Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘அனுபவம்’ Category

சுடுவெயில் எரித்தழிக்க
கதிர் நீட்டும்.
மறுத்துரைத்து
நிழல் பரப்பி
களியாடும்
தாவரங்கள் கரையோரம்.
கட்டங்கள் இணை சேரும்
தம் நிழல் சேர்க்க.

சிறு குழாயால்
சிதறடித்துச் சீறி வந்து
பெரும் ஓடையில்
சங்கமிக்கும்
நீரிது.
சிறுநீரல்ல..

பற்றற்ற ஞானி
பற்றுடன் பற்ற நாடும்
பரமோன நிலை
சித்தமுடன் பற்றி வர
சத்தமின்றி சலனமின்றி
இசைந்தோடும்
கழித்த நீர்.

கழிவகற்றும் கால்வாயின்
நீரடியில் மறைந்திருக்கும்
கரும் சேற்றின் துர்நாற்றம்,
உள்ளுறையும்
வஞ்சனையை மறைத்தொழுகும்
கயமை நெஞ்சினும்
மேலானது.

எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

>எமது பாடசாலையின் அதிபராக சென்ற 5 வருடங்களாக பணியாற்றிய திரு.மு.கனகலிங்கம் அவர்கள் சென்ற 20.06.2011 முதல் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுவிட்ட செய்தியை அறிவிக்கிறேன்.

புதிய அதிபராக திரு.பொன்னையா பொன்னம்பலம் பதவி ஏற்றுள்ளார்.  புதிய அதிபர் பற்றிய செய்திகளை அடுத்த பதிவில் தருகிறேன்.

நாடு மிகவும் இக்கட்டான நிலையில் இருந்த காலத்தில் எமது பாடசாலையில் 15.03.2006 பொறுப்பேற்றார் அதிபர். நாட்டின் நிலையைக் கருத்திற் கொள்ளாது பாடசாலையின் வளர்ச்சி ஒன்றையே நோக்காகக் கொண்டு செயற்பட ஆரம்பித்தார்.

உடனடியாக பாடசாலை சூழலில் வாழும் மக்களை அழைத்து நல்லுறவை ஏற்படுத்தியமை ஞாபகத்திற்கு வருகிறது. பழைய மாணவர் சங்கக் கூட்டம் அபிவிருத்திச் சங்கக் கூட்டம் ஆகியவற்றைக் கூட்டியபோது பருத்தித்துறையில் இருந்த என்னையும் கலந்து கொள்ள அழைத்தது நேற்று நடந்தது போலிருக்கிறது. 


திரும்பவும் நான் கொழும்பு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதும் அவரது வேண்டுகோளுக்கு இணங்க இங்கு பழைய மாணவர் ஒன்றியத்தை ஆரம்பித்ததும் அதன் பின்னர் உங்கள் அனைவரது ஒத்துழைப்போடு பாடசாலை வளரச்சிப் பணியை தொடர முடிந்ததும் இனிய நினைவாகும்.

பாடசாலைக்கு பெரிய இரட்டைக் கதவும், அதற்கான வளைவும் அமைத்தல், வருடாந்த ஞாபகார்த்தப் பரிசுகள், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோருக்கு பரிசுகள் வழங்கல், பரிசளிப்பு விழாவிற்கான பரிசில் நூல்கள் அளித்தல், தொலைபேசி இணைப்பு, மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான விசேட வகுப்புகள்,கணனிகொள்பனவு, கோவைகளை கணனி மயப்படுத்தல், சரஸ்வதி சிலைகள் அமைத்தல், பாலர் வளாகத்திற்கான புதிய இரும்பு வேலி, கிணறுகளுக்கு சுகாதாரமான மூடிஅமைத்தல், நூலகம் அமைத்தல், அதற்கான தளபாடங்கள் பெறுதல், சைக்கிள் தரிப்பிடம் அமைத்தல் என எழுதி முடிக்க முடியாத அளவிற்கு  பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சென்ற வருடம் நான் பாடசாலை சென்றபோது

இவ்வளவு பணிகளைச் செய்த மனநிறைவுடன் அதிபர் இடமாற்றம் பெற்று மணற்காடு பாடசாலைக்குச் சென்றுள்ளார். உயர்தராதரம் பெற்ற அவரை, எமது சுயநலம் கருதி ஆரம்பப் பாடசாலை என்ற சிறையில் அடைத்து வைக்க முடியாது. அவரது பதவி உயர்வுகளுக்கு தடங்கல் ஏற்படாது அவரது தொழில் மேம்பாட்டிற்காக வழிவிட்டு நிற்போம்.  

உன்னதமான இலக்குகள், உறுதியான செயற்பாடு, நிலைதளராமை ஆகியன அவரது இயல்புகளாகும். ஆசிரியர்கள், பெற்றோர் பழைய மாணவர் நலன்விரும்பிகளுடன் சுமுகமான தொடர்பாடல், கல்வித் திணைக்களத்துடனான ஒத்துழைப்பு போன்ற செயற்பாடுகள் அவர் வளர்துக்கொண்ட பண்புகள்.  

இவற்றின் ஊடாக அவர் எமது பாடசாலைக்கு பல நன்மைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இத்தகைய  செயல்பாடானது பாடசாலையை  உயர்நிலைக்குக்  கொண்டு  சென்றுள்ளது . இதையிட்டு பெற்றோரும் நலன்விரும்பிகளும் மிக்க  மகிழ்சியடைகின்றோம். 

அவருக்கு  எமது  பழைய மாணவர் ஒன்றியத்தினதும், பாடசாலை சமூகத்தினதும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

புதிதாக பொறுப்பேற்ற இடத்திலும் அவரது தன்னலமற்ற பணிகள் சிறக்க வாழ்த்துவோம். 

இடமாற்றம் பெற்றுச் செல்லும் அவர் எமக்கு அனுப்பிய நன்றிக் கடிதத்தின் பிரதியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இடமாற்றம் பெற்ற அதிபர்.மு.கனகலிங்கம் அவர்களது கடிதம்

அன்புடையீர்,

நன்றி நவிலல்


 தாங்கள் இளவயதில் கல்வி கற்ற   மேற்படி பாடசாலையின் மேம்பாடு கருதி பலவழிகளிலும்  உதவியுள்ளீர்கள். பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினூடாக நிதியுதவி வழங்கியும், வேண்டும்போது விரைந்து வந்து ஏனைய உதவிகளையும் செய்துள்ளீர்கள்.
     ‘………………………………………- நின்று
தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்’     

என்ற  ஒளவையாரின் மூதுரைக்கு  ஏற்றாற்போல் இளம் வயதிலே எண்ணும் எழுத்தும் அறிய வைத்த பள்ளித்தாய்க்கு  பிரதியுபகாரமாக தாங்கள் வளர்ந்த பின்பு இயன்றவரை மனமுவந்து உதவியுள்ளீர்கள்.

  தங்களின் பாடசாலை இன்றைய நிலையிலே திருப்தியான அடைவுகளை வெளிப்படுத்தி நிற்கின்றது. அரைகுறையிலே நிற்கும் கட்டிடமும் கட்டுவதற்கு ரூபாய் இருபது இலட்சம் நிதியும் கல்வித் திணைக்களத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வருட இறுதிக்குள் கட்டிட வேலைகளும் நிறைவடையலாம் என எதிர்பார்க்கின்றேன்.

    இப்பாடசாலையில் 15.03.2006 இல் அதிபராகப் பொறுப்பெடுத்த நாள் முதல் இன்று வரை பல்வேறு செயற்றிட்டங்களுக்கும் உதவிபுரிந்து  ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். 20.06.2011 ஆந் திகதி தொடக்கம் புதிய பாடசாலையொன்றிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதால் இன்று வரை உதவி புரிந்த தங்கள் எல்லோருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு, புதிய அதிபருக்கும் வேண்டிய ஒத்துழைப்பை நல்கி பாடசாலையின் வளர்ச்சியின் தொடர்ச்சியைப் பேணுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
 

நன்றி

TP No –  0213217205

Read Full Post »

>

மனதுக்குள் இருந்தது போஸ்டர் அடித்தது போல அவளது முகத்தில் பளிச்சென ஒட்டிக் கிடந்தது.

‘நீ செய்த பிழையான வேலையால் வந்த வினைதான்’ என்று சுட்டு விரலை நீட்டி நேரடியாக குற்றம் சொல்லாததுதான் மிச்சம்.

நல்ல புஸ்டியான உடம்பு. வட்டாரி வைத்துக் கீறிய வட்டம் போல முகம் ஊளைச் சதைகளால் நிரம்பிக் கனத்தது. ஆடு மாடுகள் இரை மீட்டு அசை போடுவது போல வாய் எதனையோ சப்பிச் சுவைத்துக் கொண்டேயிருந்தது.

பாரத்தை இறக்கி வைத்துவிட்டு களை தீர ஆயாசப் பெரு மூச்சு விட்டாள்.
இறக்கி வைத்தது பை நிறைந்த பொருட்களை அல்ல. 80 கிலோ ஆன தனது உடலைத்தான்.

‘டொக்டர் நீங்கள் தந்த மருந்து எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ரா ராவா சலம் அடிக்குது. நான் மருந்தைக் குறைச்சுப் போட்டன்.’

பார்த்துப் பல நாட்களாகிவிட்டதால் கொடுத்த மருந்துகள் சட்டென ஞாபகத்திற்கு வரவில்லை.

வழமையாக உச்ச வேகத்தில் சுற்றும் பானை நிறுத்திய பின்னும் குளிர் கலையாத தினத்தில் இவளது சிறுநீர் அதிகம் போவதற்குக் காரணம் என்ன?

‘மருந்துக்காக இருக்காது. குளிராக இருக்குமா? காய்ச்சலாக இருக்கலாம். இந்த பனிக் குளிருக்கு காச்சலும் சேர்ந்தால் சலம் கூடப் போகும்தானே’ என்ற சந்தேகம் எழுந்தது. டெம்பரேச்சரைப் பார்த்தேன். டிஜிட்டல் தேர்மாமீற்றர்  ‘நீ சொல்வது பிழை’ என மறுத்து 98.4 நோர்மல் என்றது.

‘வேறு என்னவாக இருக்கும்? லசிக்ஸ் (Lasix) மருந்து கொடுத்திருப்பேனோ?’

லசிக்ஸ் என்பது உடலில் தேங்கிவிட்ட மிதமிஞ்சிய நீரை வெளியேற்றுவதற்காக் கொடுக்கும் மருந்து. பொதுவாக இருதய வழுவல் ;(Heart Failure)> ஈரல்சிதைவு (Cirrhosis)> சிறுநீரக நோய்கள் போன்றவற்றால் சிறுநீர் வெளியேறுவது குறைந்தால் அதைச் சீர்செய்யக் கொடுக்கப்படும் மருந்து.

ஆனால் 40 வயதேயான இவளுக்கு அப்படியான நோய் வருவதற்கு வாய்ப்பில்லை. ஒரு வேளை அப்படி இருந்தாலும் அத்தகைய தீவிர பிரச்சனையான நோயுள்ளவர்களை நான் மறப்பதில்லை. இவள் அவர்களுள் ஒருத்தியல்ல.

‘சலம் போகைக்கை எரியுதோ’ சிறுநீர்த் தொற்றாக இருக்குமோ என்ற எண்ணம் எழுந்ததில் கேட்டேன்.

 ‘ஒரு எரிவும் கிடையாது. பைப் திறந்தது போல வீச்சாகப் போகிறது’ என்றாள்.

காலையில் வந்த நோயாளி தான் குளிப்பதற்கு பைப்பைத் திறந்ததும், சிறுநீர் சிந்துவதுபோல முக்கி முனகிக்கொண்டு வந்ததாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. அவர் புரஸ்ரேட் நோயாளி. இவர் பெண் என்பதால் புரஸ்ரேட் நோய் அல்ல என்பதும் நிச்சயம்.

சிறுநீர்த் தொற்று இருக்காது எனத் தோன்றினாலும் சிறுநீர்ப் பரிசோதனை அவசியம்.

கணனியைத் தட்டி இவளது பதிவுகளைப் பார்த்தபோது அவளது சல அடிப்பிற்கு நான் கொடுத்த மருந்துகள் எவையும் காரணமல்ல என்பது தெளிவாயிற்று.

 
மருத்துமனையில் கணனியில் குறிப்பு   பற்றிய முன்னைய பதிவு.

இருப்பினும் தெளிவாக அவளுக்கு விளக்குவதற்கு இரத்தப் பரிசோதனையும் அவசியம். மருந்துவமனையிலேயே இருந்த ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைத்தேன்.

ரிப்போட் வந்தபோது இரத்தத்திலும் சிறுநீரிலும் சீனியின் அளவு அமோகமாக விளைச்சல் கண்டிருந்தது தெரிய வந்தது.

சீனி விலை நாளுக்கு நாள் எகிறிக் கொண்டிருக்கையில் இவ்வளவு சீனியை வீணாக்குகிறாளே என கவலைப்படத்தான் முடிந்தது.

கொமோட்டில் கழியும் சீனியை வாயில் அள்ளிப் போடவா முடியும்?

சென்ற முறைதான் நீரிழிவு நோய் என முதன்முறையாக இனங்காணப்பட்டு அதற்கான சிகிச்சை ஆரம்பித்து இருந்தோம். மருந்து வேலை செய்து நோயைக் குணமாக்கு முன்னரே, மருந்தால்தான் தனக்கு நோய் என்று கருதிய இந்த அதிவிவேக பூரண சிந்தாமணி மருந்து எடுப்பதைக் குறைத்துவிட்டாள்.

உண்மையில் குறைத்தாளா அல்லது மருந்தைப் போடாமலே நிறுத்திவிட்டாளா என்பது அவளுக்கு மட்டும் தெரிந்த ரகசியமாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் அதிகமாகப் போகும். நோயைக் கட்டுப்படுத்த கொடுக்கப்படும் மாத்திரைகள் இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும். அவ்வாறு நீரிழிவு கட்டுப்பட்டதும் சிறுநீர் அதிகமாக வெளியேறுவது குறைந்து வழமைபோலப் போகும்.

இது புரியாத இவளும் இவளை ஒத்த வேறுபலரும் தங்கள் பிரச்சனைகளுக்கு மருந்துகள் தான் காரணம் என எண்ணுகிறார்கள். நீரிழிவுக்கு மட்டுமல்ல அல்சர், பிரசர், மூட்டுவாதம் என எந்த நோயை எடுத்தாலும் இப்படியாக மருந்தையே குற்றவாளியாகக் கருதுகிறார்கள்.

இவர்கள் இவ்வாறு எண்ணுவதற்குக் காரணம் என்ன?

பாரம்பரிய மருந்து முறைகளின் ரகசியம் பேணும் ‘மூடு மருத்துவம்’ போலன்றி இன்றைய நவீன மருத்துத்தில் நோய்கள் பற்றி மட்டுமன்றி மருந்துகளைப் பற்றியும் அவற்றால் ஏற்படக்;கூடிய பக்கவிளைவுகள் பற்றியும் வெளிப்படையாக பேசப்படுகின்றன. பல நோயாளிகளும் இணையம் முதல் தொலைக்காட்சி வரை கேட்டும் படித்தும் கிரகித்துக் கொள்கிறார்கள்.

சிலர் தவறாகப் புரிந்து கொள்வதும் உண்டு. எதிலும் மறைமுகத்தை மட்டும் பார்ப்பவர்கள் இவர்கள்.

இவர்கள்தான் மருந்தே வேண்டாம் என்கிறார்கள். காலனுக்கு விரைவில் விருந்து வைக்க முனைகிறார்கள்.

உண்மையில் நோயாளிகளை விட மருத்துவர்களே பக்கவிளைவுகள் பற்றி முழுமையாக அறிந்திருக்கிறார்கள். நினைவில் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். எந்த மருந்தைக் கொடுக்கும்போதும் அதன் சாதக பாதக விளைவுகளைக் கருத்தில் கொண்டே கொடுப்பார்கள்.

அப் பெண்ணிற்கு ‘சல அடிப்பிற்கான’ காரணத்தை விளக்கினேன்.

சிறுநீர் கழிப்பது பற்றிய மற்றொரு பதிவு… லைட் போஸ்டைக் கண்டதும் நாய்கள் போல …

அவளது முகத்தில் இருந்த போஸ்டர் திடீரென மாறிவிட்டது!

எலக்சன் நேரத்திலை சரத் பொன்சேகா, மற்றும் மஹிந்த ராஜபக்சவின் போஸ்டர்கள் சுவர் முழுக்க ஒன்று கிழிய மற்றது வருமே அதுபோல.

ஆனாலும் குற்றம் சாட்டும் சுட்டு விரலை தன்னை நோக்கித் திருப்பவில்லை.

அரசியல்வாதிகளுக்குச் சற்றும் சளைத்தவள் அல்ல!

வீரகேசரி Steth இன் குரல் பத்தியில் நான் எழுதிய கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0.

Read Full Post »

>

ஞானிகளின் மோனக் கண்கள் போல அரைவாசி மூடிக் கிடந்தற்குக் காரணம் யோகநிலை அல்ல. கண்கள் கோவைப் பழம்போல சிவந்திருந்தன. அதற்குக் காரணம் மது போதையும் அல்ல.

இடது பக்க நெற்றி கண்டி வீங்கியிருந்தது. அதற்குக் கிழே கண் மடலும் மொழுமொழுவென நீர்க்கட்டி போல அதைத்திருந்தது.

இவற்றை எமது மனத்தில் அகற்றிவிட்டுப் பார்த்தால் வழமையான அழகான முகமாக பிரகாசிக்கும் எனத் தோன்றியது.

பார்க்கப் பரிதாபமாக தோற்றமளித்தாள். ரத்தக்களரியாகச் சிவந்திருந்த முகத்தில் சோகம் அப்பியிருந்தது. அதையும் மீறிய வன்மம் அவளது கண்களில் உறைந்திருப்பதை என்னால் உணர முடிந்தது.

கண்களைக் கீழே இறக்கிப் பார்த்தபோது கழுத்தில் கருமையாகக் கண்டல். கைகளில் அங்காங்கே சிறு கீறல்கள்.

“என்ன நடந்தது?”

உடன் பதில் வரவில்லை. வாய் திறப்பதற்கு முன் எதைச் சொல்வது எப்படிச் சொல்வது எனக் கூட்டிக் கழித்துப் பார்க்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டேன். தானகவே பேசட்டும் எனக் காத்திருந்தேன்.

வழமையில் அவள் அப்படியானவள் அல்ல. மிகவும் துடிப்பானவள். கேட்பதற்கு முன் பட்பட்டெனப் பதில் வரும். எதிர்க் கேள்விகளும், சந்தேகங்களும் சரமாரியாகப் பாய்ந்து வந்து என்னைத் திணறடிக்கும்.

திருமணமாகி ஓரிரு வருடங்கள்தான். காதல் கலியாணம். அவனும் நல்ல வேலையில் இருக்கிறான். பண்பாகப் பழகுபவன். இன்னும் குழந்தைகள் இல்லை. இன்று தனியே வந்திருக்கிறாள்.

மனதில் அவளது சரித்திரப் பக்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.

“எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை…” ஆரம்பித்தவள் சற்று நிதானித்தாள்.

“இதெல்லாம் இவராலைதான். குடிச்சுப் போட்டு வந்தார் என்றால் என்ன செய்யிறம் என்று அவருக்குப் புரியுதில்லை. அடிச்சு உதைச்சு என்னைச் சம்பலாக்கிப் போடுகிறார்”

எனக்கு ஆச்சரியாக இருந்தது. குடிப்பானா அவன்?

“குடிக்கிறவரே. அடிக்கடி குடிக்கிறவரோ. கூடுதலாகவும் குடிக்கிறவரோ” என விசார்த்தேன்.

“அதிகம் குடிக்கிறதில்லை. எப்பெண்டாலும்தான். பார்ட்டி, பிரண்ட்ஸ் என்று சேர்ந்தால் குடிப்பார்…”

“…ஆனால் குடிச்சிட்டு வந்தால் பிரச்சனைதான். கண் மண் தெரியாது, கோபம் பொத்துக் கொண்டு வரும். தேவையில்லாமல் என்னோடை சண்டை போடுவார்.”

காயங்களுக்கு பண்டேச் பண்ணி, உடல் வலிகள் தீர மருந்துகள் கொடுத்தேன்.

ஆனாலும் அவளது அடிப்படைப் பிரச்சனை தீரவில்லை என்பது நன்றாகவே புரிந்தது. தீராவிட்டால் மீண்டும் அடிகாயங்களுடன் வந்து நிற்பது நிச்சயம்.
பேச்சை ஆரம்பித்தேன்.

“ அவரது குடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாதா?”

“அடிக்கடி குடிக்கிறவரில்லை…

“..எப்பெண்டாலும்தான் குடிப்பார். அந்த நேரத்திலை அவர் அடியாமலிருக்க ஏதாவது செய்ய முடியுமா டொக்டர்”

சற்று சிக்கலான விடயமாக இருந்தது. மருத்துவ ரீதியில் குடித்துவிட்டு வருபரை உணர்ச்சி வயப்படாமல் தடுக்க முடியமா?

அதனால் எனக்கு ஒரு சவாலாக இருந்தது. சற்று யோசித்தேன்.

“நீங்கள் ஒரு முயற்சி செய்து பாருங்கள். அவர் குடித்துவிட்டு வரும் நேரங்களில் உங்களது வாயில் கிறீன் ரீயை விட்டு அலசிக் கொண்டே இருங்கள்…

…குடிக்கக் கூடாது,

….வெளியே துப்பவும் கூடாது.

…வாயில் வைத்து அலசிக் கொண்டே இருங்கள்.”

அவளுக்கு ஆச்சரியாக இருந்தது.

கிறீன் ரீயை குடியாமல் அலசிக் கொண்டே இருப்பதா. அதுவும் அடிக்கும் அவரல்ல! அடி வாங்கும் தான்!

அரை நம்பிக்கையோடு சென்றாள்.

சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின் வந்தாள். அடி, காயம் எதுவும் இல்லை. தடிமன் காய்ச்சலுக்கு மருந்தெடுக்க வந்திருந்தாள்.

“இப்ப அவர் குடித்தால் அடிக்கிறதில்லையோ”

“இல்லை…..” முழுமதியாக முகம் பூரித்தாள்.

“…என்ன அற்புதமான ஐடியா சொன்னீர்கள். அவர் குடிச்சிட்டு வந்தால் நான் நீங்கள் சொன்னபடி வாயில் கிறீன் ரீயை என்ரை வாயில் விட்டு அலசிக் கொண்டே இருப்பேன். அவர் அடிப்பதேயில்லை…
.
…என்ன அதிசயம். எப்படி நடக்குது டொக்டர்? அந்த கிறீன் ரீ மணத்திற்கு கோபம் வராமல் தடுக்கிற குணம் இருக்கிதா?”

நான் மறுமொழி சொல்லவில்லை. உண்மையைச் எப்படி முகத்துக்கு நேரே சொல்வது?

இரு கை தட்டினால்தானே ஓசை எழும் என்ற சிம்பிள் தத்துவம்தான்.

‘நீ வாயை மூடிக்காண்டிருந்தால் அவரது கை நீளாது’ என்பதை அவளுக்குக் கூறவில்லை.

வெறுமனே புன்னகைத்தேன்.

எனது வேறுசில ஆலோசனைகள் பற்றி அறியக் கீழே கிளிக் பண்ணுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

வீரகேசரி Steth இன் குரல் பத்தியில் நான் எழுதிய கட்டுரை

0.0.0.0.0.0

Read Full Post »

>

“ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்..”
என்பது வாழ்க்கையின் அந்திம ஓரத்தில் இருக்கும் கலைஞர் அரசியல் ஜனன ஆரம்பத்தில் எழுதிய வசனம்…. பராசக்தியில் சிவாஜி பேசியது…

ஆனால் தொடர்வது வேறு கதை. ..

“இருமினாள் இருமினாள். விழி பிதுங்கி மூச்சடக்கும் வரை இருமியவள்..”; கதை இது.

 “என்னாலை ஒன்றுமே செய்ய முடியவில்லை..” அனுங்கிக் கொண்டே வந்த அந்தப் பெண்ணின் முகத்தில் சோர்வும், சோகமும் ஒட்டியிருந்தன.
களைப்போடு வந்தவள் உட்கார்ந்து தன்னைச் சுதாகரித்துக் கொள்ள சில நிமிடங்களாயிற்று.

வயதானதால் ஏற்பட்ட களைப்பு அல்ல. இளம் பெண் 20-22 வயது மட்டுமே இருக்கும். சோர்ந்த கண்களைச் சுற்றி மடல்கள் சற்று வீங்கியிருந்தது. கண்களும் சற்றுச் சிவந்திருந்தது.

இரண்டு வாரங்களாக இருமலாம். மிகக் கடுமையான இருமல். இருமி இருமி முடியாமல் சத்தியிலும் முடிவதுண்டாம். இதனால் சாப்பிடுவதும் குறைவு. சற்று மெலிந்தும் விட்டாளாம்.

மருந்தெடுத்தும் குறையவில்லை. இரண்டு வாரங்களுக்கிடையில் மூன்று வைத்தியர்களைக் கண்டும் குறையவில்லை.

சிறிய கட்டாக பரிசோதனை ரிப்போட்டுகளை என் முன் வைத்தாள்.
சரியாகத்தான் அவர்கள் ஆராய்ந்திருந்தார்கள். இரத்தம், சிறுநீர், சீனி, சளி, எக்ஸ் ரே என எதையும் விட்டு வைக்கவில்லை.

நிதானமாக அவற்றை ஆராய்ந்து பார்த்தபோது எந்த பிழைகளும் தெரியவில்லை. நியூமோனியா. சயரோகம், கட்டி, புற்றுநோய் எதற்கான அடையாளங்களும் கிடையாது.

மிகக் கடுமையான அன்ரி பயரிக் மருந்துகள், ஆஸ்த்மாவிற்கான மருந்துகள், ஸ்டீரொயிட் என்று சொல்லப்படும் மருந்துகள், பல வகை இருமல் சிறப் மருந்துகள் கொடுக்கப்பட்டிருப்பதை அவதானித்தேன்.

தொண்டை, சுவாசப்பை, மூக்கு, காது என முக்கிய உறுப்புகளைப் பரிசோதித்துப் பார்த்த போது அவை யாவும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பதை அறிய முடிந்தது.

“எவ்வளவு மருந்துகள் சாப்பிட்டு விட்டேன். ஒண்டும் பிரயோசனமில்லை. வயிறு ஊதி, வாய் கசந்து, சாப்பிட முடியாது போனதுதான் மிச்சம். வயிற்றையும் பிரட்டுகிறது. கொஞ்சமும் சுகமில்லை” என்றாள்.

உண்மைதான் மாறி மாறி மூன்று வகை அன்ரிபயோடிக் மருந்துகளையும் பிரட்னிசலோன் போன்றவற்றையும் உட்கொண்டால் வயிற்றில் குழப்பம் ஏற்படுவதை தடுக்க முடியாதுதான்.

மருந்துகளுக்கு மேலாக ஆஸ்த்மாவுக்கான இன்ஹேலரும் கொடுக்கப்பட்டிருந்தது. அதுவும் வேலை செய்யவில்லை.
ஆஸ்த்மா இருந்தால்தானே அது வேலை செய்யும்.

“இது என்ன வருத்தம்” அவள் கேள்வி எழுப்பினாள்.

வீங்கிய மடல்களும், கண்ணின் வெண் பகுதியில் இரத்தம் கசிந்திருந்ததும், இருமல் வாந்தியில் முடிவதும், அது என்ன நோய் என்பதை எனக்கு ஓரளவு புலப்படுத்திவிட்டன. ஆயினும் நிச்சயப்படுத்தாது சொல்ல முடியாது.

நிச்சயப்படுத்துவதாயின் அவளது இருமல் எப்படியானது என்பதை அறிய வேண்டும்.

“எப்படியானது உங்கள் இருமல்? தொடர்ந்து வருமா, திடீரென வருமா, வந்தால்…” 

பீறிட்டு வந்தது இருமல். எனது கேள்வி முடிவதற்கிடையில்.
இருமினாள், இருமினாள், இருமிக் கொண்டேயிருந்தாள். விழி பிதுங்கி மூச்சடக்கும் வரை இருமினாள்.

தொடர்ந்து இருமினாள்.

முகம் சிவந்துவிட்டது. கண்கள் பீறிடுப் பிதுங்கி வெளியே பாய்ந்து விடுமோ எனப் பயமுறுத்தியது.

திடீரென ஒரு கேவல் சத்தம். உயிர் பிரியுமாற் போன்ற அவல ஒலி.

நெஞ்சின் அடி ஆழத்திலிருந்து.

பயப்படாதீர்கள்!

எதிர்பார்த்ததுதான்.

இவ்வளவு நேரமும் சுவாசத்தை உள்ளெடுக் முடியாது, இருமி இருமி வெளியே விட்ட காற்றைத் திடீரென ஒரே மூச்சில் உள்ளெடுத்ததால் பீறிட்டு எழுந்த சத்தம்.

Whoop அதுதான் அந்தச் சத்தம். அந்தச் சத்தத்தை வைத்துத்தான் அந்த நோயின் பெயரே வந்திருக்கிறது. அதை கொண்டே நோயை நிச்சயப்படுத்த வேண்டும். இருமல் எப்படியானது என்ற கேள்விக்கு விடை சொற்களாக அன்றி செயற்பாடாகவே வந்துவிட்டது.

எனது வேலை சுருங்கியது. நோய் தெளிவானது.

வீங்கிய மடல்களும், கண்ணின் வெண் பகுதியில் இரத்தம் கசிந்திருந்ததும்…..

Operation success. Patient dead  என்பது போலல்ல.

வூப்பிங் கொவ்  (Whooping Cough) என ஆங்கிலத்தில் சொல்வது, மருத்துவத்தில் Pertussis ஆகும். தமிழில் குக்கல் என்போம்

இப்பொழுது பெருமளவு காணப்படுவதில்லை. காரணம் சிறுவயதில் போடப்படும் முக்கூட்டு ஊசிதான். இந்நோய் குணமடைய நீண்டகாலம் எடுக்கும். சுமார் 6 வாரங்கள் முதல் 2 மாதங்கள் எடுக்கும்.

ஆரம்பகட்டத்தில் மட்டுமே அன்ரிபயோரிக் மருந்துகள் உதவும். அதுவும் ஒரு குறிப்பிட வகை அன்ரிபயோடிக் மட்டுமே. இவள் சாப்பிட்டதில் அது இல்லை. வீணாக ஏனையற்றை உண்டதுதான் மிச்சம்.

நீண்ட நாள் தொடரும் இந் நோயைப் பற்றி விளக்கி, அன்ரிபயோரிக் மருந்துகள் நிறுத்தி, இருமலைத் தணிக்கும் சாதாரண மருந்துகளை கொடுத்தேன்.

தேவையற்ற மருந்துகள் நீக்கப்பட்ட சந்தோசத்திலேயே அவளது வருத்தம் அரைவாசியாகக் குறைந்து விட்டது.

எனது மருந்தால் அல்ல!

இருமலுக்கு மற்றொரு காரணம் பற்றிய எனது முன்னைய பதிவு


நாட்பட்ட இருமலும் காதுக்குடுமியும்

பசுப்பாலுக்கும் சளிக்கும் உள்ள தொடர்பு பற்றிய பதிவுக்கு


பசுப்பால் சளியை தடுக்கும்

வீரகேசரி வாரவெளியீடு “Steth இன் குரல்” இதழ் கீற்றில் 03.04.2011 ல் வெளியான எனது கட்டுரை (மருந்துகளால் மாறாத இருமல்.)
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

>

“விலை போகாத இந்த மருந்தை என்ரை தலையிலை கட்டியிருக்கிறார் அந்த டொக்டர்” ஆத்திரத்தில் அவரது முகம் சிவத்துத் துடித்தது.

கிட்ட இருந்திருந்தால் அந்த டொக்டரின் முகம் பப்படம் போல சுக்கு நூறாகியிருக்கும். அடித்து நொறுக்கியிருப்பார் என்பது நிச்சயம்.

கொழும்பின் மறு எல்லையிலிருந்து வந்திருந்தார் அவர். அந்த டொக்டரும் அங்குதான். நான் மறு எல்லையில்.

நீண்டகாலமாக, பரம்பரை பரம்பரையாக என்னிடம் மருந்து எடுக்கும் குடும்பத்தினர். அவரது குடும்ப வைத்தியார் நான். இப்பொழுது நெடும்தொலைவில் இருக்கிறார். ‘எடுத்ததற்கெல்லாம்’ என்னிடம் ஓடி வருவது முடியாத காரியம். அவசரத்திற்கு பக்கத்தில் உள்ள டொக்டரிடம் காட்டுவார். சற்றுத் தீவிரமான பிரச்சனை என்றால் என்னிடம் வருவார்.

இப்பொழுது வந்தது பெரிய பிரச்சனை அல்ல. நேர நெருக்கடியால் அருகில் மருந்தெடுத்தும் குறையாத பிரச்சனை. சாதாரண சளி இருமல்தான்.

ஆனால் முக்கியமான பல வேலைகள் இருப்பதால் விரைவில் சுகமாக வேண்டும் என்ற அவசரத்தில் என்னைத் தேடி வந்திருந்தார். இப்பொழுதும் வழமையாக அருகில் இருக்கும் டொக்டரிடமே காட்டியிருக்கிறார். அவரும் திறமையான பெயர் பெற்ற மருத்துவர்தான். இவர்; அவசரப்பட்டு என்னிடம் வந்துவிட்டார் என எண்ணிக் கொண்டேன்.

“என்னெண்டாலும் உங்களிட்டை காட்டினால்தான் எனக்கு சுகம் வரும்” என்ற பாராட்டுரை நீரிழிவுக்காரனுக்கு ஐஸ்கிறீம் கிடைத்தது போல இனித்தது.

“என்ன மருந்து தந்தவர்” எனக் கேட்டேன்.

மறுமொழி சொல்லவில்லை!

பட்டென எழுந்தார். எழுந்த வேகம் என்னை அசர வைத்தது.

இவர் கோபப்படும்படி நான் எதுவும் சொல்லவில்லையே, ஏன் இப்படி வீராவேசமாக எழுகிறார்.

அவரது அடுத்த செய்கை என்னைத் திகைக்க வைத்தது.

எழுந்த வேகத்தில் பக்கென ரௌசர் பொக்கற்றில் கையை வைத்து எதையோ சிரமப்பட்டு இழுத்தார். மூச்சடைத்த நான் அவரது கையிலிருந்து வரப்போவதை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே இருந்தேன்.

உள்ளுர ஒரு அச்சம் இருந்ததை மறுப்பதற்கில்லை.

கை நிறைய ஒரு கட்டு என்வலப்புகள் வெளி வந்தன.

நல்லவேளை துப்பாக்கி அல்ல.

அவருக்கு வந்த காதல் கடிதங்களும் அல்ல. மருந்து போட்ட என்வலப்புகள்.
அவ்வளவும் அவருக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகள்.

‘ஒரு சாதாரண இருமலுக்கு இவ்வளவு மருந்துகளா’

கேட்பது நாகரீகம் அல்ல என்பதால் வாய் பொத்தியிருந்தேன்.

ஓவ்வொன்றாக எடுத்துப் பார்க்க வேண்டிய துன்பம் எனக்காயிற்று.

தடிமனுக்கு, சளிவெட்ட, அன்ரிபயடிக், விட்டமின்கள் என இன்னும் இன்னும் ….

ஒரு மருந்து மட்டும் வித்தியாசமாக இருந்தது. Fefol விலையுயர்ந்த இரும்புச் சத்து மருந்து. அதுவும் கொஞ்சநஞ்சம் அல்ல. 30 மாத்திரைகள். 

குருதியில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து உள்ளவர்களுக்குக் கொடுப்பார்கள். சாதாரண வார்த்தைகளில் சொன்னால் இரத்தசோகை உள்ளவர்களுக்கு கொடுப்பதாகும்.

இவர் நல்ல ஆரோக்கியமானவர். வயதும் 40-45தைத் தாண்டாது. தனது உடலில் அக்கறையுள்ளவர். கீரை, மீன், பழவகைள், கோழியிறைச்சி எனஆரோக்கியமான உணவுப் பழக்கம் உள்ளவர். தினசரி நடைப் பயிற்ச்சி செய்பவர். இவற்றின் மூலம் தனது எடையையும் மிகவும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர். குடி, புகைத்தல் போன்ற பழக்கங்களும் இல்லாதவர். எனவே இரத்தசோகை வருவதற்கு வாய்ப்பில்லை என்பது புரிந்தது.

ஆயினும் மூலத்தால் இரத்தம் போதல், நடந்தால் இளைப்பு போன்ற ஏதாவது குணங்குறிகள் இருக்றிறதா என விசாரித்தேன்.

“அப்படி ஒன்றும் இல்லை” என்று சொன்னவர் சற்று யோசித்தார். “விலையான மருந்து! இதுக்கு மாத்திரம் 300 சொச்சம் அவற்ரை பார்மஸியிலை எடுத்தவை…”

“..இந்த மருந்துக்கு expiary date இன்னும் ஒரு மாதத்திலை வருகிது…” எனச் சொல்லிப் போட்டுத்தான் அந்த அதிர்ச்சி தரும் வார்த்தைகளை ஆவேசமாக உதிர்த்திருந்தார்.
 
 -விலை போகாத இந்த மருந்தை என்ரை தலையிலை கட்டியிருக்கிறார் அந்த டொக்டர்-.

மருத்துவர்களைக் கடவுள்களாகக் கருதிய காலம் உண்டு. “ஐயா கடவுள் முதல், அடுத்தது நீங்கள்” எனப் பலர் கூறியதைக் கேட்ட அனுபவம் எனக்குண்டு.

இத்தகைய சூழலில் ‘விலையாகாத மருந்தைத் தலையில் கட்டுபவர்;’ என்ற சொல்லு என்னைப் பற்றியல்ல வேறு ஒரு டொக்டரைப் பற்றி என்ற போதும் மனத்தை உறுத்தியது.

மருத்துவம் என்பது கூட சேவை என்பதற்கு அப்பால் உழைப்பிற்கான ஒர் வழியென்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

காசேதான் கடவுள் அப்பா என்ற காலம் இது.

இருந்த போதும் எந்த ஒரு டொக்டரும் ஒரு நோயில்லாத ஒருவருக்கு அல்லது வேறு நோயுள்ள ஒருவருக்கு அதற்கு சம்பந்தம் இல்லாத மருந்தை விற்பனை செய்வதற்காகக் கொடுத்தார் என்பது தவறான குற்றச் சாட்டாகவே எனக்குப் பட்டது.

என்ன நடந்திருக்கலாம். பல கோணங்களில் யோசித்துப் பார்த்தேன்.
நோயாளி அன்று ஏதாவது ஒரு களைப்பு இளைப்பு என்று ஏதாவது சொல்லிவிட்டு இப்பொழுது மறந்திருப்பார்.

அல்லது மருத்துவரின் சிட்டையை, சரியாகப் படிக்காத மருந்து கொடுப்பவர் தவறான மருந்தைக் கொடுத்திருக்கலாம்.

ஆயினும் மனம் திருப்திப்படவில்லை எங்கோ எதோ தவறு நடந்திருக்கிறது என மனம் அழுத்திச் சொல்லியது. அவரது மருந்துப் பைக்கற்றை வாங்கி கவனமாகப் பரிசோதித்தேன்.

எல்லாம் சரியாகத்தான் இருப்பதுபோல் இருந்தது. ஆனால்

பக்கற்றில் மருந்து கொடுக்கப்பட்டவரின் பெயர் திருமதி என ஆரம்பித்திருந்தது….

….அந்தப் பைக்கற்றில் மாத்திரம்….

மனைவி கொடுக்கும் சாப்பாட்டை மட்டுமல்ல மனைவிக்கான மருந்தையும் இவரே சாப்பிட்டுவிட்டார்.

மருத்தவர்களின் சிகிச்சை அறைகளில் நடக்கும் சில சிரிப்பான சம்பவங்களுக்கு கீழே கிளிக் பண்ணுங்கள்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

வீரகேசரி பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் நான் எழுதிய கட்டுரை

0.0.0.0.0.0

Read Full Post »

>

மதிலோர சிறுகம்பில்
மாநகர மின்விளக்கு அதன்
ஒளிவெள்ளம்
மறுகம்பம் நீளாது
அரைத் தொலைவில்
வலுவொடுங்கி மங்கிவிடும்.

ஆனாலும்
வானோங்க உயர்ந்திருந்து
வையமெல்லாம் கதிர் சிதறும்
மதியொழியை,
நாணவைக்கும்
தன் அருகிருப்பால்.

நள்ளிரவில் துயில் கலைந்து
நரக்குருதி தீய்ந்தெழ
மூச்சடங்கிப் பறவையினம்
சிறகடித்து விலகி ஓடும்.
நடுவெயில் சுட்டெரிக்க
நிறைவிழிகள் உறைந்திருக்க
சுடுகுழல் பேச்சொடுக்கிப் பெற்ற முதல்
சுளுவாக மடி சேரும்.

பனைமட்டை, பெரும் கொட்டன்
சுடுகம்பி இவையனைத்தும்
பெருந்திமிரில்
உள்வீதி உலாவரும்;.
கடிவாளப் பிடியிறுக்கி
தளராது அரசோச்ச.

அதிகார நடுப்புள்ளி நழுவாது
அழுங்காகப் பிடித்தாள
அருகாக வந்து ஒளிசெறியக் 
கற்றிடுவாய் வான்மதியே.

எம்.கே.முருகானந்தன்.

ஜீவநதி பங்குனி 2011 இதழில் வெளியான எனது கவிதை.

Read Full Post »

>

“ஐயா நான் சொன்ன கதையை ஒருதருக்கும் சொல்லிப் போடாதையுங்கோ…”

குரல் கேட்டது ஆளைக் காணவில்லை.

அறைக்குள் நுழைய முன்னரே திரைச் சீலைக்கு வெளியே இருந்தே சொல்லிக் கொண்டே வந்தாள் அந்த மூதாட்டி.

”தனது கதை வெளியில் பரவிடுவதற்கு முன் தடுத்துவிட வேண்டும் என்ற அவசரம்தான்  அவளை அப்படிப் பேச வைத்திருக்க வேண்டும்.

என்ன ஏடா கூடமான கதையை என்னிடம் சொல்லியிருப்பாள் என்பது ஞாபகத்தில் இல்லை.

“என்ன கதை சொன்னியள். ஞாபகமில்லை”

“போன முறை வரக்கை நானிருக்கிற வீட்டுக்காரர் பற்றிச் சொன்னனே …”

நான் புரியாமல் விழிக்க ….. ஞாபகப்படுத்த ஆரம்பித்தாள்

அந்த அம்மாவின் நிலைமை படுகவலைதான். கணவன் காலமாகிவிட்டார்.

மூன்று பிள்ளைகள். யாழ்பாணத்தில் குடியிருந்த அவர் தனது வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் கொழும்பில்தான் கடந்த பத்து வருடங்களாக வாசம் செய்கிறாள்.

தனியே இருக்க முடியாததால் உறவினர் வீட்டில் தஞ்சமடைந்திருக்கிறாள்.

அவளைப் பார்க்கவென வீட்டுகாரருக்கு பிள்ளைகள் கணிசமான தொகையை மாதாமாதம் கொடுக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் அம்மாவை அக்கறையோடு பார்ப்பதில்லை. ஏனோதானோ என அலட்சியப்படுத்துகிறார்கள்.

தண்டச் சோறு என்பது போல நக்கல்.

இவளுக்கென தனியாக வரும் வேறு காசிலும் கை வைத்து விடுவார்கள்.

இவ்வாறு பல இடைஞ்சல்கள், மனக் கசப்புகள்.

இவற்றை மருத்துவன் என்ற முறையில் என்னிடம் சொல்லி மனம் ஆறியிருந்தாள். நான் இவற்றை விட்டுக்காரருக்குச் சொல்லிவிட்டால் பிரச்சனை ஆகிவிடும் என்பதால் வெளிவிட வேண்டாம் எனச் சொல்கிறாள்.

அம்மா சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன அவரது பிரச்சனையை எவருக்கும் நான் சொல்லப் போவதில்லை. அவரது பிரச்சனையை மட்டுமல்ல எந்த நோயாளியின் பிரச்சனையையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. நான் மட்டுமல்ல எல்லா மருத்துவர்களும் அவ்வாறே சொல்வதில்லை.

இது அவர்களது தொழில் தார்மீகம்.

நோயாளர்களது தனிப்பட்ட பிரச்சனைகளை மட்டுமல்ல அவர்களது நோய் பற்றிய தகவல்களைக் கூட மற்றவர்களுக்கு வழங்குவதில்லை. அவ்வாறு வழங்குவது தவறு.

அண்மையில் வெளிநாட்டிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு.

ஒரு மகன் அருகிலிருந்து பராமரிக்க முடியாத நிலையில் தனது தந்தையின் உடல்நிலை பற்றி அறிவதற்காக எடுத்திருந்தார்.

தந்தையின் மீதுள்ள அவரது பாசமும், தூர தேசத்திலிருந்து அவரது நிலை அறிய முயன்ற அக்கறையும் உண்மையானது. பாராட்டத்தக்கது.

ஆனால்! நான் தகவல் தர மறுத்துவிட்டேன்.

அவருக்கு சற்றுக் கோபமும் எரிச்சலும் ஏற்படவே செய்தன.

ஆனால் எனது நிலை இக்கட்டானது. நான் தகவல் தர மறுத்ததற்கு காரணங்கள் இரண்டு.

அழைத்தவர் உண்மையில் நோயாளியின் மகன் தானா அல்லது வேறு யாராவது துர்நோக்கங்களுக்காகக் கேட்கிறாரா என்பது நிச்சயமாக தெரியவில்லை.

இரண்டாவது மிக முக்கியமான காரணம்.

மகனாகவே இருந்தாலும் தனது உடல்நிலை பற்றி அவருக்கு தெரிவிக்க தகப்பனுக்கு விருப்பம் உள்ளதா என்பது பற்றியும் அவ்வேளையில் எனக்குத் தெரியாது.

ஆயினும் பின்னர், தகப்பன் தனது நோய் பற்றி மகனுக்குக் கூறும்படி கேட்ட பின்னர் தகவல்களை தயக்கமின்றித் தந்தேன்.

நோய் என்பது ஒருவரின் தனிப்பட்ட விடயம். அதை அவர் மற்றவர்களுக்கு சொல்லவோ மறைக்கவோ செய்யலாம்.

இதனால்தான் எயிட்ஸ் நோயாளியிடம் கூட அவரது சம்மதம் இன்றி இரத்தப் பரிசோதனை செய்ய முடியாது. அவரது நோய் பற்றி மற்றவர்களுக்கு சமூக நலனுக்காகக் கூட வெளிப்படுத்த முடியாது.

மற்றவர்களுக்கு சொல்வதா வேண்டாமா என்பது நோயாளிகளின் விருப்பைப் பொறுத்தது.

மருத்துவர்கள் கூட அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது.

சரி! ஒரு நோயாளியின் உடல்நிலை பற்றி மற்றொரு மருத்துவர் கேட்டால் என்ன செய்வது?

அதே விடைதான். சொல்ல முடியாது.

அதாவது தனிப்பட்ட தேவைகளுக்காகக் கேட்டால் சொல்ல முடியாது.

ஆனால் அந்த மருத்துவரும் நோயாளியின் சிகிச்சையில் சம்பந்தப்பட்டிருந்தால் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது மருத்துவர்களின் கடமையாகும்.

“இவ்வளவெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால் பத்திரிகையில் எழுதுகிறீர்களே” என்று கேட்கிறீர்களா?

எழுதுகிறேன்!

எழுதுகிறோம் !!

ஆனால் அவை எதுவும் எந்தத் தனிப்பட்ட நோயாளியை அல்லது நபரைக் குறிப்பவை அல்ல.

விடயத்தை இலகுவாக விளக்குவதற்கான அவர், அவள் என எழுதுவதுண்டு. ஆனால் அவை எவரையும் குறிப்பாகச் சுட்டாது.

சொல்லப்படும் சம்பவங்களும் தேவைக்கு ஏற்ப கற்பனையில் உருவாக்கப்பட்டவையே.

ஆனால் அனுபவத்தால் பெறப்பட்ட விடயங்களுக்கு கொடுக்கப்படும் உருவங்களேயாகும்.

இது ‘ஓவியர் அனுபவம் சார்ந்து கற்பனையில் ஓவியம் தீட்டுவது போன்றது. அன்றி புகைப்படங்கள் போன்றவை அல்ல.’

வீரகேசரி பத்திரிகையின் ஞாயிறு  வெளியீட்டில் குரல் பத்தியில் நான் எழுதிய கட்டுரை. சில படங்களுடன்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0

Read Full Post »

>

“உள்ளை வாங்கோ டாக்டர்”

அவரது மகன் மரியாதையுடன் அழைத்தார்.

ஆடம்பர மார்பிள் பதித்த நீண்ட விசாலமான தரை, அலங்கார ஷோபாக்கள், உயர்ந்த பரந்த ஷோகேஸ்கள், அதி அலங்கார மின்சார லையிட்டுக்கள், வீடியோ, ஓடியோ நிறைந்த வரவேற்பறையைத் தாண்டி ஆடம்பர அறைகளைத் தாண்டி, நவீன சமையலறை, ஸ்ரோர்ஸ் அறைகளையும் தாண்டிப் போய்க் கொண்டே இருந்தோம்.

கடைசியாக வீட்டின் பிற்பகுதியை அடைந்தோம்.

விசாலமான வீட்டின், ஒதுக்குப் புறமான பின் வராந்தையை அரைச் சுவராலும், இரும்புக்கம்பி வலைகளாலும் அவசரமாக அடைத்துத் தயாராக்கிய அறை அது.

நாயை அடைத்து வைக்கும் அறைக்கு என்னை அழைத்து வருகிறாரா?

மூத்திர நாற்றம், மூக்கினைத் தாக்க தயங்கியே அடியெடுத்து வைத்தேன்.

அது முதியவர் அறை!!

பழைய பலகைக் கட்டிலில் குறண்டியபடி கிடந்தார் அவர்.

தலையணையைத் தவிர படுக்கை விரிப்புகளோ மெத்தையோ எதுவும் இல்லை. கட்டிலின் கீழே ஊறித் தெப்பிக் கிடந்த சாக்கு,மூத்திர நாற்றத்தை வஞ்சகமின்றிப் திசையெங்கும் பரப்பிக் கொண்டிருந்தது!

அறை நிறைய இலையான்கள். அவரையும், கீழே கிடந்த சாக்கையும் மாறி மாறிச் சுவைத்து, மகிழ்ந்து பறந்து திரிந்தன.

கொசுக்கள் உற்சாகமாகக் கலைந்து கலைந்து மொய்த்தன!

அறைக்குள் நுழையவே கால்கூசியது!

மனம் தயங்கியது.

ஆயினும் கடமை உணர்வுடன் அவரருகில் சென்றேன்.

நோயின் வேதனையிலும் பறக்கணிப்பின் மனத் துயரிலும் மூழ்கிக் கிடந்த முகத்தில், என்னைக் கண்டதும் சோகம் கலந்த புன்னகை!

“கோடி கோடியாகச் சம்பாதித்த நான், இப்போ ஒதுக்கித் தள்ளப்பட்டுக் கிடக்கும் நிலையைப் பாருங்கள்” என்று சொல்வது போலிருந்தது. அந்த முன்னைய நாள் மதிப்புக்குரிய பெரிய மனிதர்!

கனத்த மனதுடன் அவரைப் பரிசோதித்து மருந்துகைளக் கொடுத்து, ஆறுதல் கூறிவிட்டுப் புறப்பட்ட நான், மகனிடம் அவரை ஒதுக்குப்புறமாக, ஒதுக்கி விட்டதற்கான காரணத்தை விசாரித்தேன்.

“ஐயாவுக்கு சலம், மலம் போறது தெரியாது.
பெரிய மனிசர் வந்து பிழங்கிற இடத்திலை அவரை எப்படி வைச்சிருக்கிறது. வெக்கந்தானே.

பின் விறாந்தை என்டால் ஆக்களின்ரை கண்ணிலை படாது. சலம் மலம் போனாலும் அப்படியே வெளியிலை கழுவி விட்டிடலாம்” என்றார்.

பெத்து வளத்து ஆளாக்கி, உயர்ந்த நிலையில் உங்களை வைச்சிருக்கிற ஐயாவை வீட்டுக்கை வைச்சிருக்கிறது வெக்கமோ?|எனக் கேட்க வேண்டும் போலிருந்தது.

தமிழர்களாகிய நாம் நீண்ட கலாச்சார பாரம்பரியத்தில் வந்தவர்கள். பெற்றோரையும், முதியவர்களையும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து, அவர்களை அன்புடன் பேணிப் பாதுகாப்பவர்கள் என்று பெருமைப்படுகிறோம்.

காசியப்பனைப் போல் பெற்ற தந்தையையே சுயலாபத்திற்காக, சுற்றவரச் சுவர் எழுப்பி, உயிரோடு மூடிக் கட்டி மூச்சடைக்கக் கொன்றவர்கள் எமது பரம்பரையில் கிடையாது என்று சரித்திரச் சான்றுகளில் சமாதானம் அடைகிறோம்.

ஆனால் பெற்றோர்களைச் சரியாகப் பேணிப் பாதுகாக்காமல் விடுவதாலோ, அல்லது உரிய காலத்தில் உரிய வைத்திய வசதிகளைக் கொடுக்காமல் விடுவதாலோ, அநியாயமாகச் சாகவிடுபவர்களை பற்றி என்ன சொவ்வது?
 

Geoffrey Madan  ஒரு கருத்துச் சொன்னார்.
“ஆம் அவர் உயிருடன் இருக்கிறார். அவரைச் சட்டபூர்வமாகப் புதைக்க முடியாது என்ற அளவில் மாத்திரம்”.
இத்தகைய மனநிலையோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

கனவாகிப் போன வாழ்வு
 80களில் சிரித்திரனில் எழுதி 90 களில் மல்லிகை வெளியீடாக வந்த ‘டொக்டரின் டயறி’ என்ற எனது நூலில் வெளியான கட்டுரையிலிருந்து ஒரு பகுதி

Read Full Post »

>

இலங்கை இலக்கிய, விமர்சன, முற்போக்கு அணி ஆகியவற்றில் என்றும் மறக்க முடியாத தடங்களை விட்டுச் சென்றவர்  பேராசிரியர் கைலாசபதி ஆகும். அவரது நினைவாக, நினைவுப் பேருரைகளை வருடா வருடம் கைலாசபதி நினைவுக் குழு மற்றும் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்  நடாத்தி வருகின்றனர்..

இவ்வருட கைலாசபதி நினைவுப் பேருரையைச் செய்தவர், கொழும்பு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் அவரது மகளான கலாநிதி பவித்ரா கைலாசபதி ஆகும்.

பேராசிரியர் சபா ஜெயராசா தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் பேராசிரியர் க.கைலாசபதி யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், துணைவேந்தராகவும் கடமையாற்றிய காலத்தில் ஆற்றிய பெரும் பணிகளை நினைவு கூர்ந்தார்.

இன்று பல்கலைக்கழகங்களின் தர மேம்பாடு பற்றிப் பேசப்படுகிறது. ஆயினும் பேராசிரியர் கைலாசபதிபணியாற்றிய காலங்களில் யாழ் பல்கலைக்கழகம் உயர்தரத்தில் இருந்தது என்றார். அத்துடன் ராமநாதன் நுண்கலைக் கல்லூரியாக இருந்ததை யாழ் பல்கலைக்கழகத்துடன் இணைத்தது மிகப் பெரிய சேவையாகும். இன்று பலர் B Fine arts பட்டம் பெற்று இருக்கிறார்கள் எனில் அதற்கு அத்திவாரம் இட்டவர் அவரே ஆவர் என்றார்.

தான் அதன் தலமைப் பொறுப்பை ஏற்றிருந்த காலங்களில் இவை தொடர்பான பல்கலைக் கழக ஆவணங்களைப் பார்த்த போது ராமநாதன் நுண்கலைக் கல்லூரியை தரம் உயர்த்துவதற்கு அவர் எடுத்த முயற்சிகள் தெரிய வந்தது என்றார்.

இன்று யாழ்பல்கலைக்கழக நூலகம் தென்கிழக்கு ஆசியாவிலேயே சிறந்த நூலகம் எனப் போற்றப்படுகிறது. இதற்கும் முக்கிய பங்கு வழி வகுத்தவர் அவர்தான்.

முக்கியமாக மாற்றுவழிச் சிந்தனையுள்ள நூல்களை அதற்குக் கொண்டு வந்தார். உளவியல் என்பது தனிமனிதம் பற்றிய விடயமாக இருந்த போது அதற்கு சமூக வலுக் கொடுக்கும் சகத்தியாக மார்க்சிய  உளவியல் வந்தது. மார்க்சிய  உளவியல் தொடர்பான நூல்களை யாழ்பல்கலைக்கழக நூலகத்திற்கு கொண்டுவர வழி வகுத்தார்.

தனிப்பட்ட ரீதியில் தான் பணம் கொடுத்து வாங்கிய நூல்கள் பலவற்றைத் தான் படித்து முடித்த பின்னர் யாழ்பல்கலைக்கழக நூலகத்திற்கு அன்பளிப்பு செய்வது அவரது வழக்கமாக இருந்தது என்றார். மிக வித்தியாசமான முறையில் இயங்கி தமிழில் ஆழ்ந்த பற்றும் அதன் வளர்ச்சியில் பங்காளியாகவும் இருந்து அழியாத சுவடுகளைப் பதித்தவர் பேராசிரியர் கைலாசபதி என விதந்து போற்றினார்.

நினைவுப் பேருரை ஆற்ற வந்த செல்வி பவித்ரா கைலாசபதி பற்றிக் குறிப்பிடும் போது மனித வள அபிவிருத்தி (Human resource development – HRD)துறையில் புலமையாளர் எம் மத்தயில் மிகக் குறைவு. இவர் அத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவராவார்.கொழும்பு பல்கலைக் கழகத்தில் செல்வாக்குப் பெற்ற விரிவுரையாளராக இருக்கிறார்.

கலாநிதி பவித்ரா கைலாசபதி ‘இலங்கையின் மனித வள அபிவிருத்தி :- இரு உழைப்பாளி குடும்பம் பற்றிய கண்ணோட்டம்’ என்ற பொருளில் நினைவுப் பேருரையை ஆற்றினார்.

இலாப நோக்குள்ள நிறுவனங்கள் மட்டுமின்றி சேவை நிறுவனங்கள், அரச நிறுவனம் போன்ற அனைத்திற்கும் அவற்றின் செயற்பாட்டிற்கு மனித வளம் அவசியம்.

தொழிலில் வெற்றி பெற்றோருக்கு மனிதவளத்தின் முக்கியத்துவம் புரியும். அதனால்தான் முன்னாள் தொழிலதிபரான கென் பாலேந்திராவிடம் உங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கு காரணம் யார் என்று கேட்டபோது “மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவது காரணம் மக்கள், இரண்டாவது காரணம் மக்கள், மூன்றாவது காரணம் மக்கள்” என்றார். மக்கள் என அவர் குறிப்பிட்டது தனது நிறுவனங்களில் பணிபுரியும் மனித வளத்தையே ஆகும்.

அதே போல மைக்கிரோ சொப்ட் நிறுவன பில் கேட்சிடம் கேட்ட போது அவர் கூறினார் “Greatest asset is the people who out of the building daily after their work” அவர் குறிப்பிட்டது தனது நிறுவன ஊழியர்களான மனித வளத்தையே.

மனிதனானவன் தன் மீது கவனிப்பு இருக்கும் போது அவனது செயலூக்கமும் உற்பத்தி திறனும் அதிகரிக்கிறது. Hawthorne Effect ஆளணி முகாமைத்துவத்தில் கவனிப்புப் பெறுகிறது. மனிதனை இயந்திரமாகக் கணியாது உணர்வுள்ள மனிதனாக மதிக்கும்போது தொழில் திறன் அதிகரிக்கிறது. 


அரசுகளும் வேலை நேரக் கட்டுப்பாடு, ஓய்வு நேரம், மகப் பேற்று லீவு, போன்ற பலவற்றையும் சட்டங்கள் மூலம் அங்கீகரித்துள்ளன. இவை யாவும் மனித வளத்தை சரியான முறையில் முகாமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளே என்றார்.


தொடர்ந்து பேருரையின் முக்கிய பகுதியான இரு உழைப்பாளி குடும்பம் பற்றிய பகுதி சுவார்சமானது. இன்று குடும்பங்களில் கணவன், மனைவி என இருவர் உழைப்பாளிகளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இருவர் தொழில் செய்ய வேண்டிய நிலைக்கான காரணங்கள் என்ன?

 • பெண் கல்வி விருத்தியடைந்ததால் கல்வி கற்ற பெண்கள் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
 • இன்றைய வாழ்வுக்கு அதிக பொருளாதாரம் தேவை. இதனால் ஒருவர் உழைப்பது போதாது. இருவரும் உழைக்க வேணடியது அவசியமாயிற்று.

ஆயினும் இதனால் பல புதிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியது அவசியமாயிற்று.

 • இருவரும் வேலைக்கு செல்வதால் குடும்ப வேலைககளைச் செய்வதற்கு நேரம் குறைந்து விட்டது. 8 மணி நேர வேலை, போக்குவரத்து நேரம், தூக்கம் போக குறைந்தளவு நேரமே வீட்டு வேலைகளுக்கு ஒதுக்க முடிகிறது.
 • அதிலும் குழந்தைகள் உள்ள குடும்பம் எனில் வீட்டு வேலையின் கனம் அதிகரிக்கிறது. பாடசாலைக்கு கூட்டிச் செல்லல், பாடம் சொல்லிக் கொடுத்தல், அவர்களுக்கு துணையாக இருப்பது, அவர்கள் நலனைக் கவனிப்பது எனப் பல
 • இதனால் கணவன் மனைவி ஆகிய இருவரும் வீட்டு வேலைகளில் ஈடுபட வேண்டிய அவசியம் நேருகிறது. ஆயினும் பெரும்பாலான வீட்டு வேலைகள் பெண்கள் தலையிலேயே விழுகிறது.
 • சமையல், துணி துவைத்தல், குழந்தை பராமரிப்பு, வீடு கூட்டுதல்  போன்ற பலவும் அவளின் பணியாக இருக்கிறது. இருவரும் வேலையால் வீடு வந்ததும் கணவன் ரீவீ அல்லது கணனி முன் உட்கார அவளே தேநீர் தயாரிப்பு முதல் அனைத்து வேலைகளிலும் ஈடுபட நேர்கிறது. கணவனுக்கு வீட்டில் சில திருத்த வேலைகள், தண்ணீர் கரண்ட் பில் கட்டுதல், வாகனப் பராமரிப்பு என சிலவே இருக்கின்றன.
 • பாலியல் ரீதியான வேறுபாடு ஏற்படுகிறது. அதிக சுமை பெண் தலையிலேயே.
 • அதனால் கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
 • கலியாணம், மரணச் சடங்கு போன்ற பல சமூகக் கடன்களை நிறைவேற்றுதில் சிரமம் ஏற்படுகிறது.
 • அதிருப்தி நிலை தேன்றுகிறது. 
 • போதைப் பொருள் பாவனை, மன அழுத்தம், மனச் சோர்வு போன்றவற்றிக்கு இட்டுச் செல்கிறது.
 • வேலையில் அதிருப்பதி ஏற்பட்டால் திடீரென வேலைக்குச் செல்லாமை, அடிக்கடி லீவு எடுப்பது போன்ற சிக்கல்கள் தோன்றுகினறன.
 • பாலியல் பாத்திரம் தொடர்பான நம்பிக்கையீனம் ஏற்படலாம்.

கொழும்பு பல்கலைக் கழக Business administration Cource தொடர்பான ஆய்வில் பட்டப் படிப்பிற்கான நிலையில் (under graduate level) பெண்களே அதிகளவில் கற்க வந்தார்கள். ஆனால் பட்ட மேற்படிப்பு (Post Graduate level) என வரும்போது மிகக் குறைந்தளவு பெண்களே தோற்றினார்கள்.

காரணம் வெளிப்படையானது. பெண்கள் வேலைக்குப் போனாலும் தமது தொழிலில் தம்மை மேம்படுத்த கல்வி கற்க முடியாத சூழலே நிலவுகிறது. ஏனெனில் இத்தகைய பட்ட மேற்படிப்புகள் பொதுவாக வார இறுதி நாட்களிலேயே நடைபெறுகின்றன. வீட்டு வேலைகளுக்கு அப்பால் தமது மேற் படிப்பிற்கு பெண்களால் நேரம் ஒதுக்க முடியாது உள்ளது.

பெருந்தோட்ட துறையில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வில் குழந்தை பராமரிப்பு நிலையங்கள் உள்ள தோட்டங்களில் பெண்கள் வேலைக்கு வராமல் இருப்பது குறைவு என்பது தெரிய வந்தது. ஏனெனில் குழந்தை பராமரிப்பின் ஒரு பகுதியை அத்தகைய நிலையங்கள் பொறுப்பேற்றதால் அவளால் தனது வேலையில் கூடியளவு ஈடுபட முடிந்தது.

எவ்வாறு உதவலாம்

இருவரும் தொழில் செய்ய நேரும்போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

 • கணவன் மனைவி இடையே நெருங்கிய உறவின் மூலம் பல பிரச்சனைகளதைத் தீர்க்கலாம். முக்கியமாக வேலையால், கணவன் மனைவிக்கு ஏற்படக் கூடிய பிரச்சனைகள் பற்றி வெளிப்படையாக அவளிடம் கேட்டறிந்து உதவி செய்யலாம். உதாரணமாக பாத்திரம் கழுவுதல் வீடு கூட்டுதல் போன்று சில பணிகளையாவது தான் செய்து கொடுத்து அவளது வேலைப் பளுவைக் குறைக்க உதவுவது அவசியம்.
 • திருமணப் பொருத்தம் பார்க்கும்போது சாத்திரப் பொருத்தம் தேவையில்லை. கருத்தியல் (Ideology) பொருத்தம் எப்படி என்பதைப் பார்க்க வேண்டும். அவர்களிடம் புரிந்துணர்வு இருக்க வேண்டும். அதாவது குடும்ப வாழ்வில் கணவன் மனைவியின் பங்குகள் பற்றி திறந்த மனப்பான்மை உள்ள கணவன் விரும்பத்தக்கது.
 • பெற்றோரின் உதவி. கணவன் அல்லது மனைவியின் பெற்றோர் கூட இருந்தால் குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலைகள் ஆகியவற்றில் இருவரும் உழைக்கும் குடும்பத்தின் சுமுகமான நடப்பிற்கு உதவும். ஒரு ஆய்வின்போது இத்தகைய குடும்பங்களில் 75% பெற்றோர் கூட இருப்பது நன்மையளித்ததாகத் தெரிகிறது.
 • குழந்தை பராமரிப்பு நிலையங்கள். இது இருந்தால் பெற்றோர்கள் தமது குழந்தைகளின் பொறுப்பை அங்கு விட்டுவிட்டு நிம்மதியாக தொழில் செய்ய முடியும்.
 • நெகிழ்வு நேரம். குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்குப் போய் குறிப்பட்ட நேரத்தில் திரும்ப வேண்டும் என இல்லாமல் நெகிழ்வு நேரம் உதவும். உதாரணமாக ஒரு மணி நேரம் தாமதமாகப் போய் மாலையில் ஒரு மணிநேரம் கூடுதலாக வேலை செய்வதின் மூலம் உதவலாம்.
 • கூடுதலான நேரம் வேலை செய்பவர்தான் உண்மையான ஊழியர் என்ற எண்ணம் பல மேலதிகாரிகளுக்கு இருக்கிறது.ஆயினும் குறைந்த நேரத்தில் அவ்வேலையை நிறைவு செய்து விட்டு மிகுதி நேரத்தை குடும்பத்துடன் செலவளிக்க உதவலாம். இதன் மூலம் அவர்களின் பணித் திறனை அதிகரிக்கவும் முடியும்.
 • சாதகமான சட்டங்கள். உதாரணமாக maternity leave, Paternity leave, Family leave போன்றவை உதவும்
 • பகுதி நேர வேலை. பெண்களால் முழு நேர வேலைக்குப் போக முடியாத நிலையில் அவர்களுக்கு பகுதி நேர வேலை கொடுப்பதன் மூலம் வேலைக்குப் போகும் மனநிறைவைக் கொடுப்பதுடன் குடும்பத்தைக் கவனிக்கவும் முடியும்.
 •  அவுஸ்திரேலியாவில் பல இவ்விடயத்தில் பல முற்போக்கான நடைமுறைகள் உள்ளன. பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்கள் ஆரம்பிப்பதற்கு நிதியுதவியை அரசாங்கம் செய்கிறது. ஊக்கப்படுத்துகிறது. அத்துடன் அவற்றின் செயற்பாடுகள் பற்றி கண்காணிப்பு செய்யப்படுகிறது. இதனால் அங்கு அதிகளவு பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடியதாக இருக்கிறது.

இறுதியாக கலாநிதி பவித்ரா கைலாசபதி இந்த நினைவுப்பேருரை பற்றிக் குறிப்பிடும்போது தான் இதில் பேசுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.

” உங்கள் எல்லோருக்கும் கைலாசபதி ஒரு நண்பர், தோழர், அல்லது விமர்சகராக இருக்கிறார். ஆனால் அவர் எனக்கு அப்பா. இந்த வகையில் நான் அவரது நினைவுப் பேருரையை செய்யக் கிடைத்த சந்தர்ப்பத்தை மிகவும் பெருமைக்குரிய, மனநிறைவை அளிக்கும் சம்பவமாகக் கருதுகிறேன்”

உள்ளத்தைத் தொடும் இந்தச் சிறுகுறிப்புடன் அவர் தனது உரையை நிறைவு செய்த போது கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரும் ஒரு கணம் மன நெகிழ்வுற்றதை உணரக் கூடியதாக இருந்தது.  அவரோடான தம் உறவை மீளநினைந்து உறவின் புத்துயிர்ப்பின் ஈர்ப்பில் இருக்கையிலிருந்து எழ மறந்து நினைவுகளில் ஆழ்ந்தனர்.

Read Full Post »

« Newer Posts - Older Posts »