>பதற்றத்தோடு எனது அறைக்குள் நுழைந்தார்கள்.
அவள் முகத்தில் ஆழ்ந்த சோகம்.
அவன் முகத்திலும் இனம் புரியாத உணரச்சிப் பெருகளிப்பு. சஞ்சலமா, பதற்றமா, என்ன செய்வதென்று தெரியாத திகைப்பா?
இருவருக்குமே பேச முடியவில்லை. ஊமைகள் அல்ல.
சொல்வதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் வார்த்தைகள் கூடவில்லை.
எங்கே ஆரம்பிப்பது?
எப்படிச் சொல்வது.
டொக்டர் என்ன நினைப்பாரோ, ஏசுவாரோ?
அவர்கள் காதலர்கள்.
திருமணம் செய்ய இருக்கிறார்கள்.
ஆனால் உடனடியாக அல்ல.
தமது கல்வியை முடித்த பின்னர்.
ஆனால் திடீரென எதிர்பாராத சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. பெற்றோர்களுக்குச் சொல்ல முடியாது. நண்பர்களுடனும் ஆலோசனை பெற முடியாது.
அவர்கள் கேடு கெட்டவர்கள் அல்ல.
மிகவும் கண்ணியமான காதல்.
ஆனாலும் உணர்ச்சி வசப்பட்ட ஒரு தனிமையான நேரத்தில் அது எதிர்பாராத விதமாக நடந்து விட்டது.
அவளுக்கு வழமையாக வர வேண்டிய பீரியட் பிந்தி விடவில்லை.
அந்தளவுக்கு அவர்கள் காலம் தாழ்த்தவில்லை.
சம்பவம் நடந்த மறு நாள் காலையே என்னிடம் வந்துவிட்டார்கள்.
என்ன சொல்ல வருகிறேன் என்பது அனுபவப்பட்டவர்களுக்கு மாத்திரமல்ல சற்றுப் பொது அறிவுள்ளவர்களுக்கும் புரிந்திருக்கும்.
ஆம்! அவசர கருத்தடை பற்றியே சொல்கிறேன்.
அவசர கருத்தடை என்றால் என்ன?
கரு தங்குவதைத் தடுப்பதற்கான எத்தகைய கருத்தடை முறையையும் உபயோகிக்காத பெண் ஒருத்தி எதிர்பாராத விதமாக உடலுறவு கொள்ள நேர்ந்தால் கரு தங்காமல் தடுப்பதற்கான முறையாகும்.
இது கருக்கலைப்பு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
அவசரக் கருத்தடை

அதில் இரண்டு வகைகள் உண்டு.
1. அவசர கருத்தடை மாத்திரைகள் ஆகும். மிகவும் பிரபலமானதும் சுலபமானதும் இதுதான்.
இதில் பெண்களின் உடலில் இயற்கையாகச் சுரக்கும் ஹோர்மோன் ஆன
progesterone இருக்கிறது.
இது பல பெயர்களில் கிடைக்கிறது. இலங்கையில் பிரபலமானது
POSTINOR-2 என்ற பெயரில் மருந்துக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.
மருத்துவரின் பிரிஸ்கிரிப்சன் இன்றியே வாங்கக் கூடியதாகும்.
ஒரு பைக்கற்றில் இரண்டு மாத்திரைகள் இருக்கும். இரண்டும் ஒரு தடவைக்கு தேவையானதாகும்.

2. கருப்பையினுள் வைக்கும் லூப் என சொல்லப்படுவது.
உண்மையில் இது கருப்பையினுள் வைக்கும் ஒரு வளையம்
(copper IUD) ஆகும்
இக் கட்டுரையில் நாம் அவசர கருத்தடை மாத்திரைகள் பற்றியே பேசுகிறோம்.
எவ்வாறு செயற்படுகிறது
மூன்று வழிகளில் இது நடைபெறலாம்.
- சூலகத்திலிருந்து முட்டை வெளியேறுவதைத் தடுக்கலாம்.
- அல்லது ஆணின் விந்திலுள்ள உயிரணுக்களும், பெண்ணின் முட்டையும் இணைந்து கருக்கட்டுவதைத் தடுக்கக் கூடும்.
- அல்லது கருவானது கருப்பையில் தங்குவதை தடுக்கலாம்.
எவ்வாறு உபயோகிப்பது
எதிர்பாராத பாலுறவு கொண்ட பின் எவ்வளவு விரைவாக எடுக்க முடியுமோ அவ்வளவு கெதியில் எடுக்க வேண்டும்.
ஆயினும் 72 மணி நேரத்தின் பின்னர் எடுத்தால் அது நிச்சயமாகச் செயற்படும் என்று சொல்ல முடியாது.
இரண்டாவது மாத்திரையை 12 மணி நேரத்தில் எடுக்க வேண்டும்.
ஆயினும் 16 மணித்தியாலத்திற்கு மேல் தாமதிப்பது கூடாது.
ஒரு வேளை நீங்கள் மாத்திரையை உட்கொண்ட பின் மூன்று மணி நேரத்திற்குள் வாந்தி எடுத்தால், மருந்து வாந்தியுடன் வெளியே போய்விட்டது என்றே கருத வேண்டும்.
அவ்வாறெனில் முதல் மாத்திரையை மீண்டும் எடுப்பது அவசியம்.
அவசர கருத்தடை மாத்திரை என்பது எதிர்பாராத தருணத்திற்கு மாத்திரமே. வழமையான கருத்தடை முறை அல்ல.
இதனையே தொடர்ந்தும் உபயோகிக்கலாம் என எண்ணுவது தவறாகும்.
வழமையான முறைகளாக கருத்தடை மாத்திரைகள், கருத்தடை ஊசி, இமபிளான்ட், ஆணுறை, பெண்ணுறை, இயற்கை முறை எனப் பலவும் உண்டு.
யாருக்கு உதவும்
எதிர்பாராத உடல் உறவு கொண்டால் என ஏற்கனவே சொன்னோம். எத்தகைய தருணங்களில் கை கொடுக்கும்.
- வேறு கருத்தடை முறைகள் எதனையும் உபயோகிக்காதிருந்தால்
- நீங்கள் உடலுறவு வைப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டிருந்தால். வன் முறைகள் நிறைந்த எமது நாட்டில் ஆயுதந் தரித்தோராலும் ஏனையோராலும் பல பெண்கள் இவ்வாறான வன் புணர்வுகளுக்கு ஆளாகியிருப்பது தெரிந்ததே. அவசர கருத்தடை மாத்திரை பற்றிய அறிவும். அது சுலபமாகப் கிடைகக் கூடிய வசதியும் இருந்திருந்தால் பல பெண்களின் சோகக் கண்ணீரை துடைத்திருக்கலாம்.
- வழமையான உடலுறவின் போது ஆணுறை (Condom) உடைந்திருந்தால்
- ஆணுறுப்பை சரியான தருணத்தில் வெளியே எடுக்கத் தவறி, அதனால் விந்து உள்ளே சென்றிருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டால்
- நீங்கள் கருத்தடை மாத்திரை பாவிப்பவராயின் மூன்று தினங்கள் அடுத்தடுத்து அதை எடுக்க மறந்திருந்தால்.
- கருத்தடை ஊசி போடுபவராயின் அதனை சரியான திகதியில் போடத் தவறியிருந்தால்.
- நீங்கள் பயன்படுத்தும் எந்தக் கருத்தடை முறையாயினும் அது தவறியிருக்கும் என எண்ணினால்
மேலும் தகவல்கள் பெற இங்கே கிளிக் பண்ணுங்கள்
மற்றொரு கதை
இன்னொரு பெண் தனக்கு அடிக்கடி தீட்டு வருவதாக சொல்லி அதை நிறுத்தும்படி கேட்டு மருத்துவத்திற்கு வந்திருந்தாள்.
அதற்கான காரணம் புரியவில்லை. பலகேள்விகள் கேட்டும் பரிசோதித்துப் பார்த்தும் தெளியவில்லை.
கருத்தடை முறைகள் ஏதேனும் கடைப்பிடிக்கறீர்களா என்று வினவிய போது அவசர கருத்தடை மாத்திரைகள் உபயோகிப்பதாகக் கூறினாள்.
‘எத்தனை நாளுக்கு ஒரு முறை உபயோகிக்க நேரிடும் என நாகரீகமாகக் கேட்கப்பட்டது.
‘வாரத்திற்கு இரண்டு மூன்று தடைவவைகள் பாவிப்பேன் என்றாள்.’
அவசர காலத்திற்கு மட்டும் உபயோகிக்க வேண்டியதை நாளந்தம் பாவித்தால் வேறு என்ன நடக்கும்?
எமது நாட்டில் அவ்வாறே.
அவசர காலத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டிய அவசர காலச்சட்டம் ஒவ்வொரு ஜனதிபதிகளினதும் அரசாட்சிக் காலம் முழுவதும் பயன் படுத்தப்படுத்தப்படுவதால் நாடு படும் பாடு உங்களுக்கு ஞாபகத்திற்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
நன்றி்- இருக்கிறம்
0.0.0.0.0.0.0
Read Full Post »