Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூன், 2016

‘உங்களுக்கான வாழ்க்கைத் துணைவர் எப்படியானவராக இருக்க வேண்டும்.’ இந்தக் கேள்வியை ஒரு பையனிடம் கேட்டால் விடை என்னவாக இருக்கும்.

ebc4763ac8f8a296cdf63f217c73e354

பெரும்பாலனவர்களிலிருந்து பெருமூச்சுத்தான் விடையாகக் கிடைக்கும். குடைந்து குடைந்து கேட்டால் ‘ஓலை பொருந்த வேணும், சீதனங்கள் சரிவர வேணும். பெட்டையும் லட்சணமாக இருக்க வேணும்’ என்ற விடை கிடைக்கலாம்.

பெண் பிள்ளைகளிடம் கேட்டால் ‘அப்பா அம்மா சொல்லுறதைத்தானே கேட்க வேண்டும்’ என்பார்கள்.

மறுதலையாக பதின்மங்களிலேயே கண்டதும் காதல் எற்படுகிறது. பருவக் கிளர்ச்சிகள் சிந்தையில் முந்துகின்றன. பாலியல் கிளர்ச்சியை வாழ்க்கைத் துணை தேடுவதிலிருந்து பிரித்தறிந்து புரிந்து கொள்ளாத வயதில் ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?..’ என்று சிந்திப்பது மறுபுறம் நடக்கின்றன.

காதல் திருமணங்கள் அதிகமாகிவிட்ட காலகட்டம் இது. இருந்தபோதும், சாத்திரமும், சாதி, சமூக, பொருளாதார அம்சங்களும்தான் திருமணப் பொருத்தத்தின் மிகப் பெரிய அம்சமாக எமது சமூகத்திலிருப்பதை கவலையோடு ஏற்க வேண்டியிருக்கிறது.

tiu

ஆனால் அவ்வாறு மந்தை ஆட்டு மனப்பான்மையில் தொடர்ந்து இருப்பது சமூக முன்னேற்றதிற்கோ தனிப்பட்ட ரீதியான நிறைவான வாழ்விற்கோ பொருத்தமானதாகத் தெரியவில்லை. தேர்ந்தெடுப்பதில் உங்கள் பங்களிப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும். ஆனால் அது வெறுமனே உணர்வு பூர்வமானதாக இல்லாமல் அறிவு பூர்வமாகவும் இருக்க வேண்டும்.

உங்களுக்கான துணைவரைத் தேடுவதின் முதல் அம்சம் அவருடன் பேசுவதுதான். இதுவே பரஸ்பர புரிதலுக்கான முதற்படி. பேசுவது மட்டுமின்றி சற்றுப் பழகினால் மேலும் நல்லது. தெளிவாகவும் திறந்த மனத்துடனும் பேசுங்கள்.

பேசுவதற்கு மேலாக அவனையோ அவளையோ நன்கு அவதானியுங்கள். மகிழச்சியானவனா, சிடுமூஞ்சியா, சந்தேகப் பேர்வழியா, சகசமாகப் பழகக் கூடியவரா, தெளிவாகத் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்பவரா அல்லது அமுசடக்கியா போன்றவற்றை அவதானியுங்கள். அந்தக் குணாதசியங்கள் உங்களது இயல்புகளுடன் இசைந்து போகக் கூடியவையா என்பதை அனுமானித்துக் கொள்ளுங்கள்.

pick-your-partner-wisely-everyone-will-be-happier-in-the-end

கலந்து பேசக் கூடியவராக இருப்பது அவசியம். உங்கள் இருவரிடையோ அல்லது குடும்பத்திற்குப் பொதுவானதாகவோ ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அது பற்றிக் கலந்துரையாடி முடிவு எடுக்கக் கூடியவராக இருப்பது அவசியம். ஒற்றைப் போக்கில் தானே திடீர் முடிவுகள் எடுப்பராயின் பின்னர் பல பிரச்சனைகள் தோன்றலாம்.

அதே போல உங்களுக்கு ஏதாவது தனிப்பட்ட பிரச்சனை சஞ்சலம் போன்றவை ஏற்படுமாயின் அவற்றிக்குக் காது கொடுத்துக் கேட்பராக இருக்க வேண்டும். துயர் மேவி கண்ணீர் சிந்தும்போது தோள் கொடுத்து ஆதரவு அளிப்பவாராக இருப்பவராக இருக்க வேண்டும்.

மனதில் அன்பும் ஆதரவும் நிறைந்தவரா என்பதைக் கண்டறிய முயலுங்கள். அவரது குடும்பச் சூழல் எவ்வாறானது. பெற்றோர் மற்றும் சகோதரங்களுடன் சுமுகமான உறவு இருக்கிறதா, விட்டுக் கொடுப்புடன் பழகக் கூடிய தன்மையுள்ள குடும்பச் சூலிலிருந்து வந்தவரா போன்றவற்றை கதையோடு கதையாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை மறைந்து போய்விட்டபோதும் குடும்ப மற்றும் உறவினர்களது தொடர்புகளும் தலையிடுகளும் குறைந்துவிடாத எமது சூழலில் குடும்பப் பின்னணி முக்கியமானது.

சில அடிப்படையான விடயங்களில் ஒத்த கருத்துள்ளவர்களாக இருப்பது விரும்பத்தக்கது.

குழந்தைகள் விடயம் முக்கியமானது. குழந்தைகள் வேண்டுமா, எவ்வளவு காலத்தின் பின் வேண்டும் போன்றவற்றில் ஓரளவேனும் புரிந்துணர்வு வேண்டும். அதேபோல மத நம்பிக்கைகள், மொழி, இனம், சாத்திர சம்பிரதாய பழக்க வழக்கங்களில் கடுமையான பற்றுக் கொண்டராக நீங்களோ அவரோ இருந்தால் அதில் நிச்சயம் ஒருமைப்பாடு வேண்டும். இல்லையேல் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல, மண முடித்த புதிதில் இல்லாவிட்டாலும் பிற்பாடு முரண்பாடுகள் தோன்றவே செய்யும்.

இருந்தபோதும் உங்கள் இருவரிடையேயும் சிற்சில வேறுபாடுகளும் இருப்பதும் வாழ்வைச் சுவார்ஸமாக்கலாம். உணவு உடை நிறம் போன்ற பல சாதாரண விடயங்களில் விருப்பு வேறுபாடுகள் இருப்பதானது விட்டுக் கொடுப்பு மனப்பான்மையை வளர்க்க உதவும். அத்தோடு தினமும் விடிந்தால் பொழுதுபட்டால் வாழ்க்கை ஒரே விதமாக அமைந்து சலிப்பு அடையாமல் இருப்பதற்கும் உதவும்.

நகைச்சுவை உணர்வு உள்ளவர் விரும்பத்தக்கது. வாழ்க்கைப் பயணத்தின் தடங்கல்களையும் சலிப்புகளையும் சுலபமாகத் தாண்ட வல்ல வலுவானது நகைச்சுவைக்கு உண்டு. தமது வாழ்க்கையைத் தாங்களே கிண்டலாக விமர்சித்;துச் சிரிப்பவர்கள் வாழ்வில் கவலையே அண்டாது. தான் மட்டும் சிரிக்காமல் உங்களையும் சிரிக்க வைக்கக் கூடியவராயின் வாழ்க்கை ஓடம் சிலிர்ப்புடன் மிதந்தோடும்.

சொற்களால் மகிழ்வதும் மகிழ்விப்பதும் நல்லதுதான். ஆயினும் ஸ்பரிசமும் தொடுவகையும் ஆதரவான வருடலும், தோளில் முகம் புதைத்தலும் பலருக்கு தங்கள் மீதான மற்றவரது அன்பை உணர்த்துவதாகவும், தங்களின் அன்பை மற்றவருக்கு வெளிப்படுத்துவதாகவும் உணர்வர். மாறாக சிலர் ஒருவர் மீது மற்றவர் முட்டுவதே வெட்கக் கேடான செயல்பாடாக எண்ணுவர்.

நீங்கள் எந்த ரகம். உங்களுக்கு ஏற்றவரைத் தேர்ந்தெடுங்கள்.

புகைப்பவரை அறவே ஒதுக்குங்கள். புகைப்பவராயின் வாழ்;க்கைப் பயணத்தில் அரை வழியில் உங்களை விட்டுவிட்டு நோயோடும் மரணத்தோடும் போராடி அவர் விடைபெற நேரலாம் என்பதை மறவாதீர்கள்.

சோடிப் பொருத்தத்திற்கு கல்வித் தகமை மிக முக்கியமானது அல்ல. இருந்தபோதும் அது உங்களிடையே போட்டி பொறாமைகளுக்கு இடம் அளிப்பதாக இருக்கக் கூடாது. மிக உயர்ந்த கல்வித் தகமையுடையவர் மிகக் குறைவான கல்வி அறிவுள்ளவரை மணக்கும்போது தான் உயர்ந்தவர் மற்றவர் ஒன்றும் தெரியாத மக்கு என்ற மேலாண்மை உணர்வு ஏற்பட வாய்ப்புண்டு. இது நாளடைவில் பல மனக்கசப்புகளை வளர்க்கும்.

அதேபோல ஒரே விதமான வேலையும் சிலரிடையே போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தலாம். இருந்தபோதும் புரிந்துணர்வுள்ள சோடிகளிடையே ஒரே விதமான கல்வியும், ஒரே விதமான தொழிலும், ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் ஊடாக இருவருக்குமே நன்மை பயக்கக் கூடும். தொழில் ரீதியான சந்தேகங்களைத் தீர்;க்கவும் பரஸ்பரம் உதவி செய்து மேம்பாடடைய கைகொடுக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை..

ஒரே இடத்தில் தொழில் புரிபவரைத் தேர்ந்தெடுப்பது உகந்ததல்ல. அதுவும் ஒருவர் அதிகாரி தரத்திலும் மற்றவர் பல ஊழியர்களில் ஒருவராகவும் தொழில் புரியும்போது மண உறவு ஏற்படுமேயாயின் சக ஊழியர்களிடையே தவறான அபிப்பிராயங்களுக்கு வித்திடும். அவர் மேல் அதிக கரிசனை காட்டுவதாக அல்லது அதீத சலுகைகள் கொடுப்பதான குற்றச்சாட்டுக்கள் ஏற்படும்.

புதிய ஒருவரைப் புரிந்து கொள்வதற்கு ஓரிரு சந்திப்புகள் போதாது. ஒரு சில மாதங்களாவது பழகிய பின்னர் தான் அவர் எப்படிப்பட்டவர் என்று கணிக்க முடியும். அதன் பின்னரே அந்த நட்பு திருமணம் மட்டும் போகலாமா எனத் தீர்மானிக்க முடியும். ஆனால் எமது சமூகச் சூழல் இன்னமும் அந்தளவு பரந்த மனப்பான்மையுடன் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளவே வேண்டும். ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தாலே முடிச்சுப் போட்டுப் பேசுவார்கள்.

தரகர்களும் தாய் தந்தையரும் மட்டுமே பேசி முடிவெடுக்கும் நிலமைதான் பெரும்பாலும் இருக்கிறது. கிராமப் புறங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.

எவ்வாறாயினும் யாராவது உடனடியாக திருமணத்தை முடிக்க வேண்டும் என்று சொன்னால் சற்று அவதானமாக இருங்கள். கபடமான உள் நோக்கம் இருக்கக் கூடும். சுற்றுக் கால அவகாசம் கேட்டு அவதானித்து முடிவிற்கு வருவதே நல்லது.

உங்கள் பார்வைக்கு எல்லாம் சரிபோலத் தோன்றினாலும் பிற்பாடு புதிய தகவல்;கள் வெளிப்படலாம்.  எனவே திடீர் முடிவு எடுக்காதீர்கள்.

அப்படியால்லாமல் நீங்கள் தேர்ந்தெடுத்தவர் உண்மையிலேயே பொருத்தமானவராக இருந்தாலும் கூட, கால ஓட்டத்தில் ஏதாவது புதிய பிரச்சனைகள் தோன்றலாம். ஆனால் அது எதிர்பாராதது. அந் நேரத்தில் ஏமாற்றிப் போட்டாய் என்று குற்றம் சாட்டாமல் புரிந்துணர்வுடன் சிக்கலைத் தீர்க்க வேண்டும்.

மருத்துவ ரீதியாக மிக நெருங்கிய சொந்தத்தில் மணம் முடிப்பது நல்லதல்ல. பரம்பரை நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்.  மச்சான் மச்சாள் திருமணங்கள் இங்கு பரவலாக இருந்தாலும் இப்பொழுது குறைந்து வருகின்றன. நெருங்கிய உறவினர் திருமணத்தால் பல விதமான பரம்பரை அலகு தொடர்பான நோய்கள் வரலாம். பிறவியிலேயே வரும் இருதய நோய்கள், அங்கக் குறைபாடுகள், மூளை மற்றும் நரம்பியல் நோய்களே அத்தகையவை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0

 

Read Full Post »

அருகில் இருந்தவர்கள் இவரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். தொழில் சார் அமைப்பின் செயற்பாட்டுக் குழுக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது.

பெரும்பாலானவர்கள் சீனி போடமல் தேநீர் குடித்தார்கள். ஒரு சிலர் ஒரு கரண்டி மட்டும் போட்டார்கள். இவர் மட்டும் மூன்று கரண்டி சீனி போட்டு நாக்கைச் சப்புக்கொட்டினார்.

Sugar-Addiction

Sugar is an addiction என்பதற்கு இவர் ஒரு உதாரணம். இப்படிச் சீனி குடிப்பவருக்கு நீரிழிவு வந்தால் என்னவாகும். இனிப்பே சாப்பிடாமல் மாய்ந்து போவாரா?

செயற்கை இனிப்புகள் 

வேண்டியதில்லை!

செயற்கை இனிப்புக்கள் கிடைக்கின்றனவே! அவற்றைச் சேர்த்துக் கொள்ளலாமா?

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகளுக்கான அதிகார சபையானது acesulfame potassium, aspartame, saccharin, sucralose, neotame, and advantame ஆகிய செயற்கை இனிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இவற்றில் பல இலங்கையிலும் கிடைக்;;கின்றன.

நீரிழிவாளர்களுக்கும், உடல் எடை அதிகரித்தவர்களுக்கும் நல்லதல்ல. காரணம் அதில் கலோரி வலு அதிகம். குருதிச் சீனியின் அளவையும் உடல் கொழுப்பையும் எடையையும் அதிகரிக்கும். அத்தகைய இனிப்புப் பிரியர்களின் தேவைகளை ஈடுசெய்யவே, கலோரி வலுக் குறைந்த இனிப்புகளான செயற்கை இனிப்புகள் சந்தைக்கு வந்தன.

sugar-vs-artificial-sweeteners

இவற்றின் நன்மை என்னவெனில் கலோரி வலு குறைவாக இருக்கும் அதே வேளை அவற்றின் இனிப்புச் சுவையானது சீனியை விடப் பல மடங்கு அதிகமாகும். உதாரணமாக 30 மிகி அளவேயான aspartame 5 கிராம் அளவு சீனியின் இனிப்புச் சுவையைக் கொடுக்க வல்லது.

எனவே பல நோயாளர்கள் தாங்களாகவே அல்லது மருத்துவரின் ஆலோசனையுடன் அத்தகைய செயற்கை இனிப்புகளை உணவு மற்றும் நீராகாரம் போன்றவற்றில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

sugar-chart

ஒரு கல்லில் இரு மாங்காய்கள். இனிப்புச் சுவையை உண்ண முடிகிறது. ஆனால் அதே நேரத்தில் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரிக்காது. நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

செயற்கை இனிப்புகள் பாதுகாப்பானவையா?

இந்த செயற்கை இனிப்புகள் பாதுகாப்பானவையா என்பதுதான் பலரின் மனத்தை அரிக்கும் சந்தேகமாகும்.?

சில காலத்திற்கு முன் வந்த சில ஆய்வுகள் சிகப்பு சமிக்கை காட்டின.

கர்ப்பமாயிருக்கும் பெண்களுக்கு இது ஆபத்தாக முடியலாம் என்றது ஒரு ஆய்வு. காலத்திற்கு முந்திய மகப்பேறு நிகழலாம் எனவும் அஞ்சப்பட்டது. சுண்டெலிகளில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வானது அதிகளவில் செயற்கை இனிப்புகளை உண்பதால் சுண்டெலிகளில் புற்றுநோய் தோன்றுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்பதுடன் நீரிழிவு தோன்றுவதற்கான சாத்தியமும் அதிகம் என்றது.

ஆயினும் இந்த ஆய்வுகளை மனிதர்களில் இதுவரை செய்து நிரூபிக்கப்படவில்லை.

இந்த நிலையில் சந்தேகங்களைத் தெளிவிப்பதற்காக ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அதிகாரசபையானது (European Food Safety Authority) அத்தகைய இனிப்புகளின் பாதுகாப்புத்தன்மை பற்றிய ஒரு மீள் ஆய்வை ஆரம்பித்தது.

அதன் பலனாக சிகப்பு ஒளி மங்கத் தொடங்கியது.

இனிப்பான முடிவுகள்

மேற்படி மீள்ஆய்வு இன்னமும் தொடர்கிறது என்றபோதும் அஸ்பார்டேம் (aspartame)  என்ற செயற்கை இனிப்புப் பற்றிய அறிக்கை 2015 ஜனவரியில் வெளியிடப்பட்டுள்ளது. 40 மிகி அளவைத் தாண்டாத அஸ்பார்டேம் இனிப்பை உட்கொள்வதால் ஆபத்துகள் ஏதும் இல்லை என அது முடிவு கூறியுள்ளது.

பிரான்சில் செய்யப்பட்ட மற்றொரு (Agency for Food, Environmental and Occupational Health & Safety)  ஆய்வும் பச்சை விளக்குக் காட்டின.

செயற்கை இனிப்புகளை உட்கொள்வதால், இனிப்புச் சுவைக்கு பழக்கப்பட்டு அதனால் மேலும் மேலும் இனிப்பபுப் பண்டங்களை தேடி உண்ணும் பழக்கம் ஏற்படுவதும் இல்லை என்கிறது. அதாவது இனிப்பு சுவைக்கு அடிமையாவது (addiction) இல்லையாம். செயற்கை இனிப்புகளை குழந்தைப் பருவத்தில் உண்பவர்கள் வளரும்போதும் அதையே நாடுவார்;கள் என்ற பரவலான கருத்திற்கு ஆதாரம் இல்லை என்று மேலும் சொல்கிறது.

எடையைக் குறைப்பதற்கு கலோரி வலுக் குறைந்த இத்தகைய செயற்கை இனிப்புகள் உதவும் எனப் பலரும் நம்புகிறார்கள். அதே நேரம் இவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு எடை அதிகரிக்கும் என்கிறன சில ஆய்வுகள்.

எது உண்மையா?

பிரான்சில் செய்யப்பட்ட அந்த ஆய்வானது எடை அதிகரிப்பதற்கோ அல்லது எடை குறைப்பிற்கோ செயற்கை இனிப்புகள் காரணம் அல்ல என்கின்றது.

இந்தச் செயற்கை இனிப்புகள் குருதியில் குளுக்கோசின் அளவை அதிகரித்து அதன் காரணமாக உடலில் இன்சுலின் சுரப்பதையும் அதிகரிக்கும் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. அதன் காரணமாக நீரிழிவு ஏற்படுவதற்கான சாத்தியத்தை செயற்கை இனிப்புகள் அதிகரிக்கின்றன என்கிறார்கள். ஆனால் அது தவறு என்கிறது பிரான்ஸ் நாட்டின் மேற் கூறிய ஆய்வு. இந்தச் செயற்கை இனிப்புகள் நீரிழிவு ஏற்படுவதற்கு காரணமாக இருக்காது என்பது தெளிவாகிறது.

கர்ப்பணிகள் இவற்றை பாவிப்பதால் கருப்பையில் வளரும் சிசு குறை மாதத்தில் பிறப்பதற்கு அல்லது வேறு ஆபத்துகளை ஏற்படுத்துவதற்கான ஆதாரம் இல்லை.

செயற்கை இனிப்புகள் நிணநீர் தொகுதியில் lymphoma எனப்படும் ஒரு வகைப் புற்று நோயை ஏற்படுத்தலாம் என முன்னர் ஒரு ஆய்வு கூறியது. ஆயினும் பிரான்ஸ் நாட்டின் மேற் கூறிய ஆய்வானது புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான ஆதாரம் இல்லை எனச் சொல்கிறது.

இருந்தபோதும் இது பற்றி மேலும் ஆய்வு செய்வது நல்லது என்கிறது அதே பிரான்ஸ் அறிக்கை.

Aspartamesideeffects1

இறுதியாக

இறுதியாகச் சொல்லக் கூடியது என்ன?

செயற்கை இனிப்புகளை உட்கொள்ளவதால் குறிபிடக் கூடிய நன்மைகள் இல்லை என்பதும் அதே நேரம் அவற்றால் ஆபத்தான விளைவுகள் ஏற்படவும் வாய்ப்பு இல்லை என்பதே ஐரோப்பிய மற்றும் பிரான்ஸ் அதிகார சபைகளின் பொதுவான சிபார்சாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. எனவே இது தொடர்பாக இரண்டு முக்கிய விடயங்களைக் கூறலாம்.

  1. எவரும் தயக்கமின்றிப் பாவிக்கக் கூடியளவு ஆரோக்கியமான உணவு என்று செயற்கை இனிப்புகளைச் சிபார்சு செய்வது இன்றைய நிலையில் முடியாது. ஏனெனில் அவற்றினால் ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்வதற்கு ஆதாரங்கள் இல்லை.
  2. இருந்தபோதும் அதிகளவு மென்பானங்களை அல்லது பழச் சாறுகளை அருந்துபவர்கள் அவற்றைக் கைவிட்டு, பதிலாக வெறும் நீரை மட்டும் உட்கொள்ள முடியாத நிலையில் இருந்தால், அதற்கு மாற்றீடாக செயற்கை இனிப்புகள் அமையும். முக்கியமாக நீரிழிவாளர்களுக்கு இது கூடியளவு பொருத்தமாக இருக்கும். அவர்கள் சீனி அதிகம் உள்ள பானங்களை அருந்துவதைத் தவிர்த்து இத்தகைய செயற்கை இனிப்புகளை தமது உணவிலும் நீராகாரங்களிலும் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை.

Artificial sweeteners safe table2

சரி ஆரம்பத்தில் பேசியவரது விடயத்திற்கு வருவோம். இனிப்பிற்கு அடிமையான அவர் செயற்கை இனிப்புகளை உபயோகிப்பது அவசியமா.

நீரிழிவு நோயற்ற ஏனையவர்கள் இவற்றை உபயோகிப்பதில் எந்தவித நன்மையும் இருப்பதாக இது வரை அறியப்படவில்லை.

எனவே அவர் அதிகளவு சீனி சேர்த்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

அதேநேரம் செயற்கை இனிப்புகளை மாற்றீடு செய்வதில் எந்த நன்மையும் இருப்பதாகத் தெரியவில்லை.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான (6 April 2015) கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0

 

Read Full Post »