Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for நவம்பர், 2015

நகத்தடி இரத்தக் கண்டல் (subungal Hematoma)

‘ஐயோ’ வலியால் துடித்துக் கத்தியவர் கீழே விழவில்லை.

விழ முடியாது. கைவிரல் கார்க் கதவினுள் அகப்பட்டுவிட்டதே!!

காரிலிருந்து இறங்கியதும் தானேதான் கதவை மூடினார். இவர் எதிர் பார்த்ததை விட வேகமாகக் கதவு மூடிக் கொண்டது. கார் சற்று சரிவான இடத்தில் நின்றதால் அவ்வாறு ஆயிற்று.

16921781011_bc56a4185e_k-001

வெளிக்காயம் எதுவும் இல்லை. ஓரளவு வலிதான் பொறுத்துக் கொண்டார். ஆயினும் இரவு பொறுக்க முடியாத வலி. தூங்கவே முடியவில்லை

நகத்தடி இரத்தக் கண்டல் (subungal Hematoma)

கை அல்லது கால் விரல்களின் நகத்தின் உட்புறத்தே குருதி பரவி உறைந்து கட்டிபடுவதையே  நகத்தடி இரத்தக் கண்டல் என்று சொல்ல முடியும். இது பொதுவாக தற்செயலாக நடக்கும் சிறு விபத்து மூலமே ஏற்படுகிறது. இதன் போது நகமானது கடும் ஊதா அல்லது கருப்பு நிறமாக மாறும். உண்மையில் நகத்தின் நிறம் மாறுவதில்லை. நகத்தின் அடியிலுள்ள உறைந்த குருதி கருமையாகத் தோன்றும்.

மேற் கூறியவருக்கு கார்க் கதவினுள் விரல் நசுங்குண்டது. நகத்தின் அடிப்புறம் முழுவதும் கருமை ஆகிவிட்டது. ஆனால் தாக்கம் குறைவாக இருந்தால் நகத்தின் அடியில் ஒரு சிறு பகுதியில் மட்டுமே இரத்தம் உறையவும் கூடும். கார்க் கதவில் அடிபபட்டது போலவே வீட்டுக் கதவு, அலமாரிக் கதவு போன்றவற்றினுள்ளும் அவ்வாறு அகப்படக் கூடும். சுவரில் ஆணி அடிக்கும்போது தவறுதலாக விரலின் மேல் அடிப்படுவதும் உண்டு.

மாறாக பாரமான பொருள் கீழே விழும்போது அதற்குக் கீழ் நகம் அகப்பட்டு நசுங்குப்படுவதும் உண்டு.

ஆனால் மிக அரிதாக ஒருவரது நகத்தின் அடிப்புறத்தில் கட்டி வளர்வதாலும் நகத்தில் கருமை நிறமாகத் தோன்றலாம்.

கட்டியா இரத்தம் கண்டியதா?

கட்டி வளர்வதால் ஏற்பட்டதா அல்லது இரத்தம் உறைந்ததா என்பதை பிரித்து அறிவது எப்படி?

இரத்தம் கண்டுவதால் ஏற்பட்டதாயின் அதற்கு முன்னர் அடிபட்டிருக்கும் என்பது நிச்சயம். இரத்தம் உறைந்ததால் ஏற்பட்டதாயின் நகம் வளரும்போது இதுவும் முன் நகர்ந்து மறைந்து விடும்.

ஆனால் அது ஒரே இடத்தில் தொடர்ந்து இருக்குமாயின் அது இரத்தம் கண்டியதால் அல்ல என்பதை நிச்சயம் கூறலாம். அவ்வாறு எனில் மருத்துவரிடம் அதைக் காட்டி ஆNலூசனை கெற வேண்டியது அவசியமாகும்.

அறிகுறிகள் என்ன

கண்ணால் பார்த்தாலே தெரிவதைத் தவிர வேறு என்ன அறிகுறி இருக்கக் கூடும் என்கிறீர்களா?

உண்மைதான். நகத்தின் அடியில் கருப்பாக, கருநீலமாக அல்லது சிகப்பாக நிறம் மாறியிருக்கும். நகத்தின் அடியில் முழமையாக இது பரவி இருக்கலாம். அல்லது ஒரு பகுதியில் மட்டுமே தோன்றவும் கூடும்.

கடுமையான வலி இருக்கும். மிக இறுக்கமாக நகத்தின் அடியில் இரத்தம் உறையும்போது அதனால் ஏற்படும் அழுத்தமே கடுமைiயான வலியை ஏற்படுத்துகிறது.

கண்டல் நகத்தின் மீது தட்டுப்பட்டாலே அடிபட்டாலோ வலி பொறுக்க முடியாதளவு மோசமாக இருக்கும்.

ஆனால் அடி கடுமையாகப் பட்டிருந்தால் இரத்தம் உறைவது மட்டுமல்லாது அடியில் விரல் எலும்பு உடைந்திருக்கவும் கூடும். அருகில் உள்ள தசைகளில் சேதம் ஏற்பட்டிருக்கவும் கூடும்.

விரல் எலும்பு உடைந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருந்தால் மருத்துவர் எக்ஸ்ரே படம் எடுத்துப் பார்ப்பார்.

சிகிச்சை

நகக் கீழ் இரத்தக் கண்டலால் கடுமையாக வலி இல்லாவிடின் எந்தவித சிகிச்சையும் தேவைப்படாது. ஐஸ் வைத்து மேலும் இரத்தம் உறைவதைத் தடுக்கலாம் இதனால் வலி குறையவும் கூடும். வலியைத் தணிக்க பரசிட்டமோல் மாத்திரை எடுத்தால் போதுமாக இருக்கும்.

வலி கடுமையாக இருந்தால் நகத்தின் அடியில் உள்ள இரத்தத்தை வெளியேற்றுவது அவசியமாகலாம்.

விரலை மட்டும் மரக்கச் செய்யத பின் மின்னால் இயங்கும் ஊசி போன்ற கருவி மூலம் இரத்தம் உறைந்துள்ள நகத்தின் பகுதியில் சிறுதுளை இடுவதன் மூலம் இரத்தத்தை வெளியேற்றுவார்கள். இதனால் வலி குணமாகும்.

மாறாக கூரான ஊசி மூலம் துiளியிடுவதும் உண்டு. கிருமித் தொற்று ஏற்படாது இருப்பதை உறுதி செய்வதற்கு துளையிட்ட நகத்தை பண்டேஸ் பண்ணுவார்கள். சில தருணங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட துளைகள் தேவைப்படலாம். துளையிட்ட பின்னர் ஒரு சில மணி நேரத்திற்கு கையை கீழே தொங்கவிடாது உயர்த்தி வைத்திருப்பதன் மூலம் மேலும் இரத்தம் வெளியேறுவதை தடுக்க முடியும்.

நகத்தின் பெரும் பகுதியை (more than 50%)  உள்ளடக்கும் வண்ணம் இரத்தம் உறைந்திருந்தால், அல்லது நகத்தின் ஓரங்கள் அருகில் உள்ள  தசைப் பகுதியில் இருந்து பிரிந்திருப்தாகத் தோன்றினால் நகத்தை முழுமையாக அகற்ற நேரும். இதுவும் முன்பு கூறியது போல விரலை மரக்கச் வைத்தே அகற்றப்படும்.

நகத்தை மருத்துவர் அகற்றவிட்டால் கூட நகக் கீழ் கண்டலானது நகத்தின் பெரும் பகுதியை உள்ளடக்குவதாக இருந்தால் நகம் சில காலத்தில் தானாகவே கழன்றுவிடவே செய்யும். விழுந்த பின்னர் சுமார் இரு மாதங்களுக்குள் புதிய நகம் அரும்புவதைக் காணக் கூடியதாக இருந்தாலும் முழுமையாக வளர்வதற்குக் 6 மாதங்கள் வரை செல்லக் கூடும்.

மேலே குறிப்பிட்டவரின் நகம் அகற்றபடவில்லை. பரசிற்றமோல் மற்றும் ஐஸ் வைப்பதன் மூலம் வலி தணிக்கப்பட்டது. சில வாரங்களில் நகம் தானாகவே விழுந்து விட்டது.

புது நகம் வளர்வதை அக்கறையோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

எனது ஹாய்நலமா புளக்கில் (26.04.2015) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0

Read Full Post »

இது என்னடா குதிக்காலில் நாண் என்கிறீர்களா? விண் பூட்டி பட்டம் ஏற்றியது ஞாபகம் வரவில்லையா? அதில் நாண் இருந்திருக்குமே. அட அந்த விளையாட்டுத்தான் தெரியாவிட்டாலும் அர்ஜீணன் தனது வில்லிற்கு நாண் பூட்டியது கூடத் தெரியாதா?

 

 

 

இரண்டு முனைகளை இணைக்கும் கயிறு போன்றதை நாண் என்பார்கள். குதிக்காலில் என்ன நாண்? குதிக்கால் எலும்பைக் கல்கேனியம் (Calcaneum) என்பார்கள். முழங்காலிலிருந்து கீழ்நோக்கி வரும் கெண்டைக் கால் தசைகளை (Calf muscles) குதிக்கால் எலும்புடன் இணைக்கும் கடினமான சவ்வைத்தான் குதிநாண் (Achiles tendon) என்பார்கள்.

 

 

இந்தச் சவ்வில் ஏற்படும் அழற்சிதான் குதிநாண் அழற்சி. அதாவது கணுக்காலின் பின்புறமாக உள்ள தடித்த நார் போன்ற சவ்வில் ஏற்படும் அழற்சி.

அறிகுறிகள்

கணுக்காலின் பின்புறமாக வலியுடன் சவ்வு இறுக்கமாக இருப்பதே முக்கிய அறிகுறியாகும். பொதுவாக இந்த வலியானது கடுமையற்றதாக ஆரம்பித்து படிப்படியாக அதிகரித்துச் செல்லும். காலையில் எழுந்திருக்கும்போது வேதனை அதிகமாக இருக்கும். மாறாக சிலருக்கு வலியானது நடக்கும்போது ஓடும்போது அல்லது பயிற்சிகள் செய்யும் போது தோன்றுவதுமுண்டு. சிலருக்கு ஓட ஆரம்பிக்கும்போது வலி இருக்கும் பின் ஓடும்போது தணிந்து ஓடி முடிந்த பின் தீவிர மாறுவதும் உண்டு.

படி ஏறுவது, கடைத்தெருவிற்கு செல்வது போன்ற நாளாந்த நடவடிக்கைகளைக் கூட இந்த நோய் பாதிக்கக் கூடும். ஆனால் ஒரு சிலருக்கு வலி கடுமையாக இருப்பதில்லை

வலியுள்ள இடத்தில் கை வைத்துப் பார்த்தால் அங்கு குதிநாண் சவ்வானது சற்று வீங்கி திரiணாக இருப்பதை உணர்வீர்கள். சற்று அழுத்திப் பார்த்தால் வலி அதிகமாகும்.

குதிநாண் வலியானது எவருக்கும் ஏற்படக் கூடும். நூறு பேரை எடுத்துக் கொண்டால் அதில் ஆறு பேர் தமது வாழ்நாளில் எப்பொழுதாவது இந் நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆண்களில் அதிகம் என்கிறார்கள்.

இந்நோயால்; அதிகம் பாதிப்புறுவது பொதுவாக விளையாட்டு வீரர்கள்தாம். கடுமையான உடற் பயிற்சிகள் செய்பவர்களிலும் வருவதுண்டு. பொதுவாக 30 முதல் 40 வயதானவர்களையே அதிகம் பாதிப்பதாக சொல்லப்பட்டபோதும் சறு;று வயது கூடியவர்களில் அதிகமாக காணக் கூடியதாக இருக்கிறது.

இந்த நோயை சரியாக நிர்ணயிக்க மருத்துவர்களுக்கு பரிசோதனைகள் எதுவும் தேவைப்படாது. தெளிவாகக் கேட்டறிவது தொட்டறிவது பேன்றவற்றுடன் கண்டுபிடித்துவிடுவார்கள். சில தருணங்களில் ultrasound scan,  MRI scan போன்றவை தேவைப்படுவதுண்டு

ஏன் ஏற்படுகிறது

இது ஏன் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டால் குணப்படுத்துவதும் அது ஏற்படாமல் தடுப்பதும் சுலபமாகும்.

மீண்டும் மீண்டும் குதிக்கால் நாணில் ஏற்படும் மிகச் சிறிய ஊறுகளின் தொடர்ச்சியாகவே வலியும் வீக்கமும் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. தேன்றிய சிறு ஊறுகள் குணமடைவதற்கு முன்னதாகவே ஏற்படும் மேலும் புதிய சிறு ஊறுகளின் ஒட்டுமொத்தமாகவே இந்நோய் தோன்றுகிறது.

ஒருவரது எத்தகைய நடவடிக்கைகள் அவ்வாறான உறுகளை ஏற்படுத்துகிறது?

அளவிற்கு அதிகமாக அதற்கு வேலை கொடுப்பதால் எனப் பொதுவாகச் சொல்லலாம். தினசரி ஓடுபவர்கள், நடனமாடுபவர்கள், டெனிஸ் போன்ற விளையாட்டுகளில் அடிக்கடி ஈடுபடுபவர்களை உதாரணம் காட்டலாம்.

பயிற்சிகள் செய்யும்போது அதற்குப் பொருத்தமான பாதஅணிகளை அணிவது காரணமாகலாம்.

மாறாக பயிற்சிகளின் போது அவதானிக்க வேண்டிய சரியான உத்திமுறைகளை அனுசரிக்காதது ஏறுமாறகச் செய்வதும் காரணமாகலாம்.

அதேபோல பயிற்சிகள் செய்பவர்கள் அவற்றின் வேகத்தை திடீரென அதிகரிப்பது, அடிக்கடி செய்ய முனைவது போன்றவையாலும் தோன்றலாம்.

ஏற்றமான தரைகளில் பயிற்சி செய்வது மற்றொரு காரணமாகும்

ஆனால் பலருக்கு தெளிவான காரணங்கள் தெரிவதில்லை. ஒரு சிலருக்கு அவர்களது பாதத்தின் இயல்பான வளைவானது அதிகமாக இருப்பதும் ஒரு காரணமாகும்.

சிலவகை மூட்டு வாதங்கள் உள்ளவர்களில்(ankylosing spondylitis , psoriatic arthritis)   இது ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்.

மருத்துவம்

உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது என்ன? கடுமையான உடற் பயிற்சிகள் செய்பவராயின் அதனை நிறுத்தி குதிநாண் சவ்விற்கு சற்று ஓய்வு கொடுங்கள். வலி தணிந்து வர மீண்டும் பயிற்சிகளை சற்று தீவிரம் குறைந்த அளவுகளில் செய்ய ஆரம்பிக்கலாம்.

வலியின் ஆரம்ப நிலையில் ஐசை பொட்டணமாகக் கட்டி குதிநாண் சவ்விற்கு மேல் வைக்கலாம். மெல்லிய பிளாஸ்டிக் பைகளில் அல்லது டவலில் ஐசைப் போட்டுக் கட்டி வலியுள்ள இடத்தில் 10 முதல் 30 நிமிடங்கள் வரை வைக்கலாம். வலி ஏற்பட்ட முதல் ஓரிரு நாட்களில் இது அதிக பலனைக் கொடுக்கும்.

வலி நிவாரணிகளை சில நாட்களுக்கு உபயோகிக்கலாம். இவ்வாறு செய்வதால் வலியின் தீவிரம் புரியாமல் நீங்கள்  தொடர்ந்து குதிநாணுக்கு அதிக வேலை கொடுத்தால் நோய் தீவிரமாகும் ஆபத்து உண்டு என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

சில பயிற்சிகள்

சில விசேட பயிற்சிகளை செய்வதன் மூலம் குதிக்கால் நாண் வலியைத் தணிப்பதுடன் அதை உறுதியாக்கவும் முடியும்.

மாடிப்படி பயிற்சி

மாடிப்படித் தட்டின் அடிப்படியில் மாடிப்படியைப் பார்த்த வண்ணம் நில்லுங்கள். கால்களை சற்று அகற்றி வைத்து பாதத்தின் முன் பகுதி மட்டும் படியில் ஊன்றும்படி நில்லுங்கள். இப்பொழுது உங்கள் குதிக் கால்கள் படியின் ஓரத்திலிருந்து வெளியே தொங்கிக் கொண்டிருக்கும். விழுந்துவிடாமல் இருக்க ஓரக் கம்பிகளைப் பற்றிக் கொண்டு குதிப்பகுதியை கீழ் நோக்கி வளையுங்கள். 20-60 செகண்டுகள் அந்த நிலையில் நில்லுங்கள். அவ்வாறு செய்யும்போது உங்கள் கெண்டை தசைகள் இறுகுவதை உங்களால் உணர முடியும். 6 தடவைகள் அவ்வாறு செய்யவும். தினமும் காலை இதைத் தொடரவும்.

 

டவல் பயிற்சி

காலையில் படுக்கையை விட்டு எழந்தவுடன் செய்யுங்கள். விரல்களை அண்மித்த பாதத்தின் முன் பாகத்தில் ஒரு டவலை கொழுவுங்கள். இப்பொழுது டவலை உங்களை நோக்கி இழுங்கள். இவ்வாறு செய்யும்போது உங்கள் விரல்களும் பாதத்தின் முற்பகுதியும் உங்களை நோக்கி இழுபடும். அவ்வாறு இழுக்கும்போது முழங்கால்கள் மடியாது நீட்டியபட இருப்பதை உறுதி செய்யுங்கள். 30 செகண்டுகள் அவ்வாறு வைத்திருங்கள்.

 

பாதத்தை உயர்த்தும் பயிற்சி

 

முழங்கால்களை செங்குத்தாக மடித்து இரண்டு பாதங்களும் தரையில் பதியுமாறு ஒரு நாற்காலியில் உட்காருங்கள். இப்பொழுது குதிக்கால்கள் தரையில் பதிந்திருக்க பாதத்தின் முற்பகுதியை மட்டும் மேல் நோக்கி உயர்த்துங்கள். சில செகண்ட்கள் அவ்வாறு இருந்தபின் பாதத்தைத் தளர்த்தி முன்போல கீழே வையுங்கள். 10 தடவைகள் திரும்பத் திரும்பச் செய்யுங்கள். அவ்வாறு தினசரி 6 தடவைகள் செயு;யுங்கள்

வேறு சிகிச்சைகள்.

 

 

ஸ்டிரொயிட் ஊசி மருந்தை அவ்விடத்தில் ஏற்றுவதை சிலர் செய்தபோதும், சவ்வு மேலும் சேதமுற வாய்ப்புகள் இருப்பதால் பெரும்பாலான மருத்துவர்கள் விரும்புவதிலலை.

அரிதாக சத்திர சிகிச்சை செய்யப்படுவதுண்டு.

குதிநாண் வலியானது படிப்படியாக அதிகரிக்கும் என ஆரம்பதத்தில் கூறினோம். மாறாக திடீரேன ஏற்படும் வலியானது அத்தசை நாரில் கிழிவு (Achilles Tendon Rupture) ஏற்பட்டதால் இருக்கலாம். இது பொறுத்திருக்கக் கூடிய நிலையல்ல. அவசரமாக மருத்துவரை அணுக வேண்டியது. அதற்கு சத்திர சகிச்சை தேவைப்படலாம் அல்லது பிளாஸடர் ஒவ் பாரிஸால் சாந்து (Plaster Of Paris cast)  போட்டு அச்சவ்விற்கு ஓய்வு கொடுக்க நேரலாம்.

எதற்கும் உங்கள் மருத்துவரை நேரே அணுகி தெளிவு பெறுவது அவசியம்.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான (1-10-2014) கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

 

0.0.0.0

 

 

.

 

Read Full Post »

“என்ன மரங்களையும் ஆகாயத்தையும் பார்த்துக் கொண்டு வாறியள். விழுந்தால் போச்சு. சிகிரியா பார்க்க வேண்டும் எவ்வளவு காலமா ஆசைப்பட்டு வந்திட்டு இப்படி ஏமலாந்திறதே?” மனைவி திட்டாத குறையாகச் சொன்னாள்.

SDC15076-001

அவள் சொன்னதைக் கேட்டதும் பழைய நினைவுகளில் மிதக்கத் தொடங்கியது அவரது மனசு. அந்தக் காலத்திலை பல்கலைக் கழகத்திலிருந்து சுற்றுலா வந்தபோது நேரம் பிந்திவிட்டது. மாலை 4 மணி. இனி ஏறினால் வர இராப்பட்டுப்போகும் என்று சொல்லி ஏறவிடயில்லை. பின் ஒரு முறை வந்தபோதும் கடும் மழை பிடித்துக்கொண்டது. அன்றும் ஏற முடியவில்லை. இனியும் விட்டால் வயசு போயிடும் ஏறமுடியாது என்ற ஏக்கத்தில் இப்பொழுது வந்திருக்கிறார்.

wasp-cage-sigiriya-rock-fortress

இன்று காலை நேரம். நல்ல சுவாத்தியம். வெய்யிலும் ஏறவில்லை. வாய்ச்சுப் போட்டுது என்று பார்த்தால் காலன் பாசக்கயிற்றை நீட்டுறானே எனக் கதிகலங்கினார்

வேறொன்றும் இல்லை ஆங்காங்கே ரீங்காரச் சத்தம். குளவி எங்கே சுத்துது என்று விடுப்புப் பார்த்துக்; கொண்டே வந்ததில்தான் ஏச்சு வாங்க நேர்ந்தது.

1340173119wasp3

குளவிகள் சிகிரிய மலையில்தான் கொட்டும் என்றில்லை. வீட்டுக் கூரைகளிலும், மரங்களிலும் கூடு கட்டியிருப்பவை உங்களிலும் கை வைக்கலாம். தேனீக்களும் கொட்டுவது உண்டு. அதைத் தவிர தௌளு, நுளம்பு, மூட்டைப்பூச்சி போன்ற பூச்சிக் கடிகளுக்கும் ஒருவர் ஆளாகலாம்.

குளவி, தேனீ போன்றவை தமது கூரினால் கொடுக்கினால் Stinger குத்துகின்றன.

ஆனால் ஏனைய பூச்சிகள் வாயினால் கடிக்கின்றன. நுளம்பும் கொட்டுகிறதாயினும் நாம் கடிப்பதாகவே சொல்லிப் பழகிவிட்டோம்.

குளவி தேனீ

Bee

குளவி தேனீ போன்றவை கொட்டியதும் அவ்விடத்தில் வலியும் சிறிய வீக்கமும் தோன்றும். வலி என்பது பொதுவாக எரிவது போன்ற வேதனையாக இருக்கலாம். தோலில் தடித்தது போன்ற வீக்கம் ஏற்படும். அது சற்று செம்மை படர்ந்த நிறத்தில் இருக்கும். வீக்கம் சுமார் 1 செமி அளவானதாக இருக்கலாம். அதைத் தவிர வேறு எந்தப் பாதிப்பும் பெரும்பாலானோரில் இருக்காது. ஆயினும் சிலரில் அவை ஒவ்வாமை அறிகுறிகளை ஏற்படுத்தும். ஒரு சிலரில் அவ் அறிகுறிகள் தீவிரமாகவும் இருக்கலாம்.

அவை குத்திய கூர் சருமத்தில் இருப்பது தென்பட்டால் அதை விரலாலோ அல்லது forceps போன்றவற்றாலோ பிடுங்கி எடுக்க முனையாதீர்கள். ஏனெனில் பிடுங்க முனையும்போது அது அமுக்கப்பட்டு அதிலிருந்து மேலும் நஞ்சு சருமத்தில் பாய்ந்துவிடும்.

wasp-0071

அப்படியானால் எதுவும் செய்யாது அப்படியே விடுவதா? இல்லை எதுவும் செய்யாது விட்டாலும் நஞ்சு ஊற வாய்ப்பு உள்ளது. எனவே சுரண்டி எடுப்பதே உசிதமானது. பிளேட், கத்திக் கூர், கிறடிட் காட் போன்ற எது கிடக்கிறதோ அதைப் பயன்படுத்திச் சுரண்டி எடுங்கள். காலம் தாமதம் செய்யாது அகற்ற வேண்டும்.

மிக அரிதாக அவை கொட்டிய இடத்தில் பெரிய வீக்கம் தோன்றலாம். நேரம் செல்லச் செல்ல வீக்கம் அதிகரிக்கக் கூடும். கொட்டுப்பட்ட கை அல்லது கால் முழவதும் அது பரவுவதுண்டு. பாரக்கப் பழப்படித்தினாலும் இவை தானே மறைந்துவிடும். இருந்தபோதும் சிலவேளை அவை கொப்ளங்கள் போலாகி உடைப்பதும் உண்டு. இவ்வாறு ஏற்படுவதற்குக் காரணம் கொட்டிய நஞ்சில் உள்ள பொருட்களுக்கு ஒவ்வாமை ஏற்படுவதாலாகும்.

இத்தகைய வீக்கங்களால் பாரிய ஆபத்து ஏற்படாது. இருந்தபோதும் சுவாசக் குழாயில் வீக்கம் ஏற்படுமாயின் மூச்சுத் திணறல் ஏற்படும். அது ஆபத்தானது உடனடியாக அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும்

பூச்சிக் கடி

பூச்சிகடி என்று சொன்னபோதிலும் பெரும்பாலோனோர் அவை கடிப்பதைக் காண முடிவதில்லை. ஆயினும் திடீரென வலி தோன்றுவதே பூச்சிக் கடியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும். ஆயினும் அவற்றின் உமிழ்நீரினால் சருமத்தில் சில மாற்றங்கள் தோன்றும்.

முதலில் அரிப்பு எரிவு போன்ற அறிகுறிகள் தோன்றும். அதைத் தொடர்ந்து சருமத்தில் சிறிய தடிப்பு அல்லது வீங்கம் தோன்றும். வீங்கம் தோன்ற சற்று காலதாமதமாகலாம். சிலவேளைகளில் 24மணி நேர தாமத்திலும் வீக்கம் தோன்றலாம். வீக்கத்தைச் சுற்றி சற்று செந்நிறம் பரவுவதுண்டு. இவ் வீக்கம் மறைவதற்கு பல நாட்கள் எடுக்கக் கூடும்.

பூச்சி கடித்த இடத்தில் வீக்கத்திற்குப் பதிலாக சிறிய நீர்க் கொப்பளங்கள் தோன்றுவதும் உண்டு. இவை மிகுந்த அரிப்பைக் கொடுக்கும். இவை ஓரிரு மணி நேரத்தில் உடைந்துபோக அந்த இடத்தில் சருமம் தடித்து சிறிய தடிப்புப் போன்ற வீக்கம் ஏற்படக் கூடும். இவையும் மறைய பல நாட்கள் எடுக்கலாம்.

இருந்தபோதும் பூச்சிக்கடிகளால் ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுவதில்லை

உடலளாவிய ஒவ்வாமை generalised (systemic) allergic reaction

குளவி அல்லது தேனீ கொட்டிய நச்சுப் பொருளானது உடலின் நோயெதிர்பு தொகுதியை தூண்டி ஒவ்வாமையை ஏற்படுத்தி, கடுமையான உடலளாவிய பிரச்சனைகளைத் தோற்றுவிக்கலாம்.

அதாவது கடித்த இடத்தில் மட்டும் அரிப்பு தடிப்பு என்றில்லாமல் உடலின் ஏனைய இடங்களுக்கும் பரவலாம்.

அது முகத்திற்கு வரவுவதும் உண்டு. உதடுகளும் நாக்கும் தடித்து வீங்கலாம். தொண்டை சுவாசக் குழாய்களுக்கும் பரவுமே ஆனால் அதனால் மூச்சுத் திணறல் ஏற்படும்.

ஆஸ்த்தா இழுப்பும் வரக் கூடும்.

ஓவ்வாமை உணவுத் தொகுத்யைத் தாக்குமெயானால் வயிற்று வலி ஏற்படும். ஓங்காளம் வாந்தி போன்றவை தொடரலாம்.

குருதிக் குழாய்களை ஒவ்வாமை தாக்குமே ஆயின் அவை திடீரென விரிவடையும். ஆதனால் சருமம் செம்மை நிறமாகலாம். இருதயத் துடிப்பு வேகமாகும். இரத்த அழுத்தம் வீழ்ச்சியடையும். இதன் தொடர்ச்சியாக தலைசுற்று மயக்கம் போன்றவையும் தொடரலாம்.

அவ்வாறு மயக்கம் மூச்சுத் திணறல் போன்ற கடுமையான அறிகுறிகளுடன் கூடிய உடலளாவிய ஒவ்வாமை ஆபத்தானது. உடனடி மருத்துவ உதவி தேவைப்படும்.

ஒன்றில்லாது பல தேனீக்களோ குளவிகளோ கொட்டினால் விளைவு மோசமாக இருக்கும். இதற்குக் காரணம் அதிகளவு நச்சு உடலில் சேருவதாலேயே ஆகும். ஒவ்வாமை விளைவாக அது இருக்காது.

சிகிரியாவில் பல குளவிகள் ஒன்றடியாகக் கொட்டுவதாலே பிரச்சனை பலருக்கு ஏற்படுகிறது. குளவிகள் கொட்டிய களோபரத்தால் எற்படும் பயப்பீதியும் பலரை மருத்துவமனைக்கு விரட்டியிருக்கலாம்.
சிகிச்சை

தேனீ அல்லது குளவி கொட்டியிருந்தால் அதன் கூரை சுரண்டி எடுப்பது பற்றி ஏற்கனவே கூறியிருந்தேன். பிடுங்கி எடுக்க முனைய வேண்டாம்.

குடித்த இடத்தில் வீங்கியிருந்தால் மருத்துவ ஆலோசனையுடன் ஒவ்வாமைக்கு எதிரான மாத்திரை (Antihistamine) போட நேரும். மிகக் கடுமையான வீக்கம் எனில் ஸ்டிரொயிட் மாத்திரைகள் தேவைப்படலாம்.
வீக்கம் அதிகமெனில் ஐஸ் வைப்பது உதவும்.

வலி கடுமையாக இருந்தால் பரசிட்டமோல் மாத்திரை பருகுங்கள்
குரொடமின் அல்லது ஹைரோகோட்டிசோன் கிறீம் வகைகள் சரும வீக்கம் குறையாவிடில் உதவும்.

அரிப்பு இருந்தாலும் அதைக் குறைக்க மேலே கூறிய கிறீம் வகைகள் உதவும். கடுமையாக அரித்தாலும் நகங்களால் சொறியவோ கூரான பொருட்களால் பிராண்டவோ வேண்டாம்இ அவ்விடத்தில் கிருமி தொற்றிச் சீழ் பிடித்துவிடும்.

தடுப்பது எப்படி?

சிகிரியா போன்ற இடங்களுக்கு மட்டுமின்றி குளிவிகள் அதிகம் இருக்கும் காட்டுப் பிரதேசங்கள் மரச் சோலைகள் உள்ள இடங்களுக்கு சுற்றுலவோ அல்லது வேறு தேவைக்களுக்கோ போகும் போது அவதானிக்க வேண்டியவை எவை?

அவை உங்கள் பால் கவரப்படுவதைத் தடுக்க வேண்டும். எவ்வாறு?

கடுமையான வர்ணமுள்ள ஆடைகள் அணிவதைத் தவிருங்கள்.

கடுமையான மணமுள்ள வாசனைத் திரவியங்கள் உபயோகிக்கக் கூடாது.

அதேபோல கடும் மணமுள்ள சம்பூக்கள் போட்டுத் தலை கழுவிய பின்னர் அவ்விடங்களுக்குச் செல்லாதீர்கள்.

அவையுள்ள இடங்களில் வேலை செய்யும் போது உங்கள் உடலை முழமையாக மூடியிருங்கள். தொப்பி, நீண்ட கைகளைக் கொண்ட மேலுடை, கால்களை மூடுமாறான உடைகள், சப்பாத்து,

பழங்களைப் பொறுக்குவது, பழங்களைப் பறிப்பது போன்ற செய்ககைகள் அவர்களை உசாராக்கிவிடும்.

திறந்த பாத்திரங்களில் வைத்து பழச்சாறுகள், மணமுள்ள பானங்களை அருந்துவதைத் தவிருங்கள். அவற்றால் கவரப்பட்டு பற்தோடி வரும் அவை உங்களைக் கடிக்கலாம். வாயினுள்ளும் புகுந்து கடித்துவிடக் கூடும். உள்ளி சாப்பிட்டால் அவை அணுகாது என்ற நம்பிக்கைக்கு தோரம் கிடையாது.

அதேபோல வாசனையுள்ள உணவுகளை உண்ணும்போதும் அவதானமாக இருக்க வேண்டும். சாப்பிட்ட கைகளில் உணவின் மணம் முழுமையாக நீங்குமாறு நன்றாக கழுவுங்கள்.

குளவிக் கூடுகளை நீங்களாக அழிக்க முனையாதீர்கள். அனுபவம் உள்ளவர்களை உதவிக்கு அழையுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

எனது ஹாய் நலமா புளக்கில் (Dec 12, 2014) வெளியான கட்டுரை

0.0.0..0.0.0

Read Full Post »