Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஏப்ரல், 2015

“அழகு தேமல் என்று நினைத்து பேசாமல் விட்டிட்டன். நாவூறு பட்டதுபோல இப்ப கூடக் கூடவா வருகிறது'”என்று அம்மா சொன்னாள்.

மாநிறமான அந்தப் பையனின் சொக்கைகளில் பவுடர் அப்பியது போல சில அடையாளங்கள். அம்மா சொன்னது உண்மைதான். அழகான அந்தப் பையனின் முகம் அழகு குலைந்து கிடந்தது.

ஆனால் இந்த அழகென்பதும் அழகு குலைந்தது என்பதும் எமது மன உணர்வுகள்தான்.

அழகு தேமல் Pityriasis alba

இந்த அழகு தேமலை Pityriasis alba என அழைப்பார்கள். தெளிவற்ற ஓரங்களையுடைய தேமல் அடையாளங்களாக இருக்கும். நல்ல வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தால் நுண்ணிய செதில்கள் போல சற்று சொரப்பாக இருக்கும். சற்று செம்மை படர்ந்த அடையாளங்களாக ஆரம்பிக்கும் இவை பின்னர் வெளிறியவையாக மாறிடும்.

எனவே இவை செம்மை படர்ந்தவையாகவோ, வெள்ளை நிறமாகவோ அல்லது சில வேளைகளில் சரும நிறத்தவையாகவோ இருக்கக் கூடும்.

Tinea Alba

முகத்தில் அதுவும் பெரும்பாலும் கன்னங்களிலேயே இது தோன்றும். இருந்த போதும் தோள் மூட்டு, கைகளின் மேற்பகுதி, கழுத்து போன்ற இடங்களிலும் வரக்கூடும். சில வேளைகளில் நெஞ்சு, முதுகுப் பகுதிகளிலும், தொடைகளிலும் கூட தோனன்றக் கூடும்.

மிகப் பெரிய அளவானவையாக இருப்பதில்லை. 1 முதல் 4 செமீ அளவில்தான் இருக்கும். பொதுவாக 4-5 அடையாளங்கள் இருக்கக் கூடும் என்ற போதும் அவற்றின் எண்ணிக்கை 20 வரை அதிகமாகவும் இருக்கலாம். குளிர் காலத்தை விட வெயில் காலத்தில் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தெரியும்.

இது ஏன் தோன்றுகிறது என்பது பற்றி தெளிவற்ற தன்மையே நிலவுகிறது. பொதுவாக இது ஒரு வகை சரும அழற்சி என்றே கருதப்படுகிறது. அதாவது ஒரு வகை எக்ஸிமா எனலாம் என்றபோதும் கடுமை அற்ற வகையானது என்றே சொல்ல வேண்டும்.

இது ஒரு ஆபத்தற்ற நோய். ஒருவரிலிருந்து மற்றவருக்குத் தொற்றுவதில்லை. அத்துடன் காலப்போக்கில் தானகவே குணமடைந்துவிடும். சருமத்தை ஊறுபடுத்தாது கவனமாகப் பேணி வந்தாலே போதுமானது. எந்தவித சிகிச்சையும் தேவைப்படாது.

சொரசொரப்பு அல்லது அரிப்பு தொல்லையாக இருந்தால் மருத்துவர்கள் சருமத்தை மிருதுவாக்கும் கிறீம் வகைகளைச்(Emollient cream)  சிபார்சு செய்யலாம். அல்லது சற்று வீரியம் குறைந்த ஸ்டிரொயிட் (Steroid) வகை கிறீம்களையும் கொடுப்பதுண்டு. ஹைரோகோட்டிசோன் கிறீம் அத்தகையது. சற்று விலை உயர்ந்த Tacrolimus ointment    ஓயின்மென்ட்  உபயோகிப்பதும் உதவக் கூடும்.

அழுக்குத் தேமல் (Pityriasis versicolr)

அழகு தேமல் பற்றிப் பேசினோம். இனி அழுக்குத் தேமல் பற்றிப் பார்க்கலாமா?

pityriasis versicolor 3

இதுவும் ஏறத்தாள அழகு தேமல் போலவே பார்வைக்கு இருக்கும். இருந்தபோதும் இது தோல் அழற்சி நோயல்ல. கிருமியால் ஏற்படுகிறது. Pityrosporum என்ற ஈஸ்ட் வகைக் கிருமியால்தான் ஏற்படுகிறது.

பெரும்பாலானவர்களின் உடலில் இக் கிருமி இயற்கையாகவே இருக்கிறது. இருந்தபோதும் சிலரது உடலில் மட்டும் அவை பெருகி சரும நோயை ஏற்படுத்துகின்றன.

ஏன் சிலரில் மாத்திரம் பெருகுகிறது என்பதற்கான காரணங்கள் தெளிவாகச் தெரியவில்லை. இருந்தபோதும் கடுமையான வெக்கை, வியர்வை போன்றவை காரணமாக இருக்கலாம்.

அழகு தேமல் பெரும்பாலும் முகத்தில் தோன்றுவதாக இருக்க, இந்த அழுக்குத் தேமலானது நெஞ்சு, கழுத்து மற்றும் மேற் புஜங்களிலேயே பெரும்பாலும் ஏற்படுகிறது. வயிறு, முதுகு, தொடை போன்ற இடங்களுக்கும் சிலரில் இது பரவுவதுண்டு.

அருகருகே இருக்கும் தேமல் புள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பெரிதாக வருவதுண்டு.

சரும நிறத்திலேயே சற்று வெளிறலாகவும் சொரசொரப்பாகவும் இருப்பதால் அழுக்குப் படர்ந்தது போல தோன்றலாம். எனவேதான் அழுக்குத் தேமல் என்றேன். வெண்மையான தோலுடையவர்களில் பிரவுன் நிறமாகத் தேமல் தூக்கலாகத் தெரியும்.

Ketoconazole அல்லது Selenium சேர்ந்த சம்பூக்களை வெளிப் பூச்சு மருந்தாக உபயோகிக்கலாம். தேமல் உள்ள இடங்களில் மட்டுமின்றி அருகில் உள்ள சருமத்திலும் பூசுவது அவசியம். 5 முதல் 10 நிமிடங்கள் கழிந்த பின்னர் உடலைக் கழுவுங்கள்.

வாரம் ஓரு முறையாக நான்கு வாரங்கள் வரை பாவிக்க நோய் மறைந்து விடும். ஒரு சிலரில் இது சில காலத்தின் பின்னர் மீண்டும் ஏற்படக் கூடும். அவ்வாறெனில் மீண்டும் இந்த சம்பூ வைத்தியத்தை செய்ய வேண்டியிருக்கும்.

பங்கசிற்கு எதிரான (Antifungal- பங்கஸ் கொல்லி) பூச்சு மருந்துகளும் நல்ல பலனைக் கொடுக்கினன்றன. Clotrimazole, Miconazole, Ketoconazole  போன்றவை சில உதாரணங்களாகும். ஓயின்ட்மென்ட் அல்லது கிறீமாக ஆக உபயோகிக்கலாம். பொதுவாக காலை மாலை என இருவேளைகள் பூச வேண்டும். இரு வாரங்கள் வரை தொடர்ந்து உபயோகிக்க நேரிடும்.

உடலில் பல இடங்களில் பரவலாக இருந்தால் அல்லது சம்பூ மற்றும் பூச்சு மருந்துகளுக்கு போதிய பலன் கிட்டாவிட்டால் பங்கஸ் கொல்லி மருந்துகளை மாத்திரைகளாக உட்கொள்ளவும் நேரிலாம்.

வட்டக் கடி(Tinea Corporis)

Tinea Corporis

இதுவும் ஒரு வகை பங்கஸ் தோல் நோய்தான். வட்டக் கடி (Ringworm)  எனவும் சொல்லுவார்கள். பெரும்பாலும் வட்ட வடிவில் இருக்கலாம்.

ஆனால் இதன் முக்கிய குணமானது படர்ந்து செல்வதாகும். முதலில் சிறியதாக இருந்து ஓரங்களில் வெளிப் பரவிச் செல்லும். அவ்வாறு பரந்து செல்லும் போது, முதலில் ஆரம்பித்த நடுப்பகுதி குனமடைந்து விடும். அரிப்பும் பெரும்பாலும் ஓரங்களிலேயே இருக்கும்.

சிகிச்சையைப் பொறுத்த வரையில் மேலே கூறிய அதே பங்கஸ் கொல்லி பூச்சு மருந்துகள் பலன் அளிக்கும்.

Tinea  rubrum என்ற கிருமியினாலேயே இந்த நோய் ஏற்படுகிறது. சருமத்தில் மாத்திரமின்றி நகங்களிலும் முடியிலும், கால் விரல் இருக்குகளிலும் கூட இக் கிருமியால் நோய்கள் ஏற்படுவதுண்டு.

சரும நோய்கள் பல. அவற்றியேயான வித்தியாசங்கள் நுணுக்கமானவை. உங்களால் கண்டு பிடிப்பது சிரமமானது. ஒரு சரும நோய்க்கு தந்த பூச்சு மருந்துகளை அதேபோன்ற நோயாகத்தான் இருக்கிறது என நினைத்து வேறு புதிய சரும நோய்களுக்கு உபயோகிப்பது ஆபத்தில் முடியலாம்.

பலவிதமான பழைய பூச்சு மருந்துகள் பலரிடம் சேர்ந்து கிடப்பதை அவதானித்து இருக்கிறேன். எதை எதற்கு போடுவது எனப் புரியாது திணறிக் கொண்டிருப்பார்கள். சில காலாவதியான மருந்துகளாகவும் இருப்பதுண்டு. மருந்துகளை மாறிப் பூசி துன்பப்பட்டவர்கள் பலர்.

பழைய மருந்துகளை ஒருபோதும் சேமித்து வைக்காதிருக்காதீர்கள். குணமாகியதும் வீசிவிடுங்கள். அதுவே உங்களுக்கு பாதுகாப்பானது.

எனது ஹாய் நலமா புளக்கில் (Dec 22, 2014) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

 

0.0.0.0.0

Read Full Post »

எதை எதற்குள் வைப்பது எனத் தெரியாது வைத்துத் திணறுபவர்கள் முதுவயதினர் மாத்திரமல்ல.

இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை எந்தப் பருவத்திலும் தொடர்கிறது

இவற்றில் பல ஆபத்திலும் முடிவதுண்டு
இந்தச் சுட்டிப் பையனும் வைத்துவிட்டான்.

20141208_093505-001

எடுத்துவிடுகிறேன் என்று முயன்ற தாயாரால் முடியவில்லை.

இன்னும் உள்ளுக்குத் தள்ளியதுதான் மிச்சம்.

சும்மா பார்த்தால் தெரிகிறதா. இல்லவே இல்லை.

நீண்ட சுரங்கப் பாதை போல இருள் அப்பிக் கிடந்தது.

ஒளியைப் பாய்ச்சியபோது ஏதோ வெண்மையாகத் தெரிந்து.

காய்ந்த காதுக் குடுமியா, கல்லா, உருட்டிய பஞ்சா???

இதை எடுப்பதற்கு பல உபகரணங்கள் இருக்கின்றன.

13-097

இதன் நுனியை அந்நியப் பொருளின் பிற்புறமாகக் கொண்டு சென்ற பின் மறுபுறத்தில் உள்ள படியை அழுத்த நுனியில் உள்ள கொழுக்கி விரியும்

மெதுவாக பிற்புறமாக நகர்த்த அந்நியப் பொருளை இழுத்துக் கொண்டு வந்துவிடும்.

காது மென்மையான பகுதி சிறு காயம் பட்டாலும் வலி ஏற்படும். கிருமி தொற்றலாம்.

தாயின் பொறுமையும் மருத்துவத் தாதிகளின் உதவியும் சேர வெளியே வந்துவிட்டது அந்த அந்நியப் பொருள்
வேறொன்றும் இல்லை

மடித்துச் சுருட்டிய பேப்பர் துண்டு..

பெற்றோர்களே
குழந்தையின் காதிற்குள் அந்நியப் பொருள் போய்விட்டால் நீங்களாக எடுக்க முயல வேண்டாம்

பிற்புறம் துரதிஸ்டவசமாகத் தள்ளுப்பாட்டால் செவிப்பறை காயமடையலாம்.

காது கேட்பதே பாதிப்புறலாம்.

இவ்விடயம் பற்றிய மற்றொரு பதிவு
நகைச்சுவையாக எனது “steth இன் குரல்” புளக்கில் …… காது பொரியல் சட்டியல்ல

0.00.0

Read Full Post »

தேன் குடிப்பது குளவிகளுக்கு மட்டும் உவப்பானதல்ல. யானைகள் கரடிகள் முதலான மிருகங்கள் முதல் மனிதர்களான நாமும் அதன் இனிய சுவையில் மகிழ்கின்றோம்.

தேன் போசாக்குள்ள பதார்த்தமும் கூட.

அதன் சிறப்பு சுவையுடன் மட்டும் முடிவடைவதல்ல, மருத்துவ குணங்களும் நிறைந்தது என இயற்கை மருத்துவம் கொண்டாடுகின்றது.

stock-footage--honeycomb-with-bee-on-green-tree

அது எமது பாரம்பரிய வைத்திய முறைகளிலும் வீட்டு வைத்தியத்திலும் தேன் நிறையவே பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

வயிற்றுப் பிரச்சனைகளுக்கு நல்லது என நம்புகிறோம். பண்டைய காலம் முதல் தேன் காயங்களுக்கான மருந்தாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

-985

கிறீக் மற்றும் ரோம நாடுகளில் இது மருந்தாகப் பயன்படுத்தப்பட்டிருப்தை அறிய முடிகிறது. வேத காலத்திலும் இஸ்லாமிய கலாசாரத்திலும் இது மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. அரிஸ்டோடில் தேனின் சிறப்புப் பற்றி (384 – 322 BC) காலத்திலேயே சொல்லியுள்ளார்.

இருந்தபோதும் இவை யாவும் வெறும் நம்பிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவே கொள்ள வேண்டும். அதற்கு மேலாக விஞ்ஞான பூர்வ ஆராய்வுகளால் கண்டறியப்பட்ட மருத்துவ குணங்கள் ஏவையேனும் தேனுக்கு உள்ளதா?

விஞ்ஞான பூர்வ தகவல்கள்

உரசல் காயங்களுக்கும், ஆழமற்ற வெட்டுக் காயங்களுக்கும், சீழ்ப் பிடித்த புண்களுக்கும் மருந்தாக உதவக் கூடியது தேன் என சில ஆய்வுகள் கூறுகின்றன.

இருந்தபோதும் ஆழமான புண்களுக்கும் பூச்சிக் கடிகளால் ஏற்பட்ட புண்களுக்கும் ஏற்தல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் நாளப்புடைப்பு நோயால் (Varicose ulcer)  எற்படும் புண்களுக்கும் ஏற்றதல்ல. இத்தகைய புண்கள் குணமடைவதைத் தேன் தாமதிக்கச் செய்யும் என்று கண்டறிந்துள்ளார்கள்.

மிகக் கடுமையான சில வகை தொற்றுகளைத் (MRSA)  தணிக்க தேன் உதவும் என சில ஆய்வுகள் கூறியுள்ளன.

புண்கள் குணமாவதற்கு தேன் எவ்வாறு உதவுகிறது?

  • தேன் புண்களின் வலியைக் குறைக்கிறது.
  • ஆறுதல் அளிக்கும் உணர்வைக் கொடுக்கின்றன.
  • புண்களில் உள்ள சீழ், அழுக்குச் சவ்வு போன்றவை விரைவில் கரைய வைத்து புதிய ஆரோக்கியமான திசுக்கள் உருவாக உதவுகின்றன.
  • புண் குணமாகியதும் விரைவில் ஆரோக்கியமான தோல் மேவி வளர்வதற்கு உதவுகின்றன.
  • தேன் அசிடிக் தன்மையானது அதன்  Ph வலு 3.2 முதல் 4.5 ஆகும். இது கிருமிகள் பெருகுவதைத் தடுக்க உதவுகிறது.

இவைதான் மருத்துவ ஆய்வுகளின் முடிவுகளாகும். புண்கள் விரைவில் குணமாக இவற்றை விட வேறென்ன தேவை?

தேன் எவ்வாறு குணமாக்குகிறது

புண்ணைக் குணமாக்குவதற்கு தேனில் உள்ள எத்தகைய அம்சங்கள் உதவுகின்றன எனக் கேட்கிறீர்களா?

1. தேனில் உள்ள சீனியின் அதிக செறிவுத்தன்மையும், குறைந்த ஈரலிப்புத் தன்மையும் கிருமிகளை அண்டவிடாது தடுக்கின்றன.

2. இத்துடன் தேனில் உள்ள குளுக்கோனிக் அமிலத்தால் (Gluconic acid)  உண்டாகும் அமில ஊடகமும், அதிலுள்ள ஐதரசன் பெரோக்ஸைடும் இணைந்து சீழ்ப் பிடிக்க வைக்கும் கிருமிகள் பெருகுவதைத் தடுக்கின்றன என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

கிருமி தொற்றிச் சீழ்ப்பிடித்த புண்களுக்கு தேன் இட்டு சிகிச்சை செய்தபோது அதிலுள்ள கிருமிகள் 3முதல்10 நாட்களுக்குள் முற்றாக அழிந்து கிருமிப்பற்றற்ற புண்களாக மாறியதாக மூன்று வௌ;வேறு ஆய்வுகளின் முடிவுகள் சொல்கின்றன.

3. அத்துடன் புண்ணிலுள்ள வீக்கத்தைத் தணிக்கும் ஆற்றலும் தேனுக்கு உள்ளது.

புண்ணைக் குணமாக்க எவ்வளவு தேன் தேவை

சரி. புண்களைக் குணப்படுத்த எவ்வளவு தேன் இடவேண்டும். மெல்லிய படையாக இட்டால் போதும் என இரு மருத்துவ அறிக்கைகள் கூறின. ஆயினும் ஏனைய பல மருத்துவ அறிக்கைகள தாராளமாகத் தேன் இடுவது பற்றியும் இன்னும் சில புண்களின்மேல் தேனை ஊற்றியதாகவும் கூறின.

எனவே எவ்வளவு தேன் இடவேண்டும் என்பது பற்றி தெளிவான, கருத்தொருமைப்பாடு இல்லை என்பது தெளிவாகிறது. புண் உலர்ந்து உலர்ந்து போகாத அளவிற்கு தேனின் அளவு இருந்தால் போதும் என்பது அறிவு பூர்வமான கருத்தாகும்.

தேனினால் புண்களைச் சுத்தமும் செய்யலாம்

பொதுவாக மருந்து கட்டும்போது சேலைனினால் அல்லது பொவிடின் போன்ற மருந்துகளால் முதலலில் சுத்தம் செய்கின்றோம். இதற்குப் பதிலாக தேனைக் கொண்டே சுத்தம் செய்த பின் அதனையே இட்டு மருந்து கட்டலாம்.

நெருப்புச் சுட்ட புண்கள்

நெருப்புச் சுட்ட புண்களுக்கும் தேன் மிகவும் சிறந்ததாகும். நெருப்பு, சுடுநீர், கொதி எண்ணெய் போன்றவற்றால் ஏற்படும் சூட்டுக் காயங்களுக்கு உடனடியாகத் தேன் இட்டால் வேதனை தணியும். காயமும் விரைவில் குணமாகும்.

வாய்ப் புண்கள்

வாய்ப் புண்களையும், முரசு கரைதலையும் தேன் குணமாக்கும் எனச் சொல்லப்படுகிறது. நியுசீலந்தில் வளரும் மனுக்கா (Manuka plant)  என்ற தாவரத்தில் இருந்து பெற்ற தேனைக் கொண்டு செய்யப்பட்ட ஒருவகை இனிப்புப் பண்டம் வாய்ப்புண்களையும் முரசு கரைதலையும் மாற்றுகிறது என சில ஆய்வுகள் கூறுகின்றன.

20ம் நூற்றாண்டின ஆரம்பத்தில் (1940 களில்) நுண்ணுயிர் கொல்லி (Antibiotics) மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டிரா விட்டால் இன்று புண், காயம், மற்றும் சத்திர சிகிச்சை தேவைகளுக்கான முக்கிய பொருளாக தேன் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது திண்ணம்.

பிள்ளைகள் மருந்து கட்டுவதென்றால் அலறியடித்து ஓடுவது வழக்கம். முதலில் வாயில் சற்று தேனை ஊட்டிவிட்டு, தேனால் சுத்தம் செய்து தேன் இட்டு மருந்து கட்டுவதென்றால் தாங்களாகவே ஓடி வருவார்கள் என்பது திண்ணம்.

தேனின் வேறு மருத்துவப் பயன்கள்

தேனானது இரைப்பை அமிலங்கள் மேல் எழுவதைத் (Gastroesophageal reflux)  தடுக்க உதவும் என காட்மண்டுவைச் சார்ந்த பேராசிரியர் ஆயாயவெயலலய ஏ ஆயவா பிரபல மருத்துவ சஞ்ச்சிiயான டீஆது யில்; எழுதியுள்ளார்.

குழந்தைகளில் ஏற்படும் வயிற்றோட்ட நோய்களுக்கு தேன் உதவும் என Mahantayya V Math gpugy யில்; எழுதியிருந்தனர். பக்றீரியா கிருமிகளால் ஏற்படும் வயிற்றோட்ட நோய்கள் குணமாவதை தேன் துரிதமாக்கும் என்பதே அவரது முக்கிய கருத்தாகும்.

மருந்தாகப் பயன்படுத்த முடியும் என்று கூறவில்லை.

குழந்தைகளைத் தொல்லைப்படுத்தும் இரவு இருமலைத் தணிக்க தேன் உதவும் என journal Pediatrics  சில் ஒரு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. “ஏனைய இருமல் மருந்துகளை விட குழந்தைகளின் இரவு இருமலையும் அதனால் ஏற்படும் தூக்கக் குழப்பத்தையும் தணிக்க தேன் உதவியது” என சில பெற்றோர்கள் குறியதாக மேலும் தெரிவித்திருந்து.

சில வகை ஒவ்வாமைகளுக்குத் தேன் உதவும் எனச் சொல்லப்பட்டபோதும் தெளிவான ஆதாரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேனின் சிறப்பு அம்சங்கள் எவை?

சுத்தமான தேன் என்றுமே பழுதடையாது. பிரிட்ஸில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை.

மனிதனுக்கு தெரிந்த மிகப் பழமையான உணவு வகைகளில் இதுவும் ஒன்று. ரட் மன்னரின் (King Tut) கல்லறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புராதன காலத் தேனானது, இன்றும் உண்ணக் கூடிய நிலையில் சற்றும் பழுதடையாது இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேனின் போஷனை

தேனில் உள்ள .இனிப்பின் பெரும்பகுதி பழங்களில் இருந்து கிடைக்கும் புரக்டோஸ் (Fructose)  வகையைச் சார்ந்தது. இதனால்; நாம் வழமையாகப் பாவிக்கும் சீனியை விட 25 சதவிகிதம் இனிப்புக் கொண்டது.

ஒரு தேக்கரண்டி தேனில் 64 கலோரிச் சத்து உண்டு. இது எமது உடற்தசைகளின் இயக்கத்திற்கான சக்தியை வழங்குகிறது. தேனில் 17.1 சதவிகித நீர்ப்பற்றே உண்டு. மிகுதி 82.4 சதவிகிதமும் மாச்சத்தாகும். இந்த மாச்சத்துத்தான் இனிப்பாக எமக்குக் கிடைக்கிறது. அதிக கலோரி வலு காரணமாக நீரிழிவு நோயாருக்கு உகந்தது அல்ல என்பதையும் குறிப்பிட வேண்டும்.

மிச்சமுள்ள 0.5 சதவிகிதம் மட்டுமே புரதம், விட்டமின்கள் மற்றும் தாதுச்சத்தாகும்.

கொழுப்புச்சத்து, கொலஸ்டரோல் ஆகியன அடியோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாப்பொருளில் பழவகை இனிப்பான புரக்டோஸ் 38.5 சதவிகிதமாகும் (fructose 38.5%). . குளுக்கோஸ் 31 சதவிகிதமாகும். மிகுதி 12.9 சதவிகிதம் மோல்டோஸ், சுகுரோஸ் போன்ற ஏனைய சீனிவகைகளாகும். இதனால் விரைவில் ஜீரணமடையும் தன்மை கொண்டது.

பக்கவிளைவுகள்

தேன் பொதுவாகப் பக்க விளைவுகள் அற்ற பொருளாகும். தேனுக்கு ஒவ்வாமை (Allergy)  ஏற்படுவது அரிது. அதில் உள்ள பூக்களின் மகரந்தங்களுக்கும், தேனீ பூச்சியின் புரதங்களுக்கும் ஒவ்வாமை ஏற்படாலாம் என எதிர்பார்த்தாலும் அவ்வாறு ஏற்பட்டதான மருத்துவ அறிக்கைகளைக் காண முடியவில்லை.

ஆதாரமற்ற நம்பிக்கை

“தேனுடன் தண்ணீர் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் மெலியுமாமே” என ஒரு நோயாளி என்னிடம் கேட்டார். இது பற்றி மருத்துவ இணைய தளங்களில் தேடியபோது அதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால் தேனில் 82.4 சதவிகிதமும் மாச்சத்துள்ளது என்ற தகவலை வைத்து விஞ்ஞான பூர்வமாகவும், தர்க்க ரீதியாகும் சிந்தித்தால் இதில் எந்தவித உண்மையும் இருக்க முடியாது என்பது தெளிவாகிறது. வெற்று நம்பிக்கைளை ஆதாரமாகக் கொண்டு மருத்தவ விடயங்களில் தீர்மானிக்கக் கூடாது என்பதற்கு இது ஒரு ஆதாரம்.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.000.0

 

 

Read Full Post »