கணவன் அமைவதெல்லாம்
எம்.கே.முருகானந்தன்.
மூச்சு இளைத்துக் கொண்டு வந்த அந்தப் பெண்மணியின் முகத்தில் இளைப்பை விட மோசமாகச் சோர்வு அப்பிக் கிடந்தது.
அவள் ஆஸ்மாவிற்கு இன்ஹேலர் உபயோகித்துக் கொண்டு வருகிறாள். ஒழுங்காக உபயோகிப்பதாகவும் சொன்னாள். இருந்த போதும் அவளால் இயல்பாகப் பேச முடியவில்லை. நடக்க முடியவில்லை. ஒரு தள்ளாட்டம்.
அதற்கு மேலாக ஏதோ ஒரு பற்றற்ற தன்மை இருப்பதை உணர முடிந்தது.
ஆனால் அவளது சோர்வு ஆஸ்த்மாவால் வந்த சோர்வு அல்ல என்பதை எனது மருத்துவ அனுபவம்; சொல்லியது.
55 வயதுப் பெண்மணி. மூன்று பிள்ளைகள். கடைசிப் பிள்ளைக்கு வயது 23. மூவரும் மணமுடித்து வேறு வேறு இடங்களில் வசிக்கிறார்களாம். இவளும் கணவனும்தான் வீட்டில் தனியாக.
பிள்ளைகளைப் பிரிந்திருப்பதை இவளால் தாங்க முடியவில்லையா? அதனால்தான் உளரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறாளா என யோசித்தேன்.
பிள்ளைகள் சற்று தூரத்தில் இருந்தாலும் இடையே வந்து செல்வதாகவும் அவர்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர்களைப் பற்றி எந்தவித கவலையும் இல்லை என்றாள்.
“கணவன்?”
அவராலும் “பிரச்சனை இல்லை” என்றாள்.
அவளது பதிலிலிருந்து எதுவும் பிடிபடாததால் அவளது மனநிலைப் பாதிப்பின் தீவிரத்தை அறிய முயன்றேன்.
மனம் எந்த நேரமும் சோர்வாக இருப்பதாகவும், எந்த வேலையையும் செய்ய முடியதளவு களைப்பாகவும் விருப்பக் குறைவாகவும் இருக்கிறதாம். நெஞ்சு படபடப்பதாகவும் நித்திரைக் குழப்பம் அதிகம் என்பதையும் அவளது வாயிலிருந்து கேட்கக் கூடியதாக இருந்தது.
அழுகை வருகிறதா எனக் கேட்டபோது சின்ன விடயங்களையும் தாங்க முடியாது அழுகை பீறிட்டு வருவதாகவும் ஒத்துக் கொண்டாள்.
வாழ்க்கையில் பற்றில்லாத மாதிரியும் ஏன் வாழ வேண்டும் செத்துப் போகலாம் என்பது போன்ற சிந்தனைகள் வருகிறதா என்று கேட்டேன்.
‘ஓம் ஐயா. ‘ இனி என்ன? செத்தே போகலாம் என்றிருக்கு’ என்றாள்.
இவை யாவும் தீவிர மனநிலைத் தாக்கத்தின் அறிகுறிகளாகத் தெரிந்தன.
“ஐயா”
இப்பொழுது அவளது முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன்.
அவளது சோர்ந்து கிடந்த முகத்தில் திடீரென ஒரு உறுதி பளிச்சிட்டது. ஏதோ சொல்ல முற்பட்டாள். வார்த்தைகளை தேடி அலைந்தாள். வாய் திணறியது.
“ஐயா’… ‘ஐயா”
நான் மௌனித்து அவளது சத்திய வாக்குகளுக்காகக் காத்திருந்தேன்.
‘உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்ல வேணும்.
.. நான்.. நான்.. எனக்கு சின்ன வயசிலிருந்தே ஆஸ்த்மா. குளிசைகள் தான் தருவினம் அந்த நாளிலை. பிறகு குளிசைகளோடு காக் கிளாஸ் சாரயம் மருந்தோடு சேர்த்து தந்தினம். நல்ல சுகம் வரும். ..’
“. முதலிலை ஆஸ்மா வரும்போதுதான் குளிசையோடு சாராயம் எடுத்தது. பிறகு பிறகு ஒவ்வொரு நாளும் இரவிலை மருந்தோடு காக் கிளாஸ் சாரயம் எடுத்தன். காலம் போகப் போக கால் கிளாஸ் சாராயத்திற்கு சுகம் கிடைக்கவில்லை. பிறகு அரைக் கிளாஸ் எடுத்தால்தான் சுகம் கிடைத்தது. ..”
“.. ஒரு நேரம் போதவில்லை. அரைக் கிளாஸ் இரண்டு நேரம் எடுக்க நேர்ந்தது. ..’
இப்ப இரண்டு நேரமும் ஒவ்வொரு கிளாஸ் எடுக்காவிட்டால் ஒரு வேலையும் ஓடாது என்ற நிலையாகிவிட்டது.”
“ஐயாட்டை முந்தியும் ஒருக்கால் வந்து மருந்தெடுத்தனான்.
நான் வன்னி. இஞ்சை சொந்தக்கார வீட்டை நின்றுதான் மருந்து சாப்பிட்டனான்.
மனப்பதற்றம் என்று சொல்லி மருந்து தந்தனீங்கள்.
நான் மற்றக் கதை எல்லாம் மறைச்சுப் போட்டன். நல்ல சுகம் வர வன்னிக்கு போனன். அங்கை போக மீண்டும் வருத்தங்கள் வந்திடுத்து.”
“நீங்கள் முதல் என்ரை மருந்து போட்ட நேரம் சாராயம் எடுத்தனீங்களா?” கேட்டேன்.
“இல்லை ஐயா. இஞ்சை சொந்தக்கார வீட்டைதானே நிண்டனான். குடிக்கவே இல்லை. குடிக்காட்டிலும் சுகமாத்தான் இருந்தனான்.”
குடி பிரச்சனை மனச் சோர்வு எல்லாம் இவளது சொந்த வீட்டில்தான்.
கணவன்தான் காரணமாக இருக்கவேண்டும் என மனம் கூறிய போதும், குறிக்கீடு செய்யாமல் காத்திருந்தேன்.
“ஐயா நீங்கள்தான் எனக்கு சுகமாக்கி தரவேண்டும். முந்தியும் சுகமாக்கினீங்கள். உங்களை நம்பித்தான் வன்னியிலை இருந்து உங்களட்டை வந்தனான்.” அவள் கண்கள் கலங்கின.
“..இனியும் இந்த கேடு கெட்ட பழக்கம் வேண்டாம். நீங்கள்தான் இதிலிருந்து நான் முழசாச் சுகமாக வழி காட்ட வேண்டும்.”
“நிச்சயம் செய்வன் அம்மா நீங்களும் ஒத்துழைத்தால் ..”என்றேன்.
‘நான் விட்டிடுவன். ஆனால்….”அவள் முகத்தில் கோபம் கொப்பளித்தது.
‘”..இவன் இவன் என்ரை மனுசனாலை வந்தவினை …
… தான் குடிக்கிறது போதாது என்று என்னையும் மருந்து மருந்து என்று சொல்லி நரகத்திலை தள்ளிவிட்டான்.ள”
இவனை விட்டுத் துலைச்சால்தான் சரி”
அவள் தீர்க்கமாகச் சொன்னாள்.
நான் விக்கித்து வாயடைத்து நின்றேன்.
0.0.0
மீண்டும் வந்தாள்.
ஒரு மாதத்தின் பின்னர். அன்றலர்ந்த மலர் போல முகம் பளிச்சென்றிருந்தது.
ஒரு மாத மருந்து கொடுத்திருந்தேன். குறைந்தது மூன்று மாதங்களுக்காவது தொடர்ந்து சாப்பிட நேரிடும் என்றும் அறிவுறுத்தியிருந்தேன். அதன்படி வந்திருந்தாள்.
அவள் மதுவைக் கைவிட்டு குணமடைந்தது கண்டு திருப்தி கொண்ட போது அவள் வாய் திறந்தாள்
நான் மீண்டும் வாயடைத்தேன்.
அவள் சொன்னது இவ்வளவுதான்
“அவரும் வந்திருக்கிறார். வெளியிலைதான் நிக்கிறார். கூப்பிடட்டே”
மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி தானா!!
மனம் சோர்ந்தேன்.
“அவர் தனக்கும் மருந்து தரும்படி கேக்கிறார். ஐயா உதவி செய்யுங்கள்.”
0.0.00.0.0
Read Full Post »