Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஓகஸ்ட், 2018

அடிக்கடி மறதி ஏற்படுகிறது? இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

பிரபா , யாழ்ப்பாணம்

பதில்:-
உங்கள் வயதில் ஞாபக மறதி என்றால் பெரும்பாலும் அசிரத்தை, வேலை நெருக்கடிகள், பல விடயங்களில் ஒரே நேரத்தில் ஈடுபடுதல், ஈடுபாடின்மை, தூக்கக் குறைபாடு போன்றவையே காரணமாக இருக்கும்.
ஒருவரின் பெயரையோ போன் நம்பரையோ, செய்ய வேண்டிய பல வேலைகளில் ஒரு சிலவற்றையோ மறப்பது எவருக்குமே இயல்பானதுதான். ஆனால் தனது கைபேசியை எப்படி இயக்குவது என்பதையே மறப்பதாக இருந்தால் அது சற்று தீவிரமானதாகக் கொள்ள வேண்டும்.
மறதி பற்றி பலரது பயங்களுக்கு முக்கிய காரணம் அது ஏதாவது தீவிர நோயின் அறிகுறியாக இருக்குமோ என்பதுதான். அல்சைமர் நோயாக இருக்குமோ அல்லது  மூளைச்சிதைவினால் (Alzheimer’s disease and dementia) ) ஏற்படும் மறதியோ என்ற பயம் பலருக்கு இருக்கிறது. அத்தகைய எதிர்மறைச் சிந்தனையே பலருக்கு மறதியைக் கொண்டுவந்துவிடுகிறது.
மது மற்றும் போதைப் பொருள் பாவனையாளர்களுக்கும் மறதி அதிகம். மனப் பதற்றம், பதகளிப்பு, மனச்சோர்வு போன்ற உளவியல் தாக்கங்களாலும் மறதி ஏற்படுகிறது. தைரொயிட் சுரப்பி குறைபாடு விட்டமின் B 12 குறைபாடு போன்றவற்றையும் சொல்லலாம். ஒரு சில வேளைகளில் வேறு நோய்களுக்காக உட்கொள்ளும் சில மருந்துகளும் காரணமாகலாம். கொழுப்பும் இனிப்பும் கூடிய ஆரோக்கியமற்ற உணவு முறையும் காரணம் என நம்பப்படுகிறது.
மறதியைக் குணமாக்குவதற்கு அதிசய மருந்து மாத்திரைகள் எதுவும் கிடையாது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும். போதிய தூக்கம், போசாக்கான உணவு முறை, தினசரி உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு, போதிய ஓய்வு ஆகியவை அவசியம். நண்பர்களுடன் உரையாடவும் பொழுதுபோக்குகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள்;. உற்சாகமாக இருங்கள். சிரியுங்கள். இவை யாவுமே உங்கள் மனதை அமைதியாக்கி நினைவுகளை மறக்காமல் இருக்கச் செய்யும்.
பல வேலைகளை ஒரே நேரத்தில் தூக்கிப் பிடிக்காமல் ஒவ்வொன்றாக உங்கள் ஆற்றலுக்கும் நேரத்திற்கும் ஏற்றவாறு பணிகளை நிதானமாகச் செய்யவும்.

மூளைக்கு வேலை கெடுக்கக் கூடிய செஸ், எண்களுடன் அல்லது எழுத்துக்களுடன் கூடிய விளையாட்டுகள், அதே போன்ற கணனி விளையாட்டுகள் மூளையின் செயற்பாட்டைக் கூர்மையடைச் செய்யலாம்.

நீண்ட நாட்களாக ஒரே விதமான மறதி எனில் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. மாறாக திடீரென ஏற்பட்டு தீவிரமாக அதிகரித்துச் செல்கிறதெனில் மருத்துவ ஆலோசனை அவசியம் பெற வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 

குடும்ப மருத்துவர்

Read Full Post »

கேள்வி:- நான் கணனியில்  அதிக நேரம் வேலை செய்வதால் கண்ணில் கருவளையம் வருகிறது.

அதற்கான தீர்வு என்ன  ?

எஸ்நிவேதா கிளிநொச்சி

 பதில்:- உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. கணனியில் அதிக நேரம் வேலை செய்வதால் வருகிறது என்கிறீர்கள். எனவே வேலை நேரத்தைக் குறைத்துக் கொள்வதே தீர்வு எனலாம். கணனியில் வேலை செய்வதால் மட்டுமல்ல எந்தவிதமான அதீத வேலையும் மனஅழுத்தமும் கண்ணின் கருவளையங்கள் ஏற்படுவதைத் தீவிரமாக்கும்.

மாறாக போதிய ஓய்வும் பொதுவான நல்ஆரோக்கியமும் அது ஏற்படுதைக் குறைக்கும் என்பது முக்கிய உண்மையாகும்.

உங்களுக்கு மாத்திரமல்ல பலருக்கும் இந்தப் பிரச்சனை இருப்பதை நாம் காண முடிகிறது. உங்கள் வயதை நீங்கள் குறிப்பிடவில்லை. இள வயது முதல் முதுமை வரை பலருக்கு இருக்கிறது

உண்மையைச் சொல்லப் போனால் கண்ணருகே தோன்றும் கருவளையம் ஏன் ஏற்படுகிறது என்பது பற்றிய முற்று முடிவான விஞ்ஞானபூர்வ முடிவுகள் கிடையாது. ஆயினும் இது தோன்றுவதற்கு பல காரணங்கள் இருப்பதை அறிய முடிகிறது.

பரம்பரை அம்சம் ஒரு முக்கிய காரணமாகும். ஒரே கும்பத்தைச் சேர்ந்த பலருக்கு இது ஏற்படுவதைக் காண முடிகிறது.

அத்தகையவர்களுக்கு இளவயதிலேயே இது தோன்றக் கூடும். வயது அதிகரிக்க அதிகரிப்பதுண்டு.
ஒவ்வாமைகள் மற்றும் எக்ஸிமா நோய்களின் தொடர்ச்சியாகவும் இது வருவதுண்டு.
கண்களைச் சுற்றி ஏதாவது காரணத்தால் வீக்கம் ஏற்பட்டால் அதைத் தொடரந்து கருமை ஏற்படலாம். கண்டல், சிறுநீரக நோய், ஒவ்வாமை வீக்கம் போன்றவற்றை கூறிப்பிடலாம்.
வயதாகும் போது சருமம் தனது நெகிழ்ச்சிதன்மையை இழந்து சுருங்குவதாலும் கருவளையும் போலத் தோற்றமளிக்கும்.
புருவங்களுக்கு கீழே மூக்கு அருகே இருக்கும் கண்ணீர் பை வயதின் காரணமாக சுருங்கும் போதும் கண்ணருகே கருமை தோன்றுவதுண்டு.
இவ்வாறு கண்ணைச் சுற்றிய கருமை ஏற்படுவற்கு பல காரணங்கள் இருப்பதால் காரணத்தை அறிந்து சிகிச்சை செய்வதே பொருத்தமானது.
குளுக்கோமா (கண் பிரசர்) நோய்க்கு பயன்படுத்தும் சில துளிமருந்துகளும் அவ்வாறு கருமை படர்வதற்கு காரணமாகும். அத்தகைய கண் மருந்துகளை உபயோகிக்க ஆரம்பித்து சுமார் 2-3 மாதங்களுக்கு பின்னரே கருமை படர ஆரம்பிக்கும். ஆனால் அதை உபயோகிப்பதை நிறுத்தினால் ஒரு சில மாதங்களுக்குள் சருமம் இழல்பான நிறத்திற்கு வந்துவிடும்.
கருமை படர்ந்த சருமத்தின் நிறத்தை குறைப்பதற்கு பல வகையான களிம்பு மருந்துகள் உள்ளன.  Hydroquinone, Azelaic acid  போன்றவை இலங்கையில் கிடைக்கின்றன. இவற்றை பூசும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறை மற்றும் பக்கவிளைவுகள் காரணமாக மருத்துவரின் ஆலோசனையுடன் அவரின் கண்காணிப்பின் கீழேயே உபயோகிக்க வேண்டும்.
அல்ரா லைட் பாதுகாப்புள்ள கண்ணாடிகளை உபயோகிப்பது உதவும்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

Read Full Post »

மிகுந்த வெக்கமாயிற்று. இலக்கிய வனாந்திரத்தில் ஒதுங்கிக் கிடக்கிறேனோ என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

20180707_162212இதுவரை இந்த சிறுகதைத் தொகுதியை படிக்காதது மட்டுமின்றி அதனைப் பற்றி அறிந்து கொள்ளவும் இல்லையே என்று மனம் ஆதங்கப்பட்டது.

பிரண்டையாறு ஒரு சிறுகதைத் தொகுதி. 12 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. தீவகத்தில் பிறந்த ஒருவன் போரின் வலிய அலைகளால் தூக்கி வீசப்பட்டு நிரக்கதியாகி சொந்த வீட்டை இழந்து சொந்த மண்ணிலிருந்து நீங்கி அகதி முத்திரை குத்தப்பட்டு காற்றின் திசைகளில் அள்ளுண்டு தன் தலைசாய்த்து கண்மூடி ஆறுதல்தேட இடம் ஏதும் கிடைக்கிறதா எனத் தேடி அலைந்த நினைவுகளை பதிவு செய்யும் தொகுதி இது என்று சொல்லலாம்.

‘அவனது பயணங்கள் எல்லாம் ஏதோ ஒரு தரிப்பிடத்தில் முடிந்தவையாகிப் போயின. தான் பயணிப்பதாகவே பிறந்ததாகவும் தனது பயணத்திற்கு தரிப்பிடங்கள் போதுமானவையாக இல்லை எனவும் நினைத்துக் கொள்கிறான்’ இதை அவரது வாக்குமூலமாகவும் கொள்ளலாம்.

கடந்த காலத்தில் யாழ் மண்ணிலும் வன்னியிலும் கிழக்கு இலங்கையிலும் இவ்வாறு சிதறாதவர்கள் யாரும் உண்டா?. எங்கள் ஒவ்வொருவருக்கும் கூட அத்தகைய அனுபவங்களுக்கு குறைவில்லை. இடப்பெயர்வுகள் பற்றி எத்தனையோ இலக்கியப் படைப்புகள் வந்துள்ளன. அவ்வாறு இருக்கும்போது மெலிஞ்சிமுத்தனின் சிறுகதைகள் பேசப்பட வேண்டி இருப்பது ஏன்?

அது கதையின் உள்ளடக்கத்தில் அல்ல. அது சொல்லப்பட்ட முறையில் தான் முக்கியத்துவம் பெறுகிறது. பேசப்பட வேண்டியதாக போற்றப்பட வேண்டியதாக என்று கூட சொல்லலாம். மொழியை சாணை தீட்டி உணர்வுகளுக்குள் முக்குளிக்க வைக்கும் அற்புதமான படைப்பாளிகளான கதை சொல்லிகள் எம்மிடையே இருக்கிறார்கள். ஆ.முத்துலிங்கம், ஆ.சி.கந்தராஜா, மு.பொ, உமா வரதரதராஜன் என அடிக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் இவர் கதை சொல்லி அல்ல. மேம்போக்காக படிப்பவர்களுக்கு அவற்றிற்குள் கதை இருப்பதை கண்டு கொள்ளவது கூட சிரமமாக இருக்கலாம். காரணம் அவரது படைப்புகளிலுள்ள கதை அம்சம் பெரும்பாலும் குறியீடாகவே சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு முதற்கதை ‘புலம்பெயரும் சாமங்களின் கதைளூ’ இவ்வாறு முடிகிறது. ‘பகல் நாய் வீணியூற்றியபடியே சுருண்டு படுத்துக் கிடக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் காத்திருக்கிறது ‘மறுகரை’.’. மேலோட்டமாகப் பாரக்கும்போது. வெறும் காட்சிப் பதிவு போல தென்படுகிறது.

ஆனால் தொண்ணுறுகளின் முற்கூறுகளில் யாழ் மண்ணிலிருந்து பெருநிலப்பரப்பிற்கு போவதானால் கிளாலி கடற்பரப்பை கடக்க வேண்டும் அந்த திகிலூட்டும் பயணங்களின் பின்னணியை நினைகூரும்போது ஆயிரம் ஆயிரம் கதைகள் சொல்லாமல் சொல்லப்படுகின்றன. மெலிஞ்சி முத்தனும் சொல்கிறார். இரவில் படகுகளில் மக்கள் முண்டியடித்து பயணப்படுவதும், படகுகள் ஒன்றை விட்டு மற்றது பிரிந்து செல்லாது இருக்க கயிறுகளால் பிணைக்கப்படுவதும், கடற்படைக்கு தெரியாதிருக்க வெளிச்சமின்றி படகுகுள் பயணிப்பதும், எப்படியோ மோம்பம் பிடித்த கடற்படை சுட்டுத்தள்ளுவதும், சனங்கள் மரணிப்பதும், பிணங்கள் மிதப்பதும், இவற்றெயெல்லாம் அறிந்திருந்தும் மற்றவர்கள் இறப்புக்களை மறந்து மரணதேவதை கிளாளிக் கடலில் காத்திருக்கிறான் என்பதை மனதில் ஆழப் புதைத்துவிட்டு அடுத்த நாளும் மக்கள் பிரயாணத்திற்கு முண்டியடிப்பதும்…..

கதையை வாசித்துவிட்டு கண்ணை மூடிப்படுத்துக்கிடந்தால் கதைகதையாக விரியும். நானும் அவ்வாறு பயணப்பட்டிருந்ததால் அணுவணுவாக கதையை அர்த்தப்படுத்திப் படிக்க முடிந்தது.

அவரது படைப்பாக்க முறையின் மற்றொரு முக்கிய அம்சம், தன் ஆழ்மனத்து எண்ணங்களை, தாவித் தாவிச் செல்லும் சிந்தனை ஓட்டங்களை சொல்லோவியமாக்குவதே ஆகும். தன ஆழ் மனத்தில் எழும் நினைவுகளை எண்ணங்களை சிந்தனைகளை ஒரு வரையறைக்குள் ஒழுங்குபடுத்தி சிறுகதையாகப் படைக்கிறார். அந்த எண்ண ஓட்டங்களுடன் இணைந்து பயணிக்கும் வாசகனுக்கு தன்னையும் அங்கு இனங்காண முடியும். புதிய சாளரங்களை வாசகனுக்கு திறக்க வைக்கும். தன்னைப் பற்றி மட்டுமின்றி இந்தச் சமூகம் பற்றி, இந்த தேசம் பற்றி தன்னைச் சுற்றி நடப்பவற்றின் உள்ளரசியல் பற்றி பல உண்மைகள் வெளிச்சமாகும்.

இந்த மாற்றுப் பாதையே மெலிஞ்சிமுத்தனது படைப்புகளின் ஆணிவேராக இருப்பதாகப் படுகிறது. கதை எங்கோ தொடங்கி வேறெங்கோ இழுபட்டு நகர்வதாகத் தோன்றினாலும் பூடகமாக தன் கருத்தை வெளியடவே செய்கிறது.

உதாரணமாக கொழுக்கட்டை கள்வர்கள் கதையைச் சொல்லலாம். சவீனா ரீச்சர் வீட்டில் ஒவ்வொரு பெரிய வெள்ளியும் ருசியான கொழுக்கட்டைகள் களவு போவது பற்றி சுவாரஸ்மான கதை சொல்லப்படுகிறது. கதை இப்படி முடிகிறது. ‘கொழுக்கட்டை கள்வர்களின் சடலங்களை ஓலைப் பாய்களாலும் சாக்குகளாலும் சுற்றிப் புதைத்தார்கள். டக்ளஸ் மட்டும் ‘உயிர்தெழுந்த ஞாயிறைக்’ கொண்டாடிக்கொண்டு கொழும்பில் இருந்தான்’; (பக் 16) எவ்வளவு அழகாக முடித்திருக்கிறார். சொல்லமால் சொல்லப்பட்டவை ஏராளம் தொக்கி நிற்கிறது இந்த ஒரு வசனத்தில்.

போரினதும் அதன் அவலங்களதும் பார்வையாளனாகவும் பாதிப்புக்கு ஆளானவனாகவும் இருக்கும் இந்தப் படைப்பாளி வீர வசனங்கள் பேசவோ இலட்சியங்கள் முழங்கவோ இல்லை. அரசாங்கத்தையும் மாற்று இயக்கங்களையும் வார்த்தைகளால் வறுத்தெடுக்கவும் இல்லை. நடந்தவற்றை உள்ளதை உள்ளபடி சொல்கிறார். அதனை அர்த்தப்படுத்தும் பணியை வாசகனிடமே விட்டுச் செல்கிறார்.

இல்ஹாம் ஒரு அற்புதமான கதை. முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதின் பின்னணியில் பேசப்படுகிறது. அற்புதமான முடிவு. முழு தமிழ் சமூகமுமே குற்ற உணர்வு கொள்ள வேண்டியதை சொல்லாமல் சொல்கிறது.
மீனவக் கிராமம் அவர் பிறந்தது வளர்ந்தது வாழ்ந்தது. அவர்கள் வாழ்வை மொழியை அவர்களது பாடுகளை படைப்புகளில் விரித்துச் செல்கிறார். அங்கு சமூக ஒடுக்குமுறை எவ்வாறு இருந்தது என்பதை சில வரிகளில் அவரால் சொல்லிவிட முடிகிறது.

‘அவருக்கு (தந்தைக்கு) எப்போதுமே தன் முதுகில் மீன் செதில் ஒட்டிக்கொண்டிருக்கும் உணர்வே இருந்தது.’

‘நான் பள்ளிக் கூடம்போனபோது என்னில் மீன் வெடுக்கு மணக்கிறதென்று பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் சொன்னார்கள். நான் அழுதபோது கூட என் கண்ணீரிர் வெடுக்கு மணத்தபடியே இருந்தது. பின்னர் நான் பள்ளிக்கூடத்தையே மறந்து போனேன்’; மனதை நொருங்க வைக்கும் வரிகள்.

ரசித்ததில் மற்றொன்று. சமாதான காலம் ஒன்று பற்றியது ….. ‘கொழும்பில் இருந்து வந்த பெண்கள் கல்லு வீதிகளில் குதிக்கால் உணர்ந்த பாதணிகளோடு நொடுக்கு நொடுக்கு என்று இந்தரப்பட்டு நடந்தார்கள். வுன்னியில் இருந்து வந்தவர்கள் போர்த்து மூடீக்கொண்டு திரிந்தார்கள். யுhழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்களோ ஏதோ மாய முடிச்சுகளை சோட்டித் துண்டுகளில் முடிந்து திரிந்தார்கள்.

20180707_1622291

‘யாராவது என்னைத் தேடலாம். ‘நாடு கடந்த அரசு பற்றி’ பேச நண்பர்கள் என்னையும் அழைக்கலாம். ஏன் பிரியமான வாசகர்களே, உங்களிடமிருந்து இப்பொழுது பிரிந்து செல்கிறேன். ஏனக்கு வேண்டியது தனிமை. பிணங்களையும் புணரும் மனநிலை கொண்ட மனிதர்களை இந்த நூற்றாண்டு கொண்டிருக்கிறது என்றால்…’ (பக்கம் 64) இதுதான் அவரது படைப்புகளின் அடிநாதமாக வீசிககொண்டிருக்கிறது என எனக்குத் தோன்றுகிறது.

வித்தியாசமான பேச்சுத் தமிழ். தீவகத்திற்கே உரியது. அழகாகக் கையாண்டிருக்கிறார். கவிதை மொழியும் ஆங்காங்கே சிலிர்க்க வைக்கிறது.

இறுதியில் வரும் இரு கதைகள் தப்பிப் பிறந்த வேர்கள் போல இந்த தொகுப்பில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. அவற்றை வாசிக்கும் கட்டுரைகளை வாசிக்கும் உணர்வே ஏற்படுகிறது. துன் நிலைப்பாட்டை தெளிவாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக அவசரத்தில் எழுதியதாகவே படுகிறது.

அவரது இரு கவிதைத் தொகுதிகளும் அத்தாங்கு என்ற நாவலும் வெளிவந்ததாக அறிகிறேன். ஆனால் அவை கைக்கெட்டவில்லை.

கருப்புப் பிரதிகள் வெளியீடாக 2011 மார்களியில் வெளிவந்த அருமையான நூல். இதுவரை படிக்காதது கவலை அளித்தது. நீங்களும் அதே தவற்றைச் செய்யாதீர்கள்.

இந்த நூலின் பிரதியை மட்டக்களப்பு நண்பர் திலீப்குமார் கணேசன் மூலம் பெற்றேன். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

எம்.கே.முருகானந்தன்

ஜீவநதி சஞ்சிகையில் வெளியான கட்டுரை

0.00.0

Read Full Post »

கேள்வி:- நாயால் கடியுண்டவர்கள் ஏ.ஆர்.வி தடுப்பூசி போட்டால் முட்டை, இறைச்சி, பழவகைகள் போன்றவற்றை உண்பதைத் தவிர்க்க வேண்டுமா?
எம்.சதீஸ் நல்லூர்

பதில்:- நிச்சயமாக எதையும் உண்ணாமல் தவிர்க்க வேண்டியதில்லை. விரும்பிய உணவுகளை உண்ணலாம்.

அவை ஆரோக்கியமான உணவுகளாக இருக்கும் பட்சத்தில்.

ஏன் இவ்வாறான தவறான கருத்துகள் எம் மக்களிடையே உலாவுகிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.

ஏ.ஆர்.வி தடுப்பூசி ஒரு சிலரில் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஆயினும் அது இல்லை என்பதை அலர்ஜி பரிசோதனை ஊசி மூலம் நிச்சயப்படுத்திய பின்னரே ஏ.ஆர்.வி தடுப்பூசியை போடுவார்கள். எனவே தயக்கமின்றிப் போடலாம்.

அதேபோல முட்டை, இறைச்சியும் ஏங்காவது ஒரு சிலரில் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதை அவர்களே அனுபத்தில் அறிந்திருப்பார்கள். அவ்வாறு அலர்ஜி உள்ளவர்கள் அவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏ.ஆர்.வி தடுப்பூசி போடும்போது மட்டுமல்ல. எப்போதும்.
எவ்வாறாயினும் ஏதாவது ஒவ்வாமை ஒருவருக்கு இருந்தால் அது பற்றி ஊசி போடு முன்னர் மருத்துவருக்கு தெரிவிக்க வேண்டும்.
போதிய பாதுகாப்புடன் தடுப்பூசியைப் போட அந்தத் தகவல் மருத்துவருக்கு உதவும்.
யாழ் லிருந்து வெளியாகும் எதிரொலி வாராந்த பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் பகுதியில் வாசகர் கேள்விகளுக்கு நான் அளிக்கும் பதில்கள்

Read Full Post »

‘காலை எழுந்தவுடன் படிப்பு’ என்றான் பாரதி. காலை எழுந்தவுடன் குளிசை என்று பல முதியவர்கள் மருந்துப் போத்தல்களைத் திறக்கிறார்கள். மிகுதிப் பேர் ‘மாலையில் படுக்கையில் சரியும் முன்னர் மாத்திரை’ என முணுமுணுக்கிறார்கள்.

நீரிழிவு கொலஸ்டரோல், தைரெயிட் நோய்களைப் போன்ற பல நோய்கள் போலவே பிரஸர் நோய் உள்ளவர்களும் தொடர்ந்து மருந்து சாப்பிடுவது அவசியம். மருத்துவர் சிபார்சு செய்யத குறிப்பிட்ட மருந்தைக் குறிப்பட்ட அளவில் குறிப்பட்ட நேரத்தில் உட்கொள்ள வேண்டும். அலுக்காமல் சலிக்காமல் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

பிரஸர் மருந்துகளை உட்கொள்வதற்கான சிறந்த நேரம் எது. காலையா, இரவா, மதியமா?

பிரசரால் ஆபத்துகள் எவ்வேளையில்

இதற்கான விடையைத் தேடு முன்னர் பிரஸர் பிரச்சனையால் ஏற்படுகின்றன ஆபத்தான பின் விளைவுகள் எவை அவை எந்த நேரத்தில் ஏற்படகின்றன என்பதை அறிந்து கொள்வது மிக அவசியமாகும்.

இருதய நோய்களால் ஏற்படும் மரணங்களை ஆராய்ந்த போது அவற்றில் 70 சதவிகிதமானவை காலை 7 மணி முதல் 9 மணிக்குள் நிகழ்வதாக மிகப் பிரபலமான குசயஅiபொயஅ ஆய்வு கூறியது. மற்றொரு ஆய்வானது மாரடைப்புகளில் 40 சதவிகிதமானவை காலை 6 மணியிலிருந்து 12 மணிக்கிடையில் நிகழ்வதாக எடுத்துக் காட்டியிருந்தது. அதே போல பக்கவாதம் மற்றும் இருதயத் துடிப்பு  ஒழுங்கீனங்கள் ஆகியவையும் காலையிலேயே நிகழ்வதாக தரவுகள் கூறுகின்றன.

இவ்வாறு நிகழ்வதற்குக் காரணம் என்ன? எமது உயிரியல் கடிகாரத்தில் ஏற்படும் சில மாற்றங்களால் பிரஸரானது காலையில் விழித்து எழும் போதும், அதைத் தொடரும் காலை நேரத்திலும் சற்று அதிகரிக்கிறது. அத்துடன் காலை விழித்தெழும் நேரத்தில் இரத்தக் குழாய்கள் இறுக்கமடைகின்றன குருதியின் அளவிலும் சற்று ஏற்றம் தென்படுகிறது.

மருந்துகளைப் பயன்படுத்தல்

அதே நேரம் இன்று பொதுவாகப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பிரஷர் மருந்துகளை ஒரு தடவை உட்கொண்டாலே போதுமாக இருக்கிறது. அதற்கு ஏற்றவாறே அவை தயாரிக்கப்படுகின்றன. அதாவது அவற்றை ஒரு தடவை உட்கொண்டால் அடுத்த 24 மணிநேரத்திற்கு பிரஷரைக் குறைக்கக் கூடியவையாக இருக்கின்றன.

உட்கொண்ட ஒரு மணி நேரத்தின் பின் அவை செயற்படத் தொடங்கும், 4 முதல் 15 மணிநேரத்தில் அவற்றின் செயற்பாடு உச்சநிலையில் இருக்கும். அதன் பின் அதன் தாக்கம் படிப்படியாகக் குறையத் தொடங்கும்போது அடுத்த நேர மருந்தை எடுக்கின்ற வேளை வந்துவிடும்.

எந்த வேளை நல்ல வேளை

எனவே இரவில் பிரஸர் குளிசைகளைப் உட்கொண்டால் பிரஷர் அதிகரிக்கும் தருணமான அதிகாலையில் மருந்தின் செயற்பாடு உச்ச கட்டத்தில் இருக்கும் அதனால் மேலும் பிரஷர் அதிகரிக்காமல் தடுத்துவிடும்.

எனவேதான் இரவில் பிரஸர் குளிசைகளைப் போடுவது சிறந்தது எனச் சிலர் கருதுகிறார்கள்.

ஆனால் இரவு நேரத்தில் எடுப்பதைவிட காலையில் எடுத்தபோது மாரடைப்பு பக்கவாதம் போன்றவற்றை குறைத்தன என சில ஆய்வுகள்; கூறின. இவை பிரஷருக்கான சிகிச்சை பற்றிய பொதுவான ஆய்வுகள் ஆகும். காலையா மாலையா மருந்தப் போடப் பொருத்தமானது என்பதை இலக்காகக் கொண்டு செய்யப்பட்டவை அல்ல.

இருந்தபோதும் quinapril என்ற மருந்தை கொடுத்து செய்யப்பட்ட ஆய்வானது இரவில் கொடுப்பது நல்லது என்ற முடிவைத் தந்தது. அதே நேரம் atenolol, nifedipine , amlodipine.போன்ற மருந்துகளைக் கொடுத்து செய்யப்பட்ட ஆய்வுகள் காலையா இரவா என்பது பற்றி எந்தத் தெளிவான முடிவையும் தரவில்லை.

எனவே மருத்துவ ஆய்வுகளின் முடிவுகளின் படி எந்த முடிவையும் இப்பொழுது எடுக்க முடியாதிருக்கிறது.

வேறு காரணங்கள்

பிரஷர் மருந்துகளைத் தினந்தோறும் தவறாது எடுப்பது முக்கியமானது. காலையில் மாலையில் அல்லது எந்த ஒரு குறிப்பட்ட நேரத்தில்தான் தப்பாமல் எடுக்க வேண்டும் என்று எண்ணி வேளை தப்பினால் போடாமல் விட்டு விடக்கூடாது.

தவற விடுவதைவிட அவருக்கு உசிதமான நேரத்தில் போடுவதால் ஓரளவேனும் பலன் அளிக்கும். சிலருக்கு காலையில் தேநீருடன் போடுவது மறக்காத தருணமாக இருக்கும். வேறு சிலருக்கு வேலை எல்லாம் முடித்து இரவில் படுக்கப் போகும் நேரமே தவறாமல் எடுக்கக் கூடியதாக இருக்கும்.

எனவே ஒருவரது வாழ்க்கை முறை மற்றும் விருப்புகளுக்கு ஏற்றபடி எடுப்பதே உசிதமாகப் படுகிறது.

இருந்தபோதும் அவ்வாறு எடுப்பதையிட்டு மருத்துவருடன் பேசி முடிவெடுத்துச் செய்வதே நல்லது.

உதாரணமாக புரசசீன் போன்ற அல்பா புளக்கர் வகை மருந்துகள் கிடை நிலையிலிருந்து எழுந்திருக்கும்போது திடீரெனப் பிரசரைக் குறைத்து தலைசுற்றை ஏற்படுத்தலாம். முக்கியமாக வயதானவர்கள் இரவில் சிறுநீர் கழிக்க அல்லது வேறு காரணங்களுக்காக படுக்கையை விட்டு எழ நேர்ந்தால் தலைச்சுற்று ஏற்பட்டு விழுந்துவிடவும் கூடும்.  எனவே அவர்கள் அத்தகைய மருந்துகளை இரவில் போடுவதைவிட காலையில் போடுவது நல்லது.

பிரஷருக்கான சில மருந்துகள் சிறுநீரை அதிகம் கழியச் செய்யும். அத்தகைய மருந்துகளை இரவில் உட்கொண்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேருவதுடன் தூக்கத்தையும் குழப்பும். அத்தகைய மருந்துகளை இரவில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.. hydrochlorothiazide, amiloride, furosemide  போன்றவை சில உதாரணங்களாகும். மருத்துவர்கள் அவற்றை காலையில் உட்கொள்ளுமாறு அறிவுறுத்துவார்கள்.

குருதிச் சீனியின் அளவை அதிகமாகக் கூட்டவோ கடுமையாகக் குறைக்கவோ செய்யக் கூடிய சாத்தியம் இருப்பதால் அற்றனலோல், போன்ற டீ டிடழஉமநச வகை பிரஷர் மருந்துகளை இரவில் போடாது தவிர்ப்பது நல்லது.

இறுதியாக 

ஆனால் எல்லா பிரஷர் மருந்துகளும் ஒரு வேளை மட்டும் உட்கொளள்ளப்படுபவை அல்ல. இரண்டு நேரம் அல்லது மூன்று தடவைகள் போடப்படுபவையும் உண்டு.

பலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட வகை பிரஷர் மருந்துகளை உபயோகிக்க வேண்டி நேரலாம். பிரஷரைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே மூன்று அல்லது நான்கு வேறு வகையான மருந்துகளை உட்கொள்வது அவசியமாகலாம்.

அவ்வாறு போடப்படும்போது அவற்றை பொதுவாக ஒரே நேரத்தில் சேர்த்துப் போடுவதில்லை. பிரித்துப் உட்கொள்ளுமாறு அறிவுறுத்துவார்கள்.

அத்தகைய தருணத்தில் எதை எதை எந்த நேரத்தில் போட வேண்டும் என்பதையிட்டு மருத்துவர் தெளிவான அறிவுறுத்தல்களைத் தருவார்கள். அதன்படி செய்யுங்கள்

ஒரு மருந்தை மட்டும் தரும்போது பொதுவாக பிரஷர் மருந்துகளை இரவில் மட்டும் உட்கொள்ளக் கொடுப்பதையே அதிகம் காண்கிறோம்.

எனவே நீங்களாக முடிலெடுக்காமல் மருத்துவ ஆலொசனையுடன் பிரஷர் மருந்துகள் போட வேண்டிய நேரங்களைத் தேர்ந்தெடுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0

 

Read Full Post »

கலைஞரே

சென்று வா என்று உங்களை வழி அனுப்ப முடியாது.

பகுத்தறிவு பாதையில் பயணித்தவர் நீங்கள்.
மறு பிறப்பிற்கு இடம் ஏது அந்த பாதையில் .

மாணவப் பருவத்திலேயே எனக்கும் என் போன்ற ஆயிரமாயிரம் இள உள்ளங்களில் பகுத்தறிவு ஒளியை ஏற்றி வைத்த பெருமையானது பெரியார், அண்ணாவுடன் உங்களையே சாரும். இன்றுவரை அந்த உணர்வு அணையாத தீபமாக ஒளிர்கிறது.

தமிழ் உங்கள் மூச்சோடு கலந்தது. பேச்சு எழுத்து திரையுலகு என எங்கும் நிறைந்திருக்கிறது.

உங்களுக்கு நான் விடை கொடுக்க மாட்டேன்.

ஏனெனில் கவிதை, கதை, கட்டுரை, நாடகம், நாவல், கடிதம், திரைக்கதை வசனம், உரை என எந்நேரமும் என்னோடும் எல்லோரோடும் தமிழோடும் கூடவே இருக்கிறீர்களே.

தினம் தினம் சந்திப்போம் கலைஞரே.

Read Full Post »

“போகுது வருகுது
போகுது வருகுது
போய்ப் போய் வருகிறது……”

” …எத்தனை மருந்துகளைப்பூசிவிட்டேன்
மறைவது போல ஏய்புக் காட்டி
மீண்டும் மீண்டும் வருகிறது..”

நாற்பதை அண்டிய அவள் தனக்கு சீனி கொலஸ்டரோல் பிரஸர் ஏதாவது வந்துவிட்டதா எனப் பாரக்க வந்திருந்தாள்

ரிப்போட்டுகளைக் காட்டி முடிந்து எழுந்து போக முயன்றவள்
மீண்டும் இருந்தாள்.

இதையும் காட்ட வேணும் என்று நினைச்சனான் மறந்து போனன்
என்று மூக்கைக் காட்டினாள்

கறுத்து சொரப்பாக மூக்கின் மேற்பாகம் அசிங்கமாகக் கிடந்தது.

“ஒரு வகை எக்ஸிமா ஒட்டுக் கிரந்தி” என்றேன்

ஆனால் “மருந்து பூசியும் மாறுதில்லையே” என்றாள்

“கண்ணாடி போடுறனீங்கள்தானே ஒருக்கா போடுங்க பார்ப்பம்” என்றேன்.

நான் நினைத்தது சரி

மூக்கில் அழுத்திக் கொண்டிருக்கும் நோஸ்பாட் (nose pad) கண்ணணாடியால் ஆனது எனவே அது காரணமல்ல

கண்ணாடி பிரேமின் ரிம்தான் காரணம் அது மெட்டலால் ஆனது

அந்த மெட்டலுக்கான ஒவ்வாமையால் அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது

அதனால்தான் மீண்டும் மீண்டும் வருகிறது

“கண்ணாடியை மாற்றுங்கள் பிளாஸ்டிக் பிரேம் உள்ளதாக இருக்க வேண்டும்” என்றேன்

அடுத்த முறை அவளைக் கண்டபோது மூக்கு அழகாக இருந்தது

சருமத்திற்கு ஒவ்வாத பொருளால் ஒவ்வாமை ஏற்படுவதாக இருந்தால் அதனை தொடர்பு ஒவ்வாமை தோலழற்சி ஒட்டுக் கிரந்தி Allergic contact Dermatitis என்பார்கள்.

இப் பிரச்சனை பற்றி மேலும் அறிய எனது புள்கிற்கு விசிட் அடியுங்கள்

http://hainallama.blogspot.com/2012/04/allergic-contact-dermatitis.html

Read Full Post »