துருவங்களாகப் பிரிந்து கிடக்கும் சமூகங்களைக் கொண்டதாக இந்தச் சிறு தீவு தனக்குத்தானே கறுப்பு மை பூசிக் கொண்டு வாழ்கிறது. நாகரீகமும் நியாய உணர்வும் கொண்ட சமூகங்களிலிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது.
அதே நேரம் தம்மளவில் பூர்வீகப் பெருமையும், கலாசாரப் பாரம்பரியமும் கொண்டதாக இங்கு வாழும் ஒவ்வொரு இனமும் உணர்கின்றன. அதில் தப்பில்லை. ஆனால் அவர்களது சொல்லும் செயலும் மற்றவர்களது உள்ளங்களைப் புண் படுத்தாது இருக்கும் வரையே அது நியாயமானதாக இருக்க முடியும்.
மூர்க்கமான போர். அங்கவீனங்கள். பயங்கரமான அழிவுகள். உயிர் இழப்புகள். இவற்றின் பின்னரும் இங்கிருப்பவர்கள் ஒருவர் மனத்தை மற்றவர் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. புரிந்து கொள்ள முயல்வதாகவும் தெரியவில்லை. ஒவ்வொரு சமூகமும் தானே அதிகம் பாதிக்கப்பட்டதாகக் கவலை கொள்கிறது. ஏமாற்றம் அடைகிறது.
தேசிய உயர் தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை தாம் சார்ந்த சமூகம் பற்றிய உணர்வுடன் மட்டுமே வாழ்கிறார்கள். வேறு இனங்கள் வாழ்கின்றன. அவர்களுக்கும் தங்களை ஒத்த நீண்ட மத, மொழி, கலாசார பாரம்பரியம் உள்ளது என்பதைக் கண்டு கொள்வதில்லை. அவற்றை அவர்கள் கடைப்பிடிக்க உரிமை உள்ளவர்கள் என்பதையும் உணர்வதாகத் தெரியவில்லை.
பாதிக்கப்படாததாக தம்மை ஒருவரும் கருதுவதாகத் தெரியவில்லை.
ஆனால் சமூகத்தின் இவை யாவும் தானாக ஏற்பட்ட உணர்வு என்றும் சொல்ல முடியாது.
பத்திரிகை படிக்காத, ரீவி பார்க்காதவர்கள் இருப்பார்களேயானால் அவர்கள் அவ்வாறு ஒற்றை வழிச் சிந்தனையில் இருக்க மாட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. அந்தளவிற்கு ஊடகங்கள் தம் மொழி சார்ந்த தனித்த ஒரு உலகிற்குள் தம் வாசகர்களை மூழ்கடிப்பவையாக உள்ளன. நடுநிலை பேண வேண்டிய ஆங்கில ஊடகங்கள் கூட ஒரு முனைப்பட்டவையாகவே இருப்பது விசனிக்க வைக்கிறது.
தமது வாக்கு வங்கிகளை பெருக்குவதற்காக இன ரீதியான, மத ரீதியான முரண்பாடுகளை வலுப்படுத்தும கருத்துக்களை அரசியல்வாதிகள் உரைக்கிறார்கள். மேற்குலகில் பிரஜா உரிமை பெற்றவர்களும், தங்களது பிள்ளைகளை அங்கு அனுப்பி தாய் மொழியில் பேசத் தெரியாது ஆங்கிலம் மட்டும் பேச வைத்தவர்களும் கூட இங்கு தத்தமது மொழிக்காகவும் இனத்திற்காகவும் வாய் கிழியப் பேசுகிறார்கள். இதுவும் எல்லா இனத்தவரிலும் இருக்கவே செய்கிறது.
அரசியல்வாதிகளது அடிவருடிகளான குண்டர் கூட்டம் புனித முகமூடிகளைப் போர்த்திய வண்ணம் நஞ்சு உமிழ்கிறார்கள். ஊடகங்கள் ஊதிப் பெருப்பித்து விற்பனையை அதிகப்படுத்துவது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இயங்குகின்றன.
ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு சமூகமும் மற்றவர்களால் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றியே நினைக்கிறார்கள். பேசுகிறார்கள் பிரசாரமும் செய்கிறார்கள். தாங்கள் மற்றவர்களுக்கு இழைத்த அநீதிகள், வன்முறைகள், பாகுபாடுகள் பற்றி எந்தச் சிலமனும் காட்டுவதில்லை.
தாம் செய்த குற்றங்களை ஏற்றுக் கொள்வதும் அவற்றை பகிரங்கப்படுத்துவதும் அவசியமானது. ஆனால் அதற்கு மேலாக தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரிடையாகவும் பகிரங்கமாகவும் மன்னிப்புக் கோர வேண்டும். இத்தகைய செயற்பாடுகளே புரிந்துணர்வை வலுப்படுத்தும். நல்லியக்கத்திற்கு அத்திவாரம் இடும்.
அண்மையில் தென்னாபிரிக்காவைச் சார்ந்த Michael Lapsley வந்திருந்த செய்தியை பத்திரிகைகளில் நீங்கள் படித்திருக்கக் கூடும். துரதிஸ்டவசமாக எமது ஊடகங்கள் அதற்கு பெரு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர் Institute for the healing of memories (IHOM) என்ற நிறுவனத்தின் தலைவர். மனக் காயங்களை ஆற்றுப்படுத்தும் நிறுவனம் எனத் தமிழில் சொல்லலாம் என நினைக்கிறேன்.
போர் என்பது உருவேற்றி விடப்பட்டவர்களது பேயாட்டம்.
கொல்வதும் வெல்வதுமே அவர்களது இலக்கு. கொலை, கடத்தல், சித்திரவதை, அச்சுறுத்தல், அடக்குமுறை, சொத்தழிப்பு, சூறையாடல் யாவும் அதில் உள்ளடங்கும். இவற்றைத் தான் அவர்களின் உயர்பீடங்கள் அவர்களுக்கு போதித்தார்கள். இதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும் என எதிர்பார்த்தார்கள்.
போரில் மரணிப்பது உயிர்கள் மட்டுமல்ல, நீதி நியாயம் மனிதாபிமானம் போன்ற யாவுமே குழி தோண்டிப் புதைக்கப்படுகின்றன.
Michael Lapsley ஒரு போராளி. அதே நேரம் போரினால் பாதிக்கப்பட்டவரும் கூட. 1990 ல் ஒரு கடிதக் குண்டினால் தனது இரு கைகளையும் ஒரு கண்ணையும் இழந்தார். ஆனால் சோர்ந்து கிடக்காது இந்த (IHOM) நிறுனத்தை 1998ல் ஆரம்பித்தார். மனக்காயங்களை ஆற்றுவதற்கான ஒரே வழி அவற்றைப் பகிர்ந்து கொள்வதாகும்.
மனக் காயங்கள் உணர்வு ரீதியாதாக இருக்கலாம், உளவியல் தாக்கமாக இருக்கலாம் அல்லது ஆத்மீகம் சம்பந்தமானதாகவும் இருக்கலாம். பகிர்வது தாக்கத்தைக் குறைக்கும்.
ஆனால் உள்ளுறையும் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்கு நம்பிக்கையானவர்கள் வேண்டும். புரிந்துணர்வும் அனுதாபமும் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளைத்தான் போரினால் பிரிந்து கிடந்த பல நாடுகளில் IHOM வழங்கியது
அதே போல, இனங்கள் பிரிந்து கிடக்கும் நிலையை மாற்றுவதற்கு கலை இலக்கியங்களும் பெரும் பங்கு வகிக்க முடியும்.
அந்த வகையில் புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை உள்ளடக்கிய ‘நல்லிணக்கத்திற்கான ஆக்கங்கள்’ தொகுப்பு வெளி வந்திருப்பது இருண்ட வனத்தில் புத்தொளி பாய்ச்சுகிறது
இது சாதாரண நூல் அல்ல. பிளவுபட்டு பிரிந்து நிற்கும் இரண்டு இனங்களையும் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதியவை இவை.
22 சிறுகதைகளையும் இரு கவிதைகளையும் இந்த நூல் உள்ளடக்குகிறது
இவை ஒரு பக்கப் பார்வையான நூல் அல்ல. மூன்று இனங்களையும் சார்ந்த 23 எழுத்தாளர்கள் ஒன்று கூடி ஒருவருடன் ஓருவர் கலந்துரையாடி, கூடியிருந்து, பகிர்ந்து உணவு உண்டு. அருகருகே தூங்கி எழுந்து, தங்கள் அனுபவங்களை மற்றவர்களுடன் வெளிப்படையாகப் பேசி, மற்றவர் துன்பங்களை தங்கள் துயரங்களாக உணர்ந்ததின் விளைவாகப் பிறந்தது.
தான் தனது என்ற உணர்விலிருந்து விலகி மற்றவர்கள் வாழ்வை அவர்களிடமிருந்து கேட்டறிந்ததிலிருந்து, அதைத் தன்னதாக உருவகித்து, கற்பனையால் கூர்மைப்படுத்தி எழுதப்பட்டவையாகும் இப் படைப்புகள்.
பகிரங்க பத்திரிகை விளம்பரங்கள் மூலம் படைப்புலகிலும், தேசிய ஒருமைப்பாட்டிலும் ஆர்வமுள்ள மூவின மக்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டது. பின் அவர்களிடமிருந்து 30 பேர் நேர் முகத் தேர்வு மூலம் தெரிந்து எடுக்கபட்டிருந்தனர். இவர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் நடாத்தப்பட்டன.
சிறுகதை கவிதை போன்ற படைப்புகளின் எவ்வாறு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனக் கலந்துரையாடப்பட்டது. பலஸ்தீனம், ரூவண்டா, தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் மூர்க்கமான யுத்தத்தின் பின்னர் எவ்வாறு நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பது பற்றிய குறும்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
நம் நாட்டில் பாதிக்கபட்ட இடங்களைச் சென்று பார்வையிடவும் செய்தார்கள். கலாசார பாரம்பரியங்களின் சின்னங்களாக இருக்கும் இடங்களையும் சென்று பார்த்தார்கள்.
இந்தப் பயிற்சிப் பட்டறைகளை பிரபல ஆங்கில எழுத்தாளரான ஷியாம் செல்வத்துரை நெறிப்படுத்தினார். இவர் பிறப்பு ரீதியாக இரு இனங்களைப் பிரதிநிதிப்படுத்துபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது எழுத்துப் பயணத்தில் அனுபவங்கள் ஊடாக அறிந்து கொண்டவற்றை புதியவர்களுக்கு பட்டறிவுடன் கூடிய பயிற்சியாகக் கொடுத் தார்.
இதில் மூவினத்தவர்களது படைப்புகளும் இடம் பெறுகின்றன. ஆனால் அவை தமது இனத்தின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இல்லை. ஒரு இனத்தைச் சார்ந்தவர் மாறுபட்டு நிற்கும் மற்ற இனத்தின் பார்வையில் படைப்புகளைத் தருவது இந்த நூலின் சிறப்பு அம்சமாகும்.
ஷியாம் செல்வத்துரை தொகுத்த ஆங்கில நூலின் தமிழ் வடிவம் இப்பொழுது இந் நூலாக வந்திருக்கிறது. திரு ஜெகான் பெரேரா தலையில் இயங்கும் இலங்கை சமாதானப் பேரவையால் இந்தத் தமிழ் நூல் வெளியிடப்பட்டுள்ளது. வரவேற்றகத்தக்க முயற்சி. இந்த நூலில் உள்ள படைப்புகள் பற்றிய எனது கருத்துக்களை இங்கு முன் வைக்கப் போவதில்லை.
இதைப் போலவே ஏனைய கலை இலக்கியத் துறைகளிலும் நல்லிணக்கத்தை அவாவும் படைப்புகள் சில வெளிவந்திருக்கின்றன.
The Art of Forgetting (2006) என்று ஒரு குறும்படம் இலங்கையில் வெளிவந்ததாக அறிகிறேன். எனக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை. 2002 முதல் 2005 வரையான காலப் பகுதியில் சாதாரண மக்கள் பட்ட துன்பத்தை லெளிக் கொணர்ந்திருந்தது. சந்திரன் இரட்ணம் அவர்களது The Road from Elephant Pass மற்றொரு முக்கிய சினிமா.
இவை போன்று ஒவ்வொரு துறைகளிலும் நல்லிணகத்தை நோக்கிய ஆக்கங்கள் வர வேண்டும். அதற்கு கலை இலக்கிய படைப்பாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
ஆனால் அதற்கு மாறான சூழல்தான் நிலவுகிறது. ‘தமிழ் இனத்தை வென்றாகிவிட்டது. மற்றவர்களையும் அடக்க வேண்டும். அடக்குவோம்’ என்ற எண்ணம் வேரூன்றி இருப்பதைக் காண்கிறோம். வெளிப்படையான பேச்சுக்கள் கேட்கின்றன. வெறுக்கத்தக்க செயற்பாடுகளும் தொடர்கின்றன.
நல்லிணக்கம் என்பது சகல இனங்களிலுமுள்ள பெரும்பாலனவர்களின் எண்ணமாகவோ பேசுபொருளாகவோ இல்லாதிருக்கிறது. இந்நிலை மாற வேண்டும்.
அதற்கு இந்த நூலின் வரவும் அது பற்றிய கருத்தரங்கும் தூண்டுகோலக அமையும் என நம்பலாம்.
நல்லிணக்கத்திற்கான முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, இந்த நூல் எழுதப்படுவதற்கு களம் அமைத்துக் கொடுத்த செய்த தேசிய சமாதானப் பேரவையின் முயற்சிகளுக்கு நாம் நன்றி கூறவேண்டும். அதேபோல இந்த ஆய்வரங்கை ஒழுங்கு செய்த இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தினருக்கும் எனது நன்றிகள்
நல்லிணக்கத்தை நோக்கிய நூல் வரவுகளும், கலந்துரையடல்களும் இன்னும் பரவலாக வரவேண்டும். ஆங்கிலம் சிங்களம் பேசுவோரிடையேயும் இவை தொடர வேண்டும்.
அப்பொழுதூன் இலங்கை போரில்லாத நாடு என்ற நிலையிலிருந்து மாறி மனக் காயங்கள் இல்லாத நாடு என்ற உயர் நிலையை அடைய முடியும்.
நூல் :- நல்லிணக்கத்திற்கான ஆக்கங்கள் – ஒரு தொகுப்பு
பதிப்பாசிரியர் :- ஷியாம் செல்வதுரை
பொறுப்பாசிரியர் தமிழாக்கம் :- மா.சே.மூக்கையா
வெளியீடு :- இலங்கை தேசிய சமாதானப் பேரவை
12/14 :- புராண விஹார வீதி
கொழும்பு 06
தொலைபேசி :- 0094 11 2818344
website :- http://www.peace-srilanka.org
e mail :- info@peace-srilanka.org
‘நல்லிணக்கத்திற்கான ஆக்கங்கள்’ நூல் வெளியீட்டு விழாவில் (20.07.2004) நான் ஆற்றிய தலைமையுரை
எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.