“மீன் சாப்பிடுங்கள்” என்று சொல்லாத மருத்துவர்களே இன்று இல்லை எனலாம். மீன் சாப்பிடாத மருத்துவர்களும் கூட மீன் சாப்பிடுங்கள் என்று தங்கள் நோயாளிகளுக்கு அறிவுறுத்துகிறார்கள். அதுவும் முக்கியமாக கொலஸ்டரோல், அதீத எடை, இருதய நோய்கள் போன்ற பிரச்சனை உள்ளவர்களை அதிகம் ஊக்குவிக்கிறார்கள்.
மீன் உட்கொள்வது எல்லோருக்கும் நல்லது. இருந்தபோதும் கர்ப்பணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் மீன் சாப்பிடுவதில் சற்று அவதானமாக இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் சில மேலை நாடுகளில் இருந்தது. இதற்குக் காரணம் மீன்களில் இருக்கக் கூடிய சிறியளவு பாதரசம் என்ற கனிமமானது கரு உருவாகும் பருவத்திலும் முலைப்பால் அருந்தும் குழந்தைகளிலும் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என அஞ்சப்பட்டதாலேயே ஆகும்.
இருந்தபோதும் அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகள் இதை மறுதலிக்கின்றன. கரு உருவாகும் தருணத்திலும் முலைப்பால் அருந்தும் காலங்களிலும், குழந்தைகள் வளரும் பருவத்திலும் மீனைக் குறைவாக உட்கொள்வதால் அவர்களின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான பல போசனைப் பொருட்களை இழக்க நேர்கிறது. இதனால் அவற்றின் வளர்ச்சி பாதிப்டைவதுடன் பொதுவான தேக ஆரோக்கியமும் பாதிப்பிற்கு ஆளாகும் என்பது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் மருந்துகளுக்கான நிர்வாக சபையானது பாலூட்டும் தாய்மார்களும், கர்ப்பிணிகளும் வாராந்தம் உட்கொள்ளும் மீன் உணவின் அளவை அதிகரிக்க வேண்டும் என்கிறது. வாராந்தம் 8 முதல் 10 அவுன்சுகளுக்குக் குறையாத அளவு மீன் சாப்பிட வேண்டும் என்கிறது. இது கருவினதும் குழந்தைகளினதும் உடல் வளர்ச்சிக்கும் உடலுறுப்புகளின் உறுதிக்கும் அவசியம் எனச் சிபார்சு செய்துள்ளது.
ஏனெனில் மீனிலுள்ள புரதம் உயர்தரமானது. ஏனைய பல போசணைப் பொருட்களும் மீனில் உண்டு. ஆரோக்கியத்திற்கு கேடான நிறைந்த கொழுப்பு (saturated fat) மிகக் குறைந்த அளவே உண்டு. ஆனால் மிக ஆரோக்கியமான நல்ல கொழுப்பு ஆன ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உண்டு.
மீன்களில் பாதரசம்
இருந்த போதும் மீன்களில் பாதரசம் ஆனது methyl mercury என்ற இரசாயன வடிவத்தில் இருக்கிறது. இதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகளாவன மீனிலுள்ள ஏனைய போசணைப் பொருட்களால் கிட்டக் கூடிய நன்மைகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைவானது என ஆய்வுகள் கூறுகின்றன.
எல்லா மீன்களிலும் பாதரசம் சிறிதளவேனும் இருக்கின்ற போதும் சில மீன்களில் அதன் செறிவு அதிகம் உண்டு. சுறா, வால்மீன், கிங்க் மேகரல், மெக்சிகோ வளைவில் பிடிக்கப்படும் ரைல் மீன் (tilefish) ஆகியவற்றில் அதிகம் உண்டு என்பதால் அவற்றை கர்ப்பணிகளும் பாலுட்டும் தாய்மார்களும் தவிர்ப்பது நல்லது என அமெரிக்காவின் FDC அறிவுறுத்துகிறது. அத்துடன் அல்பர்கோர் ரியூனா (albacore tuna) உட்கொள்வதாயின் அதனை வாரத்தில் 6 அவுன்சிற்கு அதிகம் ஆகாதவாறு உட்கொள்வதில் தவறில்லை.
மிகக் குறைந்தளவு பாதரசத்தைக் கொண்ட மீன்களாக shrimp, pollock, salmon, canned light tuna, tilapia, catfish and cod ஆகியவற்றைச் சொல்கிறார்கள். இவற்றை அதிகம் உட்கொள்ளலாம்.
ஆறு, குளம், ஏரி போன்றவற்றிலிருந்து பிடிக்கப்படும் நன்னீர் மீன்களைப் பொறுத்த வரையில் அவற்றில் உள்ள பாதரசத்தின் அளவானது இடத்திற்கு இடம் மாறுபடக் கூடும். அவற்றின் பாதரச அளவு பற்றிய தரவுகளை அப்பிரதேச அரசுகள் வெளியிடாதவிடத்து வளர்ந்தவர்கள் வாராந்தம் 6 அவுன்ஸ்சிற்கு மேற்படாமலும் குழந்தைகள் வாராந்தம் 1-2 அவுன்ஸ்சிற்கு மேற்படாமலும் உட்கொள்ள வேண்டும் என அமெரிக்க மருத்துவ சபைகள் சொல்கின்றன. இலங்கைக்கென தனியான ஆலோசனைகள் இருப்பதாகத் தெரியவில்லை.
மீன்களில் பல வகைகள் உண்டு.
எண்ணெய் தன்மையான மீன்கள்
சல்மன், வார்டின், மேகரல் trout and herring போன்றவை எண்ணெய் தன்மையான மீன்களாகும். இவற்றில் இருதயத்திற்கு மிகவும் நல்லதான omega-3 fatty acids என்ற கொழுப்பு கூடியளவு உண்டு. குழந்தைகளின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கும் ஒமேகா கொழும்பு பெரிதும் உதவுவதால் கர்ப்பணிகளும் பாலுட்டும் தாய்மார்களுக்கும் அவசியமானது.
அத்துடன் ஒமேகா 3 கொழும்பு அமிலமானது உயர் இரத்த அழுதத்தைக் குறைக்கும், குருதிக் குழாய்களில் (நாடிகள் artery) கொழுப்பு படிவதைத் தடுக்கும் என்பதால் மாரடைப்பு அஞ்சைனா பக்கவாதம் போன்ற குரதிக் குழாய் நோய்களை ஏற்படுவதைக் குறைக்கும் என்பது நன்கு தெரிந்ததே.
இவற்றிற்கு அப்பால், மூப்படையும் போது ஏற்படும் பார்வைக் குறைப்பாடு நோய் ஏற்படாமல் தடுக்கும். மூப்படையும் போது ஏற்படும் முதுமை மறதிநோய் (Dementia) ஏற்படுவதைத் தடுக்கும், புரஸ்ரேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் என்றெல்லாம் சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆயினும் இவற்றை உறுதிப்படுத்த மேலும் தெளிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
இவ்வாறான பல்திறப் பயன்பாடு கருதி ஒமேகா 3 மீன் எண்ணெண்ணையை மாத்திரைகளாக அடைத்து விற்பனை செய்கிறார்கள். அமோகமாக விற்பனை ஆகிறது. ஆயினும் இதனை விட இயற்கையாகவே மீனிலிருந்து பெறும்போது பலன் அதிகமாகக் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை.
எண்ணெய் தன்மையான மீன்களில் விற்றமின் டி (VitaminD) அதிகம் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. whitebait, pilchards, மற்றும் தகரத்தில் அடைக்கப்பட்ட சல்மன், சாடின் போன்றவற்றில் உள்ள எலும்புகளும் உட்கொள்ளப்படுவதால் அவற்றிலுள்ள கல்சியம் பொஸ்பரஸ் போன்றவை எமக்கு அதிகளவு கிடைக்கின்றன. இவை உறுதியான எலும்பைப் பேண எமக்கு உதவும்.
வெண்மையான மீன்கள்
வெண்மையான மீன்களில் Cod, haddock, plaice, pollack, coley, dab, flounder, red mullet, gurnard and tilapia போன்றவை அடங்கும். இவற்றில் கொழுப்புத்தன்மை மிகக் குறைவாகும். எனவே கொழுப்பு குறைந்த உணவு உள்ள உணவுகளை உண்ண வேண்டிய Nவை உள்ளவர்கள் இறைச்சிக்குப் பதிலாக இத்தகைய வெண்மையான மீன்களை அதிகம் பயன்படுத்தலாம். இவற்றிலும் omega-3 fatty acids என்ற கொழுப்பு இருக்கிறது என்ற போதிலும் கொழுப்புள்ள மீன்களில் இருக்கின்ற அளவில் கிடைக்காது. குறைவாகவே கிடைக்கும்.
கோதுள்ள கடலுணவுகள்
இறால், நண்டு, கடல் நத்தை (Cod, haddock, plaice, pollack, coley, dab, flounder, red mullet, gurnard and tilapia) போன்ற பலவும் அடங்கும். இவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஓரளவு கிடைக்கின்ற போதும் பொதுவாகக் கொழுப்பு குறைவாகவே இருக்கிறது. ஆனால் செலினியம், துத்தநாகம், அயோடின், தாமிரம் போன்ற அதிகம் உண்டு. எனவே உடல் நலத்திற்கு ஏற்றது.
இருந்தபோதும் இவற்றில் பக்றீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் இருக்கக் கூடும். நன்கு கொதிக்கவைத்து சமைக்காவிடில் கிருமி தொற்றும் வாய்ப்பு அதிகம் (Food Poisoning) என்பதும் உண்மை. அத்துடன் சில biotoxins இருப்பதுண்டு. இதன் காரணமாக தலைவலி, தலைச்சுற்று, தள்ளாட்டம், வாந்தி, வயிற்றோட்டம், வயிற்று வலி போன்றைவை தோன்றலாம். எனவே அவற்றைச் சமைக்கும்போதும், சமைத்த பின் சேமிக்கும் போதும் அதிக அவதானம் தேவை.
மீன் மற்றும் நண்டு இறால் போன்ற கோது மீன் (shellfish) உணவுகளுக்கும் ஒவ்வாமை ஏற்பது அதிகம் என்பதை மறக்கக் கூடாது. கடி, சொறிவு, வயிற்று முறுக்கு போன்ற சாதாரண அறிகுறிகள் ஏற்படலாம். ஆயினும் தலைச்சுற்று மயக்கம் போன்ற பல ஆபத்தான விளைவுகளும் ஏற்படலாம்.
கடலுணவு அலர்ஜி பற்றி வாசிக்க
ஒரு வகை மீனுக்கு ஒவ்வாமை இருந்தால் வேறு மீன்களுக்கும் இருக்கும் சாத்தியம் அதிகம். எனவே அவதானம் அவசியம்.
நாக்கிற்கு அடிமையாகி ஒரே விதமான மீன்களை உண்பது நல்லதல்ல. பல்வேறு விதமான மீன்களை மாற்றி மாற்றி உண்ண வேண்டும் அல்லது கலந்து உண்ண வேண்டும். இதன் மூலம் மீன்களிலுள்ள பல்வேறு விதமான போசணைப் பொருட்களைப் பெற முடியும். அத்துடன் உடல் நலத்திற்கு ஊறு அளிக்கக் கூடிய பாதரசம் போன்றவற்றின் பாதிப்பைக் குறைக்கவும் முடியும்.
மீன்களைப் பொரித்துச் சாப்பிடுவது நல்லதல்ல. பொரிக்கும்போது அதிகளவு எண்ணை சேர்வதால் ஆரோக்கியத்திற்குக் கேடாகும். எனவே மீனைப் பொரித்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக கறியாகச் சமைத்து உண்பது நல்லது. அல்லது வெப்பத்தில் சுட்டு வேகவைத்து அல்லது பேக் பண்ணியும் சாப்பிடலாம்.
இறுதியாக
எனவே மீன் உணவு நல்லது. எல்லா வயதினருக்கும் தேவையானது. பல்வகை மீன்களையும் மாறி மாறிச் சாப்பிடுங்கள். அவை உங்கள் ஆரோக்கிய வாழ்விற்கு நல்லது.
எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
0.0.0.0.0