முகத்தில் முகம் பார்க்கலாம், விழியில் உணர்வறியலாம், வால் அசைவில் மனதுணரலாம்.
பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம். பாடசாலை. சிறு பிள்ளைகள் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர் ஏதோ கேள்வி கேட்கிறார். எழுந்து நின்ற மாணவன் அவரது முகத்தைப் பார்த்தபடி திக்கித் திணறி விடை அளிக்கிறான். ஆசிரியர் எதுவும் சொல்லவில்லை. மாணவனுக்கு தன்னை அறியாது மூத்திரம் கழிந்து விட்டது.
இத்தனைக்கும் ஆசிரியர் ஏசவில்லை. பிரம்பை எடுக்கவில்லை. கை உயர்த்தக் கூட இல்லை. ஆனால் அவனுக்கு சிறுநீர் தன்னையறியாது பிரிந்து விட்டது. அவ்வளவு பயப்பீதி.
பயப்படுத்தியது எது? அவரது முகம் கடுகடுப்பாகியிருக்கலாம், கண்களில் கோபம் தெறித்திருக்கலாம். அந்தச் சிறுவயதிலேயே அவனுக்கு ஆசியரின் உடல் மொழி புரிந்திருக்கிறது.
சிவாஜி கணேசனை சிம்மக் குரலோன் என்பார்கள். கருணாநிதின் நீண்ட அடுக்கு வசனங்களை அட்சரம் தவறாமல், அழகு தமிழில் பேசுவதில் சிவாஜிக்கு இணை கிடையாது. ஆனால் அவரது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது அதுவல்ல. அவரது முகபாவ வெளிபாட்டு முறைகள்தான். அது அவருக்கு கிட்டிய பெரும் கொடையாகும். இதுவும் உடல் மொழிதான்.
உடல் மொழியை ஆங்கிலத்தில்Body language என்பார்கள். Non Verbal communication என்று சொல்வதும் உண்டு. கலைச் சொல்லில்; Kinesis என்பார்கள்.
எங்கள் மனதில் உறைந்திருக்கும் உணர்வுகளை எம்மையறியாது அவ்வாறே பெரும்பாலும் வெளிப்படுத்துகிறோம். கோபத்தை, தாபத்தை, பணிவை, அன்பை, ஆதரவை, வெறுப்பை இவற்றையெல்லாம் பெரும்பாலும் எமது முகத்தாலும் ஏனைய அங்க அசைவுகளின் மூலம்தானே வெளிப்படுத்துகிறோம்.
இவற்றில் பெரும்பாலானவை எம்மை அறியாமலே எம்மை மீறி பட்டவர்த்தனமாகி விடுகிறன. பல தருணங்களில் வாயைத் திறந்தால் எம் உணர்வை வெளிப்படுத்திவிடுவோம் என்ற பயத்தில் நாவடக்கிய போதும் முகம் காட்டிக் கொடுத்துவிடும்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என முன்னோர்கள் அற்புதமாக உளவியல் பேசினார்கள். அகத்தின் அழகை மாத்திரமல்ல அதன் அழுக்கையும் முகம் வெளிப்படுத்திவிடுகிறது.
“தாபம் பொறுக்க முடியாது இருக்கிறது. புணர்வோம் வருகிறாயா?” என்று யாராவது கேட்டிருப்பார்களா.
கண்அசைவு அதன் சிமிட்டல், அல்லது அது வெளிப்படுத்தும் வேட்கை உணர்வு ஒன்றே போதும் அவளை அல்லது அவனை படுக்கைக்கு வரச் செய்வதற்கு. வெறுமனே இசைவது மட்டுமல்லாமல் மற்றவரிடம் தாப உணர்வைக் கிளர்தெழச் செய்யும் வல்லமையும் அதில் உள்ளது.
ஒரு ஆய்வைப் பெண்களில் செய்தார்கள். அவர்களின் தாப உணர்வைக் கண்டறிவதற்காக. ஆனால் கேள்விகள் கேட்டு இந்த ஆய்வைச் செய்யவில்லை. அவர்கள் பேசுவதை வைத்துக் கண்டறியவில்லை.
கண்களை வைத்துச் செய்தார்கள். அதுவும் முழுமையான கண்களை வைத்து அல்ல. கண் மணியின் விட்டத்தை வைத்து. அது விரியும் அளவை வைத்து மட்டும் செய்யப்பட்டது. நோர்வேயில் உள்ள University of Tromsø ,y;Laeng B, Falkenberg L ஆகியோரால் செய்யப்பட்டது
ஆனால் அந்த ஆய்வு உடல்மொழி பற்றியது அல்ல. ஹோர்மோன் சுழற்சி மாற்றங்களுக்கு ஏற்ப பாலியல் விருப்பங்கள் எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பதைக் கண்டறிவதற்கானது. அது பற்றி பின்னர் பேசுவோம்.
மிருகங்களில் உடல்மொழி
ஆனால் இந்த உடல் மொழிகள் மனிதர்களுக்கு மாத்திரமானவையா அல்லது மிருகங்களிலும் உள்ளனவா.
மிருகங்களுக்கு மொழி இருக்கிறதோ இல்லையோ நாம் அறியோம். ஆனால் அவை சத்தம் எழுப்புகின்றன. அதனை அவற்றின் சகாக்கள் புரிந்து கொள்கின்றன. காகங்கள் கரைந்து தம் கூட்டத்தை அழைக்கிறது. குயில் தாபத்துடன் இசைக்கிறது, பூனையின் மியாவ் எங்களுக்கு புரிவதில்லை. ஆனால் அதன் சோடிகளுக்கு புரியும். நாய்கள் குலைக்கின்றன.
ஆனால் குலைக்காமல் கத்தாமல், இரையாமலும் இருந்தபோதும் அவை தங்கள் சகபாடிகளின் உடல் மொழிகளைப் புரிந்து எதிர்வினையாற்றுகினறன என்பதை ஒரு ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள்.
மனிதர்களில் கண்களில் ஆய்வு செய்தார்கள். இப்பொழுது நாய்களின் வாலில் ஆய்வு. வால் என்றால் அதன் நீளம் அகலம், பற்றியது அல்ல. அவை அசையும் விதம் பற்றியது.
நாய்கள் வால் அசைப்பதை நாம் எல்லோருமே கண்டிருக்கிறோம். எசமானைக் கண்டால் மகிழ்ச்சியில் வாலாட்டுவது தெரியும்.
எங்களுக்குத் தெரிந்தது அவ்வளவு மட்டுமே. ஆனால் ஒரு நாயானது மற்ற நாயின் வால் ஆட்டும்; விதத்தை வைத்து அதனது உணர்வுகளை மட்டுக்கட்டுகின்றன என்கிறார்கள் இத்தாலியைச் சார்ந்த ஆய்வாளர்கள்.
ஒரு நாயானது தனது வாலை இடது பக்கமாக அசைக்கும்போது அதைப் பார்த்திருக்கும் ஏனைய நாய்களின் மனங்கள் பதற்றமடைகின்றனவாகும். நாய்கள் பதற்றமடைவதை அவற்றின் இருதயத் துடிப்பு வேகமாவதைக் கொண்டு கண்டறிந்தார்கள். ஆனால் வலது பக்கமாக ஆட்டினால் ஏனைய நாய்கள் பதற்றமடையவில்லையாம்.
வலது பக்கமாகவோ இடது பக்கமாகவோ தமது வாலை ஆட்டவேண்டும் என அவை திட்டமிட்டுச் செய்வதில்லை. அது இயல்பாக நடக்கிறது. தன்னிச்சையின்றி நடைபெறுவதாகும். இயற்கையின் கொடை எனலாம். அல்லது கூர்ப்பில் எட்டப்பட்டது எனவும் கொள்ளலாம்.
இதை முன்பு செய்த மற்றொரு ஆய்வு எடுத்துக் காட்டியிருந்தது. தனது எசமானைக் கண்டது போன்ற மகிழ்ச்சியான நிகழ்வு நடைபெறும்போது அதன் மூளையின் இடது பக்கத்தில் செயற்பாடு அதிகரித்ததாம். அந்த நேரத்தில் வால் வலது பக்கமாக ஆடினவாம். மாறாக மற்றொரு நாய் அக்கிரோசமாக இதைக் கடிக்க நெருங்கும்போது இதன் மூளையின் வலது பக்கத்தில் செயற்பாடு அதிகரித்து, வால் இடதுபுறமாக ஆடுமாம்.
ஆனால் நாய்கள் தங்கள் வால்களை ஒரு பக்கமாக மட்டும் ஆட்டுவதை நாம் கண்டதில்லை. இதற்குக் காரணம் அது வேகமாக ஆட்டுகிறது. அதனால் அது எமக்குப் புரிவதில்லை. வீடியோவில் எடுத்து சிலோ மோசனில் பார்க்கும்போது இது தெரிந்தது என்கிறார்கள்.
இப்பொழுது செய்த ஆய்வின் போது வாலை ஆட்டும் வேறு நாய்களின் வீடியோக்களை ஆய்வுக்கு உட்பட்ட நாய்களுக்குக் காட்டினார்கள். வீடியோ பட நாய்கள் எந்தப்பக்கமாக வாலை ஆட்டுகின்றன என்பதைப் பொறுத்து இந்த நாய்களின் இருதயத் துடிப்பில் மாற்றம் ஏற்பட்டது.
சில நாய்கள் பெரிதளவு எதிர்வினை காட்டாதபோது மீண்டும் மீண்டும் வீPடீயொ போட்டுக் காட்டிய போது அவை எதிர்வினை காட்டின. எதிர்வினையை அவற்றின் நாடித் துடிப்பின் மூலமாகக் கண்டறிந்ததற்கு மேலாக வேறு அறிகுறிகள் மூலமும் கண்டறிய முடிந்தது.
வாலை இடது பக்கமாக அசைப்பதைப் பார்த்த நாய்ககளில் மனஅழுத்தமும் எச்சரிக்கை உணர்வும் ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது. நாய்கள் டென்சானாகும் என்ன செய்கின்றன என்பதை நீங்களும் நானும் அறிவோம். அவற்றைத்தான் அவர்களும் அவதானித்தார்கள். அவற்றின் காதுகள் நிமிர்ந்தெழுந்தன, மூச்சிரைத்தன, தாக்குதலுக்கு தயாராவது போல உடலைச் சுருக்கின. கண்கள் விரிந்தன.
கண்மணி விரிதலும் பாலியல் உணர்வும்
இந்தக கண்கள் விரிவடையும் தன்மையானது ஏனைய விலங்குகளில் இருப்பது போவே மனிதர்களிடமும் காணப்படுகிறது. இது தாங்களாகச் செய்வது அல்ல. தன்னை அறியாமல் நடக்கும் செயலாகும். 1975 ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வு சுவார்ஸமானது.
தங்களுக்கு சோடியாக வரப்போகின்றவரது புகைப்படத்தைப் பெண்கள் கண்டதும் அவர்களது கண்மணி விரிந்ததாகக் கண்டார்கள். அது பயத்தினால் ஏற்பட்ட விரிவு அல்ல. ஆனந்தக் கிளர்ச்சியால் ஏற்பட்டதாகும்.
இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்பீர்கள். பாலியல் ஆர்வம் பெண்களுக்கு எக்காலத்தில் இயல்பாகவே எழுகிறது என்பதை இந்த ஆய்வு கோடி காட்டுகிறது.
ஆரம்பத்தில் பெண்களின் கண்களைப் பற்றிய ஆய்வின் மீதிக் கதைதான் இனி வருகிறது.
பெண்களின் கண்களை அவர்களது மாதவிடாய் சுற்றின் பல்வேறு கட்டங்களில் பரிசோதித்திருந்தார்கள். மாதவிடாயில் இரத்தப் பெருக்கு இருக்கும்போது (menstrual phase)> சூலகத்திலிருந்து முட்டை வெளியேறி கருவாவதற்கு உடலானது தயாராயிருக்கும் ‘கருவள காலத்தில்’ (ovulatory phase), அதற்கு பின்னான ஓய்வு(luteal phase), காலத்திலாகும்.
அவரது பாலியல் துணைவரின் படங்களைக் காட்டிய போது சூலகத்திலிருந்து முட்டை வெளியேறும் கருவள காலத்தில் அவர்களது பாலியல் உணர்வு தூண்டப்பட்டது. கண்மணி விரிவதைக் கொண்டு அதனைக் கண்டறிந்தார்கள்.
மனைவியின் மாதவிடாய் வட்டத்தை சரியாகக் கணித்து வைத்திருங்கள். அந்நேரத்தில் (கருவள காலம்) சுலபமாகக் கைகூடும்.
ஆனால் கருத்தடை மாத்திரை உண்ட பெண்களில் இந்த மாற்றம் தென்படவில்லை. இதற்குக் காரணம் அவர்களில் ஹோர்மோன் மாற்றங்களால் கருவள காலம் என்பது அடக்கப்பட்டு விடும் என்பதாலாகும்.
இதன் அர்த்தம் கருத்தடை மாத்திரை உண்ணும் பெண்களுக்கு பாலியல் ஆர்வம் குறைந்துவிடும் என்றல்ல. கருத் தங்கிவிடும் பிரச்சனை இல்லை என்ற உணர்வு அவர்களில் ஆர்வத்தைத் தூண்டிவிடும் எனவும் சொல்கிறார்கள்.
நாளாந்த வாழ்வில் உடல் மொழி
உடல் மொழியை இன்று பல கற்கை நெறிகளில் ஒரு பாடமாக எடுக்கிறார்கள். முக்கியமாக தொழில் முறையில் மேலாண்மை நிலையில் இருப்பவர்களுக்கு அவசியமாகிறது. மருத்துவத் துறையில் உடல் மொழி என்ற சொல்லைப் பயன்படுத்தாமலே மருத்துவர்கள் அவற்றைத் தங்கள் நோயாளிகளில் அறிகுறிகளாகத் தேடுகிறார்கள்.
ஆனால் தினசரி வாழ்வில் இதன் முக்கியத்துவம் அபரிதமானது. முகபாவங்கள் மட்டுமின்றி ஒருவர் எவ்வாறு உட்கார்ந்திருக்கிறார், அவரது கைகள் ஓய்ந்திருக்கிறதா பரபரக்கிறதா, கண்களில் ஒளிர்வது எது போன்றவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் மன உணர்வுகளை உடல் மொழி மூலம் புரிந்து கொண்டவர்களால் எல்லோரையும் அணைத்து நல்லுறவைப் பேண முடியும். மாறாக அதை அசட்டை செய்பவர்கள் மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாகவே நேரும்.
மற்றவர்களது உடல் மொழிகள் எமக்கு என்ன சொல்கிறது என்பதற்கு அப்பால் நாம் எமது உடல்மொழியால் மற்றவர்களுக்கு என்ன செய்தியை கடத்தியிருக்கிறோம் என்பதும் முக்கியமானதாகும்.
அது சரி நாயின் வாலாட்டல் உடல் மொழியைப் புரிந்து கொள்வதால் என்ன நன்மை?
யாரவது ஓருவரின் வீட்டிற்கு போகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். தூரத்தில் ஒரு நாய் நிற்கிறது. அதன் வாலைப் பாருங்கள். அது வலது புறமாக வாலாட்டினால் பிரச்சனை இல்லை. உங்கள் வருகை அதற்கு அச்சுறுத்தாலாக இல்லை. பேசாமல் இருந்துவிடும்.
மாறாக இடது புறமாக வாலாட்டினால் மருத்துவ மனைக்குச் சென்று ஊசி போடுவதற்கு தயாராகுங்கள்.
எனது ஹாய் நலமா புளக்கில் 05 March 2014 ல் வெளியான கட்டுரை
டொக்டர் எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்
0.0.0.0.0.0