Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஓகஸ்ட், 2017

அயர்ச்சியும் சோர்வும் அனாதரவான நிலையும் கொண்ட ஒரு பயணத்தில் சென்றுவந்தது போன்ற உணர்வு நிலை என்னைத் தொற்றிக் கொண்டது.

“ஈழப் போரின் இறுதிநாட்கள்” என்ற வெற்றிச் செல்வியின் நூலை படித்து முடித்த போது ஏற்றபட்ட உணர்வு அது.

இந்த இனத்திற்கு ஒரு விடிவு வர வேண்டும் என்ற ஆதங்கத்தில் போராட்டத்தில் இறங்கிய ஒரு உண்மையான போராளிக்கு தனது கனவுகள் சிதைந்தது மட்டுல்ல தனது இனத்தின் மானமே தாரை வா ர்க்கப்பட்டு அவமதிப்பிற்கு ஆளாக்கப்பட்டதான உணர்வு ஏற்பட்டதை இந்த நூலில் உணர முடிந்தது.

பெருங் கனவுகளுடனும் அர்ப்பணிப்புகளுடனும் இறங்கிய விடுதலைக் கனவு கலைந்து படைவீரர்களின் முன் ஒரு போத்தல் தண்ணீருக்கும் பிஸகற்றுக்கும் பிடிசோறுக்கும் கை ஏந்தும் நிலைமை எமது மக்களுக்கு ஏற்பட்டமை மிகப் பெரிய வரலாற்றுச் சோகமாகும்.

எதிரிகளை சுட்டு விழுத்துவதற்கு துப்பாக்கிகளும் ரவைகளும் இல்லாமற் போன ஒரு தருணத்தில் முழு வன்னியிலும் இருந்த பல இலட்சம் மக்கள் முல்லைத்தீவில்  மாட்டுப்பட்டுக் கொள்கிறார்.
குண்டுகளும் ஸெல் வீச்சுகளும் மக்களை வகைதொகை இன்றி கொன்றொழிக்கின்றன. காயப்படுத்துகின்றன

“தப்பியவர்கள் இருக்க இடம் இன்றியும் குடிக்க நீர் இன்றியும் தவித்தனர்…” 

“பிணங்களை புதைக்கவோ எரிக்கவோ வசதியும் இல்லை பொழும் இல்லை.” 
ஒவ்வொருவரும் தமதுஉயிரைக் காப்பாற்ற ஓடிக்கொண்டிருக்கிறார்கள்

இவற்றிற்கெல்லாம் நேரடி சாட்சியாக இருந்தவர் வெற்றிச் செல்வி.

அவரது வார்த்தைகளின் வலிமை வாசிப்பவர் மனத்தை உறைந்து போகச் செய்கிறது

“தொட்டிலிற் கிடந்த குழந்தைக்கும் உடல் சிதறும். தாயின் முலையில் பாலருந்தும் மழலைக்கும் தலை பறக்கும்.  சோற்றை அள்ளி வாயில் வைக்கப் போனவரின் கை துண்டாடப்படும்”

“சாவு நடக்காத குடும்பம் எதுவுமில்லை. கதறல் ஒலி கேட்காது நேரம் கழியவில்லை”.
எவர் காயப்பட்டாலும்அவர்களை கண்டவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கும் அளவு மனிதாதாமானம் மக்களிடம் இருந்தது.
ஆனால் நிலமை மோச அடைய அடைய தான் தப்பினால் போதும் ஓடித் தப்ப வேண்டிய நிலை மக்களுக்கு எற்பட்டது.

 “எரிக்கவோ புதைக்கவோ ஆட்களின்றி பிணங்கள் ஆங்காங்கே வாய் பிழந்து கிடந்தன.” என்பதை வாசிக்கவே மனம் கலங்குகிறது

 மருத்துவ மனைகள் இயங்காது போது. மருத்துகள் இல்லாமல் போயின. மருத்துவர்களும் மருத்து போராளிகளும் கூட மருந்தின்றி அவலமடைய நேர்ந்திருக்கிறது.
இந்த அவலங்களுக்குள்ளும் எண்ணை பொசியும் கடலை வடையை 50 ரூபாவிற்கு விற்று பணம் பண்ணும் காரியத்தையும் சிலர் செய்வதை ஆச்சரியத்தோடு பார்த்தாலும் அத்தகைய சுயநலம்தான் மனிதனின்  உண்மையான குணமோ என அயரவும் வைக்கிறது.

“நேற்றிரவு தலைவர் போயிட்டார்.  எஞ்சிய போராளிகள் சரணடையிறதாக கதை” என்பதும்,

  “யுத்தம் முடிஞ்சுப் போச்சு. பிரபாரன் செத்தாச்சு. இனிப்பயம் வேணாம்” என்பது போன்றவை காதில் விழும் உரையாடல்களாக தகவல்களைத் தருக்கின்றன.

“தயவு செய்து குப்பிகளைக் கடிக்காதீங்க அக்கா. நேற்று பின்னேரம் கூட காயம்பட்ட பிள்ளைகள் இருந்த பங்கருக்கை போய் சொன்னன். விடியப் போய் பாக்கிறன் குப்பி கடிச்சு  செத்து கிடக்குகள்” …….

  “ஒருதருக்கும் பிரயோசனம் அல்லாத சாவுகள் புதைக்கக் கூட இடம் இல்லை…” 

இவ்வாறு சொல்வது ஒரு போராளி. வாழ்வின் நியாயத்தை உணர்ந்த ஒருவன் என்பேன்.

 ஒருவாறு உயிர்தப்பி படையினர் பகுதிக்குள் வந்ததுதம். சனம் அலை மோதுகிறது.

“நிற்கும் இடத்திலிருந்து காலைத் தூக்கினால் தூக்கியபடியே நிற்க வேண்டியதுதான். மீண்டும் இடம் பிடித்து காலை ஊன்ற அரைமணிநேரம் தேவைப்படும்.”

 குளிப்பதற்கு நீரில்லை

உணவில்லை.

 சுட்டெரிக்கும் வெயிலில் அவர்களது மனம் போலவே அவர்களும் கருகிப் போகிறார்கள்.

துவேசமும் மூர்க்கமும் நிறைந்த படையினரிடையே ஓரிரு நல்ல மனம் படைத்தவர்களை போராளிகளால் இனம் காண முடிகிறது.

 நல்ல குணங்களும் கெட்ட குணங்களும் இனம் சார்ந்தவை அல்ல. அவை தனிநபர் சார்ந்தவை என்பதை புதிய உலகம் அவர்களுக்கு உணர்த்துவதை காண முடிகிறது
 ஒரு முக்கிய நூல் இது. எமது வரலாற்று ஆவணத்தின் ஒரு பகுதியாகவும் கொள்ளலாம்.
 இது தமிழகத்திலிருந்து தோழமை வெளியீடாக வந்திருக்கிறது.

பிரதிகள்  இங்கு சுலபமாகக் கிடைப்பதில்லை

நூலாசிரியரின் நூலை வாங்கியே படிக்க நேர்ந்தது.
இலங்கையில் மீள் பதிப்பு வரவேண்டியது அவசியம்.
இலங்கையில் மறுபதிப்பு வந்திருக்கிறது.
154 பக்கங்களைக் கொண்ட நூல் இது.
(விலை ரூபா 500).
மிகவும் நேர்த்தியான பதிப்பு.
தொடர்புகளுக்கு aanathy10@gmail.com
Phone 0776576807
சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்தால் சகோதர இனமும் முழு உலகமும் எமது மக்களின் ஒரு அவலக் கணத்தை உணர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
ஆசிரியரின் பிற நூல்கள்
சென்ற வருடம் ஜீலை மாதம் எனது மறந்து போகாத சில புளக்கில் வெளியான போது மிக அதிகமான வாசகர்கள் அக்கட்டுரையை படித்திருந்தனர்
இந்த மீள் பதிவு சில சிறிய மாற்றங்களுடன் வெளிவருகிறது,

எனது இக்கட்டுரையை தனது புதிய பதிப்பில் முன்னுரையாக சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது
அவருக்கு எனது நன்றிகள்.

நண்பர் சிறீ சிறிஸ்கந்தராசா அவர்களின் கட்டுரையும் முன்னுரையாக வந்திருக்கிறது. மிகவும் மகிழ்ச்சி.

“முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னும் உயிரோடு இருக்கும் எனது மக்களுக்கு” இந் நூலை சமர்ப்பித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

0.00.0

Read Full Post »

ஒரு குட்டிப் பையன் அப்பாவாகிறான்’சிறுகதையை முன்வைத்து
தி.ஞானசேகரன் படைப்பில் குழந்தைகளின் இயல்புகளும் குழந்தை உளவியலும்
எம்.கே.முருகானந்தன்

தி.ஞானசேகரன் ஒரு பன்முக ஆளுமை கொண்ட எழுத்தாளர். சிறுகதையும் நாவலுமே அவருக்கு ஆரம்பம் முதல் புகழ் சேர்த்துக் கொடுத்திருந்த இலக்கிய வடிவங்கள் என்ற போதும் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், நூல் அறிமுகங்கள் விமர்சனங்கள் என்று பல்வேறு துறைகளிலும் தனது திறமையை பதித்திருக்கிறார். ஞானம் இதழாசிரியராக அவரது பங்களிப்பு மற்றொரு விதத்தில் விதந்து சொல்லக் கூடியது.

எவ்வாறு இருந்தபோதும் ஞானசேகரன் என்று சொன்னால் நல்ல சிறந்த சிறுகதை ஆசிரியன் என்பதே பலருக்கும் உடனடியாக நினைவில் வரும். கனமான கருவுள்ள படைப்புகள், எடுத்துக் கொண்ட கருவை சிதையவிடாது கதையை நடாத்திச் செல்லும் லாவண்யமும் தெளிவான நடையும் சிறந்த திருப்பங்களும் அவரது சிறுகதைகளின் சிறப்பிற்கு காரணம் எனலாம். நீண்ட காலமாக படைப்புலகில் இயங்கிவந்த போதும் பல்வேறு மாறுபட்ட உத்திகளை தனது படைப்புகளில் கையாண்டு இருப்பதால்தான் நீர்த்துப் போகாத எழுத்தாளராக இன்னமும் படைப்புலகில் வலம்வர முடிகிறது.

ஞானசேகரன் அடிப்படையில் ஒரு மருத்துவர். இருந்தபோதும் தனது படைப்புகளில் தன்னை ஒரு மருத்துவனாக முன்னலைப்படுத்தியது மிகவும் குறைவு என்றே கருதுகிறேன்.

அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும், கடமை, கருவறை எழுதிய தீர்ப்பு போன்ற ஒரு சில கதைகளில் தன்னை மருத்துவனாக இனம் காட்டும் பாத்திரங்களை படைத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இதில் கடமை ஒரு ஆரம்ப காலப் படைப்பு 1965 ல் கலைச்செல்வியில் எழுதியதாக இருக்க அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும் இடைக்காலப் படைப்பாக 1996ல் வெளியாகி இருக்கிறது. கருவறை எழுதிய தீர்ப்பு 1997ல் தினக்குரல் பத்திரிகையில் பிரசுரமானது.

கணவனின் சுக்கிலத்தில் விந்தணுக்கள் இல்லாத போது முகம் தெரியாத மற்றொரு ஆணின் விந்தணுக்களை பெற்று செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கும் சிகிச்சை முறை (Donor IUI) பற்றி கருவறை எழுதிய தீர்ப்பு பேசுகிறது. இக் கதையானது ஒரு மகப் பேற்று நிபுணரின் பார்வையாக இருந்த போதும், அதற்கு அப்பால் இனப் பிரச்சனையையும் அதையும் தாண்டிய நட்புணர்வு பற்றியும் பேசுகிறது. முடிவு எதிர்பாராதது. கதை முடிந்த பின்னரும் வாசகன் மனத்தில் பல கற்பனைகளை கருக்கொள்ள வைக்கும் திருப்பமாக அமைந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

இருந்தபோதும் தன்னை மருத்துவனாக அடையாளப்படுத்தாமலே, ஒரு மருத்துவன் சமூகத்திற்கு சொல்ல வேண்டிய கருத்துகளை இன்னும் சில சிறுகதைகளில் சொல்லியிருப்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

கட்டறுந்த பசுவும் கன்றுக் குட்டியும் என்ற கதையானது தாய்பாலின் மகிமையை சொல்லாமல் சொல்கிறது. புpரச்சார நெடி சற்றும் அடிக்காமல் உணர்வுபூர்வமான கதையாக நகர்த்தியிருந்தாலும் தாய்பால் ஊட்டுவது பற்றி மேல்தட்டு நாகரீகப் பெண்களிடையே நிலவிவந்த தவறான கருத்துக்களை அழகாக அப்படைப்பில் சுட்டிக் காட்டுகிறார்.

அவருடைய சிறந்த படைப்புகளில் இதுவும் என்று பல விமர்சகர்கள் சுட்டிக் காட்டியிருப்பதை அவதானித்திருக்கிறேன். இக்க கதை சொல்லும் செய்திக்கு அப்பால் சிறந்த நடையுடன் கூடிய படைப்பாகவும் உள்ளது. அத்துடன் இது ஒரு குறியீட்டுப் படைப்பாக அமைவதையும் அவதானிக்க முடிகிறது.

இது போலவே அவரது உன்னத படைப்புகள் எனப் போற்றப்படும் அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும், காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளும் ஆகிய இரண்டும் கூட குறியீட்டுப் பாணியின் அமைந்த படைப்புகளே. இந்த இரண்டையும் குறியீட்டுப் பாணியில் எழுத முனைந்தமைக்கு, அரசு மற்றும் இராணுவத்திற்கு எதிரான கருத்துக்கைளச் வெளிப்படையாகச் சொல்ல முடியாத, அன்றைய பயங்கரமான சூழலும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.

தமிழர் சார்பாக அரச படைகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தவர்கள் கொலை செய்யப்படுவதும் காணமால் போவதும் நித்திய கண்டமாக இருந்த நிலையில் தனது நியாயமான கருத்துக்களை பலமாக முன்வைப்பதற்கு குறியீட்டு வடிவத்தைத் தவிர வேறு தேர்வு அவருக்கு இருந்திருக்க முடியாது. ஆனால் கட்டாயத் தேவைக்காக புகுத்தப்பட்ட வடிவமாக இல்லாமல் சிறந்த கலைப் படைப்புகளாக அவை அமைந்திருந்தன. வெளியான நேரத்திலேயே இவற்றை நான் வாசித்து மகிழ்ந்ததுண்டு. இப்பொழுது மீள்வாசிப்பின் போதும் அந்த உணர்வு கெடவில்லை என்பதை மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

விமர்சகர்களின் பாராட்டை அதிகம் பெறாதபோதும் சிறந்த ஒரு படைப்பாக நான் கருதுவது ‘ஒரு குட்டிப் பையன் அப்பாவாகிறான்’ என்ற சிறுகதை ஆகும். அந்த படைப்பு பற்றியே இந்தக் கட்டுரையில் முக்கியமாகப் பேச இருக்கிறேன்.

இது அவரது ஆரம்ப கால படைப்புகளில் ஒன்று. 1971 ம் ஆண்டு கதம்பம் சஞ்சிகையில் வெளியாகியிருக்கிறது. கூடவே இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் நடாத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் தட்டிக் கொண்டது.

முழுக்க முழுக்க சிறுவனின் பார்வையாகவே இக் கதை சொல்லப்படுவது ரசனைக்கு உரியதாக இருக்கிறது. ஞானசேகரன் படைப்புகள் வழமையாகவே நல்ல தமிழில் இருக்கும். இக்கதையும் அவ்வாறே இருக்கிறது. சிறுவனின் பேச்சு மொழியில் அமைந்திருந்தால் மேலும் சுவையாக இருந்திருக்கும்.

இந்தச் சிறுகதை என்னைக் கவர்ந்து கொண்டதற்குக் காரணம் அது ஒரு சின்னப் பையனின் வாழ்க்கை முறையையும், அவன் எதிர் கொள்ளும் உணர்வுச் சிக்கல்களையும், குழந்தை உளவியலையும் மிக அற்புதமாகச் சொல்கிறது. உண்மையில் இது ஒரு அனுபவம் சார்ந்த அற்புதமான பார்வை போலவே இருக்கிறது. சிறுவயதில் தான் பெற்ற அனுபவமாக இருக்கலாம். இருந்தபோதும் அனுபவம் என்பது சொந்த அனுபவமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. பிறர் அனுபவத்தை தன் அனுபவமாக உணரும் உள்ளொளி படைத்தவனே சிறந்த எழுத்தாளனாக மிளிர முடியும்.

எனவே குழந்தப் பருவ அனுபவங்களுக்கு அப்பால், வளர்ந்த பின் குழந்தைகளுடன் பிழங்கும் போது அவதானித்து தனது கற்பனைக் குதிரையை தட்டிவிட்டதுடன், பிற்பாடு மருத்துவனாக பெற்ற அனுபவங்களும் சங்கமித்ததன் பலனாக பிறந்த படைப்பு எனக் கருத முடியும்.

ஒரு சின்னப் பையனின் நாளாந்த வாழ்க்கை ஒட்டத்தின் சித்தரிப்பாகவே கதை ஆரம்பிக்கிறது. இரவு நேரகாலத்துடன் படுக்கைக்கு செல்வது எல்லாப் பிள்ளைகளும் போலவே அவனது வழக்கமும் கூட. ஆனால் அன்று மட்டும் 9 மணியாகியும் அவனுக்கு தூக்கம் வரவில்லை.

காரணம் என்ன ?

திருமணமாகி கொழும்பு சென்றிருந்த அவனது அன்பிற்குரிய ஒரே அக்கா நீண்ட நாட்களுக்குப் பின்னர் அன்றிரவு ஊருக்கு திரும்பி வர இருக்கிறாள். அவளது வரவை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பதால்தான் தூக்கம் அவனை அண்டவில்லை. சாதாரணமாக போகிற போக்கில் சொல்லிப் போகிற ஒரு தகவல் போல முதல் வாசிப்பில் தோன்றலாம் ஆயினும் நிதானமாகப் படிக்கும் போது, குழந்தைகளின் ஒரு இயல்பான குணத்தை கதாசிரியர் வெளிப்படுத்துவதை உணர முடிகிறது.

Curiocity என்று சொல்லப்படும் ஆர்வம் என்ற குண இயல்வை அந்தச் சம்பவம் வெளிப்படுத்துகிறது.
புதியவற்றை அல்லது பிறர் விடயங்களை அறிவதில் ஆர்வம் எல்லோருக்கும் இருக்கவே செய்யும். ஆயினும் குழந்தைகளிடத்தில் இந்த ஆர்வம் அதிகமாகவே இருக்கும்.

‘இரவு எட்டு மணியாகிவிட்டால் எனக்கு நித்திரை வந்து விடும். சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவேன். …. மணி ஒன்பது அடித்தது. ஏனக்கு நித்திரை வரவில்லை. … யாழ்தேவி ரெயிலில் அக்கா வருவா…. அக்காவைப் பாரக்க எனக்கு ஆசையாக இருக்கிறது..’

எந்தவித ஆலோபனங்களும் இன்றி மிகவும் இயல்பாக பையனின் ஆசையென அவனது ஆர்வத்தை அவனது வார்தைகளிலேயே ஞானசேகரன் சொல்லியிருக்கிறார்.
இந்த சம்பவத்தில் மட்டுமின்றி திருமணமான பின்னர் தன்மீதான அக்கறை குறைந்து புது வரவான அத்தான் மேல் அவளது அக்கறை விழுவதை அந்தச் சிறுபையன் கவலையோடு கூடிய ஆர்வத்துடன் அவதானிக்கிறான்.

அதே போல அக்காவிற்கு குழந்தை பிறந்த பின்னர் அவளது கவனமானது கணவனிலிருந்து குறைந்து குழந்தை மேல் அதிகம் விழுவது போன்ற சம்பவங்களை கதாசிரியர் விபரித்து செல்கையில் அந்தப் பையனின் கவனங்கள் எங்கெங்கு விழுகின்றன என்பதை உணர முடிகிறது. இவை யாவுமே குழந்தைகளின் துருவிப் பார்க்கும் ஆர்வ இயல்பை (Curiocity) வெளிப்படுத்தி இருக்கின்றன.

குழந்தைகளில் அவதானிக்கக் கூடிய மற்றொரு இயல்பு அதிகமான சுயமரியாதை உணர்வு (self esteem) எனலாம். தன்னைப் பற்றி தானே உயர்வாக நினைத்துக் கொள்ளும் இயல்பை பெரும்பாலான குழந்தைகளில் காணலாம். மாறாக தாழ்வுணர்ச்சி உள்ள குழந்தைகளும் இல்லாமல் இல்லை. குழந்தைகளுக்கு மாத்திரமின்றி பெரியவர்களுக்கும் சுயமரியாதை உணர்வு இருக்க வேண்டும். நாளாந்த வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகம் கொடுத்து முன்நகர்வதற்கு இது அவசியமாகிறது.

குழந்தைகளிடத்தில் சுயமரியாதை உணர்வை பெற்றோர்கள் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை நவீன குழந்தை உளவியல் வலியுறுத்துகிறது. ஏனெனில் தங்களது பலங்களையும் பலவீனங்களையும் உணர்ந்து தம்மைப் பற்றிய தெளிவான நல்லப்பிராயத்தை கொண்டிருக்கும் குழந்தைகளால்தான் எதிர்மறை அழுத்தங்களை இலகுவாகக் கையாளவும், முன்னேற்ற பாதையில் நகரவும் முடியும்.

அதே நேரம் அது போலியான வரட்டுத் தற்பெருமையாக மாறக் கூடாது என்பதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய மற்றொரு விடயமாகும்.
அக்கா தன்னைக் கண்டவுடன் தன்னை அணைத்துக் கொள்வாள், தனக்குத்தான் பரிசுப்பொருட்கள் வாங்கி வருவாள். தனக்கு மட்டுமே பிஸ்கற் தருவாள். தன்னை அணைப்பாள், தன்னோடு கூடப் படுப்பாள் என ஞானசேகரன் விபரித்து செல்கையில் அந்தப் பையன் தன்னைப் பற்றிய உயர் உணர்வை கொண்டிருப்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

‘அக்காவுக்கு என்னிடம் நல்ல விருப்பம். கலியாணஞ் செய்யிறதுக்கு முன்னம், அக்கா எனக்கு ஒவ்வொரு நாளும் குளிக்கவாத்துவிடுவா, தலை சீவிவிடுவா. இரவில் பாடமும் சொல்லித் தருவா’ என்ற வசனத்தை உதாரணம் காட்டலாம்.

‘நாளைக்கு அக்கா என்னோடு கதைச்சாலும் நான் அவவோடை கதைக்க மாட்டன். அவவுக்கு இப்ப பெரிய எண்ணம். கலியாணம் முடிச்ச பிறகு கண்கடை தெரியேல்லை. அவ என்னோடை கதைக்காட்டில் எனக்கென்ன? எனக்கொண்டும் குறையமாட்டுது’ என்று கதாசிரியர் சித்தரிக்கையில் அவனது சுயமரியாதை உணர்வு சீற்றமாக வெளிப்படுகிறது.

இருளைப் பற்றிய பயம் (fear of darkness) என்பது பெரும்பாலான குழந்தைகளிடம் இருக்கும் மற்றொரு உணர்வாகும். அவர்களது கற்பனை திறன் வளர்ச்சியடையும் பருவத்திலேயே இது கூடுதலாக ஏற்படுகிறது. பேய்கள் பூதங்கள் போன்ற கற்பனை உலகிற்கும் நிஜ உலகிற்கும் இடையேயான எல்லைக் கோட்டை புரிந்து கொள்ள முடியாத பருவத்து உணர்வு இது எனலாம். இதனால் அரை இருளில் தெரியும் நிழல் கூட மூன்று தலையுள்ள பயங்கர மிருகமாக அவர்களுக்கு தோன்றி பீதியைக் கிளப்பக் கூடும்.

இருள் சூழ்ந்த சூழலில் சிறுவர்களுக்கு கவனச் சிதறல்கள் (distractions) ஏற்படுவதற்கான சந்தர்பங்கள் குறைவாக இருப்பதே இதற்குக் காரணமாகும். ‘கற்பனைகள் தெறிகட்டிப் பாய்வதனால் பகலில் தன்னை தளும்பவிடாது தற்காக்கக் கூடிய குழந்தை கூட இருளில் பாதிக்கப்படக் கூடும்’ என்று Southern Illinois University யில் துணைப் பேராசிரியரான Dr.Dobbins கூறுவதை இவ்விடத்தில் நினைவுபடுத்தலாம்.

‘அம்மா அம்மா அக்கா வந்திட்டா.’ ஏன்று கூவிக்கொண்டு சந்தோசத்துடன் துள்ளிக் குதித்து படலையடிக்கு ஓடுகிறேன். ‘…. மற்ற நாட்களில் இருட்டிவிட்டால் நான் வீட்டுக்கு வெளியே வரவும் மாட்டேன். இருட்டைக் கண்டால் எனக்கு சரியான பயம்’

கதையில் வரும் இந்தச் சிறு பகுதியானது பையனின் இருள் பற்றிய பயத்தைச் சுட்டிக் காட்டுவதுடன் அக்காவின் வருகை பற்றிய அவனது ஆர்வமானது அந்தப் பயத்தையும் தாண்டிச் செல்லும் கவன மாற்றமாக மாறுவதையும் புரிய வைக்கிறது.
குழந்தைகளில் காணும் மற்றொரு இயல்பை பின் வரும் பராவில் உணர முடியும்.

‘அக்கா ஏன் என்னோடு கதைக்கவில்லை. இருட்டில் நான் நிற்பதை கவனிக்கவில்லையோ? அக்காவுக்கு தெரியும்படியாக முன்னுக்கு போகிறேன். அக்கா இப்பவும் என்னோடு கதைக்கவில்லை. …. (அக்கா) கையில் இருக்கும் பார்சலை வாங்கிக் கொள்வதற்காக நான் கையை நீட்டுகிறேன். அக்கா ஒன்றும் பேசாமல் பார்சலைக் கொடுக்கிறா’

கண்ணுக்கு தெரியும் படி முன்னுக்கு போதல், பார்சலை வாங்குதல் ஆகியவை அக்காவின் கவனத்தை தன்மீது திருப்பும் attention seeking behavior  எனலாம். இது போன்ற செயற்பாடுகள் குழந்தைகளில் இயல்பானது தான். இதைத்தான் ஞானசேகரன் தன் சிறுகதையில் எடுத்துக் காட்டியுள்ளார்.

ஆனால் இந்தப் பழக்கமானது ஒரு குழந்தையில் அடிக்கடி அல்லது எப்பொழுதும் நிகழ்ந்தால் அது சுற்றியுள்ளவர்களுக்கு மிகப் பெரிய தொல்லையாகி விடுவதும் உண்டு. அழுது அடம்பிடித்து கவனத்தை இழுப்பது மட்டும் பிரச்சனை அல்ல. மகிழ்ச்சியூட்டும் செய்கைகளாலும் தொடர்ந்து கவனத்தை ஈர்க்க முயல்வது சிக்கலானது.

கண்டுகொள்ளாமல் விடுவதோ கண்டிப்பதோ இதைத் திருத்தும் வழியல்ல. ‘இப்பொழுது நான் வேலையாக இருக்கிறேன். இதை முடித்த பின்னர் உனது வேலைக்கு வருகிறேன்’ எனத் தன்மையாகச் சொல்லி அப்பழக்கத்தை குறைக்க முயல வேண்டும்.
ஞானசேகரனின் கதையில் வரும் இந்தப் பையன் கவனத்தை ஈர்க்க முயன்ற போதும் அதைத் மற்றவர்களுக்கு தொல்லை தரும்படியாக நீடிக்கவில்லை. அவன் தனது மனத்திற்குள் வேதனைப்படுவதாகவே கதையில் வருகிறது.

பொறாமை (jealousy) உணர்வு எல்லா மனிதர்களிலும் காணப்படக் கூடிய ஒரு உணர்வுதான். என்றாலும் குழந்தைகளில் பொதுவாக அதிகம் காணப்படுவதுண்டு. இது பல காரணங்களால் ஏற்படலாம்.

உதாரணத்திற்கு ஒரு புதிய குழந்தை குடும்பத்தில் பிறக்கும்போது குடும்பத்தினர் அனைவரதும் அக்கறை மூத்த பிள்ளையிலிருந்து, குட்டிக் குழந்தை மேல் விழுவது மூத்த பிள்ளையில் பொறாமையை தூண்டி விடலாம். அந்தப் பொறாமையானது கடுமைiயான எதிர் விளைவை ஏற்படுத்தலாம் அல்லது மென்மையான செய்கைகளாலும் வெளிப்படக் கூடும். தனது தங்கை அல்லது தம்பி மேல் மற்றவர்கள் அன்பு பகிரப்படுவதை பொறுக்க முடியாத பிள்ளைகள் தனது சகோதரம் மீது கோபம் கொள்ளவது, பேசுவது, அடிப்பது, நக்கலடிப்பது அல்லது துன்பம் கொடுப்பதை வாழ்க்கையில் நீங்களும் அவதானித்தே இருப்பீர்கள்.

இந்தக் கதையில் பையனின் மீதான அக்காவின் அக்கறை குறைந்து, அவளது கவனம் முழுக்க கணவன் மேலே விழுகிறது.

‘முந்தியெண்டால் அக்கா என்னுடன்தான் படுப்பா …. இண்டைக்கென்றாலும் நான் அக்காவுடன் படுக்கலாமென்று ஆசையோடு இருந்தேன். அக்காவுக்கு நான் ஒருத்தன் இருக்கிறன் என்ற நினைப்பே இல்லைப் போல …’

‘அத்தானின் மேல் எனக்கு கோபங் கோபமாக வருகிறது. அவருக்கு பெரிய நடப்பு..’ என விபரித்து செல்வதானது அந்தச் சிறுவனுக்கு தனது அத்தானில் ஏற்படும் பொறாமை உணர்வை எடுத்துக் காட்டுகிறது.

குழந்தைகளில் ஏற்படும் மனமுறிவுகளையும் கவலைகளையும் கவனத்தில் எடுக்காது விடக் கூடாது. இல்லையேல் அவர்கள் தாங்கள் உதாசீனப்படுத்துவதாக உணர்வர். இது அவர்களது மனவளர்ச்சியையும் எதிர்கால வாழ்வையும் பாதிக்கக் கூடும். பெரியவர்கள் பிள்ளைகளது மனமுறிவுகளை அவதானித்து அவற்றைச் சீர் செய்ய வேண்டும். Rupture and Repair என இதைக் குறிப்பிடுவர்.

‘ஏனடா உனக்கு என்னோடை கோவம்…’
ஏன்னால் பேச முடியவில்லை. அழுமை அழுகையாக வருகிறது. கண்களில் நீர் முட்டி கன்னங்களில் வழிகிறது.

அக்கா என்னை தன்னுடைய மார்போடு அணைக்கிறா. நான் அக்காவுடைய நெஞ்சிலே முகத்தை புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுகிறேன்…’

அந்தச் சிறுவனில் ஏற்பட்ட மனத்தாங்கலை, அவனை அணைத்து வைத்து ஆதரவுடன் பேசுவதன் மூலம் அக்கா சரிசெய்கிறாள். மனமுறிவு ஆற்றுப்படுத்தப்படுகிறது.

உளவியலில் இன்று பேசப்படும் ஆற்றுப்படுத்தல் (counseling) சிகிச்சை முறையை அக்கா அன்றே செயன்முறையில் காட்டிவிட்டமையானது ஞானசேகரனின் உன்னத படைப்பாற்றலின் வெளிப்பாடாகும்.

ஒரு குழந்தையின் உணர்வுகளை மிக நுட்பமாக பதிவு செய்தது மாத்திரமின்றி அதில் ஒளிந்திருக்கும் குழந்தைகளின் உளவியலை மிகச் சிறப்பான முறையில் கலைப்படைப்பாக்கிய ஞானசேகரன் பாராட்டுக்குரியவர்.

இது அவரது முப்பதாவது வயதுப் படைப்பு. இன்று அகவை 75ல் பேரக் குழந்தைகளுடன் கூடிக் குமாளமடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் குழந்தைகள் பற்றிய அவரது பார்வை மேலும் விரிந்திருக்கும். இன்று அவர் குழந்தைகள் பற்றி எழுதினால் எவ்வாறு இருக்கும் எனக் கற்பனை பண்ணிப் பார்ப்பது சுகமாக இருக்கிறது.

எம்.கே.முருகானந்தன்

தி.ஞானசேகரன் அவர்களது 75 பிறந்ததின விழா மலரில் சென்ற வருடம் எழுதிய கட்டுரை

0.00.0

Read Full Post »