சுண்ணாம்பு வெற்றிலை பாக்கு பற்றியே பலரும் பேசுகிறார்கள். ஆனால் இது சுண்ணாம்பும் கண்களும் பற்றிய பதிவு
இந்த பெண்ணின் கண்களில் எதனைக் காண்கிறீர்கள்?
அவளது கண்ணின் கரு விழியின் பெரும் பகுதி ஆடை படர்ந்தது போல வெண்மையாக கிடக்கிறது.
கருவிழியானது வெண் விழியோ என மயங்க வைக்கிறது.
இது கற்றரக்ட் (cattaract) எனப்படும் நோயல்ல. வெண்புரை எனத் தமிழில் பேசப்படும் அது வில்லையை பாதிப்பதாகும்.
இவளது கருவிழி பாதிப்படைந்திருக்கிறது. நல்ல வேளை நடுப்பகுதி பாதிப்பு அடையவில்லை. அவ்வாறாயின் அவளது பார்வை முழுமையாக மறைந்திருக்கும்.
இதற்குக் காரணம் சுண்ணாம்பு ஆகும்.
இன்று இளம் தாயாக இருக்கும் இவள் சிறு பெண்ணாக இருந்த போது சுண்ணாம்பு பைக்கற்றை வைத்து விளையாடி இருக்கிறாள். அதை அழுத்திய போது பைக்கற் வெடித்து சுண்ணாம்பு கண்ணிற்குள் பீச்சிட்டு அடித்திருக்கிறது.
கண்ணைக் கழுவினாலும் சுண்ணாம்பின் துகள்கள் மறைந்திருந்து படிப்படியாக பார்வையை பறித்து விடும். இவளுக்கும் அவ்வாறே ஆனது
நல்ல காலம் நடுப்பகுதி பாதிப்படையாததால் பார்வை தப்பிவிட்டது.
இருந்த போதும் விழியானது மடலுடன் ஒட்டி கண் சிறிசாகி திறப்பதில் சிரமம் இருந்தது. அந் நேரம் சத்திர சிகிச்சை மூலம் கண்களை திறக்க வைத்தவர் யாழ் கண் டொக்டர் குகதாசன் ஆவார்.
80 களில் இது பாரிய பிரச்சனையாக இருந்தது.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக
“சிறுவர்களின் கண்களைக் காக்க வாரீர்” என்ற நூலை அந்நேரம் எழுதினேன்.
கண்டி கண் மருத்துவர் Dr.Seiman அவர்களது ஆலோசனையுடன் எழுதினேன். ஊற்று நிறுவனம் அந்த கை நூலை வெளியிட்டது.
சுண்ணாம்பு படுவதால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் அதைத் தடுக்கும் முறைகள் பற்றியும் அந்த நூலில் எடுத்துச் சொல்லியுள்ளேன்
இன்று அந்த நூலின் படத்தை போடுவதற்காக தேடினேன். நூலைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
ஆயினும் நூலகம் இணையத் தளத்தில் அந்த நூல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நூலகத்திற்கு என நன்றிகள்
http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D