>
மேற்படி சங்கத்தினரின் முத்தமிழ் விழாவானது ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் குரலைத் தொனிப் பொருளாக கொண்டு நடந்தேறியது.
சென்ற ஆண்டு வெற்றி எவ்எம் பணிப்பாளர் லோஷன் அவர்களுக்கு இவ் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 வருடங்களாக வலைப் பதிவு உலகில் நான் இயங்கிக் கொண்டிருக்கின்றேன்.
மருத்துவத்திற்காக ஹாய் நலமா?
இலக்கியம் சினிமா கலையுலகம் ஆகியவற்றிற்கான மறந்து போகாத சில
மருத்துவத்துறை சார்ந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ள Steth இன் குரல்
என எனது பதிவுலகம் விரிந்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு போலும் இந்த விருதை அளித்துள்ளார்கள்.
பதிவுலகில் தடம்பதிக்க கைகொடுத்து ஆதரவு தந்த பதிவுலக நண்பர்கள் அனைவரும் இவ் விருதின் பங்காளிகளே. அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள்.
சென்ற ஞாயிறு 5ம் திகதி மாலை கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்ற முத்தமிழ் விழாவின் போது கொழும்பு பல்கலைக் கழக தமிழ் சங்க பெரும்பொருளாளர் திருமதி சாந்தி செகராஜசிங்கம் (சிரேஸ்ட விரிவுரையாளர் சட்டபீடம்) அவர்களால், சங்கத் தலைவர் தியாகராஜா சுகந்தன் முன்னிலையில் இவ் விருது வழங்கப்பட்டது.
சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் கொழும்பு மருத்துவ பீட மாணவனாக இருந்தபோது (1970-75) நானும் இச் சங்க அங்கத்தவராக இருந்த இனிய நாட்கள் மனதில் நிழலாடுகிறது. அதன் பல செயற்பாடுகளிலும் முன் நிற்கக் கூடியதாக இருந்தது.
இதே மேடையில் அப்பொழுது 1974ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் 17ம் திகதிகள் என இரு நாட்களாக இளம் தென்றல் கலைவிழா நடபெற்றது. அவ் விழாவில் ‘நெடும் பயணம் நிறையும் வரையில் நெஞ்சேயுனக்கு ஓய்வில்லை’ தலைப்பிலான கவிதை அரங்கிற்கு தலைமை தாங்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த கவிதை அரங்கில் முற்போக்கு கலை இலக்கியப் பேரவைச் சார்ந்த திரு.சோ.தேவராஜா சட்டத்துறை மாணவனாக இருந்த அந் நேரத்தில் கவிதை படித்ததும் சந்தோசமான நிகழ்வாகும்.
அன்று மேடையேறிய மருத்துவபீட மாணவர்களின் ‘தழும்பிய நெஞ்சம்’ என்ற நாடகத்தில் வேலுவாக நடித்துப் பாராட்டுப் பெறக் கூடியதாக இருந்தது.
இத்தகைய நினைவலைகளை மீண்டுக்கொண்டு, கொழும்பு பல்கலைக் கழக தமிழ் சங்கத் தமிழ் விழாவில் இப்பொழுது மேடையேறக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது.
கொழும்பு பல்கலைக் கழக தமி்ழ் சங்கத்தினருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களின் தமிழ்ப் பணி தொடர்ந்து சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்.