மாணவர்களுக்கு மட்டுமின்றி மருத்துவ எழுத்தாளர்களுக்கும் பயன்படக் கூடிய நூல்
மருத்துவ சொல் அகராதி
அண்மையில் ஒரு பத்திரிகை ஆசிரியரோடு பேசிக்கொண்டிருந்தேன். அவர் கூறிய ஒரு கருத்து மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தபோதும் மறுபுறத்தில் கவலையைக் கொடுத்தது.
‘இன்று பத்திரிகைகளில் மக்களால் அதிகம் விரும்பிப் படிக்கப்படும் பகுதிகளாக சினிமாவும் மருத்துவ கட்டுரைகளுமே’ இருப்பதாகக் கூறினார். அதனால்தான் ஞாயிறு பத்திரிகைகளில் மடடுமின்றி தினசரிகளிலும் மருத்துவக் கட்டுரைகளுக்கு அதிகளவு இடம் ஒதுக்கப்படுகிறதாம்.
சினிமாவுடன் மருத்துவ கட்டுரைகள் போட்டி போட வேண்டிருக்கிறதே என்பது எனது கவலை அல்ல.
‘கல்வி ரீதியாக மருத்துவத் துறை சம்பந்தப்படாதவர்கள் எழுதுகின்ற கட்டுரைகளையும் போதிய விஞ்ஞான பூர்வ ஆதாரங்கள் அற்ற கட்டுரைகளையும் பத்திரிகைகள் பிரசுரிக்கின்றனவே. இதைத் தடுக்க முடியாதா’ என்ற கேள்விக்கு விடையாகவே அவரது பதில் இருந்தது. தரம் தரமற்றது என்ற வேறுபாடுகளைக் கடந்து பக்கங்களை நலவியல் கட்டுரைகளால் நிரப்ப வேண்டிய கட்டாயம் பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் இருக்கிறது.
மேலே குறிப்பட்டதை விட மற்றொரு முக்கிய பிரச்சனை மருத்துவக் கட்டுரைகளில் இருக்கிறது. மருத்துவத்தில் பேசப்படும் அல்லது எழுதப்படும் பல கலைச் சொற்களுக்கான தமிழ்ப் பதங்களை பலரும் தங்கள் தங்கள் அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப பயன்படுத்துதைக் காண முடிகிறது. சிலர் தாங்களாகவே சில புதிய சொற்களை உருவாக்கியும் பயன்படுத்துகிறார்கள். ஒரே ஆங்கிலச் சொல்லுக்கு வௌ;வேறு தமிழ் பதங்களை பயன்படுத்துவதால் ஒத்திசைவு இல்லாமல் போக, வாசகர்கள் குழப்பமடையும் நிலை தோன்றுகிறது.
இதைத் தவிர இலங்கை எழுத்தாளர்களும் தமிழக எழுத்தாளர்களும் பயன்படுத்தும் தமிழ் மருத்துச் சொற்களுக்கு இடையே வேறுபாடு இருக்கிறது. Artery என்ற சொல்லிற்கு இலங்கையில் நாடி என்ற சொல்லைப் பயன்படுத்தும் அதே நேரம் தமிழகத்தில் தமனி என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள். இதைத் தவிர ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதுபவர்களும் உண்டு.
இதனால் கட்டுரைகள் படிப்பவர்களுக்கு தெளிவின்மையும் கருத்து மயக்கம் ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
இத்தகைய நிலையில் மருந்தியலாளரான நடராசா இராசநேரு தொகுத்துள்ள மருத்துவ சொல் அகராதி என்ற நூலின் வரவானது அவசியமானதாகவும், ஒரு முக்கிய இடைவெளியை நிரப்புவதாகவும் இருக்கிறது. தமிழில் மருத்துவக் கட்டுரைகளை எழுதுபவர்கள தாம் சொல்ல வருபவற்றை மிகத் தெளிவாகச் சொல்லுவதற்கு கைகொடுக்கும். அதே போல அவற்றை ஆர்வத்துடன் வாசிப்பவர்களுக்கும் இந்த நூல் பெரிதும் உதவும்.
இருந்தபோதும் இந்த நூலின் முக்கிய நோக்கம் அதுவல்ல.
‘இலங்கையில் உள்ள தமிழ் மாணவர்கள் ஆங்கிலத்தில் உள்ள மருத்துவ, மருந்தக மற்றும் மருத்துவத் துறை சார்ந்த துணை நூல்களை தமிழில் இலகுவாக புரிந்து கொண்டு கற்பதற்கு உதவியாக பயன்படுத்தக் கூடிய ஆங்கில தமிழ் அகராதிகள் இல்லாத குறைiயினை நிவர்த்தி செய்வதன் பொருட்டு இந்த மருத்துவ சொல் அகராதியை தொகுத்துள்ளார்’ என இந்த நூலுக்கான முன்னுரையை வழங்கியுள்ள வட இலங்கை மருந்தியலாளர் சங்க செயலாளரான திரு.பா.ஆர்த்திக் குறிப்பிடுவதே முக்கிய நோக்கமாகும்.
எமது பகுதியில் தனியார் மருத்துவத் துறை போலவே, துணை மருத்துவத்துறையும் துரிதமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. அரச துறையில் மட்டுமின்றி தனியார் துறையிலும் மருந்தாளர்கள், தாதியர், மகப்பேற்று மருத்துவிச்சிகள் எனப் பலதரப்பட்ட உதவியாளர்கள் பல்லாயிரக்க கணக்கில் பணியாற்றுகிறார்கள்.
தனியார் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யு முகமாக துரித பயிற்சிகள் தமிழில் அவர்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவர்களது கல்விக்கான வழிகாட்டல் நூல்கள் தமிழில் இல்லாதிருப்பதால் ஆங்கில நூல்களையே பயன்படுத்துகிறார்கள். ஆங்கில நூல்களை தமிழ் மாணவர்கள் கற்கும் போது அவற்றைப் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு இந்த நூல் நன்கு பயன்படும்.
350 பக்கங்கள் வரை விரியும் இந்த நூல் தரமான ஆர்ட் தாளில் அச்சிடப்படுள்ளதால் நீண்ட காலத்திற்கு தாக்குப் பிடிக்கும். ஏனென்pல் கற்கும் காலத்தில் மட்டுமின்றி பின்னைய ஆண்டுகளில் ஊசாத்துணை நூலாகவும் பயன்படுத்தக் கூடிய நூலாகவும் இது இருக்கிறது.
இந்த நூலின் பெரும்பகுதியான 280 பக்கங்களில் ஆங்கில ஆங்கில தமிழ் மருத்துவ சொல் அகராதி விரிகிறது. ஆங்கில மருத்துவ பதங்களுக்கான தமிழ் சொல்லைத் தருவதுடன் நின்றுவிடாது அவற்றிக்கான விளக்கங்களை ஆங்கிலத்திலும் தந்திருப்பதால் இதைக் கலைக்களஞ்சியமாகவும் சொல்லலாம். இதன் காரணமாக மாணவர்கள் குறிப்பட்ட சொல்லிற்கான தமிழ் சொல்லை மட்டுமின்றி அதன் அர்த்தததையும் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள உதவும்.
நூலின் மிகுதி 70 பக்கங்களையும் மிகவும் பயனுள்ள பின்னிணைப்புகள் அணி செய்கின்றன. இலங்கையில் பாவனையில் உள்ள பொதுவான மருந்துகளின் பெயர்த் தொகுப்பு, மருந்தாக்கல் இரசாயனம், உடற் கூற்றியலும் சுகாதரமும், பொதுவான நோய்களின் பெயர் தொகுப்பு, பொதுவான பக்கவிளைவுகளின் தொகுப்பு முதற்கொண்டு 13 பின்னிணைப்புகள் இருப்பது நூலின் பெறுமதியை அதிகரிக்கிறது.
இந்த நூலை வட இலங்கை மருந்தியலாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.
நூலாசிரியர் நடராசா இராசநேரு தொகுத்துள்ளார். மருந்தியலாளரான இவர்தான் வட இலங்கையில் மருந்தியலாளர் கற்கை நெறியை வடபுலத்தில் ஆரம்பித்த முன்னோடி எனலாம். 2003 ம் ஆண்டு சாயிராம் மருந்தியலாளர் கல்வி நிறுவனத்தை வடபகுதியில் ஆரம்பித்தார். அதனூடாக மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் கொடுத்து வெளிவாரி பரீட்சைக்கு தயார்படுத்தினார். இவரது பயிற்சி வகுப்புகள் காரணமாக வடபகுதியைச் சேர்ந்த நூறு;றுக்கு மேற்பட்டவர்கள் வெளிவாரி மருந்தியலாளர் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது யாழ்ப்பாணக் கல்லூரி வெளிவாரி பட்டப்படிப்பு பிரிவில் மருந்தியலாளர் கல்வி இணைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இத்துறையில்; இவர் பெற்ற பரந்த அனுபவங்களின் துணையுடன் எழுதப்பட்ட இந்த நூல் பலருக்கும் பயன்படக் கூடியதாகும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
06.05.2017 திகதி வீரகேசரி இதழில் வெளியான நூல் அறிமுகக் கட்டுரை
0.00.0