Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘ஆங்கில திரைப்படம்’ Category

மண்ணிலிருந்து வேரோடு பிடிங்கி எறியப்பட்ட மரம் தன் பசிய இலைகள் ஊடாக வியர்வை சிந்திக் கருகுவதைப் போல மனித உயிர்கள் அடாவடித்தனமாக பறிக்கப்படுவதைக் கண்டும் மனம் கலங்காத கல் மனம் கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உயிரைப் பறிப்பது  மட்டுமல்ல தன் மண்ணிலிருந்து தூக்கி எறியப்படுவதும் அத்தகையதே. ஒருவர்; காலாகாலமாக வாழ்ந்த பூமியை மற்றொருவர் அடாவடித்தனமாக பிடித்து அமுக்கித் தமதாக்கி, அதன் பூர்வீக உரிமையாளர்களை அடிக்கி ஒடுக்கி இரண்டாந்தரப் பிரஜைகளாக்குவது அநியாயமான செயல்பாடு என்பதைச் சொல்லித் தெரிய வேண்டும் என்றில்லை. தான் மாத்திரமல்ல தனது பெற்றோர், பேரன் பீட்டிகள் எனப் பரப்பரை பரம்பரையாக வாழ்ந்த மண்ணை இழப்பதன் சோகத்தை வார்த்தை சிறைகளுக்குள் அடக்க முடியாது.

பாலஸ்தீனர்கள் தமது மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். மிகுதி மண்ணில் அடையாள அட்டை, வேலை செய்வதற்குப் பாஸ், இஸ்ரேலியர்களை எதிர்த்துப் பேசினால் கடும் தண்டனை எனக் கடுமையான அடக்கு முறைகளுக்கு ஆளானார்கள். இந்த நிலையை அவர்கள் எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பதை நாம் அறிவோம். பலஸ்தீன விடுதலை இயக்கம் பற்றியும், இனவெறி பிடித்த இஸ்ரேலிய அரசின் வெறித்தனமான செயற்பாடுகளையும், அதற்குத் துணை போகும் மேலைத் தேச அரசுகள் எனப் பலதையும் அறிந்து வைத்திருக்கிறோம்.

ஆயினும் றீமிக்சிங் செய்யும் ஊடக ஒலிகளுக்கு அப்பால், அங்கு வாழும் சாதாரண மக்களின் குரலை இயல்பாகக் கேட்டது அரிது. நான்கு பெண்களின் வாழ்வின் நாதமாக, போரினால் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் குரல் இத் திரைப்படத்தில் ஒலிக்கிறது. ஆனால் அந்த நான்கு குரல்களும் ஒரே லயமானவை அல்ல. சுரதிபேதம் கொண்டவை. அவர்களது பார்வைகள் ஒரே விதமான பார்வைகள் அல்ல. வௌ;வேறு கோணங்களில் தெறிக்கும் பார்வைகள். ஒரே அடிப்படைப் பிரச்சனையை, வஞ்சிக்கப்பட்ட அந்த ஒரே வாழ்வை நால்வரும் அனுபவித்தாலும் அவர்களது எண்ணம், எதிர்பார்ப்புகள், எல்லாம் பல்வேறு விதங்களாக இருக்கின்றன.

மிரால் என்ற இச் சினிமா அமெரிக்க தயாரிப்பாளரால், அமெரிக்க நெறியாளர் ஊடாக அமெரிக்க சமுதாயத்திற்காக எடுக்கப்பட்டது. இருந்தபோதும் ரூலா ஜெப்ரியல் என்ற பெண்ணினது சுயசரிதை நூலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என்பதால் பலாஸ்தீனக் குரல் அடிநாதமாக ஒலித்தபடியிருப்பதைத் தடுக்க முடியவில்லை எனலாம். ஆங்கிலப்படம். ஆயினும் இடையிடையே அரபி மொழி கலந்திருக்கிறது. முக்கியமாக அவர்களின் கலை, பண்பாட்டு அம்சங்கள் காட்சிப்படுத்தப்படும்போது. இதனால் ஆங்கில உபதலைப்பின்றியும் புரிவதில் சிரமமிருக்கவில்லை.

படத்தின் பிரதான பாத்திரம் மிரால் என்ற இன்றையப் பெண். இவள் வாழ்வே படத்தின் முக்கிய பகுதி. இவளது வாழ்க்கைப் பாதையைச் செதுக்குவதில் ஏதொவொரு வழியில் உதவியவர்கள் ஏனைய மூவருமாகும். பிரதான பாத்திரம் திரையில் வருவதற்கு முன்னர் கிட்டத்தட்ட படத்தின் மூன்றில் ஒரு பகுதி ஓடி முடிந்துவிடுகிறது. பாலஸ்தீனியப் பிரச்சனையை ஓரளவு புரிந்து கொள்ள இது அவசியம்தான். ஆனாலும் கருவின் மையத்துள் நுளைவதற்கு இவ்வளவு நேரம் எடுப்பது சற்றுச் சோர்வு அளிக்கிறது. அத்துடன் ஆரம்பக் காட்சிகளைப் புரிந்து கொள்வதில் சற்று சிக்கல் இருந்தது. வேறு விதமாக எடிட் பண்ணியிருக்க முடியாதா என எண்ணத் தோன்றுகிறது.

முதல் பெண் ஹின்ட் ஹீசெனி. இவள் முதலாமவள். பாலஸ்தீனத்திலிருந்து ஒரு பகுதியைப் பிய்த்தெடுத்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அறிமுகமாகிறாள். இஸ்ரேல் உருவானபோது ஏற்பட்ட போரில் அனாதைகளான, வாழ வழியில்லாத மக்களின் பெண் குழந்தைகளைக் காப்பாற்றி, வளர்த்து, கல்வியூட்டி நல்ல பிரஜைகளாக்குவதற்காக தனது சொந்த வீட்டையே பள்ளியாக்குகிறாள். அது Tifl Al-Arabi Institute என்ற பெயரோடு அரசியல் சாயல் படியாத மனிதாபிமான கல்வி நிறுவனமாகத் தொண்டாற்றுகிறது.

இரண்டாமவள் நடியா. இவள்தான் மிராலின் தாய் ஆகும். பாலியல் ரீதியாக வஞ்சிக்கப்பட்டவள். ஒரு இஸ்ரேலியப் பெண்ணை பஸ்சில் வைத்து அடித்தற்காகச் சிறை செல்கிறாள். அங்கு மூன்றாமவளான பற்றிமாவைச் சந்திக்க்pறாள். பற்றிமா இஸ்ரேலியரின் அடாவடித்தனமான நடவடிக்கைளில் கோபமும், இன உணர்வும் தாய் நாட்டில் பற்றும், கொண்ட பெண். தீவிரவாதி எனலாம். இஸ்ரேலியர்கள் சினிமா பார்க்கும் அரங்கில் வெடி குண்டு வைத்ததால் அகப்பட்டுச் சிறை செல்கிறாள். சிறையில் இருவரும் அறிமுகமாகிறார்கள்.

நான்கு பெண்களின் கதையாக இருந்தபோதும் ஹின்ட் ஹீசெனி, அவளது பள்ளிக்கூடம், அவளது நம்பிக்கைகள் என்ற அத்திவாரத்தில் எழுப்பப்பட்ட மாளிகையாக சினிமா அமைகிறது. மாளிகையாக இருப்பது முக்கிய கதாபாத்திரமான மிராலின் வாழ்க்கை.

ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தினரின் மூர்க்கத்தனமும், எதேச்சிகார நடவடிக்கைகளும், அடாவடித்தனங்களும் கோபப்பட வைக்கின்றன. தமது வீட்டில் வாழ்ந்தவர்களை ஒரு சிலநிமிட அறிவித்தலுடன் வெளியேற்றி வீதியில் கலைத்துவிட்டு அவர்களது வீட்டை பாரிய இயந்திரங்களால் நிர்மூலமாக்கும் காட்சி மனதைக் குடைகிறது. மனதில் இயலாமையும் கோபமும் கொப்பளிக்க எதுவும் செய்ய முடியாது ஏக்கத்திடன் பார்த்திருக்கும் காட்சி மனதைத் தொடுகிறது. வீதியில் நின்று கல்லெறிந்து தமது எதிர்ப்பைக் காட்டும் சாமானியர்கள் துப்பாக்கி குண்டுகளால் தண்டிக்கப்படுகின்றனர்.

மற்றொரு காட்சியில் பற்றிமாவுக்கு ஆயுற்காலச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. குண்டு வைத்ததற்காக இரண்டு, இஸ்ரேலிய நீதிபதிக்கு முன் எழுந்து நின்று மரியாதை செய்யாததற்காக மூன்றாவது. சட்டமும், நீதியும் கூட எதேச்சிகார ஆட்சிகளுக்கு  முண்டுக் கொடுப்பதற்காக பாகுபாடு காட்டுகின்றன. ஈவிரக்கமின்றியும் தான்தோன்றித்தனமாகவும் நடந்து கொள்கின்றன. இவை வெறுக்க வைத்தாலும், நாம் அறியாதது அல்ல.

மிராலின் அன்புக்குரியவன் பாதையால் செல்லும்போது சடுதியாக பாதுகாப்புச் சாவடியுள் இழுத்து ஓசையின்றி கொன்று முடிக்கிறார்கள். அவன் குற்றவாளியாக இருக்கலாம். இல்லாமலும் இருந்திருக்கலாம். ஆனால் கைது செய்தல், விசாரணை, நீதிமன்றம், வழக்கு என எதுவும் இல்லாது மறைவாகக் கொன்று தடயமின்றி அழிக்கப்படுகிறான். பல வருடங்களின் பின் புதைகுழியிலிருந்து மீட்கப்படக் கூடிய இனங்காணப்படாத உடலின் எச்சங்களில் இவனதும் அடங்கியிருக்கலாம்.

இனவாத அரசுகள் இவ்வாறுதான் தமது இராணுவங்களுக்கு புனிதக் கடமையெனப் பெயர் சூட்டி அளப்பற்ற அதிகாரங்களை வழங்குகின்றன. தட்டிக்கேட்க யாருமில்லை.

ஆனால் அதே நேரம் விடுதலை இயக்கங்கள் இனவிடுதலை என்ற பெயரில் தமது மக்கள் மனங்களை மூளைச்சலவை செய்கின்றன. பொது இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொல்லுதல் ஆட்கடத்தல் என பயங்கரச் செயல்களில் ஈடுபடுகின்றன. தாம் செய்யும் ஜனநாயக விரோத, தனிமனித சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கைகள் சரியானவை என நம்ப வைக்கும் செயற்பாடுகளில் முனைகின்றன.

முரணான இந்த இரு பக்கங்களையும் இத் திரைப்படம் காட்சிப்படுத்த முனைகின்றது. அதனால் இஸ்ரேல் சார்பான அமெரிக்க மற்றும் மேற்குலக மக்கள் இது பலஸ்தீனக் குரலாக மட்டுமே ஒலிக்கிறது. பக்க சார்பானது எனக் கடுமையாக விமர்சிக்கின்றனர். ஆனால் பாலஸ்தீன பக்கம் சார்பானவர்கள் இது தமது போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது என கோபப்படுகின்றனர்.

அன்பு, அமைதி, விட்டு;கொடுத்தல், கல்வியால் சமுதாயத்தை முன்னேற்றலாம் என்ற நம்பிக்கைளின் சின்னமாக ஹின்ட் ஹீசெனி இருக்கிறாள். நடியா பாதிக்கப்பட்ட அபலையாக இருக்கிறாள். பற்றீமா விட்டுக் கொடுக்காத முரட்டுப் போராட்டத்தை நாடுகிறாள். இவர்களுக்கிடையே வந்த புதிய பரம்பரையின் சின்னமான மிரால் வருகிறாள். அவள் தேர்ந்தெடுக்கும் பாதை என்ன? அதைத்தான் இப்படம் பேசுகிறது.

பாலஸ்தீனியப் போராளியான ஹனி, மிராலின் மனத்தில் இடம் பிடிக்கிறான். ஹனி மீதான ஈர்ப்பும், பாலஸ்தீனியப் விடுதலை இயக்கம் மீதான பற்று ஒரு புறமும் கல்வி, சச்சரவற்ற எதிர்காலம், தகப்பன் மேலோன அன்பு ஆகியவை மறுபுறமும் அலைக்கழிக்கின்றன. போதாக்குறைக்கு சந்தேகத்தின் மேல் கைது செய்யப்பட்டு கடுமையான விசாரணைக்கு ஆட்படுகிறாள். மிருதுவான அவளது முதுகுப்புறம் புண்படுமாறு அடிவாங்குகிறாள்.

ஒருவாறு விடுபட்டு வெளிவந்தபோது அவளது அன்புக்குரியவனே அவள் மீது சந்தேகப்படகிறான். காட்டிக் கொடுத்தவள் எனக் குற்றம் சாட்டுகிறான். குற்றம் செய்யாத அவள் மனம் துய்ந்து போகிறது. விடுதலை இயக்கம் மீதான முரட்டுப் பற்றுதலால் தமது அன்புக்குரியவர்களையே சந்தேகிக்கும், கொலையும் செய்யத் துணிந்த மனிதர்களைக் கண்ட எமக்கு இது ஆச்சரியமானதல்ல, ஆயினும் மனம் நோகிறது.

மிராலின் தகப்பனாக வரும் ஜமால் அற்புதமான பாத்திரம். Siddig கின் மிகையில்லாத நடிப்பில் சாதாரண அப்பனின் மனநிலையை உணரமுடிகிறது. தீவிரவாத இயக்கங்களிலிருந்து தனது மகளை காப்பாற்றி நல்ல நிலையில் வாழ வைக்க வேண்டும் என்ற தந்தையின் பாத்திரத்தை அழகாகச் செய்கிறார். மனத்தில் நிலைக்கிறார்.

படத்தை நெறியாழ்கை செய்திருப்பவர் Julian Schnabel ஆகும். ஏற்கனவே Before Night Falls, The Diving Bell and the Butterfly போன்ற சினிமாக்கள் மூலமாகக் கவனிப்பைப் பெற்றவராவார்.

Slumdog Millonaire Gfo; Fredia Pinto  புகழ் ; Fredia Pinto பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நன்றாக நடித்திருக்கிறார். ஆயினும் அவரது உருவம் அரபுப் பெண்கள் போலாக இல்லை என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். கமெரா Eric Gautier பல காட்சிகள் மனதை அப்பிக் கொள்கின்றன.

இலங்கையில் திரையிடப்படவில்லை. படம் டிவீடியில் கிடைக்கிறது. முடிந்தால் பாருங்கள். எமது வாழ்வுடனான ஒற்றுமை வேற்றுமைகளை அசைபோட்டுப் பார்க்கலாம்.

ஞானம் சஞ்சிகையிலும், பதிவுகள் ( http://www.geotamil.com/pathivukalnew/) இணைய இதழிலும் வெளியான எனது கட்டுரை

எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

>

சுதந்திர வேட்கையுடன் நெடும் பயணம்

The way back  ஆங்கில சினிமா


சுதந்திரத்திற்கான வேட்கை அடக்க முடியாதது. மற்றவனுக்கு தாழ் பணிவதும், அடங்கி வாழ்வதும், கொடும் சிறையில் அடைக்கப்பட்டு அல்லலுறுவதும் எந்தவொரு மனிதனுக்கும் உவப்பானதல்ல. அதுவும் செய்யாத குற்றத்திற்காக அடைபட்டுக் கிடப்பது கொடூரமானது மட்டுமல்ல அவலமானதும் கூட.

Janusz (Jim Sturgess)  சிறையில் அடைபடுகிறான். அவன் குற்றம் செய்யவில்லை என்பது சூசமாக எமக்கு உணர்த்தப்படுகிறது. அவனது மனைவியே அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்வதைப் பார்க்கிறோம். பயத்தில் உறைந்த முகமும், கலைந்து கிடக்கும் கேசமும், சிவந்த கண்களும், முட்டிக் கொண்டு வரும் கண்ணீரும், அது உதிர்வதைத் தடுக்க முயலுவதுமாக அவள்.

மறுபுறத்தில் விசாரணை செய்யும் இராணுவ அதிகாரியின் இறுகிய முகம்.

“உன் மனைவியே நீ அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டினாய் என்கிறாள். இப்பொழுது நீ குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா?”

“நீங்கள் அவளுக்கு என்ன செய்தீர்கள்” எனக் கேட்கிறான். விடை கேள்வியாக, இல்லை என மறுப்பது போலத் தலை ஆட்டிக்கொண்டே.

அவளாகச் சொன்ன சாட்சியம் அல்ல. அவனுக்கு எதிராகச் சொல்ல வைக்கப்பட்டிருக்கிறாள். ஜனநாயக மரபுகள் குழிதோண்டிப் புதைக்கபட்டு, ராணுவம் நீதி வழங்கும் சூழலில் இதுதான் நடந்திருக்கும் என்பது சொல்லாமலே புரிகிறது. 

படம் இவ்வாறுதான் ஆரம்பித்திருந்தது.

1940ல் சைபீரியன் குலாக்கு (gulag)   சிறைக்கு மனித மந்தைகளாக அனுப்பப்படுபவனில் அவனும் ஒருவனாகிறான். சைபீரியாச் சிறை என்ற பெயர் சொன்னாலே மரணம் வந்துவிடும் அக்காலத்தில். கட்டங்களில் அடைத்து வைக்க வேண்டிய சிறை அல்ல. திறந்தவெளிச் சிறை. 5 மில்லியன் சதுர வெளி கொண்ட பாரிய பிரதேசம். சைபருக்குக் கீழ் பல பாகைகள் என்றதான கடும் குளிரில் விறைத்தே பலர் மரணடைவார்கள். ஜீவிதத்திற்கும் மரணத்திற்குமான போட்டி நிறைந்த சூழலில், அதன் பனி படர்ந்த பெருவெளிகளைத் தாண்டி எவனும் தப்பிச் செல்வதை நினைக்கவே முடியாது.

ஆனால் அவனும் இன்னும் ஆறு பேரும் சேர்ந்து அதிலிருந்து தப்பிச் செல்கிறார்கள். ஸ்டாலின் ஆட்சியிலிருக்கும் ரஷ்யாவின் சைபீரியாச் சிறையிலிருந்து தப்பி மொங்கோலியா நாட்டைச் சென்றடைவதுதான் அவர்களது இலக்கு.

தங்களிடையே இரகசிமான தொடர்பாடல்கள், மிகத் துல்லிமான திட்டமிடல், நீண்ட பயணத்திற்கான துரித ஏற்பாடுகள் யாவும் செய்யப்படுகின்றன. ஒளி கொடுக்கும் ஜெனரேட்டரின் செயற்பாடு இவர்களால் நிற்பாட்டப்பட்டு, மாற்று ஒளி கிடைப்பதற்கான ஏற்பாடுகள் காவலாளிகளால் செய்யப்படுவதற்கு இடையில் கிடைக்கும் 10 நிமிட இடைவெளியில் இவர்கள் தப்பியாக வேண்டும். நம்ப முடியாததைச் செய்து முடிக்கிறார்கள்.

இதற்குப் பிறகும் கால்நடையான அவர்களது 4000 மைலுக்கு மேலான தப்பிக்கும் முயற்சியில் பல உயிராபத்து மிகுந்ததும், திகிலூட்டக் கூடியதுமான பல சவால்களை எதிர் கொள்கிறார்கள். சொர்க்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மரண வாயில்களை துச்சமெனத் தாண்டிச் செல்லும் ஞானிகளின் முயற்சி போன்றது. வியக்கவைக்கும் காட்சிகள். ஆனால் அவை யதார்த்தமாகக் காட்சிப்படுத்தப்படுகிறன.

ஆனால் இவர்களை அழிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் காத்திருக்கின்றன. மனிதனால் செய்யப்பட்ட சூழ்ச்சிகள் அல்ல. கொடூரமான சீதோசன நிலை. வடதுருவத்தை அண்டிய பிரதேசத்தின் பரந்த வெளியும், விறைக்க வைத்தே கொல்லும் அடர்ந்த பனியின் ஆவேசமும் இவர்களை எதிர்கொள்கின்றன. அவற்றை எதிர்கொள்கிறார்கள். தாண்டுகிறார்கள்.

இந்த அயரவும் அசரவும் வைக்கும் பயணத்தில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அவர்கள் எல்லோரும் ஒத்த கருத்துள்ள ஒரே தன்மையானவர்கள் அல்ல. மாற்றுக் கருத்துகளும், கொள்கை முரண்பாடுகளும் அவர்களிடையே இருக்கின்றன. இதனால் ஒருவருடன் ஒருவர் முரண்படவும் செய்கிறார்கள். ஆனால் சுதந்திரம் என்ற ஒரே குறிக்கோளால் ஒன்றுபடுகிறார்கள். இந்தப் பயணம் அவர்களது உடலைப் பாதிப்பது போலவே மனத்தையும் பாதிக்கிறது.

இந்த உடல் உளப் பாதிப்புகளை திரையில் கொண்டுவருவது மிகவும் சிரமமானது. ஆயினும் பொருள் செறிந்த வசனங்களும், சிறந்த நடிப்பும் கைகொடுக்கின்றன. அவர்களது உடல்உள மாற்றங்களை புலன் காட்சிகளாக கொண்டு வருவதில் அற்புதமான ஒப்பனை உதவுகிறது. முக்கியமாக அவளது மரணக் காட்சி. கடும் அனல்காற்றால் துவண்ட அவர்களது முகங்கள் ஆகியவற்றை நம்பவைக்கும் விதமாக காட்சிப்படுத்துவதில் ஒப்பனை கைகொடுத்திருக்கிறது.

இவர்களில் ஒருவனான இரவுப் பார்வையற்றவன் வழியில் குளிரில் விறைத்து இறந்துவிடுகிறான். வழிதவறிய அவன் இவர்களைத் தேடியலையும்போது இது நடக்கிறது. இவர்கள் இருந்த இடத்திற்கு மிக அருகிலேயே அவன் மரணித்துக் கிடப்பதைக் காண்கிறோம். மரணத்திற்கும் வாழ்வுக்குமான இடைவெளி சில அடி தூரமாக அக்கணத்தில் இருந்தது. ஆனாலும் அவனால் இயற்கையை வெல்ல முடியவில்லை. ஆனால் அவர்கள் இயற்கையின் ஆவேசங்களுக்கு எதிராகப் பல்லாயிரம் மைல் தூரத்தை தாண்டி சுதந்திரத்தை எட்டுவதை இலக்காகக் கொண்டிருந்தார்கள்.

வழியில் இன்னொரு பெண்ணும் இவர்களோடு இணைகிறாள். பாலைவனத்து வெம்மை தாங்காது அவளும் வழியில் மரணிக்கிறாள்.

பயணத்திற்கு இடைஞ்சலாக இருந்தவை பனியும் வெயிலும் மட்டுமல்ல. பசியும் பட்டினியும் அவர்களைக் காவுகொள்ளத் துடிக்கின்றன. மீண்டும் அகப்படுவதிலிருந்து தப்புவதற்காக மனித சஞ்சாரமற்ற பிரதேசங்கள் ஊடாகப் பயணிப்பதால் உணவு கிடைப்பது பெரும்பாடாகிறது. ஊர்ந்து செல்லும் பாம்பையும் அவர்களது பசியின் கொடுமை விட்டு வைக்கவில்லை. நஞ்சுள்ள அதன் தலையை வெட்டி எறிந்துவிட்டு நெருப்பில் சுட்டு உண்கிறார்கள்.

மற்றொரு தருணம் சற்று அருவருப்பானது என்றால் கூட அவர்களுக்குச் சாத்தியமானது அந்நேரத்தில் அது ஒன்றுதான். ஓநாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு ஒதோ ஒரு மிருகத்தைப் புசித்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் ஒன்று சேர்ந்து அவற்றை விரட்டியடித்துவிட்டு அந்த ஊனைத் தாங்கள் பங்கிட்டு பசி ஆறுகிறார்கள்.

இவ்வாறு நடக்க முடியுமா என நினைத்துக் கூடப் பார்க்க முடியாதவற்றை யாதார்த்தமான செயற்பாடுகள் ஊடாகத் திரையில் காட்டி எம்மை மலைக்கவும் திறந்த வாய் மூடாது பார்த்திருக்கவும் செய்த நெறியாளர் Peter Weir  பாராட்டுக்குரியவர். “The Truman Show”, “Dead Poets Society”, ஆகிய சினிமாக்கள் அவரது குறிப்பிடத்தக்க முன்னைய படைப்புகளாகும். சுமார் ஆறு வருடங்களுக்குப் பின்னான இப்படத்திலும் அவரது கைவண்ணம் பளிச்சிடுகிறது. 

சோவியத் யூனியன், ஸ்டாலின், கொம்யூனிசம் ஆகியவற்றிக்கு எதிரான அரசியல் சினிமாதான் இது. அப்பட்டமாக மனித உரிமை மீறல்களை அவர்கள் செய்வதாகக் காட்டுகிறது.  கோட்பாட்டு ரீதியாக நாம் அதை ஏற்று கொள்ள வேண்டியதில்லை. இன்றுள்ள உலக நடப்பில் இப்படத்தின் அரசியல் கூடச் செல்லாக் காசாகிவிட்டது. மேற்கு நாடுகளின் குள்ள நரித்தனமான அரசியலும் எமக்குத் தெரிந்ததுதானே.

ஆனால் இந்தச் சினிமா என்னைக் கவர்ந்ததற்குக் காரணம் மிக அற்புதமான இயற்கைக் காட்சிகளைக் கொண்ட படப்பிடிப்பும், யதார்த்தமான சித்தரிப்பும்தான். அதற்கு மேலாக அது கொண்டு வரும் மற்றொரு செய்தி முக்கியமானது. விடாமுயற்சியும் திடசங்கற்பமும் இருந்தால் செய்வற்கு அரியதையும் செய்து முடிக்கலாம் என்பதாகும். மனிதனால் முடியாதது எதுவுமில்லை.

இது ஒரு உண்மைக் கதை என்று சொல்லப்படுகிறது. Slavomir Rawicz முன்பு எழுதி வெளிவந்த சுயசரிதை நூலான “The Long Walk” இருந்துதான் இப்படத்திற்கான கதை எடுக்கப்பட்டது. ஆயினும் வேறு பலரின் அனுபவங்களும் கேட்டறியப்பட்டனவாம்.

பஞ்சு போலச் சொரிந்து கொண்டேயிருக்கும் பனித்துளிகள். மூடி நிற்கும் கனத்த வானம், பனி படர்ந்த வெறும் தரைகள். உறைந்து கிடக்கும் நதிகள். பனியால் ஆடை போர்த்தி இலையுதிர்த்தி உறைந்திருக்கும் நெடு மரங்கள்.

நீண்ட பயணத்தின் பின் சூழல் மாறுகிறது. வனப்புடைய இயற்கையான நிலப்பரப்புகள், மைல் கணக்கான தூரத்திற்கு நீரையே காண முடியாத வரண்ட வனாந்தரங்கள், மனிதனையே விழுங்கி ஏப்பமிடக் கூடிய மலைப் பாம்புகள் போன்ற மணற் புயல்கள். மலைகள், தேயிலைத் தோட்டங்கள். காணக்கிடைக்காத இயற்கையின் அற்புத கோலங்கள் எங்கள் முன் விரிகின்றன.

ஒருவாறு மொங்கோலிய எல்லையை எட்டிய மகிழ்ச்சியில் மூழ்கிய இவர்களுக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. பாதையில் உள்ள வரவேற்பு வளைவில் ஸ்டாலினதும், மாவோவினதும் சித்திரங்கள். இனி அங்கு போக முடியாது. அங்கும் கம்யூனிச ஆட்சி. அரசியல் புகலிடம் பெறமுடியாது. எனவே இந்தியாவுக்குப் பயணமாக முடிவெடுக்கிறார்கள். பனியையும், பாவைவனத்தையும் தாண்டி சுதந்திரத்தை நெருங்கி வந்தவர்கள் எதிரே பெரும்தடையாக உயர்ந்து நிற்கிறது இமயமலை.

இறுதிக் காட்சி. அவன் தனது வீட்டிற்குத் திரும்புகிறான். அதே வீடு, அதே விட்டு வாசல். அதே கதவு எல்லாமே அவ்வாறுதான் இருக்கின்றன. உள்ளே செல்கிறான்.

ஆனால் அங்கே! ஒரு முதியவள் சோகம் அடர்ந்த முகத்தோடு அமைதியாக அமர்ந்திருக்கிறாள். யாரோ வரும் அசமந்தம் கேட்டு நிமிர்ந்த அவள் புரியாத முகத்தோடு அவனைப் பார்க்கிறாள். புன்னகைத்த அவன் முதியவனாக அவள் கைகள் மேல் தன் கை வைத்ததும் நேசமானதும் அவளுக்குப் பரிச்சமானதுமான அவனது ஸ்பரிசத்தில் அவள் முகம் மலர்கிறாள். பல தாசப்தங்களாக அவன் நினைவுகளை மட்டும் சுமந்து காத்திருந்த அவளுக்கு பலன் கிட்டிவிட்டது.

பொய் சொல்லியேனும் உயிரோடு இருந்ததால்தான் அது சாத்தியமானது.

உயிருக்காப் பொய் சொல்வது கோழைத்தனமானது அல்ல. அது ஒரு தந்திரோபாய முயற்சிதான். ஏனெனில் உயிரோடு இருந்தால் வெல்வதற்கான வாய்ப்பு மீண்டும் கிடைக்கலாம். மரணித்துவிட்டால் மீண்டும் வெல்வதாற்கான வாய்ப்பே இல்லாத இறுதித் தோல்வியாகும்.

ஞானம் மே 2011 இதழிலும், பதிவுகள் இணையத் தளத்திலும் பிரசுரமான எனது கட்டுரை

எம்.கே.முருகானந்தன்.
0.0.00.0.00.0

Read Full Post »

>

நெருக்கடிகள் மிக்க சூழலில் முதல் பலி மனிதத்துவமே.

கலாசார மேன்மைகளைக் கேள்விகுள்ளாக்கும் திரைப்படம்

குருட்டுமை Blindness!– /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:””; margin:0in; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:”Times New Roman”; mso-fareast-font-family:”Times New Roman”;} h3 {mso-margin-top-alt:auto; margin-right:0in; mso-margin-bottom-alt:auto; margin-left:0in; mso-pagination:widow-orphan; mso-outline-level:3; font-size:13.5pt; font-family:”Times New Roman”;} @page Section1 {size:8.5in 11.0in; margin:1.0in 1.25in 1.0in 1.25in; mso-header-margin:.5in; mso-footer-margin:.5in; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} –>



அமெரிக்காவின் மிகவும் பரபரப்பு மிக்க வீதி ஒன்றில் திடீரென வாகன நெரிச்சல். ஒன்றுக்குள் மற்றொன்றாக நெரிபடுகின்றன. ஹோர்ன் சத்தங்கள் அலறுகின்றன. காரணம் என்னவென்றால் வாகனம் ஓட்டி வந்த ஒருவருக்கு திடீரென பார்வை மங்கிக் குருடாகிப் போவதுதான். இதேபோல விமானங்கள் தாறுமாறாகத் தரை இறக்கப்படுகின்றன. இதுவரை அறியப்படாத புதிய தொற்றுநோய் காரணமாகவே அவர்களது பார்வை போயிற்று.

நோயாளியின் கண்ணைப் பரிசோதித்த கண்மருத்துவரின் பார்வை அன்று இரவே பறிபோகிறது. மிக வேகமாகத் தொற்றும் இந்த நோயால் பலர் பார்வையற்றுப் போகிறார்கள். இவ்வாறு குருடாகும் போது பார்வை இருண்டு போகவில்லை. எல்லாமே பால் போல வெள்ளையாக, வெளிச்சமாக இருக்கும் ஆனால் உருவங்கள் பொருட்கள் எதுவும் தெரியாது.White Blindness என்கிறார்கள்.

பன்றிக் காய்ச்சலை விட மிக மோசமாக மக்களைப் பீதிக்கு உள்ளாக்குகிறது. யாருக்கு எப்பொழுது தொற்றுமோ என்ற அச்சத்தில் அந்த நகரமே பீதியில் உறைகிறது.

பார்வை இழந்தவர்களை முகமூடி அணிந்த சுகாதார ஊழியர்கள் ஆம்புலன்ஸ் வண்டிகளில் ஏற்றி ஒதுக்குப் புறமாக இருக்கும் ஒரு மருத்துவ மனையில் கொண்டு போய் அள்ளிப் போடுகின்றனர்.



அங்கு அவர்களைக் கவனிக்க மருத்துவர்கள் கிடையாது. பாராமரிக்க ஊழியர்கள் இல்லை. கூட்டித் துப்பரவு செய்ய எவரும் இல்லை. பார்வையற்றவர்களுக்கு எதுவுமே முடியவில்லை. தடுமாறுகிறார்கள். தடக்கி விழுகிறார்கள். காயப்படுகிறார்கள். உதவுவதற்கு எவருமில்லை. ஏதாவது தேவையெனக் கேட்கப் போனால் வாசலைத் தாண்ட முன்னரே எட்டத்தில் நிற்கும் காவலர்களால் கேள்வியின்றிச் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

கண் மருத்துவரின் மனைவி தனது கணவனுக்கு உதவுவதற்காக தானும் பார்வை இழந்தவள் போல இரகசியமாக வந்துவிடுகிறாள்.

நல்ல காலம் அவளது பார்வை பறிபோகவில்லை. அவள் மட்டுமே அவர்களுக்கான ஒரே உதவி. இவர்கள் பிறவிக் குருடர்கள் அல்ல. இற்றை நாள்வரை பார்வையுள்ள உலகிற்கு பரிச்சயமானவர்களுக்கு திடீரென எல்லாமே சூன்னியமாகிவிடுகிறது.

உணவு சமைப்பதற்கு யாருமில்லை. உணவு பெட்டிகளில் கொண்டு வந்து வெளியே போடப்படும். அதுவும் போதுமானதாக இல்லை. முறையிட யாருமில்லை. பசி, தாகம், இயலாமை, வெறுப்பு. குளிப்பதற்கு போதிய நீரில்லை. எதிர்காலம் பற்றிய பயம், சட்டம் ஒழுங்கு இல்லாமை. அதனால் எல்லாம் தான் தோன்றித் தனமாக நடைபெறுகிறது.

வல்லவர்கள் மற்றவர்களை ஒடுக்குகிறார்கள். பசி கோர தாண்டமாடுவதால் உடலைக் கொடுத்தால்தான் உணவு என சில வல்ல மிருகங்கள் அடாத்துகின்றன. ஒரு பெண் இரக்கமற்றவர்களுக்குப் பலியாகிறாள். மனிதம் மரணித்துவிட கோபமும், ஆக்ரோசமும், பொறாமையும், தகாத ஆசைகளும் கோலோச்சுகின்றன. அதற்குள் சிலருக்கு எல்லை மீறிய காமமும் கிளர்ந்தெழுகிறது.

அவர்கள் வாழ்வு மிகவும் பரிதாபத்திற்குரியதாகிறது. வேலையாட்கள் இல்லாததாலும், இவர்களுக்கு பார்வை தெரியாததாலும் அழுக்கும் அசுத்தமும் சூழ்ந்து கொள்கிறது. அழுக்கான உடைகளும், கழிவுப் பொருட்களும் மருத்துமனை விடுதியெங்கும் குவிந்து கிடக்கின்றன.

மலமும், சிறுநீரும் கூட ஆங்காங்கே கிடக்கின்றன. அதில் வழுக்கி விழுந்து தங்களையும் தமது உடைகளையும் சிலர் அசுத்தப்படுத்திக் கொள்கிறார்கள்.

சிலர் அணிந்திருந்த தமது உடைகளையும் களைந்து விட்டு அம்மணமாகத் திரிகிறார்கள்.

அந்த அம்மணத்தின் அலங்கோலத்தை மற்றவர்களால் காணமுடியாதிருக்கிறது. பார்த்திருக்கும் எம் மனம்தான் கூசுகிறது.

ஆம் பார்வையாளர்களின் பாலுணர்வைக் கிளர்ந்தெழச் செய்வதற்காகவே திரைப்படங்களில் நிர்வாணக் காட்சிகளைச் சேர்க்கிறார்கள். ஆனால் இங்கு அதே நிர்வாணம் மனத்தில் கவலையை, பரிதாபத்தை, ஏன் குற்ற உணர்வையும் ஏற்படுத்துகின்றது.

நிர்வாணத்தினூடாக மனத்தில் வலியை எழச் செய்யும் நெறியாளரும், கமராமென்னும் பாராட்டுக்குரியவர்கள். Cesar Charlone லின் படப்பிடிப்பு திரைப்படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் எனலாம். நகரத்தின் சிதைவை அவர் மிக அற்பதமாகவம், நுணுக்கமாகவும் மனத்தைத் தொடும் வண்ணம் காட்சிப்படுத்தியுள்ளார்.

நெருக்கடிகள் மிக்க சூழலில், சமூக மற்றும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில், தன்னிச்சையாக காட்டு மிருகங்கள் போல வாழும் கட்டற்ற வாழ்வின் அவலம் இத்திரைப்படம் போல வோறெங்கும் சித்தரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

போர்த்துக்கலைச் சேர்ந்த Jose Saramago வின் நோபல் பரிசு பெற்ற நாவலின் (1995) திரைப்பட வடிவம் இது. Fernando Meirelles நெறியாள்கை செய்து திரைப்படமாக ஆக்கியுள்ளார். அவர் City of God என்ற தனது முதற் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மெக்சிகோ சேரி வாழ்வின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.



Blindness என்ற இத்திரைப்படத்தில் Julianne Moore, Mark Ruffalo, Danny Glover, Gael Garcia Bernal ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 120 நிமிடங்கள் வரை சுவார்ஸமாக ஓடுகிறது.

ஒரு அதிகற்பனைக் கதை என்பது உண்மைதான். ஆயினும் இது எதைச் சொல்ல வருகிறது?

ஆழ்ந்த சமூகக் கருத்து ஒன்றைக் குறியீடாகச் சொல்கிறது எனலாம். அந்த மனிதர்களின் குருட்டுத்தன்மையூடாக சமூகத்தின் குருட்டுத் தன்மையையே சுட்டிக் காட்ட முன் வருகிறது எனத் தோன்றுகிறது. உண்மையில் கண்பார்வையிழந்தவர்கள் அடைபட்டிருக்கும் மருத்துவமனையை ஒரு சமூகத்திற்கு ஒப்பிடலாம்.

சட்டம் ஒழுங்கு குலைந்த நிலையில் அவர்களிடையே நிகழும் சம்பவங்களைப் பார்க்கும் போது, நாம் போற்றும் எமது காலசார உன்னதங்கள் எவ்வளவு போலித்தனமானவை என்பதை உணர முடிகிறது.

உணவுக்காகவும், செக்ஸ்க்காகவும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள். கொல்லவும் தயங்கவில்லை.

கட்டுப்பாடுகள் தளர்ந்தால் மிருகங்களுக்கும் மனிதர்களான எங்களுக்கும் இடையே எவ்வித வித்தியாசமும் கிடையாது.

ஆம் சிந்திக்கத் தூண்டும் இத் திரைப்படம் பல கேள்விகளையும் எழுப்புகிறது.

மிக மோசமான உயிருக்கு ஆபத்தான, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையீனம் நிறைந்த இடர்மிகு சூழலில் மனிதத்துவம் தப்பித்திருக்க முடியுமா?

சுரண்டலும் அடக்குமுறையும் கொடூரமும் தாண்டவமாடும் சூழலில் மரியாதையையும், வினயத்தையும் எதிர்பார்க்க முடியுமா?

அங்கு அன்பும் காதலும் நற்பண்புகளும் தாக்குப் பிடிக்க முடியுமா?

இவை போன்றவற்றிக்கு இப்படம் விடையைத் தேட முயற்சிப்பதாகவே நான் நினைக்கிறேன்.

இதை வெளிப்படுத்துவதற்காக மிகவும் அருவருப்பான காட்சிகளுடாகவும் எங்களை அழைத்துச் செல்கிறார் நெறியாளர். நரகத்தின் ஊடாக சொர்க்கம் நோக்கிய பயணம் எனலாம்.

இறுதியில் என்ன நடக்கிறது? உணவு அடியோடு இல்லை. எந்தவித உதவிகளும் கிட்டவில்லை. இந்த நிலையில் அங்கு திடீரென நெருப்புப் பற்றிக் கொள்கிறது. சிலர் அதற்குள் அகப்பட்டுவிட மற்றவர்கள் உயிரைப் பயணம் வைத்து வெளியேற முயல்கிறார்கள்.

என்ன ஆச்சரியம்!

வழமையாக தலைக்குறி தென்பட்டவுடன் துப்பாக்கியால் சுடும் காவலருள் ஒருவனைக் கூடக் காணவில்லை. ‘we are free..’ என ஆனந்தத்தில் கத்திக்கொண்டு வெளியேறுகிறார்கள்.

வெளியேறினாலும் நிம்மதி கிட்டவில்லை.

மேலும் துன்பங்கள் காத்திருக்கின்றன.

நகரில் யாரையும் காணமுடியவில்லை.

உதவிக்கு அழைக்க யாரும் தென்படவில்லை.

மனித நடமாட்டம் இன்றி நகரம் வெளிச்சோறிக் கிடக்கிறது.



வாகனங்கள் ஆங்காங்கே கைவிடப்பட்டுள்ளன.

குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.

உணவு பெற முடியவில்லை.

ஓரிடத்தில் இறந்து கிடக்கும் மனிதன் ஒருவனைக் நாய்கள் குதறியெடுத்துத் தின்று பசியைத் தணிக்கின்றன.

நகரத்தின் வெறுமை எம்மையும் அப்பிக் கொள்கிறது.

Blindness என்பது மிகுந்த கருத்தாழம் கொண்ட தலைப்பு என எண்ணத் தோன்றுகிறது. இங்கு பார்வை இழந்தவர்கள் அல்லது குருடர்கள் என்று தலைப்பிடப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். குருட்டுத்தன்மை அல்லது குருட்டிமை என்றே சொல்கிறது.



Blindness என்ற இத்திரைப்படம் குருட்டுமையை கண்பார்வை இழந்தவர்களின் செயற்பாடுகள் மூலமாகவும், மற்றொரு புறத்தில் பார்வையிழந்தவர்களின் நலன்களைக் கருத்தில் எடுக்காது கண்ணை மூடிக்கொண்ட சமூகத்தின் பொறுப்பற்ற தன்மை ஊடாகவும் உணர்த்த முயல்கிறது.

நாம் எங்களது பிரச்சனைகளை மட்டுமே ‘பார்க்கிறோம்’. எங்கள் தேவைகளை மட்டுமே முனைப்புடன் நோக்குகிறோம். மற்றவர்கள் துன்பங்களைப் பார்ப்பதில்லை அல்லது தயக்கத்துடன் அல்லது அரைமனத்துடன் மட்டுமே பார்க்கிறோம். இதுவே குருட்டுமை எனலாம்.

ஆம் அந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள் எல்லோரும், அவர்களின் அரசு உட்பட தமது நலன்களையே எண்ணிக் கொண்டன. தமது தேவைகளையே பூர்த்தி செய்தன. தமது எதிர்காலம் பற்றியே சிந்தித்தன. மற்றவர்களைப் பற்றி குறிப்பாக கைவிடப்பட்ட, பார்வையிழந்த மக்களைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை.

அவர்களது வாழ்வு பற்றியோ, அவர்களது தேவை பற்றியோ கவனம் செலுத்தவில்லை. தமது நலனிற்காக அவர்களைப் பலியிட்டன. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று கூடக் கவலைப்படவில்லை. அவர்கள் எப்பாடு பட்டாலும் படட்டும் நாம் சுகமாக வாழவேண்டும் என்று சுயநலத்தோடு வாழ்ந்தன.

ஜனநாயகம், மக்கள் நலன், என்றெல்லாம் தலைவர்களும் அரசுகளும் கூச்சல் போடுவதும் தம்பட்டம் அடிப்பதும் போலித்தனம்தானா? அரசுகள் இவ்வாறுதானா நடந்து கொள்ளும்.

ஆனால் திரைப்படம் இத்துடன் முடிந்து விடவில்லை. கிளைமக்ஸ் இனித்தான் வருகிறது. ஓரளவு முன்பே யூகித்ததுதான். அதையும் கூறி உங்கள் ஆர்வத்தைக் கெடுக்கக் கூடாது அல்லவா?

உண்மையில் இது ஒரு சுவாரஸ்மான மனத்தை அலைக்கழிக்கும் திரைப்படம். பல அடிப்படை விடயங்கள் பற்றிய சிந்தனைகளைத் தூண்டிவிடுகிறது. ஆனால் சந்தோஸமாக நேரத்தைக் கழிக்கக் கூடிய பொழுதுபோக்குப் படம் அல்ல என்பதும் உண்மையே.

இத் திரைப்படம் பற்றி முதலில் எமது பதிவுலக நண்பர் ஒருவரின் கட்டுரை மூலமே அறிந்தேன். அவருக்கு கருத்துரையும் இட்டிருந்தேன். ஆயினும் அவர் யார் என்பது இப்பொழுது ஞாபகம் வரவில்லை. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்

எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- வீரகேசரி வாரவெளியீடு

26.07.2009

Read Full Post »

மிஸ்டர் அன்ட் மிஸஸ் அய்யர்

வன்முறைகள் மலிந்துவிட்ட காலம் இது. மதரீதியாக, இனரீதியாக மொழிரீதியாக வன்முறைகள் மலிந்து கிடக்கின்றது. சகிப்புத்தன்மை என்பது தொலைந்தே போய்விட்டது. கிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே மோதல், காஸ்மீரில் இந்துக்களுக்குமிடையே முஸ்லீங்களுக்குமிடையே சண்டை, பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்குமிடையே போர் என எங்கு பார்த்தாலும் வன்முறையே கோலோச்சுகிறது. மனித நேயமும், புரிந்துணர்வும் பரஸ்பர நம்பிக்கையும், உதவி ஒத்தாசைகளும், மங்கிமறந்துவிட மாற்றுக் கருத்துக்களை மதிப்பதே மதிப்பற்ற செயல் போலாகிவிட்டது. அடிதடி, கொலை கொள்ளை மூலம் பயப்பீதியைக் கிளப்பி மேலாதக்கம் செய்ய முனைவதே விதிபோலாகிவிட்டது.

ஆனால் வன்முறையானது வன்முறையாளர்களுக்கு மட்டும் உவப்பானது அல்ல. வன்முறைக்கு எதிரான கலையாக்கம் என்ற லேபலுடன் வன்முறைகளை விலாவாரியாகச் சித்தரித்து பணப்பை நிரப்ப முயலும் சினிமாக்காரர்களுக்கு அது பொன்முட்டையிடும் வாத்தாகும். தமிழ்ச் சினிமாவில் இதற்கு உதாரணங்க் சொல்லி அடங்காது.
மிஸ்டர் அன் மிஸஸ் அய்யர் கூட வன்முறை பற்றிய படம்தான். ஆனால் இது வன்முறையைச் சித்தரிக்கும் படம் அல்ல என்பது கவனிக்கத்தக்கது. வன்முறையை நேரடியாகக் காட்டாமலே அது பற்றிய உணர்வை எம் மனதில் சுட்டெரிக்கும் தீயாகக் கொழுந்துவிட்டு எரியச் செய்கிறார் இயக்குனரான அபர்ணா சென். அது வன்முறைக்கு எதிரான உணர்வை எம்மில் துளிர்விடச் செய்கிறார்.

ஒரு சிறிய உதாரணம் வன்முறைக்கும்பல் ஒன்று வயோதிபரான இஸ்லாமியரை பஸ்ஸிலிருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்கிறது. நடைபெறப் போகும் நிகழ்வின் தாக்கத்தை உணராத அவரின் மனைவி அவரது கண்ணாடியையும் பற்செற்றையம் அவசியத்துக்கு உதவுமே என அப்பாவித்தனத்துடன் அவரிடம் கொடுத்து விடுகிறாள். மற்ற எல்லோர் முகத்திலும் மரணபீதி தாண்டவமாடுகிறது.
இன்னோர் காட்சியில் பத்திரிகைக்காரன் செய்தி எழுதுகிறான். ‘முஸ்லீம் வயோதிபரின் கண்ணாடியும் பற்செற்றும் ஓரை ஓரத்தில் அனாதரவாய் விழுந்து கிடந்தன…’. அவர் கொலையுண்ட சம்பவம் எமக்கு எங்குமே காட்டப்படவில்லை. ஆனால் அவர் கொலைசெய்யப்பட்ட செய்தி புரிந்துவிட, அது தந்த சோகமும் அதன் கோரமும் எம்மனதை கனமாக அழுத்திப் பழிகிறது. வன்முறைக்கு குழந்தைகள், வயோதிபர், பெண்கள், நோயாளிகள் என்ற வேறுபாடே கிடையாது.

திரைப்படத்தின் கதை புதுமையானது என்று சொல்லிவிட முடியாது. வன்முறை நிகழ்வுகளின் இரு கோடிகளில் இருக்கும் சமூகங்களான இந்து முஸ்லீம் மதங்களைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சந்தேகங்கள் மலிந்த சூழ்நிலையின் மத்தியில் மொட்டவிழ்க்கும் உறவை மெல்லெனப் பேசுவதுதான் இத்திரைப்படம். ஆனால் வழமையான தமிழ்த்திரைப்படக் காதல் கதை போன்றது அல்லது என்பதும் குறிபபிடத்தக்கது.

அழகிய இளம் தாயான மீனாட்சி அய்யர் தனது ஒன்பது மாதக் குழந்தையான சந்தானத்துடன் பயணமாகிறாள். இந்தியாவின் கண்கவர் வட எல்லை மலைப்பிரதேசத்திலிருக்கும் தாய்வீட்டிலிருந்து கணவர் இருக்குமிடமான கல்கத்தாவிற்குப் பிரயாணம் செய்கிறாள். அவள் தாய்மொழி பேசும் பிராமணப் பெண். மகள் தனியே பயணமாகிறாளே என்ற கவலை அவளது தாய்க்கு. பஸ்நிலையத்தில் தற்செயலாகச் சந்தத்த நண்பர் மூலம் ராஐ¡ என்ற புகைப்படக் கலைஞனின் அறிமுகம் கிடைக்கிறது. அவனும் கல்கத்தாவிற்கே செல்ல இருப்பதால் வழியில் அவளுக்கு உதவியாக இருக்க ஒப்புக் கொள்கிறான்.

அழகிய மலைகளுடே பஸ் பயணிக்கிறது. உயர்ந்த மரங்களின் செழுமையும் நீ£ரோடைகளின் சலசலப்பும், மேகம் மூடிய வானின் குளிர்மையும் கண்ணுக்கு இதமளிக்கின்றன. ஹெயர்ப்பின் வளைவுகளுடே பஸ் ஒளிந்து மறைந்து பயணிக்கிறது. இயற்கையின் அழகையெல்லாம் கெளதம் கோரின் கமரா அற்புதமாகப் பதிவு செய்கிறது. இயற்கைக் காட்சிகளை மாத்திரமன்றி மனிதர்களின் உணர்வுகளையும் அவரது கமரா ரசனையோடு உள்வாங்குகிறது.

இளைஞர்கள், யுவதிகள், இளம் தம்பதியினர், வயோதிபர் என பலவகைப்பட்டவர்கள் நிறைந்த பஸ். ஆட்டம் பாட்டம் சரஸம் என அமைதியான இனிமையான சூழலில் அது பயணிக்கிறது.
பஸ்ஸில் நடக்கும பல விடயங்களையும் இயக்குநர் நிதானமாகவும் நுணுக்கமாகவும் பதிவு செய்கிறார். இளம் பெண்கள் அடிக்கும் கொட்டத்தைப் பொறுக்கமுடியாத முதியவர் மனைவிக்கு ‘எமது கலியாணத்தின் போது உனது கைகள் கூட பர்தாவுக்குள் மறைந்து கிடந்தன…’ என்று கூறுகின்றார். அந்தக் காலத்தின் மேன்மை பற்றி அவர் சொல்லும்போது அவளின் வெறுமையான கைகள் அவருக்கு எதையோ எடுத்துக் கொடுப்பது எமக்குத் தெரிகிறது.

அவர் காட்டியது அவ்வளவுதான்.
ஆனால் எமது சிந்தனை உலகம் உசுப்பிவிடப்படுகிறது.
‘காலம் மாறும் போது எமது எண்ணங்களும் செயல்களும் பண்பாடும் கூட மாறுகிறது. வயோதிபர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களும் மாறவே செய்கிறார்கள். அது படிப்படியான மாற்றம். ஆனால் இளைஞர்களின் துரித மாற்றம் வயதானவர்களுக்கு உவப்பானதாக இல்லை. தமது ‘பொற்காலம்’ பற்றிய உன்னத கனவுகளிலேயே வயதானவர்கள் வாழ்கிறார்கள்’ என்பதை சொல்லாமல் சொல்லி விடுகிறார்.

பிரயாணத்தின்போது மீனாட்சியின் குழந்தை அழுது முரண்டு பிடிக்கிறது. குழந்தையைப் பார்ப்பதற்கும், குழந்தைக்கு அவள் உணவு தயாரிப்பதற்கும் ராஐ¡ உதவுகிறான். அவள் மனத்தில் அவன் பற்றி நல்லெண்ணம் வளர்கிறது. நன்றியும் கூறுகிறாள்.

பஸ் ஓரிடத்தில் திடீரென நிறுத்தப்படுகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு முஸ்லீம் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இனக்கலவரம் வெடித்துள்ளது. அங்கு பேசப்படுவதிலிருந்து தெரிய வருகிறது. மாற்று மதத்தவரை பழிவாங்கும் வெறி அப்பிரதேசத்தில் தலைவிரித்தாடுகின்றது. இவர்கள் பஸ் நின்றது ஒரு இந்துக் கிராமம். கலவரக்காரர்கள் எந்த நேரமும் வரலாம் என்பதால் எல்லோரையும் பஸ்சுக்குள்ளேயே இருக்கும்படி பாதுகாப்புத் தரப்பினர் கூறிச் செல்கின்றனர். அப்பொழுது ராஐ¡ தான் ஒரு முஸ்லீம் என்பதை அவளுக்கு வெளிப்படுத்தி, தான் அங்கிருந்து புறப்படுவதே தனக்கும் ஏனைய பிரயாணிகளுக்கும் பாதுகாப்பானதெனக் கூறி விடை பெற முயல்கிறான்.

அவள் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள். கவலையினால் அல்ல! அவள் முகத்தில் இவ்வளவு நேரமும் இருந்த நட்புத் தன்மை விலக அந்நியத்தன்மை குடிகொள்கிறது.

‘அட ராமா, இவன் கொடுத்த தண்ணீரைக் குடித்தேனே…’
என்பதுதான் அக் கணத்தில் அப்பிராமணப் பெண்ணில் எழுந்த முதல் எதிர்வினையாக இருந்தது. அவனுக்கு ஏதும் ஆபத்தாக நடந்துவிடுமா என்ற அக்கறைக்கும் மனிதாபமானத்திற்கும் மேலாக தனது ஆசாரம் கெட்டுவிட்டதான உணர்வுதான் அவளது முதற் கவலையாக இருந்ததைக் காண்கிறோம்.

இதற்கிடையில் கலவரக் கும்பல் ஒன்று தீப்பந்தங்களுடன் இவர்கள் பஸ்ஸைச் சூழ்ந்து கொள்கிறது. பெயர்களைக் கேட்டு ஒவ்வொருவரையும் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என அடையாளம் காண முயல்னகின்றார்கள். பெயர்களில் சந்தேகம் ஏற்பட்ட போது சுன்னத் செய்திருக்கிறதா எனப் பரிசோதித்துப் பார்த்து அடையாளம் அளவிற்கு அவர்களின் குரோத உணர்வு உச்சத்திலிருக்கிறது. இஸ்லாமியர் என இனங்கண்ட வயோதிபரை விசாரணைக்காக இழுக்காத குறையாத அழைத்துச் செல்கிறார்கள். அது கண்டு இவன் பதைத்து எழ முயல எதுவும் பேசாது குழந்தையை அவன் கையில் திணிக்கிறாள் மீனாட்சி.

இதற்கிடையில் ஒரு வன்முறையாளன் இவர்கள் அருகே வந்து பெயரைக் கேட்க, அவன பதிலளிக்கத் தயங்க, மிஸ்டர் அன்ட் மிஸஸ் அய்யர் சுப்பிரமணிய அய்யர்’ எனத் தயக்கமின்றித் தெளிவாகப் பதில் சொல்கிறாள் அவள். கடும் சார உணர்வும் தான் பிராமண சமூகத்தைச் சார்ந்தவள் என்ற உயர் எண்ணம் கொண்ட அப்பெண்ணில் அக்கணத்தில் இயல்பாக எழுந்த மனிதாபிமான உணர்வை மிக அற்புதமாக தன் முகத்தில் வெளிப்படுத்துகிறார் கொங் கொணா சென். இவர் அபர்ணா சென்னின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தோற்றத்திலும் நடிப்பிலும் அசல் தமிழ்ப்பிராமணப் பெண்ணாகிவிடுகிறாள்.

இக்கட்டான தருணத்தில் இவ்வாறு அவனது உயிரை அவள் காப்பாற்றி விடுகின்றாள். இப்பொழுது அவளைப் பாதுகாக்க கல்கத்தாவிற்கு கொண்டு செல்வது கடமைபோல் ஆகிவிட்டது. இடையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படுகின்றது. அங்கு சந்திக்க ஒரு காவல்துறை அதியாரி அவர்களை ஒரு காட்டுப் பங்களாவில் தங்க வைப்பதற்கும் பின் தங்கள் வாகன அணியில் கல்கத்தாவிற்கு கொண்டு செல்வதற்கும் உதவி செய்கிறான்.

இன்னும் நடக்கும் சின்னச்சின்ன சம்பவங்கள் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும், உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ளவும் நெருங்கிய சிநேகமாகவும் உதவுகிறது. இக்கட்டான சூழலில் அகப்பட்டுக் கொண்ட அவர்களின் நிஐ வாழ்வின் சோகமும் சோதனைகளும் கலந்த சில கணங்களை நம்பகத்தன்மையடனும் கலாபூர்வமாகவும் வெளிப்படுத்துவதில் அபர்ணா சென் வெற்றி காண்கிறார். கமெராவும் காவியம் படைக்கக் கைகொடுக்கிறது.

ராஐ¡வாக நடிப்பது ராகுல் போஸ். ஆர்ப்பாட்டம் இல்லை. மிக இயல்பான வாழ்வது போன்ற நடிப்பு. நடிகர், எழுத்தாளர், இயக்குநர் என பலதரப்பட்ட ஆளுமை கொண்டவர் ராகுல் போஸ் என அறிகிறேன்.
கல்கத்தாவில் ரயில் நிற்கிறது. நிஐ அய்யர் மனைவியையும் குழந்தையையும் அழைத்துச் செல்ல ரயில் நிலையத்திற்கு வந்திருக்கிறான். மீனாட்சி ரயிலிலிருந்து வெறுங்கையுடன் இறங்கி வருகிறாள். ‘எங்கே குழந்தை’ என்று கேட்ட கணவனுக்கு அவள் மறுமொழி சொல்வதற்கிடையில் ராஐ¡ குழந்தையுடன் இறங்கி வருகிறான். காத்து நிற்கும் தந்தையிடம் இவ்வளவு நேரமும் தந்தைபோல் இஇருந்து பாதுகாத்தவன் குழந்தையை ஒப்படைக்கின்றான். இறுதியில் மிஸ்டர் அய்யராக இவ்வளவு நேரமும் இருந்தவன் நிஐ அய்யரிடமும் மிஸஸ் அய்யரிடமும் குழந்தை சந்தானத்திடமும் விடைபெற்றுச் செல்லும் காட்சி பார்வையாளர்களின் உள்ளத்தை அழுத்திப் பிழிகிறது. அரிதான அனுபவம் எமக் கிடைக்கிறது. இன மத மொழி பேதங்களைக் கடந்ததுதான் அன்பும், நட்பும் என்பதைப் புரிந்து கொள்கிறோம்.

படம் மதரீதியான வன்முறை பற்றியது தான். ஆனால் அவை எழுவதற்கான காரணங்களை ஆராயவோ அல்லது அதன் நியாயஅநியாயங்களைப் பேசவோ அது முன்வரவில்லை. வன்முறையின் கோர முகம் எவ்வாறு தனிமனிதர்களையும் சமூகத்தையும கொத்திக் குதறிக் கூறுபோடுகிறது என்பதை கலா பூர்வமாக சித்தரித்துக் காட்டுகிறது. ஆனால் வன்முறையையும் மீறிய மனிதாபிமானம் மக்களிடையே இன்னமும் மரணித்து விடவில்லை என்பதைத் திரைப்படம் உணர்த்துவது நம்பிக்கையளிக்கிறது. படம் பிரச்சினைக்கான எந்த தீர்வையும் கூறி அதிமேதாவித்தனம் காட்ட முயலவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
படம் இந்தி நடிகர்களைக் கொண்டு வட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப்படம். ஆயினும் பாத்திரங்கள் தங்களுக்கிடையே தத்தமது தாய்மொழியிலே இயல்பாகப் பேசிக் கொள்கிறார்கள். வசனங்கள் மிகக் குறைவாக இருக்க காட்சிகள் ஊடாகவே படம் சொல்லப்படுவதனால் தெரியாத மொழிகளும் எமக்குப் புரிவதற்குத் தடையாக இல்லை. எனினும் ஆங்கில ளரடிவவைடநள காட்டப்படுவதால் மேலும் தெளிவாகப் புரிகிறது. இடையே மீனாட்சி தனக்குள்ளும், தனது பெற்றோருடனும், குழந்தையுடனும் தமிழிலேயே பேசிக்கொள்வது எமக்கு உவப்பாக இருக்கிறது.

இன்றைய சூழலில் மிஸ்டர் அன்ட் மிஸஸ் அய்யர் எமக்கு மிக முக்கியமான படம். தங்கள் மதமும் தங்கள் மொழியும் தங்கள் இஇனமுமே தமது அக்கறைக்கு உரியதாகவும் பெருமை சார்ந்ததாகவும் எண்ணிக்கொண்டு மற்றவர்களை இளக்கமாகவும் ஏளனமாகவும் பார்ப்பது இலங்கையர் எல்லோருக்கும் சகஐமாகி விட்டது. அடித்து உதைத்தேனும் மேலாண்மை பெற ஒவடவொரு இனமும் வெறியோடு முயல்கிறது. மற்றவர்களும் சமமான உரிமைகளும் பண்பாட்டுப் பெருமையும் கொண்டவர்கள் என்பதை எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறோமோ?. ஒவ்வொரு மனித உயிரும், மனிதாபிமான உணர்வும் எல்லாவற்றையும் விட பெறுமதிமிக்கது என்பதைக் கூறும் இப்படம் எமக்கு அவசியமானதுதான். இலங்கையில் திரை அரங்குகளில் வெளியாகவில்லை. ஆனால் வீடியோ ஆகவும் சீடி ஆகவும் கிடைக்கிறது. தப்பவிட்டு விடாதீர்கள்.
எம்.கே.முருகானந்தன் (கொழும்பு)

நன்றி- pathivukal.com

Read Full Post »