Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for செப்ரெம்பர், 2014

கவர்ச்சியானவற்றில் செல்லச் சீண்டல்கள்

கவர்ச்சியான எதைக் கண்டாலும் அது எம்மில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். உருண்டு திரண்ட முகம், சூட்டிகையான கண்கள், வனப்பான கன்னங்கள். கிள்ள வேண்டும் போலத் தோன்றவே செய்யும் அல்லவா?

Artistic-Cute-Wallpaper-Background-1920x1200-7551

அத்துடன் முந்திரிப் பழம்போல மூக்கு, நேர்த்தியான வளைவுகளுடன் கூடிய குளிர்ச்சியான உதடுகள். கட்டியணைத்து கொஞ்ச வேண்டும் போலத் தோன்றாதா?

Baby-Cute-Eyes-HD

நான் இங்கு சொல்ல வருவது காமக் கண்களுடன் பெண்களை நோக்கும் ஆண்களின் வக்கிரப் பார்வையை அல்ல. அழகான குழந்தை மீது, பட்டுப் போல மிருதுவான பூனை மீது, கொழுகொழுவென கண்களால் சிரிக்கும் நாய்க் குட்டிகள் மீதான ஆத்மார்த்தமான ஈர்ப்பு பற்றியது. அது எந்த உயிராகவும் இருக்கலாம். அவற்றின் மது எமக்கு ஏற்படும் கவர்ச்சி, ஆனந்தம், உளச் சிலிர்ப்பு போன்றவை பற்றியே ஆகும்.

Cute-Cat-Pic-8

ஆனால் இந்த ஈர்ப்பானது உயிர் அற்றனவற்றின் மீதும் ஏற்படலாம். அதாவது புகைப்படங்கள் ஓவியங்கள் சிற்பங்கள் போன்றவை. உதாரணமாக ரீவி பார்க்கும்போது மலர்போல விரிந்த கண்களும் குட்டி மூக்கும் அழகான வாயும் கொண்ட எலி பூனை கரடி ஓநாய் போன்றவற்றின் கார்ட்டுன் படங்கள் எம்மை ஈர்ப்பதில்லையா?

Too-Cute-to-be-Scary-Statue-with-Bradford-Exchange

உயிருள்ள உயிரற்ற எந்த உண்மையான அழகையும் கவர்ச்சியையும் கண்டாலும் மனத்தில் ஒரு குதாகலம் ஏற்படும். ஆனந்தம் பொங்கும். மனம் நிறையும். ஏதோ ஒரு சுகம் நம்மை அணைத்துக் கொள்ளும்.

நளினத்தின் மீதான ஈர்ப்பு உலகளாவியது. எந்த இனத்திற்கு மதத்திற்கு மொழிக்கோ தேசத்திற்கோ மட்டுப்பட்டதல்ல.

ஆனால் அவ்வளவு மட்டும்தானா?

கொஞ்சவேண்டும் அள்ளி அணைக்க வேண்டும் என்ற ஆசைகளுடன் நின்றுவிடுமா?

20140901_063731_Richtone(HDR)-001

அதற்கு அப்பாலும் செல்கிறது. ஒரு வகை வன்முறைச் சீண்டல் அல்லது ஆக்கிரமிப்பிற்கும் (aggression)  இட்டுச் செல்கிறது என்கிறது அண்மைய ஆய்வு ஒன்று.

‘கடித்துத் தின்ன வேண்டும் போலிருக்கிறது’ என ஆப்பிள் திரண்ட மொழுமொழுவென இருக்கும் குழந்தையின் கன்னத்தைப் பார்த்து விளையாட்டுப் போலச் சொல்வதில்லையா? ‘அப்படியே சப்பிச் சாப்பிட வேண்டும் போலிருக்கிறது’ எனத் திராட்சை போல செந்நிறமான உதடுகளைப் பார்த்து நீங்கள் கூட எப்பொழுதாவது சொல்லியது ஞாபகம் வருகிறதா?

காய்சலுடன் ஒரு குழந்தை காய்ச்சலோடு மருத்துவரிடம் வந்தது. அதன் பிரச்சனைகளை அனுதாபத்தோடு கேட்டு, அதனை பரிவோடு சோதித்து அதற்கான சிகிச்சையை வழங்கினார் அந்த மருத்துவர். பின்னர் அது புறப்படும்போது ‘எல்லாம் சுகமாகிப் போடும். வீட்டை போய் ரெஸ்ட் எடுங்கோ. கொஞ்சம் விiயாடுங்கோ’ என்று சொல்லும் போது அதன் கன்னங்களை செல்லமாகக் கிள்ளினார்.

Screenshot-128

இது ஒரு ஒரு உதாரணம். எதனை உணர்த்துகிறது. களிளுவதானது அவரது உள்ளத்தில் மறைந்திருக்கும் வன்மத்தின் வெளிப்பாடா? இல்லை! அழகான அந்தக் குழந்தையில் அவருக்கு அன்பு இருக்கிறது. பரிவோடு பார்க்கிறார். அதற்கு உதவ முன்வருகிறார். அதன் வேதனையைதை; தீர்க்க வேண்டும் என எண்ணுகிறார். ஆனால் அதே நேரம் அதைக் கிள்ளவும் செய்கிறார்.

அன்பு ஆதரவு பட்சாபிதம் போன்ற நேர்மறையான எண்ணங்குளம் இருக்கின்றன. அதே வேளை கிள்ளுவது போன்ற அடாத்துச் செயலும் இருக்கிறது. இது எதிர்மறையான செயற்பாடு அல்லவா? இவை இரண்டும் ஒன்றுக்கு ஓன்று முரணான உணர்வுகள் அல்லவா? இது ஏன்?

குழந்தைகள் பொம்மைகளுடன் ஆசையோடு விளையாடுவார்கள், கொஞ்சுவார்கள, தாலாட்டுவார்கள். ஆராரோ பாடி தூக்க வைப்பது போலவும் செய்வார்கள். ஆனால் சில நேரத்தில் அவற்றை இறுக அழுத்துவதும் உண்டு. அவற்றின் கண்களைக் குத்துவதும் உண்டு. இவையும் ஒன்றுக்கு ஒன்று முரணான செயல்கள் அல்லவா? அழகியவற்றைக் காணும்போது ஏன் அத்தகைய ஒன்றுக்கு ஒன்று முரணான உணர்வுகள் ஏற்படுகின்றன.

DSC_0102 (1)

காரணம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் பல விளக்கங்களை தருகிறார்கள் அறிஞர்கள்.

ஒரு விளக்கம் அது ஒரு ஏமாற்றத்தின் அல்லது ஏக்கத்தின் (Frustration)  வெளிப்பாடாக இருக்கலாம் என்கிறார்கள. ‘அது தன்னது அல்ல. அதைத் தான் தொடர்ந்து வைத்திருக்க முடியாது’ என்பதால் எற்பட்டதாக இருக்கலாம்.

இருந்தபோதும் இது சரியான விளக்கமாகத் தெரியவில்லை.

மற்றொரு விளக்கம் ஏற்புடையதாகத் தெரிகிறது. தீவிரமான உணர்வு எழுச்சிகள் வெடித்துக் கிளம்பும்போது மூளை நரம்புகளின் வினையாற்றல் திரிவு படலாம் என்பதாகும். அதாவது தீவிரமான நேர்மறை உணர்வுகள் எழுந்து அது செயற்பாடாக மாறும்போது நேர்மறையானது போன்ற தோற்றத்தைக் கொடுக்கலாமாம்.

அண்மையில் ஒரு விழா நடந்தது. மகனுக்கு ஒரு விருது வழங்கப்பட்டது. தந்தையும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். விருது வழங்கப்பட்டபோது மகிழ்ச்சியால் கைதட்டி மகிழ்ந்தார். நிகழ்ச்சியாளர்கள் அவரை மேடைக்கு அழைத்து ‘உங்கள் மகனுக்கு விருது கிடைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ எனக் கேட்டார்கள்.

அவரால் எதுவும் பேச முடியவில்லை. வாய் கொன்னித்தது. சொற்கள் சிதறி புரியாதவாறு வெளிப்பட்டன. கண்களிலிருந்து நீர் வெளிப்பட்டது. தேம்பித் தேம்பி அழுதார்.

மகன் பரிசு பொற்றதில் அவருக்கு ஆனந்தமா கவலையா? ஆனந்தம்தான்

ஆனால் அவரது மூளையால் அந்த தீவிர உணர்ச்சி வெளிபப்hட்டிற்கு சரியான முறையில் வினையாற்ற முடியவில்லை. சிரிப்பதற்கு பதில் அழுகை வந்தது.

‘ஆனந்தக் கண்ணீர்’ எங்களுக்குத் தெரியாததா என்பீர்கள்.

Viduthalai.1.-5BYAMS-DVD-5D.avi_snapshot_00.24.36_[2011.08.07_17.22.43]

நாம் ஆண்டாண்டு காலமாக உணர்ந்ததை புரிந்ததை இப்பொழுது புது விளக்கமாக் கொடுக்கிறார்கள் என்பீர்கள். உண்மைதான் ஆனால் அறிவியல் மொழிகளில். ஆம் எமது வாழ்வில் அனுபவங்கள் கற்றுக் கொடுத்தவற்றை ஆய்வாளர்கள் புது ஆய்வுகளாகத் தருகிறார்கள். புது விளக்கங்களும் தருகிறார்கள்.

இதை நாம் ஏளனம் செய்ய வேண்டியதில்லை. அனுபவங்களுக்கான விஞ்ஞான விளக்கங்கள் ஆய்வுகள் மூலம் கிடைப்பதையிட்டு மகிழ்வு கொள்ளலாம்.

மீண்டும் செல்லச் சீண்டல்களுக்கு வருவோம். இதனால் கிடைப்பது ஆனந்தம் மட்டும்தானா?

அதனால் எமக்கு நன்மைகளும் ஏற்படுகிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

 • நளினத்தின் மீதான ஈர்ப்பானது ஒருவரது நுணுக்கமான கைவினைத்திறனின் மீதான கட்டுப்பாட்டை அதிகரிக்கிறதாம்.
 • ஏதாவது ஓன்றின் மீது அக்கறை வைத்திருக்கும் கால அளவை அதிகரிக்கிறதாம்.
 • உற்பத்தித் திறனையும் அதிகரிக்கிறதாம்

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.000.0

Read Full Post »

‘தூங்காத கண் ஒன்று உண்டு. துடிக்கின்ற மனம் ஒன்று உண்டு’ தூக்கமின்மையால் மனம் துடிப்பது மட்டுமின்றி நோய்களும் குடிகொள்ளும்.

தூக்கமில்லாத பலர் இன்று இருக்கிறார்கள். போதிய தூக்கம் இல்லாமல் போவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்.

 1. தானாகத் தேடிக்கொள்ளும் தூக்கமின்மை ஒரு வகை. படிப்பென்றும் வேலையென்றும் நீண்ட நேரம் விழித்தருப்பதால் போதிய தூக்கம் இல்லாதவர்கள் இவர்கள்.
 2. தேடாமலே வந்து ஒட்டிக் கொள்ளும் தூக்கமின்மை மற்றொரு வகை. எவ்வளவுதான் நேரம் கிடந்தாலும், எவ்வளவு நேரம்தான் படுத்துக்கிடந்தாலும் தூங்கம் வராதவர்கள் மற்றவர்கள்

காரணம் எதுவாக இருந்தாலும் போதிய தூக்கம் இல்லாவிட்டால் உடல் சோர்வாக இருக்கும். வாழ்க்கை சினமாக இருக்கும், வேலைகளில் மூளையைச் செலுத்த முடியாது. வினைத்திறன் குறைந்துவிடும், தூக்கமின்றி எரிச்சல் பட்டுக் கொண்டிருந்தால் மற்றவர்களும் இனிமையாகப் பழக முடியாது வெறுப்பைத் தேட நேரம்.

ஆனால் இவை எல்லாவிற்கும் மேலாக தூக்கமில்லாதவர்களின் இருதயமும் பாதிப்பிற்கு ஆளாகுவதற்கான சாத்தியம் அதிகம்.

வேறு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்.

வாழ்க்கை நெருக்குவாரம் stress மிக்கதாக மாறிவிடும்.

 • தூக்கமின்மைக்கும் பசிக்கும் தொடர்புண்டு. அடிக்கடி பசிப்பது போல இருக்கும் எதையாவது தின்ன அல்லது குடிக்க வைக்கும். இவ்வாறு மேலதிக கலோரிகள் சேர்வதால் எடை அதிகரிக்கும்.
 • தூக்கக் குழப்பம் உள்ளவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான சாத்தியம் அதிகம். தூக்கமின்மையால் தூக்க சுவாச நிறுத்தம் sleep apnea ஏற்படுவதே இதற்குகு; காரணம்.
 • இதே தூக்க சுவாச நிறுத்தம் காரணமாக இருதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம்.
 • உயர் இரத்த அழுத்தம், இருதயம் வேகமாகத் துடித்தல், இருதயத் துடிப்பின் லய மாறுபாடுகள்.

இவ்வாறு பல பிரச்சனைகள் தூக்கம் குறைபாட்டினால் ஏற்படுவதால் போதியளவு நேரம் அமைதியாகத் தூங்குங்கள்.

உங்கள் தூக்கக் குழப்பத்திற்கான காரணம் உங்களுக்குத் தெரியவில்லை எனின் மருத்துவ ஆலோசனை மூலம் காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ற பரிகாரம் காணுங்கள்.

‘தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே

அமைதியில் நெஞ்சம் உறங்கட்டுமே..’

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0

Read Full Post »

முகநூலில் பெற்ற நண்பரும் தமிழ் ஆசிரியருமான நிர்மலா சிவராஜா அவர்களது பூக்கள் என்ற நூலுக்கு நான் வழங்கிய வாழ்த்துரை

பூக்கள் என்றும் நறுவி என்றும் அழைக்கப்படும் மலர்கள் இயற்கையின் வசீகர அற்புதங்களில் ஒன்றாகும். பெண்களுக்கு அழகைக் கொடுக்கும் வதனம் போல மரம் செடி கொடிகளை வாஞ்சையோடு நாட வைப்பவை மலர்கள்தான்.

அவற்றின் கண்கவரும் வண்ணங்கள், நாசியைத் துளைக்கும் நறுமணங்கள், உள்ளுறைதிருக்கும் தேன் போன்றவை வண்டுகளையும் பூச்சிகளையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் படைத்தவையாகும்.

1962593_415142988631948_818164069_n

“தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு” அவற்றில் அமர்ந்து அளைவதானது மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்து அச் செடி வர்க்கத்தின் பரம்பலையும் நீட்சிiயும் ஊக்குவிப்பதற்காக இயற்கை அளித்த விந்தையாகும்.

மனிதனும் அவற்றின் அழகில் கிறங்கி ஆசையோடு வீடுகளில் வளர்க்கிறான். அலங்கரிக்கிறான். இறைவனுக்கு அர்ச்சிக்கிறான். காதலைத் தெரிவிக்க பரிசளிக்கவும் செய்கின்றான்.

மனித உணர்வுகளின் வேட்கையைத் தணிவிப்பது மட்டுமின்றி அவற்றை மூலிகை மருந்துகளாகவும் பயன்படுத்த கற்றுக் கொண்டான்.

மலர்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் அடங்கிய சுருக்கமான, செறிவான கட்டுரைகளை இலகு தமிழில் பேஸ்புக்கில் சகோதரி  நிர்மாலா சிவராஜா தொடர்ந்து எழுதி வந்தார். அவற்றை ஆவலோடு வாசித்தவர்களில் நானும் ஒருவன். நாம் அதிகம் காணத அரிய பூக்களைப் பற்றி மாத்திரம் இன்றி நாம் நாளாந்தம் காணும் மலர்கள் பற்றி அறியாத தகவல்களையும் அவர் தந்து வியப்பில் ஆழ்த்தி தப்பாமல் தொடர்ந்து படிக்கச் செய்தார்.

இது தகவல் யுகம். அவசரம் மிகுந்தது. காலம் பொன்னானது. அல்ல! பொன்னை விடப் பெறுமதியான rhodium காலம் எனலாம். இக் காலத்திற்கு ஏற்ற விதத்தில் மிகச் சுருக்கமாக ஆனால் அரிய தகவல்கள் நிறைந்த கட்டுரைகளை எழுதிய அவரது ஆற்றல் வியக்க வைத்தது.

யாழ் பல்கலைக்கழக B.A பட்டதாரியான அவர் தாயகத்திலும் புலம் பெயர்ந்த நாட்டிலும் ஆசிரியையாகக் கடமையாற்றிய போது பெற்ற அனுபவங்கள் கைகொடுத்திருக்கும் என்பது உண்மையே.

இருந்தபோதும் அதற்கு அப்பால் அவரிடம் இயல்பாக அமைந்திருக்கும் அழகியல் உணர்வும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையும், தேடல் உணர்வும் ஒவ்வொரு கட்டுரையிலும் பளிச்சிடுகின்றன. இலகுவான வார்த்தைகள், சுருக்கமான வசனங்கள், சிறிய பந்திகள், தெளிவான கருத்துக்கள், நீரோட்டம் போன்ற நடை ஆகியன அவரது எழுத்தின சிறப்பு எனலாம்.

தனது படைப்புகளுக்கு வலுச் செய்யும் வண்ணம் அவர் தேர்ந்தெடுத்திருந்த புகைப்படங்கள் மிக அற்புதமானவை. ஆயிரம் சொற்களால் சொல்ல முடியாததை ஒவ்வொரு புகைப்படம் ஊடாகவும் அள்ளித் தந்திருக்கிறார்.

உலகத் தமிழ் பண்பாட்டு கழகம் மூலம் தமிழ் மணிப் மணிப் புலவர் பட்டம் பெற்ற இவர் தற்போது அதே உலகத் தமிழ் பண்பாட்டு கழகத்தின் ஐரோப்பிய கல்விப் பொறுப்பளாராக இருப்பது அவரது பணி ஆர்வத்தையும், செயலூகத்தையும் புலப்படுத்துகின்றன.

இது அவரது முதல் நூல் என எண்ணுகிறேன். அவரது வாழ்க்கைப் பயணம் போலவே அவரது எழுத்துப் பயணமும் சிறப்பும் சுபிட்சங்களும் நிறைந்ததாக அமைய மனதார வாழ்த்துகிறேன்.

எம்.கே.முருகானந்தன்.

09.09.2013

Read Full Post »

இன்றைய வாழ்க்கையில் கல்வியானது நூல்களிலிருந்தும் இணையத்திலிருந்தும் கற்பதாக இருக்கிறது. தேடுதல் உள்ள ஒருவன் இதன் மூலம் நிறையவே கற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் கல்வியின் மூலம் அறிவை வளர்த்துக் கொள்ள முடியுமே தவிர ஒருவனது ஆளுமையையும் செயற்திறனையும் வளர்த்துக் கொள்ள முடியாது.

 

உதாரணத்திற்கு ஆசிரிய சேவையை எடுத்துக் கொள்வோம். அப் பணிக்கு வருபவர் பட்டப் படிப்பு பெற்றிருப்பார். இதனால் அவருக்குத் தேவையான கல்வி அறிவு கிட்டியிருக்கும். அத்துடன் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் அல்லது கல்வியற் கல்லூரியில் பெற்ற பயிற்சியால் ஆசிரியப் பணிக்கான பிரத்தியேக அறிவும் அவரிடம் வளர்த்திருக்கும். ஆனால் அவ்வாறு கற்ற யாவரும் சிறந்த ஆசிரியராக வருவதில்லையே! இது ஏன்?

ஆனால் அந்த நபரானவர் தனக்கு நன்கு அறிமுகமான ஆசிரியர் ஒருவரது குண இயல்புகளையும், கற்பிக்கும் முறைமைகளையும், மாணவர்களுடன் உரையாடும் பாணியையும்; முன்னுதாரணமாகக் கொண்டு அவரைப் போலத் தன்னையும் வளர்த்தெடுக்க முயற்சி எடுப்பாராயின் அவர் சிறந்த ஆசிரியராகப் பரிணமிக்க முடியும். அதற்கு மேலாக அவரிடம் தனது சந்தேகங்களை நிவர்த்திக்க முடியுமாயின் மேலும் உதவியிருக்கும்.

அர்ச்சுனன் துராணாச்சாரியிடமிருந்து வில்வித்தையைக் கற்றான். ஆனால் வில்வித்தையை மாத்திரமின்றி தனது ஆளுமையையும் அவனால் வளர்த்துக் கொள்ள முடிந்தது. துரியோதனனும் அவரிடமே கற்றான். ஆனால் அவனால் அவனது குண இயல்புகளும் பண்புகளும் சொல்லும்படியாக அமையவில்லை. அது குருகுலக் கல்வி முறை.

சரியான முறையில் அதைப் பயன்படுத்தினால் அது ஒரு அற்புதமான முறை.
drona_ekalyva

ஆனால் ஏகலைவன், துரோணாசாரியரிடம் நேரடியாகக் கற்று கொள்ளாமலே அர்சுணனை ஒத்த சிறந்த வில் வீரனாக மாறினான். இங்கு சிஸ்யர்கள் தங்கள் குருவின் வழிகாட்டலை வௌ;வேறு விதங்களில் பெற்றிருக்கிறார்கள்.

வழிப்படுத்தல் Mentoring

இன்று புதிதாக Mentoring பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கான சரியான தமிழ்ப்பதம் எதுவென்று தெரியவில்லை. வழிப்படுத்தல் எனக் கொள்வோம். அதிக அனுபவமும் knowledge உள்ள ஒருவர் தன்னிலும் அனுபவமும் அறிவும் குறைந்த ஒருவரை சரியான வழியில் நெறிப்படுத்துவது எனச் சொல்லலாம். மாறாக அவரைப் பார்த்து, அவரிடம் கேட்டு, அவரிடமிருந்து தன்னைத்தானே நெறிப்படுத்துவதாகவும் இது அமையும். இது இன்றைய வகுப்பறைக் கல்வி போலவோ ரியூசன் போன்றதோ அல்ல.

mentor

இதில் அறிவும் ஆற்றலும் அனுபவமும் மற்றொருவருக்கு ஊட்டப்படுவதில்லை. மாறாக அவர் அதைத் தானாகப் பெற்றுக் கொள்ளுமாறு வழிப்படுத்தப்படுகிறார். சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படுகிறது. கற்றல் உரையாடலுக்கு அப்பால், சவால்களை எதிர்கொள்வதையும் உள்ளடக்குகிறது.

வழிப்படுத்தல் என்பது பொதுவாக வழிநடத்துனர் Mentor மற்றும் mentee வழிப்படுபவர் ஆகிய இருவருக்கிடையேயான ஒருவகை உறவு எனலாம். ஒரு நாள் அல்லது குறிப்பிட்ட நாள் வரைக்கான உறவு அல்ல. தொடரும் உறவு, தங்கள் எதிர்பார்ப்பு நிறைவுறும் வரை தொடரும். ஆனால் இந்த இருவரில் எவராவது ஒருவருக்கு திருப்தி அளிக்கவில்லை எனில் எந்தவித மனக்கிலேசமும் இன்றி இடை நடுவில் கைவிடுவதும் சாத்தியமே.

வழிப்படுத்தலில் உள்ளடங்கும் இருவரும் பொதுவாக ஒரே துறையைச் சார்ந்தவர்களாகவே இருப்பர். மருத்துவர்கள், ஆசிரியர்கள், முகாமைத்துவம் சார்ந்தவர்கள், தொழில் நுட்பவியலாளர்கள், வாணிபம் செய்பவர்கள் என எத்துறை சாரந்தவர்களுக்கும் இது பயன்படலாம்.

இது வழமையான ஒரு கல்வி முறையல்ல என்பதைக் கண்டோம். முறைசாரது அறிவைக் கடத்துவது இதுவாகும். பொதுவாக அறிவை மாத்திரமின்றி அவரது தொழிற் திறனை விருத்தி செய்வதாகவும் அமைகிறது.

cogs

தங்களிடம் மறைந்திருக்கும் ஆற்றலை விருத்தி செய்து, திறன்களை மெருகூட்டி, வினைத்திறனை அதிகரித்து சிறந்த முறையில் தொழில் ஆற்றலைப் பெறுவதற்கு வழிப்படுத்தல் நன்கு பயன்படும். தங்கள் துறையில் தமது விருப்பிற்கு உரிய ஒருவரைப் போல தங்களைத் தானே வளர்த்தெடுப்பதற்கான முயற்சியாகவும் காணலாம்.

வழிப்படுத்தலில் அவதானிக்க வேண்டியவை

வழிநடத்துனரும், வழிப்படுபவரும் ஒரே தொழிலைச் செய்பவர்களாகவே இருப்பார்கள். ஆனால் ஒரே இடத்தில் வேலை வேலை செய்வது விரும்பத்தக்கதல்ல. ஏனெனில் அவை தொழில் முறைப் போட்டி பொறாமைகள், சொந்த நலன்களை முன்னிலைப்படுத்தல் போன்றவற்றிக்கு இட்டுச் செல்லக் கூடுமாதலால் வௌ;வேறு இடத்தைச் சேர்ந்தவர்களே விரும்பத்தக்கது.
இரகசியம் பேணுதலும் நம்பிக்கையாக நடத்தலும் மிக முக்கியமாகும். வழிநடத்துனரும், வழிப்படுபவரும் சந்தர்பத்தை பயன்படுத்தி மற்றவரது வாய்ப்பு, வசதி, உழைப்பு போன்றவற்றை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த முனையக் கூடாது.

வழிநடத்துனரும், வழிப்படுபவரும் பொதுவாக சுறுசுறுப்பாக பணியாற்றுபவர்களாக இருப்பார்கள். நேரம் அவர்களுக்கு பொன்னானது. எனவே மற்றவர் செய்வார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்காது வழிப்படுபவர் முன்முயற்சி எடுத்து பயன்பெற முனைய வேண்டும்.

அத்துடன் எழுதுவதிலும் ஏடுகளை பேணுவதிலும், நேரடியாகச் சந்திப்பதிலும் நேரத்தை செலவழிக்காது, டெலிபோன் உரையாடல், ஈ மெயில், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்தி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வது சாத்தியமே.

தொழிற்துறைகளில் வழிநடத்தல்

வழிநடத்துதல் என்ற பெயர் இல்லாவிட்டால் கூட பெரும்பாலான தொழில்களில் இது ஏற்கனவே செயற்படுகின்றது. தங்கள் தொழில் சார்ந்த கல்வித் தேர்ச்சி அல்லது பட்டப் படிப்புற்குப் பின்னர் தங்கள் தொழிலில் அனுபவமும் கல்வித் தேர்ச்சியும் பெற்றவரிடம் பயிலுனராக இருக்க வேண்டிய கட்டாயம் சில தொழில்களில் உள்ளது. சட்டத்தரணிகள், கணக்கியலாளர்கள் போன்றவர்கள் உதாரணங்களாகும். இவர்கள் அவ்வாறு பயிற்சி பெறாது தொழில் செய்ய முடியாது.

இத்தகைய பெரும் தொழில்களில் மட்டுமின்றி சாதாரண மேசன், தச்சுத் தொழில் போன்றவற்றில் கூட தகுதியானவரின் கீழ் தொழில் பயிலுனராக பயிற்சி பெற வேண்டியது கட்டாயம் அல்லாது போனாலும் அவசியமாகவே உள்ளது.

மருத்துவத்துறையைப் பொறுத்தவரையில் பட்டம் பெற்ற அனைத்து மருத்துவர்களும் உள்ளக பயிற்சி (Internship) பெற்ற பின்னரே வைத்தியர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர்.

அதற்கு அப்பால் சத்திரசிகிச்சை, பொது மருத்துவம், சருமநோய், மகப்பேற்று மருத்துவம், புற்றுநோய், போன்ற எந்த விசேட மருத்துவத் துறையையாவது தேர்ந்தெடுக்கும்போது அதற்கான விசேட பட்ட மேற்படிப்பு (Post graduate course) கற்கை நெறிகளுடன், அத்துறை சார்ந்த நிபுணரின் கீழ் பயிற்சி பெற வேண்டியதும் கட்டாயமாகும். ஆனால் முற்று முழுதாக வழிநடத்தல் என்று கொள்ள முடியாது. பாட நெறியோடு இணைந்தது.

குடும்ப மருத்துவத் துறையில் வழிநடத்தல்

பெரும்பாலான மக்கள் நோயுறும்போது முதலில் அணுகுவது தங்கள் குடும்ப மருத்துவரைத்தான். தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் நீண்ட காலமாக நெருக்கமாக அறிந்திருப்பதால் அவர் தங்களை அக்கறையோடு பார்ப்பார் என்ற நம்பிக்கையோடு நோயாளர்கள் அவர்களை நம்பிக்கையோடு அணுகுகிறார்கள்.

ஆனால் குடும்ப மருத்துவர்களாகப் பணியாற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் அத்தகைய பயிற்சிகள் கிடைக்pன்றனவா?
கசப்பான உண்மை இல்லை என்பதேயாகும். பட்டப் படிப்பை முடித்து மருத்துவராக வெளியேறிய மறுநாளே குடும்ப மருத்துவம் என்ற துறையை எந்த மருத்துவரும் இலங்கையில் தேர்ந்தெடுக்க முடிகிறது. விரும்பிய இடத்தில் தனியாக கிளினிக் ஆரம்பிக்க முடியும். ஆனால் மேலை நாடுகளில் இது முடியாது. குடும்ப மருத்துவர்களுக்கான விசேட பயிற்சி பெற்ற பின்னரே குடும்ப மருத்துவராக பணியாற்ற முடியும்.

இலங்கையிலும் குடும்ப மருத்துவர்களுக்கான விசேட பட்ட மேற்படிப்புகளும், டிப்ளோமாக்களும் உண்டு. MD(Family medicine), DFM (Diploma in family medicine), MCGP (Member of college of general practioners)போன்றவை இங்கு உண்டு. இவற்றில் முதல் இரண்டும் மருத்துவ பட்ட மேற்படிப்பு நிறுவனத்தால் நடாத்தப்படுகிறது. மூன்றாவதான MCGP குடும்ப மருத்துவ கழகத்தினால் நடாத்தப்படுகின்றன. இவை யாவும் அங்கீகாரம் பெற்ற கற்கை நெறிகளாகும். இவை குடும்ப மருத்துவர்களுக்கான பாட நெறிகளாகும். ஆனால் இவை இல்லாமலும் குடும்ப மருத்துவராக பணியாற்ற முடியும்.

image002

இப்பொழுது இலங்கை குடும்ப மருத்துவர் சங்கம் தாங்கள் நடத்தும் MCCP பயிற்சியின் அங்கமாக வழிநடத்தலை கட்டாயம் ஆக்கியுள்ளார்கள். இலங்கையில் மருத்துவ கற்கை நெறிகளில் Mentoring எனப்படும் வழிநடத்தல் முதல்முதலாக இங்குதான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வழிநடாத்தலில் உருவாகும் புதிய குடும்ப மருத்துவர்கள் தாங்கள் தொழிலை ஆரம்பிக்கும் நாள் முதலே நோயாளிகளை அன்புடனும் அர்ப்பணிப்புடனும், புரிந்துணர்வுடனும் நடத்துவர்கள், அவர்களது எதிர்பார்புகளை பூர்த்தி செய்வார்கள் என  எதிர்பார்க்கலாம்.
மருத்துவத்தின் ஏனைய துறைகளிலும் வழிநாடாத்தல் முக்கிய அங்கமாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை

குழந்தைகளில் வழிநடத்தல்

இது தொழிற்துறை வழிகாட்டல் போன்றதல்ல.
குழந்தைகளை வழிநடத்துவது பெற்றோர்களினதும் குடும்ப மூத்தோர்களின் ஆசிரியர்களினதும் பணியாக காலாகாலமாக இருந்து வருகிறது. வழிநடத்தல் என்ற பெயரை உபயோகிக்காமலே நாம் இதைச் செய்து வருக்கினறோம்.

ஆனால் சில குழந்தைகளுக்கு விசேட வழிநடத்தல் தேவைப்படுகிறது. சண்டை சச்சரவு குழப்பம் உள்ள குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகள், பாடசாலையில் பின்தங்கிய பிள்ளைகள், சமூக ஊடாடலில் பின்தங்கியிருக்கும் குழந்தைகள் போன்றோருக்கு இவை அவசியம். உணர்வு பண்பாட்டியல் ரீதியான வழிநடத்தல் அக் குழந்தைகளுக்கு தேவைப்படும். சில மேலை நாடுகளில் இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

அப்பழுக்கற்ற மனதுடைய அக் குழந்தைகள், வழிநடத்துனரை தங்களது இலட்சிய புருஷனாகக் கருதி மதிப்பும் மரியாதையும் கொடுப்பர். அவர் பாதையில் தாங்களும் தொடர முனைவர். எனவே வழிநடத்தினராக இருப்பவர் நற்பண்பு நற்குணம் உடையவராக, தன்னலம் கருதாதவராக, சமூக உணர்வுள்ளவராக இருக்க வேண்டும். இதைத் தொழிலாகக் கருதாது தொண்டாகக் கருதி குழந்தைகளை வழி நடத்த வேண்டும்.

போதகர் மாணவன் என்ற நிலை போலன்றி நட்புணர்வுடன் அவர்களுடன் பழகும் போது அவர்கள் மனம் திறந்து பேசுவதுடன் .தங்களிடம் மறைந்துள்ள ஆற்றலை வெளிக் கொணரவும் முடியும்.
நீங்கள் ஒவ்வொருவருமே உங்கள் தேவைக்கு ஏற்ப வழிநடத்துனர் ஆநவெழச அல்லது அநவெநந வழிப்படுபவர் ஆக உங்களை அறியாது ஏற்கனவே செயற்பட்டிருக்கக் கூடும். வழிப்படுத்தல் பற்றிய புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதால் அதை மேலும் கச்சிதமாகச் செய்ய முடியும் என நம்புகிறேன்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0

Read Full Post »

இந்த வாழ்விற்குள் எத்தனை இரகசியங்கள் மறைந்து கிடக்கின்றன. எத்தனை நினைவுகள் தாளிடப்பட்டு மறைக்க வைக்கப்பட்டுள்ளன. வாழ்வே ஒரு வகையில் பூடகமானதுதான். இருந்தபோதும் நினைவின் வலிகளை ஆற்றுவதற்கு பகிர்தல் ஒரு வழிவகையாகும்.

IMG_0001_NEW

நெற்கொழுதாசன் 2006ல் இந்த மண்ணைவிட்டுப் பிரிந்தவர். வாழ்வின் வசந்தங்களையும் கார்காலங்களையும் தாய் மண்ணில் மற்றெல்லோரையும் போலவே அனுபவித்துத் திளைத்தவர். இப்பொழுது பாதுகாப்பான கூட்டைத் தேடிக் கண்டடைந்து அதில் நிம்மதியாக வாழக் கிடைத்தபோதும் உணர்வுபூர்வமாக அல்லாடுகிறார்.

தனது பிறந்த வீட்டை, துள்ளித்திரிந்த தனது ஊரை, தான் நேசித்த பிறந்த தேசத்தை மறக்க முடியாது உள்ளார ஏங்குகிறார். அவை பற்றிய நினைவுகளுடனேயே வாழ்ந்து அவை பற்றிப் பேசி நினைவாற்றுகிறார்.

அவரது தாயக அனுபவங்களில் அவரால் வெளிப்படையாகப் பேசக் கூடியவை உள்ளன.

“…. கரிய மேகங்கள் திரண்டு கலையும் அந்த
நிழல் படிந்து மறையும்
வெயில் பட்டு தேகம் சிலிர்க்கும்
மெல்லிய கூதல் காற்றில் பரவும்
மாலை சரிகையில் அந்தரத்தில்
மழைப் பூச்சிகள் உலாவும்.
பின்னான இரவுகள் இருண்டு கிடக்கும்..”

பேச முடியாத அவலங்களைச் சுமப்பவையும் உள்ளன.

“….உப்புக் கரிக்கும் அதன் ஓரங்களில்
உறங்கிக் கிடக்கும் விசும்பல்களை
ஆதங்கப் பெருமூச்சுகளை
ஓரந்தள்ளி
வக்கிர நிழல்களைப் பூசினார்கள்….”

அத்தகைய தனது உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு அவருக்குக் கைகொடுப்பது கவிதை ஊடகம்தான். அதன் ஊடாக தனது வலிகளை மற்றவர்களுடன் பகிர்கிறார். பகிர்தலில் தேறுதல் பெற முனைகிறார்.

“இது எனக்கான பாடல்
எனக்கான இந்தப் பாடல்
உங்களுக்கான அடையாளங்களைச் சுமந்திருக்கலாம்.
ஆனாலும் இது
எனக்கான பாடல்தான்..”

என்று கவிதையில் சொல்வதிலிருந்து அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
தாயக நினைவுகளில் மிதக்கும் இவர் புலம் பெயர் வாழ்வை தனது துர்ப்பாக்கியம் போலக் கருதவதாகப் படைப்புகள் பேசுகின்றன. அதைத் தனது நிரந்தர வீடாகக் கருவதாகவும் தெரியவில்லை. அங்குள்ளவர்களின் மனோபாவம் அவரது மனத்தை அலைக்கழிக்கவும் செய்கிறது

“..புகழ் கேட்டு வரவுமில்லை – இங்கு”
நிலைகொள்ளும் நினைப்பதுமில்லை
புன்னகை தாருங்கள் – கொஞ்சம்
பூவிதழ் திறந்திந்த பாவிதழ்…”

என்ற வரிகள் அந்த மண்ணின் மீதான ஒட்டுறவற்ற வாழ்வைச் சொல்கின்றன.

மற்றொரு புறத்தில் இவரது பல கவிதைகள் மறைந்து போகும் வாழ்வு, நிலையாமை போன்றவற்றையும் பேசுவதைக் காணலாம். அவை ஒரு வித விரக்தியின் வெளிப்பாடா அல்லது நிர்க்கதியைப் பகிரங்கப்படுத்தி ஆறுதலை அவாவும் முகமூடி வரிகளா தெரியவில்லை.

“..நாளை
காலமும் சொற்களும் ஒன்று கூடும்
நான்
பேசுபொருளாவேன்.'”
மற்றொரு இடத்தில்

“.. எப்படி அழைக்கப்படும்
நான் இல்லாத எனது வீடு
யாருமில்லாத இன்றில்..”

இன்னொன்று

‘..யாருக்கும் தெரியாது
நூனில்லாத அந்த அறையில்
என் கனவுகளும்
நிராகரிக்கப்பட்ட பிரியங்களும்
கண்ணீரின் உவரப்பு வீச்சும்
பெருமூச்சுக்களும்
ஒரு காலடிக்காக் காத்திருப்பது..’

மற்றொன்று

‘….மறந்துமென்
கல்லறை மீதில்பூக்களையே
உங்கள் கண்ணீர்த் துளிகளையோ
தூவாதீர்கள் …’

இப்படியாக பல கவிதைகள் மனத்துயர் சிந்துகின்றன.

சரி அவரது படைப்புகள் பற்றி மற்றவர்கள் சொல்வது என்ன?

“…’அவரது உண்மையும் தன்னுணற்சி வெளிப்பாடும் அவரது அனுபவச் செழுமையும், விட்டு வந்த மீதான ஏக்கமும் அவரை எனக்கு நெருக்கமாகியது… ” இவ்வாறு சொல்வது கவிஞர் வ.அய்.ச.ஜெயபாலன பின் அட்டையில்.

IMG_0002_NEW

“..இணையப் பரப்பில் அண்மைக் காலங்களில் துருத்திக் கொண்டு மேலெழும் இளம் படைப்பாளிகளில் அவரும் ஒருவர்….. ஒரு இளம் புலம்பெயர் படைப்பாளி என்பதால் அவர் அவருக்கேயான ‘போகாத நினைவுகளை’ கடந்து வரக் காலம் எடுக்கும்.” என்று நிலாந்தன் தனது கணிப்பை நூலுக்கான முன்னுரையில் சொல்கிறார்;.

ஆம் இது ஒரு நல்ல கவிதைத் தொகுப்பு. பெரும்பாலான கவிதைகள் அவரது பழைய நினைவுகளையே பேசுகின்றன.

தனது தாய் நாட்டுப் பிரிவின் துயரிலிருந்து மேலெழுந்து, புலம் பெயர் வாழ்வின் சிக்கல்களையும் சவால்களையும் அங்கு நிகழும் கலாசார கலப்பின் பண்பாட்டுத் தளும்பல்களையும் பேச முயலும்போது அவரது படைப்புகள் மற்றொரு தளத்திற்கு நகரும். அதையே தாய் நாட்டில் வாழும் நாம் எதிர்பார்க்கிறோம்.

நூல் :- இரகசியத்தின் நாக்குகள்
நூலசிரியர் :- நெற்கொழுதாசன்
வெளியீடு :- கறுப்பு பதிப்பகம்
விலை :- இந்திய ரூபா 60.00
Mobile :- 94442 72500

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0

Read Full Post »

தலையைப் பொத்திக் கொண்டு வருவார்கள். ‘தலை விண் விண் என்று கிடக்கு’ என்பார்கள். ‘நிறைய வேலையள் கிடக்கு ஒண்டும் செய்ய முடியவில்லை. தலையிடியும் அம்மலும் பொறுக்க முடியாது’ எனவும் சொல்வார்கள்.

hangover 3

அதைத் தடுக்க ஆலோசனை கூறினால், ‘நாளை முதல் குடிக்க மாட்டேன். இது சத்தியமடி தங்கம்..’ எனத் தலைமேல் கை வைக்காத குறையாகச் சொல்வார்கள். ஆனால் மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி கதைத்தான்.

பிரச்சனை ஏற்படும் போது தலையில் கை வைத்து கம்மென்றிருப்பார்கள். போத்தலைக் கண்டுவிட்டால் …

hangover 4

“..குடித்து குடலழுகி ரெண்டு நாளில்
செத்துப் போவாய் என்று சொன்ன மருத்துவன்
நேற்றே இறந்து போனான்
சாவுக்கு பயமில்லை, சாத்திரங்கள் ஏதுமில்லை
இன்றிருப்போர் நாளையில்லை என்றே குடிக்கிறோம்”

என்று ஒரு கவிஞர் இணையத்தில் சொன்னது போலப் பாடி, நல்லது சொன்னவனைiயே கிண்டலடிப்பார்கள். மறுநாள் மீண்டும் தலைப்பாரம், தலையிடிப் பிரச்சனைதான்.

மதுவின் தொக்கிய விளைவுகள்

ஆனால் மதுபானத்தின் இந்த தொக்கிய விளைவுப் பிரச்சனையானது முடாக் குடியர்களுக்கானது மட்டுமல்ல. நண்பர்களின் ஒன்று கூடல், பிறந்தநாள் விழா, கிருஸ்மஸ் கொண்டாட்டம் போன்றவற்றில் மது அருந்தியவர்களுக்கும் ஏற்படுவதுண்டு.

போதையில் மிதந்ததற்கு மறுநாள் ஏற்படும் இத்தகைய வேண்டாத விளைவுகள் ஆளுக்காள் மாறுபடும்.

 • பொதுவாக களைப்பு,
 • தாகம்,
 • தலையிடி,
 • தசைப்பிடிப்பு,
 • ஓங்காளம்,
 • வாந்தி,
 • வயிற்று வலி,
 • தலைப்பாரம்,
 • தலைச்சுற்று,
 • போன்றவையாகலாம்.
 • அல்லது வெளிச்சம், சத்தம் ஆகியவறைப் பார்க்கும்போதும் கேட்கும்போதும் எரிச்சலுறலாம்.
 • இருதயம் வேகமாகத் துடிப்பது,
 • கண் சிவத்தல்,
 • தடுமாற்றம்,
 • மனத்தை ஒருமுகப்படுத்துதலில் சிரமம், போன்ற அறிகுறிகளாகவும் இருக்கலாம்.
 • இவற்றால் மனப்பதற்றம், எரிச்லுறதல், சினம் போன்றவை தோன்றும்.

தொக்கிய விளைவுகள் ஏன் ஏற்படுகின்றன.

Hangover

பல காரணங்கள் உள்ளன.

 • மது சேதனமுறும்போது உடலில் தோன்றும் acetaldehyde என்ற நச்சுப்பொருள் ஒரு காரணமாகும்.
 • நோயெதிர்புத் தொகுதில் ஏற்படும் மாற்றங்கள்,
 • குளுக்கோஸ் சேதனமடைவதில் பிரச்சனை,
 • உடலில் நீர் வரட்சி,
 • புரஸ்ரோகிளன்டின் தொகுக்கப்படுதில் சிக்கல்,
 • இருதயத்தின் அதிகரித்த செயற்பாடு,
 • தூக்கக் குழப்பங்கள்,
 • குருதிக் குழாய்கள் விரிவடைதல்,
 • ஊட்டச்சத்துக் குறைபாடு எனப் பலவாகும்.

இவ் அறிகுறிகள் போதை தணியும் போதே வெளிப்படும். பொதுவாக அதிக மது அருந்தி போதையில் மிதந்ததற்கு மறுநாள் காலையில் தோன்றும்.

மதுபானத்தின் தொக்கிய விளைவுகளானவை பாதிப்புற்றவருக்கு எரிச்சல் அளிப்பதாக இருந்தாலும், பார்த்திருப்பவர்களுக்கு கிண்டலடிப்பதற்கும் நகைத்து மகிழ்வதற்கும் ஏற்ற சுவார்ஸமான சம்பவங்களையும் கொண்டிருக்கும்.

Hang over என்ற ஆங்கிலப்படம் மிகவும் விரும்பிப் பார்க்கப்பட்டதனால் Hang over 1, Hang over 2 என குட்டிகளை ஈன்று கொண்டிருக்கிறது.

தமிழில் மதுபானக் கடை வந்தது. அது தொக்கிய விளைவை விட மதுபானக் கடையில் நிதம் நடக்கும் சம்பவங்களையே சொன்னது.

மதுபானம் அதை அருந்திப் பழகியவர்களுக்கு இனியது. சுகம் கொடுப்பது. கவலைகளை மறக்கச் செய்து தடையற்ற மனவெளியில் சிறகடிக்கச் செய்வதாக இருக்கிறது. முக்கிய பிரச்சனையாக இருப்பது அதைத் தொடரும் இத்தகைய தொக்கிய விளைவுகள்தாம்.

அவ்வாறான தொக்கிய விளைவற்ற மதுபானம் ஒன்று கண்டு பிடிகப்பட்டால் அது குடியர்களுக்கு கண்கண்ட தெய்வமாகிவிடும். அதிலேயே பூரண சரணாகதி அடையவும் கூடும்.

முக்தி விரைவில் சாத்தியமாகும்!

புகையற்ற ஈ சிகரட் கதை ஞாபகம்தானே. தம் அடிப்போம் ‘ஈ’ தம் அடிப்போம்- ஈ சிகரெட் பாதுகாப்பானதா?

hangover 2

மதுவின் பின் விளைவுகள்

 

மதுபானம் என்பது ஒரு பானமாக இருந்த போதும் அது ஒரு மருந்து (Drug) எனலாம். சற்று மனதைத் தளரச் செய்யும் ஆற்றலும் இருப்பதால் போதை மருந்து என்றே சொல்ல வேண்டும். மதுவானது பல்வேறு ஆபத்தான பின்விளைவுகளை கொடுப்பதை அறிவீர்கள். வருடாந்தம் 2.5 மில்லியன் இறப்புகளுக்கு மதுப்பாவனை காரணமாக இருக்கிறது.

மதுவானது காலாதிகாலமாக உபயோகிக்கப்பட்டு வருகின்ற பொருளாக இருக்கிறது. அதன் காரணமாகவே இன்றும் புழக்கத்தில் இருக்க முடிகிறது. இதுவே இன்று புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட மருந்தாக இருந்தால் எந்த அரசும் இதற்கு அங்கீகாரம் அளித்திருக்கவே மாட்டாது. அந்தளவிற்கு ஈரல், மூளை, இருதயம் என உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் சிதைத்து பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

ஆனால் மிகப் பாரிய பிரச்சனை மதுவை உபயோகிக்க ஆரம்பிப்பவர்களில் 10 சதவிகிதமானவர்கள் அதற்கு ஆட்படுவதுதான். குடியில் மூழ்கிவிட்டால் அதை விட்டொழிப்பது கஸ்டாமாகும், புகைத்தல் போதைப் பொருட்கள் மற்றும் மதுவானது காதலை விட நெருக்கமானது. விடுப்பிரிய இடம் அளிக்காது. தன்னோடு ஒட்டி இணைத்துவிடும்.

ஆனால் முடிவு கோரமானது. அழிக்கவே செய்யம்.

மதுவின் மற்றொரு பிரச்சனை போதையில் கிளம்பும் வன்முறைதான். பறக்கும் விமானத்தின் கதவைத் திறக்க முயலும் அளவிற்கு அப்பன் பிள்ளை என்று தொடரும் பரம்பரைப் போதையாளர்களும் உண்டு.

மதுப் பாவனையை தவிர்பதற்கு அல்லது குறைப்பதற்கு வழி என்ன?

குடிக்க ஆரம்பிக்காமல் தவிர்ப்பதும், ஏற்கனவே ஆரம்பித்துவிட்டால் அதைக் கைவிடுவதும்தான். மஹாத்மா காந்தி மது ஒழிப்பு பிரசாரங்கள் செய்தார். ஆனால் அவர் வழிகாட்டிய காங்கிரஸ் கட்சி பதவிக்கு வந்தபோதும் அதை ஒழிக்க முடியவில்லை.

மதுப்பாவனையை குறைப்பதற்கு ஏதாவது செய்கிறோம் எனச் சொல்லும் அரசுகள் யாவும் கஜானாப் பைகளை நிரப்பிக் கொண்டு பரமயோக்கியர் போன்று வெளிப் பாவனையைக் காட்டுகின்றன.

எனவே போதைப் பிரியர்களுக்கான மாற்று வழி என்ன?

பாதுகாப்பான மதுபானம்

பாதுகாப்பான மதுபான வகை ஒன்றைக் கண்டுபிடிப்பதுதான்.
மதுவின் தாக்கமானது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதாகும். நரம்புக் கலங்கள் தமக்கிடையே செய்திகளை அனுப்புவதற்கும் தொடர்பாடலுக்குமாக நரம்பியல் கடத்திகளைப் (neurotransmitter) பயன்படுத்துகின்றன. பலவித நரம்பியல் கடத்திகள் உடலில் உள்ளன.

இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றை அமைதிப்படுத்தும் சரியான மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் மனிதனுக்கு மது கொடுக்கக் கூடிய அமைதியையும், சந்தோசத்தையும் கொடுக்கலாம். அவ்வாறு அமைதிப்படுத்தும் ஒரு இரசாயனம்; Gamma aminobutyric acid (Gaba) என்பதாகும்.

இது மூளையில் உற்பத்தியாகிறது. மருந்தாகவும் கிடைக்கிறது.
இவ்வாறான இரசாயனங்களின் கலவைகளை மதுவிற்கு பதிலாக உபயோகிக்கலாம். இவற்றில் மதுவின் தொக்கிய விளைவு இருக்காது என்கிறார் David Nutt என்பவர். மற்றவர்களுடன் மனம்விட்டுப் பேசி நல்லுறவை வளர்க்க முடியும். மதுவினால் எற்படும் வன்முறை போன்ற பின்விளைவுகளும் இருக்காது என்று மேலும் சொல்கிறார்.

தான் அவ்வாறான ஐந்து பொருட்களை இனம் கண்டுள்ளதாகவும் அவற்றை சரியான அளவுகளில் கலந்து பரீட்சித்திருப்பதாக Guardian ல் எழுதிய ஒரு கட்டுரையில் தெரிவித்தார். அதை மது போன்ற திரவ வடிவில் தயாரிக்க வேண்டும். பாவனையாளர்களின் தேர்வுகளுக்கும் ஏற்ப பல்வேறு நிறங்களிலும் சுவைகளில் கொடுக்க வேண்டும் என்பதே தன் முன் உள்ள சவால் என்கிறார்.

சரி இதற்கான ஆதாரங்கள் என்ன? எங்கே பரீட்சித்துப் பார்த்திருக்கிறார்.

தானே தனக்குப் பரீட்சித்துப் பார்த்ததாகக் கூறினார். தான் அதை உட்கொண்ட போது தனக்கு பதற்றங்கள் ஏதும் இன்றி மனம் ஆறுதலாக இருந்தத்தகவும், சுகமான தூக்கம் வந்ததாகவும் சொல்கிறார். பின்னர் அதற்கான மாற்று மருந்ததைச் (antidote ) சாப்பிட்டதும் சில நிமிடங்களில் சகசமான நிலைக்கு வந்துவிட்டதாகவும், ஒரு விரிவுரையையும் நடாத்த முடிந்ததாகவும் சொல்கிறார்.

இந்த ஆய்வு பற்றி சில மதுபானத் தயரிப்பாளர்களிடம் வினவியபோது அவர்களுக்கும் இதில் இத்தகைய தொக்கிய விளைவற்ற மதுவைத் தயாரிப்பதில் ஆர்வம் இருப்பதாகத் தெரிகிறது. பணம் கொட்டும் இடத்தைத் தம் கையினுள் அடக்குவதில் அவர்கள் கில்லாடிகள் அல்லவா?

பாதுகாப்பானதுதானா?

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. போதை கொடுக்கும் மதுபோன்ற பானம். ஆனால் மது போன்ற பக்கவிளைவுகள் அற்றது. அதிலிருந்து உடனடியாக விடுபட்டு வேறு வேலைகளில் ஈடுபட வேண்டுமாயின் அதன் தாக்கத்திலிருந்து உடனடியாக மீள்வதற்கு மாற்று மருந்துகளும் உண்டு.

ஆகா அற்பதமான ஐடியா.

பார்க்கில் பார்ட்டியில் அல்லது வேறு எங்காவது அதை மசுக்கிடாமல் அடித்து சந்தேசமாக இருக்கலாம், வீடு போக முன்னர் மாற்று மருந்தை வாயில் போட்டுவிட்டு மனைவி முன் ஒன்றும் தெரியாத அப்பாவியாக பாவனை காட்டலாம்.

பள்ளிக்குப் போக முன் ஒரு டோஸ் அடித்துவிட்டு பள்ளி போகலாம். ஆசிரியர் வருவதற்கு முனனர்; மாற்று மருந்து அடித்துவிட்டு நல் மாணவனாக கலர் காட்டலாம்.

மொத்தத்தில் எல்லாமே ஏமாற்றுக் காரி;யங்கள்தாம். இவை எதுவுமே மனித மனத்தில் உண்மையான மகிழ்ச்சியை வளர்ப்பதற்கானவை அல்ல. அவற்றை மறக்கச் செய்து போலியான ஆனந்தத்தில் மூழ்க வைப்பவைதான். ஏற்கனவே இதை ஒத்த மருந்துகள் பாவனைiயில் இருக்கவே செய்கின்றன.

Benzodiazepine வகை மருந்துகள் அத்தகவையன. இவை மனப்பதற்றத்தை தவிர்த்து அமைதிப்படுத்தக் கூடியவை. வழமையாக வலிப்பு, மதுவில் இருந்து விடுபதற்காக, தசைப்பிடிப்பு, தூக்கத்திற்கு என்று பல காரணங்களுக்காக உபயோகிக்கப்படுகின்றன.

Diazepam, Chlordiazepoxideபோன்ற பலவற்றை உதாரணமாகச் சொல்லலாம். வலியம், லிபிரியம் போன்ற பெயர்கள் பலருக்கும்  பரிச்சயமானவை. இவை போன்ற மருந்துகள் பல உள்ளன.

ஆனால் தன்விருப்பின் பேரில் வாங்கும் சுய பாவிப்பானவை அல்ல மருந்துவர்கள் நோயாளிகளுக்கு தமது கண்காணிப்பின் கீழ் மட்டுமே இத்தகைய மருந்துகளை உபயோகிக்கிறார்கள். குறிப்பட்ட காலத்திற்கு குறிபட்பிட்ட அளவுகளில் கட்டுப்பாடுகளுடன் மட்டும். ஏனெனில் அவற்றிக்கும் ஆட்பட்டு விடுபட முடியாத (addiction) நிலை ஏற்படும். அதனால்தான் பிரிஸ்கிரிப்பசன் இன்றி வாங்க முடியாது.

இப்பொழுது தொக்கற்ற மது என்ற பெயரில் அவற்றை அல்லது அதை ஒத்தவைகளை வர்த்தக மயமாக்கப் பார்க்கிறார்கள். திறந்த பொருளாதாரம் போல திறந்த போதைப் பாவனை.
ஒரு குழியிலிருந்து எடுத்து மற்றொரு படுகுழியில் வீழ்த்தும் விளையாட்டுத்தான்.

மற்றொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். மதுவிற்கு மாற்றாகத் தான் தேர்ந்தெடுத்த மருந்துகள் எவை என்பது பற்றி அவர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. அது மட்டுமல்ல அவை பரந்த மட்டத்தில் ஆய்வு செய்யப்படவும் இல்லை. சுய அனுபவம் பற்றியே பேசியிருக்கிறார்.

எனவே ‘நம்பத் தகுந்தது அல்ல. கவைக்கு உதாவது’ என்று தட்டிக் கழித்துவிடலாமா?

மனித மனங்களில் கவலையும் அதிருப்தியும் தன்னம்பிக்கை இன்மையும் இல்லாது ஒழியும் வரை மாய உலகில் தன்னை மூழ்க வைத்து தற்காலிக சுகம் தேடும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

“யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார். மனிதன் மாறவில்லை.” எனப் பாடினார்கள்

அவன் மாறப் போவதுமில்லை. மது மருந்து மாத்திரைகள் என மனித மனத்தை மாய உலகில் பறக்க வைப்பதற்கான முயற்சிகள் தொடரவே செய்யும்.

“எம்மையும் எம் சந்ததிகளையும் நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.” எஸ்.ஜே.வி ஞாபகம் வந்தால் நான் அதற்குப் பொறுப்பில்லை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

00.0.0.00

Read Full Post »

‘இளநீ இளநீ இளநீ..’ அருதலையோ இளநீர்

உக்கிரமான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொலை வெறியோடு குண்டுகள் அங்கும் இங்கும் தாறுமாறகப் பறக்கின்றன. சில போர் வீரர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்கள். நாளம்; ஊடாக சேலைன் ஏற்ற வேண்டிய நிலையில் சிலர் இருந்தபோதும் சேலைனுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. மருத்துவர்கள் கையைப் பிசைந்து கொண்டு நிற்கவில்லை. அருகில் உள்ள மரத்தின் கனியைப் பறித்து அதில் உள்ள நீரை சேலைனாக நாளம் ஊடாக ஏற்றுகிறார்கள். போர் வீரர்களது உயிர் காக்கப்பட்டது.

image_thumb

போரிடும் இரு பக்க வீர்களுக்கும் அவ்வாறு சிகிச்சை செய்யபட்டமை பதிவாகியுள்ளது.

போரிட்டவர்கள் ஜப்பானியர்களும் ஆங்கிலேயர்களும். சேலைனாக ஏற்றப்பட்டு உயிர் காத்த திரவம் இளநீர். இது இரண்டாவது உலகமகா யுத்தக் காட்சி.

இலங்கையர்களான நாங்கள் என்றும் இளநிப் பிரியர்களாவே இருக்கிறோம். இங்கு பெரும்பாலானவர்களின் வீடுகளில் ஒரு செவ்விளநீர் மரமாவது அலங்காரமாகக் காட்சி தரும். அவற்றில் மஞ்சள் நிற காய்கள் குலை குலையாகத் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சி ரம்யமானது.

DSC07563

வீதி ஓரங்களில் செவ்விளர்க் குலைகள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். தாகத்திற்கு இதமான பானமாகவும், சலக்கடுப்பைத் தணிக்கவும், உடல் சூட்டைத் தணிக்கவும் என ஒவ்வொருவம் வேறு வேறு தேவைகளுக்காக இளநீரை நாடுகிறார்கள்.

3193946_orig

ஓவ்வொரு காயிலும் சுமார் 200 முதல் 1000 மில்லி லீட்டர் அளவு இளநீர் கிடைக்கிறது. 5 மாதங்களுக்கு உட்பட்ட காயின் இளநீர் உவர்த்தன்மை கொண்டது. காலம் செல்லச் செல்ல அதன் சுவை அதிகரிக்கும். இருந்த போதும் முற்றிய தேங்காயில் நீர் வற்றிவிடும்.

சுதேச வைத்திய முறைகளான ஆயள்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் அதிகமாகப் பயன்படுகிறது.

அதேபோல நவீன மருத்துவ முறையிலும் இதற்கு நிறைய இடம் உண்டு.

இதில் உள்ளவை என்ன?

இது இனிப்புள்ள பானம். அதில் சுலபமாக உறிஞ்சப்படக் கூடிய இனிப்பும், பொட்டாசியம் சோடியம் போன்ற கனிமங்களும் நிறைய உண்டு. ஆச்சரியமான நல்ல விடயம் என்னவென்றால் இது நீராகராமாக இருந்தபோதும் அதில் நார்ப்பொருள் 11 சதவிகிதம் இருக்கிறது என்பதாகும். இது கரையக் கூடிய நார்ப்பொருள் (Soluble fibre) என்பது குறிப்பிடக் கூடியதாகும்.

coconut-water-nutritional-facts

கொழுப்பு மிகக் குறைவாக ஒரு சதவிகிதம் மட்டுமே இருக்கிறது. மாறாக தேங்காய்ப் பாலில் கொழுப்பு மிக அதிகமாக உள்ளது என்பது யாவரும் அறிந்ததே. கொலஸ்டரோல் அறவே கிடையாது

இதன் பயன்பாடுகள்

நீராகரமாக அருந்துவதற்கு ஏற்ற நல்ல பானம். இன்று இளைஞர்களும், யுவதிகளும் ஏனையோரும் தாகம் எடுக்கும்போதும், உணவு உண்ணும் போதும் மென்பானங்களை அருந்துகிறார்கள். அவற்றில் சீனிச் சத்து மிக அதிகமாக உள்ளது. அவற்றால் ஏற்படும் எடை அதிகரிப்பு, நீரிழிவு போன்ற பிரச்சனைகள் இளநீரால் ஏற்படாது. அதனுடைய இயற்கையான தன்மையும், அதன் காரமும் இனிப்பும் சேர்ந்த சுவையும், ஐஸ் இல்லாமலே குளிர்மை உண்ர்வை ஊட்டும் தன்மையும் உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது.

வயிற்றோட்ட நோய் ஏற்படும் போது உடலில் நீரிழப்புத் தன்மை ஏற்படாதிருக்க மீள நீரூட்டும் பானத்தை (ORS) உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) சிபார்சு செய்கிறது. அதிலுள்ள விரைவில் சமிபாடடையக் கூடிய இனிப்பும், பொட்டசிய சத்தும் அதற்குக் காரணமாகும். இளநீரில் அமைனோ அமிலங்கள், கனிமங்கள், நொதியங்கள், கொழுப்பு அமிலங்கள் போன்றவையும் இருக்கிறது. இதனால் இது சற்று தடிப்புத்தன்மை கொண்டபோதும் ழுசுளு சை ஒத்த பலன்; கிடைக்கிறது. குழந்தைகளும் பெரியவர்களும் வயிற்றோட்ட நோயின் போது இதை அருந்துவதால் நீரிழப்பு நிலை ஏற்படாது தடுப்பதுடன் நாளம் ஊடாக சேலைன் ஏற்றுவதையும் தடுக்கலாம்.

விளையாட்டு வீரர்களுக்கான பானமாகவும் இதைப் பலரும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கடுமையான விளையாட்டின் போது வியர்வையாக வெளியேறும் சோடியம் கனிமத்தையும், இழக்கபடும் கலோரிச் சத்தையும் இது ஈடு செய்யப் போதுமானது அல்ல என்ற கருத்தை சில ஸ்போர்ட்ஸ் மருத்துவ வைத்தியர்கள் முன் வைக்கிறார்கள்.

வெகிர்குரு, கொப்பளிப்பான் போன்ற நோய்களின் போது சருமத்தில் இது பூசக் கூடியது என சில மருத்துவர்கள் சிபார்சு செய்கிறார்கள். ஆயினும் இது பற்றிய அனுபவபூர்வமான அறிவு என்னிடம் இல்லை.

சலக்கடுப்பு நோய்க்கு கை வைத்தியமாக பலர் இளநீர் இருந்துவதுண்டு. அது கொடுக்கும் குளிர்மை உணர்வும், அதிலுள்ள பொட்டாசியச் செறிவும் காரணமாக இருக்கலாம். ஆயினும் சிறுநீரக செயலியப்பு நோயுள்ளவர்களுக்கு இதிலுள்ள அதிக பொட்டாசியம் சத்து ஆபத்தானது என்பதை மறக்கக் கூடாது. அதேபோல அற்ரீனல் செய்பாட்டுக் குறைபாடு, பாம்புக் கடி போன்றவற்றின் போதும் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு நோயுள்ளவர்களும் இளநீர் அருந்தலாம். அதில் இனிப்பு உள்ள போதும், அது மென்பானங்களில் உள்ளது போல அதிக செறிவில் இல்லை. இளநீரில் நார்ப்பொருளும் சேர்ந்து இருப்பதால் சாதாரண சீனி போல குருதியில் சீனி அளவை அதிகரிக்காது. உடல் எடையை அதிகரிக்கவும் மாட்டாது. ஒமேகா 3 கொழுப்பு இருப்பதும் நல்ல விடயமாகும்.

உயர் இரத்த அழுத்த நோயுள்ளவர்களுக்கு இது ஏற்ற பானமாகும். சில ஆய்வுகள் இளநீரானது பிரசரைக் குறைக்க உதவும் என்கின்றன. அதிலுள்ள அதிக பொட்டாசியம் இதற்குக் காரணமாகும். மாறாக உப்பில் உள்ள சோடியம் பிரசரை அதிகரிக்கிறது என்பதை அறிவீர்கள்தானே. வாழைப்பழத்திலும் பொட்டாசியம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தவறான கருத்துக்கள்

பெரும்பாலனவர்கள் கருதுவதுபோல இது குளிர்மையான பானம். சளித் தொல்லையைக் கொண்டுவரும், அதை மேசமாக்கும் என்பவை தவறான கருத்துகளாகும். சளி, ஆஸ்த்மா போன்ற நோயுள்ளவர்களும் தாராளமாக அருந்தலாம்.

இளநீர் பிரியர்கள் அது மாரடைப்பு பக்கவாதம் போன்றவற்றைத் தடுக்கும். உணவு ஜீரணமடைவதை அதிகரிக்கும். முதுமையடைவதைத் தடுக்கும் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் இவை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட முடிவுகள் அல்ல.

இறுதியாகச் சொல்வதானால் இளநீர் நல்ல பானம். மென்பானங்கள், இனிப்பூட்டப்பட்ட பழச்சாறுகள் போன்றவற்றை விட மேலானது. இயற்கையான பானமான இது புத்துணர்ச்சி ஏற்படுத்தக் கூடியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரும் அருந்தக் கூடியது. மருத்துவ ரீதியாகவும் நன்மைகளைத் தரக் கூடியது. நிரிழிவு, பிரஷர், சளித்தொல்லை இருதய நோயுள்ளவர்கள் என யாவரும் அருந்தக் கூடியது.

ஆனால் சிறுநீரக செயலிழப்பு நோயுள்ளவர்களுக்கு ஆகாது.

“இளநீ இளநீ இளநீ

நான் ஏழு வயசுலே எளனி வித்தவ

பதினேழு வயசிலே நிலைச்சு நின்னவ..” என்று ஒரு பாடல்.

ஜெயலலிதா இரட்டை அர்த்தம் தொனிக்க குலுக்கிக் குலுக்கிப் பாடியதாக ஞாபகம். கேட்டிருக்கறீர்களா? 

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.00.0.00.0

Read Full Post »

Older Posts »