Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for நவம்பர், 2020

டாக்குத்தரின் தொணதொணப்புகள்

தனியே மருந்தெடுக்க வராதீர்கள்

பொலிந்த முகம், கனத்த மார்பு, உறுதியான கைகள், தடித்த உடல். நல்ல வலுவான உடலுள்ள பெண்தான்.

ஆனால் அவள் எனது அறைக்குள் நுழைந்த போதே முகம் சோர்ந்து நடை தளர்ந்திருப்பதை அவதானிக்க முடிந்தது. விழுந்துவிடக் கூடாது என்ற கவனத்துடன் மெதுமெதுவாகவே நடந்து வந்தாள். இருந்த போதும் அதை மீறிய உள்ளுறிய அவசரமும் அந்தரமும் இருப்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.

அருகில் வந்தவள் திறப்புக் கோர்வையை வீசி எறிவதைப் போல மேசையில் போட்டுவிட்டு அப்படியே மேசையில் தலையைச் சாய்த்தாள்.

பக்கெனக் மணிக்கட்டைப் பற்றி அவளது நாடித்துடிப்பை கணி;த்தேன். சற்று வேகமாக துடித்துக் கொண்டிருந்தாலும் அதன் பருமானம் தளர்ந்திருக்கவில்லை என்பது திருப்தியளித்தது.

அதற்கிடையில் அவளது முகம் கை கால்களையும் அவதானிக்க முடிந்தது. சற்றுச் சிவந்து திட்டுத் திட்டான வீக்கங்கள் முகத்திலும் உடலிலும் பரந்து கிடந்தன.

‘சரியான சொறிவு. மேலெல்லாம் ஒரே கடி. பொறுக்க முடியவில்லை’ என்றாள். தொடர்ந்து ‘கோயிலுக்கு வந்தனான். கடி பொறுக்கேலாமல்தான் உங்களட்டை ஓடிவந்தனான்’

ஏதோ ஒவ்வாமை என்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது. ஆனால் காரணம் என்ன?

‘ஏன் என்ன நடந்தது’ என விசாரித்தேன்.

‘குளவி கடிச்சுப் போட்டுது. முகத்திலையும், முதுகிலையும் கையிலும் கடிச்சுப் போட்டுது’

‘எங்கை கடிச்சது கோயிலிலையோ’

வீட்டிலைதான் கடித்ததாம். அதன் பிறகு வெளிக்கிட்டு கோயிலுக்கு வந்த பிறகுதான் சொறி அரிப்பு தொடங்கியிருக்கிறது.

தலைச்சுத்து, சத்தி, மயக்கம் போல வருதல் போன்ற அறிகுறிகள் ஏதும் இருக்கோ என வினவியபோது அவை எதுவும் இல்லை என்று சொன்னாள். பிரஸரை அளந்து பார்த்தபோது அதுவும் சரியான அளவில் இருந்தது. நாடித்துடிப்பு அளவாக இருந்ததையும் மனதில் கொண்டு பார்த்த போது அவள் அபாய நிலையில் இருப்பதற்கான சாத்தியம் இல்லை. எனவே மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இருக்காது.

அவளது ஒவ்வாமையைத் தணிப்பதற்கான ஊசி மருந்தை ஏற்றி மருந்துகளையும் கொடுத்து அனுப்பிடலாம் எனத் தீர்மானித்தேன்.

அப்பொழுதான் அவள் மேசையில் போட்ட திறப்புகள் ஞாபகம் வந்தது.

‘எப்படி வந்தனீங்கள் யாராவது கூட வந்தவையளா?’ என விசாரித்தேன்.

‘தனியத்தான் வந்தனான். ஸ்கூட்டியிலை’

திறப்பைக் கண்டதும் அதை ஏற்கனவே அனுமானித்திருந்த போதும். தனிய வந்ததின் சிக்கல்கள் மனதில் ஓட ஆரம்பித்தது.

குளவி கடித்தல் என்பது ஆபத்து நிறைந்தது. முகம், உதடு தொண்டை ஆகியன தடித்து வீங்கும். கை கால்கள் உடல் சொறியும். தலைச்சுற்றும் ஏற்படலாம்.

இரத்த அழுத்தம் திடீரெனக் குறைவது, தலை அம்மல் மயக்கம் ஆகியன ஆபத்தான அறிகுறிகளாகும். இவை தோன்றினால் மருத்துவமனையில் அனுமதித்தே சிகிச்சை அளிக்க வேண்டும்.

இவளுக்கு முகம், உதடு தொண்டை வீக்கம், உடற் சொறிவுடன் தலைச்சுற்றும் இருந்ததால்தான் எனது மேசையில் படுத்திருக்கிறாள்.

அந்தத் தலைச்சுற்றுடன் தான் ஸ்கூட்டி ஓட்டி வந்திருக்கிறாள். வரும்போது தலைச்சுற்று மோசமாகியிருந்தால் ஸ்கூட்டி விழுந்து ஆபத்தான நிலையாகியிருக்கும். உயிராபத்து கூட நிகழ்ந்திருக்கலாம்.

மருத்துவத்திற்கு செல்லும் போது தனியாக ஒருபோதும் செல்ல வேண்டாம். குளவி கடித்தல் போன்ற ஆபத்தான விசயங்களுக்குத்தான் இது பொருந்தும் என்றில்லை.

காய்ச்சல், தடிமன், பிரஸர், சீனி வருத்தம் போன்ற எதுவானாலும் உதவிக்கு யாரையாவது அழைத்துப் போவதே புத்திசாலித்தனமானது. அங்கு ஊசி போடக் கூடும், இரத்தம் எடுக்கக் கூடும், அல்லது வேறு பரிசோதனைகள் செய்யக் கூடும். சிலவேளை மருத்துவமனையில் அனுமதிக்கவும் கூடும்.

இத்தகைய நிலைகளை தனியே சமாளிக்க முடியாது. எனவே உதவி தேவை. யாரையாவது அழைத்துச் செல்லுங்கள்.

இந்தப் பெண்ணுக்கு ஊசி போட்டு சற்று நேரம் அவதானிக்க வேண்டி நேர்ந்தது. படுத்திருந்தாள். அவளது வீட்டிக்கு பல முறை போன் போட்டும் யாரும் எடுக்க வில்லை. நீண்ட நேரத்தின் பின்தான் தொடர்பு கிடைத்தது. வந்து அழைத்துச் சென்றார்கள்.

0.00.0

Read Full Post »