Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for நவம்பர், 2014

நடுக்கம் என்றால் என்ன?

பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம்.

அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு. மலேரியா சிறுநீர்த் தொற்று, செலுலைடிஸ் போன்றவை அதற்கு உதாரணங்களாகும். இந்த வகை நடுக்கத்தை ஆங்கிலத்தில்  shivering என்பார்கள்..

பயத்தினால் நடுங்குவது மற்றொன்று.

இவற்றைத் தவிர மற்றொரு நடுக்கமும் உண்டு. விரல்களும் கைகளும் நடுங்குவது. கோப்பை பிடித்தால் கிடுகிடுவென நடுங்கி தேநீர் தரையில் சிந்தும், சேவ் செய்யும்போது கை நடுங்கி சொக்கையை ரணமாக்கிவிடும், சமையலறையில் பாட்டியின் கை நடுங்கி பாத்திரங்கள் பொத் பொத்தென விழுங்கி நொருங்கும்.

பொதுவாக வயதானவர்களில் கண்டிருப்பீர்கள். சில நோய்களாலும் வருவதுண்டு. மருத்துவத்தில் tremors என்பார்கள்.

ஒருவரது விருப்பின்றி தாமாகவே உடலின் சில உறுப்புகள் நடுங்குவதை அவ்வாறு கூறலாம். பொதுவாக விரல்களில் ஏற்படும். வயதானவர்களிலும் நடுத்தர வயதினரிடையேயும் அதிகம் காணப்படும் என்றபோதிலும் எந்த வயதிலும் ஏற்பட வாய்ப்பு உண்டு. விரல்களில் மாத்திரமின்றி கைகள், தலை முகம் உதடுகள் குரல்வளை உடல் என எங்கும் ஏற்பட வாய்ப்புண்டு.

ஒருவர் தான் அதைச் செய்ய வேண்டும் என்று எண்ணாத போது அதாவது சுயவிருப்பின்றி  அவரது முயற்சியும் இன்றி எதிர்பாராது ஏற்படுவதே இத்தகைய நடுக்கம் ஆகும். தசைகளின் அசைவியக்கத்தை கட்டுப்படுத்தும் மூளையும் நரம்பு மண்டலமும்தான் இதற்குக் காரணமாகும்.

பல வகைகள்

மூன்று முக்கிய வகைகள் உண்டு.

முதலாவது வகை ஒருவர் எதுவும் செய்யாது வாழாதிருக்கும்போது ஏற்படும் நடுக்கமாகும் இதை  resting tremors  என சொல்லுவார்கள். அத்தகைய நடுக்கம் அவர் ஏதாவது செய்ய முனையும்போது தற்காலிகமாகத் தணிவதுண்டு. சாதாரணமாக கை நடுக்கம் உள்ள ஒருவர் எழுத முனையும் போது அல்லது ஒரு பொருளைப் பற்ற முயலும்போது இத்தகைய நடுக்கம் தணியும். இதற்கு முக்கிய உதாரணம் பார்க்கின்சன் (Parkinson’s disease) நோயாகும்.

இந்நோயின் போது அவரது இயக்கம் மெதுவாவதுடன் நடையும் தளும்பலாக இருக்கும். சில ஈரல் நோய்கள், நடுமூளையில் பக்கவாதம் போன்றவை ஏனைய காரணங்களாகும்.

வேறு சில நடுக்கங்கள் ஒருவர் ஏதாவது செய்ய முனையும் போது மோசமாகும். இதை Intention tremors என்பார்கள். உதாரணமாக ஒரு பொருளைப் பற்ற முனையும்போது அல்லது எழுத முனையும்போது நடுக்கம் மோசமாகும். மூளையின் செரிபல்லம் பகுதியில் ஏற்படும் நோய்களால் இவை ஏற்படும்.

இன்னும் சில நடுக்கங்கள் எந்நேரமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். Action tremors  என்பார்கள். இவற்றில் சில ஏதாவது ஒரு புறத்தில் மட்டும் இருப்பதுண்டு. உதாரணமாக இடது கை நடுங்கும் ஆனால் வலது பக்கத்தில் எதுவம் இருக்காது.

நடுக்கங்களில் பல காரணம் சொல்ல முடியாதவை ஆகும்.

  • இவற்றில் பல பரம்பரை பரம்பரையாக வருவதுண்டு.
  • காரணம் சொல்ல முடியாத நடுக்கங்களில் பல 65 வயதிற்கு பின்னரே ஆரம்பிக்கும்.
  • ஆயினும் பரம்பரையில் தோன்றுபவை நடுத்தர வயதிலேயே தோன்றுவதுண்டு.
  • பெற்றோரில் ஒருவருக்கு இருந்தாலே பிள்ளைகளுக்கு வர வாய்ப்புண்டு.
  • ஆனால் எல்லாப் பிள்ளைகளுக்கும் வரும் என்றில்லை.
  • கை நடுக்கம் மட்டுமின்றி தலை ஆடுவது குரல் நடுங்குவது போன்றவையும் பரம்பரையில் வரலாம்.

மருந்துகளால் நடுக்கம்

“எனக்கு நேற்றிலிருந்து கை நடுங்குகிறது” என ஒரு நோயாளி சொன்னார். திடீரென ஏன் ஏற்பட்டது?

“ஏதாவது மருந்துகள் புதிதாக உபயோகிக்க ஆரம்பத்தீர்களா” எனக் கேட்டபோது “எனக்கு ஒரு வருத்தமும் இல்லை” என்றவர் சற்று யோசித்துவிட்டு ‘இருமல் சிரப்’ ஒன்று குடித்தனான்’ என்றார்.

ஆம் பல மருந்துகள் நடுக்கங்களுக்கு காரணமாகி;னறன.

ஆஸ்த்மா நோய்க்கு உபயோகிக்கும் பல மருந்துகள் காரணமாகலாம்.

Terbutaline. Salbutamol, Theophylline, போன்றவை முக்கியமானவை. இம் மருந்துகள் சுவாசக் குழாயை விரிவுபடுத்தி சளி இலகுவாக வெளியேறுவதற்கு உதவுகின்றன. இதனால் பல இருமல் சிரப் மருந்துகளில் குறைந்த அளவில் கலந்துள்ளன.

ஸ்ரோயிட் வகை மருந்துகள் (eg Prednisolone, betamethasone)  பலவகையாகும். இவை பல வகை நோய்களுக்கும் உபயோகிக்கப்படுவதுண்டு. இவையும் நடுக்கத்தை ஏற்படுத்தலாம்

மருத்துவ ஆலோசனை இன்றி தானாகவே மருந்தை வாங்கிக் குடித்ததால் அவரைப் போல பலருக்கு நடுக்கம் ஏற்படுவதுண்டு.

வலிப்புநோய்க்குஊபயோககிக்கும் Valporate,  மனநோய்களுக்கு உபயோகிக்கும் lithium,  மனச்சோர்விற்கு உபயோகிக்கும் பல மருந்துகள், சில அன்ரிபயோடிக் மற்றும் அன்ரி வைரஜ் மருந்துகளும் நடுக்கத்தை ஏற்படுத்துவதுண்டு. பார்க்கின்சன் நோய்ககு நடுக்கம் ஏற்படும் என்றேன். அதேபோல அந்நோய்க்கு உபயோகிக்கும்  Levodopa மருந்தாலும் ஏற்படலாம்

தைரொக்சின் மருந்தின் அளவு கூடினாலும் வரலாம். தைரொயிட் சுரப்பி அதிகமாக வேலை செய்யும் நோயிலும் நடுக்கம் வருதுண்டு.

இன்னும் பல மருந்துகளால் நடுக்கம் ஏற்படலாம் என்பதால் ஒருவர் தனக்கு புதிதாக நடுக்க நோய் ஏற்பட்டு மருத்துவரிடம் செல்ல நேர்ந்தால் தான் உபயோகிக்கும் அனைத்து மருந்துகளின் பட்டியலை மருத்துவரிடம் கொடுத்து ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

போதையும் நடுக்கமும்

போதைப் பொருட்கள் நடுக்கத்தை ஏற்படுத்தலாம். முக்கியமாக மதுபானமும் புகைத்தலும் நடுக்கத்தை நடுக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். அதேபோல போதையில் மூழ்கியவர் அதைத் திடீரென நிறுத்தினாலும் நடுக்கம் ஏற்படலாம்.

நிறுத்தும்போது ஏற்படும் நடுக்கம் தற்காலிகமானது சில நாட்களில் தணிந்துவிடும்.

சிகிச்சை

நடுக்கம் ஏற்பட்டால் அதற்கான அடிப்படைக் காரணத்தை கண்டறிய வேண்டும். எனவே மருத்துவ ஆலாசனை பெறுவது அவசியம்.

பெரும்பாலான காரணங்களை விரிவாகவும் தெளிவாகவம் பேசுவதன் மூலம் கண்டறிய முடியும். இருந்தபோதும் இரத்தப் பரிசோதனைகள் மற்றும் CT scan MRI  போன்றவையும் தேவைப்படலாம்

சிகிச்சையின் அடிப்படை காரணத்தை துல்லியமாகக் கண்டறிவதே.

மருந்துகள் காரணமாயின் அவற்றை இனங்கண்டு மருத்துவ ஆலோசனையுடன் வேறு மருந்துகளை உபயோகிக்க வேண்டும்.

போதைப் பொருள்கள் காரணமாயின் அவற்றை நிறுத்த வேண்டும். மது சற்று அருந்தினால் சிலருக்கு நடுக்கம் குறையும். ஆயினும் அவ்வாறு குடிப்பது ஆபத்தானது. அவர்கள் மதுவிற்கு அடிமையாகி சீரழிந்து போவது பெரும் பிரச்சனை ஆகும்.

நடுக்கம் உள்வர்கள் கோப்பி தேநீர் கொக்கோ போன்ற பானங்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்

மனப்பதற்றமும் காரணம் என்பதால் அதைத் தணிக்க முயலவேண்டும்.

அரிதாக சத்திர சிகிச்சையும் தேவைப்படலாம்.

எவ்வாறாயினும் பெரும்பாலான நடுக்கங்கள் ஆபத்தற்றவை என்பதால் அச்சமடையத் தேவையில்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.00.0

 

Read Full Post »

அண்மையில் நான் படித்தவற்றில் என்னை மிகவும் கவர்ந்ததும் எமது சமுதாயத்திற்கு பெரிதும் உதவக் கூடியதும் எனச் சொல்வதானால் அது பேராசிரியர் மா.சின்னத்தம்பி எழுதிய ‘புதிதாகச் சிந்திப்போம்.- சமுதாயத்திற்கான கல்வி’ என்ற நூலாகும்.

பேராசிரியர் மா.சின்னத்தம்பி பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறைப் பேராசிரியர். எமது சமூகத்திற்கு புதிய ஊற்றுக் கண்ணைத் திறந்துவிடுவது போல எமக்குத் தேவையான கல்வி முறை பற்றி, கட்டுரைகள் மற்றும் உரைகள் வாயிலாக அறியத் தருபவராவார்.

நூலின் அந்தத் தலையங்கமே மிகவும் அர்த்தபுஸ்டியானது. கல்வி என்பதை அறிவுக் கண்ணைத் திறப்பதற்கானது என்பதை பாரம்பரியமாகப் போற்றி வந்தவர்கள் நாம். ஆனால் கல்வியானது தனி நபரது முன்னேற்றத்திற்கு மட்டுமே ஆனதாக எல்லைப்படுத்தப்படும் துரதிஸ்டவசமான நிலைக்கு நாம் இன்று தாழ்ந்து போயிருப்பதைக் காண்கிறோம்.

பணமீட்டித் தரக் கூடிய சில பாடநெறிகளையே பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் திணிக்கிறார்கள். பணம் தேவைதான். இதனால் பரீட்சையில் வெற்றி பெற முடியாத பிள்ளைகள் உயர்தரப் பரீட்சைக்கு பின் நிர்க்கதியாகி அவதிப்படுகிறார்கள். பிஞ்சு வயதான ஐந்தாம் வகுப்பிலேயே போட்டிப் பரீட்சைகளுக்கு முகம் கொடுக்க நேர்வதால் குழந்தைகளின் உடல் உள நலங்கள் பாதிப்படைகின்றன.

இவற்றால் பெற்றோர்களுக்கு நெருக்கடியான சூழ்;;நிலையும் உள நெருக்குவாரங்களும் ஏற்படுகின்றன. சில ஆசிரியர்கள் கல்வி முதலாளிப் பெருச்சாளிகளாக மாறும் அதே வேளை பெரும்பாலான ஆசிரியர்களின் நிலமை மோசமாக இருக்கிறது.

மறுபுறம் பார்க்கைளில் சமூகத்தில் தொழில் முறைப் பயிற்சி பெற்றவர்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்குக் காரணம் கல்வியானது சமூக மேம்பாட்டை இலக்காகக் கொண்டதாக இல்லை என்பதே ஆகும்.

இந்தச் சூழலில் சமூகத்திற்கு விழிப்புணர்வைத் தரக் கூடியதாக பேராசிரியரின் இந்த நூல் இருக்கிறது. பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளது.

“பழைய சிந்தனைகள், கோட்பாடுகள் என்பவற்றிற்குள் அடைபட்டு, அவற்றை மீள் வாசிப்புச் செய்யாமல், நடைமுறை  உலகில் கல்வி அமுலாக்கம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தூரநோக்கில்  சிந்திக்கின்ற ஆற்றல் பேராசிரியரின் தனிச்சிறப்பிற்கு நல்ல சான்றாதாரமாகும்”. வலம்புரி பத்திரிகையில் இக் கட்டுரைத் தொடர் வெளிவர உந்து சக்தியாக இருந்த அதன் பிரதம ஆசிரியர் நல்லையா விஜயசுந்தரம் சொல்வது இதுவாகும்.

தான் எடுத்தாண்ட விடயங்களுக்கு அவர் கொடுத்த தலையங்கங்களை கூர்ந்து அவதானித்தாலே இந்த நூலின் பயன்பாட்டையும், அதன் விசாலிப்பையும் உணர்ந்து கொள்ள முடியும்.  206 பக்கங்களாக நீளும் இந்த நூலில் 30 கட்டுரைகள் அடங்கியுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு

உதாரணமாகக் காட்டலாம்.

  • பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்?,
  • நல்ல பெற்றோர்களாக நடந்து கொள்வது எப்படி?,
  • பரீட்சைக்காக மாத்திரம் கற்பித்தால் திருப்தி அடைய முடியுமா?,
  • பரீட்சைகளில் தோல்வி அடைந்தவர்களைப் பற்றிப் போசுவது அவசியமா?,
  • மாணவர்கள் சுயமாகக் கற்பதற்குரிய சூழலையும் வாய்ப்புகளையும் அகலப்படுத்துவது அவசியம்தானா?,
  • பாடசாலைகள் மாணவர்களிடம் சமூகத் திறன்களை வளர்க்கத் தவறிவிட்டனவா?,
  • மாணவர்களே உங்களை முன்னேற்றும் நல்ல திறன்களை நன்கு அறிவீர்களா?,
  • பல்கலைக்கழக மாணவர்களே நீங்கள் எவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்,
  • அரசபாடசாலை ஆசிரியர்கள் ஏன் ஊக்கம் குறைந்து விரக்தியுடன் உள்ளனர்?,
  • க.பொ.த உயர் வகுப்பில் எல்லோரும் தமது காலத்தைச் செலவிடுவது நியாயமானதா?,
  • தொழில் வாய்ப்புப் பெற உதவி செய்யாத பட்டப்படிப்புகளிலிருந்து விலகிவிட முடியுமா?

இவற்றைத் தவிர மொழிக் கல்வி,  பிள்ளைகளின் சுயகணிப்பு,  பேச்சுக் கல்வி, முன் பள்ளிகள், முறைசாராத தொழில் கல்வி, கடல்வள உயர்கல்வி, பெண்களின் ஆற்றல், முதியோர் ஆற்றல், வெளிநாட்டு பழைய மாணவர்களின் பாடசாலைகளுக்கான நன்கொடைகள் பயன்படுத்தப்படும் விதம் போன்ற கல்வி தொடர்பான வேறு பல அரிய விடங்களையும் நூலாசிரியர் சிறப்பாக ஆராய்கிறார்.

முதுகல்வி பெற்றவர்கள் பேராசிரியர்கள் போன்ற பலரும் கலைச்சொற்கள் விரவி நிற்க கடுமையான வாக்கியங்களை அமைத்து தமது அறிவாண்மையைப் பறைசாற்றி எழுதி வருகையில் பேராசிரியர் சின்னத்தம்பியின் எழுத்து நடை மிகவும் சரளமானதும் எளிமையானதும் ஆகும். சாதாரண வாசகனும் இலகுவாக வாசித்து புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. வீணான அலட்டல்கள் இல்லை. பல விடயங்களைப் புள்ளியிட்ட சிறு குறிப்புகளாகத் தருவது அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கு கைகொடுக்கிறது.

அதற்கு அப்பால் எடுத்தாளப்படும் பிரச்சனைகளுக்கான அவரது வழிகாட்டல்களும் நடைமுறையில் செயற்படுத்தக் கூடியவையே. அதனால் பயன் மிக்கது.

இந்த நூலைப் பெற்றோர்களுக்கானது என்று மட்டுப்படுத்த முடியாது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமின்றி சமூக முன்னேற்றதில் அக்கறை உள்ள அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூலாகும்.

நூலின் விலை ரூபாய் 420.00 எங்கே விற்பனைக்குக் கிடைக்கும், எங்கு தொடர்பு கொள்வது போன்ற தகவல்களை நூலிலிருந்து பெற முடியவில்லை.

எம்.கே.முருகானந்தன்

0.0.0

 

Read Full Post »

மனதோடு பேசுதல் மனதிற்கு இனியது. மன நிறைவைத் தருவது. நினைவுகளை மீட்பது. மற்றவர் மனம் நோக வைக்காதது. அதே நேரம் மற்றவர்களால் இடையூறு செய்ய முடியாததும் கூட. அத்தோடு வாழ்வின் கடந்த அலைகளில் மீண்டும் நீந்திச் செல்வது போன்ற இனிய சுகம் வேறு எதிலுமே கிட்டாது.

20140919_122517-001

நடா சுப்பிரமணியம் தன் மனதோடு தான் பேசியவற்றை முதலில் முகப் புத்தகத்திலும் இப்பொழுது நூல் ஊடாக சமூகப் பரந்த வெளியில் சஞ்சரிக்க விட்டிருக்கிறார்.

இவரது கவிதைகளின் முக்கிய அம்சம் அவை மென்மையானவையாக இருப்பதுதான். ஆரவாரம், வீர முழக்கங்கள், தூற்றல்கள், நச்சரிப்பு எச்சரிப்பு போன்ற தீவிரங்கள் ஏதுமின்றி அமைதியான நீரோட்டம் போல தனது உணர்வுகளையும், இழந்த வாழ்வின் நினைவுகளைச் சுமப்பவையாகவும் அவை இருக்கின்றன.

‘.. வானில் வட்டமிட்டு பின்

கரணமடிக்கும் பட்டம் என் மனம்

நூலின் நுனியோ..

உன் நினைவுகளின் பிடியில் ….’

இவரது கவிதைகள் சிறிய சம்பவங்களின் கோவை போல பல தருணங்களில் அமைந்திருக்கும். இதனால் இதை வாசிக்கும் பலருக்கு அவை தமது வாழ்வின் பிரதிபலிப்புகள் போலவும் தோன்றலாம்.

“கவிதைகளில் சொல்லப்பட்ட சில நிகழ்வுகளும், நிகழ்ந்த இடங்களும் என் பள்ளிக் காலத்தை என் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது. சென்ரல் தியேட்டர், வல்லிபுர ஆழ்வார் தீர்த்தத் திருவிழா போன்றவை நாம் வாழ்ந்த மண்ணின் கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்த நிகழ்வுகள். படிப்பவர்களுக்கும் இதே உணர்வு உள்ளோங்கும்” என்கிறார் மனோ தத்துவ நிபுணரான டாக்டர் வாசுகி மதிவாணன் இந்த நூலுக்கான தனது அணிந்துரையில்.

‘.. வெளிச்சத்தைத்

தொலைத்துவிட்ட

எங்கள் வெளிச்ச வீட்டின் மீது

விண்மீன்களின்

வெளிச்சம்

விழ ஆரம்பித்திருந்தது …..’

பருத்தித்துறை வெளிச்ச வீடு எவ்வாறு அவர் வாழ்வில் கலந்ததுவோ, அதுபோலவே அங்கு வாழ்ந்த எங்கள் ஒவ்வொருவருடனும் நினைவில் பயணிக்கவே செய்கிறது. இது போல ஏராளம் …

“நடாவின் மனதோடு பேசுதல் தொகுதியின் கவிதைகள் எதைப் பற்றிப் பேசினாலும் நட்பினையே முதன்மைப்படுத்துகிறது..” என்கிறார் ரவி கந்தையா தனது வாழ்த்துரையில்.

‘..பள்ளிப் புத்தகத்திற்குள்

மயிலிறகை வைத்துவிட்டு

நிமிடத்திற்கு நூறு தடவை

குட்டி போட்டிருக்கிறதா

என்று எட்டி எட்டி பார்த்திருக்கிறோம்.’

உண்மைதான் நட்புகளின் நிழல் கவிதைத் தொகுப்பு எங்கும் தொடர்வதைக் காண்கிறோம்.

நட்பு முதன்மைப்பட்டிருந்தாலும் அன்பு, காதல், நட்பு, பிரிவு, ஏக்கம், போன்ற உணர்வுகளையும் கூடவே பேசுகின்றன.

‘இந்தக் கவிதைத் தெர்கப்பு நெடுகிலும் வலிகளும், குதூகலமும், மகிழ்வும், துயரமும் காதலாகவும், நட்பாகவும் விடுதலைக்கு ஏங்கும் மனத்தோடு சஞ்சரித்துக்கொண்டே இருக்கிறது என்கிறார் ஈஸ்வர சந்தானமூர்த்தி தனது பதிப்புரையில்.

அதே கருத்தை இத் தொகுதிக்கு முன்னுரை வழங்கிய கவிஞர் மேத்தா ‘பிறந்த மண்ணையும் பிரியத்திற்குரிய மனிதர்களையும் பிரிந்து வாழும் ஏக்கம் – உணவில் கலந்த உப்பைப் போல உணர்வில் கலந்து நிற்கிறது.’ எனத் தன் மொழியில் சொல்லுகிறார்.

“எத்தனை

இனிமையான

நாட்கள் அவை ..!

இன்றும்

செவிகளில்

எதிரொலித்து வரும்…”

ஒவ்வொருவரும் தம் வாழ்வின் கடந்து வந்த இனிய காலங்களில் உவகையுறவே செய்வர்.

‘காற்றின்

சீண்டல்களில்

சிணுங்கும் தென்னைகள்..’

ஆம் நிச்சமாக  தென்னையோடும் பனையோடும் கூடவே வாழ்ந்த வாழ்வு இனிமையானதுதான்.

ஆனால் வாழ்க்கையானது இறந்த காலத்துடன் நிறைவுறும் படைப்பாக முற்றுப் புள்ளியிடப்படுவது அல்ல. அது நிகழ்காலத்திலும் தொடர்கிறது. எதிர் காலத்திலும் புதிய காட்சிகளுடன் திரை விலகக் காத்திருக்கிறது.

‘செல்வம்’ என்ற புனை பெயரிற்குள் மறைந்திருக்கும் நடா சுப்பிரமணியம் தனது இனிய கவி மொழியில் அவற்றையெல்லாம் சொல்ல வேண்டும். வாழ்ந்த நாடு மட்டுமல்லாது இப்பொழுது வாழும் மண்ணும் அவரது சொந்தத் தேசம்தான்.

அந்தப் புதிய சூழலில் அவர் இணைவதில் ஏற்பட்ட சவால்களும், அங்கு பெற்ற வெற்றிகளும், கிட்டிய புதிய உறவுகளும், அவற்றுடனான ஒட்டும் ஒட்டாத் தன்மைகளும் படைப்புகளில் வெளிவர வேண்டும். அவை வாசகர்களுக்குப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும்.

அதேபோல அவரது படைப்பு வெளியையும் பட்டை தீட்டி புதுப் புதுப் மெருகுகளுடன் வரக் கைகொடுக்கும் என நம்புகிறேன்.

‘.. கற்பாறையினை

பிளந்தவாறு..

பசும் புற்களே துளிர்வ்pடும்போது

எமது மனங்களில்

நட்பு துளிர் விட்டது

ஆச்சரியமானதல்ல…..’

என்ற அவரது வரிகளே, சொர்க்கங்கள் எங்கும் திறக்கலாம் எமது மனது மட்டும் பரந்த வெளிகளில் சிறைவிரிக்கத் தயாராக இருந்தால் என்பதற்கு சான்றாக அமைகிறது.

வாழ்த்துக்கள் நடா.

20140919_122621-001

நூல் :- மனதோடு பேசுதல்

நூலாசிரியர் :- செல்வன்- நடா சுப்பரமணியம்

நூலாசிரியர் தொர்பு :- 0044 7722589359. நுஅயடை :- யெனய2202ளூலயாழழ.உழஅ

பக்கங்கள் :- 152

விலை :- இந்திய ரூபா 100.00

வெளியீடு :- மகிழினி பதிப்பகம்

0.0.0.0.0

 

Read Full Post »

மூஞ்சையில் இடிக்காதவாறு நீட்டினார் ‘எக்ஸ்ரே’யை

“பாருங்கோ வடிவா! குதிக்காலிலை எலும்பு வளர்ந்திருக்காம். என்ன செய்யிறது? வெட்ட வேணுமே” மூச்சு விட நேரமில்லாமல் பேசினார்.

20140402_110718-001

அவரது குதிக்கால் எலும்பின் கீழ்ப்புறமாக பிசிறுபோல எலும்பு சற்று வளர்ந்திருந்தமை தெரிந்தது.

குதிக்காலில் வலி என ஒரு மருத்துவரிடம் காட்டிய போது அவர் மருந்து மாத்திரைகள் கொடுத்து தசைப் பயிற்சிகளையும் சொல்லிக் கொடுத்துள்ளார். பேச்சோடு பேச்சாக குதிக்கால் எலும்பிலும் சிறுவளர்ச்சி என்று சொன்னதால் வந்த வினை. எக்ஸ்ரே யுடன் மருத்துவர் மருத்துவராக ஓடித் திரிகிறார்.

குதிக்காலின் பிரதான எலும்பு கல்கேனியம் எனப்படுகிறது. உடல் எடையைப் பெருமளவு தாங்கும் எலும்பு என்பதுடன் பாதத்தின் முக்கிய தசைநாரான குதிக்கால் சவ்வு (plantar fascia) இதனுடன் இணைந்துள்ளது. இந்தச் சவ்வு மிகவும் பலமுள்ளதாக இறுக்கமானதாகவும் இருக்கிறது. இச் சவ்வுதான் பாதத்தின் அடிப் பகுதியில் உள்ள வளைவைப் பேண உதவுகிறது. அத்துடன் நடக்கும் போதும் ஓடும்போதும் உடலின் எடையானது பாதத்தில் சமச்சீராக தாங்கப்படுவதற்கும் உதவுகிறது.

இந்த கல்கேனியம் என்ற எலும்பின் கீழ்ப்புறத்தில் கல்சியம் படிவதையே (Heel spurs) குதிக்கால் எலும்புத் துருத்தல் என்பார்கள். அந்த எலும்பின் முற்புறமாக அரை அங்குல நீளம் வரை நீண்டு அது வளர்வதுண்டு.

Heel spur

குதிக்கால் வலியென நோயாளிகள் சொல்லும்போது மருத்துவர்கள் எக்ஸ்ரே படம் எடுத்துப் பார்க்கும் போது இது தெரியவரும். இருந்தபோதும் வேறு காரணங்களுக்காக எக்ஸ்ரே எடுக்கும்போது தான் பெரும்பாலும் இந்த எலும்பு வளர்ச்சி இருப்பது தெரியவருகிறது. இது ஆபத்தான நோயல்ல.

குதிக்கால் எலும்புத் துருத்தலால் அறிகுறிகள் எதுவும் பொதுவாக ஏற்படுவதில்லை. இருந்தபோதும் அவர்களுக்கு குதிக்காலில் வலி இருக்கக் கூடும். நடத்தல், ஓடுதல், துள்ளல் நடை போன்றவற்றின் போது வலி தெரியவரலாம். இருந்தாலும் வலி ஏற்படுவதற்குக் காரணம் குதி எலும்புத் துருத்தல் அல்ல. அருகில் உள்ள குதிக்கால் சவ்வு தசைநாரில் அழற்சி ஏற்படுவதே வலிக்குக் காரணமாக பெரும்பாலும் இருப்பதுண்டு.

காலையில் எழுந்து காலடி வைக்க ஆரம்பிக்கும்போது குதிக்காலில் சுளீரெனக் குத்துவது போல வலிக்கும். அதேபோல சற்று நேரம் ஓய்வாக உட்கார்ந்திருந்துவிட்டு நடக்க ஆரம்பிக்கும்போது அதே விதமாகக் குத்துவது போன்ற வலி ஏற்படும்.

ஆனால் இதே விதமான அறிகுறிகள் குதிக்கால் சவ்வு அழற்சியின் (Planter fascitis) போதும் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

காலையில் எழுந்திருக்கும் போது குதிக்கால் சவ்வு மிகவும் இறுக்கமாக இருப்பதால் சிறிய அசைவுகள் கூட வேதனையை ஏற்படுத்துகின்றன. ஆயினும் சற்று நடந்த பின்னர் அதன் இறுக்கத்தில் சற்று தளர்ச்சி ஏற்பட ஆரம்பிப்பதால் வேதனை சற்றுக் குறையும். இதனால்தான் காலை எழுந்து நடமாட முன்னர் பாதத்தை தங்கள் கைகளால் மசாஸ் செய்யும்படி குதிக்கால்
வலி உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவர்.

குதிக்கால் சவ்வு அழற்சி மற்றும் குதிக்கால் எலும்புத் துருத்தல் அறிகுறிகள் ஒரேவிதமாக இருப்பதால் பலரும் ஒன்றை ஒன்று குளப்பிக் கொள்வதுண்டு.

இருந்தபோதும் குதிக்கால் சவ்வு அழற்சி உள்ளவர்களில் 70 சதவிகிதமானவர்களுக்கு குதிக்கால் எலும்புத் துருத்தல் இருப்பதைத் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. அதே நேரம் பாதத்தில் எந்த வலிகளும் இல்லாதவர்களில் 70 சத விகிதமானவர்களுக்கு குதிக்கால் எலும்பு துருத்தி இருப்பதும் உண்டு.

குதிக்கால் எலும்புத் துருத்தல் ஏன் ஏற்படுகிறது என்பது தெளிவாகத் தெரியாது. இது திடீரெனத் தோன்றுவதில்லை. படிப்படியாகவே வளர்கிறது. பாதத்தில் உள்ள தசைகளுக்கும் சவ்வுகளுக்கும் வினைப்பளு (Strain) அதிகமாதலால் அவை நீளவாக்கில் இழுபடுகின்றன. இதனால் அவை எலும்பில் பற்றியிருக்கும் மெல்லிய சவ்வுகளில் நுண்ணிய கிழிவுகளை ஏற்படுகிறது.

இவற்றின் தொடர்ச்சியாகவே அவ்விடங்களில் எலும்பு துருத்தி வளர்கிறது என நம்பப் படுகிறது. கடுமையான ஓடுவது துள்ளுவது போன்ற பயிற்சிகளைச் செய்யும் விளையாட்டு வீரர்களில் இதன் காரணமாகவே அதிகளவில் குதி எலும்பு துருத்தல் பிரச்சனை காணப்படுகிறது.

குதி எலும்பு துருத்தி யாரில் அதிகம் ஏற்படுகிறது.
ஏற்கனவே குறிப்பட்டது போன்ற கடுமையான உடற் பயிற்சிகள் செய்பவர்களுக்கு ஏற்பட வாய்ப்புண்டு.
நடையின் இயல்பில் பாதிப்பு உள்ளவர்களுக்கும் அவ்வாறே ஏற்பட வாய்ப்புண்டு. நடையின் இயல்பு என்றால் என்ன? பொதுவாக நாம் நடக்கும்போது இரண்டு பாதங்களிலும் உடற் பாரமானது ஒரே விதமாக விழுமாறு நடக்கிறோம். ஒரு கால் சற்றுக் குட்டையாக அல்லது பாதத்தில் வளைவுகள் சீரற்றோ இருந்தால் ஒரு பாதத்தில் அதிக தாக்கம் ஏற்படும். இது எலும்பு துருத்தலுக்கு காரணமாகலாம்.
அதேபோல ஒரு பக்க முழங்காலில், பாதத்தில், அல்லது தொடையில் வலியிருந்தாலும் நாம் எம்மையறியாது பாரத்தை மற்றக் காலில் அதிகம் பொறுக்க வைப்போம். இதுவும் காரணமாகலாம்.
கடுமையான தரைகளில் ஓடுவது துள்ளல் நடைபோடுவது போன்றவையும் காரணமாகலாம்.
பொருத்தமற்ற காலணிகள் மற்றொரு முக்கிய காரணமாகும். தேய்ந்த காலணிகளும் அவ்வாறு எலும்புத் துருத்தலுக்கு வழிவகுக்கலாம்.
உடல் எடை அதிகமான குண்டு மனிதர்களுக்கும் வாய்ப்பு அதிகமாகும்.
வயது முதிரும்போது குதிக்கால் சவ்வினது நெகிழ்வுத்தன்மை குறைந்து போகிறது. அத்துடன் பாதத்திற்குப் பாதுகாப்பைத் தரும் கொழுப்பின் அளவு குறைந்து போவதும் காரணமாகலாம்.
நீரிழிவு நோயுள்ளவர்களின் பாதத்தின் நரம்புகளும் தசைகளும் பவீனமடைவதாலும் ஏற்பட வாய்ப்புண்டு.
சிலரது பாதங்கள் பிறப்பிலேயே தட்டையாக இருப்பதுண்டு. மாறாக வேறு சிலருக்கு பாதத்தின் வளைவு அதீதமாக இருப்துண்டு. இவர்களுக்கும் குதிக்கால் எலும்புத் துருத்தல் ஏற்படக் கூடும்.

சிகிச்சை

குதிக்கால் சவ்வு அழற்சி மற்றும் குதிக்கால் எலும்பு துருத்தல் இரண்டும் வேறு வேறான நோய்களாக இருந்தபோதும் அவை ஏற்படுவதற்கான காரணங்களும் அவற்றின் அறிகுறிகளும் ஒரே விதமானவைதான்

எனவே சிகிச்சையும் ஒரே மாதிரியானதுதான்.

முக்கியமானது நோய் ஏற்பட்ட பகுதிக்கு சற்று ஓய்வு கொடுப்பதாகும். குதிக்கால் பகுதியில் உள்ள தசைகளுக்கும் சவ்வுகளுக்கும் கடுமையான வேலை கொடுப்பதை சில தினங்களுக்கு தவிர்க்க வேண்டும். இதன் அர்த்தம் படுத்துக் கிடப்பதில்லை. கடுமையான உடற் பயிற்சிகள், அதிக நடை போன்றவற்றைக் குறைக்க வேண்டும்.

வலி அதிகமாக இருந்தால் ஐஸ் பை வைப்பது உதவும்.

அத் தசைநார்களுக்கான சில பயிற்சிகளும் உதவும். இவை பற்றி முன்னர் வீரகேசரியில் வெளிவந்த ஒரு கட்டுரையில் சொல்லியுள்ளேன். ஏற்கனவே

பத்திரிகையில் படிக்காவர்கள் எனது ஹாய் நலமா புளக்கில் காணலாம்.

வலி நிவாரணி மாத்திரைகளும் அழற்சியைத் தணிப்பதன் மூலம் நோயையும் வலியையும் குறைக்கும்.

மிகப் பெரும்பாலனவர்களுக்கு மேற் கூறிய சிசிக்சைகள் மூலம் வலி தணிந்துவிடும்.

மிக அரிதாக குதிக்கால் சவ்வினது இறுகத்தைத் தளர்த்துவதற்கு சிறிய சத்திரசிகிச்சை செய்யப்படுவதுண்டு.

ஆரம்பத்தில் நோயாளி கேட்டது போல துருத்தி வளரும் எலும்பை வெட்டி எறிவது சிகிச்சையின் ஒரு அம்சம் அல்ல.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.0

Read Full Post »

உள்ளே நுழைந்த அந்த இளம் மாணவியின் முகத்தில் இனம் புரியாத தயக்கம். ‘இருங்கோவன்’ கதிரையை அவளை நோக்கி நகர்த்தினேன். உட்காரவில்லை.

‘இருக்கிறாள் இல்லை வலிக்குதாம்’ என இடைமறித்தாள் அம்மா.

‘எங்கை வலி’ என்று கேட்டதும் அந்தச் சின்னத் தேவதை வெட்கப்பட்டாள். மேலும் பல கேள்விகள் கேட்டதும் அது வால் எலும்பு வலி என்பது எனக்குப் புரிந்தது. அவள் வெட்கப்படுவதில் நியாயம் இருக்கிறதுதான். 

தேவதைக்கு வாலா என அதிசயிக்காதீர்கள். உங்களுக்கும் எனக்கும் உள்ளது அவளுக்கு மட்டும் இல்லாது போகுமா? 

coccyx1

மனிதன் உட்பட மிருகங்களுக்கு (Vertebrates) முள்ளந்தண்டு (முதுகெலும்பு) இருக்கிறது. இது ஒரு எலும்பு அல்ல. பல தனித்தனி எலும்புகளின் சேர்க்கைகளால் ஆனது என்பது உங்களுக்குத் தெரியும்.  கழுத்தில் ஆரம்பித்து முதுகு வழி தொடர்ந்து இடுப்புப் பகுதியையும் கடந்து இறுதியில் முடிவது இந்த வால் எலும்புகளில்தான்.

இவ் எலும்பை ஆங்கிலத்தில் coccyx என்பார்கள். தமிழில் குத எலும்பு, வால் எலும்பு, உள்வால் எலும்பு என்று எப்படி வேண்டுமானலும் சொல்லலாம்.

இவை பொதுவாக எந்த ஈடாட்டமும் இன்றி செயலற்று வாழாதிருப்பவை. எனவே இவற்றில் நோய் ஏற்படுவது குறைவு. ஆயினும் சில தருணங்களில் நோய் ஏற்படவே செய்யும்.

அந்தக் குத எலும்பில்தான் இவளுக்கு வலி. படுக்கையில் கிடத்தி, பிட்டப் (குண்டி) பகுதி தசை மடிப்புகளை விரித்து, மலுவாயிலுக்கு சற்று மேலே உள்ள குத எலும்பின் நுனிப் பகுதியைத் தொட்டபோது கடும் வலி இருப்பது புரிந்தது. அக்கம் பக்கம் உள்ள சருமத்திலோ சதைப் பகுதிகளிவோ வீக்கம் வலி வெப்பம் எதுவுமே இல்லை என்பதை நிச்சயப்படுத்தி வேறு நோய் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

குத எலும்பு அழற்சி

இவ்வாறு குத எலும்பில் வலி ஏற்படுவதை குத எலும்பு அழற்சி (Coccydynia)  எனலாம். ஆயினும் அதன் அருகில் உள்ள ஏனைய பகுதிகளிலும் இதுபோன்ற வேறு வலிகள் ஏற்படலாம் என்பதால் கவனம் எடுக்க வேண்டும். உதாரணமாக மலவாயில் கட்டிகள், மூலக் கட்டிகள், இடுப்பு எலும்பு வலிகள், தசைப் பிடிப்புகள் போன்றவையும் அவ்விடத்தில் வலியைத் தோற்றுவிப்பதுண்டு.

இந்த வலியானது கடுமையானது அல்ல என்றபோதும் ‘அம்மல்’ வலியாகத் தொடரும். அவ்விடத்தை அழுத்தும் போது மிகக் கடுமையாக இருக்கும். திடீரெனக் குண்டி அடிபட உட்கார்ந்தாலோ, துவிச்சக்கர போன்ற அழுத்தும் இருக்கைகளிலும், முச்சக்கர வண்டி போன்ற குலுக்கும் வாகனங்களிலும் பயணம் செய்தாலோ மோசமாகும்.

இந் நோய் ஏன் ஏற்படுகிறது என்பதைத் தெளிவாகச் சொல்வது சிரமம். பொதுவாக அடிபட உட்காரல், விழுதல். பின்புறமாக சுவரோடு மோதுதல் போன்றவை காரணமாக இருக்கலாம்.

இதைக் கண்டறியவோ நோயை உறுதிப்படுத்தவோ பரிசோதனைகள் எதுவும் அவசியமில்லை. நோயாளி சொல்வதைக் கேட்டு மருத்துவர் பரிசோதித்துப் பார்ப்பதன் மூலம் நோய் நிர்ணயம் செய்ய முடியும். அருகில் உள்ள தசைப் பகுதிகளிலோ எலும்புகளிலோ பிரச்சனை இருக்கலாம் எனச் சந்தேகித்தால் மட்டும் CAT Scan, MRI Scan  போன்ற பரிசோதனைகள் அவசியமாகும்.

இந்த வலி வந்தவுடன் மருத்துவரை நாடி ஓட வேண்டிய அவசியமில்லை. அடிப்பகுதி அண்டாதவாறு குஷன் அல்லது துணிகள் வைத்து மென்மையாக்கப்பட்ட இருக்கைகளிலேயே உட்கார வேண்டும்.

நீண்டநேரம் தொடர்ந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும்.

மருத்துவம்

பரசிட்டமோல் அல்லது வீரியம் கூடிய வலி நிவாரணிகள் வலியைத் தணிக்க

உதவும்.

ஆயினும் நரம்புகளை அமைதிப்படுத்தும் மருந்துகள் கூடுதலாகப் பலன் தரலாம்.

ஸ்டீரொயிட் ஊசி மருந்தை அவ்விடத்தில் ஏற்றுவது ஆச்சரியகராமான முறையில் வலியைத் தணிக்கும். வலியைத் தணிப்பது மட்டுமின்றி நோயிலிருந்து பூரண விடுதலையை பெரும்பாலும் கொடுக்கும்.

அனுபவமுள்ள மருத்துவர்கள் இதைத் தங்கள் மருத்துவ ஆலோசனை அறையில் வைத்தே போடக் கூடியதாக இருக்கும்.

சில வகை மசாஸ் முறைகளும் பயிற்சிகளும் உதவலாம்.

வலி கடுமையாகவும் தொடர்ந்து தொல்லை கொடுப்பதகவும், ஏனைய சிகிச்சைகளுக்கு தணிவதாக இல்லை எனில் சத்திரசிகிச்சை செய்யப்படலாம். Coccygectomy எனப்படும் இந்தச் சிகிச்சையில் அந்த குத எலும்பை அகற்றுவார்கள். ஆயினும் அதற்கான தேவை பெரும்பாலும் ஏற்படுவதில்லை.

நீங்கள் செய்யக் கூடியவை

சுடு ஒத்தடம் கொடுப்பது, ஐஸ் வைப்பது போன்றவை உதவக் கூடும். ஆயினும் அந்த இடத்தில் இவற்றைச் செய்வது மிகுந்த இடைஞ்சலானது என்பதை மறுப்பதற்கில்லை.

வலி உள்ள இடம் மீண்டும் தாக்குப்படாதவாறு கவனமாக இருக்க வேண்டும். அதேபோல அவ்விடத்திற்கு ஆறுதல் கொடுப்பது அவசியம்.

ஏற்கனவே குறிப்பட்டதுபோல மெதுமையான இருக்கைகளில் உட்கார வேண்டும். மெத்தை, தலையணை, குஷன் போன்றவற்றை இருக்கையில் வைத்து அதன் மேல் உட்கார வேண்டும். உட்காரும்போதும் திடீரென அடிபட உட்காராது, மெதுவாக கைபிடிகளைப் பிடித்து பாரம் அடியில் தாக்காதவாறு மென்மையாக உட்கார வேண்டும்.

Coccyx_cushion_L

நடுப்பகுதியில் குழி வைத்து அப்பகுதி அண்டாதவாறு உட்காரக் கூடிய கார் டியூப் போன்ற இருக்கைகள் கிடைக்கின்றன. முதலில் கூறிய அந்தக் குட்டித் தேவதை அத்தகைய ஒரு இருக்கையைப் பயன்படுத்தி கொழும்பிலிருந்து கதிர்காமம் வரை நலமே சுற்றுப் பிரயாணம் செய்ய முடிந்திருந்தது.

எலும்பு உள்ள இடத்தில் அண்டாதவாறு பள்ளம் விடப்பட்ட குஷன்கள் (Coccyx (tailbone) cushions)  விற்பனைக்கு கிடைக்கிறதாக அறிகிறேன். இலங்கையில் இருப்பதை நான் அறியவில்லை.

Coccyx-Cushion-Tailbone-Cushion-

இடுப்பு எலும்புப் பகுதியில் உள்ள தசைககளைத் தளரச் செய்யும் பயிற்சிகள் (pelvic floor relaxation) கொடுப்பது உதவும். ஆழமாக மூச்சு எடுத்து மலவாயில் சலவாயில் ஆகியவற்றை அண்டியுள்ள தசைகளை தளரச் செய்வது இதுவாகும். பொதுவாக சிறுநீர் கழியும் போது இவ்வாறு தசைகள் தளர்வதுண்டு.

பொதுவாக மனதை அலட்டிக் கொள்ளாது மேற் கூறிய வாழ்க்கை முறைகளையும் பயிற்சிகளையும் செய்ய நோய் குணமாகும். இப் பெண்ணிற்கு அவற்றால் வலி தணியாததால் ஊசி ஏற்றிக் குணமாக்க வேண்டியதாயிற்று.

எனது ஹாய் நலமா புளக்கில் (05.05.2014) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0

Read Full Post »

“சீனி சாப்பிடாவிட்டால் நீரிழிவு வருத்தம் வராதுதானே”. நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒருவர் மனைவிக்கு அளித்த விளக்கம் அது.

“தாய் தகப்பனுக்கு இருந்தால்தான்; பிள்ளைகளுக்கும் வரும்.” என்றார் மற்றொருவர்.

நீரிழிவைத் தடுப்பதற்கான வழிமுறைகளாக ஒவ்வொருவரும் தாம் நினைத்ததை எல்லாம் சொல்கிறார்கள்.

ஆனால் சீனி சாப்பிடாவிட்டாலும் வருகிறது. பரம்பரையில் இல்லாவிட்டாலும் வருகிறது. அப்படியானால் தடுப்பது எப்படி?

  • போஸாக்குள்ள உணவாக உட்கொள்ளல். ஆனால் இது சீனியைத் தவிர்ப்பது என்று அர்த்தம் அல்ல.
  • தினசரி உடற்பயிற்சி செய்தல் அல்லது உடல் உழைப்பில் ஈடுபடுதல்.
  • உடல் எடையை சரியான அளவில் பேணுதல்.

diabetes_prevention_email1

 

எனச் சுருக்கமாகச் சொல்லலாம்.

போசாக்கு உணவு

போசாக்குள்ள உணவு என்பது என்ன? இனிப்பு, எண்ணெய், நொறுக்குத் தீனி போன்றவற்றை மிகக் குறைவாக உண்ணல். மாப்பொருள் உணவை அளவோடு உண்ணல், புரத உணவுகளை தேவையான அளவில் உண்ணல், காய்கறி மற்றும் பழவகைகளை அதிகம் உண்ணல் எனச் சொல்லலாம்.

c2145cc1470dee71884889094b26a6e7

 

தினமும் ஒவ்வொரு பங்கும் 80 கிராம் நிறையுள்ளதாக 5 பங்கு அளவில் காய்கறிகளையும் பழவகைகளையும் உணவில் சேர்க்க வேண்டும் என்பது பொதுவாக ஏற்கப்பட்ட கருத்தாகும்.

எத்தகைய காய்கறி உணவுகள் நீரிழிவு வராமல் தடுக்க உதவும் என்பது அடுத்த கேள்வியாக இருக்கும்.

மாப்பொருள் குறைந்த அளவுள்ள காய்கறிகள் நல்லது. கிழங்கு வகைகளில் மாப்பொருள் உள்ளதாயினும் அவற்றில் நார்பொருளும் நீர்ச்சத்தும் அதிகம் இருப்பதால் அளவோடு உண்பதில் தவறில்லை. ஏனைய காய்களிகளில் மாப்பொருள் குறைவாகவும், நார்ப்பொருள் அதிகமாகவும் உள்ளதால் நல்லது.

இலைவகைகள் மேலும் சிறந்தவை என்கிறார்கள்.

நீரிழிவைத் தடுக்கும்

பச்சை நிறமான இலைவகைகள் அதிகளவு உட்கொள்ளும் உணவு முறையானது நீரிழிவு ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கிறது என University of Leicester  யைச் சார்ந்த Patrice Carter தலைமையிலான ஒரு ஆய்வு கூறியது. ஆறு ஆய்வுகளின் முடிவுகளை மீள்பரிசோதனை செய்த போது இது தெரிய வந்ததாம்.

ஏனைய காய்கறிகள் உண்பவர்களை விட அதிகளவு பச்சை நிறமான இலைவகைகளை உண்பவர்களுக்கு மட்டுமே நீரிழிவு வருவதற்கான சாத்தியம் 14 சதவிகிதம் குறைவு அது கூறியது. இது 13 வருடங்களாக 223,000 பேரிடையே செய்த அவதானிப்பின் முடிவு.

ஆனால் ஏனைய வகை காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் உண்பவர்களிடேயே இந்தச் நீரிழிவுக்கு எதிரான சாதகமான பலன் கிடைப்பதாகத் தெரியவில்லை.

green-leafy-vegetables

இதன் அர்த்தம் ஏனைய வகை காய்கறிகள் பழங்கள் பயனற்றவை என்பது அல்ல. ஏனைய பல ஆராச்சி முடிவுகள் எல்லாப் பழவகைகளும், காய்கறிகளும் நீரிழிவைத் தடுப்பதில் பங்களிப்பதுடன், இருதயநோய்களுக்கான சாத்தியத்தையும் குறைப்பதாகக் கூறுகின்றன. ஆயினும் இலைவகை உணவுகளின் பங்களிப்பு அதிகம் என்பது இப்பொழுது தெரியவந்துள்ளது.

இலைவகை உணவுகளின் நற்பயனுக்குக் காரணம் என்ன?

ஒட்சிசனெதிரிகள் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பசுமையான பச்சை இலைகளில் பீற்றாகரோட்டின், பொலிபீனோல்ஸ், விட்டமின் சீ போன்ற ஒட்சிசனெதிரிகள் மற்றும் மக்னீசியம் போன்ற தாதுப்பொருட்களும் தாராளமாக இருப்பதே காரணம் எனலாம்.

பசிய இலை வகை உணவுகளின் போசாக்கு

DSC05663-001

  • இலைவகைகள் மிகக் குறைந்தளவு கலோரிப் பெறுமானம் உள்ள உணவுகளாகும். அவற்றிலுள்ள மாப்பொருள்களானது நார்ப்பொருள்களிடையே அடைபட்டு இருப்பதால் எளிதில் சமிபாடடைவதில்லை. இதனால் நீரிழிவு நோயாளர்களின் இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதைக் குறைக்கினறன.
  • இரும்பு, கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற கனியங்கள் உண்டு.
  • விட்டமின் D வகைகளுடன், விட்டமின்கள் K, C, E  ஆகியவை நிறையக் கிடைக்கின்றன. ஒரு கப் சமைத்த இலையுணவு ஒரு மனிதனுக்கு தினசரி தேவைப்படும் விட்டமின்கள் K யைவிட 9 மடங்கு அதிகமாகக் கொடுக்கும் எனத் தெரிகிறது.
  • பீட்டாகரோட்டின், லியுடின் (beta-carotene, lutein, and zeaxanthin)  போன்ற பைட்டோநியுரியன்டசை (phytonutrients)     இலைவகை உணவுகள் தருகின்றன. இவை எமது உடற்கலங்கள் சேதமாவதைத் தடுக்கின்றன. வயது அதிகரிப்பால் ஏற்படும் பார்வை இழப்பை (Age related macular degemeration) தடுப்பதிலும் இவை உதவுகின்றன.
  • கொலஸ்டரோல் குறைப்பு, இருதய நோயிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றிற்காக இப்பொழுது ஒமேகா 3 (Omeg 3 Fat) என்ற கொழுப்பை பலரும் பயன்படுத்துகிறார்கள். இது பெருமளவு ஆழ்கடல் மீன்களிலிருந்தே பெறப்படுகின்றது. ஆயினும் தாவர இலை உணவுகளிலும் இது சிறிதளவு காணப்படுகிறது.

விற்றமின் கே யின் நன்மைகள்

பசுமை நிறமான இலை வகைகளில் விற்றமின் K அதிகம் என்றோம். அதன் பலாபலனகள்; என்ன?

  • குருதி உறைதலைக் கட்டுப்படுத்துகின்றது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கு குருதி உறைதல் முக்கிய காரணமாகும். மருத்தவ ரீதியாக இதைத் தடுப்பதற்கே குறைந்த அளவு அஸ்பிரின் (75-100mg) மற்றும் குளபிடோகிரில் போன்ற மருந்துகளை நீண்ட கால அடிப்படையில் கொடுக்கிறார்கள். தாவர இலை உணவுகளில் உள்ள விற்றமின் கே இயற்கையான பாதுகாப்பைக் கொடுக்கும்.
  • விற்றமின் கே ஒஸ்டியோபொரோசிஸ் நோயிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. இன்று வயதான பலரும் முக்கியமாக பெண்கள் இதனால் பாதிக்கப்படுவது தெரிந்ததே. தாவர இலை உணவுகளை தினமும் உபயோகித்து வந்தால் ஒஸ்டியோபொரோசிஸ் வருவதிலிருந்தும்  பாதுகாப்பு கிடைக்கும்.
  • நீரிழிவு ஏற்படாமல் தடுக்கவும் உதவும்.
  • அழற்சியைத் தடுக்கும் குணம் விற்றமின் கே க்கு இருப்பதால் மூட்டு நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
  • இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதை தடுக்கும் ஆற்றலும் விற்றமின் கே க்கு உண்டு.

எனவே நீரிழிவைத் தடுப்பதற்காக மட்டுமின்றி மேற் கூறிய பல பலன்களும் கிட்டும் என்பதால் தினமும் உணவில் பசிய இலை உணவைச் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0

Read Full Post »