நுண்ணிய நரம்புக் கலங்கள் முதல் செயற்கை மூளை வரை
காதலின் சின்னமாக மூளை
‘குற்றம் செய்தவர் மீண்டும் குற்றம் செய்வாரா?’, ஒருவரது அரசியல் சாய்வு எந்தப் பக்கம் இருக்கக் கூடும்’ ‘ஓரு குறிப்பிட்ட விடயத்தில் ஒருவர் எவ்வாறு முடிவு எடுப்பார்’
இவை பற்றி யாரால் என்ன சொல்ல முடியும். மற்றவர் மனதில் உள்ளதை எம்மால் எவ்வாறு கண்டறிய முடியும். அவராகச் சொன்னல்தான் உண்டு. அல்லது கேட்டு அறிய வேண்டும்
கள ரீதியாக இல்லாமல் விஞ்ஞான பூர்வமாக இந்த விடயங்கள் பற்றி அண்மையில் ஆய்வுகளாக செய்யப்பட்டிருந்தன. அவர்களது சமூக மற்றும் தனி நபர் செயற்பாடுகள் அடிப்படையாகக் கொண்டு அல்ல. அவர்களது மூளைகளின் செயற்பாடுகளை நுணுக்கமாக ஆராய்ந்து செய்யப்பட்டவை. அறிய ஆச்சரியமாக இருக்கிறதா?
உணர்வோடு சம்பந்தப்பட்ட விடயங்களை பௌதீகமான மூளைக்குள் ஆய்வது பற்றி சாதாரண மனிதர்கள் மட்டுமின்றி பல அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகளும் ஐயங்களை எழுப்ப்pனர்.
மனசும் மூளையும்
அட்டக் கத்தி திரைப்படம் வந்திருக்கிறது.. அற்புதமானது என்று சொல்ல முடியாது. ஆனால் மிக வித்தியாசமானது. ‘காதல் தெய்வீகமானது. உண்மையான காதல் ஒரு முறைதான் வரும், காதல் இல்லையேல் சாவு’ போன்ற பிம்பங்களை உடைத்துக் கொண்டு வந்திருக்கும் சினிமா அது.
நாயகன் ஒவ்வொரு முறை காதல் வயப்படும்போதும் அவனது காதலின் அடையாளமாக இருதயத்தை தாங்கிய அம்பு காதலியை நோக்கி சிட்டெனப் பாயும்.
காதல் என்றால் உணர்வுடன் தொடர்புடையது. ஆனால் காதலின் சின்னமாக ஏன் இருதயத்தை வைத்திருக்கிறோம். காதலில் நாம் இழப்பது, பெறுவது, அனுபவிப்பது எல்லாமே உணர்வுகளுடன் தொடர்புடைய மூளையால்தானே.
தர்க்க ரீதியாகச் சிந்தித்தால் மூளைதான் காதலின் சின்னமாக அமைய வேண்டும்.
இந்தச் சிந்தனை முரணுக்குக் காரணம் எம்மிடையே ஆழப் பதிந்திருக்கும் ஒரு எண்ணம்தான்.
ஒரு உதாரணம் பார்க்கலாம். வழமையான தமிழ்த் திரைப்படங்களின் கதைதான். ஒரு அழகான பெண். மிகவும் வசதியுள்ளவள். ஆனால் அவள் காதலிப்பதோ ஒரு விளிம்பு நிலை வாலிபனை. ‘தனது மூளை அவனை மறக்கச் சொல்கிறது, மனசோ அவனோடுதான் உறவாடுகிறது’ என்பாள். ஆம் மூளை வேறு மனசு வேறு என்ற எண்ணம் பலரிடையே ஆழ வேரூன்றிவிட்டது.
ஆனால் மனசு மூளைக்குள்தான் இருப்பது விஞ்ஞான பூர்வாகத் தெளிவாகப் புரிந்து நீண்ட காலமாகிவிட்டது.
விஞ்ஞான ஆய்வுகள்
இருதயத்தையும், சிறுநீரகத்தையும், ஈரலை மாற்றீடு செய்யும் சத்திரசிகிச்சைகள் சர்வ சாதாரணமாகிவிட்டன. ஆனால் இன்னமும் மூளையில் கை வைக்க முடியவில்லை. இதனாலோ என்னவோ! உடல் உறுப்புகள் பற்றிய நுண்ணிய ஆய்வுகள் இப்பொழுது மூளையின் பக்கம் திரும்பியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
ஐன்சைடினின் மூளையின் அளவும் அவரது அறிவாற்றலும் பற்றிய ஆய்வுகள் சில காலத்திற்கு முன் ஊடகங்களில் அடிபட்டது. அது பற்றிய சர்ச்சைகளும் எழுந்தன. சமகாலத்திலும் எழுதப்பட்டது. மூளையின் அளைவை மட்டும் வைத்துக் கொண்டு அதன் ஆற்றலை புரிந்து கொள்ள முடியாது என்றார்கள். ‘கண்ணாடிக் குடுவைக்குள் உள்ள மூளையை ஆய்வதன் மூலம் மூளையின் செயற்பாட்டை கண்டறிய முடியாது’ என்ற வாதமும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.
உண்மைதான். மூளையானது தனியாக இயங்கும் உறுப்பு அல்ல. அது உடலின் ஒரு அங்கம். உடலுடன் கூடவே நடமாடும் அந்த மூளையானது பல்வேறு அனுபவங்களைப் பெறுகிறது. புதிய மனிதர்களைக் காண்கிறது, புதிய சூழல்களில் இயங்குகிறது.
பிரச்சனைகளை எதிர் நோக்குகிறது, ஆபத்துக்களை எதிர் கொள்கிறது. அதே நேரம் சிரிக்க வைக்கிறது, அழ வைக்கிறது, கோபப்பட்டு ஆக்கிரோஸமாக தன்னைச் சுமக்கும் உடலை எதிர்வினையாற்றவும் வைக்கிறது.
அதன் ஆற்றலை அதன் செயற்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இன்னும் ஆழமாகச் செல்ல வேண்டும். மூளையின் அடிப்படையான நரம்புக் கலங்களை ஆராய வேண்டும். மூளையில் தகவல்கள் எவ்வாறு பரிமாறப்படுகின்றன என்பது பற்றி அறிய வேண்டும். நினைவுகள் எப்படிச் சேமிக்கப்படுகின்றன என்பது தெளிவாக வேண்டும்.
இவற்றையெல்லாம் தனியாக மூளையை வெளியே அகற்றி போர்மலின் போட்டுப் பாதுகாத்து அதை ஆராய்வதில் பயனில்லை. மூளையானது வௌ;வேறு வித்தியாசமான சூழல்களைச் சந்திக்கும் போது பெறும் மாற்றங்களை ஆராய வேண்டும். மூளையை அவ்வாறு ஆராய்வதை நரம்பியல் விஞ்ஞானம் (Neuroscience) என்கிறார்கள்.
இவை மூளையில் பதிவாகின்றன. ஒவ்வொரு உணர்வும் அனுபவமும் கற்கையும் அங்கு பதிவாகின்றன. இதற்குக் காரணம் அது மிகவும் நுணுக்கமான ஒரு உறுப்பு. ‘ஆழ்ந்தகன்ற நுண்ணியனே.. ‘ என சிவனைப் பாடினார் மாணிக்கவாசகர். அது போல நுண்ணியதில் நுண்ணியது.
ஆவ்வாறே அனுபவங்களின்; பதிவுகள் மூளையின் கண்ணுக்கு எட்டா ஏதோ ஒரு பகுதியில் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அங்கு பேணப்படுகின்றன. பின்னொரு நாளில் நினைவு மீட்கும்போது அவை அச்சடித்த காகிதம்போல தகவலை மீளத் தருகின்றன.
நவீன ஆய்வுகள்
இவற்றை ஆராய்வதற்கான வசதிகள் எங்களிடம் உள்ளனவா?
இது சாத்தியமா?
‘இருக்கு.. ஆனால் இல்லை..’ என்ற பாணியில்தான் மழுப்பலாக பதில் சொல்ல வேண்டியுள்ளதா?
நரம்பியல் விஞ்ஞானம் இப்பொழுதான் குறுநடை போட ஆரம்பித்திருக்கிறது.
MRI பற்றி எல்லோருக்கும் தெரியும். எமது மூளைக்குள் இருக்கும் கட்டிகள், குருதிக் கண்டல்கள், பழுதடைந்த மூளையின் பகுதிகள் போன்றவற்றை புகைப்படம்போல எடுத்துக் காட்டுபவை அவை.
ஆனால் இவை போதுமானதல்ல என்பதை எல்லோரும் அறிவர்.
மூளையின் கனபரிமாணத்திற்கு அப்பால் அதன் செயற்பாட்டை ஆராயும்
fMRI Functional magnetic resonance imagingபாவனைக்கு 1990 களில் வந்துவிட்டது. ஒரு பகுதி நரம்புகளின் செயற்பாடுகளுக்கும் அதற்கான குருதி ஓட்ட அளவிற்கும் தொடர்பு உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கிறது இது. அதாவது செயற்படும் மூளையின் குறிப்பிட்ட பகுதிக்கு அதிகளவு இரத்தம் செல்வதைக் கொண்டு இயங்குவது.
இவை ஆரோக்கியமான சாதாரண மனிதர்களின் மூளையை ஆராய்வதில் புரட்சிகரமான முன்னேற்றத்தைக் கொண்டு வந்தது. உணரும்போதும் செயற்படும்போதும் மூளையின் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்ய முடிந்தது. எம் நினைவுகளையும், சிந்தனையையும், முடிவு எடுத்தலையும், அறிவாற்றலையும் மட்டுமின்றி கனவுகளையும் கூட உணர்த்தக் கூடியதாகும்.
இது ஒரு ஆரம்ப நிலை உபகரணமாகும்.. புதிய புதிய கருவிகள் வந்துள்ளன. மூளையின் ஆழத்தில் புதைந்திருக்கும் சில நரம்புக் கலங்களை மிகுந்த துலக்கத்துடன் தூண்டும் வல்லமை கொண்ட ஒளித்துகள் கருவிகளை (optogenetics) இப்பொழுது நரம்பியல் விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். நனொ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மிக நுணுக்கமான அளவுகளை மூளையின் செயற்பாட்டின்போது எடுப்பது விரைவில் சாத்தியமாகும் எனவும் தெரிகிறது.
அடிப்படை அலகுகள்
மூளையின் செயற்பாடுகள் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது மூளையின் மூலக் கலங்களான நியூரோன் (neuron) எனப்படுவதாகும். இவற்றில் எழும் நுண்ணிய மின்அலைகள் கலத்திலிருந்து ஏனைய கலங்களுக்கு பரவுவதன் மூலமே மூளை செயற்படுவதாகக் கருதப்பட்டது.
இவற்றை ஒன்றோடு ஒன்று இணைப்பதாக கிளையல் கலங்கள் (glial cells) இருக்கின்றன. இவற்றில் மூன்று வகைகள் உண்டு. astrocytes, microglia, and oligodendrocytes எனப்படுகின்றன. நியூரோன்கள் மட்டுமே மூளையின் செயற்பாட்டையும் முழுமையாகக் கட்டுப்படுத்துவதாக ஆரம்பத்தில் கருதப்பட்டது.
இந்த கிளையல் கலங்கள் நியூரோன்களை பாதுகாப்பதற்கும், கலங்களின் இடையேயான தொடர்புகளைக் கடத்துவதற்கும் போசாக்குகளைக் கடத்துவதற்கும் மட்டுமே என்றே முன்னர் நம்பினார்கள். ஆனால் ஆஸ்ரோசைட்ஸ் மற்றும் மைக்ரோகிளயா (astrocytes, microglia) ஆகியவை தகவல்களை பதப்படுத்துவதற்கும் உதவுகின்றன என அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.
பல்வேறு நட்சத்திர வடிவம் கொண்ட ஆஸ்ரோசைட்சானது நியூரோன் போலவே இணைப்புகளை ஏற்படுத்தி சமிக்கைகளை தமக்கிடையேயும், நியூரோன்களுக்கும் அனுப்பும் ஆற்றல் கொண்டவை. ஆயினும் தானாகவே மின் சமிக்கைகளை உற்பத்தியாக்க கூடியவை அல்ல.
எலிகளில் செய்யப்பட்ட ஆய்வின் படி ஒவ்வொரு ஆஸ்ரோசைட்சும் பல்லாயிரக் கணக்கான இணைப்புகளுடாக தகவல் பரிமாற்றத்தை ஒழுங்கு பண்ணக் கூடியவையாகும். அத்துடன் மயிர்த்துழைக் குழாய்கள் (capillaries) ஊடான இரத்த ஓட்டத்தையும் கட்டுப்படுத்தக் கூடியவையாகும்.
ஆனால் மனித ஆஸ்ரோசைட்ஸ்கள் எலியினுடையதை விட அளவில் சற்றுப் பெரியவையாக இருக்கின்றன. இவற்றை எலியின் மூளையில் மாற்றீடு செய்தபோது எலிகளின் நினைவாற்றலானது பல்மடங்கு பெருகியது. மனித ஆஸ்ரோசைட்ஸ்கள் மேலும் பல செயற்பாடுகளைச் செய்யும் ஆற்றல் கொண்டவை என்ற முடிவுக்கு இவ் ஆய்வு அறிக்கை மூலம் நாம் வர முடியும்..
இதேபோல மைக்ரோகிளியாவும் பல்வேறு செயலாற்றல் கொண்டவை என கடந்த 10 வருடங்களுக்குள் செய்யப்பட்ட ஆய்வுகள் உணர்த்துகின்றன. அவை மூளையின் எதிர்ப்பாற்றல் சக்தியுடன் தொடர்புடையவை. இறந்த கலங்களை துடைத்தெடுக்கின்றன. நுண்ணியதாக நீளும் விரல் போன்ற அலகுகளால் சூழலைக் கண்காணிக்கின்றன. அத்துடன் தேவையற்ற இணைப்புகளை அழித்து புதியவை உருவாக இடம் அளிக்கின்றன.
இவ்வாறான ஒரு சில ஆய்வுகள் மனிதரில் மேற்கொள்ளப்பட்ட போதும் பெரும்பாலானவை எலி போன்ற மிருகங்களிலேயே செய்யப்படுகின்றன. மேலும் நுணுக்கமான ஆய்வுகளை மனிதரில் செய்வதற்கான நவீன கருவிகளின் வரவு தேவையாக உள்ளது.
நரம்பியல் விஞ்ஞான ஆய்வுகளாவன மூளையின் கனபரிமாணம் மற்றும் வடிவுகளைத் தாண்டி அதன் உட்பாகங்களுக்கும் சென்றுள்ளதைப புரியக் கூடியதாக உள்ளது. மூளையின் கலங்களையும் அதன் மூலப் பகுதிகளையும் நோக்கிய துல்லியமான ஆய்வுகள்; சாத்தியமாகின்றன.
செயற்கை மூளை
இதற்கிடையில் ஒஸ்ரிய விஞ்ஞானிகளால் மறு உருவாக்க நுட்பங்களைப் பயன்படுத்தி மனித மூளையின் சிறிய வடிவத்தை ஆய்வு கூடத்தில் உருவாக்க முடிந்திருக்கிறது. இது பற்றிய செய்திகளை பத்திரிகைளில் படித்திருப்பீர்கள். மூளையின் பல பகுதிகளான cerebral cortex, retina, meninges, choroid plexus போன்றவற்றின் ஆரம்ப கட்ட வளர்ச்சியை 2 மாதத்தில் ஆய்வு கூடத்தில் எட்ட முடிந்தாலும் அதற்கு மேல் வளர்ச்p அடையவில்லை.
போதிய குருதி ஓட்டம் மற்றும் ஒட்சியன் இல்லாமையால் வளர்ச்சி தடைப்பட்டது என்று அவர்கள் சொன்னார்கள். இருந்த போதும் மனித உடலில் பயன்படுத்தக் கூடிய மூளையை உருவாக்குவது அண்மைக்காலத்தில் சாத்தியமில்லை என்றே படுகிறது.
இருந்தபோதும் இந்த ஆய்வை தட்டிக் கழிக்க வேண்டியதில்லை. மூளையின் செயற்பாடுகள் அதன் நோய்கள் பற்றிய பல புதிய செயதிகளையும் தருவதோடு ஆய்வுக்கான புதிய கதவுகளையும் அது திறந்து விட்டிருக்கிறது.
முடிவாக
இன்னும் பல்லாயிரம் படிகள் எங்கள் முன் காத்திருக்கினறன. தகவல்கள் மின்அலைகளாக எவ்வாறு உருவாகின்றன. அவை ஒன்றிலிருந்து மற்றது எவ்வாறு வேறுபடுகிறது போன்ற பலவற்றையும் கண்டறிய வேண்டியுள்ளது.
காதலின் சின்னமாக மூளையின் கலங்களான நியூரோன் மற்றும் ஆஸ்ரோசைட்ஸ, மைக்ரோகிளயா போன்றவற்றைக் குறியீடாக சினிமாவில் காட்டும் விஞ்ஞான அறிவியல் தெளிவு எமது நெறியாளர்களுக்கு கிட்டும் காலம் வருமா?
வரும் என நம்பலாம். அதேபோல திரைப்பட ஆர்வலர்களும் அக் குறியீடுகளை தெளிவாகப் புரிந்து கொள்ளும் அறிவியல் வளர்ச்சி தொலை தூரத்தில் இல்லை.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
0.00.0