளயா (astrocytes, microglia) ஆகியவை தகவல்களை பதப்படுத்துவதற்கும் உதவுகின்றன என அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.

பல்வேறு நட்சத்திர வடிவம் கொண்ட ஆஸ்ரோசைட்சானது நியூரோன் போலவே இணைப்புகளை ஏற்படுத்தி சமிக்கைகளை தமக்கிடையேயும், நியூரோன்களுக்கும் அனுப்பும் ஆற்றல் கொண்டவை. ஆயினும் தானாகவே மின் சமிக்கைகளை உற்பத்தியாக்க கூடியவை அல்ல.

எலிகளில் செய்யப்பட்ட ஆய்வின் படி ஒவ்வொரு ஆஸ்ரோசைட்சும் பல்லாயிரக் கணக்கான இணைப்புகளுடாக தகவல் பரிமாற்றத்தை ஒழுங்கு பண்ணக் கூடியவையாகும். அத்துடன் மயிர்த்துழைக் குழாய்கள் (capillaries) ஊடான இரத்த ஓட்டத்தையும் கட்டுப்படுத்தக் கூடியவையாகும்.

ஆனால் மனித ஆஸ்ரோசைட்ஸ்கள் எலியினுடையதை விட அளவில் சற்றுப் பெரியவையாக இருக்கின்றன. இவற்றை எலியின் மூளையில் மாற்றீடு செய்தபோது எலிகளின் நினைவாற்றலானது பல்மடங்கு பெருகியது. மனித ஆஸ்ரோசைட்ஸ்கள் மேலும் பல செயற்பாடுகளைச் செய்யும் ஆற்றல் கொண்டவை என்ற முடிவுக்கு இவ் ஆய்வு அறிக்கை மூலம் நாம் வர முடியும்..

இதேபோல மைக்ரோகிளியாவும் பல்வேறு செயலாற்றல் கொண்டவை என கடந்த 10 வருடங்களுக்குள் செய்யப்பட்ட ஆய்வுகள் உணர்த்துகின்றன. அவை மூளையின் எதிர்ப்பாற்றல் சக்தியுடன் தொடர்புடையவை. இறந்த கலங்களை துடைத்தெடுக்கின்றன. நுண்ணியதாக நீளும் விரல் போன்ற அலகுகளால் சூழலைக் கண்காணிக்கின்றன. அத்துடன் தேவையற்ற இணைப்புகளை அழித்து புதியவை உருவாக இடம் அளிக்கின்றன.

இவ்வாறான ஒரு சில ஆய்வுகள் மனிதரில் மேற்கொள்ளப்பட்ட போதும் பெரும்பாலானவை எலி போன்ற மிருகங்களிலேயே செய்யப்படுகின்றன. மேலும் நுணுக்கமான ஆய்வுகளை மனிதரில் செய்வதற்கான நவீன கருவிகளின் வரவு தேவையாக உள்ளது.
நரம்பியல் விஞ்ஞான ஆய்வுகளாவன மூளையின் கனபரிமாணம் மற்றும் வடிவுகளைத் தாண்டி அதன் உட்பாகங்களுக்கும் சென்றுள்ளதைப புரியக் கூடியதாக உள்ளது. மூளையின் கலங்களையும் அதன் மூலப் பகுதிகளையும் நோக்கிய துல்லியமான ஆய்வுகள்; சாத்தியமாகின்றன.

செயற்கை மூளை

இதற்கிடையில் ஒஸ்ரிய விஞ்ஞானிகளால் மறு உருவாக்க நுட்பங்களைப் பயன்படுத்தி மனித மூளையின் சிறிய வடிவத்தை ஆய்வு கூடத்தில் உருவாக்க முடிந்திருக்கிறது. இது பற்றிய செய்திகளை பத்திரிகைளில் படித்திருப்பீர்கள். மூளையின் பல பகுதிகளான cerebral cortex, retina, meninges, choroid plexus போன்றவற்றின் ஆரம்ப கட்ட வளர்ச்சியை 2 மாதத்தில் ஆய்வு கூடத்தில் எட்ட முடிந்தாலும் அதற்கு மேல் வளர்ச்p அடையவில்லை.

Artificial brain

போதிய குருதி ஓட்டம் மற்றும் ஒட்சியன் இல்லாமையால் வளர்ச்சி தடைப்பட்டது என்று அவர்கள் சொன்னார்கள். இருந்த போதும் மனித உடலில் பயன்படுத்தக் கூடிய மூளையை உருவாக்குவது அண்மைக்காலத்தில் சாத்தியமில்லை என்றே படுகிறது.

இருந்தபோதும் இந்த ஆய்வை தட்டிக் கழிக்க வேண்டியதில்லை. மூளையின் செயற்பாடுகள் அதன் நோய்கள் பற்றிய பல புதிய செயதிகளையும் தருவதோடு ஆய்வுக்கான புதிய கதவுகளையும் அது திறந்து விட்டிருக்கிறது.

முடிவாக

இன்னும் பல்லாயிரம் படிகள் எங்கள் முன் காத்திருக்கினறன. தகவல்கள் மின்அலைகளாக எவ்வாறு உருவாகின்றன. அவை ஒன்றிலிருந்து மற்றது எவ்வாறு வேறுபடுகிறது போன்ற பலவற்றையும் கண்டறிய வேண்டியுள்ளது.

காதலின் சின்னமாக மூளையின் கலங்களான நியூரோன் மற்றும் ஆஸ்ரோசைட்ஸ, மைக்ரோகிளயா போன்றவற்றைக் குறியீடாக சினிமாவில் காட்டும் விஞ்ஞான அறிவியல் தெளிவு எமது நெறியாளர்களுக்கு கிட்டும் காலம் வருமா?

வரும் என நம்பலாம். அதேபோல திரைப்பட ஆர்வலர்களும் அக் குறியீடுகளை தெளிவாகப் புரிந்து கொள்ளும் அறிவியல் வளர்ச்சி தொலை தூரத்தில் இல்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

நலவியல் குறுந் தகவல்

எகிப்திலிருந்து தொழில் நிமித்தம் வந்தவர் அவர். சில நாட்களாக கொழுப்பில் தங்கியிருக்கிறார். மேலும் ஓரு வாரமளவு தங்கியிருக்க வேண்டும். இரவிரவாகத் தூங்க முடியவில்லையாம். வேலை நெருக்கடியால் எற்பட்ட உளநெருக்கீடு காரணமாகத் தூங்கமுடியவில்லை என நினைத்தேன்.

“இல்லை” என்றார்.

“வேலை செய்ய வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. எப்படியும் செய்தே ஆக வேண்டும். தினமும் 10-15 கோப்பி குடித்து என்னை உற்சாகப்படுத்துகிறேன்” என்றார்.

“ஆனாலும் தூக்கத் தியக்கத்தால் வேலை செய்ய முடியவில்லை” என்றார்.

இவர் மாத்திரமல்ல பல இளம்வயதினர் நீண்ட நெருக்கடி நிறைந்த வேலைப்பளு காரணமாக நிறையக் கோப்பி அருந்துகிறார்கள்.
அவ்வாறு குடிப்பதால் பல பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

  • மனப்பதகளிப்பு, உளநெருக்கீடு.
  • தலையிடி, தலை அம்மல், தலைப்பாரம்,
  • தூக்கக் குழப்பம்
  • அடிக்கடி சிறுநீர் கழிதல், கழிவதற்கு ஏற்ப நீர் இருந்தாவிட்டால் நீரிழப்பு நிலை ஏற்படும்.
  • உடலில் கல்சியம் சத்துக் குறைவடைதல்.
  • சில மருந்துகளின் செயற்பாட்டில் பாதிப்புகள் ஏற்படல்.

மேற் கூறியவரின் தூக்கக் குழப்பத்தின் காரணம் எனக்குப் புரிந்தது.
அவருக்குப் புரியவைப்பது பெரும்பாடாக இருந்தது.

தன்னை உற்சாகப்படுத்தும் பானம்தான் தனது தூக்கத்தைக் குலைத்து பகல் முழக்க வேலை செய்யவிடாது அலைக்கழிக்கிறது என்பதை அவரால் நம்ப முடியவில்லை.

“கோப்பி அருந்தலாம். அது நல்லது” எனவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் அதிகமாக அருந்துவது கூடாது’ புரிந்து கொள்ளுங்கள்.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0

Read Full Post »