Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘அனுபவம்’ Category

‘இரண்டாயிரம் ஆண்டுச் சுமை எமக்கு’ எனப் பாடினார் எமது மூத்த கவிஞர்.

Murugaiyan

இரண்டாயிரம் ஆண்டுகள் என்ன அதற்கும் மேலான காலாச்சார பாரம்பரியம் எமக்கு உண்டு. இன்றும் எங்கள் கலாசாரம் செழுமையாக இருப்பதற்கு அதுவே முக்கிய காரணமாகும்.

ஆனால் சில தடவைகளில் அது சுமையாகவும் இருக்கும் என்பதையே அவர் அவ்வாறு பாடினார்.

இரண்டாயிரம் என்ன, ஐயாயிரம் ஆண்டுப் பெருமையைப் பறையடித்து சங்கு ஊதி மேலும் சுமை ஏற்றத் தயங்காதவர்கள் நாம்.

எமது சுமை கலாசாரத்தில் மட்டுமல்ல. விஞ்ஞானம் சுகாதாரம் என மேலும் பல துறைகளுக்கும் விஸ்தரிக்கிறது.

இல்லாத சுமைகளையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து எம்மினத்தின் முதுகெலும்பை ஒடிக்க எம்மில் பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒளவையார் காலத்திலேயே

‘அணுவைப் பிளந்து ஏழ் கடலைப் புகுத்தியவர்கள்’

நாம் எனப் பெருமையடித்துக் கொள்கிறோம்.

avvai

ஆனால் அவர் பாடிய காலத்தில்
அணு என்ற சொல்லின் அர்த்தம் என்ன?
இன்று அதன் புதிய அர்த்தம்
என்னவெனச் சிந்திக்கிறோமா?

அப்படியான நாம் சுகாதாரத் துறையை மட்டும் விட்டு வைப்போமா?

தமிழர்களாகிய நாம் சங்க காலத்திலேயே சுத்தத்தைக் கடைப்பிடித்தவர்கள், சுகாதாரத்தைப் பேணியவர்கள் என்று பெருமை அடித்துக் கொள்வோம்.

‘அன்றே ஆசாரக்கோவை எழுதப்பட்டுள்ளமை அதற்குச் சான்று’ எனப் பழம் பண்டிதர்கள் ஆதாரம் தேடுவார்கள்.

‘அதிகாலை நித்திரை விட்டெழுந்து கடற்கரை ஓரமாக அல்லது நீர் நிலையை அண்மித்த இடங்களில் தெற்குத் திசையை நோக்கி மூக்கு நுனியைப் பார்த்தபடி மலசலம் கழிக்கவேண்டும் என்று எமக்குச் சைவ வினாவிடையில் போதிக்கப்பட்டுள்ளது.

arumuganavalar

ஆனால் நாம் வடலிகளுக்கும், ஈச்சம் பற்றைகளுக்கும், வயல்களுக்கும் மனித எருக்களைப் பசளையிட்டு காடு வளர்த்துச் சூழலைப் பாதுகாக்க அவ்வாறு செய்தோமா?

அதன்பின் குளக்கரையில் அடிக்கழுவி, அதே நீரால் வாய் கொப்பளித்து, முகம் கழுவி, தலைக்கு நீராடி, ஆடை துவைத்துச் சுத்தமாக ஆலயம் சென்று தரிசனம் செய்த எமது கலாசாரப் பாரம்பரியம் போற்றுதற்குரியது!

புண்ணிய ஸ்தலம் ஒன்றைத் தரிசிக்கும் வாய்ப்பு பல வருடங்களுக்கு முன் கிடைத்தது. அதிகாலையி லேயே பொழுது புலருமுன் அரையிருட்டில் எம்மை புண்ணிய தீர்த்தத் திற்கு அழைத்துச் சென்றார் எமது கைட்.

கடற்கரையில் நாற்றம் தாங்க முடியவில்லை. சேற்று நாற்றமாக்கும் என மூக்கைப் பிடித்துக் கொண்டு நீரினுள் தலையை மூழ்கிவிட்டுத் தலையை வெளியே எடுத்தேன்.

லேசான வெளிச்சத்தில் லட்டு மாதிரி ஏதோ மிதந்து வருகிறது.
கடவுளின் அருட்பிரசாதமாக்கும் எனப் பக்தி யோடு அள்ளியெடுக்கக் கையை நீட்டினால் அருகிலிருந்தவர்
நமுட்டுச் சிரிப்போடு எழுகிறார்.

bath

லுங்கியை உயர்த்திக் கொண்டு ‘பாரம் கழிந்து’ விட்ட திருப்தியோடு காலை அகட்டி வைத்து நடந்து செல்கிறார்.

சிறுவயது ஞாபகம் வருகிறது. எனது மாமாவிற்கு என்னிலும் ஒருசில வயதுகளே அதிகம். அதனால் அவர் எனது விளையாட்டுத் தோழனும் கூட.

அவருக்குக் ‘கிரந்தி’ உடம்பு என்று பாட்டி அடிக்கடி சொல்லுவா.

சிறு காயமானாலும் புண் அவியத் தொடங்கிவிடும்.
அவரின் ஐயா, எனது பாட்டானாருக்கு பட்டணத்தில் வேலை. ஞாயிற்றுக்கிழமைகளில் தான் வீட்டுக்கு வருவார்.

வந்ததும் இவரது புண் அவரது கண்ணைக் குத்தும்.
உடனடியாகவே அதனைச் சுத்தம் செய்யச் சித்தமாவார்.

மாட்டுக் கொட்டிலுக்குப் போய் புதுச்சாணமாக எடுத்து,
ஒரு உருண்டை உருட்டி ஆடுகால் மரத்தடி ஈரலிப்பு மண்ணில்
ஒளித்து வைப்பார்.

பின்புதான் மாமனை கிணத்தடிக்கு இழுத்துக் கொண்டு போய் சோப் போட்டுக் குளிக்க வார்க்கும் சடங்கு தொடங்கும்.

அதனைத் தொடர்வதுதான் உச்சக்கட்டம்.

கண்ணுக்குப் சோப் போட்டுவிட்டு பொடிப்பிள்ளை கண் திறக்க முடியாது அந்தரித்து நிற்கும் நேரம் பார்த்து மறைத்து வைத்திருந்த சாணிக்கட்டியை எடுக்க மெல்ல நழுவுவார்.

புண்ணில் தேய்த்துச் சுத்தப் படுத்துவதற்காக.

மாமனுக்குத் தெரியாதா இவர் செய்யப் போவது.
கண்ணைத் துடைத்துவிட்டுப் பிடிப்பார் ஓட்டம்.
இவர் விட்டுக் கலைப்பார்.
அவர் தப்பியோடுவார்.

கிணற்றுக்கட்டைச் சுற்றி,
வீட்டைச் சுற்றி,
பாட்டியைச் சுற்றி
என ஓட்டப்போட்டி தொடரும்.

ஓடிக் களைத்துப்போன பாட்டா, தப்பிப் போட்டாய் என்ன, அடுத்த கிழமை பார்க்கிறேன் என பல்லில்லாத வாயால் கறுவுவார்.

அன்று ஓடித் தப்பியதால்தான் ஏற்புவலியால் (Tetanus) சாகாமல் இன்று தலைநரைத்தும், இறைசேவை செய்து கொண்டு உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் மாமா.

பசுவின் சாணியில் ஏற்புவலிக் கிருமிகள் நிறைய இருப்பது
இப்பொழுது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே.
அவரது காலத்திலும் தெரிந்து தான் இருந்தது.
ஆயினும் பாட்டா மூதறிஞர் ராஜாஜியின் விசிறி.
கசத் தடுப்பு (TB) ஊசியான பி.சி.ஜி. போடக்கூடாது எனப் போராட்டம் நடத்தியவரல்லவா அந்த மூதறிஞர்.

தினமும் கைராட்ணம் சுத்துமளவிற்கு அவர் சொற்கேட்டு நடந்த சீடப்பிள்ளையான பாட்டா சாணியைத் தேடாமல் வேறு என்ன செய்திருப்பார்.

படித்தவர்கள் கூட அறிவியலை விட
வாழையடி வாழையாக வந்த
பழக்கவழக்கங்களையும் சம்பிரதாயங்களையும்
நம்பிக் கடைப்பிடித்து வந்த காலம் அது.

பாட்டாவும் எப்படி விதிவிலக்காக முடியும்.

முன்பெல்லாம் பிறந்த சில நாட்களுக்குள்ளேயே குழந்தைகள் ஏற்புவலியால் துடித்துச் சாவது சர்வசாதாரணம்.

Neonatal tetanus

பிறந்தவுடன் பொக்குள் புண்ணுக்குச் சாணி வைத்து மருந்து கட்டும் வழக்கம் அப்போதிருந்தது தான் காரணம்.

இன்றும்கூட சாணியால் குழந்தைகளின் உயிர் குடிக்கும் கைங்கரியம் உலகின் சில பகுதிகளில் நடக்கிறதோ நான் அறியேன்.

உலகெங்கும் இன்னும் குழந்தைகள் பிறந்த சில நாட்களுக்குள் ஏற்பு நோயால் இறப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது. 2008ற்கான அறிக்கைப்படி  6658 இவ்வாறு இறந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் 2000-2003 காலப்பகுதியில் 257,000 அவ்வாறான சிசு இறப்புகள் நிகழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது பற்றி விபரமாக அறிய உலக சுகாதார ஸ்தாபனத்தின அறிக்கையைப் படிக்க கிளிக் பண்ணுங்கள் 

பிறப்புக் கால சிசு ஏற்பு வலி நோயின் (Neonatal Tetanus) அறிகுறிகளாக

  • தசைஇறுக்கம்
  • சினப்பு
  • தாய்ப்பாலை உறிஞ்ச முடியாமை
  • விழுங்கவும்  முடியாமை
  • தொட்டவுடன் தசைகள் இறுகி வலிப்பு போல ஏற்படல் எனப் பலவாகும்.

ஆனாலும் இன்னமும் பசும்சாணி எமக்குப் புனிதமானதாகத்தான் இருக்கிறது.

வீட்டைப் பசுஞ்சாணியால் மெழுகித் தான் புனிதப்படுத்துவோம்.

பிள்ளையார் பிடிப்பதும் சாணியால்தான்.

சுளகைச் சாணியால் மெழுகி அதில் உணவு தயாரித்து உண்ட மலந்தின்னிகள் நாம்.

Cow_Dung.
மனித மலத்தைக் கண்டாலே மூக்கைப் பொத்தி மறுபக்கம் திரும்பும் நாம் மாட்டின் மலத்தைப் புனிதமாக, பெருமையாக கையால் தொட்டு அளையவும் தயங்காத ‘புதுமை’ மனிதர்களாக இருக்கிறோம்.

Sulaku

கைப்புண்ணோடு சாணியைக் கையளைந்து கதிமோட்சம் அடைந்த கோடானுகோடி முன்னோர்கள் இறந்தும் பிறவா வரம் பெற்றனரோ?

இவ்வளவு செய்தும் எமது முன்னோர்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக திடகாத்திரமாக நீண்ட நாள் வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு ‘கடவுள் அருளன்றி’ வேறு காரணம் எதுவும் இருக்க முடியுமா?

ஆசாரக்கோவைகளும் சைவவினாவிடைகளும் பாரம்பரியமாக நாம் பேணி வந்தமை எமது சுகாதாரப் பண்புகளைக் காட்டுகிறதா
அல்லது கேடு கெட்ட சனங்கள் இவற்றைப் படித்தாவது திருந்தாதா என்ற தமிழறிஞர்களின் அங்கலாய்ப்பைக் காட்டுகிறதா?

எனது பாட்டியும் சுத்தத்தில் சற்றும் குறைந்தவரல்ல.
அவ எப்பவாவது ஆஸ்பத்திரிக்குப் போய் வந்தாவென்றால்
பெரும் எடுப்புகள் எடுக்க வேண்டியிருக்கும்.

தலைவாசலிலேயே வாளியில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.
வந்ததும் அவ கூப்பாடு போடுவா.
அம்மா வாசலுக்கு ஓடிப்போய் தலையில் நீரூற்றுவா.

பிள்ளைகளாகிய நாங்கள் முன்னே போனால் செப்பல் பேச்சுத்தான் கிடைக்கும். உடுப்பையும் கழற்றி வாளியில் போட்டுவிட்டு கிணத்தடியில் போய் முழுகிவிட்டுத்தான் வீட்டுக்குள் காலடி வைப்பா.

செத்த வீட்டுக்குப் போய்வந்தால் சொல்லவே தேவையில்லை. இரண்டும் தீட்டுத்தான் அவவுக்கு.
‘கண்ட கண்ட சனங்களெல்லாம்’ பிளங்கிற இடத்துக்குப் போட்டு வந்த அசூசைக்காகக் குளிப்பாவோ அல்லது
ஆஸ்பத்திரி அசுத்தம், கிருமிகள் தொற்றுமிடம் என்று உணர்ந்துதான் குளிப்பாவோ எனக்குத் தெரியாது.

எப்படியிருந்த போதும் அது எமது மூதாதையரின்
நல்ல புத்திசாலித்தன மான பழக்கம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆஸ்பத்திரிகளுக்குப் பல்வேறு விதமான நோய்களுடன் பலரும் வருவார்கள். அவற்றில் பல தொற்று நோய்களாக இருக்கும். காய்ச்சல், இருமல், வயிற்றோட்டம், நெருப்புக்காச்சல், செங்கண்மாரி என இப்படி எத்தனையோ இலகுவில் தொற்றக்கூடியன.

அதுவும் ஹொஸ்பிட்டல் இன்பெக்சன் (Hospital acquired infecions) என்பது அதி தீவிரமானது. கடுமையாகத் தாக்கக்கூடியதாகும்.
எனவே வைத்திய சாலைக்குப் போய்வந்தால் குளிப்பது மிக நல்ல பழக்கம்தான்.

டொக்டருடைய கைபட்டாலும் கிருமி பரவிவிடும் எனக் கையைக் கொடுக்கப் பயப்படுகிற அதிதீவிர சுகாதாரச் சிந்தனையாளர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

‘டொக்டர்களே கேடுகெட்டவர்கள்’ அருவருப்பு என்பதே கிடையாது.
பார்த்தாலே சத்தி எடுக்க வரும் அசிங்கங்களுக்குள் எல்லாம் கையை அசூசையின்றி நுழைப்பார்கள்.

அழுகிச் சீழ் வடியும் புண்களை மூக்குச் சுழிக்காமல் சுத்தம் செய்வார்கள்.

Infected wound

குருதி சிந்தும் உறுப்புகளுக்குள் கையை நுழைப் பார்கள்.
நாற்றமடிக்கும் வாய்களுக்குள் விரலைச் சொருகுவார்கள்.
பிறகு நாடியைப் பார்க்கிறோம் என்று எமது கையையும் பிடிப்பார்கள்

என்பது பலரின் அங்கலாய்ப்பு.

நாங்கள் கையுறைகள் உபயோகிப்பதும், அது இல்லாவிடில் ஒவ்வொரு தடவையும் கைகழுவியே எமது கைகள் சுருங்கிவிட்டதும் ஒருவர் கண்களிலும்படுவதில்லை.

  
மல்லிகை சஞ்சிகையில் நான் பல வருடங்களுக்கு முன் எழுதிய கட்டுரை சில மாற்றங்களுடன் மீள் பிரசுரமாகிறது.

Read Full Post »

ஒரு கணம் நிலை தளர்ந்துவிட்டேன். இந்த நடு ஜாமத்தில்இ திசை தெரியாக் காட்டிற்குள் என்னவாகுமோ என மனம் திணறியது. நிலை குலைந்தேன்.

Luxury-Bus-FDG6123-
ஆழ்ந்த நித்திரையில் கிடந்த எனது காதில் கொதிக்கும் எண்ணையைக் ஊத்தியது போலிருந்தது அவனது நிர்த்தாட்சண்யமான இறுகிய குரல்

‘பஸ் பிரேக் டவுனாகிப் போட்டுது. எல்லாரும் உங்கடை சாமான்களுடன் இறங்குங்கோ’

‘மற்ற பஸ் கொழும்பு போக ரெடியா நிக்குது’ என்ற அவனது அடுத்த வாசகம் வயிற்றில் பால் கரைத்து ஊற்றிய நிம்மதியைக் கொடுத்தது.

அந்தர அவதிப் பட்டு தாவி இறங்கியபோது ஏற்கனவே பலர் இறங்கியிருந்தார்கள். டிக்கியில் கிடந்த சாமான்கள் பாதை ஓரமாகக் குவிந்து கிடந்தது.

‘உங்கடை உங்கடை சாமான்களை மற்ற பஸ்சில் ஏத்துங்கோ’ என்று அலட்சியமாகச் சொல்லியபடியே அரை மனதுடன் மாற்றி ஏற்றுவதற்கு உதவியும் செய்து கொண்டிருந்தான்.

‘மற்ற ஆக்கள் உங்கடை சாமான்களோடை அங்காலை நிக்கிற பஸ்சிலை ஏறுங்கோ என்றான்’ இன்னொரு உதவியாளன்.

வீதியின் கரையோரமாக இன்னும் கொஞ்சச் சனம் நிற்பது அப்பத்தான் கண்ணில் பட்டது. கனபேர் இல்லை. மிதமிஞ்சினால் 10-12 பேர் இருக்கும்.

அவர்கள் நாங்கள் வந்த ஏசி பஸ்சில் ஏறிக் குசாலாகப் பயணிக்க இருந்தவர்கள்.

‘சீட் நம்பர் போட்டிருப்பாங்களோ. பழைய நம்பர் சீற் கிடைக்குமோ. அல்லது நின்றபடிதான் மிச்சப் பயணமோ’ சொகுசுப் பயணத்திற்கு அல்லாடியது மனம்.

நல்ல வேளை சீட் கிடைத்தது.

உள்ளே போய் உட்கார்ந்து உடல் ஆறிய போது ‘ஏமாத்திப் போட்டாங்கள்’ மனம் சொல்லியது.

இது நாங்கள் வந்தது போன்ற வசதியான பஸ் இல்லை. சாதாரண 600 ரூபா டிக்கற் பஸ். நல்ல சீற்றுகள் இல்லை. அதை அட்ஜஸ்ட் பண்ணி காலைக் கையை நீட்டி நிம்மதியாகத் தூங்க முடியாது. ஏசியும் கிடையாது.

ஜன்னலுக்கால் வீசும் காற்று ஆளை எதிர்ப்பக்க ஜன்னலால் வெளியே தூக்கி எறிந்துவிடும் போலிருந்தது.

‘காலம்பிற வேலைக்குப் போகோணும். வசதியான பஸ் என்றால்தான் கொஞ்சம் கண் அயரலாம். அடுத்த நாள் களைப்பின்றி வேலை செய்யலாம்’ என்று எண்ணி சுளையாக 1300 ரூபா கொடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பே புக் பண்ணி வைச்சதை நினைக்க பற்றி எரிந்தது.

பஸ்சில் உள்ள இளசுகள் காரசாரமாக விமர்சித்தார்கள்.

‘பிரேக் டவுண் எண்டு போட்டு யாழ்ப்பாண ஆக்களை அதே ஏசி பஸ்சிலை அனுப்புறாங்கள். கள்ளப் பயலுகளை விடக் கூடாது. காசை வாங்க வேணும்.’

எங்கை வாங்கிறது? எப்படி வாங்கிறது? வெறும் சுடுகாட்டு ஞானம்தான். விடிந்தால் மறந்துவிடுவார்கள்

சரி காசு கிடக்கட்டும்.

ஏன் பஸ் மாத்தினாங்கள்?

‘இரகசியப் புலன் விசாரணை’யில் தகவல் கசிந்தது.

மறு நாள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருவதற்கு 3 பஸ் அளவிற்கு சனங்கள் இருக்குதாம். ஆனால் அங்கை இரண்டு பஸ்தான் நிற்குதாம்.

பிரேக் டவுண் எண்டு பொய் சொல்லி சனங்களை ஏச்சுப்போட்டு அந்த ஏசி பஸ்சை ஊருக்கு திருப்பி அனுப்பிட்டாங்கள். எப்படியாவது வந்து சேர வேணும் என்ற அவசியத்தில் வாயை மூடிக் கொண்டு இவர்கள் பயணத்தை தொடர வேண்டியதாயிற்று.

நடந்ததற்கு ஒரு ‘சொறி’ அல்லது ‘மன்னிக்கவும்’ என்றாவது சொல்லியிருக்கலாம்.

அது ஒண்டும் கிடையாது. பொய் சொல்லி பையை நிறப்பதான் முன் நிற்கிறாங்கள்

அம்மா தாயே. முத்துமாரி மாதாவே. அன்னையே ஏனம்மா சனங்களைப் பேய்க் காட்டுறாய்.

சனங்கள் பேய்ச் சனங்கள் அல்ல. தெளிவாகவே புரிந்திருக்கிறார்கள்.

0.00.0

Read Full Post »

முகமெல்லாம் புன்னகை பூத்துக் கிடந்தது. கைகளை நீட்டி கை லாகு கொடுப்பது போல வந்தார். 

 

“உங்களைக் கண்டது ரெம்ப சந்தோசம்”.
“சின்ன வயதில் கண்ட பின் இப்பத்தான் பார்க்கிறேன்.”
சொல்லியபடி கைகளை அன்புடன் பற்றிக் கொண்டார்.
உள்ளங்கை ஊடே நேசம் எனக்கும் பரவியது.
ஆனாலும் இவர் யார் என்பது சட்டென ஞாபகத்திற்கு வரவில்லை.
யாராக இருக்கும் என யோசிப்பதற்கிடையில் கூட வந்த மனைவி பைல் கட்டை எடுத்து வைத்தார்.
“காலையில் அவருக்கு திடீரெனத் தலைச் சுற்று வந்தது. விழப் பார்த்தார்..  ” என மனைவி ஆரம்பித்தார்
அட! எனக்கு ஆச்சரியம் மேலிட்டது.
பொதுவாக நோயாளிகள் நோயால் களைத்துச் சோர்ந்து வருவார்கள்.
அல்லது நோய் பற்றிய பயத்தில் பேயடித்தவன் போல வருவார்கள்.
ஆனால் இவர் சிரித்தபடி சந்தோசமாக வந்திருக்கிறார்.
அதுவும் பழைய நினைவுகளைப் புதிப்பித்த மகிழ்சியில் வருகிறார்.
தனது நோயை மறக்குமளவு எமது நட்பு புதுப்பிக்கப்பட்ட மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
நிச்சயமாக எனக்கு பழைய காலத்தில் நெருக்கமானவராக இருந்திருக்க வேண்டும்.
ஒருவேளை ஆரம்பப் பள்ளியில் கூடப் படித்தவரா? பள்ளித் தோழனா? கல்லூரி நண்பனா?
ஞாபகப்படுத்த முடியாத எனது மறதியை எண்ணி மனம் சோர்ந்தேன்.
ஆயினும் அதை வெளிப்படுத்தி அவரது மகிழ்ச்சியைக் குலைக்க மனம் வரவில்லை.
விடயத்தை மாற்றினேன்.
அவரது நோயைப் பற்றி விசாரித்தபோது அவருக்கு முன்னர் இரு தடவைகள் மாரடைப்பு வந்திருப்பது தெரிந்தது. அதனால் இந்த தலைச்சுற்றும் மற்றொரு மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ எனப் பயந்த மனைவி அவரை அழைத்து வந்திருக்கிறார்.
பரிசோதித்துப் பார்த்ததில் மாரடைப்பின் அறிகுறிகள் ஏதும் இல்லை.
ஆயினும் அசட்டை செய்ய முடியாது. ஏற்கனவே மாரடைப்பால் பாதிக்கப்ட்டவர்.
எனவே ECG, Troponin T போன்றவற்றையும் செய்து மனைவியின் பயத்தை நீக்கினேன்.
அவர் மாரடைப்யோ மரணத்தையோ எண்ணிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
புன்னகை மாறாத முகத்துடன் மனம் பூரித்தபடி இருந்தார்.
“எம்.கே.எம் என உங்களைப் பற்றி பத்திரிகையில் வந்த கட்டுரையை வெட்டி எனது பைலிலேயே வைத்திருக்கிறேன்.”.
என் மீதுள்ள அக்கறையையும் அன்பையும் மற்றொரு தடவை வெளிப்படுத்த எனக்கு குற்ற உணர்வு மேலிட்டது.
தொடர்ந்து நான் எழுதிய புத்தகங்களை வாங்கிப் படித்ததையும் ஞாபகப்படுத்தினார்.
இப்பொழுது மிக தூரத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கிறாராம். நீண்ட காலத்திற்குப் பிறகு கொழும்பு வந்திருக்கிறாராம்.
“வந்த நேரத்தில் எனக்கு வருத்தம் வந்தது நல்லதாகப் போச்சு. நீங்கள் இங்கே தான் இருப்பதாக நான் வந்து நிற்கும் வீட்டுக்காரர் சொன்னார். அதுதான் உடனே உங்களிடமே காட்ட வந்து விட்டேன்”
எவ்வளவு நட்புணர்வு காட்டும் மனிதர். தனது நோய்க்கு மேலாக பழைய உறவை நினைத்து வந்திருக்கிறாரே என எண்ணினேன்.
ஆனால் எதைக் கூறி எமது உறவைப் பகிர்வது எனப் புரியாது தளர்ந்தேன்.
“சின்ன வயதில் பார்த்தது.
அப்ப அம்மா தான் என்னைத் தூக்கிக் கொண்டு உங்கடை டிஸ்பென்சரிக்கு வாறவ. அப்ப பார்ததற்கு இப்பதானே பார்க்கிறேன்.”
தூக்கி வாரிப் போட்டது.
இவர் சின்ன வயதில் இருக்கும்போது எனது டிஸ்பென்சரிக்கு வந்தாரா?
கோவையில் அவரது வயதைப் பார்த்தேன். 65 சொல்லியது.
நான் குடும்ப மருத்துவனாகப் பணி தொடங்கி சுமார் 35 வருடங்கள் ஆகிறது.
65+35 = ?
ஆகா!

நான் சென்சரி அடித்த மனிதனா?

 

ஆச்சரியத்தில் வாய் பிளந்தேன்.

மறதி நோயிற்கு மருத்துவம் செய்ய வேண்டியதாயிற்று.

எனக்கல்ல ! அவருக்கு

0.0.0.0.0.0

Read Full Post »

மருத்துவர் தருகின்ற மருந்தச் சிட்டைகளை வீசிவிடாதீர்கள். கவனமாகப் பாதுகாத்து வைத்திருங்கள். அவை எதிர்காலத்திலும் உங்களுக்கு உதவக் கூடும்.

மறதி மிகுந்த வயதான அந்த மனிதர்.

elderly-man-in-robe-with-doctor-598-x-298

தனது வழமையான செக் அப்பிற்காக மருத்துவரிடம் சென்றார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் மருந்துப் பட்டியலை சிட்டையாக எழுதிக் கொடுத்தார். தொடர்ந்து பார்மசியில் வாங்கிப் போடுவதற்காக எழுதிக் கொடுக்கப்பட்டது.

எல்லா மருத்துவர்களின் கையெழுத்துப் போலவே அவரதும் யாருக்கும் புரியாத கிரந்த எழுத்துக்களாக அமைந்திருந்தன.

photo

சிட்டையை வாங்கித் தனது பொக்கெட்டுக்குள் வைத்த வயதானவர் மருந்தை வாங்க மறந்த விட்டார்.

ஆனால் அது அவரது பொக்கெற்றுக்கள் இருந்தவாறு அவருடன் எப்பொழுதும் பயணித்த வண்ணம் இருந்தது.

அவர் தினமும் பஸ்சில் பயணித்தே கோவிலுக்குப் போவார். பஸ் கண்டக்டரிடம் இதைக் காட்டியதும் இலவசமாகப் பயணிக்க ஒவ்வொரு நாளும் அனுமதி கிடைத்தது.

கோவிலில் செருப்பு பாதுகாப்பவர் அந்தச் சிட்டையைக் கண்டதும் சலாம் போட்டபடி செருப்பை பாதுகாத்து ஒப்படைப்பார்.

ஒரு நாள் பொழுது போகவில்லை எனத் சினிமாத் தியேட்டர் பக்கம் போனார். அங்கு இது அவருக்கு விசேட பாசாகப் பயன்பட்டது.

வாகனத்தில் போய்க் கொண்டிருக்கும்போது சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டார். இவர் தனது ஆஸ்தான சிட்டையைக் காட்டியதும் ‘சொறி சேர்’ எனச் சலூட் அடித்து மரியாதையுடன் மேற் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

திடீரென ஒருநாள் மயங்கி விழுந்தபோது இறந்து விட்டார்.

மருந்தை ஒழங்காகப் பாவிக்கததால் வந்த பிரச்சனை என அதே மருத்துவரிடம் உறவினர்கள் ஏச்சு வாங்க வேண்டியதாயிற்று.

அவர் மருந்துகளை போடத் தவறியது ஏன் என்பது உறவினர்களுக்குப் புரியவில்லை என்பதால் மருத்துவர் தப்பித்தார்.

அவரது பொக்கற்றுக்கள் இருந்த சிட்டையைக் கண்டெடுத்த மகள் “அது அப்பா எழுதிய கடைசி விருபப் பத்திரம்” என்று சொன்னாள்.

அப்பாவின் சொத்துக்களைத் தனது பெயருக்கு மாற்றிக் கொள்ள அது உதவியது.

எம்.கே.முருகானந்தன்.

இணையத்தில் படித்ததற்கு கைச் சரக்குச் சேர்த்தது

0.00.0

Read Full Post »

சென்ற வாரம் ஒரே நாளில் சளி இருமல் என்று வந்தவர்கள் பலர். அதிலும் பலருக்கு மூச்சு விடுவதிலும் சிரமம் இருந்தது.

சிறு குழந்தை, பாடசாலைச் சிறுமி, பல்கலைக் கழக மாணவன் எனப் பல தரப்பட்டவர்கள் இருந்தார்கள்

இவர்களில் பலருக்கு nebulizing செய்ய நேர்ந்தது.

nebulizer_mask

சிலர் ஏற்கனவே சளித் தொல்லைக்கு ஆளானவர்கள்.

வழமையாகவே சளி இழுப்புத் தொல்லை இருப்பவர்கள் ஒரு சிலர்.

தந்தைக்கு ஆஸ்த்மா சிறுவயதில் வந்த ஒரு பிள்ளைக்கு அன்றுதான் முதன் முதல் வந்திருந்து.

கடுமையான அல்ர்ஜி தொல்லையால் சரும நோய் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவ மற்றொருவர் இன்று மூச்செடுக்க முடியாது ஓடிவந்திருந்தார்.

முழங்கை கழுத்து அக்குள் என பல இடங்களில் எக்சிமா இருந்த பெண் ஒருத்தியும் இதில் உள்ளடங்கும்.

அடிக்கடி கண்கடி தும்மல் வரும் கட்டிளம் பருவத்தது பையனும் இருந்தான்.

இவர்கள் எல்லோருக்குமே இன்று திடீரென இழுப்பு wheezing வந்திருந்தது. வெளிப்படையான இழுப்பு தெரியாமல் மூச்சு அடைத்தவர்களும் உண்டு.

இன்று திடீரென ஏன் இவ்வாறு பலருக்கு ஆயிற்று.

‘இண்டைக்கு தயிரும் வாழைப்பழமும் சாப்பிட்டவ’ என ஒரு கணவன் தன் மனைவியில் குற்றம் கண்டார்.

“இன்ரவெலுக்கு விளையாடினியோ” என்று தகப்பன் கேட்க பிள்ளை தயக்கத்துடன் “ஒம்” எனத் தலையாட்டியது. “சொன்னால் கேக்கிறியோ. விளையாடித் தேடிப் போட்டாய்” என அது விளையாடியதில் குற்றம் கண்டு திட்டினார்.

“ஏ.சி யுக்குள்ளை வேலை செய்யதாலைதான் பிரச்சனை” என்று தினமும் ஏ.சி யுக்குள் வேலை செய்யும் இளம் பெண் தனது இன்றைய இழுப்பிற்கு காரணம் கண்டாள்.

“முழுகிப் போட்டன் அதுதான் பிரச்சனையாப் போச்சு”

இப்படி தங்கள் ஆஸ்த்மா பிரச்சனைக்குப் பல காரணங்களை அவர்கள் சொன்னார்கள்.

அவை உண்மையா.

இல்லை என்றுதான் நான் சொல்வேன்.

சீதோஸ்ண நிலை காரணமாயிருக்கலாம். வெப்ப நிலை குறைவாக இருந்தது. காற்று வீச்சு அதிகமில்லை. ஈரப்பதம் அதிகமாயிருந்து. கடுமையான கால நிலைகளும் திடீரென மாறும் இவ்வாறான காலவெட்ப நிலைகளும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

  • இந்த மாற்றங்கள் எல்லோருக்கும் இழுப்பைக் கொண்டுவருவதில்லை.
  • அதற்கான வாய்புள்ளவர்களில் இத்தகை திடீர் மாற்றங்கள் கொண்டு வந்திருக்கலாம்.
  • தயிர், மோர், வாழைப்பழம், முழுக்கு, ஏ.சி,  விளையாடுவது போன்றவை மட்டும் ஒருவருக்கு கொண்டு வந்துவிடாது.

எனவே பாவம் நோயில் துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்களை

“நீ செய்தது தான் காரணம்” எனத் திட்டி அவர்கள் வேதனையை அதிகரிக்காதீர்கள்.

0.00.0

Read Full Post »

ஊர்ப் பொம்புளை வேணும்

“இவ ஒன்றும் சாப்பிடறா இல்லை.” கடுப்பாகச் சொன்னான்.

அவளில் அக்கறையும் கனிவும் காட்டுவதைவிட குற்றம் சாட்டும் தொனி ஓங்கியிருப்பதாகத் தெரிந்தது.

ஷோ கேசில் உள்ள பொம்மைபோல அலங்கரிக்கப்பட்டிருந்தாள்.

உடைகளையும், நகைகளையும் பளிச்சென அணிந்திருந்ததைப் பார்த்தபோது புதுமணத் தம்பதிகளாகத் தோற்றினர்.

“எதைக் கண்டாலும் ஓக் ஓக் என ஓங்காளித்துக் கொண்டே இருக்கிறா. ஷி இஸ் நொட் ஈடிங் அட் ஓல். ஒண்டையும் விரும்பிச் சாப்பிடுகிறா இல்லை.”

அவனது ஆங்கிலம் கலந்த தமிழ் உச்சரிப்புத் தொனி லண்டன்வாசி என்பதைக் கோடி காட்டியது.

“…வயிறும் ஊதலாகக் கிடக்காம்.”

இளம் பெண், சாப்பாட்டில் மனமில்லை. ஓங்காளம் எத்தனையோ தமிழ் திரைப்படங்களில் பார்த்த காட்சிதானே உங்களுக்கு நினைவுக்கு வருகிறது?

மசக்கையால் சங்கடப்படுகிறாள்.  கர்ப்பம் தங்கியிருக்க வேண்டும்.

“கடைசியாக எப்ப பீரியட் வந்தது” அவளது பிரச்சனை பற்றி ஒரு முடிவிற்கு வந்த தைரியத்தில் வாயைத் திறந்தேன்.

“நாங்கள் மரி பண்ணி ஜஸ்ட் வன் வீக்தான்” என்றான் அவன்.

திறந்த எனது வாய் மூடியதை நான் உணர நீண்ட நேரமாயிற்று!

ஒரு வாரத்திற்குள் கர்ப்பம் தங்கவைக்கக் கூடிய ஆண்மையுள்ளவன் இனித்தான் பிறந்து வர வேண்டும்.

மனித குலத்தில் அத்தகைய கூர்ப்பு நடந்திருப்பதான செய்தியை மருத்துவ உலகம் அறிந்திருக்கவில்லை. அவளது ஓங்காளத்திற்கும் பசியின்மைக்கும் காரணம் வேறு ஏதோவாகத்தான் இருக்க முடியும்.

சட்டெனப் பெண்குரல் எனது சிந்தனையில்; குறுக்கீடு செய்தது.

“ஒண்டும் விருப்பமில்லையாம். வயிறும் ஊதிக்கிடக்கு. சோம்பிச் சோம்பிக் கிடக்கிறா. என்னெண்டு புரியுதில்லை” அம்மா சலிப்புடன் சொன்னா.

அவளின் சிறு வருத்தத்தையும் சகிக்க முடியாத இவள் சொந்த அம்மாவாக இருக்க முடியாது. மாமியாராகத்தான் இருக்க வேண்டும்.

“சாப்பாட்டைக் கண்டால் இப்படியும் ஒருத்திக்கு ஓங்காளம் வருமே… எனக்கெண்டால் ஒண்டுமா விளங்குதில்லை…” அவள் இழுத்து இழுத்து பேசியது நல்லதுக்கல்ல என மனம் குருவி சாத்திரம் கூறியது.

வெறும் குற்றம் சாட்டும் தொனி அல்ல. உள்ளார்ந்த வியப்பும் அல்ல!
சந்தேகிக்கும் பார்வை!

புதிதாக வந்த மருமகளை சற்றும் நம்பாமை தொனித்தது.
திரும்பிப் பார்த்தபோது மருமகளின் முகம் ஆற்றாமையால் சட்டெனக் கறுத்தது. எனது மனதில் ஆழமாக இரத்தம் சீறக் கீறியது போலிருந்தது.

‘அடப்பாவி கலியாணம் கட்டி ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள் மருமகள் மீது இத்தகைய ஏடாகூடமான சந்தேகமா?’ ஆத்திரமாக வந்தது.

இனியும் முடியாது அவளிடம் பேசித்தானே ஆக வேண்டும்.

மாமியாரிடம் அல்ல!

இவ்வளவு நேரமும் பேசா மடந்தையாக இருந்த நோயாளியிடம்.

“பீரியட் எப்படி?” எனப் பொதுவாகக் கேட்டேன்.

பீரியட் எப்ப வந்தது? என்று கேட்கவில்லை.

மாமியாரின் சொற்களால் மனம் கறுத்த சூழ்நிலையில்; நானும் அவளை எனது வார்த்தைகளில் நோகவைக்க விரும்பவில்லை. எனவே பொதுவாகக் கேட்பது போல எனது வினாவை எழுப்பினேன்.

“முந்தித் தொடங்கி ஒழுங்கில்லை. இப்ப 4-5 மாசமா ஒழுங்காக வருகுது. திகதிக்கு ஒண்டு ரண்டு நாள் முந்திப் பிந்தி வரும்…”

“…..கலியாணத்துக்கு ஒரு கிழமை முந்தித்தான் கடைசியாக வந்தது.”
தான் முறைதவறி நடந்தவள் அல்ல, தனக்கு கர்ப்பம் தங்கியிருக்கவில்லை, என்பதை அவளது மறுமொழி நாசூக்காக சுட்டிக்காட்டியது.

மாமியாரின் குத்தல் பேச்சுக்கு ஆவேசப்பட்டு வார்த்தைகளை அள்ளிப் பேசவில்லை. நிதானமாக இருந்திருக்கிறாள். அப்படியானவள் நிச்சயம் மற்றவர்களை அனுசரித்துப் போவளாகவே இருப்பாள். அவளது கெட்டித்தனத்தை மனதுக்குள் மெச்சிக் கொண்டேன்.

மருமகளின் விடையைக் கேட்டதும் அம்மாவினது முகம் ஏமாற்றத்தில் பட்டெனத் தொய்ந்தது.

“இவவுக்கு கனகாலமாக இந்தப் பிரச்சனை இருக்காம். சாப்பிட்டால் ஏவ் ஏவ் .. என காஸ் காஸ்சாகப் போகுமாம்.” இது கணவன். பிரச்சனையை வேறு திசைக்குத் திருப்ப முயன்றான்.

‘இவள் பிரச்சனைக்காரி, சரியில்லாதவள்’ என்ற முன் தீர்மானம் இருந்தால் பிழை கண்டுபிடிப்பது பெரிய காரியமா?

நான் அவள் முகத்தைப் பார்த்தேன்.

“நாங்கள் வழக்கமா புட்டு இடியப்பம் எண்டு வீட்டுச் சாப்பாடுதான். வெளிச் சாப்பாடு சாப்பிட்டால்தான் ஒத்துக் கொள்ளுறதில்லை”

‘இங்கு வீட்டுச் சாப்பாடுதான். சிலவேளை மட்டும் கடையிலை வாங்குவதாக’ அவன் இடைமறித்தான். நான் அதைச் அசட்டை பண்ணிவிட்டு அவளிடம், “இஞ்சை உங்களுக்கு என்ன சாப்பாடு பிடிக்கிறதில்லை” என விசாரித்தேன்.

“காலையிலை பாண். அது எனக்குப் பிடிக்கிறதேயில்லை. கொத்து, சில்லி பரோட்டா எண்டு வேறை எண்ணெய் சாப்பாடுகளாக வாங்குவினம். இதுகள் ஒண்டும் எனக்கு ஒத்துவாறதில்லை.”

திடீரென அக் கல்லாணம் முற்றாயிற்று. குடும்பக் கஸ்டத்திற்கு தீர்வாக. வெளிநாட்டு மாப்பிள்ளை. சீதனம் பெரிசாக இல்லை. கலியாணமாகிய கையோடு ஊரிலிருந்து கொழும்பு வந்து மாமியார் வீட்டில் தங்கியிருக்கிறாள்.

புது இடம், புதுச் சூழல், புதிய மனிதர்கள். கடல் மீனைக் கரையில் போட்ட மீனாகத் தவித்தாள். ஊரிலை சுதந்திரமாகத் திரிந்தவளுக்கு கால்கட்டு. அவளுக்கு எதுவும் பிடிபடவில்லை. வழமையான சாப்பாடும் இல்லை. ஆதரவு தருகிற அம்மா இல்லை. மனம் தொய்ந்துவிட்டது.

ஊரில், ஐஞ்சு பரப்பு வீட்டில் ஏப்பம் விடுவதும் கதை பேச்சு சண்டை அழுகை எல்லாமே உச்ச ஸ்தாயியில்தான் இருக்கும். அக்கம் பக்கம் கேட்காது. இது தொடர் மாடி வீடு. ஏப்பம் விட்டாலும் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்குக் கேட்கும். இளப்பமாகப் பார்ப்பார்கள் என்பதை அவள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை.

புதிய சூழலுக்கு இன்னமும் இசைவாகவில்லை. அவளது உள நிலையைப் புரிந்து கொள்ளும் மனப்பான்மை கணவன் வீட்டுக்காரருக்கு இல்லை. தங்கள் ஆட்டத்திற்கு மறுபேச்சுப் பேசாத, அடக்க ஒடுக்கமான, பவ்வியமான ஊர்ப் பொம்பிளை வேண்டும், என நினைப்பவர்கள் அவர்கள்.

பெண்டாட்டி என்பவள் வாய் பேசாத மடைந்தையாகவும் இருக்க வேண்டும் லண்டன் நாகரீகத்திற்கு ஏற்ற பவிசுள்ளவளாகவும் இருக்க வேண்டும். முடிந்த காரியமா?

-.-.-.-.-.-

“தீஸ் பூட்ஸ் ஆர் நொட் எகிறியிங் வித் மீ. வொண்டர் கௌ தீஸ் பீப்பிள் ஆர் ஈடிங் ஆல் திஸ் ஸ்டவ் டெயிலி”

பேர்பியூமின் வாசனை அந்தக் கட்டடத்தையே நிறைய வைத்தது. மேலைநாட்டு அதி நாகரீக உடையில் வந்த பெண் சொன்னாள். சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லையாம். லூஸ் மோசன் போகிறதாம்.

விபரங்களைப் பதிவதற்காக கம்பியுட்டரைத் தட்டிய போது அவளது பெயர் ஏற்கனவே பதிவாகியிருப்பது தெரிந்தது. எதற்காக வந்திருந்தாள் என பழைய பதிவுகளைப் பார்த்த போது புரிந்தது.

அதே அந்தக் கிராமத்துப் பொம்பிளை!

எம்.கே.முருகானந்தன்.

Steth இன் குரல் புளக்கில் ஏற்கனவே வெளியான கட்டுரை
படங்களுக்கம் கட்டுரைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
இனைத்தும் ரவிவர்மா ஓவியங்கள்.
0.0.0.0.0.0.0

Read Full Post »

“இந்தப் பிள்ளைக்கு சரியான வயிற்று வலி” சிங்களத்தில் சொன்னார்.

நான்கே வயதான குட்டிப் பையனை இரு கைகளாலும் கிடையாகத் தூக்கி கொண்டு வந்தார்.

ஓட்டமா நடையா என்று சொல்ல முடியாத வேகம். அந்தரப்பட்டு  வந்திருந்தார்.


குழந்தை படுக்கவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் வேதனையில் முனங்கியபடி திணறிக் கொண்டிருந்தது.

“ஒண்டுமே சாப்பிடுதும் இல்லை. குடிக்கிதும் இல்லை.” என்றாள் தொடர்ந்து வந்த பெண்.
பின்னால் ஒரு பெரிய கூட்டம்.

எனது கொன்சல்டேசன் அறைக்கு அப்பால், நடைபாதை, வரவேற்பறை எல்லாம் நிறைந்ததால், வாசலில் தெருவோரத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

பொது கழிப்பறையில் நிலமெல்லாம் பரவும் மூத்திர வெள்ளம் தோற்றுப்போகும்

தேசத்தின் தென்கோடியிலிருந்து சுற்றுலா வந்திருந்தார்கள். பஸ் நிறையச் சனம். நேற்று இரவு புறப்பட்ட பயணம். இரவிரவாகப் பயணித்து கொழும்பு வந்திருந்தார்கள்.

அதனால்தான் பட்டியிலிருந்து திறந்துவிட்ட மாடுகள் போல, சாலை விதிகளை மதிக்காது சிதறிக் கிடந்தார்கள்.

மிருகக் காட்சிசாலை, நூதனசாலை எனக் காலையில் சுற்றியடிக்கும்போது குழந்தைக்கு வலி தொடங்கிவிட்டது. என்னிடம் வரும்போது மதியம் தாண்டிவிட்டது. குழந்தை வலியால் மயங்காத குறை.

“படுக்கையில் கிடந்துங்கோ. சோதித்துப் பாப்பம்”

தகப்பன் கிடத்த முயன்றபோது சிவபெருமான் கழுத்தில் பாம்பாக குழந்தை கைகளால் சுற்றிக் கொண்டது.

தூக்குக் கயிறாகி தகப்பனை கைலாசத்திற்கு அனுப்பிவிடும் என்ற பயத்தில் பரிசோதிக்கும் முயற்சியைக் கைவிட வேண்டியதாயிற்று.

“குழந்தை என்ன சாப்பிட்டது”

“காலையிலை பணிஸ் சாப்பிட்டு பாலும் குடிச்சது. பிறகு சோடாவும் குடிச்சது. இப்ப இரண்டு மணித்தியாலமாகத்தான் இந்தக் குத்து.”

வந்த இடத்திலை கண்ட சாப்பாட்டையும் பிள்ளைக்குச் சாப்பிடக் கொடுத்திருக்குங்கள். செமியாமல் இருக்கும். அல்லது உணவு நஞ்சானதால் ஏற்பட்டிருக்கும்.

“சத்தியும் இருக்கோ?” எனக் கேட்டேன்.

“இல்லை” எனப் பதில் வந்தது.

காய்ச்சல் இருக்கோ எனத் தொட்டுப்பார்க்க முயன்றேன்.

தொற்றாட் சுருங்கிபோல என்னைக் கண்டதும் சோர்ந்தது குழந்தை.எனது கையில் தனக்கெதிரான ஆயுதங்கள் எதுவும் இல்லை என அறிந்ததும் நிம்மதியடைந்தது. ஊசி, காய்ச்சல் கம்பி, ஸ்டெதஸ்கோப் எதுவும் என் கையில் இருக்கவில்லை!!.

தொட்டபோது உடல் வியர்திருந்ததே ஒழிய காய்ச்சல், குளிர் எதுவும் இல்லை.

கடுமையான வலியாக இருப்பதாலும், குழந்தை படுக்க முடியாமல் குறண்டியபடி தகப்பன் கைகளில் சுருண்டு கிடப்பதால் குடல் கொழுவல், அப்பன்டிசைடிஸ், பெரிடனைடிஸ் என ஏதாவது ஏடாகூடமான நோயாக இருக்கலாம்.

தீவிரமாக யோசிக்க வேண்டியிருந்து.

நோயைப் பற்றி அல்ல! எவ்வாறு குழந்தையை படுக்கையில் விட்டுப் பரிசோதிப்பது என்பதையிட்டு.
அப்பொழுது சுவீப் எனக்கு விழுந்தது.

பிள்ளையைதை் தொடாமலே நோயை ஊகிக்க முடிவதைவிட வேறென்ன சுவீப் எனக்குக் கிடைக்க முடியும்?

குழந்தை சற்று அமைதியாகி தனது தகப்பனின் கைகளில் சற்று உடலை நிமிர்த்திப் படுத்தது. குறண்டிக் கிடந்த உடல் நிமிர அதன் வயிற்று பகுதி தெளிவாகத் தெரிந்தது.

“பிள்ளையை பாத்ரூமிற்கு கொண்டு போய் காலை நன்கு குளிரக் கழுவிட்டு மூத்திரம் கழிக்க விடுங்கோ”
ஆச்சரியம் தகப்பன் முகத்தில் படர்ந்தது.

குழந்தை பரிசோதிக்காமல், வேதனையைத் தணிக்க மருந்தும் தராமல் பாத்ரூமிற்குக் கலைக்கிறாரே என்றதில் சிறிது கோபமும் தெறித்தது போலிருந்தது.

மறுக்க முடியாமல், வெறுப்போடு குழந்தையைத் தூக்கிக் கொண்டு சென்றார்.

திரும்பி வந்தபோது குழந்தையின் முகத்தில் வேதனையின் சுவட்டையே காண முடியவில்லை.

கட்டிலில் கிடத்தியபோது மறுப்பின்றி நீட்டி நிமிர்ந்து படுத்து, ஆயாசம் அடங்க கண்ணை மூடியது.

வயிற்றைப் பார்த்தேன்.

அடிவயிற்றில் இருந்த முட்டி காணமல் போயிருந்தது. தொட்டபோது வேதனை இல்லை.

வேறொன்றும் இல்லை. இரவிரவாகப் பயணம், பகல் முழுவதும் ஊர் சுற்றிப் பொழுதுபோக்கு. முதல் நாள் இரவிலிருந்து சிறுநீர் கழியாததால், அடைத்து வயிறு வீங்கி வலி எடுத்திருந்தது.

காலைக் கழுவி உடலைச் குளிர வைத்ததும் அடைத்த பைப் திறந்துவிட்டது.

திறந்து மூத்திரம் வெளியேற்றியதும் முட்டி போல வீங்கியிருந்த மூத்திரப்பை காலியாகிவிட்டது.

வலி குணமாகிவிட்டது.

அடுத்த முறை இரவு பஸ்சில் யாழ்ப்பாணம் போகும்போது எனக்கு வயிற்றுக் குத்து வந்தால் என்ன செய்வது என்ற பயம் வந்தது.


பாவி பஸ்காரர்!

வெள்ளவத்தையில் வெளிக்கிட்டு ‘நொன் ஸ்டொப் டிரைவிங்’ செய்தால் வயது போன ஆம்பிளையள், அதுவும் புரஸ்ரேட் வீக்கக்காரர் பாடு அதோகதிதான்.


கணவன் கழிப்பதற்கு மனிசிமாரால் தூக்கிக் கொண்டு போக முடியுமா?

எலக்சன் காலத்திலை அரசாங்கக் கட்சி வேட்பாளருக்குத் தெரிந்திருந்தால், வீதி எங்கும் கக்கூஸ் (பாத்ரூம்) கட்டுவதாக வாக்களித்திருப்பார்கள்.

பிறகென்ன?

தோற்றவுடன் காணாமல் போயிருப்பார்.

ஞாயிறு வீரகேசரியில் நான் எழுதிய கட்டுரை

எனது அனுபவப் பகிர்வு புளக்கான Steth இன் குரல் ல் ஏற்கனவே வெளியான கட்டுரை

Read Full Post »

மனதுக்குள் இருந்தது போஸ்டர் அடித்தது போல அவளது முகத்தில் பளிச்சென ஒட்டிக் கிடந்தது.

‘நீ செய்த பிழையான வேலையால் வந்த வினைதான்’ என்று சுட்டு விரலை நீட்டி நேரடியாக குற்றம் சொல்லாததுதான் மிச்சம்.

நல்ல புஸ்டியான உடம்பு. வட்டாரி வைத்துக் கீறிய வட்டம் போல முகம் ஊளைச் சதைகளால் நிரம்பிக் கனத்தது. ஆடு மாடுகள் இரை மீட்டு அசை போடுவது போல வாய் எதனையோ சப்பிச் சுவைத்துக் கொண்டேயிருந்தது.

பாரத்தை இறக்கி வைத்துவிட்டு களை தீர ஆயாசப் பெரு மூச்சு விட்டாள்.
இறக்கி வைத்தது பை நிறைந்த பொருட்களை அல்ல. 80 கிலோ ஆன தனது உடலைத்தான்.

‘டொக்டர் நீங்கள் தந்த மருந்து எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ரா ராவா சலம் அடிக்குது. நான் மருந்தைக் குறைச்சுப் போட்டன்.’

பார்த்துப் பல நாட்களாகிவிட்டதால் கொடுத்த மருந்துகள் சட்டென ஞாபகத்திற்கு வரவில்லை.

வழமையாக உச்ச வேகத்தில் சுற்றும் பானை (Fan) நிறுத்திய பின்னும் குளிர் கலையாத தினத்தில் இவளது சிறுநீர் அதிகம் போவதற்குக் காரணம் என்ன?

‘மருந்துக்காக இருக்காது. குளிராக இருக்குமா? காய்ச்சலாக இருக்கலாம். இந்த பனிக் குளிருக்கு காச்சலும் சேர்ந்தால் சலம் கூடப் போகும்தானே’ என்ற சந்தேகம் எழுந்தது. டெம்பரேச்சரைப் பார்த்தேன். டிஜிட்டல் தேர்மாமீற்றர்  ‘நீ சொல்வது பிழை’ என மறுத்து 98.4 நோர்மல் என்றது.

‘வேறு என்னவாக இருக்கும்? லசிக்ஸ் (Lasix) மருந்து கொடுத்திருப்பேனோ?’

லசிக்ஸ் என்பது உடலில் தேங்கிவிட்ட மிதமிஞ்சிய நீரை வெளியேற்றுவதற்காக் கொடுக்கும் மருந்து. பொதுவாக இருதய வழுவல் ;(Heart Failure)> ஈரல்சிதைவு (Cirrhosis)> சிறுநீரக நோய்கள் போன்றவற்றால் சிறுநீர் வெளியேறுவது குறைந்தால் அதைச் சீர்செய்யக் கொடுக்கப்படும் மருந்து.

ஆனால் 40 வயதேயான இவளுக்கு அப்படியான நோய் வருவதற்கு வாய்ப்பில்லை. ஒரு வேளை அப்படி இருந்தாலும் அத்தகைய தீவிர பிரச்சனையான நோயுள்ளவர்களை நான் மறப்பதில்லை. இவள் அவர்களுள் ஒருத்தியல்ல.

‘சலம் போகைக்கை எரியுதோ’ சிறுநீர்த் தொற்றாக இருக்குமோ என்ற எண்ணம் எழுந்ததில் கேட்டேன்.

‘ஒரு எரிவும் கிடையாது. பைப் திறந்தது போல வீச்சாகப் போகிறது’ என்றாள்.

காலையில் வந்த நோயாளி தான் குளிப்பதற்கு பைப்பைத் திறந்ததும், சிறுநீர் சிந்துவதுபோல முக்கி முனகிக்கொண்டு வந்ததாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. அவர் புரஸ்ரேட் நோயாளி. இவர் பெண் என்பதால் புரஸ்ரேட் நோய் அல்ல என்பதும் நிச்சயம்.

சிறுநீர்த் தொற்று இருக்காது எனத் தோன்றினாலும் சிறுநீர்ப் பரிசோதனை அவசியம்.

கணனியைத் தட்டி இவளது பதிவுகளைப் பார்த்தபோது அவளது சல அடிப்பிற்கு நான் கொடுத்த மருந்துகள் எவையும் காரணமல்ல என்பது தெளிவாயிற்று.

மருத்துமனையில் கணனியில் குறிப்பு   பற்றிய முன்னைய பதிவு.

இருப்பினும் தெளிவாக அவளுக்கு விளக்குவதற்கு இரத்தப் பரிசோதனையும் அவசியம். மருந்துவமனையிலேயே இருந்த ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைத்தேன்.

ரிப்போட் வந்தபோது இரத்தத்திலும் சிறுநீரிலும் சீனியின் அளவு அமோகமாக விளைச்சல் கண்டிருந்தது தெரிய வந்தது.

சீனி விலை நாளுக்கு நாள் எகிறிக் கொண்டிருக்கையில் இவ்வளவு சீனியை வீணாக்குகிறாளே என கவலைப்படத்தான் முடிந்தது.

கொமோட்டில் கழியும் சீனியை வாயில் அள்ளிப் போடவா முடியும்?

சென்ற முறைதான் நீரிழிவு நோய் என முதன்முறையாக இனங்காணப்பட்டு அதற்கான சிகிச்சை ஆரம்பித்து இருந்தோம். மருந்து வேலை செய்து நோயைக் குணமாக்கு முன்னரே, மருந்தால்தான் தனக்கு நோய் என்று கருதிய இந்த அதிவிவேக பூரண சிந்தாமணி மருந்து எடுப்பதைக் குறைத்துவிட்டாள்.

உண்மையில் குறைத்தாளா அல்லது மருந்தைப் போடாமலே நிறுத்திவிட்டாளா என்பது அவளுக்கு மட்டும் தெரிந்த ரகசியமாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் அதிகமாகப் போகும். நோயைக் கட்டுப்படுத்த கொடுக்கப்படும் மாத்திரைகள் இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும். அவ்வாறு நீரிழிவு கட்டுப்பட்டதும் சிறுநீர் அதிகமாக வெளியேறுவது குறைந்து வழமைபோலப் போகும்.

இது புரியாத இவளும் இவளை ஒத்த வேறுபலரும் தங்கள் பிரச்சனைகளுக்கு மருந்துகள் தான் காரணம் என எண்ணுகிறார்கள். நீரிழிவுக்கு மட்டுமல்ல அல்சர், பிரசர், மூட்டுவாதம் என எந்த நோயை எடுத்தாலும் இப்படியாக மருந்தையே குற்றவாளியாகக் கருதுகிறார்கள்.

இவர்கள் இவ்வாறு எண்ணுவதற்குக் காரணம் என்ன?

பாரம்பரிய மருந்து முறைகளின் ரகசியம் பேணும் ‘மூடு மருத்துவம்’ போலன்றி இன்றைய நவீன மருத்துத்தில் நோய்கள் பற்றி மட்டுமன்றி மருந்துகளைப் பற்றியும் அவற்றால் ஏற்படக்;கூடிய பக்கவிளைவுகள் பற்றியும் வெளிப்படையாக பேசப்படுகின்றன. பல நோயாளிகளும் இணையம் முதல் தொலைக்காட்சி வரை கேட்டும் படித்தும் கிரகித்துக் கொள்கிறார்கள்.

சிலர் தவறாகப் புரிந்து கொள்வதும் உண்டு. எதிலும் மறைமுகத்தை மட்டும் பார்ப்பவர்கள் இவர்கள்.

இவர்கள்தான் மருந்தே வேண்டாம் என்கிறார்கள். காலனுக்கு விரைவில் விருந்து வைக்க முனைகிறார்கள்.

உண்மையில் நோயாளிகளை விட மருத்துவர்களே பக்கவிளைவுகள் பற்றி முழுமையாக அறிந்திருக்கிறார்கள். நினைவில் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். எந்த மருந்தைக் கொடுக்கும்போதும் அதன் சாதக பாதக விளைவுகளைக் கருத்தில் கொண்டே கொடுப்பார்கள்.

அப் பெண்ணிற்கு ‘சல அடிப்பிற்கான’ காரணத்தை விளக்கினேன்.

சிறுநீர் கழிப்பது பற்றிய மற்றொரு பதிவு… லைட் போஸ்டைக் கண்டதும் நாய்கள் போல …

அவளது முகத்தில் இருந்த போஸ்டர் திடீரென மாறிவிட்டது!

எலக்சன் நேரத்திலை சரத் பொன்சேகா, மற்றும் மஹிந்த ராஜபக்சவின் போஸ்டர்கள் சுவர் முழுக்க ஒன்று கிழிய மற்றது வருமே அதுபோல.

ஆனாலும் குற்றம் சாட்டும் சுட்டு விரலை தன்னை நோக்கித் திருப்பவில்லை.

அரசியல்வாதிகளுக்குச் சற்றும் சளைத்தவள் அல்ல!

வீரகேசரி Steth இன் குரல் பத்தியில் நான் எழுதிய கட்டுரை.  எனது Steth இன் குரல் வலைப்பக்கத்திலும்  வெளியானது
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0.

Read Full Post »

நடைப் பயிற்சி என்பது சாதாரணமான அனைவரும் செய்யக் கூடிய பிரச்சனைகள் அற்ற  ஒரு உடற் பயிற்சியாகும். ஆனால் அதே நேரம் உடலுக்கு உச்ச நிலையில் நன்மைகளை அளிக்கக் கூடியது.

எந்த வயதினரும், எத்தகைய உடல் நிலையினரும் எந்த நேரத்திலும் செய்யக் கூடிய ஒரு இலகுவான பயிற்சி. தெருக்களில், மைதானங்களில், கடற்கரையில், கோயில் வீதிகளில் என எங்குமே செய்யக் கூடியது. இவை எதும் கிட்டாவிட்டால் வீட்டினுள் கூட சமாளித்துச் செய்யலாம். தொடர் மாடிவீடுகளின் மொட்டை மாடிகள் காற்றறோட்டம் கொண்ட மற்றொரு வசதியான இடமாகும்.

அதற்குப் பயிற்சி பெற வேண்டியதில்லை, ஆசிரியர்கள் வழிகாட்டிகள் எதுவுமே வேண்டியதில்லை. நீங்களாகவே செய்யக் கூடியது.

அத்தோடு எந்த ஆபத்தும் அற்ற பயிற்சி எனவும் சொல்லலாம்.

இதனால் உடல் நலத்திற்கு பல நன்மைகள் கிட்டுகின்றன.

  • குருதியில் உள்ள கெட்ட கொலஸ்டரோல் ஆன Lower low-density lipoprotein (LDL) னைக் குறைக்க உதவுகிறது.
  • குருதியில் உள்ள நல்ல கொலஸ்டரோல் ஆன Raise high-density lipoprotein (HDL) லை அதிகரிக்க உதவுகிறது.
  • பிரஷர் எனப்படும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க இது அவசியம்
  • நீரிழிவு வராமல் தடுப்பதற்கும், எற்கனவே நீரிழிவு இருந்தால் அதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் நிறையவே பங்களிக்கிறது.
  • அதிகரித்த எடையைக் குறைக்கவும், எடை அதிகரிக்காமல் தடுக்கவும் நடைப் பயிற்சி மிகவும் நல்லது.
  • மனதில் அமைதியையும் சாந்தத்தையும் கொண்டு வரவும் உதவும்.
  • உடல் உறுதியாகவும் நலமாகவும் இருக்க இதைவிட சுலபமான பயிற்சி எதுவும் கிடையாது.

அண்மையில் வதிரி சி. ரவீந்திரனின் ‘மீண்டு வந்த நாட்கள்‘ கவிதைத் தொகுதியைப் படிக்கும் வாய்புக் கிட்டியது. இதில் ஒரு கவிதை நடத்தல் பற்றியதாகும்

எந்த நேரத்தில் எத்தகைய சூழலில் எங்கு நடப்பர். இப்படிச் சொல்கிறார் நண்பர் ரவீந்திரன்

தொடர்ந்து எப்படி நடப்பர் என்பதை இனிதே சொல்கிறார்.

வேறென்ன செய்வர்..

தொடர்ந்து சொல்கிறார்

கவிதை இவ்வாறு நிறைவுறுகிறது.

“..முதிர்ச்சி என்பது மனதினில் தெரியும். நடையினில் இல்லை.” என்கிறார்.

பல நல்ல கவிதைகளை இலகுவான தமிழில் வாசகனிடம் கொண்டு செல்லும் நல்ல கவிதைத் தொகுப்பாகும்.

அருமையான கவிதை.

இருந்தபோதும் அக் கவிதையின் இறுதி வரியுடன் கருத்து ரீதியாக எனக்கு உடன்பாடு இல்லை.

“நடத்தல் என்பது பயணத்தின் இறுதிப்படியே” என்கிறார்.

அல்ல. அது நலமான உறுதியான மகிழ்ச்சியான வாழ்வுக்கான முதற்படி என்பேன்.

அதனால்தான் இப்பொழுது நடப்பர்களில் பலர் முதியவர்கள் அல்ல. பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதினரும் இளைஞர்களும் கூட.

ஆம். நடைப் பயிற்சி அனைவருக்குமானது. நலமான உடலைக் கொடுக்கும்.

இனிமையான கவிதையையும், இதைப் போன்ற பல கவிதைகளையும் கொடுத் நண்பர் வதிரி சி. ரவீந்திரன் அவர்ளுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

0.0.0.0.0.0.

Read Full Post »

தினக்குரல்  வழமையாக தனது பத்திரிகையில் இணைக்கும் அனுபந்தங்களுடன் இன்று புதிதாக ‘டிஜிட்டல் யுகம்’ என்பதை வெளியிட்டுள்ளது.

இதில் எனது வலைப்பதிவு அனுபவங்கள் பற்றிய சுருக்கமான நேர்காணலை இணைத்துள்ளார்கள்.

‘கண்டங்களை தாண்டிய வாசகர்களைக் கூட சில நிமிடங்களுக்குள் அடைய முடிகிறது’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

1.    கடந்த வருடத்தின் சிறந்த தமிழ் வலைப்பதிவாளராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தீர்கள். அத்துடன் 5 வலைப்பதிவுகளையும் நீங்கள் மேற்கொண்டுவருகின்றீர்கள். ஒரு மருத்துவராகவும், எழுத்தாளராகவும் உள்ள நீங்கள் வலைப்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று எவ்வாறு ஈர்க்கப்பட்டீர்கள்?

தினக்குரல் டிஜிட்டல் யுகம்

கணனியை காணாத கிடைக்காத போர்பிரதேசத்தில் 1996 வரை வாழ்ந்ததால் அதில் ஒரு அபரிதமான மோகம் இருந்தது. அதனால் கொழும்பு வந்ததும் கணனியை வாங்கி அதில் தட்டுத்தடுமாறி கீபோட் கொண்டு சுயமாக எழுதப் பழகினேன். பின் நோயாளர்களின் விபரங்களைப் பேணுவதற்காக கணனியை நான் உபயோகிக்கத் தொடங்கியபோது இலங்கையில் அவ்வாறு பேணுவதில்; ஒரு முன்னோடியாக இருந்தேன் எனலாம்.

தொடர்ந்து தமிழில் கீபோட்டில் மிகச் சிரமத்துடன் பாமினி பொன்டில் எழுதப் பழக நேர்ந்தது. பதிவுகள் இணைய இதழுக்காக மருத்துவ இலக்கிய கட்டுரைகளை எழுதுவதற்கு அது அவசியமாக இருந்தது. இது சுமார் 10-12 வருடங்களுக்கு முன்னராகும்.

இவ்வாறு கணனியிலும் இணையத்திலும் எழுதி வந்தபோதும் வலைப்பதிவளானக வேண்டும் என்ற சிந்தனை இருக்கவேயில்லை. ஆனால் அதற்கான ஆர்வத்தை தூண்டிவிட்டது நண்பர் மேமன் கவிதான்.

2 வலைப்பதிவை மேற்கொள்ளும் ஒரு எழுத்தாளர் எதிர்கொள்ளம் முக்கியமான பிரச்சினையாக இருப்பது தொழில்நுட்பப் பிரச்சினை. குறிப்பாக வலைத்தளத்தை அமைத்துக்கொள்வது பதிவேற்றம் செய்வது, தமிழ் யுனிகோட் எழுத்துருவைப் பயன்படுத்துவது என்பவையே அவை. இந்தப் பிரச்சினைகளை நீங்கள் எவ்வாறு வெற்றிகொண்டீர்கள்?

கண்டங்களை தாண்டிய வாசகர்களைக் கூட சில நிமிடங்களுக்குள் அடைய முடிகிறது'

மருத்துவனான எனக்கு கணனி ஒரு சாவாலாகவே இருந்தது. வலைத்தளத்தை அமைப்பது எப்படி என்று தெரியாத நிலையில் வலையில் தேடிதேடி வாசித்துக் கற்றே முதலாவதை கற்றுக்குட்டி போல அமைக்க முடிந்தது. படிப்படியாக அதை அழகுபடுத்தவும், விளக்கப் படங்களுடன் தெளிவாக்கவும் கற்றுக் கொண்டேன். இப்பொழுதும் வலைப் பதிவு சம்பந்தமாகக் பல புதிய விடயங்களை வலையிலேயே கற்று என்னை முன்னேற்ற முயல்கிறேன்.
ஆனால் அடிப்படைக் கணனி அறிவு எனக்கு இல்லாதது ஒரு குறையாகவே படுகிறது.

நான் ஆரம்பத்தில் blogspot.com வைப் பயன்படுத்தினேன்.

இப்பொழுது wordpress.com லும் எழுதுகிறேன்.

இவை இரண்டுமே அதிக கணனி அறிவு இல்லாதவர்களும் இலகுவாக தமக்கென சுலபமாக வலைப் பதிவுகளை (புளக்) அமைக்க கை கொடுக்கி;ன்றன. அவற்றின் தளத்திற்கு சென்றால் படிமுறையாக புளக் அமைக்க வழி காட்டுகின்றன. ஆங்கில அறிவு அதிகம் இல்லாதவர்கள் தமிழிலும் செய்யக் கூடியதாக இவை அண்மைக்காலமாக தமிழிலும் கிடைப்பது மற்றொரு சிறப்பாகும்.

Keyman மென்பொருளை உபயோகிப்பதால் பாமினியில் டைப் பண்ணுவதுபோலவே டைப் பண்ண முடிகிறது. அது எனக்குச் சிரமமாக இருக்கவில்லை.

3. உங்களுடைய தொழில் மற்றும் பத்திரிகைகளுக்கு எழுதுவது என்பவற்றுக்கு மத்தியிலும், இவ்வாறு ஐந்து வெவ்வேறான வலைத்தளங்களை வைத்து உங்களால் எவ்வாறு பராமரிக்க முடிகின்றது. அதற்கான நேரத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வீர்கள்?

வலைதளத்திற்கு என நான் தனியாக எழுதுவது குறைவு. எற்கனவே பத்திரிகை சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரைகளையே வலைத்தளத்தில் பகிர்கிறேன்.

இருந்தபோதும் பல வலைப் பதிவாளர்கள் போல என்னால் தினமும் பதிவேற்ற முடியவதில்லை. வாரத்திற்கு ஒரு முறையாவது மருத்துவப் பதிவு ஒன்றையும், இலக்கிய படைப்பு ஒன்றையும் பகிர முயல்கிறேன். பெரும்பாலும் இரவில் நேரங்கெட்ட நேரம்வரை முழித்திருந்தே இவற்றைச் செய்ய நேர்கிறது.

4. இவ்வாறான வலைப்பதிவுகளை மேற்கௌ;வதன் மூலமாக எவ்வாறான நன்மைகளை நீங்கள் பெற்றுக்கொண்டிருக்கின்றீர்கள்? அதாவது இதன் மூலமாக உங்களுக்குக் கிடைத்த பலன்தான் என்ன?

வயது என்பது புதிய தொழில் நுட்பங்களைக் கற்கவும் பயன்படுத்தவும் தடையாக இருக்கக் கூடாது. அதைத் தாண்ட வேண்டும் என்ற சவாலை எதிர்கொள்வதே எனது முதல் இலக்காக இருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல எனது மருத்துவ அறிவை பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு அப்பால் ஒரு பரந்த தளத்திற்கு நகர்த்த வேண்டும் என்ற அவாவை நிறைவேற்றிய திருப்தி கிட்டியது.

கண்டங்களைத் தாண்டிய வாசகர்களைக் கூட  சில நிமிடங்களுக்குள் அடைய முடிவதும், அவர்களது விமர்சனங்களையும் கருத்துகளையும் உடனடியாகவே பெற முடிவதும் மகிவும் மகிழ்சி அளிப்பதாகும். பல பழைய நட்புக்களைப் புதிப்பிக்கவும், புதிய நட்புகளை  பெற முடிவதும் உற்சாகம் அளிக்கிறது.

எனது படைப்புகளை பலர் வெவ்வேறு தளங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள். அதனால் இன்னமும் பரவலாக வாசிக்கப்படுகிறது. இவற்றால் எழுத்தளான் என்ற முறையில் கிட்டும் ஆத்ம திருப்தியைத் தவிர வேறு என்ன கிடைக்க முடியும்.

5. தமிழில் வலைப் பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கு நீங்கள் சொல்லக் கூடிய ஆலோசனை என்ன?

தெளிவான இலக்குகளுடன் பதிவிட வேண்டும். யாருக்காக எழுதப் போகிறேன், எவ்வாறு எழுதப் போகிறேன் எனத் தெளிவுடன் எழுத வேண்டும்.

எதை வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் யாருக்காவது பயன்படுவதாக இருக்க வேண்டும். சீரியசான விடயமாகத்தான் எழுத வேண்டும் என்றில்லை. சற்று ரிலக்ஸ்சாக மற்றவர்களுடன் பொழுதுபோக்கிறாக எழுதுவதாலும் இருப்பதில் தவறில்லை.

மற்றவர்களைக் கவரும் விதத்தில் எழுதுவது அவசியம். சிலரது தலைப்பு மட்டுமே கவர்ச்சியாக இருக்கும் உள்ளடக்கம் சப்பென்று இருக்கும். அவ்வாறான எழுத்துகளால் வாசகர்களைத் தக்க வைத்திருக்க முயடிhது.

0.0.0.0.0.0.0

Read Full Post »

Older Posts »