Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூன், 2015

கண்களிலிருந்து நீர் வழிய, வேதனையில் முகம் சோர்ந்து கிடக்க காதைப் பொத்திக் கொண்டு வந்தான் பையன். அமைதி காக்க வந்தவர்கள் வன்முறை பிரயோகித்ததால் காதைப் பொத்தி அடி வாங்கி, குருதி வடிய, மருத்து உதவி நாடி ஓடோடி வந்தவர்களின் காலம்தான் ஞாபகத்தில் வந்தது.

“குளிச்சுப் போட்டு வந்தவனின்ரை காதுக் குடுமியை எடுப்பம் என்று இயர் பட்சை வைத்தபோது ஆட்டிவிட்டான். குத்திப் போட்டுது போலக் கிடக்கு” என்றாள் அம்மா.

xara_QTIP_X

பையனின் காதைப் பரிசோதித்தேன். வன்முறைப் பாதிப்பிற்கு ஆளான அளுத்ஹம நகரின் அவலக் கோலம்போல குருதி படர்ந்த குடுமி கிடந்தது.

இங்கு வன்முறையை உபயோகித்தது இன வன்முறையாளர்கள் அல்ல. சொந்தத் தாய்தான். காதைச் சுத்தம் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செய்தது வன்முறைபோல் ஆகிவிட்டது.

காதுக் குடுமியை மட்டுமின்றி, குளிக்கும்போதும் தலை முழுகும் போதும் காதிற்குள் போன நீரையும் எடுக்க வேண்டும் என்றெண்ணி, காதைக் கிண்ட முனையும் “18ம் நூற்றாண்டு தாய் தந்தையார்கள்” இன்றும் எமது சமூகத்தில் இருக்கிறார்கள். காதிற்குள் போன நீர் தானாகவே வெளியே வந்துவிடும். அல்லது சற்று நேரம் செல்ல தானகவே உலர்ந்துவிடும் என்பதை இந்த விஞ்ஞான யுகத்திலும் இவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

காதுக்குடுமி

எமது காதிலுள்ள சுரப்பிகளால் காதுக்குடுமி சுரக்கிறது. தூசி, மற்றும் சிறு அந்நியப் பொருட்கள் காதினுள் செல்லாது தடுப்பதற்கானது இது என நம்பப்படுகிறது. தொற்று நோய்கள் காதுச் சருமத்தில் ஏற்படாமல் காக்கவும் செய்கிறது. இது பொதுவாக காய்ந்து உதிர்ந்து தானாகவே வெளியேறிவிடும்.

hqdefault

எல்லோருக்கும்தான் காதில் இவ்வாறு சுரக்கிறது. ஆனால் ஒரு சிலருக்கு மாத்திரம் அது காய்ந்து கட்டியாகி இறுகிவிடுகிறது. இதற்குக் காரணங்கள் சில.

 • சிலரது காதின் சருமம் சொர சொரப்பாக இருந்து அதிகம் உதிர்ந்து குடுமியிடன் சேர்ந்து இறுகக் கூடும்.
 • அல்லது சிலரது காதின் அமைப்பு வளைவானதாக இருந்தால் இது வெளியேறுவது தடைப்படக் கூடும்.
 • சிலர் பட்ஸ் போட்டு எடுக்க முயலும்போது குடுமி வெளியே வருவதற்குப் பதிலாக மேலும் உட்புறமாகத் தள்ளுப்படுவதும் உண்டு. காலப்போக்கில் இவை சேர்ந்து இறுகிவிடலாம்.

சுமார் 100 போரில் 6 பேருக்கு காதில் குடுமி இறுகி அடைத்துவிடுவதாகத் தரவுகள் சொல்கின்றன.

குச்சி, சட்டைப் பின், காது கிண்டி, பஞ்சுத் துண்டு எனப் பலவற்றைத் தேவையின்றி உபயோகித்து ஆபத்தை வாங்குபவர்கள் பலர். காதுக் குடுமிப் பிரச்சனை, காதுவலி, காதில் கிருமித் தொற்று, சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகளோடு வருபவர்களில் பலர் இவற்றைப் பயன்படுத்தி காதைக் கிண்டுபவர்களாகவே இருக்கிறார்கள்.

மருத்துவரைக் காண வேண்டுமா?

காதிற்குள் குடுமி இருந்தாலும் பலருக்கும் எந்தவித இடைஞ்சலையும் ஏற்படுத்துவதில்லை. இருந்தபோதும் அது அதிகமாக இருந்தால், அல்லது காய்ந்து இறுகி செவிக்குழாயை அடைத்திருந்தால் பல்வேறு அறிகுறிகள் ஏற்படக் கூடும. உதாரணமாக காது அடைத்துக் கிடப்பது போன்ற உணர்வு ஏற்படக் கூடும். சிலருக்கு காது கேட்பது மந்தமாகவும் கூடும். ஒரு சிலருக்கு தலைச் சுற்று ஏற்படலாம். இன்னும் சிலருக்கு காதினுள் கிணு கிணுவென ஏதாவது சத்தம் ஏற்படலாம். காதில் அரிப்பு ஏற்படவும் வாயப்புண்டு;.

இருந்தபோதும் சாதாரண காது அடைப்பு இருந்தால் மருத்துவரிடம் உடனடியயாக ஓட வேண்டியதில்லை. ஆயினும் கீழ் கண்ட அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காது மருத்துவரை நாடுங்கள்.

 • கடுமையான தலைச்சுற்று, உங்களைச் கூ10ழ இருப்பவை கடுமையாகச் சுழல்வது போன்ற உணர்வு ஏற்பட்டால். வழமைபோல நடக்க முடியாது சமநிலை பாதிபுற்றால்
 • காய்ச்சலும், கடுமையான வாந்தியும் சேர்ந்து வந்தால்.
 • திடீரென காது கேட்காமல் அடைத்துக் கொண்டால்

அக்கறை எடுத்து மருத்துவரைக் காண வேண்டும்.

நீங்கள் சொல்வதைக் கேட்டும், காதை பளிச்சிடும் வெளிச்சததிலும், அதற்குரிய கருவிகள் (ழவழளஉழிந) கொண்டும் பரிசோதித்து உங்கள் காதில் உள்ள பிரச்சனை காதுக்குடுமிதானா அல்லது கிருமித் தொற்று, அந்நியப் பொருட்களா அல்லது வேறு நோய்களா என்று கண்டறிவார்.

காதுக் குடுமியை அகற்றல்

ஒருவரது காதுக் குடுமியானது மிக அதிகமாகமோ மிக இறுக்கமான பாறை போலவோ அல்லாது மெதுமையானதாக இருந்தால் அதைத் தானே அகற்ற முடியும். இருந்தபோதும் செவிப் பறையில் துவாரம் உள்ளவர்கள், காதால் நீர் வடிபவர்கள், காதில் கிருமித் தொற்று உள்ளவர்கள் அவ்வாறு தாங்களே அகற்ற முயல்வது ஆகாது.

எவ்வாறு அகற்றுவது? இயர் பட்ஸ், குச்சி சட்டைப் பின், காது கிண்டி போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம்.

உள்ளங்கையில் சற்று நீரை எடுத்து அதைக் காதிற்குள் விடவேண்டும். பின்னர் தலையைச் சரிக்க உள்ளே விட்ட நீரானது குடுமியைக் கரைத்துக் கொண்டு வெளியே வந்தவிடும். இவ்வாறு சில தினங்களுக்கு குளிக்கும்போது செய்து வர காதுக் குடுமி அகன்றுவிடும்.

குடுமி சற்று இறுக்கமாக இருந்தால் ஒலிவ் எண்ணெய் அல்லது நல்லண்ணெயில் சில துளிகளை ஒரு சில தினங்களுக்கு குறிப்பட்ட காதில் விட்டுவர அவை இளகி வெளியேறும். பேபி ஓயில், கிளிசரீன் போன்றவற்றையும் சிலர் பயன்படுத்துவது உண்டு.

காதுக் குடுமியை இளக வைக்கும் மருந்துகள்

பல விதமான மருந்துகள் கிடைக்கின்றன. பெரும்பாலன அரச மருத்துவ மனைகளிலும் பல தனியார் மருத்துவர்களும் Sodium bicarbonate ear drops  துளி மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். இது விலை மலிவானது. இலகுவில் தயாரிக்கக் கூடியது. பொதுவாகப் பாதுகாப்பானது. காது சற்று வரண்டது போன்ற உணர்வு சிலரில் ஏற்படலாம். அது தானாகவே மாறிவிடும்.

உபயோகிக்க ஆரம்பித்த காது குடுமி கரையும் மருந்து குப்பிகளை 4 வாரங்களுக்கு மேல் வைத்திருக்க வேண்டாம். அகற்றிவிடவும்.

 

Waxol,  Molcer, Cerumol போன்ற விலை உயர்;ந்த குடுமி இளக்கி மருந்துகளும் இலங்கையில் கிடைக்கினறன.

எவ்வாறு உபயோகிப்பது

How-to-use-ear-drops-2

தினமும் எத்தனை தடவைகள் விட வேண்டும், தொடர்ந்து எத்தனை நாட்களுக்கு விட வேண்டும் என்பவை பற்றி உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.  துளி மருந்துகளுடன் வரும் ஆலோசனைக் குறிப்புகளையும் கவனமாகப் படிக்கவும்.

மருந்து விட ஆரம்பிக்க முன்னர் உங்கள் கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்த மறக்காதீர்கள். உங்களால் உங்களுக்கே துளிகளை விடுவது சிரமமாக இருந்தால் மற்றொருவரின் உதவியைப் பெறுங்கள்.

 • மருந்து விட வேண்டிய காதானது மேற்புறம் பார்க்குமாறு கட்டிலில் சரிந்து படுங்கள்.
 • காதுமடலை சற்று முற்புறமாக இழுத்தால் காதுக் குழாய் நோரகி துளி மருந்து விடுவதற்கு வசதியாக இருக்கும்.
 • 3-4 துளிகளை விடவும். காது மருந்தால் நிறைந்துவிடும்.
 • துளி மருந்துப் போத்தலின் முனை காதில் படாதவாறு மருந்தை விடுவது அவசியம். இல்லையேல் காது மடலில் உள்ள கிருமிகளால் மருந்து மாசடைந்து தொடர்ந்து உபயோகிக்க முடியாது போய்விடும்.
 • தலையை திருப்பாது 5 முதல் 10 நிமிடங்களுக்கு அந்த நிலையிலேயே படுத்திருந்தால் மருந்து காதிலிருந்து வெளியே சிந்தாது உள்ளேயே தேங்கி நின்று குடுமியை கரைத்துவிடும்.
 • நீங்கள் படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போது மேலதிக மருந்து தானாகவே காதிலிருந்து வெளியேறிவிடும்.
 • மற்றைய காதிலும் குடுமி இருந்தால் இதைப் போல அதிலும் மருந்தை விடவும்.

பொதுவாக 3 முதல் 5 நாட்களுக்கு இவ்வாறு மருந்தை காதினுள் விட குடுமி கரைந்து வெளியேறிவிடும். ஆயினும் மருந்தை காதினுள் அவ்வாறு விட்டும் நிவாரணம் கிடைக்கவில்லை எனில் மருத்துவரைச் சந்திக்கவும். மிகுந்து இருப்பதை வெளியே எடுப்பதாக எண்ணி இயர் பட்சை காதினுள் வைத்து சுத்தப்படுத்த முயலாதீர்கள். அது வெனிளேநாது மிகுந்து  இருப்பதை மேலும் உள்ளே தள்ளி நிலைமையை மோசமாக்கிவிடும்.

ear wax

குடுமிக்கென மருந்து விட்ட காதினுள் அழுக்குகள் படர்ந்திருந்தால் சற்று தண்ணீரை காதினுள் விட்டு பின்னர் தலையை மறுபுறம் சரிக்க அவை அகன்றுவிடும். வெளிப்புறக் காதை சுத்தமான துணியினால் துடைத்து சுத்தப்படுத்தலாம்.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

 

0.0.0.0.0.0

 

Read Full Post »

கேள்வி 1 :- எனது பத்து வயது மகனுக்கு கடுமையான காய்ச்சல் வந்தபோது மருத்துவரிடம் கொண்டு சென்றோம். 103, 104 என ஏறிக் காய்ந்தது. உடம்பு நோகுது என அனுங்கிக் கொண்டு கிடந்தான். இரத்தம் சோதித்துப் பார்த்து வைரஸ் காய்ச்சல் என்று மருந்துகள் கொடுத்தார். ஒவ்வொரு நாளும் கொண்டு வரச் சொல்லிப் மகனைப் பார்த்தவர் நாலாவது நாள் திரும்பவும் இரத்தம் சோதித்துப் பார்த்துவிட்டு டெங்கு என்று சொல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கச் சொன்னார். ஆஸ்பத்திரையிலை நல்ல வைத்தியம் செய்தவையள். இப்ப சுகம்;. ஆரம்பத்திலையே டெங்கு என்று சொல்லியிருந்தால் பிரச்சனை இல்லாமல் மாத்தியிருக்கலாம்தானே.

விடை:- சற்று விபரமாகச் சொன்னால்தான் ஏன் அவ்வாறு செய்தார் என்பதற்கான காரணம் புரியும். பொறுமையோடு படியுங்கள்.

டெங்குக் காய்ச்சலும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல்தான். உண்மையில் எல்லா டெங்குக் காய்ச்சலும் ஆபத்தானவை அல்ல.

50 சதவிகிதமானவர்களில் டெங்குக் காய்ச்சலானது சாதாரண வைரஸ் காய்ச்சல் போல எந்தப் பிரச்சனையும் இன்றி தானாகவே மாறிவிடும். அவ்வாறு சாதாரணமாக மாறும் டெங்குவாக இருக்கும் இடத்து, இது டெங்குவாக இருக்கலாம் என முதல்நாளே மருத்துவர் யாருக்காவது சொன்னால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரும். தேவையற்ற பரிசோதனைகளைச் செய்வதுடன் சிலர் அவசரப்பட்டு தனியார் மருத்துமனையில் அனுமதித்து வீண் செலவுகள் செய்யவும் நேரும்.

ஆனால் இரத்தப் பெருக்கு டெங்கு சற்று ஆபத்தானது. மூக்கால் இரத்தம் வடிதல், இரத்த வாந்தி போன்ற திகிலூட்டும் அறிகுறிகளுடன் வந்தாலும் பெரும்பாலனவர்கள் உயிர் தப்பிவிடுவார்கள்.

மிகவும் ஆபத்தான ‘டெங்கு அதிர்ச்சி நிலை’ காய்ச்சலால் மிகக் குறைந்த 2 சதவிகிதமானவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள். இவர்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து மருத்துவமனைகளில் அனுமதித்துப் பாரமரிப்பதற்கே குருதிப் பரிசோதனைகள் அவசியம் ஆகிறது. எனவே காய்ச்சல் வரும் ஒவ்வொருரிலும் அவ்வாறு செய்வது பொருளாதார ரீதியயாகச் சாத்தியமானதல்ல.

முதல் நாளில் (White blood cell count – WBC) என்ற பரிசோதனையையே பெரும்பாலும் செய்வார்கள். குருதியில் உள்ள வெண்குருதிக் கலங்களின் எண்ணிக்கையையின் அளவைக் கொண்டு காயய்ச்சலானது வைரஸ் கிருமியால் ஏற்பட்டதா பக்றீரியா கிருமியால் ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய முடியும்.

அதனைக் கொண்டு நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் கொடுக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை மருத்துவர் தீர்மானிப்பார்.

நோயாளியின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாவிடில் மூன்றாம் அல்லது நான்காம் நாளில் இதே பரிசோதனையை மீண்டும் செய்வார்கள். அதில் வெண்குருதிக் (White cell)  கல மற்றும் சிறுதுணிக்கை (Platelet)  எண்ணிக்கை ஆகியவற்றைக் கொண்டு அது டெங்குவான இருக்குமா என்பதை அறிய முடியும்.

டெங்குதான் என்பதை முற்றுமுழுதாக நிச்சயப்படுத்த காய்ச்சல் ஆரம்பித்த நான்காம் நாளில் (Dengue antibody test)  செய்யலாம். இருந்த போதும் சிகிச்சையைப் பொறுத்த வரையில் இது அவசியம் தேவையானது அல்ல.

அதேபோல காய்ச்சல் ஆரம்பித்த முதல் நாளிலிலேயே (Dengue antigen test)  செய்யலாம். இருந்தபோதும் இப் பரிசோதனை மூலம் அது எந்தப் பிரச்சனையும் இன்றி தானாகவே மாறும் சாதாரண டெங்குக் காய்ச்சலா அல்லது கடுமையான ‘டெங்கு அதிர்ச்சி நிலை’ என்பதைக் கண்டறிய முடியாது.

Dengue antibody test, Dengue antigen test ஆகியவை விலை கூடிய பரிசோதனைகள். ஓவ்வொன்றும் சுமார் ரூபா 2500 ற்கு மேல் வரும்.

உங்கள் குழந்தைக்கு சாதாரணWBC பரிசோதனையை மட்டும் செய்திருப்பார் என ஊகிக்க முடிகிறது. அதைக் கொண்டு சரியான நேரத்தில் உங்கள் குழந்தையை மருத்து மனையில் அனுமதித்த மருத்துவர் பாராட்டுக்குரியவர்.
1907867_10154781071405268_137329397327526091_n

0.00.0

கேள்வி:- எனக்கு நித்திரையில் குளறுபடி உண்டு. கனடாவில்; உள்ள வாழ்க்கைச் சூழல் எம் சமுதாயமக்கள் பலருக்கு நள்ளிரவு 12 மணிக்கு முன் நித்திரைக்குச் செல்வதென்பது நடக்கக் கூடிய விடயமல்ல.
பலர் அதிகாலை 5 மணிக்கு எழும்ப வேண்டியவர்களாகவே உள்ளனர். வேலை முடிந்து வந்ததும் 6.30 மணிக்கே நித்திரை போட்டு ஆட்டும், ஆனால் அதைச் சமாளித்து விடடால் அதிகாலை 1- 2 மணிவரை பின் நித்திரை வருவதில்லை.

அதன் பின் உலகில் என்ன, நடக்கிறதெனத் தெரியாது. 7 மணிவரை படுப்பேன். அதன்பின் வேலைக்குச் செல்ல தாராளமாக நேரமுண்டு.

60 வயதான எனக்கு ஒரு வைத்தியராக உங்கள் அறிவுரை என்ன? சிலர் என்னைப் பயமுறுத்துகிறார்கள்.

விடை:- பொதுவாக வளர்ந்தவர்களுக்கு 7 முதல் 8 மணி நேரத் தூக்கம் தேவைப்படும். ஆயினும் இப்பொழுது பெரும்பாலனவர்கள் 6 மணி நேரத் தூக்கத்துடன் நலமாக உள்ளனர். 9 மணி நேரத் தூக்கம் தேவைப்படுபவர்களும் உள்ளனர்.

மறுநாள் வேலையைக் குளப்பமின்றிச் செய்வதற்குத் தேவையான தூக்கம் தேவை. இது ஆளுக்கு ஆள் மாறுபடும். மரணபணுக் காரணிகளும் பரம்பரைக் காரணங்களும் இதைத் தீர்மானிக்கக் கூடும்.

வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப தூங்கும் காலத்தையும் மாற்ற வேண்டிய காலத்தில் இருக்கிறோம். 60 – 70களில் மனிதர்களின் சராசரித் தூக்கம் 8 முதல் 9 மணிவரை இருந்தது. இப்பொழுது 7 முதல் 7.5 மணிநேரம் மட்டுமே தூங்குகிறார்கள்.

இருந்தபோதும் பிறந்த சில காலத்திற்கு குழந்தைகள் 20 மணிநேரம் தூங்கக் கூடும் வளரிளம் பருவத்திலும் தூக்கம் சற்று அதிகம்.

ஊங்களைப் பொறுத்த வரையில் 1 மணி முதல் 7 மணி வரை தூங்குகிறீர்கள். மொத்தம் 6 மணிநேரம் தூக்கம் எனலாம். சற்றுக் குறைவுதான். இருந்தாலும் உங்கள் வாழ்க்கை முறையயைப் பாதிக்கவில்லை என்பதால் ஓரளவு போதும் என எண்ணுகிறேன். முடிந்தால் அரை மணி நேரம் முன்னரே தூங்குங்கள். போதுமாக இருக்கும்.

02.11.204 ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில்
வாசகர் கேள்விகளுக்கு எனது பதில்கள்

Read Full Post »

“சொன்ன சொல் மாறிவிட்டீர்கள்” என முகத்தில் அறையுமாப் போல அவர் குற்றம் சாட்டவில்லைத்தான். “நீங்கள் முந்திச் சொன்னது ஒன்று இன்று சொல்வது மற்றொன்று. படிச்ச நீங்களே இப்படி மாற்றிப் பேசலாமா” என்றும் கேட்கவில்லைத்தான்.

ஆனால் இது நீதி அநீதி, சரி பிழை போன்றவை சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. அறிவியல். அதிலும் முக்கியமாக வளர்ந்து வரும் மருத்துவ அறிவியல், அது சார்ந்த பல்லாயிரக்கணக்கான ஆதாரங்களை அடிப்படையாக வைத்து, துறை சார்ந்த நிபுணர் குழவினர் எட்டிய முடிவுகளை ஒட்டிய விடயம்.

வீட்டில் எலக்ரோனிக் கருவியில் பார்த்தபோது பிரஷர் சற்று அதிகம் என்பதால் பதற்றத்துடன் என்னிடம் வந்திருந்தார் நான் பார்த்தபோதும் கிட்டத்தட்ட அதே அளவுதான். 148/90 இருந்தது.

hypertension

“பரவாயில்லை உங்கடை வயதிற்கு அவ்வளவு இருக்கலாம்” என்று சொன்னதின் பிரதிபரிப்பு இது. அவரது வயது 63 ஆகும்.

அவர் பயப்பட்டதிலும் நியாயம் இருக்கவே செய்கிறது. நாம் மருத்துவத் தொழில் ஆரம்பித்த காலங்களில் வயதுடன் 100 க் கூட்டினால் வரும் எண்ணிக்கையின் அளவிற்கு இரத்த அழுத்தம் இருக்கலாம் என்றோம்.

பின்னர் எந்த வயதானாலும் 130/90 யைத் தாண்டக் கூடாது என்ற வரையறை வந்தது. இதையே அவர் ஞாபகத்தில் வைத்திருந்தார்.

jnc-8-dr-mansij-biswas-34-638

இப்பொழுது புதிதான வழிகாட்டல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 150/90 இருக்கலாம் என்கிறது.

உண்மைதான் மருத்துவ அறிவியல் கருத்துக்கள் கால ஓட்டத்தில் மாறுகின்றன. புதிய ஆய்வு முடிவுகளுக்கு ஏற்ப நோயாளிகளுக்கு அதிக நன்மை அளிக்குமாறு சிகிச்சை முறைகள் மாறவேண்டியது அவசியமாகிறது.

பிரஸர் பற்றிய Eighth Joint National Committee (JNC 8) யின் புதிய வழிகாட்டல்கள் என்ன கூறுகின்றன?

அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களில்

அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களது பிரஷர் ஆனது 150/90 மேல் இருந்தால் மட்டுமே சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். அதாவது மேலே உள்ள சுருக்கழுத்தம் (Systolic blood pressure – SBP )150ற்கு மேல் இருந்தால் அல்லது கீழே உள்ள விரிவழுத்தம் (Diastolic blood pressure – DBP ) 90 ற்குக் மேல் இருந்தால் மட்டுமே சிகிச்சை அளிக்கபட வேண்டும்.

jnc-8-dr-mansij-biswas-29-638

சரி புதிதாகச் சிகிச்சை அளிக்கும்போது பிரஷர் குறைந்தால் அல்லது ஏற்கனவே அவர்களது பிரசரானது சிகிச்சை காரணமாக 140/90 ற்கு கீழ் குறைந்திருந்தால் மருந்தின் அளவைக் குறைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

இல்லை உட்கொள்ளும் மருந்தின் அளவானது அவர்களுக்கு எந்தவிதமான பாதகமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது ஒத்துக்கொள்ளும் விதமாக இருந்தால் மருந்தின் அளவைக் குறைக்க வேண்டியதில்லை.

அறுபது வயதிற்கு கீழ்ப்பட்டவர்களில்

அதேநேரம் அறுபது வயதிற்கு கீழ்ப்பட்டவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது விரிவழுத்தம் ஆனது 90 ற்கு மேல் இருந்தால் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். சிகிச்சை மூலம் இதை 90 அல்லது 90ற்குக் கீழ் கொண்டு வருவது அவசியமாகும்.

அதே போல அறுபது வயதிற்கு கீழ்ப்பட்டவர்களின் சுருக்கழுத்தமானது 140 ற்கு மேல் இருந்தால் சிகிச்சையை ஆரம்பித்து அதனை 140 அல்லது அதற்குக் கீழ் குறைக்க வேண்டும்.

நீரிழிவு மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோயாளர்களில்

18 வயதிற்கு மேற்பட்ட நீரிழிவு நோயுள்ளவர்களுக்கும் நாட்பட்ட சிறுநீரக நோயாளர்களுக்கும் இதே 140/90 ற்கு மேல் இருந்தால் பிரஷருக்கான சிகிச்சை அவசியமாகும்.

new-hypertension-guidelines-40-638

நீரிழிவு நோய் உள்ளவர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் 18 வயதிற்கு மேல் எந்த வயதானவராக இருந்தாலும் அவர்களது இரத்த அழுத்தமானது 140/90 ற்கு மேல் இருந்தால் சிகிச்சை ஆரம்பிக்கப்பட வேண்டும்.

சுருக்கழுத்தமானது 140 அல்லது அதற்குக் கீழும் விரிவழுத்தமானது 90 அல்லது அதற்குக் கீழ் குறையுமாறு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

நாட்பட்ட சிறுநீரக நோயுள்ளவர்களுக்கும் (Chronic kidney disease) நீரிழிவு உள்ளவர்களது அளவுகளே பரிந்துரைக்கப்படுகிறது.

இது வரை காலமும் நீரிழிவு உள்ளவர்களது பிரஷரை 130/80 ற்கு குறைக்க வேண்டும் என்றே பெரும்பாலும் சிபார்சு செய்யப்பட்டது. ஆனால் அந்த அளவிற்கு குறைப்பதால, பக்கவாதம், இருதய நோய்கள், மாரடைப்பு, சிறுநீரக நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுப்பதில் குறிப்பிடத்தக்க நன்மைகள் எதுவும் கிடைத்ததாக ஆய்வுகள் உறுதிப்படுத்தாத காரணத்தால்தான் நீரிழிவு உள்ளவர்களுக்கும் அதே 140/90 ல் கட்டுப்படுத்துவது போதுமானது என்று சொல்கிறார்கள்.

சிகிச்சை முறை

நான்கு வகையான மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன ((thiazide-type diuretic, CCB, ACEI, or ARB)  இவற்றில் கறுப்பு இன மக்களுக்கு முதல் இரண்டில் ஒன்றை ஆரம்ப நிலையில் உபயோகிக்கச் சிபார்சு செய்திருக்கிறார்கள்.

முதல் முதலாக ஒருவருக்கு பிரஷர் உள்ளது என கண்டறியப்பட்டதும் மருத்துவர் மேற் கூறியவற்றில் ஏதாவது ஒரு பொருத்தமான மருந்தைத் சிபார்சு செய்வார். அதை உபயோகித்து வருகையில் ஒரு மாதத்தின் பின்னர் பிரசரை மீண்டும் அளவிட்டு மருத்தின் அளவை மறு பரிசீலனை செய்வார்கள். பிரஷரானது சொல்லப்பட்ட அளவிற்கு அல்லது அதனிலும் சற்று அதிகமாகக் குறைந்திருந்தால் அதே அளவில் தொடர வேண்டும். மருந்தின் அளவைக் குறைக்கக் கூடாது.

ஆனால் பிரசரின் அளவானது விரும்பப்பட்ட அளவிற்கு ஒரு மாதத்தில் குறையவில்லை எனில் மருத்துவர் ஏற்கனவே கொடுத்த மருந்தின் அளவை அதிகரிப்பார் அல்லது இரண்டாவதாக மற்றொரு மருந்தைச் சேர்த்தும் தரக் கூடும்.

பிரஷரானது விரும்பிய அளவை எட்டும் வரை மருத்துவர் தொடர்ச்சியான கண்காணிப்பை வைத்திருப்பார். இரண்டு வகையான மருந்துகளைக் கொடுத்தும் பிரஷர் குறையவில்லை எனில் மூன்றாவது மருந்தையும் சேர்த்து உபயோகிக்கவும் நேரலாம்.

இவ்வளவையும் உங்கள் அருகில் உள்ள அரச மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவர் கண்காணித்து மருத்துவம் செய்வார். மூன்று மருந்துகளாலும் பிரஷரைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாது போனால் மாத்திரம் ஒரு விசேட மருத்துவரை அணுகுவது உசிதமானது என சிபார்சு செய்கிறார்கள்.

சாதாரண இரத்த அழுத்தத்தை 120/80 என்பார்கள். இது 140/90 ற்கு மேலே சென்றால்தான் அதை உயர் இரத்த அழுத்தம் என்கிறோம். இதில் எந்த மாற்றத்தையும் புதிய வழிகாட்டல் செய்யவில்லை. வயதானவர்கள் மற்றும் நீரிழிவு உள்ளவர்களில் இதை எந்த அளவிற்குக் குறைக்க வேண்டும் என்பதையே புதிய வழிகாட்டல் சொல்கிறது.

மருந்துகளைப் பற்றிச் சொன்னபோதும் பிரஷரைக் குறைப்பதில் வாழ்க்கை முறை மாற்றங்கள் உதவும் என்பதை மநுப்பதற்கில்லை. ஆரோக்கியமான உணவு முறை, தினசரி உடற் பயிற்சி, எடையைச் சரியான அளவில் பேணுதல் போன்றவற்றை கடைப்பிடிப்பது அவசியம் என்பதை புதிய வழிகாட்டல்கள் உறுதிப்படுத்தவே செய்கிறது.

எனவே மருந்தைப் போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற மனநிலையை மாற்ற வேண்டும்.

bp-home-remedies

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது எப்போதும் அவசியமானதே. இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் பொதுவான உடல்நலம் மேம்படுவது மாத்திரமின்றி மருந்துகளின் அளiவுகளையும் குறைக்க முடியும் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

“மீண்டும் சொன்ன சொல் இன்னும் சில வருடங்களில் மாறலாம். புதிய புதிய கண்டுபிடிப்புகளின் பயனாக நோயாளிகளுக்கு நன்மை அதிகம் கிடைக்கும் பட்சத்தில்” என விடைபெறு அவர் எழுந்தபோது நான் கூறியதை ஆமோதிப்பது போலத் தலையை ஆட்டி மனத் தெளிவோடு அவர் புன்னகைத்தார்.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.00.0

 

Read Full Post »