Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for திசெம்பர், 2018

நாரிப்பிடிப்புகள் வருவது பாரம் தூக்குவதனால் மட்டும்தானா?
பாரம் தூக்குவது மட்டுமல்ல உங்கள் நாளந்த செயற்பாடுகளும் நாரிப்பிடிப்புகளை கொண்டு வரலாம்

நாரிப்பிடிப்பு பிரச்சனையால் பாதிக்கப்படாதவர்கள் இருக்கவே முடியாது. தமது வாழ்நாளில் என்றாவது ஒரு நாளாவது இதை அனுபவித்தே இருப்பார்கள். அந்தளவுக்கு மனிதர்களை அதிகம் பீடிக்கும் பிர்சனையாக இருக்கிறது.

நாரிப்பிடிப்பு என்று நாம் பொதுவாகச் சொல்வது எமது பின்புறத்தின் கீழ் முள்ளெலும்புகள் உள்ள பகுதியில் ஏற்படும் வலியாகும். Low backpain என ஆங்கிலத்தில் சொல்வார்கள். இதேபோல பின்புறத்தின் மேல் பகுதியிலும் வலி ஏற்படலாம். இதை Upper backpain என்பார்கள்.

பொதுவாக இது ஏற்பட்டதற்கு ஏதாவது ஒரு காரணத்தை பெரும்பாலானவர்கள் இனங்கண்டிருப்பார்கள். குனிந்து ஏதாவது பாரத்தை தூக்கும்போது ஏற்படலாம். பாரம் தூக்கமாமல் சாதாரணமாக குனிந்துவிட்டு நிமிரும்போதும் ஏற்படலாம். மாறாக மொபைல் போனை நீண்ட நேரம் தூக்கிப் பிடித்து பார்க்கும்போது அல்லது கணனியில் நீண்ட நேரம் வேலை செய்த பின்னர் மேல் முதுகில் தேர்ள்மூட்டுக்கு இடைப்பட்ட பகுதியில் வலி ஏற்படலாம்.

தானாகவே பெரும்பாலும் குணமாகியிருக்கும். கவனியாது விட்டுவிடுவோம். சிலவேளைகளில் மருத்துவரிடம் ஓடவேண்டியும் நேர்ந்திருக்கலாம்.

எப்படியாயினும் நாம் கவனத்தில் எடுத்தே ஆக வேண்டும். ஏனெனில் ஏதோ ஒருவிதத்தில் எமது முதுகுப் புறத்திற்கு அதிகளவு வேலைப்பளுவைக் கொடுகிறோம் என்பதற்கான சிகப்பு எச்சரிக்கiயாக அது இருக்கிறது. அத்தகைள வலி தொடரும் போது அல்லது மீண்டும் மீண்டும் வரும்போது தீவிர பாதிப்புகள் ஏற்படலாம்.

பரம்பரை அம்சங்கள்

‘இது எனக்கு எனது அம்மா தந்தது.’ என்பார்கள் சிலர். தந்தையில் பழிபோடுவார்கள் வேறு சிலர். உண்மைதான் இத்தகைய பிடிப்புகளுக்கு பரம்பரை அம்சங்களும் காரணமாக இருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் அவ்வாறு மட்டும் இல்லை.

பரம்பரையாக வருவதற்கு அவர்களது உடல்தோற்ற அமைவு (Posture) காரணமாக இருக்கலாம். முள்ளந்தண்டு அமைப்பிலோ, இடுப்பு எலும்புகளிலோ கால்களிலோ உள்ள அசாதராண மாற்றங்கள் காரணமாகலாம். ஆனால் அத்தகைய தோற்ற அமைவு மாற்றங்கள் இல்லாத போதும் வலி ஏற்படலாம். மாறாக எத்தகைய அமைவு மாற்றங்கள் இருந்தபோதும் வலி பாதிப்பு ஏற்படாதிருப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

அதன் அர்த்தம் என்ன? முதுகு நாரி வலி ஏற்படுவதற்கான ஏதுநிலையை பரம்பரை அம்சங்கள் கொண்டிருந்தாலும் சரியான தடுப்பு நடவடிக்கைகள் மூலம் பிரச்சனை ஏற்படாமல் நாம் தடுக்க முடியும் என்பதேயாகும்.

அதற்கு முதற்படியாக உங்கள் நாளாந்த நடவடிக்கைகளில் முதுகுப் புறத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகிறீர்கள் என்பதை இனம் காண வேண்டும்.

திரும்ப திரும்ப செய்யப்படும் செயற்பாடுகள்

பாரம் தூக்கினால் அதுவும் முக்கியமாக தவறான முறையில் தூக்கினால் பிடிப்பு வரும் என்பதை நீங்கள் அறிவீர்கள். மருத்துவர்கள் உங்களுக்கு இது பற்றி நீண்ட அறிவுரைகளை நிச்சயம் தந்தே இருப்பார்கள். அல்லது வாசித்தும் அறிந்திருக்கலாம்.

ஆனால் மீண்டும் மீண்டும் செய்யும் ஒரேவிதமான சாதாரண செயற்பாடுகள் கூட முதுகுப் புறத்தின் தசைகளுக்கும் முள்ளந்தண்டுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தாலாம். அது நாளடைவில் சிதைவுகளை ஏற்படுத்தும்

ஒரே விதமாகச் செய்யும் செயற்பாடுகள் அந்த உறுப்புகளுக்கான தசை வளர்ச்சிகளில் சமனற்ற தன்மையைக் கொண்டு வரும். இது நாளடைவில் தோற்ற அமைவில் மாறுபாடுகளை ஏற்படுத்தி வலியைக் கொண்டுவரும்.

தவறான உடல்நிலை வலியை ஏற்படுத்தும் என்றோம். உதாரணமாக நீங்கள் முன்நோக்கி சாய்ந்து (குனிந்து அல்ல) ஒரு பொருளை எடுக்கும்போது முள்ளந்தண்டின் பின்புறத்தில் விழவேண்டிய அழுத்தத்தை முள்ளந்தண்டின் முன்புறத்திற்கு கொடுக்கிறீர்கள். இது முள்ளந்தண்டுகளுக்கு இடையுள்ள இடைத்தட்டத்திற்கு கூடிய அழுத்தத்தைக் கொடுக்கும். நாளடைவில் இது இடைத்தட்டச் சிதைவுக்கு இட்டுச்செல்லும்.

உங்கள் தொழிலானது தினமும் பலதடைவைகள் முன்நோக்கி சாய்வதாக இருந்தால் அல்லது நீண்ட நேரம் நிற்பதாக இருந்தால் முதுகுவலி வரும் என்பதற்காக வேலையை விட்டுவிட வேண்டுமா? நிச்சயமாக இல்லை.

அதற்கு ஈடுசெய்யுமுகமாக நீங்கள் செய்யும் வேலைக்கு எதிர்புறமான தசைப் பயிற்சிகளை எடுக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் அடிக்கடி முன்நோக்கி சாய வேண்டிய வேலையாக இருந்தால் அதற்கு மாற்றாக வயிற்று தசைகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். சமமான தரையில் படுத்திருந்து கொண்டு இரு கால்களையும் மடிக்காமல் 90 பாகைக்கு உயர்த் வேண்டும். பின்னர் கால்களை மெதுவாக படிபடிப்படியாக பதித்து சமநிலைக்கு இறக்க வேண்டும். வயிற்றுத் தசைநார்கள் இறுகுவதை நீங்களே உணரக் கூடியதாக இருக்கும்.

நீண்ட நேரம் நிற்க வேண்டியது உங்கள் தொழில் முiறாயாக இருந்தால் அதற்கு மாற்றாக நீந்துவது அல்லது ஓடுவது போன்ற பயிற்சிகளை எடுப்பது உதவும்.

மன அழுத்தம்

உடலுக்கான அதீத வேலைகள் வலியைக் கொண்டுவருவது போலவே மன அழுத்தமும். மன உடல் வலி, நாரி வலியை கொண்டுவரலாம். மன அழுத்தம் இருக்கும்போது கோபம் பதற்றம் எரிச்சலுறும் தன்மை போன்றவை ஏற்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் அனுபவத்திலும் உணர்ந்திருப்பீர்கள்.

அதே போலத்தான் உடல் வலிகளும் ஏற்பட வாய்ப்புண்டு. மனஅழுத்தம் ஏற்படும் போது உடலின் தசைநார்கள் இறுக்கமடைகின்றன. உதாரணமாக இடுப்பெலும்பின் தசைநார்கள் இறுக்கமடைகின்றன. இதனால் தன்னையறியாமலே இடுப்பு பகுதி முன்நோக்கி சற்று சரிவடைகிறது. இது நாரிவலியைக் கொண்டு வரும்.

மனஅழுத்தமானது உடலைப் பாதிப்பதைத் தடுப்பதற்கு மனஅமைதியைக் காக்க முயல்வதுடன் உடல் பயிற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.

புகைத்தல்

புகைத்தல் உடலாரோக்கியத்திற்கு தீங்கானது என்பதை எல்லோருமே அறிவோம். ஆனால் அது முதுகு வலியையும் கொண்டுவருவதைப் பற்றி சிந்தித்திருக்கிறோமா. புகைத்தலானது குருதிக் குழாய்களை (நாடிகளை) சுருங்க வைத்து குருதி ஓட்டத்தைக் குறைத்து உறுப்புக்களை நலிவடையச் செய்கிறது. அவ்வாறு முள்ளந்தண்டு எலும்புகள் அவற்றை இணைக்கும் இடைத்தட்டம் ஆகியவற்றிக்;கான குருதி ஓட்டத்;ததை குறைவடையச் செய்யும் இதனால் அதிகரித்த வேலைப் பளுவால் அவற்றில் ஏற்படும் சிதைவுகள் குணமடையமல் மோசடைகின்றன. இது வலியை ஏற்படுத்தும்.

எனவே புகைத்தலை நிறுத்த வேண்டும். இதைத் தவிர புற்றுநோய்கள். மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல நோய்களுக்கு புகைத்தலே காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது.

தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள்

முதுகுவலி நாரி வரி ஏற்படாமல் தடுக்க வேண்டுமாயின் அவற்றிற்கான தசைகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். முக்கியமாக முதுகுப்புற தசைகள், வயிற்றறைத் தசைகள் மற்றும் இடுப்புத் தசைகளை வலுப்படுத்த வேண்டும்.

ஏற்கனவே வலியால் பீடிக்கப்பட்டவர்கள் பயிற்சி செய்யத் தொடங்கு முன்னர் செய்ய வேண்டிய பயிற்சி எது, அதைசட சரியாக செய்வது எப்படி என்பதற்கு உடற் பயிற்சி ஆசிரியர் ஒருவரிடம் ஆலோசனைகளை கேட்டு அறிய வேண்டும். தவறான பயிற்சிகள் வலி மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளது என்பதை மறக்கக் கூடாது.

எனவே நீங்கள் முதுகுவலி நாரிவலி ஆகியவற்றால் பாதிக்கப்படுபவராயின் ‘எனக்கு ஏன் இந்தப் பிரச்சனை? நான் பாரம் தூக்கவில்லையே என மூளையைக் குழப்பாமல் உங்கள் நாளாந்த செயற்பாடுகள் எதாவது அதற்குக் காரணமாக இருக்கலாமா என மாற்று வழியில் யோசியுங்கள்.

விடையும் கிடைக்கும். நலமும் நாடி வரும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

M.B.B.S (Cey); D.F.M (Col), F.C.G.P (Col)

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

அடிக்கடி நெட்டி முறிக்கக் கூடாது  என பாட்டி சொல்கிறார். உண்மையில் அது தவறா டொக்டர்?

எஸ். பிரணவி, சாவகச்சேரி

பதில்:- நெட்டி முறிப்பது தீங்கானது என்பது உங்கள் பாட்டியினது மட்டுமின்றி உலகளாவிய ரீதியிலும் பாட்டிகள் சொல்லி பரம்பரை பரம்பரையாக நம்பப்படுகிறது. ஏன் பல மருத்துவர்கள் கூட அது தீங்கானது எனச் சொல்லக் கூடும். மாற்றுக் கருத்துகளும் உள்ளன.

அண்மையில் அதாவது 2017 ல் செய்யப்பட்ட ஆய்வுகள் நெட்டி முறிப்பதால் பாதிப்பு இல்லை என்கின்றன.

நெட்டி முறிக்கும்போது என்ன நடக்கிறது என 400 பேரை அல்டரா சவுண்ட் ஸ்கான் பரிசோதனை செய்து பார்த்தார்கள். அந்நேரம் சடுதியாக தனித்துவமான ஒளிப்பாய்ச்சல் போன்று மூட்டிற்குள் ஏற்பட்டது. நெட்டி முறிக்கும்போது மூட்டிற்குள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொண்டிருக்கும் இருக்கும் இரு எலும்புகளினதும் மேற்பரப்புகள் இழுப்பட்டு விலகுகின்றன.

மூட்டிற்குள் இருக்கும் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உராயாது சுலபமாக அசைவதற்கு உதவியாக அதற்குள் சிறிது திரவம் இருக்கிறது. அதை synovial fluid  என்பார்கள். இது கிறீஸ் போன்று செயற்படும். நெட்டி முறிக்கையில் எலும்பு மேற்பரப்புகள் சற்று விலகும். அப்போது போது மூட்டிற்குள் இருக்கும் அழுத்தம் குறைவதனால் அதற்குள் மேலதிக திரவம் வேகமாக உள்ளிழுக்கப்படும். இதன் போதே நெட்டி முறியும் சத்தம் உண்டாகிறது.

இவ்வாறு நெட்டி முறிக்கும் போது மூட்டினது உள்ளவு தற்காலிகமாக சற்று அதிகரிக்கிறது. அதனால் மூட்டினது செயற்பாட்டு வீதம் அதிகரிக்கிறது. அதாவது கூடியளவு வளையவும் நிமிரவும் முடிகிறது. எனவே நல்லது என்றுதானே சொல்ல வேண்டும்.

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் அதாவது 1990 ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வானது நெட்டி முறிப்பதால் கைகள் சற்று வீங்குவதுடன் பிடிக்கும் வலிமையும் குறைகிறது என்றது. ஆனால் அந்த ஆய்வானது சரியான முறையில் நடைபெறவில்லை என இப்பொழுது சுட்டிக் காட்டப்படுகிறது. அத்துடன் 2017 ல் செய்யப்பட்ட இரு ஆய்வுகள் நெட்டி முறிப்பதால் பிடிக்கும் வலிமை குறையவில்லை எனத் தெளிவாகச் சொல்லின.

எனவே நெட்டி முற்பதால் பாதிப்பு இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. மாறாக சற்று சுகமான உணர்வு ஏற்படுகிறது. அதாவது சுலபமாக வளையவும் நிமிரவும் முடிவதால்.

சவ்வுகள் மாட்டு;படுவதாலும், எலும்புகள் தேய்ந்து ஒன்றோடு ஒன்று உரசுவதாலும் சில வகை சத்தங்கள் கழுத்து, தோள்மூட்டு, முழங்கால் போன்ற மூட்டுகளில் கேட்பதுண்டு. இவை முற்றிலும் வோறன சப்தங்கள். நெட்டி முறித்தல் சத்தங்கள் அல்ல. அவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும். ஏனெனில் அவை நோய்கள் காரணமாக ஏற்படலாம் என்பதால் அடிப்படைக் காரணம் கண்டறியப்பட வேண்டும்.

நெட்டி முறித்தவருக்கு அதன் பின்னர் அந்த மூட்டானது சுகமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்பதை நாம் அறிவோம். எனவேதான் அவர் அவ்வாறு செய்கிறார். ஆந்த சுக உணர்வானது நாம் எற்கனவே கூறிய விளக்கங்களின் அடிப்படையில் உண்மையும் கூட.

ஆனால் நெட்டி முறிப்பதைப் பார்த்தும் கேட்டும் கொண்டிருப்பவருக்கு அந்த சத்தமானது எலும்புகள் முறிவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அதைச் கேட்கச் சகிக்க முடியாதிருக்கிறது. அதனாலேயே அது ஆபத்தானது என்ற உணர்வைக் கொடுக்றது. அதுவும் வயதானவர்களுக்கு அது நரகாசமாக ஒலிக்கலாம். அதனால்தான் காலம் காலமாக அது ஆபத்தானது என்று சொல்லப்படுகிறது என நினைக்கிறேன்.

நீண்ட காலம் நெட்டி முறித்தவர்களுக்கு எலும்பு தேய்வு ஏற்படுமா என்பதற்கான ஆதாரங்களும் ஆய்வுகள் ஊடாக கண்டு பிடிக்கப்படவில்லை என்பதையும் குறிப்பட வேண்டும்.

எனவே இன்றுள்ள தரவுகளின் அடிப்படையில் நெட்டி முறிப்பது ஆபத்தானது அல்ல என்றே சொல்ல முடியும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

எதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது 
எதிரொலிக்கு கேள்விகள் அனுப்ப (ethirolimedia@gmail.com), Tel 0212243818

0.00.0

Read Full Post »

சிறிரஞ்சனியின் ”’உதிர்தலில்லை இனி’

உங்கள் கருத்து என்ன? விடயம் இதுதான்.

ஐம்பது வயதான பெண் அவள். கல்வி அறிவுடன் நல்ல தொழிலும் படைப்பிலக்கிய ஆற்றலும் கைவரப்பெற்றவர். வளர்ந்த பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவளுடன் ஒத்த உணர்வுகள் கொண்ட வேறு ஒரு ஆடவனுடன் அவளுக்கு நட்பு உண்டாகிறது. அவளது பிள்ளைகளும் அதற்கு ஆதரவாக இருக்கிறார்கள். வெறும் நட்பு என்பதற்கு அப்பால் உடலும் சங்கமிக்கும் உறவாக அது பரிமணிக்கிறது.

சிறிரஞ்சனியின் உதிர்தலில்லை இனி தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையின் உள்ளடக்கம் இது. கலாசார பாரம்பரியங்களுடன் வாழ்ந்த தமிழரான நீங்கள் பரந்த இலக்கித் தேடலும் கொண்டவரும் என்றே கருதுகிறேன். இந்தப் பின்னணியில் இக்கதை உங்களிடையே எத்தகைய உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதையே அறிய விரும்பினேன்.

சிறிரஞ்சனியின் பல சிறுகதைகளை உதிரிகளாகப் படித்திருக்கிறேன். ஜீவநதியில் அவர் எழுதிய உள்ளங்கால் புல் அழுகை சிறுகதையை படித்த போது நான் பெற்ற உணர்வுகளை ஒரு சிறு ரசனைக் கட்டுரையாக அதே சஞ்சிகையில் எழுதவும் செய்திருக்கிறேன். ஆயினும் ஒரு தொகுப்பாக படிக்கும் போது அதற்குள் மூழ்கித் திளைப்பது மட்டுமின்றி விசாலமான அனுபவப் பகிர்வு கிட்டுவதை உணரமுடிகிறது.

அவரது நடை வித்தியாசமானது. வேகமாகக் கதையைச் சொல்லிச் செல்வார். சொல்லிக்கொள்ளாமல் பட்டெனக் காட்சிகள் மாறும். நுணுக்கமாக ஒவ்வொரு சொற்களையும் கருத்தூன்றிப் படிக்க வேண்டும். மேலோட்டமாகப் படித்தால் சில கதைகளைப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்கும். உதாரணத்திற்கு ‘பேசலன்றின் கிளியொன்று’ என்ற கதையில் ‘அம்மா’ வா அல்லது அம்மா வா என்பதில் உள்ள குறியீட்டைக் கவனத்தில் எடுக்காவிட்டால் வாசிப்பவனுக்கு குழப்பம் ஏற்படும்.

‘மூன்று நாள் லீவில் நின்றபின் திருமதியாக மீண்டும் வேலைக்குப் போன போது என்னில் இனம் தெரியாததொரு மாறலை என்னால் உணரக் கூடியதாக இருந்தது’ இது ‘யதார்த்தம் புரிந்தபோது.’. என்ற கதையின் ஆரம்ப வரிகள். இதில் திருமதியாக என்ற சொல்லைக் கவனத்தில் கொள்ளாவிட்டால் கதையின் ஆழத்திற்குள் நுளைந்து இரசித்திப் படிப்பதற்குள் கதையின் முக்கால் பங்கைக் கடந்துவிடுவோம்.

இந்தத் தொகுப்பில் உள்ள 16 கதைகளில் ஓரிரு கதைகளே தாயகத்தை களமாகக் கொண்டவை. ஏனையவை யாவும் புலம் பெயர் வாழ்வின் கோலங்களாகவே இருக்கின்றன. இந்த நூலின் முக்கியத்துக்கு இதுவும் மற்றொரு காரணமாகும். எமது மக்கள் புலம் பெயரத் தொடங்கி மூன்று தசாப்தங்களுக்கு மேலாகிறது. தாய் தகப்பனாகச் சென்றவர்கள் பாட்டன் பாட்டீ ஆகிவிட்டார்கள், குழந்தைகளாகச் சென்றவர்கள் பெற்றோர்கள் ஆகிவிட்டார்கள்.

புதிய கலை கலாசார சூழலுக்குள் இளம் வயதினர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். பெரியவர்கள் இணைந்து கொள்ளச் சங்கடப்படுகிறார்கள். புதிய சட்டதிட்டங்களுக்கு ஆட்படுகிறார்கள். முக்கிமாக பிள்ளைகளை சுதந்திரமாக வளர்ப்பது, தண்டனையாக அடிப்பது தவறு போன்றவை பழையவர்களுக்கு புதினமான முறையாகிறது. அதைக் கடைப்பிடிக்க முடியாமையால் குற்றக் கூண்டில் ஏறவேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இவை யாவும் சிறிரஞ்சனியின் அவதானிப்புள்ளாகி படைப்புகளாக அவதாரம் எடுக்கின்றன.

கணவனும் மனைவியும் வேலைக்கு செல்வதால் சந்திப்புகள் குறைகின்றன. கணவன் மனைவிக்கு இடையேயான நெருக்கம் குறையக் கூடிய சாத்தியங்கள் ஏற்படுகின்றன. உளநெருக்கீடுகள் ஏற்படுகின்றன. திருமணத்திற்கு அப்பாலான உறவுகளும் தொடங்கக் கூடிய சூழல் நிலுவுகிறது. இதைத் தவிர மாறுபட்ட இரசனைகளும் ஈடுபாடுகளும் கூட காரணமாகிறது.

‘ஒரு கலைஞனுக்கு, படைப்பாளிக்கு இலக்கிய நாட்டமுள்ள ரசிகன் வாழ்க்கைத் துணையாக அமையாவிட்டால் இலக்கிய தாபத்திற்கு வழிதேடுவது கடினமே..’ என ஒரு பாத்திரம் பேசுவது குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படுதற்கான மற்றொரு காரணத்தை கூறிநிற்கிறது. ஆம்! நெருக்கடி மிக்கசூழலின் வெளிப்படுகளாக இத் தொகுப்பின் கதைகள் அமைந்திருப்பதாக கருத முடிகிறது.

‘ஆயுதங்களிலிருந்தும் ஆயுததாரிகளிடமிருந்தும் தப்பி ஓடிய நாங்கள் இன்னொரு அகழியில் அமிழ்ந்திருகிறோம். … அதன் பின்விளைவாக உடல்நோய்களையும் மனநோய்களையும்தான் பெற்றிருக்கிறோம்..’ (பக்கம் 86) என ஒரு பாத்திரம் பேசுகிறது.

‘இப்போதில்லை’ என்ற கதையில் தலைமுறை இடைவெளியால் பிள்ளைகளின் உணர்வுகளை பெற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாததால் மகள் தனது கையை வெட்டிக் காயப்படுத்திக் கொள்கிறாள். அப்போது தாயின் மனம் அவ்வாறு எண்ணுவதைப் பதிவு செய்கிறார்.

இப் படைப்புகளின் மற்றொரு முக்கிய அம்சம் மனித மனங்களின் உள்ளுணர்வுகளைப் பேசுவதாக இருப்பதேயாகும். முக்கியமாக சிறுவர்களினதும் பெண்களினதும் உணர்வுகள் அழுத்தமாகச் சித்தரிக்கப்படுகின்றன. சிறுவர்கள் குழந்தைகள் பற்றிய தடம் மாறும் தாற்பரியங்கள், உள்ளங்கால் புல் அழுகை ஆகியவை குழந்தை உளவியலைப் பேசும் அருமையான படைப்புகளாகும். அன்பான தாயாகவும் மொழிபெயர்பாளராகவும் இருப்பதால் சிறுவர்களின் உள்ளுணர்வுகளைப் புரிந்து எழுதுகிறார். இதனால் உளவியல் ரீதியான படைப்புகளாக அமைகின்றன.

பிறழ் நடத்தையை அதுவும் பெண்களின் கதைகளைப் பேசும் முதல் எழுத்தாளர் இவர் அல்ல. தி.ஜா, ஜெயகாந்தன் முதல் இற்றைவரை பல எழுத்தாளர்கள் எழுதியலற்றைப் படித்திருக்கிறோம். சில பெண் எழுத்தாளர்களும் எழுதவே செய்திருக்கிறார்கள். ஆனால் அவை யாவும் காலாசார தற்காப்புக் கூண்டுக்குள் நிற்கும் ஆண் பார்வைகளாகவே இருந்திருக்கின்றன. ஆனால் அவற்றை உடைத்துக் கொண்டு படைப்பவராக இவர் இருக்கிறார்.

‘நான் வாழ்ந்து காட்ட வேண்டும். என்னை நான் மாற்றியாக வேண்டும் எனத் திடீரென என்ரை மனசுக்குள் ஒரு வேகம் வர…. குசினி அலுமாரியில் இருந்த கண்ணாடியில் முகத்தை சரி செய்து கொள்கிறேன்.’ (பக்43)

‘வலிய வலிய இனியும் போய்க் காயப்படப் போவதில்லை என்ற ஆக்கிரோஸமே இப்பொழுது அவள் மனதில் துளிவிட்டதுளது (பக்77)

அவை ஏமாற்றப்பட்டு துயரில் மூழ்கிக் கிடந்த பெண்; பாத்திரங்களின் உணர்வுகளைப் பேசும் சில உதாரணங்கள் மட்டுமே.

இனி கட்டுரையின் ஆரம்ப வரிகளுக்கு வருவோம். ‘உங்கள் கருத்து என்ன?’

‘ஒரு மாதமாக சாப்பாடு தண்ணியில்லாமல் அழுதழுது கிடந்தன். ஏனென்று கேட்க யாருமில்லை. பாவம் எண்டு பார்க்க வந்த ஓண்டு இரண்டு பேரும் நல்ல காலம் தப்பியிட்டாய். அவன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனதாலை நீ தப்பினாய். இல்லையெண்டால் ஊர்உலகத்திலை உன்ரை பேர் நாறியிருக்கும்’ என்றார்கள்.

இவளுக்கு வயது 52. பிள்ளைகள் கட்டி வெளிநாட்டிலை. மனுசன் ஆமி சுட்டு அந்தக் காலத்திலையே செத்துப் போச்சு. தனிய வாழ்ந்த இவளுக்கும் ஊரிலை உள்ள பெண்டாட்டியை இழந்த மனுசனுக்கு தொடர்பு ஏற்பட்டது. கூடி வாழ்ந்தார்கள். கலியாணம் கட்டி இருப்பம் என்று இவள் கேட்டாள் மறு நாள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டான்.

இது என்னிடம் சென்றவாரம் மனவிரக்தியோடு வந்த ஒரு பெண்ணின் கதை. உள்ளுர்க் கதை. நாகரீகம் முற்றிய மேலைநாட்டில் நடந்தது அல்ல.

அன்புக்கான யாசனை எங்கும் ஒன்றுதான். அன்பு ஆதரவின் வறுமைப் பிடியில் கிடந்தவர்களுக்குதான் அன்பு செலுத்தும் ஒருவரைக் கண்டதும் ஒட்டுதல் ஏற்படுகிறது. அது காதலாகவும் மலரலாம். உடலுறவுக்கும் போகலாம். ஆனால் அடிப்படையில்; அது அன்பு ஆதரவுக்கான ஏக்கம்தான்.

அன்பிற்கான தேடல் கலாசார பண்பாட்டு விழுமியங்களைக் கணக்கில் கொள்வதில்லை. அதனால்தான் நான் ஆரம்பத்தில் குறிப்பட்ட கதையில் வரும் பெண் ‘உங்களின் காதல் என்னை பதின்மவயதுப் பெண்ணாகவே மாற்றியிருந்தது. வாழ்வின் பிற்பகுதியில் ஒருவர் இவ்வளவு ஆழமான காதல் உறவில் விழலாம் என்பதை நான் அறிந்திருக்கவில்லை’ (பக் 93) எனக் கூறுகிறாள்.

உண்மையில் சிறிரஞ்சனி பல சிறப்புகளை இத்தொகுப்பில் படித்து இரசிக்க முடிகிறதாயினும் மிக முக்கியமாகப் பேசப்பட வேண்டியது இதிலுள்ள பெண் மொழிதான். 1984 ல் எழுதி தொகுப்பின் முதற்கதையாக இருக்கும் ‘மனக்கோலம்’ முதல் தொகுப்பின் இறுதிக்கதையாக 2017ல் எழுதிய ‘சில்வண்டு’ வரை இந்தப் பண்பைக் காண முடிகிறது. அம்பையின் படைப்புகளில் கண்டு இரசித்த அந்தப் பண்புகள் இவரது படைப்புகளிலும் வெளிப்படுகிறது.

திருமண உறவில் உரசல்களும் விரிசல்களும் பெண் பார்வையாக மட்டுமின்றி ஆண் பார்வையாகவும் சொல்லப்படுவது கதாசிரியரின் விரிந்த மனப்பான்மைக்கும் ஆழ்நத அவதானிப்பிற்கும் சான்றாக அமைகிறது. ‘கனவுகள் கற்பனைகள’; என்ற சிறுகதையில் மருத்துவரான மனைவி தனது தொழிலில் காட்டும் அக்கறையை கணவன் மனைவி உறவில் காட்டுவதில்லை. வீடு வந்தாலும் தனது நோயாளிகளைப் பற்றியே பேச்சு.

‘இது என்ன சாதரண ஆட்கள் மாதிரி சின்னச் சின்ன ஆசையெல்லாம்….’ என இருவாரகாலமாக கூடிப் போவதற்குத் திட்டமிட்டிருந்த திருவிழாப் பயணத்தை இரத்து செய்துவிட்டு மருத்து செமினாருக்கு போகும் போது அவள் அவனுக்கு சொன்னது.

‘ஆகாயத்தில் பஞ்சுப் பொதி போல் மிதந்து செல்லும் மேகத்தைரசிப்பது, இரவில் நிலவொளியில் அமர்ந்து நட்சந்திரங்களை எண்ணுவது, புற்தரையில் படுத்து உருள்வது …. யாவுமே சின்னச் சின்ன ஆசைகள்தான் ஆனால் அவற்றை மனைவியுடன் பகிர்ந்து கொள் நினைப்பதுதான் பெரிய ஆசையா, எனக்கு ஏன் அவை கிடைக்க மாட்டேன் என்கிறது’ ஆதங்கப்படுகிறான்..

ஆம். உள்ளத்தின் அரவணைப்புக்காக ஏங்குகிறது அவன் மனம்.

படித்து முடித்ததும் மூடி வைக்க முடியவில்லை தொகுப்பை. அவரது பாத்திரங்களின் உணர்வுகளோடு உரையாடிக் கொண்டிருக்கிறது எமது மனசு.

‘உதிர்தில்லை இனி’ தொகுப்பானது ஒன்றோடு மற்றொன்று போல பேசப்படாது இரசிக்கப்படாது உதிர்ந்து போகப் போகும் சிறுகதைத் தொகுப்பு இல்லை. நிச்சயமாக நிறைய வாசிக்கப்படும் பேசப்படும் விமர்சிக்கப்படும் நூலாக அமையும் என நம்புகிறேன்.

உதிர்தலில்லை அதற்கு.

எம்.கே.முருகானந்தன்.

0.00.0

Read Full Post »

பச்சை குத்தினால் தோல் புற்றுநோய் ஏற்படும் என்கின்றார்களே. உண்மையா?

எஸ் . வினோத் வவுனியா

பதில்:- பச்சை குத்தினால் புற்றுநோய் வரும் என்பதற்கான தெளிவான திடமான ஆதாரங்கள் எதுவும் இது வரை கண்டறியப்படவில்லை. ஆனால் வரக் கூடும் என்ற சில சந்தேகங்கள் பரவலாக உள்ளன.

பச்சை குத்துவதற்கு பயன்படுத்தப்படும் நிறக் கலவைகளில் பலவிதமான இரசாயனங்கள் கலந்துள்ளன. நிக்கல், குறோமியம், மங்கனீஸ், கோபாலட், டைடேனியம் ஒட்சைட் போன்றவை முக்கியமானவை. (nickel, chromium, manganese, cobalt, or titanium dioxide).  இவற்றில் பல நச்சுத்தன்மை வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அந்த இரசாயனங்கள் பச்சை குத்தப்பட்ட இடத்தில் மட்டுப்பட்டு நிற்காமல் அருகில் உள்ள சருமத்திற்கும் நிணநீர்த் தொகுதி ஊடாக நிணநீர்க் கட்டிகளுக்கும் பரந்து சென்று அவற்றை சற்று வீக்கமடையச் செய்வதாக அண்மைய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இவை நச்சுத்தன்மை வாய்ந்தமை என்பதற்கு அப்பால் நிக்கலும் குரோமியமும் புற்றுநோய்த் தூண்டியாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. எனவே பச்சை குத்துபவர்களுக்கு எதிர்காலத்தில் பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆனாலும் புற்றுநோய் ஏற்படுவதாக இதுவரை கண்டறியப்படவில்லை.

பச்சை குத்தப்பட்டவர்கள் எந்தவித ஆபத்தும் இன்றி சாதாரணமாக இருப்பதால் அவை பாதுகாப்பானவை என்ற எண்ணம் சாதாரண மக்களிடம் இருக்கிறது. ஆனால் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட நீண்ட பல வருடங்கள் எடுக்கும் என்பதால் அவை பற்றி பெரும்பாலும் தெரியவருவதில்லை.

பச்சை குத்துவது என்பது சருமத்தில் சில அடையாளங்களை அல்லது கோலங்களை அல்லது எழுத்துக்களை வர்ண கலவைகளால் பதிப்பதாகும். சிறிய ஊசிகள்களால் நுண்ணிய அளவு வண்ணக் கலவைகளை மீண்டும் மீண்டும் சருமத்தின் மேற்பகுதியில் குத்துவதால் அவை உள்ளே செல்கின்றன.

இவை நிரந்தரமான அடையாளங்கள் என்பது குறிபிடப்பட வேண்டியதாகும். காலத்தால் அழியாதவை. எனவே அந்நியப் பொருளான அது உடலில் நிரந்தரமாகக் குடிகொள்ளப் போகிறது என்பது கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம். எந்த அந்நியப் பொருளானாலும் அதற்கு எதிராக உடல் எதிர்வினையாற்றக் கூடும்.

புற்றுநோய் வருமா இல்லையா என்ற பிரச்சனைக்கு அப்பால் வேறு பல பாதிப்புகள் ஏற்படுவதை மருத்துவர்களாகிய நாம் காண முடிகிறது.

ஒவ்வாமை சரும நோய்கள் மிக முக்கியமானவை. அந்த இடத்தில் சருமத்தில் அரிப்பு எடுப்பது, அழற்சி மற்றும் எக்ஸிமா போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலருக்கு உடனடியாகவே அத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் வேறு சிலருக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னரே அவை தோன்றக் கூடும்.

பச்சை குத்திய உடங்களில் கிருமித் தொற்று ஏற்பட்டு புண்கள் தோன்றுவதை அதிகம் காண முடிகிறது. இதற்குக் காரணம் பச்சை குத்தும் பணியாளர்கள்; தமது கைகளை கழுவுதல் குத்துவதற்கு உபயோகிக்கும் ஊசிகளை கிருமி நீக்கம் செய்யாமை போன்ற சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் கடைப்பிடிக்காமையே ஆகும். சருமத்தில் கிருமித் தொற்று மட்டுமின்றி பெரிய சீழ் கட்டிகள் வரை ஏற்படுவதுண்டு.

பச்சை குத்திய இடங்களில் தழும்புகள் தோன்றுவது மற்றுமொரு பிரச்சனை. அழகைத் தேடப் போய் அசிங்கத்தில் முடிவதாக இது அமையும். இது எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. உடலியல் ரீதியாக சிலருக்கு இவை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். இருந்தபோதும் ஆழமான பெரிய புண்கள் ஏற்பட்டால் எவருக்கும் தழும்புகள் தோன்றலாம். தழும்புகள் சுலபமாகக் குணப்படுத்த முடியாதவை என்பதால் அவை வராமல் தடுப்பதே உசிதமானது.

சிறிய காய்கள் முளைகள், சரும அழற்சி போன்றை உள்ள இடங்களில் பச்சை குத்துவது அறவே கூடாது. ஏனெனில் அவை பின்பு புற்றுநோயாக மாறக் கூடிய சாத்தியம் உள்ளது. புச்சை குத்துவதில் உபயோகிக்கும் நிறக் கலமிகள் அதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும்.

இவ்வாறாக பல வித பாதிப்புகள் ஏற்படுவதால் பச்சை குத்துவதைத் தவிர்ப்பதே நல்லது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

எதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது 

எதிரொலிக்கு கேள்விகள் அனுப்ப (ethirolimedia@gmail.com), Tel 0212243818

0.00.0

Read Full Post »