Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for பிப்ரவரி, 2019

எனக்கு 30 வயது. புகைப்பிடிக்கும் பழக்கதுக்கு அடிமையாகிவிட்டேன். அதிலிருந்து மீள எவ்வளவு முயற்சித்தாலும் முடியவில்லை. இதற்கு என்ன செய்யலாம்?

கே. கவின் நெல்லியடி

புதில்:- உங்கள் கேள்வியில் உள்ள இரண்டு விடயங்கள் முயற்சி நீங்கள் வெற்றி பெறும் என்பதற்கு சான்றாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.

முதலாவது புகைத்தலுக்கு அடிமையாகிவிட்டதாக நீங்களே உணர்ந்து அதிலிருந்து மீள வேண்டும் என தீர்மானித்ததாகும். புகைத்தலைக் கைவிடமுடியுமா என்ற அவநம்பிக்கையுடன் பலர் தயங்கிக் கொண்டிருக்கும் போது விடுபட வேண்டும் என்ற தீர்மானமானமானது நிச்சயம் நம்பிக்கை ஊட்டுவதாகும். உங்கள் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கான முதல் வெற்றி அதிலேயே நிச்சயமாகிவிட்டது.

புகைத்தலிருந்து விடுபட வேண்டும் என்ற தீர்மானாமானது மீள்வதற்கான முதற்படி மட்டுமல்ல உங்கள் உடல் நலத்தை மேம்படுத்துவதை நோக்கிய முக்கிய அடி எனலாம். நீங்கள் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் வருடாந்தம் ஒரு மில்லியனுக்கு மேலானவர்கள் அத்தகைய முதலடியுடன் ஆரம்பித்தே புகைத்தலைக் கைவிடுகிறார்கள்.

இரண்டாவது விடயம் நீங்கள் பலமுறை முயன்றும் விடுபட முடியவில்லை என்பதாகும். நீங்கள் மட்டுமல்ல இன்னும் பலரும் மீண்டும் புகைக்க நேர்வதால் கைவிட முடியவில்லை என நினைக்கிறார்கள். அதையிட்டு அவநம்பி;கை கொள்கிறார்கள். ஆனால் முக்கியமான விடயம் என்வென்றால் இவற்றையெல்லாம் தாண்டியே பெரும்பாலானவர்கள் முற்றாகக் கைவிடுகிறார்கள் என்பதாகும்.

எனவே அவநம்பி;க்கை கொள்ளாதீர்கள். நிச்சயம் கைவிடுவீர்கள் உங்கள் தீர்மானம் உறுதியாக இருந்தால்.

முதலில் செய்ய வேண்டியது யாதெனில் நீங்கள் புகைத்தலை நிறுத்துவதற்கென ஒரு குறிப்பிட்ட தினத்தைத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதால் அந்தக் கால இடைவெளிக்குள் புகைத்தல் இல்லாத காலத்தை பற்றிய ஒரு மனநிலையை உங்களால் உருவாக்க முடியும். சிலர் குறிப்பிட்ட அந்த தினத்தில் புகைத்தலை திடீரென நிறுத்துவார்கள். வேறு சிலர் இந்தக் கால இடைவெளிக்குள் தினமும் தாங்கள் புகைக்கும் சிகரட்டின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து அத் தினத்தில் முற்றாகக் கைவிடுவார்கள்.

நீங்கள் பொதுவாக எந்த நேரத்தில் புகைப்பீர்கள். பலருக்கு மது அருந்தும் போது புகைக்க வேண்டும். வேறு சிலருக்கு சாப்பிட்ட பின்னர் தம் அடித்தால்தான் சரிப்படும். சிலருக்கு கோப்பி குடிக்கும்போது கூட புகைக்க வேண்டியிருக்கும். டென்சனாகும் போது, மன அழுத்தம் ஏற்படும் போது புகைப்பவர்கள் பலர். வாகனம் செலுத்தும்போது புகைப்பவர்கள் இருக்கிறார்கள்.

இப்பொழுது; சிந்தித்துப் பாருங்கள். பொதுவாக எத்தகைய தருணங்களில் நீங்கள் பெரும்பாலும் புகைப்பீர்கள் என்பதை நினைவுபடுத்துங்கள். புகைத்தலை நிறுத்திய பின்னர் உங்களுக்கு புகைத்தலை தூண்டும் அத்தகைய சந்தர்ப்பங்களுக்கு முகம் கொடுப்பதைத் தவிர்க்க முயலுங்கள். ஆனால் பல சந்தர்ப்பங்கள் தவிர்க்க முடியாதவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். சாப்பிட்ட பின்னர் புகைக்கத் தோன்றுபவர் சாப்பிடாமல் இருக்க முடியுமா? அவ்வாறு எனின் அந்த நேரத்தில் உங்கள் மனதுக்கு இதமான வேறு ஏதாவது ஒரு விடயத்தில் ஈடுபட முனையுங்கள்.

புகைத்தலை நீங்கள் கைவிட இருப்பதை இரகசியமாக உங்களளவில் செய்யாதீர்கள். உங்களுக்கு பிடித்தமான ஒருவர், உங்கள் அன்புக்கு உரிய ஒருவர் அல்லது நீங்கள் மதிக்கும் ஒருவரிடம் நீங்கள் கைவிட இருப்பதை சொல்லுங்கள். இந்த ஆலோசனையை நான் ஒருவருக்கு கூறியபோது அவர் தன் பாசத்திற்குரிய மகளின் தலையில் கைவைத்து சத்தியம் செய்து கைவிட்டார். 20 வருடங்களாகப் புகைத்த அவர் அதன் பின்னர் புகைக்கவே இல்லை. இப்பொழுது 75 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறார்.

புகைக்கும் சிலர் ஒன்று சேர்ந்து கூட்டாக புகைத்தலை நிறுத்துவதும் உண்டு. அதுவும் நல்ல பலனைத் தரக்கூடிய முறையாகும்.

ஒரு சிலருக்கு புகைத்தலை நிறுத்துவதற்கு மருத்துவ உதவி தேவைப்படும். அது பல வகைப்படலாம்.

புகையிலையில் உள்ள நிக்கரின் என்ற பதார்த்தமே புகைத்தலுக்கு அடிமையாக்குகிறது. எனவே அதை மூக்கில் அடிக்கும் ஸ்ப்ரேயாக. தோலில் ஒட்டும் மருந்தாக, வாயில் போடும் லொசென்சாக என ஏதாவது ஒரு விதத்தில் மருத்துவர்கள் கொடுத்து அதையும் படிப்படியாக நிறுத்துவதன் மூலம் கைவிட வைப்பார்கள்.

வாயினால் உட்கொள்ளும் மருந்துகளும் உள்ளன. இவற்றை மருத்துவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே செய்ய வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »