Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for பிப்ரவரி, 2015

சாப்பிட்ட பின்னர் பசித்தல்

உணவின் பின்னான குருதிச் சீனி மட்டம் குறைதல்

“எனக்கு அடிக்கடி பசிக்கிறது” என்று யாராவது சொன்னால் ‘அடங்காப் பசியன்’, பீமன் பரம்பரையில் வந்தவன்’, ‘சாப்பாட்டுக் கிலி பிடிச்சவன்’ என்றெல்லாம் நக்கல் அடிக்கவே தோன்றும்.

food-sandwich

மாடு இரை மீட்பது போல எந்த நேரமும் எதையாவது வாயில் போட்டு அரைத்துக் கொண்டிருந்தால்தான் அவர்களுக்கு மனசும் வயிறும் அடங்கும்.

“சாப்பிட்டு இரண்டு மூன்று மணித்தியாலயம் போனதும் எப்ப பார்த்தாலும் மீண்டும் பசி எடுக்கிறது” என்று யாராவது சொன்னால் அதை பொய்க் கதை என நினைக்காதீர்கள். அதில் ஏதாவது உண்மை இருக்கலாம்.

பொதுவாக நாம் காலை மதியம் இரவு என்று மூன்று நேர உணவு எடுக்கிறோம். சிலர் இடைநேரச் சிற்றுண்டிகள் எடுப்பதுண்டு. சாப்பிட்டால் வயிறு நிறையும். நீண்ட நேரம் பசிக்காது. குறைவாகச் சாப்பிட்டிருந்தால் கொஞ்ச நேரத்தில் மீண்டும் பசிக்கலாம்.

ஆனால் அவர்களுக்கு அப்படியல்ல. சாப்பிட்ட பின்னர் ஒவ்வொரு நாளும் எந்த நேரமும் பசிக்கிறது. அதற்கு அடிப்படைக் காரணம் என்ன? மனம்தான் என வெறுமனே சொல்லிவிட முடியாது. வேறு காரணங்களும் இருக்கக் கூடும்.

அத்தகையவர்களது இரத்தத் சீனி அளவை அத்தகைய பசி நேரத்தில் கணித்துப் பார்த்தால் அவர்களில் சிலரது இரத்தச் சீனியின் அளவு குறைந்திருக்கக் காணப்படலாம். பொதுவாக உணவு உண்ட பின் குருதிச் சீனியின் அளவு அதிகரிக்கும். ஆனால் இவர்களுக்கு உணவின் பின் குருதிச் சீனியின் அளவு குறைந்திருந்தது. ஆச்சரியமாக இருக்கிறதா?

குருதி சீனியின் அளவு குறைதல் (hypoglycemia)

பொதுவாக காலையில் வெறும் வயிற்றில் எடுக்கும் குருதிச் சீனியன் அளவு 80 லிருந்து 110 ற்குள் இருக்கும். சாப்பிட்ட பின்னர் இது 140 முதல் 180 வரை அதிகரிக்கலாம். அது 70 ற்குக் கீழ் குறைந்தால் குருதிச் சீனி குறைதல் (hypoglycemia)  என்பார்கள். ஆனால் பொதுவாக குருதிச் சீனியின் அளவு தானாக வழமையை விடக் குறைவதில்லை. இதற்குக் காரணம் எமது உடலானது உடலின் கொழுப்புக் கலங்களிலும் ஈரலிலும் சேமித்து வைத்திருக்கும் கொழுப்புகளைக் கரைத்து குருதிச் சீனியின் அளவை சரியான அளவில் பேணும் வல்லமை கொண்டது என்பதாலாகும்.

Low-Blood-Sugar-Symptoms

ஆனால் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பிரிவினருக்கு சாப்பிடடு 2 முதல் மணித்தியாலயத்தின் பின்னர் அது 70 முதல் 100 ஆகக் குறைந்திருக்கும். இதனை(Reactive hypoglycemia)  என மருத்துவத்தில் அழைப்பார்கள். உணவிற்கு எதிர்வினையாக குருதிச் சீனி குறைகிறது. இது நீரிழிவு அற்றவர்களுக்கு ஆகும்.

how2

இதைத் தவிர ஆகாரம் எடுக்காத நேரத்தில் காலையில் சிலரது சீனியின் அளவு மேற் கூறிய அளவுகளுக்குக் குறையக் கூடும். அதை மருத்துவத்தில் (Fasting hypoglycemia)  என்பார்கள். பன்கிரியாஸ் சுரப்பியில் கட்டிகள், ஈரல் நோய்கள் போன்றவை அத்தகைய நிலையை ஏற்படுத்தக் கூடும். சில சத்திர சிகிச்சைகளின் பின்னரும் சில மருந்துகளாலும் கூட இவ்வாறு வெறும் வயிற்று சீனியின் அளவு குறைவதுண்டு.

நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு சீனியின் அளவு குறைவது முற்றிலும் வேறு விடயமாகும். நீரிழிவற்கான மாத்திரைகளை அல்லது ஊசி போடும் போது உணவுகளை சரியான நேரத்தில் எடுக்காததாலும், விரதம் உபவாசம் இருப்பதாலும் குருதிச் சீனியின் அளவு குறைகிறது. அதைவிட மருத்துவ ஆலோசனையின்றி மருந்துகளை மாற்றுவதும், அவற்றின் அளவுளை மாற்றுவதும் அளவு மீறிப் போடுவதும் நீpரிழிவு நோயாளரின் குருதிச் சீனி அளவு குறையக் காரணமாகின்றன.

அறிகுறிகள் எவை?

குருதியில் சீனியின் அளவு குறையும் போது வெளிப்படும் அறிகுறிகள் எவை. வழமையாக சீனியின் அளவு குருதியில் குறையும் போது தோன்றும் அறிகுறிகளை ஒத்ததே இவையும். முக்கியமான அறிகுறி பசிதான். அதாவது இங்கு சாப்பிட்ட பின் ஏற்படும் பசியாகும். அத்துடன் உடல் பலவீனமாக இருப்பதாக உணர்வர். உடற் பதற்றம், வியர்வை, தலைப்பாரம், தூக்கத் தியக்கம், தலைச்சுற்று, தலையிடி, மனப்பதற்றம், மனக் குழப்பம், எரிச்சலுறுதல், பார்வை மங்கல், உங்ளங் கை கால்கள் குளிர்தல், ஓங்காளம், சத்தி போன்ற அறிகுறிகளில் சில ஏற்படலாம்.

ஆனால் மேற் கூறிய அறிகுறிகள் குருதியில் சீனி குறைவதால் மட்டுமின்றி வேறு காரணங்களாலும் ஏற்படலாம் என்பது உண்மையே. மனச்சஞ்சலம் கவலை உணவு ஒவ்வாமை உணவு நேரங்களில் மாற்றம் போன்றவையும் காரணமாகலாம்.

எனவே அறிகுறிகளை வைத்துக் கொண்டு இது உணவு எதிர்வினையால் ஏற்படும் குருதிச்சீனி குறைவடைதல் என்ற சுய முடிவிற்கு வரக் கூடாது. மருத்துவரைக் காண வேண்டும்.

ஒருவரது அறிகுறிகளை மருத்துவர் நன்கு பகுத்து ஆராய்வார். பின்னர் அத்தகைய அறிகுறிகள் ஏற்படும் வேளையில் குருதியில் சீனியின் அளவைக் கணிப்பார்கள். அது குறைவாக இருப்பது நிச்சயமானால் மீண்டும் ஆகாரம் எடுத்தவுடன் அத்தகைய அறிகுறிகள் மறைந்து சீனியின் அளவு அதிகரிக்கிறதா என அவதானிப்பார்கள். இவற்றின் பின்னர்தான் அது Reactive hypoglycemia  என்பதை நிச்சயமாகக் கூறமுடியும்.

மருத்துவமும் உணவு முறையும்

பெரும்பாலும் மருத்துவம் எதுவும் தேவைப்படாது.

உணவு முறைகளிலும் அவற்றை உட்கொள்ளும் நேரங்களிலும் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்வது மட்டும் போதுமானது.

வி ரைவில் சமிபாடடையக் கூடிய இனிப்பு மற்றும் மாப்பண்ட உணவுகள் உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். அத்தகைய உணவுகள் விரைவாக உணவுக் கால்வாயினால் உறிஞ்சப்படுவதால் திடீரென குருதிச் சீனியின் அளவு அதிகரிக்கும். அவ்வாறு அதிகரித்தததைக் கட்டுப்படுத்துவதற்காக மேலதிக இன்சுலின் சுரக்கும். இது திடீரென குருதிச் சீனியின் அளவைக் குறைத்து பசியையும் ஏனைய அறிகுறிகளையும் தோற்றுவிக்கும்.

கேக் புடிங், குக்கீஸ், ஐஸ்கிறீம், மென்பானங்கள், சினியும் சீனி சேர்த்த உணவுகளும், ஜெலி, ஜாம், இனிப்புட்டப்பட்ட பழச் சாறுகள், தேன், சொக்கிளட், சீனி சேர்த்த தேநீர், கோப்பி போன்றைவை அத்தகையவையாகும். இவற்றை உட்கொள்வதில் நாட்டமிருந்தால் நார்ப்பொருள் அதிகமுள்ள காய்கறிகள் பழவகைகளுடன் கலந்து குறைந்த அளவை மட்டும் உட்கொண்டால் பாதிப்பு குறைவாக இருக்கும்.

இனிப்புள்ள உணவுகளைக் குறைப்பது மட்டுமின்றி அவற்றை வெறு வயிற்றில் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

பொதுவாக சமபல வலுவுள்ள உணவுகளை உண்ண வேண்டும். கொழுப்பற்ற இறைச்சிகளை தேர்ந்தெடுங்கள். பருப்பு பயறு கடலை சோயா போன்ற தாவரப் புரதங்களை அதிகளவு சேருங்கள். காய்கறி வகைகளையும் பழவகைகளையும் கூடியளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.

மதுபானம் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மதுபானமும் குருதியில் சீனியின் அளவை குறைப்பதுண்டு. முக்கியமான உணவின்றி வெறும் வயிற்றில் அருந்தினால் விளைவு மோசமாக இருக்கும்.

மாப் பொருள் அதிகமுள்ள உணவுகளான சோறு பாண், நூடில்ஸ், ரொட்டி அப்பம் போன்றவற்றை அதிகளவில் ஒரே நேரத்தில் உண்ணும் போதும் அவ்வாறு சீனி அளவுகளில் மாற்றம் ஏற்படும். 

எனவே இப் பிரச்சனை உள்ளவர்கள் நாள் ஒன்றிற்கு இரண்டு அல்லது மூன்று முறை உணவு உண்பதைத் தவிர்த்து,  4 அல்லது 5 மணி நேர இடைவெளிகளில் சிறிய சிறிய உணவுகளாக எடுப்பது நல்லது.

கொழுப்பு உணவுகளும் வேகமாக ஜீரணமடைவதில்லை. ஆனால் அதிக கொழுப்பு ஆகாது. விதைகள், கொட்டைகள் போன்றவற்றை அளவோடு சேர்ப்பது உணவு வேகமாக சமிபாடடைவதைத் தவிர்க்கும். 

மாப் பொருள் உணவுகள் விரைவில் சீரணமடைந்து குருதிச் சீனி அளவை அதிகரிப்பது போல புரத உணவுகள் அதிகரிப்பதில்லை. எனவே பிரதான உணவுகளுடன் மீன் முட்டை, கொழுப்பு குறைந்த இறைச்சி, பயற்றின உணவுகளையும் கலந்து சாப்பிட வேண்டும்.

உணவின் பின் குருதிச் சீனி மட்டம் குறைபவர்கள் இது போன்ற உணவு முறைகளைக் கைக் கொள்வது நல்லது. 

ஆரோக்கியமான இந்த உணவு முறைகள் ஏனையவர்களுக்கும் நல்லதே.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

00.0.0.00

Read Full Post »

கொலஸ்டரோல் பிரச்சனை என்று அறிந்தாலே எதைச் சாப்பிடுவது எதைக் கைவிடுவது என்ற சந்தேகம் எவருக்கும் கிளம்பிவிடும்.

high-cholesterol-in-seniors

 

உங்களுக்கா, உங்கள் கணவனுக்கா, அம்மா அப்பாவிற்கா? யாருக்கு கொலஸ்டரோல் பிரச்சனை இருக்கிறது?

கொலஸ்டரோல் உணவு முறையில் உங்களுக்குள்ள சந்தேகங்கள் என்ன?

ஆனால் அவருக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது. எண்ணையைத் தொடக் கூடாது என்பது மட்டுமே அவருக்கு தெரிந்த ஒரே விடயம்.

 • பொரியல், வதக்கல், எதுவுமே கூடாது. வடை, ரோல்ஸ் எதுவும் ஆகாது.
 • தேங்காயில் எண்ணெய் இருக்கிறது என்றபடியால் சம்பல், சொதி, குழம்பு எதுவும் கூடாது.
 • மனைவிக்கு கடும் சட்டம் இட்டார். சட்டம் தொடர்ந்ததில் மனைவியின் எடை குறைந்து எலும்பு தேய்ந்து இடுப்பு உடைந்தது.
 • ஒல்லிக்குச்சியாக மாறிவிட்ட மகனை அவனது காதலி “இவன் அந்த விடயங்களுக்கும் தோதுப்படாது” என்று எண்ணி வேறு ஒருவனை மணந்து கொண்டாள்.

மற்றொருவர் பிரச்சனையை வேறு விதமாகக் கையாண்டார்.

மருத்துவரிடம் போனால்தானே கொலஸ்டரோல் கூடிப்போச்சு அதைக் கைவிடு இதைக் கைவிடு, என்று தன்வாயை அடக்கிவிடுவார் என்பதால் மருத்துவரிடம் போவதையே கைவிட்டுவிட்டார். திடீரென ஏற்பட்ட ஹார்ட் அட்டக்கில் மருத்துவமனையில் அனுமதிக்க நேர்ந்தது.

கொலஸ்டரோலும் உணவு முறைகளும் பற்றிய உங்கள் சில கேள்விகளுக்கான விடைகள் தொடர்கிறது.

கொலஸ்டரோல் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணை கொழுப்பு வகைகளை அடியோடு தவிர்க்க வேண்டுமா?

நிச்சயமாக இல்லை. ஆரோக்கியமான உணவுமுறையில் எண்ணெய் கொழுப்பு வகைகளும் அவசியமானதே. எமது நாளாந்த சக்தி (கலோரி) தேவையில் 30 சதகிவிதமானதை அவற்றிலிருந்தே பெற வேண்டும்.

அமெரிக்கர்கள் பொதுவாக தங்கள் நாளாந்த கலோரி தேவையில் 40 சதகிவிகிதமானதை கொழுப்பு உணவுகளிலிருந்து பெறுகின்றார்கள். அதே நேரம் இலங்கையர்களான நாம் 25 சதகிவிகிதத்தை மட்டுமே பெறுகின்றோம் என்பது நல்ல விடயம். எனவே இலங்கையர்களின் உணவுமுறை பொதுவாக நல்லது எனலாமா? இல்லை. குறைவாவக உண்டாலும் தவறான கொழுப்புகளை உபயோகிப்பதே நாம் செய்யும் பெரும் தவறு ஆகும்.

getty_rf_photo_of_fish_oil_capsule

எனவே உணவில் கொழுப்பு உணவுகளை முற்று முழதாக நிறுத்தாமல் கட்டாயம் ஓரளவு சேர்த்துக் கொள்வதே நல்லது. ஆனால் அதுவும் நல்ல வகையான கொழுப்புகளாக இருக்க வேண்டும்.

உணவில் எண்ணையைக் குறைப்பதால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா. 

ஏற்கனவே குறிப்பிட்டது போல சரியான அளவுகளில் உபயோகிக்கும் போது பிரச்சனை ஏற்படாது. கொழுப்பு ஓரளவு சேராவிட்டால் கொழுப்பில் கரையும் விற்றமின்களை உடல் உள்ளுறுஞ்சுவதில் பிரச்சனை ஏற்பதுவதும் உண்டு. அது மாத்திரமல்ல அதிகமாக குறைக்கும் போது உணவின் சுவை குறைந்துவிடலாம். இதைச் சரிசெய்ய சிலர் தம்மை அறியாமலே கூடியளவு இனிப்புகளையும், மாச்சத்துகளையும் உணவில் சேரத்துவிடுவார்கள். இது நீரிழிவு எடை அதிகரிப்பு போன்ற வேண்டாத விளைவுகளைக் கொண்டுவரலாம்.

வீட்டு உணவுகளில் மட்டுமின்றி கொழுப்பு குறைந்ததாகச் சொல்லி அமோக விலைகளில் விற்கப்படும் பைக்கற்றில் கிடைக்கும் உணவுகளிலும் அவ்வாறே மாச்சத்தும் இனிப்பும் அதிகமாக இருக்கக் கூடும். எனவே அவற்றின் லேபளில் கொழுப்பு எவ்வளவு என்பதை மட்டுமின்றி அதிலுள்ள கலோரி வலுவையும் அவதானிக்க வேண்டும்.

எண்ணை வகைகளில் எவ்வளவு கொலஸ்டரோல் இருக்கிறது.

எந்த தாவர எண்ணெயிலும் கொலஸ்டரோல் இல்லை. ஆனால் அதிக எண்ணெய் உணவுகளை உண்ணும்போது அவை உடலில் கொலஸ்டரோலாக மாறுகிறது.

அவ்வாறாயின் உணவுகளில் கொலஸ்டரோல் இல்லையா?

எல்லா மாமிச உணவுகளிலும் இருக்கிறது. முட்டையில் அதிகம் இருக்கிறது இறால், கணவாய் ஆகியவற்றில் அதிகம் இருக்கிறது. மிருகங்களின் ஈரல், மூளை, சிறுநீரகம் போன்றவற்றலும் அதிகம் உண்டு. பாலிலும் இருக்கிறது. உண்மையில் ஒவ்வொரு முட்டையிலும் 300 மிகி கொலஸ்டரோல் இருக்கிறது.

2937573_f520

எமது உடலுக்கான தினசரி கொலஸ்டரோல் தேவை அதே 300 மிகி மாத்திரமே. ஆனால் இருதய நோயுள்ளவர்களுக்கு 300 மிகி க்கு மேற்படக் கூடாது. முட்டையில் கொலஸ்டரோல் அதிகமாக இருப்பதால்தான் பலரும் முட்டை சாப்பிடத் தயங்குகிறார்கள்.

ஆனால் எமது குருதிக் கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கு உணவில் உள்ள கொலஸ்டரோல் முக்கிய காரணமல்ல. எமது உடலே தனக்குத் தேவையானதை உற்பத்தி செய்து கொள்கிறது. ஆரோக்கியமற்ற கொழுப்பு அதிகமுள்ள உணவு முறைகளும், உடற் பயிற்சி இன்மையும், பரம்பரையில் கொலஸ்டரோல் இருப்பதும் ஒருவரது குருதி கொலஸ்டரோலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அவ்வாறாயின் ஒருவர் தினசரி ஒவ்வொரு முட்டை உண்ணலாமா?

கொலஸ்டரோல் மற்றும் இருதய நோய் பிரச்சனை இல்லாதவர்கள்  தினமும் ஒவ்வொரு முட்டை உண்பதில் தவறில்லை. ஆனால் அத்தகைய பிரச்சனை உள்ளவர்கள் வாரத்திற்கு முன்று முட்டைகள் உட்கொள்வதில் பிரச்சனை இல்லை. ஆனால் முட்டையை எவ்வாறு உண்பது என்பதும் முக்கியம். தினமும் முட்டையை பொரித்துச் சாப்பிட்டால் எண்ணெய் காரணமாக கொலஸ்டரோல் அதிகரிக்கும். அவித்துக் கறிசமைத்து உண்பதே விரும்பத்திக்கது.

எண்ணை வகைகளில் எந்த எண்ணெய் நல்லது?

உண்மையில் எந்த எண்ணை ஆயினும் அவற்றில் கலோரிச் சத்து அதிகமாகவே இருக்கிறது. எனவே எந்த எண்ணை என்றாலும் அதை அதிகமாக உட்கொள்ளக் கூடாது. ஏற்கனவே சொல்லப்பட்டது போன்று 30 சதவிகித கலோரிச் சத்து பெறும் அளவிற்கு மட்டும் உட்கொள்ள வேண்டும்.

பொதுவாக நிரம்பாத கொழுப்பு அமிலங்களைக் கொண்ட ஒலிவ் ஓயில், கனோலா எண்ணெய், சூரியகாந்தி, சோளம், நல்வெண்ணெய் போன்றவை நல்லவை எனப்படுகிறது. தேங்காய் எண்ணெய், பாம் எண்ணெய் போன்றவை நிரம்பிய கொழுப்பைக் கொண்டவை என்பதால் நல்லதல்ல என்பார்கள்.

இருந்தபோதும் தேங்காண் எண்ணெயில் உள்ள கொழுப்பு short chain fatty acid  என்பதால் நல்லது என்ற கருத்தும் உள்ளது.

பொரிப்பதற்கு ஏற்ற எண்ணெய் எது

சாதாரண வெப்ப நிலையில் நல்லது என்று சொல்லப்படும் ஒலிவ் ஓயில், கனோலா எண்ணெய், சூரியகாந்தி, சோளம் போன்றவை சூடாக்கும்போது ஆரோக்கியமற்றதாக மாறிவிடுகிறது. எனவே அவை பொரிப்பதற்கு ஏற்றவை அல்ல. ஒரு முறை பொரிக்க உபயோகித்த எண்ணெயில் மீண்டும் பொரிப்பதால் தோன்றும் நச்சுப்பொருட்கள் இருதயக் குழாய்களில் கொழுப்பு படிவதை அதிகமாக்குகிறது. எனவே ஒரு முறை சூடாக்கிய அத்தகைய எண்ணெய்களை வீசிவிட வேண்டும்.

ஆனால் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் ஆகியன பொரிப்பதற்கு ஏற்றது. ஒரு முறை பாவித்ததை மீண்டும் பொரிப்பதற்கு பாவித்தாலும் அதனால் பாதிப்பு அதிகம் இல்லை.

ஓலிவ் ஓயில் ஏன் நல்லது என்கிறார்கள்?

அதில் அதிகளவு monunsaturated fat  இருப்பதால் நல்லது. அத்துடன் அதில் உள்ள பீனோல் வகைகள் கெட்ட கொல்ஸ்டரோலால் ஒட்சியேற்றப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கின்றன. இப்பொழுது virgin olive oil, extra virgin olive oil என்றெல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை பதப்படுத்தப்படாதவை என்பதால் நச்சுப் பொருட்கள் இல்லை.

அரிசித் தவிட்டு எண்ணெய் (Rice bran oil)  என இணையத்திலும் வெளிநாட்டு பத்திரிகைகளிலும் பேசுகிறார்களே. அவை நல்லவையா?

இதில் பல வகை கொழுப்புகளும்(Monunsaturated, Polyunsaturated, Saturated)  சரியான விகிதாசாரத்தில் கலந்திருப்பதால் நல்லது என்கிறார்கள். அத்துடன் இயற்கையான விற்றமின் ஈ, அன்ரி ஒக்கிசிடன்ட்ஸ், பைரோஸ்டெரோல் போன்றவை அதிகம் இருப்பதால் நல்லது. நல்ல கொலஸ்டரோலான HDL லை அதிகரித்து கெட்ட கொலஸ்டரோல்களான ரைகிளிசரைட், LDL ஆகியவற்றைக் குறைக்கும் ஆற்றல் இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இலங்கையில் கிடைப்பதாகத் தெரியவில்லை.

கொலஸ்டரோல் உள்ளவர்களுக்கு மீன் நல்லது என்கிறார்களே?

உண்மைதான். அதில் ஒமேகா 3, 6 ஆகியன இருப்பதால் நல்லது. ஏனெனில் இவை இரத்தக் குழாய்களில் அழற்சியைக் குறைத்து, கொழுப்பு படிவதைத் தடுக்க உதவுகின்றன. இதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்றை ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறைகிறது. வாரத்தில் இரண்டு நாட்களுக்காவது 3 முதல் 5 அவுன்ஸ் அளவிற்கு குறையாத மீன் சாப்பிடுவது அவசியம் என அமெரிக்க இருதய சங்கம் கூறியுள்ளது. இருதய நோய் உள்ளவர்கள் மேலும் அதிகமாக உண்ண வேண்டும்.

ஒமேகா 3, 6 ஆகியன இருதய நோய்களைத் தடுப்பதுடன், கொலஸ்டரோல் அளவுகளை நல்ல நிலையில் பேணுவது, நினைவாற்றலை அதிகரிப்பது, ஈரலில் கொழுப்பு படிவதைத் தடுப்பது ஆகிய நல்ல பயன்களைக் கொடுப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

ஒமேகா 3, 6 ஆகியன மாத்திரைகளாகவும் கிடைக்கின்றன. ஆயினும் நேரடியாக மீன் சாப்பிடுவது போல அவை உதவுவதில்லை. 

மீன் சாப்பிடாதவர்கள் ஒமேகா 3, 6 ஆகியவற்றை எவ்வாறு பெறுவது. 

நல்லெண்ணெயில் 55 சதவிகிதம் ஒமேகா 3 இருக்கிறது. கனலா ஓயில், சோயா ஓயில் ஆகியவற்றிலும் இவை ஓரளவு கிடைக்கின்றன. எனவே அவற்றை உண்ணலாம். ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை உள்ளது புதிய ஆய்வுகள் ஒமேகா 6, 3 ஆகியவற்றை உட்கொள்வது மட்டும் முக்கியமல்ல. அவை எந்தளவு விகிதாசாரத்தில் உணவில் கலந்துள்ளன என்பதும் முக்கியம் என்கிறார்கள்.  இரண்டிற்கு ஒன்று (2:1) சதவிகிதத்தில் இருந்தால்தான் முழுப் பலன் கிடைக்கும் எனத் தெரிகிறது. இந்த விகிதாசாரம் மீனீலேயே கிடைக்கிறது.

இவை உங்கள் மனத்திலிருந்த சில சந்தேகங்கள் மட்டுமே. இதைப் போன்ற இன்னும் பல கேள்விகள் உங்களிடம் இருக்கக் கூடும். இருந்தால் மற்றொரு முறை பதில் தருவோம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
M.B.B.S(Cey), D.F.M(SL), F.C.G.P(SL)
குடும்ப வைத்திய நிபுணர்

0.0.0.0

Read Full Post »

கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது. ஆனால், இருவருமே வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். அது என்ன பிரச்சினை? ‘ என ஒரு விடுகதை போட்டால் உங்களால் அவிழ்க்க முடியுமா ?

விந்து முந்துதல்.

விந்து முந்துதலை ஆங்கிலத்தில் Premature ejaculation என்பார்கள். இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும்.

பத்து ஆண்களில் ஒருவர் என்ற விகிதத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. உறவின் போது பெண் உணர்வின் உச்ச கட்டத்தை எய்துவதற்கு முன்னரே ஆணுக்கு உணர்வின் உச்ச கட்டம் எட்டி விந்து வெளியேறிவிடுவதைத்தான் விந்து முந்துதல் என்கிறோம்.

இது ஆண்மைக் குறைபாட்டினால் ஏற்படுவதல்ல. இங்கு ஆண் உறுப்பு விறைப்படுவதில் பிரச்சனை இருப்பதில்லை.

பொதுவாக இது இளமைப் பருவத்தில் அதிகம் ஏற்படுகிறது. காலம் செல்லச் செல்ல, வயது முதிர முதிர தங்கள் உணர்வுகளைக் கட்டில் கொண்டுவர ஆண்களால் முடிகிறது. இருந்தபோதும் பல நடுத்தர வயதில் உள்ள ஆண்களையும் இது பாதிப்பதும் உண்மையே.

எந்தளவு நேரத்தில் உச்ச கட்டத்தை அடைவது உசிதமானது என்பதைப் பற்றி சரியான தகவல்கள் இல்லை. இருந்தபோதும்  2006 ல் Congress of the European Society for Sexual Medicine சமர்பிக்கப்பட்ட ஆய்வின் பிரகாரம்  பொதுவாக

 • விந்து முந்துவதாகக் கருதும் ஆண்களுக்கு சராசரியாக 1.8 நிமிடங்களில் வெளியேறியது.
 • சாதாரணம் எனக் கருதும் ஆண்களுக்கு 7.3 நிமிடங்கள் தாக்குப் பிடிக்கத்தக்கதாக இருந்தது.
 • இருந்தபோதும் 25 நிமிடங்கள் வரை எடுத்த சில ஆண்களும் கூட தமக்கு விந்து முந்தி வெளியேறிவிடுவதாகக் கவலைப்பட்டதுண்டு.
 • எனவே இந்தப் பிரச்சனை பற்றி வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு அளவுகோல்கள் இருக்கும் என்பது தெளிவாகிறது.
 • இருந்தபோதும் 2.5 சதவிகிதமான ஆண்களுக்கு பெண் உறுப்பினுள் நுழைந்த பின்னர் 90 செகண்டுகள் கூட தாக்குப் பிடிக்க முடியாதிருந்தது. இவர்களுக்கு நிச்சயம்

இதனால்,

 • தங்கள் ஆண்மையே பாதிப்புக்கு உள்ளாகி விட்டதாகவும்
 • மனைவியைத் திருப்திப்படுத்த முடியவில்லையே எனவும் பல ஆண்கள் மனம் புழுங்குகிறார்கள்.
 • இயலாமையால் ஆற்றாமையால் மனப்பதற்றம், சோர்வு போன்றவற்றுக்கும் ஆளாகிறார்கள்.

அதேநேரம், அவர்கள் மனைவிமாரோ

 • ` இவர் தன்ரை வேலை முடிந்ததும் நடையைக் கட்டி விடுகிறார்.
 • என்னைக் கவனிப்பதில்லை ‘ என மனத்திற்குள் சினம் எழத் தவிக்கிறார்கள்.

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருவருமே துன்புறுகிறார்கள்.

காரணங்கள்

இது ஒரு பரவலான பிரச்சினை ஆன போதும் இதற்கான அடிப்படைக் காரணம் தெளிவாகப் புரியவில்லை. இருப்பினும் உயிரியல் காரணங்களும் மனோவியல் காரணங்களும் இணைந்தே இருப்பதை வைத்தியர்கள் உணர்கிறார்கள். இதனால்தான், இதற்கான சிகிச்சையும் கூட பல் வழிப்பட்டதாகவே அமைகிறது.

 • பதற்றமான சூழ்நிலைகளில் ஆரம்ப காலங்களில் உறவு கொண்டவர்களுக்கு இது கூடுதலாக நடப்பதாக தெரிகிறது. மற்றவர்கள் கண்டு கொள்வார்களோ என

உறவின் போது நிதானத்தைக் கடைப்பிடித்து, செயல் முறைகளில் துரித ஸ்கலிதத்திற்கு இடம் அளிக்காத மாற்று முறைகளைக் கையாள்வது நல்ல பலனைக் கொடுக்கிறது. இதுதவிர சில மருந்து மாத்திரைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இவை தவிர, சில வெளிப் பூச்சு களிம்புகளும் பலன் அளிக்கும் என நம்பப்படுகிறது. விந்து முந்தும் பிரச்சினை உள்ள ஆண்களின் உறுப்பின் முனையில் உள்ள மொட்டுப் பகுதியானது ஏனையவர்களதை விட தூண்டப்படும் போது கூடியளவு உணர் வினைத்திறனைக் கொண்டிருப்பதே முந்துவதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.

இதனால், அப்பகுதியை சற்று மரக்கச் செய்யும் விறைப்பு மருந்துகள்      (Topical anaesthetics) உதவும் என்ற கருத்து நிலவுகிறது. இம் மருந்துகள் உறுப்பின் மொட்டுப் பகுதியின் உணர்நிலையை ( Sensitivity ) சற்றுக் குறைப்பதன் மூலம் விந்து விரைவதைத் தாமதப்படுத்துகின்றன.

ஆயினும், விந்து வெளியாகும் உணர்வையோ, திறனையோ பாதிப்பதில்லை. பாவனையில் உள்ள இம் மருந்துகளின் ஆற்றல் பற்றிய சிறப்பான ஆய்வுகள் செய்யப்படாத போதும் கிடைக்கும் ஆய்வு முடிவுகளானது இவை ஓரளவு செயற் திறன் கொண்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

களிம்பு மருந்துகளை விட விசிறப்படும் (Spray ) மருந்துகள் உபயோகிப்பதற்கு சுலபமானவை. அத்துடன், விசிறியவுடன் உலர்ந்து விடுவதால் பாவிப்பதும் வெளிப்படையாகத் தெரியாது. இது உறுப்பை மருந்தால் அசிங்கப்படுத்தவோ மனத் திடத்தை குறைக்கவோ செய்யாது என்பது சில நன்மைகளாகும். பக்க விளைவுகள் குறைவு என்பதும் தேவைப்படும் போது மட்டும் உபயோகித்து விட்டு நிறுத்தி விடலாம் என்பவையும் மேலதிக சிறப்புகளாகும்.

ஏற்கனவே இத்தகைய பல மருந்துகள் பாவனையில் இருந்தபோதும் புது மருந்துகள் பற்றிய ஆய்வுகளும் அவற்றின் செயற்திறன் பற்றிய களப் பரிசோதனைகளும் இப்பொழுது செய்யப்படுகின்றன. இப்பிரச்சினைக்கான சிகிச்சையின் முதற் படிச் சிகிச்சை முறையாக மாத்திரமன்றி மிகப் பொருத்தமான சிகிச்சை முறையாகவும் இதுவே எதிர்காலத்தில் நிலைக்கும் எனவும் நம்பப்படுகிறது.

மனப்பதற்றம், மனச்சோர்வு ஆகியவற்றிற்கு உபயோகிக்கப்படும் சில மருந்துகள் (Selective serotonin reuptake inhibitors (SSRIs) and antidepressants with SSRI-like effects ) உதவலாம்.

இவற்றை மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்

போட்டிகளின் போது முந்துவது முந்துபவருக்கு மட்டுமே எப்போதும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

ஆனால், குடும்ப வாழ்வில்

 • முந்துவதைவிடவும் பிந்துவதை விடவும் இணைந்து ஓடுவதில்தான் இருவருக்குமே திருப்தியும் சந்தோஷமும் கிட்டும்.
 • ஆனால், கணவன் மனைவி இடையே நம்பிக்கையும் புரிந்துணர்வும் விட்டுக் கொடுப்புகளும் நிலவினால் முந்துவதும் பிந்துவதும் அர்த்தம் கெட்டுப் போகும் என்பதே நிஜமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

நன்றி:- தினக்குரல்

Read Full Post »