Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஏப்ரல், 2019

கூன் விழுந்தவர் பாடியவரின் கூன் பிரச்சனைகள்;

‘அரிது அரிது மானிடராதல் அரிது

மானிடராயினும் கூன் குருடு

செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது…’ என்று கூன் விழுந்த பாட்டி ஒளவையார் பாடினார்.

கூன் விழுதல் பொதுவாக முதுமையில் வருவது. ஆனால் ஒளவையார் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது என்று பாடினார். அதாவது பிறக்கும் போதே கூன் விழுவதைப் பற்றிப் பாடியுள்ளார். பிறப்பிலேயே வரும் நோய் என்று பாடியுள்ளதாக பொருள் கொள்ளலாம். உண்மைதான். பிறப்பிலும் இளவயதிலும் கூட முதுகு வளையலாம். ஆனால் அவ்வாறு வருவது குறைவு. முதுமையில் வருவதே அதிகம்.

முள்ளந்தண்டில் வளைவானது முன்பின்னாகவும் வரலாம். பக்கவாட்டிலும் வரலாம். முன்பின்னாக வருவதை kyphosis என மருத்துவத்தில் சொல்வார்கள்.

அதிலும் முதுவயதில் மேல் முதுகில் வரும் வளைவான கூனை வயது காரணமான Age related Hyperkyphosis    என்பார்கள்.

இவர்களின் மேல் முதுகு முள்ளந்தண்டு எலும்புகள் வழமைக்கு மாறாக அதீதமாக முன்பக்கமாக வளைந்திருப்பதே கூனுக்கு காரணமாகும். மணிக்கணக்காக கணனியின் முன் உட்கார்ந்திருப்பவர்களுக்கும் இத்தகைய கூன் (Hyperkyphosis)  வர வாய்ப்புண்டு.

பக்கவாட்டு வளைவானது சாதாரண கண்களுக்கு கூன் தெரிவதுபோல வெளிப்படையாகத் தெரிவது குறைவு. பக்கவாட்டு வளைவை மருத்துவத்தில் (Scoliosis) என்பார்கள்,

நாளாந்தம் பல கூன் விழுந்த முதியவர்களைக் காண்கிறோம். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். மிகுந்த சிரமத்துடுன் கைத்தடி ஊன்றி அடியெடுத்து நடந்து வருவார்கள்.

உண்மையில் முதியவர்களில் 20 முதல் 40 சதவிகிதமானவர்கள் கூன் விழுதலால் பாதிப்படைகிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் முக்கியமாக பெண்களே பாதிப்படைவது அதிகம். இந்த வளைவிற்கு பாதிப்புற்றவர்களது வழமையான இருக்கும் மற்றும் நிற்கும் நிலைப் போக்குகள் (Posture) காரணமாக இருக்கக் கூடும். பெண்கள் அதிகமாகப் பாதிப்படைவதற்குக் காரணம் மகப்பேறு, பாலுட்டுதல், மற்றும் போதிய கல்சியம் உட்கொள்ளமை காரணமாக இருக்கிறது.

இருந்தபோதும் முக்கிய காரணம் வயதாவதன் காரணமாக அவர்களது முள்ளெலும்பில் ஏற்படும் பாதிப்புகளும் தாக்கங்களும்தான். முக்கியமாக அவர்களது முள்ளெலும்புகளில் ஏற்படும் உடைவுகளும் சேதங்களும்தான். கூனல் விழுந்தவர்களில் மூன்றில் ஒருவருக்கு முள்ளந்தண்டு உடைவு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. வயதாகும் போது முள்ளெலும்பில் ஏற்படும் உடைவுகள் விழுந்து அடிபடுவதால் ஏற்படுவதல்ல.

வயதாகும் போது அவர்களின் எலும்புகளில் உள்ள கல்சியம் சத்தின் அடர்த்தி குறைகிறது. இதனால் முள்ளெலும்புகளின் நலிவடைகின்றன. உடலின் பாரத்தை சுமக்க முடியாமல் அவை நசிந்து உடைகின்றன. இவ்வாறு எலும்பு நலிவடைவதற்கு வயது மட்டும் காரணமல்ல. ஸ்டிரொயிட் வகை மருந்துகளை நீண்ட காலம் தொடர்ந்து உபயோகிப்பதும் காரணமாகிறது.

உதாரணத்திற்கு சொல்வதானால் ஆஸ்த்மாவுக்கு உபயோகிக்கும் சில வகை இன்ஹேலர்களில் ஸ்டிரொயிட் மருந்துகள் இருக்கின்றன. ஆனால் இவை மிகமிகக் குறைந்த அளவில் இருப்பதால் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் பலருக்கு இன்ஹேலர்கள் உபயோகிக்க விரும்பமில்லாததால் மாத்திரைகளை உபயோகிக்கிறார்கள். இம் மாத்திரைகளில் உள்ள ஸ்டிரொயிட் மருந்துகளின் அளவு மிக அதிகம். அதனால் எலும்பு சிதைவு மட்டுமின்றி நீரிழிவு உட்பட பல நோய்கள் வரலாம்.

முள்ளந் தண்டுகளை இணைப்பது வட்டமான மென்மையான இடைத்தட்டங்கள் (Intervertebral disc) ஆகும். வயதாகும் இவை ஈரலிப்பை இழந்து சுருங்க ஆரம்பிக்கும். இவையும் கூன் முழுவதை மோசமடையச் செய்யும். இடைத்தட்டம் சுருங்குவதால் உடலைத் திருப்புவது குனிவது, வளைவது போன்ற பல்வேறு செயற்பாடுகளும் சிரமமாக இருக்கும். அவற்றை முழுமையாகச் செய்வது இயலாதிருக்கும்.

பொதுவாக வலிகள் படுத்து ஆறுதல் எடுக்கும் போது தணிந்து விடும். ஆனால் முள்ளந்தண்டு வளைந்திருப்பதால் படுக்கும் போது அவை அழுத்தப்படுவதால் வலி ஏற்படுவது அதிகம்.

மிக அரிதாக ஆனால் முள்ளெலும்புகளில் என்புப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இதுவும் முள்ளெலும்பை வளையச் செய்யலாம்.

சிறிய கூனல் உடல் ரீதியாக பெரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்துவதில்லை. இருந்தபோதும் கடுமையான கூனலானது பல்வேறு பாதிப்புகளைக் கொண்டுவரும்.

கூனலானது உடல் தோற்றத்தை முற்று முழுதாகப் பாதிப்பதால் உளரீதியாகவும் மனத்தாக்கம் ஏற்படலாம். தனது தோற்றம் பற்றிய தாழ்வுணர்ச்சி, விழுந்துவிடுவோமோ என்ற பாதுகாப்பற்ற உணர்வு, மற்றவர்களில் தங்கியிருக்க வேண்டி இருக்கிறதே கவலை போன்றவை ஏற்படக் கூடும்.  உள வலியுடன் உடல் வலியையும் இணைந்து கொள்ளும்.

அத்துடன் கடுமையான கூனலானது சுவாசப்பையை அழுத்தக் கூடும். அவ்வாறு சுவாசப்பையில் கடும் அழுத்தம் ஏற்படுமாயின் சுவாசித்தலில் சிரமங்களும் ஏற்படக் கூடும்.

அவ்வாறே கடுமையான கூனலானது குடல் மற்றும் உணவுத் தொகுதிகளையும் அழுத்தக் கூடும். அவ்வாறு அழுத்தினால் உணவை விழுங்குவதில் சிரமங்கள் தோன்றக் கூடும். அத்துடன் வயிற்று ஊதல் பொருமல் ஏப்பம், நெஞ்செரிப்பு போன்ற அறிகுறிகளும் தோன்றுவதற்கான சாத்தியங்கள் உண்டு.

கூன் விழுவது முள்ளம்தண்டு எலும்புகளைப் பாதிப்பதுடன் அவற்றை இயங்கவைக்கும் தசைத் தொகுதிகளையும் நலிவடையச் செய்யும். இதனால் நாற்காலியிலிருந்து எழும்புவது சிரமமாக இருக்கும். கைபிடி உள்ள கதிரையாயின் அவற்றை கைகளால் பற்றிக் கொண்டே எழ நேரும்.

அத்துடன் இயல்;பாக நடப்பதிலும் சிரமங்கள் ஏற்படும். நடப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாக விழுவதற்கான சாத்தியங்கள். இத்தகைய விழுகைகளால் வேறு எலும்பு முறிவுகளையும் ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் மிக மிக அதிகமாகும்.

இவ்வாறான பல்வேறு பாதிப்புகளால் மரணத்திற்கான சாத்தியம் முன்நோக்கி நகர்கிறது.

வயது மூப்பினால் ஏற்படும் கூன் பிரச்சனையைத் தீர்க்க சிகிச்சைகள் ஏதும் பயன்படுமா. அல்லது ‘வயசு போனவர்தானே. இனி வைத்தியம் செய்து என்ன பிரயோசனம். ஏதோ இதோடை சமாளிக்க வேண்டியதுதான்… ‘ என்று சொல்லி கைகழுவிட வேண்டியதுதானா?

கைவிட வேண்டியதில்லை. பல வழிகளில் முயலலாம். பலன் கிடைக்கும்.

சத்திரசிகிச்சைகள் உள்ளன. ஆனால் முதியவர்களில் அதற்கான சத்திரசிகிச்சைகள் சாத்தியமில்லை அத்தகைய சத்திரசிக்சிசைகளைத் தாங்குவதற்கான உடல் வலிமை இருக்காது என்பதுடன் மயக்க மருந்து கொடுப்பதிலும் சிக்கல்கள் இருக்கலாம்.

முள்ளந்தண்டு வளைவுகளை நிமிர்த்துவதற்கான பட்டிகள் (back braces) கிடைக்கின்றன. இவற்றை அணிவதால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.

மிக முக்கியமானது முள்ளந்தண்டுகள் அவற்றை தசைநார்கள் ஆகியவற்றைப் பலப்படுத்துவதற்கான பல பயிற்சிகள் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து செய்வதன் நல்ல பலன் கிடைக்கும் என்பதை ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. இத்தகைய பயிற்சிகளை உடற் பயிற்சி மருத்துவம் செய்பவர்களின் அறிவுறுத்தலுடன் செய்வது நல்லது.

சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் சுவாசப்பையின் ஆற்றலை அதிகரிப்பதற்கான சுவாசப் பயிற்சிகள் தேவைப்படும்.

இவ்வாறான பயிற்சிகள் மூலம் கூன் உள்ளவர்கள் தங்கள் பாதிப்புகளை ஈடு செய்து மகிழ்வோடு வாழ முடியும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

நான் கனவிலும் நினைத்திருக்க முடியாத ஒரு காரியம் சாத்தியமாயிற்று. அவுஸ்திரேலியா, மலேசியா, தமிழ்நாடு, வடஇந்தியா என முற்றிலும் எதிர்பாராத ஒரு குறுகிய பயணம் சில நாட்களுக்குள் நடந்தேறியது. சாதாரண மக்களை மட்டுமின்றி, சில உயர் அதிகாரிகளையும் பிரமுகர்களையும் கூட சந்திக்க முடிந்தமை என் அதிர்ஸ்டம்தான். அதற்குள் சற்று சுவார்சமான விடயமாக வெள்ளைக்காரி போல தோற்றமளித்த ஒரு இளம் பெண்ணின் கறுத்த முலைகளைக் பார்த்து அவள் ஒரு ஜிப்ஸிப் பெண் என்பதை உறுதிப்படுத்தவும் முடிந்தது.

இவை யாவும் நொயல் நடசேனின் உபயத்தில் அவரது கானல் தேசம் நாவல் ஊடாக கிடைத்தது. எமது விடுதலைப் போராட்ட வரலாற்றின் பின்னணியில் எழுந்த பல படைப்புகளைப் படித்திருப்பீர்கள். நானும் நிறையவே படித்திருக்கிறேன். நேரடி அனுபவங்களும் நிறையவே உண்டு.

துப்பாக்கி ரவைகளும் எறிகணைத் தாக்குதல்களும் விமானக் குண்டு வீச்சுகளும் இலக்கின்றித் தாக்கி அப்பாவி உயிர்களை காவு கொண்ட கொடுரமான அனுபவங்கள் மறக்க முடியாதவை. சிகிச்சை அளிக்க நேர்ந்ததும் உண்டு. நோயாளியாகாமல் மயிரிழையில் தப்பியதும் உண்டு. இதுவரை படித்த ஈழத்து விடுதலைப் போராட்டம் சம்பந்தமான இலக்கியங்கள் யாவுமே நாம் அனுபத்தில் அறிந்த விடயங்களையே அழகியல் முலாம் பூசிய இலக்கியப் படைப்புகளாக ரசிக்க நேர்ந்தது.

ஆனால் நடேசனின் படைப்பு முற்றிலும் மாறுபட்டது. அது பேசும் பொருள் புதிது, அதன் நிகழ்புலங்கள் வேறுபட்டவை. அது வரையும் காட்சிகள் அந்நியமானவை. ஆனால் அது சிந்தும் வார்த்தைகளும் உவமைகளும் எமது மண்ணின் மணம் வீசுபவை.

எமது இனவிடுதலைப் போராட்ட காலத்தில் யாழ் மண்ணிலும், பிற்கூற்றை கொழும்பிலுமாக வாழ்ந்தவன் நான். போரின் உள் ரகசியங்களை, திரைக்குப் பின்னாலான செயற்பாடுகளை ஏனைய பொது மக்கள் போலவே நானும் அறிந்தது இல்லை. குடாநாட்டில் வாழ்ந்த போது புலிகள் சொல்வதையும், கொழும்பில் வாழ்ந்தபோது இலங்கை அரசு சொல்வதையுமே உண்மை என நம்ப நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆனால் நடேசனின் கானல் தேசத்தைப் படித்தபோது நான் அறிந்திராத ஒரு புது உலகம் என் முன் விரிந்தது.

இவ்வாறெல்லாம் நடந்ததா? வெளிநாட்டு அரசுகள் எவ்வாறு இப்போரின் பின்நிலையில் இயங்கின. அவர்களது உளவு நிறுவனங்கள் எங்கெல்லாம், எவ்வாறு ஊடுருவி இருந்தன, எமது பொடியளின் சர்வதேச வலையடைப்பு எவ்வாறு இயங்கியது. உள்நாட்டிலும் எங்களுக்கு தெரியாமல் கண்கட்டி வித்தையாக, இப்படியான காரியங்களை எல்லாம் செய்தார்களா என ஆச்சரியப்பட வைத்தது.

பொடியள் விடுதலைப் போருக்கு தேவையான பணத்தில் ஒரு பகுதியை வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து எவ்வாறு திரட்டியனார்கள்,. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்கள் அதற்கு எவ்வாறு உதவின போன்ற விடயங்களையும் இந் நாவல் பேசுகிறது. வெளிநாடுகளில் சேகரிக்கப்பட்ட போது அவ்வாறு பணம் சேகரிப்பதற்கு உதவியவர்களுக்கு கொமிசன், இனாம் போன்றவை வழங்கப்பட்டதை அறிந்தபோது எமது இனப் போரும் ஒரு வர்த்தக சந்தையாக மாறியிருந்தது என்ற கசப்புணர்வே ஏற்பட்டது.

மக்கள் தங்கள் இனத்தின் விடுதலைக்காக என்று அவுஸ்திரேலியாவில் கையளித்த பணத்தில் பெரும் பகுதியை ஒருங்கிணைப்புக் குழுவின் சில சுயநலமிகள் எவ்வாறு தங்கள் தங்கள் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைத்து சொந்தத் தொழில் முயற்சிகளை ஆரம்பித்தனர் போன்ற தகவல்களையும் நாவல் பேசுகிறது.

அதே நேரம் அத்தகைய கயவர்களைக் கண்காணிப்பதற்கு விடுதலைப் போராளிகள் இரகசிய கண்காணிப்பாளர்களையும் வைத்திருந்தார்கள். அவர்களைத் தண்டிப்பதற்கு தாங்கள் நேரிடையகத் தலையிட விரும்பவில்லை. வெளிநாட்டு தமிழ் மக்களின் விரோதத்தை அது தூண்டிவிடக் கூடும் என்பதால் அந்த நாட்டு அரசாங்கத்திடமே அவர்களை இரகசியமாக மாட்டிவிடும் கைங்கரியங்கள் நடந்ததை அறிந்தபோது எவ்வளவு சூட்சுமமாக இவை செய்யப்பட்டன என்பதை சுவார்ஸமாக வாசித்தபோதும் எம்மிடையே இத்தகைய கயவர்களும் இருந்திருக்கிறார்களே என்று பெருமூச்சு விடத்தான் முடிந்தது.

எம் இனத்தின் விடுதலைப் போருக்கு உள்நாட்டில் பலவழிகளில் பணம் சேர்த்தை நாம் அறிவோம். உள்ளுரில் கூட்டங்கள் வைத்துச் சேகரிக்கப்பட்டபோது உணர்ச்சி வசப்பட்டு தாம் அணிந்திருந்த நகைகளையே மேடையில் வைத்துக் கழற்றிக் கொடுத்த சில பிரபலங்களின் நகைகள் மேடைக்குப் பின்னே திருப்பிக் கொடுக்கப்பட்டதாம். வேடமணிந்த தியாகங்கள் அவை.

இந்த நூலில் உங்களை கண்ணீரில் நீந்த வைக்கும் பகுதி துணுக்காய் வதை முகாம் ஆகும்.

“மேசையில் நீலம் பச்சையாக இரண்டு வயர்கள் ஒன்றாகப் பின்னப்பட்டு இருந்தன. இதுவே இங்கு பிடித்தமானதும் அதிகம் பாவிக்கப்படுவதுமான ஆயுதம் என அறிந்திருந்தேன். அதைவிட ஒரு கொட்டன் தடி, ஒரு சுத்தியல், மின்சார ஊழியர்கள் பாவிக்கும் ஒரு குறடு என்பனவும் இருந்தன. அவற்றைப் பார்த்ததும் எனது இருதயம் மேளமடித்தபடி வாய்வழியாக வருவதற்கு துடித்தது….

மேசையில் இருந்த பொருட்களைக் காட்டி உனக்கு எது பிடிக்கும். ..” என்ற அந்த நக்கலான ஆரம்ப வரிகள் அந்த முகாமின் நிஜமுகத்தைக் காட்டப் போதுமானவையில்லை என்றே நினைக்கிறேன். நீங்களே வாசிக்க வேண்டியவை அவை.

அங்கு தடுக்கப்பட்ட குற்றவாளிகள் மேலே இரும்புக் கதவால் மூடப்பட்ட கிணறு போன்ற குழிகளுக்குள் இறக்கப்படுவார்கள். 4-5 பேர் ஒரு குழிக்குள். சிலர் நீண்டகாலமாக இருந்ததில் ‘உடை உருவ அமைப்பில் ஆதிகால மனிதர்களைப் பார்ப்பதுபோல் இருந்தது’ மதியத்தில் மலம் கழிக்க கயிற்று ஏணியால் ஏற விடுவார்கள். சலம் கழிக்க சாராயப் போத்தல்கள். அதில் ஒருவருக்கு ‘தலையில் அடித்ததால் சித்தசுவாதீனமடைந்து இருந்தார். சிரங்கு வந்தது. உடையணிவதில்லை. வெளியே மலம் கழிக்க செல்லும்போது மட்டும் உடை அணிவார்.

‘ஒரு நாள் உடையற்று மலம் கழிப்பதற்காக மேலே ஏறிவிட்டார். அங்கிருந்த காவலாளி கன்னத்தில் அறைந்து மீண்டும் உள்ளே தள்ளிவிட்டான் குழிக்குள் விழுந்தவர் சுவரில் ஒட்டிய பல்லியாக கால் கைகளை விரித்தபடி நிலத்தில் முகத்தை புதைத்திருந்தார். நீண்டநேரமாக எழவில்லை. இது நான் பார்க்கும் இரண்டாவது சாவு என நினைத்தேன்…. எனது சாவும் இங்கே நடந்துவிடுமோ?’

உடல் ரீதியாக மட்டுமின்றி உளரீதியாகவும் கொல்லும் சித்திரவதை முகாம் என்றே சொல்ல வேண்டும்.

“நான் என்ன பிழை செய்தேன்? என்ற கேள்வியைக் கேட்டபடி இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் வந்தார்கள். பல வருடங்கள் இங்கு இருந்தவர்களுக்கு கூட இதற்குப் பதில் தெரியாது. பலர் செய்த தவறு என்ன என்று தெரியாமலே மரணமானர்கள்…”

இப்பொழுது, காணமல் போனவர்கள் எங்கே என்று கேட்டு அரசுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். அன்று அவ்வாறு காணமல் போனவர்களுக்கு யார் பதில் சொல்வது என்று ஒரு இடக்குக் கேள்வி உங்கள் மனத்தில் எழுந்தால் அதற்கு பதில் சொல்லப் போவது யார்?

இப்படி அடைக்கப்பட்ட ஒருவர் அதிசமாக விடுதலையாகிறார்.

“உங்களது பணம் சரியாக இருக்கிறதா என கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள் என எனது பெட்டியைக் கொண்டுவந்து தந்தார்கள். அதில் எனது உடுப்புகள் மட்டுமின்றி பணமும் அப்படியே இருந்தன.”

அடாவடித்தனமாக நடந்தாலும் வலுக்கட்டாயமாக நிதி சேகரித்தாலும் பண விடயத்தில் விடுதலைப் புலிகள் எவ்வளவு நேர்மையாக இருந்தார்கள் என்பதை அவரது வாக்குமூலம் காட்டுகிறது,

இந்த நாவலின் மிக உச்ச கட்டம் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவைத் தாக்கிய கர்ப்பணி;யான தற்கொலைப் பெண் போராளி செல்வி பற்றியது. அவள் உண்மையில் கர்ப்பம் தரித்திருந்தாள் என்று நாவல் சொல்கிறது. இல்லை அது வேடம் மட்டுமே என சிலர் இந்நாவல் பற்றிய விமர்சனத்தில் சொல்கிறார்கள்.

அதை விடுங்கள். அவள் எவ்வாறு கர்ப்பணியானாள் என்ற கதை எமது வரலாற்றின் கரும்புள்ளியாகவே தெரிகிறது. நீங்களே படித்துப் பாருங்கள்.

ஆனால் கரும்புலியாக மாறிய அவளது தியாகம் மகத்தானது. அவளது பெண்மை மலினப்படுத்தப்பட்ட போதும், அவளது கணவன் என்றாகியவனால் உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் துன்பப்படுத்தப்பட்ட போதும் அவள் தான் கொண்ட இலட்சியத்திலிருந்து பின்வாங்கவில்லை. தமிழனத்தின் மீட்சிக்கு என நம்பி அவளும் அவளை ஒத்த பலரும் செய்த உயிர்த் தியாகங்கள் வரலாற்றின் அழிக்க முடியாத சுவடிகள் என்றே சொல்ல வேண்டும்.

அண்மைக் காலத்தில் இணையத்தில் அதிகம் பேசப்பட்ட படைப்புகளில இந்த நாவலும் அடங்குகிறது.  பல்வேறு விமர்சனங்கள் கானல் தேசம் பற்றி முன்வைக்கப்பட்டன. விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களுக்கு சாத்தானின் நாற்ற வாந்தியாகக் கசந்தது. மாறாக புலிகளுக்கு எதிரானவர்களுக்கு இறைவேதம் போல இனித்தது. என் போன்ற சாதாரண வாசகர்களுக்கு சுவார்ஸ்மான நாவலாக இருந்ததுடன் எமது இனப் போரில் நாம் அறியாத பக்கத்தைக் காட்டும் சாளரமாகவும் இருந்தது.

கானல் தேசம்

காலச்சுவடு பதிப்பக வெளியீடு- டிசம்பர 2018

பக்கங்கள் 399

எம்.கே.முருகானந்தன்

ஞாயிறு தினக்குரலில் வெளியான கட்டுரை

0.00.0

Read Full Post »