Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘ஆறுதல்’ Category

>

ஆழமான வாசிப்பிற்கான சஞ்சிகைகளின் வரவு இலங்கைத் தமிழிலில் மிகக் குறைவாக இருக்கிறது. அதுவும் உளவியல் சமூக தளங்களில் மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

இந்த வகையில் பார்க்கும்போது ஆறுதல் என்ற உள சமூக இதழின் வரவு மகிழ்ச்சியளிக்கிறது.

இதன் இரண்டாவது வரவு ஜனவரி- மார்ச் இதழாக அண்மையில் கிடைத்தது. இந்த இதழில் கட்டிளம் பருவம் தொடர்பான பல்வேறு ஆக்கங்கள் இடம் பெறுகின்றன.

இதழ் ஆசிரியர் உரையான “உங்களுடன் ..“ காத்திரமாக அமைந்துள்ளது. பொதுப் புத்தி சார்ந்து சிந்திக்காது மாற்று வழியில் எம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.

“இன்று பரவலாக கட்டிளமைப் பருவத்தினரது பிரச்சனைகளையே பெரும் சமூகப் பிரச்சினைகளாக நோக்கும் மனப்பாங்கு செல்வாக்குப் பெற்றுள்ளது” என்கிறார்.

ஆனால் கட்டிளமைப் பருவத்தினரது பிரச்சனைகள் என்று கருதுவது சரியானதா. உண்மையாக அவர்கள் பிரச்சனையாக இருக்கிறார்களா அல்லது சமூகம் அவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாதிருந்து பிரிச்சனை என்கிறதா?

“எம்மீது ஆக்கிரமித்துள்ள மோசமான பார்வைகள் புரிதல்கள் பிடியிலிருந்து எம்மை எவ்வாறு விடுவிப்பது? இதுபோன்ற பல வினாக்களுக்கு பதில்கள் அல்லது விளக்கங்கள் தேடிக்கொள்ள வேண்டிய கடப்பாடும் எமக்கு இருக்கிறது. இந்த நோக்கத்திற்காகவே இந்த இதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது”  என்கிறார்.

இந்த இதழில் அடங்கும் கட்டுரைகளாவன

 1. மனநிலை மாற்றங்களும் விளைவுகளும் – தொகுப்பு ஆத்மன்
 2. மனதில் ஒரு சுனாமி – மருத்துவர்.என்.கங்கா
 3. புரிதல்கள் தேவைப்படும் பருவம் – க.சுவர்ணராஜா
 4. நாளைய உலகம் உங்கள் கையில் – மருத்துவர்.எம்.கே.முருகானந்தன்
 5. உணவும் ஆரோக்கியமும் – தொகுப்பு ஆத்மன்
 6. இளையோர்: அடையாளமும் அரசியலும் – அ.றொபின்சன்
 7. இசை தொடர்பான சீர்மியமும் – சபா.ஜெயராசா
 8. காதல் காதல் காதல் – புவிராஜ்
 9. உதிர்வு – நெடுந்தீவு மகேஷ்
 10. மன அழுத்த முகாமைத்துவம் – சு.பரமானந்தம்
 11. சமூகநிலை உளவளச் செயற்பாடு – பேரா.தயா.சோமசுந்தரம்

மருத்துவர்.என்.கங்கா அவர்களது கட்டுரை கட்டிளம் பருவம் பற்றிய விரிவான விளக்கத்தைத் தருகிறது. கட்டிளம் பருவம் என்றால் என்ன? அவர்களது விசித்திர குணங்கள், விடலையரின் ஏக்கங்கள் என்ன? இவ்விடயத்தைப் பெற்றோர்கள் எவ்வாறு அணுக வேண்டும் என விளக்குகிறது.

மருத்துவர்.எம்.கே.முருகானந்தனது கட்டுரை கட்டிளம் பருவத்தினரை நோக்கி எழுதப்பட்டதாகும். உணவும் போஷாக்கும், போசாக்குக் குறைபாடு, சமபலவலு உணவு, பாலியல் மற்றும் இனவிருத்தி அறிவை வளர்த்துக்கொள்ளல், பாலியல் கல்வி, இளமைப் பருவத்தினர் கிளினிக்குகள், பாலியல் அத்துமீறல்கள், கருச்சிதைவு, உளநலம், போதைப்பொருள் பாவனை, வன்முறையை நிராகரியுங்கள் ஆகிய உபதலைப்புகளில் விளக்கங்களைத் தருகிறது.

பேரா.தயா.சோமசுந்தரம் அவர்களது கட்டுரை மிக முக்கியமானது. கருத்துச் செறிவு கொண்டது. வடகிழக்கு பகுதிகளில் யுத்தச் சூழலில் மாணவர்கள் இடையே செய்யப்பட்ட ஆய்வுகள் அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். ‘ஆசிரியர்களை உளவளத் துணையாளர்களாகவும், நட்புதவியாளர்களாகவும் பயிற்றுவித்தல்’, ‘ஆசிரியர் உளவள துணையாளர்களின் பொறுப்பும் கடமைகளும்’ பற்றி மிக விரிவாகப் பேசுகிறது.

பேரா.சபா.ஜெயராசாவின்  கட்டுரை இசையின் சமூக அரசியலைப் பேசுவதுடன் அதன் எதிர்மனவெழுச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் விளக்குகிறது.

‘உதிர்வு’ ஒரு சிறுகதையாக பாடசாலையில் ஏற்படும் சம்பவம் ஊடாக கட்டிளம் பருவ உணர்வுகள் பற்றிய புரிதலை ஏற்படுத்த முனைகிறது.

நீளங் கருதி ஏனைய கட்டுரைகள் பற்றிக் கூறாவிட்டாலும் அவை ஒவ்வொன்றும் கட்டிளம் பருவத்தின் பல்வேறு பரிமாணங்களையும் கருத்தில் கொண்ட சிறந்த கட்டுரைகளாகும்.

திரு.தெ.மதுசூதனன் அவர்களை ஆசிரியராகவும், திரு.சுந்தரம் டிவகலாலா அவர்களை நிருவாக ஆசிரியராகவும் கொண்டு வெளிவரும் இதழ் இது.

பொதுவான வாசிப்புக்கு ஏற்ற வகையில் இலகுவாக எழுதப்பட்டுள்ளதாயினும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்,  சமூகவியலாளர்கள், ஆற்றுகைப்படுத்துவோர் போன்றோருக்கு மிகவும் பயனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

விலை:- ரூபா 100/=

வெளியீடு:-
“ஆறுதல்”
இல.09,முதலாவது ஒழுங்கை
லிங்கநகர், திருகோணமலை
இலங்கை

இணையதளம் :- http://www.aaruthal.org
மின்னஞ்சல் :- aaruthaltrinco@gmail.com
படைப்புகள் அனுப்ப :- 2010aaruthal@gmail.com

Read Full Post »