என் நாடித்துடிப்பு 72ல் இருந்து 100ற்கு திடீரென எகிறிப் பாய்ந்தது.
அவர் சொன்ன வார்த்தைகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி நிலைகுலைய வைத்துவிட்டது. உட்கார்ந்திருந்த சுழல் நாற்காலியை தற்பாதுகாப்புக்காக என்னையறியாமலே சற்றுப் பின்னுக்கு தள்ளிவிட்டதை உணர்ந்ததும் சற்று வெட்கமாக இருந்தது.
வெட்கப்பட்டு காலத்தைக் கடத்தக் கூடிய தருணம் அல்ல. தற்பாதுகாப்பைத் தேடி வேண்டிய நேரம்.
அவசர கணம்.
சொன்னவர் ஒல்லிக் குச்சி மனிதன் அல்ல. ஆஜானுபவானான மனிதர். மல்யுத்த வீரன் போல பரந்த மார்பும், விரிந்து தோள்களுமான நல்ல திடகாத்திரமான உடல். பத்துப்போரை ஒரே நேரத்தில் அடித்து விழுத்திவிடுவார் போலிருந்தது.
நமது தனுஸ் பத்துப்பேரை அல்ல நூறு பேரை தனியாளாக அவ்வாறு அடித்து விழுத்தியதைப் பார்த்ததில்லையா என எனது அறியாமையை கிண்டல் பண்ணாதீர்கள். நீங்கள் அவ்வாறு கேள்வி கேட்பது அவரை அசௌகர்யப்படுத்திவிடும்.
உற்றுப் பார்த்தபோது வெறும் கையுடன்தான் வந்திருந்தார். தப்பித்தேன். கையில் ஆபத்தானவை எவையும் இல்லை. பொக்கற்றுக்குள்ளும் இருப்பதாகத் தெரியவில்லை. படபடப்பு அடங்கி நிம்மதி பரவியது.
திரும்ப யோசித்தபோது அவமானமாக இருந்தது. Gun என்றவுடன் நான் ஏன் இப்படி பயங்கொள்ளியாகி ஒடுங்கிபோகிறேன்?
வாழ்ந்த சூழல்தான் என்பதில் சந்தேகம் இல்லை.
துப்பாக்கி தூக்கி எதிரிகளை அழிக்கும் ஆவேசக்காரர்கள் மத்தியில் எனது வாழ்நாளில் சுமார் அரைவாசிக் காலத்தை கழிக்க நேர்ந்திருக்கிறது. அவை களிக்க வைக்கும் நேரங்கள் அல்ல. அவர்கள் விடுதலைக்காகப் போராடுபவர்கள் மற்றும் இராணுவ வீரர்கள். கனவிலும் நினைவிலும் அவ்விரு தரப்பினருமே கொல்லும் வெறியோடுதான் திரிந்தார்கள். எதிரிகளைக் கொல்லும் வெறி. குத்திக் குதறிக் கொல்லும் வெறி.
இடையில் அகப்பட்டால் நாம் அம்போதான்.
ஒரு எதிரியைக் கொல்வதற்காக எத்தனை பொதுமகன் செத்தாலும் பரவாயில்லை என எண்ணும் அதீத கொள்கைப் பிடிப்பாளர்கள். அதுதான் யுத்த தர்மம் என வாதாடுவார்கள்.
இது விதண்டாவதம் என்று சொன்னவன் துரோகியென பட்டை குத்தப்படுவான். துரோகிகளுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்படுவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.
இதனால் உண்மைகளை வெளிப்படையாகச் சொல்ல அன்றும் இன்றும் சரி எவருக்கும் விருப்பம் இல்லை. எனக்கும்தான்.
ஆனால் இது எனக்கு மட்டும் நேர்ந்த அவலம் அல்ல. தமிழனத்தின் அவலம். இன்னும் சற்றுப் பரந்த சிந்தனையோடு யோசித்தால் இலங்கைத் தீவின் அனைத்து மக்களினதும் அவலம். இனத்திற்கு இனம் அளவுகளில் சற்று ஏற்றத்தாழ்வு இருக்கலாம். ஆனால் பாதிப்பும் துப்பாக்கி ஏந்தியவர்கள் பற்றிய பயமும் அனைத்து மக்களிடமும் இருந்ததை மறுக்க முடியாது.
இவர் சொன்ன Gun வேறு விடயம்.
இது வேறு விடயம் என்பது ஆரம்பப் பயம் தணிந்ததும்தான் தெளிவாகியது.
உயிரைப் பறிக்கும்; துப்பாக்கியல்ல. உயிர் கொடுக்கும் துப்பாக்கி இவரது.
அவ்வாறு யோசித்தால் பார்த்தால் நானும் துப்பாக்கிக்காரன்தான். அவருடையதை விட என்னுடையது இன்னமும் நல்ல நிலையிலேயே இருக்கிறது எனப் பெரிமிதம் கொள்ளலாம்.
இருந்தபோதும் அவரது பிரச்சனையைப் புரிந்து கொள்ள மேலும் சில விடயங்களைப் பற்றி விசாரிக்க வேண்டியிருந்தது.
“நீரிழிவு நோய் உங்களுக்கு இருக்கா” எனக் கேட்டேன்.
“இல்லை’ என்றார் திடமாக.
சற்று யோசித்த பின்னர் ‘கொஞ்சமாக இருக்கு ஆனால் மருந்து சாப்பிடுவதில்லை’ என்றார்.
சாப்பிடாமல் எடுத்தால் இரத்தத்தில் சீனியின் அளவு 120, 140 என்று தானிருக்குமாம்.
நீரிழிவு இல்லாதவர்களுக்கு இது 110ற்குள் இருக்க வேண்டும்.
சாதரண அளவை விட 10 முதல் 30 மட்டுமே கூட இருப்பதால்
என எண்ணி அக்கறை எடுக்காமல் விட்டுவிட்டார்.
நீரிழிவு என்பது அறிகுறிகளற்ற நோய். ஆரம்ப நிலைகளில் எந்தவித இடைஞ்சல்களையும் நோயாளிக்குக் கொடுக்க மாட்டாது. ஆனால் உள்ளிருந்து அரித்துக் கொண்டிருக்கும். அறுந்து விழும் நிலையில்தான் நோயாளிக்குக் தெரிய வரும்.
சிறுநீரகப் பாதிப்பு, அது செயலிழத்தல், மாரடைப்பு போன்ற இருதய நோய்கள், பக்கவாதம், கண்பார்வை மங்கல், மாறாத புண்கள், கால்களை அகற்ற நேருதல் எனப் பல. நீரிழிவினால் நுண்ணிய குருதிக் குழாய்கள் பாதிப்புற்று, உறுப்புகளுக்கு போதிய இரத்தம் பாய முடியாத நிலையில் இவை யாவும் தோன்றுகிறன.
இப்படியான பல பிரச்சனைகள் வந்த பின்னர்தான் பலருக்கு தமக்குள்ள நீரழிவின் பாரதூர நிலை தெளிவாகிறது.
அதற்குப் பின் மார்புக் கவசம் அற்ற வில்வீரன் போலத்தான் இவர்கள் நிலை. ஏற்கனவே வீசிய பாசக்கயிற்றை யமன் எந்ந நேரத்திலும் இறுக்க முடியும்.
இவருக்கும் அவ்வாறுதான். ஏற்கனவே உறுப்பின் இரத்த ஓட்டமும் அதற்கான நரம்புகளும் பாதிக்கப்பட்டுவிட்டன.
இதனால் மனத்தில் எவ்வளவுதான் ஆசை இருந்தபோதும் இவரால் முடியவிதில்லை. பேரழகி ஹெலன் இவர் முன் அம்மணமாக வந்து நின்றால் ஆசை மீறும். ஆனால் காற்றில்லாத பலூன் போல உறுப்பு சோர்ந்து கிடக்கும்.
“My Gun is not firing” என்று சொன்னது அதனால்தான்.
இவர் கற்றுக் கொள்ளாத பாடம் இவருக்கு உலை வைத்துவிட்டது..
எனது steth இன் குரல் புளக்கில் 22nd February 2012 வெளியான கட்டுரைசுடாத துப்பாக்கி