Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மரபணு எடிட்டிங்’ Category

முரண்படும் தார்மீகமும் அறிவியலும்
மரபணுக்களில் கட் அன்ட் பேஸ்ட்

கட் அன்ட் பேஸ்ட், வெட்டி ஒட்டுதல் பற்றி எழுத்துலகில் நன்கு தெரியும். அங்கொன்று இங்கொன்றாக வேறுவேறு கட்டுரைகளில் வாக்கியங்களை வெட்டி அவற்றை தமக்கு ஏற்றவாறு ஒட்டி ஓரு புதுக் கட்டுரையை உருவாக்கிவிடுவார்கள் சில கில்லாடிகள்.

அதைத் தங்கள் சொந்த ஆக்கமாக வெளிக்காட்டிப் பந்தா காட்டுவார்கள். இலக்கிய விஞ்ஞான மருத்துவக் கட்டுரைகளிலும் இவை தாரளாமாக நடக்கிறது. குறுக்கு வழியில் புகழ் தேடும் மலினப் பிரகிதிகள் அவர்கள்.

cut and paste A4 sml
இப்பொழுது விஞ்ஞானிகள் ஒரு புதுவிதமான கட் அன்ட் பேஸ்ட் செய்திருக்கிறார்கள். இந்தச் செய்தி வெளியானதும் அவர்களுக்கு சமூகத்தில் அவமானம் ஏற்படவில்லை. மாறாக அறிவியல் உலகில் பெயரும் புகழும் கிடைத்திருக்கிறது.

ஆனால் அவர்கள் வெட்டி ஒட்டியது சாதாரணமானவர்களது கை எழுத்துகளை அல்ல. இறைவனின் கையெழுத்தை. அல்லது இயற்கையின் கையெழுத்தை என்போமா?

தெளிவாகச் சொன்னால் மற்றவர்கள் தலை எழுத்தை நிர்ணயிக்கும் மரபணுக்களை (ஜீன்களை) ஆகும்.

மரபணு எடிட்டிங்

மரபணுபை வெட்டி ஒட்டியது மனிதர்களில் அல்ல. விலங்குகளான மந்திகளில் (macaques) ஆகும். அவ்வாறு செய்யப்பட்டதற்குக் காரணம் என்ன? சில நோய்களை, முக்கியமாக மனித இனத்தை அல்லற்படுத்திக் கொண்டிருக்கும் சில நோய்களை அந்த விலங்குளில் இந்தக் கட் அன்ட் பேஸ்ட் முறையில் செயற்கையாக உண்டு பண்ணுவதற்காகவே.

Transposagen_GeneEditing2449961190

 

 

உதாரணமாக பார்க்கின்சன் நோய், அல்சைமர் நோய் போன்றவை இன்று சரியான மருத்துவம் இல்லாததால் பல மனிதர்களின் மூத்த வயது வாழ்வை நரகமாக்குகின்றன. பராமரிப்பர்கள் கையறு நிலையில் திணறுகிறார்கள்.

இத்தகைய நோய்களை மனிதர்களை ஒத்த விலங்குகளில் வரச் செய்வது அந்நோய் பற்றிய நுணுக்கமான அறிவைப் பெறுவதற்காக ஆகும். நோயுற்ற அம் மிருகங்களை அவதானிப்பதும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகளை நவீன ஆய்வு உபகரணங்கள் மூலம் தெளிவாக கண்டறியவும் முடியும்.

இதன் நீட்சியாக அந்நோய்களைக் குணமாக்கக் கூடிய நவீன புதிய திறமையான சிகிச்சை முறைகளை பரீட்சிக்கவும் முடியும் என நம்புகிறார்கள்.
ஆச்சரியகரமான இந்த அதிநவீன மருத்துவ ஆய்வு நடாத்தப்பட்டது அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ அல்ல. சீனாவில் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. மிருக ஆய்வு பற்றிய இறுக்கமான சட்ட திட்டங்கள் சீனாவில் இல்லாதது காரணம் என்று சொல்கிறார்கள். இருந்தபோதும் இது வரவேற்கத்தக்க விஞ்ஞானப் பாய்ச்சல் என்பதில் சந்தேகம் இல்லை.

Macaque-monkey-twins-Mito-001

கருவுற்ற குரங்கு முட்டைகளில் இரண்டு மரபணுக்களை மரபணு எடிட்டிங் முறையில் (genome editing ) மாற்றி வைத்தார்கள். பின்னர் இவற்றை வாடகைத் தாய்மார்களின் கருப்பையில் வைத்தார்கள். இதன் பயனாக இருண்டு வால் நீ;ண்ட குரங்குக் குட்டிகள் பிறந்துள்ளன. ஆனால் 5 வாடகைத் தாய்மாரின் கருப்பையில் வைத்தவை சிதைந்துவிட்டன. இன்னும் நான்கு வாடகைத் தாய்மார் கருப்பையில் வளர்கின்றனவாம்.
இந்த மரபணு எடிட்டிங் செயன்முறையை Crispr/Cas9 என்கிறார்கள். Nanjing Medical University செய்யப்பட்ட இந்த ஆய்வு பற்றிய தகவலானது Cell என்ற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

பயன்பாடுகள்

இந்த ஆய்வானது மரபணு விஞ்ஞானிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. முக்கிய காரணம் என்னவென்றால் இந்த முறையின் போது ஒரு மிருகத்தில் உள்ள தவறான அல்லது நோயை உண்டாக்கக் கூடிய மரபணுவை கலங்களிலிருந்து துல்லியமாக அகற்றி அதற்கும் பதிலாக நல்ல மரபணுவை மாற்ற முடிகிறது.

CAS9-Genome-Editing

இரண்டாவது காரணம் இது வரை நோய்கள் பற்றிய ஆய்வுகளுக்கு சுண்டெலிகளையே பயன்படுத்தினர். ஆனால் சுண்டெலிகளின் மூளையானது மனித மூளையிலிருந்து மிகவும் வேறுபட்டது என்பதால் மூளை பற்றிய ஆய்வுகளுக்கு பொருத்தமானது அல்ல. ஆனால் குரங்கு மூளை பெருமளவு பொருந்தி வரக் கூடியதாகும் என்பதாலாகும்.
புதிய மரபணு சிகிச்சை முறைகளை மனிதர்களுக்கு அளிப்பதற்கு முன்னர் பரீட்சித்துப் பார்ப்பதற்கு எலிகளையும் சுண்டெலிகளையும் விட குரங்குகள் மிகவும் சிறந்ததென விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

உதாரணமாக ஸ்டெம் சிகிச்சை முறையின் போது கலங்களை மூளைக்குள் ஒட்ட வைத்து அவை எவ்வாறு செயற்படுகின்றன என்பதை அறிய சுண்டெலிகளை விட குரங்கு மூளைகள் பொருத்தமாக இருக்கும். இந்த Crispr முறையானது மற்றெந்த மரபணு சிகிச்சை முறைகளையும் விட நுணுக்கமான மரபணு மாற்றங்களைச் செய்ய உதவுகிறது என நம்புகிறார்கள்.

எதிர்க் குரல்கள்

விஞ்ஞான ரீதியான ஆதரவு மிகுந்துள்ள போதும் சமூக ரீதியாக பலர் எதிர்க் குரல் எழுப்புகிறார்கள். மிருக வதை எதிர்ப்புக் குழவினர், விலங்குகளில் பரிசோதனைகளுக்கு எதிர்ப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல தரப்பினரும் தமது அதிர்ப்தியை வெளியிட்டுள்ளனர்.

அறிவு மிக்கதும், உணர்ச்சிகள் நிறைந்ததுமான மிருகங்களை இவ்வாறு ஆய்வுகளுக்குப் பயன்படுத்தி நோயுள்ள மிருகங்களை உருவாக்குவது தார்மீக ரீதியாகத் தவறானாது என அவர்கள் வாதிடுகிறார்கள்.

  • உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் ஏற்படும் துன்பங்கள் அவற்றை மிகவும் பாதிக்கும்.
  • மரபணு மாற்றம் பெற்று துன்பப்படும் இந்த விலங்குகள், அவ்வாறு மாற்றம் பெறாத தமது சகாக்களைக் காணும் போதும் அவற்றிடையே வாழ நிர்ப்பந்திக்கபடும்போதும் எதிர்கொள்ள வேண்டிய உளவியல் தாக்கங்கள் அபரிதமாக இருக்கும்.

இவ்வாறு நோயுற்ற மிருகங்களை உருவாக்குவதற்கு விஞ்ஞானிகளுக்கு கொடுக்கப்படும் அதிகாரமானது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு கிடைப்பது போல எல்லையற்றது. தடைகள் இல்லாதது. சொந்த நலன்களுக்காக ஏனைய உயிரனங்களைப் பலியிடுவதற்கு ஒப்பானது.

ஊனமுற்றதும் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய மிருகங்கள் உருவாதற்கும் வழிவகுக்கும். அவை வேண்டும் என்று செய்யப்படாவிட்டாலும் கூட மரபணு மாறு;றுச் சிகிச்சையின் போது எதிர்பாராமல் நிகழலாம் என்பதை மறுப்பதற்கில்லை.

மனிதர்களில் நோயைத் தீர்க்க முனைபவர்கள் வேண்டும் என்றே விலங்குகளில் நோயை உண்டாக்குவது எந்த வழியில் நியாயமாகும என்ற கேள்வியும் எழுகிறது அல்லவா?.

மாற்று வழிகள் உண்டா?

குரங்குகள் மனிதர்களை ஒத்தவை என்ற போதும், நோயுறுவதும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும், அதற்கான சிகிச்சைகளும் முற்று முழுதாக மனிதர்களை ஒத்ததாகவோ அவர்களுக்கு பொருத்தமானதாகவோ இருக்கப் போவதில்லை.

எனவே மிருகங்களைப் பயன்படுத்தாமலே இத்தகைய மரபணு எடிட்டிங் ஆய்வுகளை முன்னெடுக்க முடியுமா? மனிதர்களிலேயே செய்ய முடியுமா?
இல்லை. அது தார்மீக ரீதியாகவோ சட்ட ரீதியாவோ செய்ய முடியாதது.
ஆனால் சில மனித உறுப்புகளை மட்டும் இந்த மரபணு எடிட்டிங் முறையில் உருவாக்கி ஆய்வுகளையும் சிகிச்சைகளையும் முன்னெடுக்க முடியும் என்கிறார் ஹார்வட் பல்கலைக் கழக மரபணுத் துறைப் பேராசிரியரான George Church அவர்கள்.

இந்த முறையில் ஏற்கனவே ஒரு ஆய்வு வெற்றியளித்துள்ளமை குறிப்படத்தக்கது. HIV கிருமித் தாக்கமானது ஒரு மிக பெரிய சவாலாக இருப்பதை அறிவோம். ஆனால் HIV கிருமி மனித உடலின் நோயெதிர்புக் கலங்களிற்குள் நுழைவதற்கு CCR5 என்ன மரபணு மனித உடலில் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த மரபணுவை அகற்றுவதை பரீட்சார்தத் ரீதியாக செய்துள்ளமை குறிப்படத்தக்கது. இதன் மூலம் HIV தொற்றும் ஆபத்தற்ற மனிதர்களைப் பிறக்கச் செய்ய முடியும்.

fsccr5a
“இனி என்பாடு வாசிதான்”  என பாதுகாப்பற்ற பாலுறவுகளில் ஈடுபட முனையாதீர்கள். இது செயன் முறைக்கு வர பல வருடங்கள் பிடிக்கலாம்.
அண்மையில் (பெப்ருவரி 2014ல்) மனித சுவாசப்பையை செயற்கை முறையில் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளார்கள் என்ற செய்தியை CNN வெளியிட்டிருந்ததை நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் அது மரபணு எடிட்டிங் முறையிலானது அல்ல.
எவ்வான போதும் மனித திசுக்கள் மற்றும் கலங்களைக் கொண்ட மாதிரி உறுப்புக்களை (model systems based on human tissues and cells )உருவாக்கி ஆய்வுகளைத் தொடர்வதே தார்மீக ரீதியாகவும் உயிரியல் ரீதியாகவும் இயற்கையுடன் முரண்படாது அறிவியலை முன்னகர்ந்த உகந்ததாக இருக்கும் என நம்புகிறேன்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.0.0.0

Read Full Post »