Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜனவரி, 2019

எனக்கு வயது 25 . நான் ஒரு பெண்.  அதிகமாக தலைமுடி உதிர்கின்றது. தீர்வு என்ன?

வி. கஜானி கண்டி

பதில்- எமது முடிகள் நிரந்தரமானவை அல்ல அவை உதிராமல் இருப்பதற்கு. தினமும் 50 முதல் 100 வரையான முடிகள் உதிரவே செய்கின்றன. அதே நேரம் புதிதாக முளைக்கவும் செய்கின்றன. ஓவ்வொரு முடியும் 5- 6 ஆண்டுகள் வளர்ந்து வாழ்ந்து பின்னர் உதிர்கின்றன. வேறு முளைக்கின்றன. இது இயற்கையானது. ஆனால் வயதாகும்போது உதிர்வதற்கு ஏற்றளவு புதிதாக முனைப்பதில்லை.

ஆனால் நீங்கள் இளம் வயதுக்காரி. எனவே உதிர்வாற்கு ஏற்ப புதிதாக முளைக்க வேண்டும். ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உங்களுக்கு வழமையைக் விடக் கூடுதலாக உதிர்வது போலத் தெரிகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். உங்கள் தந்தை அல்லது தாயிடமிருந்து வந்த பரம்பரை அம்சங்கள் காரணமாக இருக்கலாம். உங்களது வாழ்க்கை முறைகளில் ஏதாவது தவறு இருக்கலாம். சில தருணங்களில் சில நோய்களும் காரணமாக இருக்கலாம்.

ஏனைய விடயங்களைப் பற்றிப் பேச முன்னர் உங்கள் வயதில் வரக் கூடிய இரண்டு முக்கிய நோய்கள் இல்லை என்பதை நிச்சயப்படுத்த வேண்டும்.

உங்கள் தைரொயிட் சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை எனில் முடி அதிகமாக உதிரக் கூடும். தைரொயிட் என்பது எமது கழுத்துப் பகுதியில் உள்ள ஒரு சுரப்பி. தைரொக்சின் ஹோர்மோனை சுரக்கும். இது குறைவாக சுரந்தால் எடை அதிகரிப்பு, மாதவிடாய்க் குழப்பங்கள், சோம்பேறித்தன்மை, முடி உதிர்தல் போன்ற பல அறிகுறிகள் தோன்றலாம். சிலருக்கு வேறு எந்த அறிகுறிகளும் இன்றி முடி ஐதாவதே ஒரே ஓரு அறிகுறியாக இருக்கும். TSH என்ற இரத்தப் பரிசோதனையைச் செய்வதன் மூலம் உங்களுக்கு இந்தக் குறைபாடு இருக்கிறதா என்பதை சுலபமாகக் கண்டறியலாம்.

பொலிசிஸ்டிக் ஓவேரியன் சின்ரோம் (PCOS) என்ற நோயும் உங்கள் வயதில் இருக்க வாய்ப்புண்டு. எடை அதிகரிப்பு மாதவிடாய்க் குழப்பங்கள் முகப் பருக்கள் போன்ற அறிகுறிகள் இருக்கலாம். மருத்துவ ஆலோசனை மூலம் இந்தப் பிரச்சனை இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

வேறு பல காரணங்களையும் சொல்லலாம்.

அண்மையில் ஏதாவது உளவியல் தாக்கங்கள் இருந்திருந்தாலும் முடி அதிகமாக உதிரக் கூடும். அண்மையில் குழந்தை பிறந்திருந்தாலும் அக் காலத்தில் ஏற்படுகிற ஹோர்மோன் மாற்றங்களாலும் முடி உதிரக் கூடும். மாறாக கர்ப்பமாக இருந்த காலத்தில் முடி மிகவும் அடர்த்தியாக இருந்ததை நீங்கள் நினைவு கூரக் கூடும். தலையில் பங்கஸ் தொற்று நோய் போன்ற சரும நோய்கள் இருந்தாலும் அதிகமாக முடி உதிரும். தொற்று நோயல்லாத வேறு சரும நோய்களாலும் முடி உதிரலாம்.

எனவே உங்கள் முடி கடுமையாக உதிர்கிறது எனில் அது வேறு நோய்கள் காரணமாக இல்லை என்பதை மருத்து ஆலோசனை மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகளை உட்கொளு;ளும் பெண்களுக்கும் அதிகமாக முடி உதிர வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும். அதே போல உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், மூட்டு நோய்கள், மனச்சோர்வு போன்ற நோய்களுக்கு உபயோகிக்கும் சில மருந்துகளும் முடி உதிர்தலை அதிகரிக்கும். நீங்கள் அவ்வாறு உபயோகித்தால் அதுதான் காரணமா என அறியவும் மாற்று மருந்துகளுக்கான ஆலோசனைக்காகவும் உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

முடி உதிர்வதற்கு உங்கள் தவறான வாழ்க்கை முறைகளும் காரணமாகலாம். மிக நெருக்கமான பற்களை உடைய சீப்புகளைத் தவிர்த்து சற்று அதிக இடைவெளி உடைய பற் சீப்புகளை உபயோகியுங்கள். இறுக்கமான பற்கள் உடைய சீப்புகள் முடிகளை இழுத்து பிடுங்கிவிடவும் வாய்ப்புண்டு. அதேபோல முடியை அலங்கரிக்கும் போது மிக இறுக்மாக முடியைக் கட்டுவதும் கூடாது. இறுக்கமான பின்னல் இறுக்கமான போனி ஸ்டைல் போன்றவற்றை தவிர்த்து சற்று தொளதொளப்பாக முடியைச் சீவிக்க கட்டுவது நல்லது.

இரத்த சோகை போசாக்கு குறைபாடு போன்றவையும் காரணமாகலாம். எனவே விற்றமின்கள், இரும்புச் சத்து, புரதம்  போன்றவை உள்ள மீன், கீரை, பருப்பு பயறு வகைகள், காய்கறி பழவகைகள் உள்ளடங்கிய போசாக்கு உணவுகளை உண்பது அவசியம்.

முடி மீண்டும் வளர்வதைத் தூண்டுவதற்கான தலைக்கும் பூசும் சில மருந்துகள் இருக்கின்றன. உங்கள் முடி உதிர்விற்கு வேறு நோய்கள் காரணம் இல்லை எனில் மருத்துவர் அதை உங்களுக்கு சிபார்சு செய்வார்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

கர்ப்பகால உடல் நிறையை எவ்வாறு குறைப்பது?
புனிதா மட்டக்களப்பு

பதில்:- கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பது என்பது இயற்கையானது. கட்டாயம் அதிகரிக்கவே வேண்டும். நிறைமாதத்தில் ஒரு கர்ப்பணியின் எடையானது சுமார் 10-11 கிலோ அதிகரிக்கும். ஆனால் அதைவிட அதீதமாக அதிகரிப்பது கூடாது.

அவ்வாறு அதீதமாக அதிகரித்தால் அதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்தே சிகிச்சை செய்ய வேண்டும்.

எடை அதிகரிப்பானது படிப்படியாக அமையும். முதல் மூன்று மாதங்களில் எடை அதிகரிப்பானது சுமாராகவே இருக்கும். அக் காலப்பகுதியில் சுமார் 1-2 கிலோ அதிகரிப்பே காணப்படும். அதன் பின்னர் வாராவாரம் சுமார் 0.5 கிலோ அதிகரிக்கக் கூடும்.

இந்த எடை அதிகரிப்பில் 2 முதல் 2.5 கிலோவானது கருப்பையில் உள்ள குழந்தை மற்றும் நச்சுகொடிக்கானதாகும். சுமார் 2 கிலோ கர்ப்பிணியின் மார்பக மற்றும் ஏனைய ஏனைய திசுக்கள் அதிகரிப்பதால் ஏற்படுவதாகும். மிகுதி 1.25 கிலோவானது அம்னியோடிக் திரவம் மற்றும் அதிகரித்த ஏனைய நீர்களிலானதாகும்.

கர்ப்பத்தின் குறித்த காலத்தில் ஏற்படும் எடை அதிகரிப்பானது எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தால் காரணத்தைக் கண்டறிய வேண்டும்.

ஆனால் கருவறையில் இருப்பது இரணைக் குழந்தைகளானால் அதிகரிப்பு சற்று அதிகமாக இருக்கும்.

கர்ப்பகாலத்தில் திடீரென கூடுதலாக எடை அதிகரிப்பது நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம்.

அத்துடன் பிரஸர் அதிகரிப்போடு கூடிய (Pre eclampsia) பிறீஇக்கொலம்சியாவின் அறிகுறியாகவும் இருக்கலாம். இரத்த சிறுநீர் மற்றும் இரத்த அழுத்தப் பரிசோதனைகளை மருத்துவர் அல்லது தாதி உடாக செய்து காரணத்தைக் கண்டறிந்து அதற்கான பரிகாரம் தேடவேண்டும்.

நோய்கள் காரணமல்லாத எடை அதிகரிப்பு என்று அறிந்தால் அவர் தனது உணவு முறையில் ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்வதுடன் சற்று உடற் பயிற்சியும் செய்து தேவைக்கு அதிகமான எடை அதிகரிப்பை சரி செய்ய வேண்டும்.

உதாரணமாக எண்ணெயில் பொரித்த, வதக்கிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தினமும் பால் அருந்த வேண்டும். அதை ஆடை நீங்கிய பாலாக அருந்த வேண்டும்.

சீனி அதிகம் சேர்ப்பதையும் இனிப்பான பானங்களையும் தவிர்க்க வேண்டும். லட்டு, கேசரி,தொதல்,கேக், சொக்ளட், டோநட் போன்ற போன்ற இனிப்பான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

அதீத எடை உள்ளவர்கள் உப்பையும் குறைப்பது நல்லது. ஏனெனில் உப்பானது உடலில் மேலதிக நீர் தேங்கிநிற்கச் செய்யும். அது எடையை அதிகரிக்கும்.

உடலில் தேங்கியுள்ள மேலதிக கொழுப்பைக் குறைப்பதற்கு உடற் பயிற்சியம் அவசியம். பொதுவாக நீந்துவது கர்ப்ப காலத்திற்கு ஏற்றதாகும். ஆயினும் எத்தகைய உடற் பயிற்சி நல்லதென்பதை இட்டு மருத்துவரோடு கலந்தாலோசிப்பது நல்லது.

கலோரி வலுக் கூடிய உணவுகளை மட்டுமே அதிக எடையுடைய கர்ப்பணிகள் தவிர்க்க வேண்டும். ஆயினும் போசாக்கு நிறைந்த உணவுகளான பால் முட்டை இறைச்சி காய்கறிகள் பழவகைகள் பருப்பு பயறு வகைகள் போன்றவற்றை போதியளவு உட்கொள்வது அவசியம்.

எதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »