நீரிழிவு நோயாளருக்கு குரக்கன் நல்லதா?
குரக்கன் ரொட்டி சாப்பிட்டிருந்தேன்.
எனக்கு நீரிழிவு கிடையாது. கொலஸ்டரோல். பிரஸர், அதீத எடை என எந்தப் பிரச்சனையும் கிடையாது.
இருந்தாலும் குரக்கன் ரொட்டி சாப்பிட்டேன். காரணம் அது ஒரு ஆரோக்கியமான உணவு என்பதால்.
சிறு வயதில் அடிக்கடி சாப்பிட்டதுண்டு. ஆயினும் இப்பொழுது அடிக்கடி சாப்பிடக் கிடைப்பதில்லை. அந்த நாட்களில் ஹாட்லிக் கல்லூரிக்கு நடைபவனியில் போகும் போது தோட்ட வெளிகளால் குறுக்குப் பாதையில் செல்லும் போது அறுவடை செய்த பின்னர் காயந்து கிடந்த குரக்கன் செடிகளை தாண்டிச் சென்ற ஞாபகங்கள் வருகின்றன.
இன்று எமது தோட்டங்களில் புகையிலையும் வெங்காயமும் தான் விளைகின்றன. ஆராக்கியத்தை விட பணப் பயிர்கள் எமக்கு முக்கியமாகிவிட்டது.
எமது முன்னோர்களது உணவில் குரக்கன் முக்கிய பங்கு வகித்தது. குரக்கனில் பிட்டு. இடியப்பம், ரொட்டி என பல வகைகளில் தயாரிப்பார்கள்.
யாழ் குடாநாட்டில் இது பயிரிடப்படுவது குறைந்தாலும் அனுராதபுரம், மொனராஹல, ஹம்பாந்தோட்டை, கேகாலை, அம்பாறை போன்ற பகுதிகளில் இன்றும் பயிரடப்படுகிறது.
இது மிகவும் ஆரோக்கியமான உணவு ஆகும். இதில் புரதம், நார்ப்பொருள், தாதுப் பொருட்கள், விட்டமின்கள் போதிய அளவில் உண்டு. கொழுப்பு குறைவாகவே இருக்கிறது.
புரதம் 7.6%, மாப்பொருள் 74. விகிதமும், நார்ப்பொருள் 1.52 சதவிகிதமும் உண்டு. தாதுப் பொருட்கள் 2.5 சதவிகிதமாகும்.. இதில் மக்னீசியம். மங்கனீஸ், பொஸ்பரஸ் ஆகியவை அடங்கும். கொழுப்பு 1.35 சதவிகிதம் மட்டுமே.
இதிலுள்ள நாரப்பொருளும் பொலிபினோல்ஸ் சும் பல விதத்தில் உடல் நலத்திற்கு நல்லவையாக இருக்கின்றன. முக்கியமாக உணவு விரைவாக அகத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கின்றன. இதனால் நீரிழிவு நோயாளரின் குருதிச் சீனி அளவு மற்றும் கொலஸ்ரோல் திடீரென ஏறுவதைத் தடுக்கினறன. இதனால் நீரிழிவு மற்றும் கொலஸ்டரோல் நோயாளிகளுக்கு நல்லது.
மலச் சிக்கல் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.
இதிலுள்ள மக்னீசியம் இருதயப் பாதுகாப்புக்கு நல்லது. ஆஸ்த்மா மோசமடைவதைத் தடுக்கும் அற்றல் கொண்டது. அத்துடன் மைகிறேன் என்று சொல்லப்டும் கபலா தலைவலி அடிக்கடி ஏற்படுவதைத் தடுக்கும் என்றும் சொல்கிறார்கள்.
நீரிழிவு நோயர்களுக்கு அரிசியை விட குரக்கன் நல்லது என்று சொல்கிறார்களே. அது உண்மையா?
அரிசியில் மாப்பொருளின் அளவு 73.7 சதவிகிதம் குரக்கனில் மாப்பொருளின் அளவு 69 சதவிகிதம். எனவே மேலேட்டமாகப் பாரக்கும்போது குரக்கன் நல்லதாகவே தெரிகிறது.
ஆனால் உணவுகளை ஒரே அளவில் உண்ணும் போது அவை குருதியில் சீனியின் அளவை எவ்வளவு அதிகரிக்கன்றன என்பதை Glycemic Index (GI) கிளைசீமிக் இன்டெக்ஸ் என்ற பெயரில் கணக்கிடுகிறார்கள். இது அதிகமாக இருந்தால் நீரிழிவாளர்களின் சீனி அளவு கூடுதலாக அதிகரிக்கும். குறைவாக இருந்தால் குறைவாக அதிகரிக்கும்.
ஆரிசி, குரக்கன்; இரண்டுமே (GI) அதிகமான உணவுகள்தான்.
ஆனால் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.
அரிசியில் செய்த பிட்டினதும் ரொட்டியினதும் (GI) வருவாறு 52 மற்றும் 64. ஆனால் குரக்கனில் செய்த பிட்டினதும் ரொட்டியினதும் (GI) 71ம் 80ம் உண்பதும் ஆகும்.
இதிலிருந்து இரண்டு விடயங்களை நாம் அறியலாம்.
ரொட்டியை விட பிட்டு நல்லது. குரக்கன் மாவை விட அரிசி மா இத்தகைய உணவுகளை தயாரிக்க நல்லது.
எனவே பொதுவாக அரிசியை விட குரக்கன் போசாக்கான உணவு என்ற போதும் நீரிழிவு நோயாளரைப் பொறுத்த வரை குரக்கனை விட அரிசி நல்லது.
நீங்கள் நீரிழிவு நோயாராக இருந்தால் ஒரு நாளுக்கு அரிசி உணவையும் அடுத்த நாளுக்கு குரக்கன் உணவையும் உண்ட பின்னர் 2 மணித்தியாலயங்களுக்கு பின்னர் உங்கள் இரத்த சீனியின் அளவை குளுக்கோ மீற்டரில் அளந்து பார்த்து தெளிவு பெறுங்கள்.
ஆனால் இரண்டு நாட்களிலும் உண்ணும் உணவின் அளவானது ஒரு அளவாக இருக்க வேண்டும் என்பது முக்கியமானது.
இருந்த போதும் நீரிழிவு நோயாளருக்கு குரக்கன் கூடாது அரிசி நல்லது என்று அர்த்தப்படாது. இதை விட அது சற்று நல்லது என்று சொல்லலாம்.
அரிசி குரக்கன் உட்பட எந்த மாப்பொருள் உணவுகளை உண்ணும் போதும் பருப்பு பயறு சோயா காய்கறி என்பவற்றை 25 சதவிகிதம் சேர்த்துச் சாப்பிட்டால் சீனியின் அதிகமாக அதிகரிப்பதைத் தடுக்கலாம்
குரக்கன் அரிசியை சமைப்பதாயின் 24 மணி நேரம் நீரில் ஊறவிட்டு சமைத்தால் விரைவில் சமிபாடு அடையும். அத்துடன் அரிசி சமைப்பதற்கு வீடும் நீரை விட சற்று அதிக நீர் உபயோகிக்க வேண்டியிருக்கும்.
தமிழகத்தில் கேழ்வரகு என்றும் வடநாட்டில் ராகி என்றும் அழைக்கப்படுகிறது.
0.00.0
[…] 1 min ago பொது Leave a comment 1 […]
குரக்கன் என்ற வார்த்தையை இப்போதுதான் கேள்விப்படுகிறேன் – நல்ல வேலை , இது உதவியது 🙂 “தமிழகத்தில் கேழ்வரகு என்றும் வடநாட்டில் ராகி என்றும் அழைக்கப்படுகிறது.”